மனதோரம் உந்தன் நினைவுகள்_6_ஜான்சி

0
339

Manathoram Unthan NinaivukaL_Epi 6_Jansi

அத்தியாயம் 6

அகராதி

உயிர் குடிக்கின்றன

உந்தன் பார்வைகள்

மென் காதலை

வன்மையாய் சொல்லும்

கலையொன்றை  நீ கற்றிருக்கின்றாய்.

வான் மேகத்தை

நூலால் இழுக்கும்

திறன் பெற்றிருக்கின்றாய்.

வா என்னோடு என்று

கைப்பற்றுகையில் மட்டும் – எனை

புறம் தள்ளிச் செல்கின்றாய்.

உன் பார்வைக்கும், செயலுக்கும்

பொருள் சொல்லும் அகராதியை

தினம் தேடும் பைத்தியக்காரியாக

நான்.

‘இந்நேரம் இவன் எப்படி இங்கே வந்தான்?’ எனும் குழப்பத்தில் மீரா இருக்க, அவனோ இவளை அமர வைத்து விட்டு மாத்திரைகள் வாங்கச் சென்றான். மொத்தத்திற்கும் அவனே பணம் கட்டிவிட்டு வெளியே அவளுடன் வர, இவள் தனது இடது கையால் இரண்டாயிரம் ரூபாயை அவனிடம் திணித்தாள்.

சற்று முன்னர் அவள் வலியில் இளகி இருந்தவன், இப்போது இரும்பாய் இருகினான். இவளோ அவனிடம் முகம் கன்றிய வண்ணம் “ப்ளீஸ்” என சொன்ன விதத்தில் அவன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டான். மீராவின் அடிப்பட்ட இரண்டு விரல்களும் தையல் போட்டு ப்ளாஸ்டர் போடப் பட்டிருக்க, வலியோ விண் விண்ணென தெரித்தது.

இவளது இருப்பிடம் அங்கிருந்து நடை தூரமே என்பதால் இவள் செல்ல வேண்டிய வீடு வரை அந்த இருளில் அவளுக்கு அவன் துணையாக நடந்தான். அடிப்பட்ட நேரம் முதலாக தனிமையின் பரிதவிப்பில் இருந்தவளுக்கு… அவனது அந்த அருகாமை நம்மோடு தெரிந்தவர் யாராவது இருக்கிறார்கள் எனும் வகையில் மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், முன் தினம் அவனை என்னை வேலை செய்ய விட மாட்டேன் என்கிறான் என பாஸ்கரிடம் திட்டிவிட்டு, இப்போது அவனது அருகாமையை நாடுவதா? என ஒருபக்கம் உள்ளூர நெருடலாக இருந்தது.

‘எனக்கு அவன் என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிகின்றவனன்றி வேறொன்றுமில்லை’ என தன் மனதிற்குள் மீரா உருப்போட்டுக் கொண்டாள்.

அந்த வீட்டின் கேட் அருகே செல்லவும், “உள்ளே வாங்க கார்த்திக்” என்றாள். அது சம்பிரதாயமான வார்த்தை என அவளுக்கே தெரியும் எனும் போது அவனுக்குத் தெரியாதா என்ன? அதிலும் வேலை பார்க்க வந்த இடத்தில் ஒரே அலுவலகத்தில் பணி புரிகின்றவர்களாகினும் அவளது அலுவலகம் மூலமாக கிடைக்கப் பெற்ற தங்குமிடத்திற்கு அவன் வருவது சரி அல்லவே.

அவளுக்கு பதில் கொடுக்க முனையாதவனாக தன் கையில் இருந்தவற்றை அவளது இடது கைக்கு மாற்றியவன், அங்கிருந்து விருட்டென சென்று விட்டிருந்தான். இரண்டாம் மாடிச் சென்று அவள் காலிங்க் பெல் அழுத்தவும்  கேர் டேக்கர் கதவை திறந்தார்.

“சாரி மேடம், வீட்டிலருந்து போன் வந்திருந்துச்சு, பேசிட்டு இருந்தேன். உங்களுக்கு அடிப்பட்டதும் நீங்க அழைச்சது கேட்கலை” தயக்கமாக பேசினார்.

பேச இயலாத களைப்பில் “பரவாயில்லை’ எனும் விதமாக தலையசைத்து உள்ளே நுழைந்தாள்.

அவள் வீடு நெடுக வரைந்து வைத்திருந்த இரத்தக் கோலங்கள் இல்லாமல் வீடு சுத்தமாக இருந்தது. பாவம் வயதானவருக்கு வேலை வைத்து விட்டோமோ? என்று எண்ணியவள் தன் கையில் இருந்த பொருட்களை டேபிளில் வைத்து, இடது கையால் அவற்றை பிரிக்கலானாள்.

உள்ளே எளிமையாக உண்ணும் விதத்தில் உணவு இருந்தது. அழகான பேக்கிங்கில் மாதுளை ஜீஸீம் இருந்தது. அவளுக்காக யோசித்து கார்த்திக் வாங்கி இருப்பான் போலும். அவனது கவனிப்பில் கண்கள் கரிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்… நெகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

அந்த மிக்ஸியில் விரல்கள் சிக்கியதன் பயம் மனமெங்கும் வியாபிக்க உண்ண மனதில்லாதவளாக டைனிங்க் டேபிளில் அமர்ந்தாள். நாளை மற்றொரு நபர் கெஸ்ட் ஹவுஸிற்கு வரப் போவதாக கேர் டேக்கர் அவளிடம் சொல்ல, சரியென தலை அசைத்தாள்.அந்த பெரிய வீட்டில் மற்ற அறைகள் காலியாக இருக்க தனிமையாய் இருப்பதற்கு யாராவது வந்தால் தேவலாம் போல இருந்தது.

தனது சிந்தனையில் இருந்தவள் வீட்டிலிருந்து அலைபேசியில் அழைப்பு வரவும்தான் சுதாரித்தாள். தன்னை தனியாக ஹைதராபாதிற்கு விடவே பயந்த அம்மாவை அவள் இன்னும் பயமுறுத்த விரும்பவில்லை. குறைந்த பட்சம் இன்னும் ஒரு மாத காலமாவது அவள் இங்கே இருந்தாக வேண்டுமே? அதுவரை வீட்டினரை பதட்டத்திலா வைப்பது?

தனது அறைக்குள் புகுந்து உள்ளே பூட்டியவள் குரலை மாற்றி சுதாரித்து பேசி முடித்து அலைபேசியை வைக்க, ‘ஹப்பாடா எதுவும் சொல்லாம தப்பிச்சுட்டோம்’ என நினைக்கையில் தங்கையிடமிருந்து வீடியோ கால் வர பதட்டமடைந்தாள்.

இவள் முகம் கழுவி சரிசெய்து வரும் முன்பாக மூன்று முறைகள் கால் கட்டாகி விட்டிருந்தது. இடது கையால் முகம் கழுவுவதும் சுலபமாக இல்லை… அதன் காரணமாகவே நேரமாகி விட்டிருந்தது. இப்போது இவள் இங்கிருந்து பேச மட்டும் முடியும் வகையிலான அழைப்பை விடுக்க, தங்கை இவளது அழைப்பை துண்டித்து மறுபடி வீடியோ காலில் அழைத்தாள்.

‘ஐயோ எமகாதகிங்களுக்கு புரிஞ்சிருச்சு போலவே?’ மீரா பதற்றமாக அழைப்பை ஏற்று இயல்பு போல பேச முனைந்தாள்.

எதிர் தரப்பில் சுசித்ரா படபடத்தாள் “என்னாச்சுக்கா? ஏன் டல்லா இருக்க? , இப்ப நாங்க இரண்டு பேரும் தான். நம்ம ரூம் லாக் செஞ்சுட்டு பேசுறோம். சொல்லு என்ன பிரச்சன?”

சித்ரா பின்னால் இருந்து தலையை எக்கிப் பார்த்து, “அக்கா அங்க எதுவும் பிரச்சனையா? உன் மூஞ்சு ஏன் ஸ்ட்ராபெரி மாரி இருக்கு. உன் மேனேஜர் எதுவும் சொன்னானா? அவன் மூஞ்ச பேத்திர்றேன் பொறு.”

“இருடா அக்கா சொல்லட்டும்”

சுசித்ரா சித்ராவை அமைதிப் படுத்தி விட்டு…

“சொல்லுக்கா என்னாச்சுக்கா? நிஜமாவே அவன் தான் பிரச்சனையா? இல்ல அந்த ஊர்ல உன்னை யாரும் எதுவும் சொன்னாங்களா? வேணும்னா அடுத்த வண்டியில நாங்க அங்க வந்திடவா? இல்ல நீ திரும்ப வந்திடுறியா?”

“ஆமாக்கா, வேலை போனா போயிட்டு போகுதுக்கா, அப்பா கார்ட்ல ஷாப்பிங்க் போயிக்கலாம்.” சித்ரா தொடர்ந்தாள்.

“அடப்பாவிகளா… பேச விடுங்கட்டி” மீரா தனக்குள்ளாக புலம்பினாள்.

பேசவே வாய்ப்புக் கொடுக்காமல் அவர்களும் தொடர, ‘இவர்களது கற்பனை எங்கு போய் நிற்குமோ?’ என பயந்தவள் இனியும் மறைத்து பிரயோஜனமில்லை என தனது பேண்டேஜால் சுத்தப்பட்டிருந்த இரண்டு விரல்களையும் வீடியோ முன் நீட்டினாள். அதைப் பார்த்ததும் எதிர் முனை அமைதியாகி காணொளியில் தெரிந்த இருவரின் கண்களும் கலங்கி நிற்க,

“அச்சோ ஒன்னுமில்ல, சின்ன அடிதான்” மீரா தங்கைகளிடம் சொன்னாள்.

அவர்கள் இவளிடம் விபரம் கேட்க, இவள் சொல்ல என நேரம் கழிய இப்போது இருவரும் சேர்த்து மூட்டை மூட்டையாக திட்ட மீரா வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

“அம்மா, அப்பாக்கு சொல்ல வேணா குட்டிகளா… பயந்திருவாங்க.”

கோபத்தில் தமக்கையை உறுத்த சுசித்ரா, “அந்த அளவுக்கு எங்களுக்கு புத்தி இருக்கு” என்றாள். அவள் சொன்ன விதத்தில் புத்தி இல்லாதது யாருக்கென புலனாகியது.

‘நான் இவளுகளுக்கு அக்காவா? இல்ல தங்கச்சியா?ன்னு குழப்பத்திலயே என் வாழ்க்கை போகுது பகவானே’, தனக்குள் புலம்பிக் கொண்டாள் அவள்.

“ரொம்ப ஒன்னும் பச்சப்புள்ள மாதிரி மூஞ்ச காட்ட வேணாங்கா, ஒழுங்கா மாத்திரை தின்னுட்டு ஒரு வாரம் லீவ் போடு. உங்காபீஸை காக்கா தூக்கிட்டு போயிராது” இது சித்ரா.

“முடியலைடி, விட்ருங்க” கெஞ்சினாள் மீரா.

“சரி சாப்பிட்டியா இல்லியா? போய் சாப்பிடு” ஒரு வழியாக விடை கொடுத்தனர். இடது கையால் உணவை பறிமாறி ஒரு வழியாக உண்டு அறைக்குள் செல்ல உறக்கமும் வராமல், வெளி மாநிலம் வந்த பின்னர் அத்தனை காலம் புரியாத தனிமையெல்லாம் அந்த இரவு புரிந்தது. முன்பு அழகாக தெரிந்த அந்த பால்கனியின் பக்கம் பார்க்கவும் இப்போது திகிலாக இருந்தது.

கண்களை மூடவும் இயலவில்லை…பால்கனியின் அந்தப் பக்கம் யாரோ நிற்பது போல, நடப்பது போல ஐயோ அம்மா. கண்களை மூடினால் இரத்தம் இரத்தம் எங்கிலும் இரத்தம். துணைக்கு ஆளற்ற அந்த தனிமையும், பயமுமான இரவு அவளை வதைக்க, விடியல் புலர்கையில் வெளிச்சத்தின் துணையில் அவள் கண்கள் மூடி உறங்கினாள்.

இரண்டு நாட்கள் மட்டும் லீவு எடுத்துக் கொண்டாள். முன் பின் தெரியாத ஊரில் வந்தது தூங்கி எழுவதற்கா? அதுவும் தன்னந்தனிமையில் இருந்து சலிப்பாக இருந்தது. வந்த வேலையை மெது மெதுவாகவேனும் செய்து முடித்தாலாவது நேரம் உபயோகமாகும்.

அலுவலகம் செல்ல முடிவு என்னவோ எடுத்து விட்டாள். ஆனால், வலது கை உபயோகிக்காமல் எத்தனை பிரச்சனைகள் என அவளுக்கு இப்போது புரிந்தது.

உடை உடுத்த ஒரு வழியாகினாள். அடுத்து, குக்கரில் அரை கிளாஸ் அரிசி கால் கிளாஸ் பருப்பு போட்டு இடக்கையால் களைந்து ஊற்றும் முன்பாக களைத்தே போனாள்.

அரிசி பருப்பை களைந்த பின்னர் அதனோடு கூடவே அரிந்த வெங்காயம், தக்காளி, உறித்த பூண்டு போட்டு உப்புச் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் மட்டும் எடுத்து டிஃபனில் வைக்க இன்னும் சிரமப்பட்டுப் போனாள்.

கடந்த இரண்டு நாட்கள் வெளியில் இருந்து உணவு வாங்கி உண்ண நேர்ந்ததில் சலித்து போயிருந்தாள். என்னவோ அவளுக்கு பிடிக்கவே இல்லை. பிடிக்காத உணவை உண்பதற்கு பதிலாக எதையாவது எளிமையாக செய்து உண்டால் போதும் எனும் மன நிலைக்கு வந்திருந்தாள்.

சமைத்ததை ஊறுகாயுடன் வைத்து டிஃபனை மூடி பையில் வைப்பதற்குள்ளாக வழக்கத்தை விட ஒன்றுக்கு நான்கு மடங்கு நேரமெடுத்தது.

முடியை இடக்கையால் சீவி க்ளிப் மாட்டும் முன்பாக ஐந்து முறை க்ளிப் தெரித்து ஓடி கீழே விழுந்து தொலைத்தது.வலது கையால் முடி வாரினாலோ விரலை சுற்றியிருந்த பேண்டேஜில் முடி சிக்கி இழுத்து அது ஒரு வகையில் துன்பமாக இருந்தது.

தட்டுத் தடுமாறி புறப்பட்டு வந்து மீரா அலுவலகத்தில் தன் இடத்தில் அமர அவளைச் சுற்றி கூட்டம் கூடி விட்டிருந்தது. வெளியூர் பெண் என அவள் மீது அனைவருக்கும் கரிசனை இருந்திருக்க, நம் ஊருக்கு வந்த நேரம் அடிப்பட்டு விட்டதே என விசாரித்துச் செல்ல ஆச்சரியமும், மன நெகிழ்வுமாய் நின்றாள்.

அந்த வாரம் முழுக்க அவளை விடுப்பு எடுக்கச் சொல்லி அனைவரும் சொல்லி இருந்த போதும் அவள் வந்திருந்தாள். அதனாலும் அவர்களால் விசித்திரப் பிறவியாக பார்க்கப் பட்டாள்.

அந்நேரம் அங்கே அவள் எதிர்பாராத நேரம் எதிரே வந்து நின்றான் கார்த்திக்.

‘இதென்ன இப்பவே வந்திருக்கான்? இத்தனை காலையிலேவா? இன்னிக்கு என்ன இவ்வளவு சீக்கிரம்?’ மனம் மட்டும் கார்த்திக் குறித்த கேள்விகள் கேட்டது. ஆனால், அவள் வாய் திறந்து பேசினாளில்லை. அவனது பின்னே பேச முடிகின்ற அளவிற்கு அவளால் அவனது முன்னே பேச இயலுவதில்லை.

அதுதான் அவளுக்கு அவன் மீது ஒரு வகை ஒவ்வாமை உணர்வும் தந்திருந்தது. எதுவானாலும் தான் செய்வதும், சொல்வதும் தான் சரி என்பவனாக அவன் அவளுக்குத் தெரிந்தான்.

அவள் பேசவில்லை என்றதும் அவனும் பேசினானில்லை. வெகு இயல்பு போல அவன் அவளது மடிக் கணிணிப் பையை திறந்து மடிக் கணிணியை எடுத்து அதை அவளருகில் வைத்து முடுக்க, அது உயிர் பெற்றது. அதன் சார்ஜரை இணைத்து அருகில் இருந்த மின் இணைப்பில் செருக என அவன் செய்தது யாருக்கும் நெருடலாக தோன்றும் படியாக இல்லை. அவனது உடல்மொழி எப்போதுமே அத்தனை இலகுவாக ஒன்றும் நடவாதது போல இருக்கும் விதம் இவளுக்கு புரியாத ஒன்று.

“நென்னு இப்புடு நின்னு சம்புதானு சூடு” ( நான் இப்ப உன்ன கொல்லப் போறேன் பாரு…)

“ஆங்க்” புரியாமல் இவள் விழிக்க…

“சொன்னா கேட்கிறதில்ல…இன்னும் இரண்டு நாளாவது லீவ் எடுத்திருக்கலாம்ல?” ஆங்கிலத்தில் அமர்த்தலாய் பேசினாலும் அவன் பேசிய தொனியில் மிளகாயின் காரம்…ஆந்திர சாரி தெலுங்கானா மிளகாயாகிற்றே?

மீராவுக்கு அவனுக்குப் பதிலாக என்னச் சொல்வதென்றே தெரியவில்லை என்பதால் அமைதி காத்தாள். என்னச் சொன்னாலும் அவனிடம் அதற்கொரு பதில் இருக்குமே? …

அவனது கண்களோ இவளது கை விரல்களைச் சுற்றியே இருந்தது. மீராவின் விரல்கள் டேபிளில் பட்டால் கூட வலிக்கும் எனும் நிலையில் இருக்க அவற்றை சற்று உயர்த்தி பிடித்தே வைத்திருந்தாளவள்.

“இப்ப வலி பரவால்லியா?” கேட்டான்.

“பரவால்ல, இப்ப சரியாகிடுச்சு.”

“ஓ சரியாகிடுச்சோ?”

‘நக்கலாய் பேசுகின்றானோ?…’ அவனை அவள் ஊன்றிப் பார்க்க முனைய, அவனோ குரல் மாறாமல்.

“கொஞ்சம் தள்ளி உட்கார்” என்றான். மீராவும் புரியாமல் தள்ளி அமர, அவளது மடிக்கணிணி முன்பாக இன்னொருவனை அமர வைத்தான்.

‘உனக்கு என்ன டைப் செய்யணுமோ, அதை இவனுக்குச் சொல்லு… இனி இவன் டைப் செய்வான்… என்ன புரியுதா?”

‘இதென்ன கிரிக்கெட்டா? எனக்கு பதிலா ரன் எடுக்க ஆள் வைக்கிறதுக்கு?’ மீராவிற்கு கண்ணைக் கட்டியது.அது போக இவளுக்கு பதிலாக அவன் வேலை செய்வானென்றால் அந்த ஆள் செய்ய வேண்டிய வேலையை யார் செய்வது? இதை உயர் அதிகாரிகள் பார்த்தால் என்னாவது? பதட்டமானாள்.

கார்த்திக்கோ அவளது மனதை படித்தவன் போல, “இவன் பெஞ்ச்ல இருக்கிற ட்ரெயினி தான் இப்ப வேற வேலை எதுவும் செய்யலை. அதனாலத்தான் அழைச்சுட்டு வந்தேன்” என்றான்.

[பெஞ்ச்: அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை இல்லாமல் வெட்டியாக வைத்திருக்கும் நபர்களை பெஞ்சில் இருப்பதாகச் சொல்வர். குறிப்பாக வெளி நாட்டு க்ளையண்டுகளின் வேலைகள் எதிர்பாராமல் நின்று விடும் தருணங்களில் இப்படி நிகழும். ஆட்களை வேலையை விட்டு நிறுத்தாமல், இவர்களுக்கான புதுக் குழு அமையும் வரை சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொண்டிருக்க இவர்கள் பணிக்கப் பட நேரிடும். அல்லது வெட்டியாகவே இருப்பர்.]

“அச்சோ, வேணா மெதுவா நானே செய்துப்பேன்” இவள் பதறி மடிக்கணிணியை தூக்கப் போக நடுவில் கை வைத்து கார்த்திக் மறித்தான்.அவனது வலிய கையை அசைக்கும் துணிவு அவளிடம் இல்லை. அதற்கு அவனை அவள் தொட்டாக வேண்டுமே?

அவள் மான் போல மருண்டு அவனைப் பார்க்க, அவனது தீர்க்கமான பார்வையில் இருந்து அவளால் மீள முடியவில்லை. அவனை சந்தித்த முதல் நாள், முதல் கணத்தில் மட்டும் தான் அவனது ஒரு கண் சேதமுற்று பார்வை இல்லாது இருப்பது எல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தது. அதன் பின்னர் அவனுக்கு அப்படி ஒரு குறை இருப்பதே அவளுக்கு நினைவிற்கு வந்ததில்லை.

அதாவது அவன் தனது அங்க குறைபாட்டை தனது பலகீனமாக வெளிப்படுத்தியதே இல்லை. அவனது அத்தனை குறைகளும் அவனது ஆளுமையில் அடிப்பட்டுப் போய்விடும் எனும் படியாகத்தான் அவன் இருந்தான்.அவனைச் சுற்றி இருந்தவர்களையும் அப்படியே வசீகரித்து இருந்தான்.

இவன் சொன்னால் “அண்ணகாரு” என மறுப்புச் சொல்லாமல் அடுத்த நொடி கீழ்படிகின்றவர்களாகவே அவனைச் சுற்றி அத்தனை பேரும் இருந்தனர்.

அமைதியாய் இருந்தாலும், யார் ஆதிக்கத்திற்கும் அடங்க விரும்பாத சுய மரியாதைச் செல்வியான அவளும், ஆர்ப்பாட்டமாய் தன் ஆளுமைக்குள் அவளை அடக்கி சுருட்டிக் கொள்ளும் முனைப்பில் அவனுமென இருக்க, இருவரில் யார் வெல்வரோ?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here