மனதோரம் உந்தன் நினைவுகள்_7_ஜான்சி

0
312

Manathoram Unthan NinaivukaL_Epi 7_Jansi

அத்தியாயம் 7

உந்தன் காதல்

பாரமாகவும்
சுகமாகவும்

சிரமமாகவும்
உரிமையாகவும்

இழந்தால்
வெறுமையாகவும் என

கங்காரு குட்டி போல்
என் மனதில் உந்தன் காதல்.

அலுவலகத்தில் என்றுமே தனது மதிப்பு மரியாதையை மிகவும் பேணிக் காப்பவள் மீரா. அவளைக் குறித்து யாரும் வீணாக ஒரு சொல் சொல்ல முடியாத அளவிற்கு நடந்துக் கொள்வாள். பிறர் குறித்த பேச்சுக்கள், வதந்திகள் என எவற்றிலும் ஈடுபடுவதில்லை. இப்போது ஹைதராபாத் அலுவலகம் வந்த அடுத்த நாள் முதலாக கார்த்திக்கின் தலையீட்டால் நொந்து போயிருந்தாள்.

வியாழன் அன்று அவனது இடைஞ்சல்கள் தனக்கு பிடிக்கவில்லை என பாஸ்கர் முதலாக சொல்லி, அவனும் வராதிருக்க ஞாயிறன்றே தனக்குத் தானே வினை வைத்ததோடு நில்லாமல் மறுபடி கார்த்திக்கின் கவனிப்பிற்குள் வந்ததை எண்ணி தலையை எங்கே கொண்டு முட்டிக் கொள்ளவென தெரியாதவளாக திகைத்தாள்.

எங்கோ பார்த்தவண்ணம் நின்றுக் கொண்டிருக்கும் கார்த்திக் இன்னும் கூட அவளுக்கும் அவள் மடிக் கணிணிக்கும் ஊடாகத்தான் நின்றுக் கொண்டு இருந்தான்.

அவன் நின்ற விதம் பிறருக்கு தவறாக தோன்றாமல் இருக்கின்ற போது இவள் பிரச்சனை செய்தாளெனில் அது அத்தனை பேருக்கும் வாய்க்கு அவலாகும். பிறர் கவனம் ஈர்ப்பது இவளுக்குத்தான் சுத்தமாக பிடிக்காதே…

தன் இருக்கையில் இருந்து எழுந்தாள் மீரா. அவளை துழாவியது அவனது கண்கள். வழக்கமாக அவனை ஈர்க்கும் அவளது முகத்தின் பூ போன்ற மலர்ச்சி இன்று இல்லை. வெயிலில் வாடிய பூ போல இருந்தாள். அரைகுறையாக ஒற்றைக் கை உதவியால் புறப்பட்டு வந்திருக்க, அவளது க்ளிப்பிலிருந்து ஒரு கற்றை முடி மட்டும் தனியே பிரிந்து பறந்துக் கொண்டு இருந்தது.

அவள் முகத்தில் துளி மேக்கப்பும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. குறிப்பாய் அவள் கண் கண்மை இல்லாமல் என்னமோ போல இருந்தது. தான் அடுத்த நாள் வேலைக்கு வருவதாகச் சொன்னவளின் மெசேஜை முன் தினம் மிகவும் கடுப்பாக பார்த்துக் கொண்டு இருந்தவன் இன்று அவள் வரும் முன் வந்து அவளுக்காக சிலவற்றை செய்து வைத்து காத்திருந்தான்.

இருந்தும் கூட தானே வேலை செய்துக் கொள்வதாக அவள் சொன்னதும், அவளது பிடிவாதம் இவனை சீண்டி விட்டாற் போல ஆனது. அவளது மடிக்கணிணியை எடுக்க விடாமல் அங்கேயே நின்றுக் கொண்டான். அவன் சுற்றி உள்ளவர்களிடம் சாதாரணமாக பேசிய வண்ணம் நின்ற விதத்தில் யாருக்கும் அது தவறாக தெரியவில்லை. இப்போது மீரா எதற்கு எழும்புகிறாள்? எனப் புரியாமல் பார்த்திருந்தான்.

“எனக்கு உன்னுடன் பேச வேண்டும்?” தன்னை அருகில் இருக்கும் கேபினில் பேச அழைக்கிறாள் என புரிந்துக் கொண்டவன் அங்குச் சென்று கண்ணாடிக் கதவு தாண்டி இவர்களது உரையாடலை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை.

“கேஃபேடேரியா போ, வரேன்” என்றான்.

சுற்றியுள்ள இருவருக்கும் இவர்களது பேச்சுக்கள் புரிய வாய்ப்பில்லை, மீராவின் மடிக்கணிணி முன்பு அமர்ந்திருந்த இளைஞனிடம் “அரை மணி நேரம் ப்ரேக் எடுத்துட்டு வா, மேடம் என்ன செய்யணும்னு சொல்வாங்க” என்றான்.

ஆஃபீஸ் கேஃபேடேரியா மிகச் சின்னது, அங்கு இந்த நேரம் யாரும் அதிகமாக வரப்போவதில்லை என அவளுக்கு தெரியும் என்றதால் கேஃபேடேரியா நோக்கிச் சென்றாள்.

அவள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடத்தில் கார்த்திக் அங்கே ஏதேச்சையாக வந்து அமர்வது போல அமர்ந்தான். வெண்டிங்க் மெஷினில் காசு போட்டு பிஸ்கிட் பாக்கெட் ஒன்றை எடுத்திருப்பான் போலும்… அதை அவளிடம் நீட்டவும் அவள் அவன் நீட்டியதை வாங்கவும் இல்லை, அவனை சிறிது நேரமாக கண்டுக் கொள்ளவுமில்லை.

அவனும் இவளை விட எத்தனாகி அவளுடன் பேசாமல் அக்கம் பக்கம் பார்க்க சலிப்பாகி

“கார்த்திக், எனக்கு டைப் செய்ய ஆள் வேண்டாம். நான் மெதுவாக இடது கையால் வேலை செய்துக் கொள்வேன். என் வேலையை என்னை செய்ய விடு” என்றாள்.

இவள் செய்ததை இவளுக்கே திருப்பி செய்தாற் போல காது கேளாதது போல அமர்ந்திருந்தவனைக் கண்டு இவளது இரத்தக் கொதிப்பு இன்னும் அதிகமாகியது.

“ப்ளீஸ்” என்றாள், உடனே அவனிடம் கெஞ்சுவது குறித்து தலையிறக்கமாகவும் இருந்தது.

“எனக்கு இப்ப மீட்டிங்க் இருக்கு கார்த்திக்.”

“பாஸ்கர் மற்றும் அனுவுடன் தானே?”

“ஆமாம்”

“அதை நான் பார்த்துக்கறேன்.”

“எனக்கு என் வேலையை நான் பார்த்துதான் பழக்கம்.”

“அப்ப நாங்கல்லாம்?” புருவம் உயர்த்தி அவன் கேட்க நொந்தே போனாள்.

“அந்த ஆளை போகச் சொல்லிடுங்க கார்த்திக், நான் சொல்லி அவங்க டைப் செய்யறது… எனக்கு இதெல்லாம் வசதியா இருக்காது.”

“அப்ப நான் உனக்கு டைப் செய்ய உதவட்டுமா?”

‘ஹய்யோடா’ எண்ணியவளாய் களேபரமாய் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவன் விளையாடவில்லை நிஜமாகவே கேட்கிறான் என புரிந்தது.

“வலது கையில் அடிப்பட்டிருக்குல்ல, அந்த கையை உபயோகப்படுத்தாம செய்யறதானா செய். இல்லைன்னா வீட்டில போய் ரெஸ்ட் எடு.”

‘தெரியாத ஊரு, ஒத்தையில இருக்கேன்… வீட்ல வெட்டு வெட்டுன்னு இருக்க முடியாம தானே ஆஃபீஸ் வந்தேன் இவன் என்னை இப்படி படுத்துறானே?’ என கடுப்பில் முகம் சுளித்து அவனை பார்த்தவள் விட்டது வரைக்கும் போதும் என அவனுக்கு சரியென தலையசைத்தாள்.

அதன் பின்னர் அமைதியாக தன் வேலைகளை தொடர்ந்தவள் மீட்டிங்கிற்கு புறப்பட எழுந்து நின்றாள். அந்நேரம் அங்கே தற்செயலாக வந்தவன் போல  வந்து நின்றவன் அங்கு நின்றிருந்த ஹவுஸ் கீப்பீங்க் நபரிடம் இவளது மடிக் கணிணிபை எடுத்துச் செல்ல சொல்லி விட்டு இவளை கண்டுக் கொள்ளாமல் நின்றான்,

‘ஒரு நேரத்துக்கு ஒரு விதமா இருக்கானே இவனை?’ இவளால் மனதிற்குள்ளாக கடுப்பாகி சலித்து, தன் பற்களை நெருக்க கடித்துக் கொண்டுதான் இருக்க முடிந்தது.

அவள் செல்ல வேண்டிய கான்ஃபெரன்ஸ் அறை எது எனக் கேட்டு அந்த மடிக் கணிணிபை அவள் முன்பாகச் சென்று வைத்து நகர்ந்தார் அந்த ஹவுஸ் கீப்பிங்க் நபர்.

அலுவலகம் வந்து முகம் கழுவி சற்று தலை வாரி இருந்தாலும் அவளது வழக்கமான மலர்ச்சி காணாமல் போயிருந்தது. ‘தங்கள் ஊருக்கு வந்து இப்படி ஆகிற்றே?’ என கரிசனையில் பாஸ்கரும் அனுரேகாவும் விசாரித்துக் கொண்டிருக்கையில் கதவு திறந்து அறையில் வந்து அமர்ந்தான் அவன். வேறு யார் கார்த்திக் தான்.

கார்த்திக்கை கண்டுக் கொள்ளாமல், தெரிந்தும் தெரியாதது போல இவள் தன் வேலையை செய்ய…

‘நீ என் கிட்ட உன் பிரசண்டேசனை காட்டவே இல்லையே? ஒரு நிமிசம் நான் பார்த்துக்கிறேன்” அவளின் பாஸாக அவளிடம் பேசி அவள் மடிக்கணிணியை தனது பக்கம் திருப்பியவன்.

“ம்ம்… ஓகே” என்றவனாக அவனே அந்த கான்ஃபெரன்ஸ் அறையின் மானிட்டரில் மடிக் கணிணிபை இணைத்து ப்ரசண்டேசனை இயக்க ஆரம்பித்தான்.

“இவன் அத்துமீறலுக்கு அளவே இல்லையா?” புகைந்துக் கொண்டிருந்தாள் மீரா.

எழுந்து நின்று விளக்கம் சொல்ல முற்பட்டவளை,

“இருக்கிறது இரண்டு பேர் அதுக்கு ஏன் நீ நின்னு விளக்கணும், உட்கார்ந்து விளக்கம் கொடு…”

“என்ன நான் சொன்னது சரிதானே?”

மீராவிடம் சொல்லி, அனுவிடம் கருத்துக் கேட்டான்.

“ஆமாம் உட்கார்ந்துக்க” அனுவும், பாஸ்கரும் சொல்லி விட அமர்ந்தாள். அவளுக்கு பணி செய்யவே பிறந்தவன் போல முழு மீட்டிங்கிலும் இருந்து அவளது மடிக்கணிணியை அவள் சொன்னதற்கு ஏற்ப இயக்கிக் கொண்டு பிரசண்டேஷனின் அடுத்தடுத்த பக்கங்களுக்கு மாற்றிய வண்ணம் இருந்தான்,

பாஸ்கரும் அனுவும் ஏராளமான கேள்விகள் கேட்க அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவள் கொஞ்ச கொஞ்சமாக தனது பணியின் ஈடுபாட்டின் காரணமாக உற்சாக மனநிலைக்கு மாறி இருந்தாள்.இப்போது அவள் முகத்தின் சோர்வை மீறிய ஒரு ஒளி குடிகொண்டிருந்தது.

அந்த கலந்துரையாடல் மிகவும் பலனளித்து இருந்தது. ஒன்றேகால் மணி நேரம் எப்படி கடந்தது எனத் தெரியாமல் கடந்திருந்தது.

“எள்ளுதான் எண்ணைக்கு காயுது, எலிப்புளுக்கை எதுக்கு காயுது?” என்பது போல காரணமே இல்லாமல் அந்த அறையில் கார்த்திக் அமர்ந்திருந்தான். மீட்டிங்க் முடிந்து புறப்படுகையில் அனுரேகா தன் வியப்பை மறைக்காமல் வெளிப்படுத்தி விட்டிருந்தாள்.

“கார்த்திக் ஒரு இடத்தில இத்தனை மணி நேரம் இருந்து நான் பார்த்ததே இல்ல.”

“மீரா எனக்கு ரிப்போர்ட்டிங்க் செய்றா இல்லியா… மீரா வேலையைப் பற்றி சுஜித்துக்கு நான் ரிப்போர்ட் கொடுக்கணுமே? அதனால் தான்” கார்த்திக் மழுப்பினான்.

அவள் எழவும் அவளது மடிக் கணிணிபை சார்ஜர் சகிதம் தூக்கிக் கொண்டு விறுவிறுவென நடந்து அவள் முன்பாகச் சென்று அவளிடத்தில் வைத்து விட்டு திரும்ப வந்தான். அந்நேரம் மீரா அனுவுடன் பேசிய வண்ணம் அந்த ஃப்ளோர் வரை வந்தவள் கதவை ஆக்ஸஸ் செய்து திறந்தாள். அவள் எதிரில் நின்றிருந்தான் அவன்.

“ஷப்பப்பா வொர்க்கஹாலிக்குகளை (workaholic) பார்த்தாலே எனக்கு கடுப்பாகும்” என அவள் கேட்க சொல்லி அந்த கதவின் வழி வெளியே சென்றிருந்தான்.

அவன் சொன்னது அவளைத்தான் என அவளுக்கு புரியாமலில்லை. “போடா” என்றவளாக தனது வேலையை இடது விரல்கள் கொண்டே செய்ய சீக்கிரமே வேலை முடிந்து விட்டிருந்தது.

முக்கியமான வேலைகள் முடிந்து விட்டதால், இனி நான்கு வாரங்கள் தான் அங்கே இருந்தால் போதுமானது என எண்ணியவள் முகம் புன்னகையால் மலர்ந்திருந்தது. ஏதோ ஒரு குறுகுறுப்பில் திரும்பி பார்த்தால் இவளையே கவனித்த வண்ணம் சற்று அருகாமையில் அந்த தளத்தின் ஓரத்தில் நின்றிருந்தான் அவன்.

‘என்னை சுத்தி சுத்தியே வரான், பெரிய ரோமியோன்னு நினைப்பு, முப்பது வயசு தாண்டிருக்கும் போல இவனுக்கு. வீட்ல பொண்டாட்டி,புள்ளக் குட்டி எல்லாம் வச்சுட்டு இங்க வந்து நமக்கு ரூட் விடரானோ?’ பெண்ணின் மனது கணக்கீடுகளைச் செய்ய அவன் குறித்து எதையும் தீர்மானிக்க முடியாதவளாக திணறினாள்.

அவனை சந்திக்க முதல் நாள் இருந்த மன நிலை தான் இப்போதும். அவன் குறித்த எந்த தனிப்பட்ட விபரமும் அவனும் பகிர்ந்துக் கொண்டதில்லை. அவன் முன்னும், பின்னும் யாரும் அவன் குறித்து பேசியதுமில்லை.

‘வாட்சப், ஃபேஸ்புக்கில் இல்லாதவன் அரை மனிதன் என்று இவனுக்கு தெரியவில்லையே?’ எந்த விதத்திலும் அவனைக் குறித்து தெரியாமல் இருக்க அது ஒரு வகையான குறுகுறுப்பை கொடுத்தது என்னமோ உண்மைதான்.

அவனது செயல்கள் அவள் மீது அவன் கொண்டுள்ள ஈடுபாட்டை வெட்ட வெளிச்சமாக காண்பிக்க, அது வெற்று ஈடுபாடு என மட்டும் தான் அவளால் முடிவுக்கு வர முடிந்தது.தான் இங்கே இருக்கும் சில வாரங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று விட வேண்டும் என்ற எண்ணமே மீராவிடம் வியாபித்து இருந்தது.

பெண்களுக்கு வெளியுலகில் ஏற்படாத அனுபவங்களா? ஆயிரம் கடந்து வருகையில் எது காதல்? எது ஈர்ப்பு? என குழப்பமான மனநிலை தரும் என்பதால் அவள் எதிலும் சிக்கிக் கொள்ள முயலவில்லை.

தனது தங்கைகளுக்கு தான் தான் ஆதர்ச நாயகி என அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். எந்த விதத்திலும் தான் சின்னவர்களுக்கு தவறான உதாரணமாகி விடக் கூடாது எனும் ,முன்னெச்சரிக்கை அவளிடம் அதிகமே. பெரும்பாலான ஆண்கள் வீசும் தூண்டில்களை புறக்கணித்தாலே ‘இந்த திராட்சை புளிக்கும்’ மன நிலையில் பெண்களை தொடர்வதை விட்டு விடுவார்கள். மீரா கார்த்திக்குடனும் அதையே பின்பற்ற எண்ணினாள்.

அலுவலகத்தினின்று திரும்பும் நேரம் மீரா தன் இடது தோளில் மடிக் கணிணி பை சுமந்து, லிப்டுக்காக நிற்கையில் அங்கு வெகுவான கூட்டம். அந்த கட்டிடத்தின் படிகளை பூட்டி வைத்திருந்தது நிர்வாகம். எனவே, பன்னிரண்டாம் மாடியில் இருந்து கீழே செல்ல லிப்ட் தவிர வேறு வழியில்லை.

தன் முன் நின்றவர்கள் ஏறிய பின்னர் மீராவும் லிப்டுக்குள் நுழைந்தாள். அவளது இடது தோளின் பாரம் சட்டென குறைந்தது. அவளது வலதுக்கை யாராலோ பத்திரமாக பற்றப் பட்டிருந்தது.

கூட்டத்தில் மீரா திரும்பி பார்க்க கார்த்திக்கின் தோளில் அவள் பை இருந்தது. தன் இரு கரத்தால் அவள் வலது கையை பொத்தி தன் நெஞ்சோடு அணைத்த வண்ணம் அவன் நின்றிருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here