மனதோரம் உந்தன் நினைவுகள்_8_ஜான்சி

0
291

Manathoram Unthan NinaivukaL_Epi 8_Jansi

அத்தியாயம் 8

இலயிப்பு

கடற்கரைச் சிப்பிகளில் மகிழ்ந்திடும்,

சிறுபெண்ணாய் அல்லவோ இருந்தேன்!

அன்றொரு நாள் ஆழி அலையென நீ

என் வாழ்வில் வந்தாய்.

உனதன்பினுள் சருகெனவே

எனைச் சுருட்டிக் கொண்டாய்.

அன்பின் சுவையினை

நீ உணர்த்தியப் பின்னர்

எனை உதறிச் செல்தல் தகுமோ?

ஆழ் கடலின் அழகறிந்தவள்,

உயிரற்ற சிப்பிகளில் -இனியும் 

மனம் இலயித்திடல் ஆகுமோ?

சட்டென்று நிகழ்ந்தவைகளில் மீரா மூச்சடைத்துப் போனாள். லிஃப்டில் இருந்த அந்த சில நிமிடங்களில் அவள் இதயம் பலமுறைகள் தாளம் தப்பின. இவன் தான் செய்வது என்னவென்று புரிந்துத்தான் செய்கிறானா என்ன?

மீராவிற்கு கார்த்திக்கின் செயலில் மனம் படபடவென அடிக்க ஆரம்பித்தது. அந்த லிஃப்டில் அத்தனை நெருக்கடிதான். ஆனால், காயம் பட்டவளுக்கு தன் கரத்தை கவனிக்க தெரியாதாமா? இவளுக்கு சேவகம் செய்வதுதான் இவன் வேலையாமா?

லிஃப்டிலிருந்து வெளி வரும்வரையிலும் அவனது கைகளுக்குள் தான் அவளது வலதுக்கை இருந்தது. இழுத்தால் இவளுக்கே பாதகமாக முடியும் என்பதால் மூச்சடக்கி அவனாக விடும் வரை காத்திருந்தாள் மீரா. வெளியே வந்ததும் தான் அவள் கரத்தை அவன் விட்டான். ஆனால், அவளது மடிக்கணிணிப் பை இன்னும் அவனது தோளில் தான் தொங்கியது. அதை கேட்டவளை அவன் கண்டுக் கொள்ளவில்லை.

அந்த லிஃப்டை அடுத்து இருந்த கஃபேடேரியாவிற்கு அவன் செல்ல, தனது பையை வாங்க வேண்டி இருந்ததால் இவளும் பின்னோடுச் செல்ல வேண்டியதாக ஆகிற்று. அங்கு சென்று அமர்ந்தவன் சாண்ட்விச்சுக்கு ஆர்டர் கொடுத்து அமர்ந்தான். இவளோ அமராமல் நின்றுக் கொண்டு இருந்தாள்.

“பை தாங்க எனக்கு நேரமாச்சு. ஓலா ரிக்ஷா இப்ப வந்திடும்” பரபரத்தாள்.

“கேன்சல் செஞ்சுடு”

“என்னது?”

“ரிக்ஷாவை கேன்சல் செஞ்சுடு நான் உன்னை வீட்டில் விட்டுர்றேன்.”

“அதெல்லாம் நான் போய்க்குவேன், நீங்க முதல்ல பேக் தாங்க” அவன் மேல் கை வைக்க நேரிடும் என்பதாலேயே பையை எடுத்துக் கொள்ளாமல் அவனிடம் பையைக் கேட்டு கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவள்.

“கூல் மேம், சாப்பிட்டுட்டு போகலாம்.”

“எனக்கொன்னும் வேண்டாம், நான் வீட்ல போய் சமைச்சுப்பேன்.”

“ஏது? இந்த கையை வச்சுக்கிட்டா?”

“அங்கிள்ட ஹெல்ப் கேட்டா அவர் செஞ்சு தருவார்.”

அதற்குள்ளாக அவன் ஆர்டர் செய்த சாண்ட்விச்சுகள் வந்திருக்க அவளுக்காக காஃபியும் தனக்காக டீயும் வரவழைத்தான்.

“பேசாம இங்கிருந்து சாப்பிட்டுட்டு, பார்சல் வாங்கிட்டு போய்க்கோ வீட்டுக்கு போய் மறுபடி எதையாவது வாங்க வெளியே வந்தாலும் கஷ்டமாதான் இருக்கும்” சிறுபிள்ளைக்குச் சொல்வதைப் போலச் சொல்ல அவள் வேண்டா வெறுப்பாக அமர்ந்தாள்.

சாண்ட்விச் முடியும் நேரம் காஃபியும் டீயும் வர அவனது இடையூறுகள் தந்த கோபத்தால் பிடிவாதத்திற்காக, “எனக்கு காஃபி பிடிக்காது டீ தான் பிடிக்கும். எனக்காக எதுக்கு ஆர்டர் கொடுத்தீங்க?” என்றாள்.

“இதோ…” என்றவனாக அவளது காஃபியை தன் பக்கம் திருப்பியவன் அவனுக்காக வரவழைத்த டீயை அவள் முன் நகர்த்தி வைக்க வேண்டாவெறுப்பாக அதையும் குடித்து முடித்து பணத்தை எடுக்க முயல அவன் ஏற்கெனவே பணத்தை செலுத்தி இருந்தான்.

“நீ தந்த ரூபாயிலயே நிறைய மிச்சம் இருக்கு, அதனால இப்ப எதுவும் தர வேண்டாம். என்ன புரியுதா?”

‘தான் கொடுத்த 2000 ரூபாயில் மிச்சம் வேறா?’ எண்ணியவள் முறைக்கவும் அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.

தோளில் இவளது பையோடு வெளியே வர அவள் மறுபடிக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.

“நீங்க என் கிட்ட நடந்துக்கிறது எதுவும் சரியில்ல” என்றாள் காட்டமாய்,

காதுகுடையும் பாவனையில் “என்ன தப்பா நடந்தேன் சொல்லு?” என்றான்

“எதுக்கு காலையில் இருந்து என் பின்னாலயே இத்தனையும்…” சொல்லியும் சொல்லாமலும் அவள் விட

“இந்த இடத்துக்கு நீ புதுசு, அப்ப நான் தான உன்னை கவனிச்சுக்கணும்.”

“நீங்க என்னோட ரிப்போர்ட்டிங்க் மேனேஜர், என் கார்டியன் இல்லை” மீரா வெடித்து விட்டாள். “அது போக என்னை நான் பார்த்துக்க முடியும்” கேம்பஸின் வாயில் நோக்கி நடந்துக் கொண்டிருந்தவர்களின் சூடான விவாதத்திற்கு ஆளற்ற அந்த நடைபகுதி மிக வசதியாக இருந்தது.

“என்னை நான் பார்த்துக்க முடியும்” எனச் சொன்ன போது கார்த்திக்கின் கண்கள் அவளது வலது கரத்தின் காயம் பட்ட விரல்களில் இருக்க அவள் இன்னுமாய் கொதித்துப் போனாள்.

“அப்ப நான் உன்னை ட்ராப் செஞ்சா வர மாட்ட? அப்படித்தான?” சம்பந்தமில்லாமல் அவள் சொன்னதை மறுபடி நினைவூட்ட…

எதையோ சாதித்ததைப் போல “ஆமாம், நான் ரிக்ஷால போகப் போறேன்” என அறிவித்தாள். அவன் அந்த உணர்வை கண்டுக் கொள்ளாமல் படு இயல்பாக

“அப்ப என்னை திட்டுறதில் வீணாக்குற நேரத்தில் ரிக்ஷா புக் செய்” என்றான்.

கோபத்தில் ஜிவுஜிவுத்து நின்றவளைக் கண்டதும், “உனக்காக நான் வேணும்னா பதிவுச் செய்யட்டுமா?” என தன் அலைபேசியை எடுக்க முனையவும்,

“நான் செஞ்சுப்பேன்” சொன்னவள் தனது இடது கையால் மொபைலை தட்டுத்தடுமாறி உபயோகிப்பதை இரக்கமற்றவனாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஆம் அவளுக்கென்னவோ அவன் பார்வை அப்படித்தான் தோன்றியது.

“அன்னிக்கு எனக்கு இடது கையாலத்தான் மெசேஜ் செய்தாயோ?” தன்னையறியாமல் கேட்க, ஆமாமென தலையசைத்து பதிலளித்தாள்.முதல் முறை சொற்கத்திகளை வீசாமல் தலையசைத்து பதில் சொன்னவளை கார்த்திக் சுவாரஸ்யமாக பார்த்து நின்றான்.

ரிக்ஷா வரவும், அதில் அவள் அமர்ந்ததும் அவளருகே அந்த மடிக்கணிணி பையை வைத்தான், அந்தப் பை பூட்டப்பட்டு இருந்தது.

“என்னதிது?” கண்களில் ஜீவாலையோடு அவனை அவள் முறைக்க, அந்த பூட்டப்பட்ட பையின் குட்டிச் சாவியை அவளுக்கு காட்டியவன் தன் காற்சட்டைப் பைக்குள் அதனை போட்டான்.

“உனக்கு தேவைப்படுற எல்லாத்தையும் எடுக்க வசதியா வெளிப்பைக்கு மாத்திட்டேன். இன்னொரு சாவி ஆஃபீஸ்ல எந்த ட்ரால வச்சிருக்கேன்னு ராத்திரி மெசேஜ் செய்றேன் சரியா? நிம்மதியா ரெஸ்ட் எடுத்துட்டு நிம்மதியா தூங்கு.” அவள் மடிக்கணிணிப் பை அருகே பிரபல ரெஸ்டாரெண்ட் பெயர் தாங்கிய ஒரு பையும் வைத்தான் அதில் இருந்த உணவின் வாசனை ரிக்ஷாவில் பரவ ஆரம்பித்தது.

அவள் அவன் சொன்னவைகளை மீரா புரிந்துக் கொள்ளும் நிலை வரும் முன்பாக ரிக்ஷா புறப்பட்டு விட்டிருந்தது.

அன்றைய பிரசண்டேஷன் அவள் மெடிக்கல் லீவில் வீட்டில் இருந்த போது நேரம் போகாமல் கிடைத்த நேரத்தில் எல்லாம் பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக தயாரித்த ஒன்று. கார்த்திக்கிற்கு அவள் வீட்டில் சென்றும் பணிபுரியக் கூடும் எனப் புரிந்த காரணத்தினாலேயே அந்த பையை பூட்டி விட்டிருக்கிறான்.

அவனது அடக்குமுறைகளில் மனம் மறுபடி கடுப்பாக, பற்களைக் கடித்த வண்ணம் கோபத்தை அடக்க முயன்றுக் கொண்டு இருந்தாள். அத்தனையும் புரிந்துக் கொண்டு திகைத்து நிமிர ஐந்து நிமிடங்களாகி விட்டிருக்க அவள் பயணித்த ரிக்ஷா அப்போது சிக்னலில் நின்றது.

அந்த நாற்வழிச் சாலையில் அடுத்த சில நொடிகள் கடந்து இரு வேறு திசைகளுக்கு பச்சை வண்ணத்தில் சிக்னல் மிளிர தற்செயலாக இடப்பக்கம் பார்த்தவளுக்கு அந்த பெரிய நவீன வகை வாகனத்தை ஓட்டும் இடத்தில் இருந்தவனைப் பார்க்கையில் கார்த்திக் போலவே தெரிய தனது தலையை உலுக்கிக் கொண்டாள் அவள்.

‘காணுமிடமெல்லாம் நந்தலாலாவை கண்ட பாரதி போல தனக்கு காணுமிடமெல்லாம் கார்த்திக் என ஆகி விட்டதோ?’ என தோன்ற  அவளுக்கு பீதியாகி விட்டிருந்தது.

வீட்டிற்கு வந்து சிரமத்தோடு உடை மாற்றி, பூட்டப்பட்டிருக்கும் மடிக்கணிணியை திறக்க இயலாமல் தனக்கு பிடிக்கவே பிடிக்காத டிவி சீரியலை கேர் டேக்கரோடு பார்த்து நேரத்தை தள்ளினாள்.

அந்த கெஸ்ட் ஹவுஸீக்கு தில்லியில் இருந்து வருவதாக இருந்தவரது திட்டம் மாறி விடவே, முன்போல அவளும் கேர் டேக்கரும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர். இரவு உணவுக்கான நேரம் வர, உணவை வீணாக்கக் கூடாது எனும் காரணத்தை சொல்லிக் கொண்டவளாக அவன் வாங்கி தந்திருந்த அந்த மசாலா உரைப்பு குறைந்த ஃப்ரைட் ரைஸை உண்டு முடித்தாள். மாத்திரைகளை போட்டுக் கொண்டாள்.

வழமையாக அப்பா வீட்டிற்கு வந்ததும் அனைவருமாகச் சேர்ந்து இவளுக்கு அழைப்பதை போலவே, அன்றும் அழைக்க, பெற்றோர்களுடனான அலைபேசி பேச்சுக்கள் முடிந்த அடுத்த பத்தாவது நிமிடம் தங்கைகளுடனான வீடியோ கால் நேரம் அது. கடந்த நாட்களில் அப்படித்தானே அவளது நேரம் கழிகின்றது.

வீடியோ கால் ஆரம்பிக்கவும் தங்கைகள் கேட்கும் முன்னே தனது விரல்களை அவர்கள் பார்க்க மொபைல் கேமரா முன் நீட்டினாள் மீரா. வெள்ளைத் துணியில் சுற்றி இருந்ததை பார்க்க இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லைதான். கட்டு அவிழ்க்கும் போது போட்டோ எடுத்து போடுக்கா என சின்னவள் சித்ரா பலமுறைகள் கேட்டிருந்தாள். தனக்கே சிதைந்த தன் விரல்களைப் பார்க்க பயமாக இருக்கையில் அவர்களுக்கு அனுப்பி பயமுறுத்துவானேன்? என ‘என்னால அப்ப போட்டோ எடுக்க முடியலைடா’ என மழுப்பிக் கொண்டு இருந்தாள்.

இருவரில் சித்ரா ஒரு வகை எனில், சுசித்ரா வேறு வகை. சிறுபிள்ளைப் போன்றதொரு மெலிதான மனம் படைத்தவள் சித்ரா, எதையும் தீவிரமாக யோசிக்கவெல்லாம் அவளுக்கு வராதெனில், சுசித்ரா விளையாட்டுப் பிள்ளை எனினும் பொறுப்பாய் எல்லாவற்றையும் கவனிக்கின்ற குணம்.

“தையல் எடுத்தாச்சா அக்கா?”

“நாளைக்குத் தான்”

“மாத்திரை இருக்கா? போட்டியா?”

“இப்பதான் சாப்பிட்டுட்டு போட்டேன்.”

அடுத்து அவளது மேனேஜரை தாளித்துக் கொட்டும் தருணம். கார்த்திக் குறித்து வந்த அடுத்த நாள் கடுப்பில் தன்னையறியாமல் தங்கைகளிடம் பகிர்ந்திருக்க, தினமும் அவனைக் குறித்து ஏதாவதொன்று பேசாமல் அவர்களது உரையாடல் நிறைவுறாது. தற்போதெல்லாம் உரையாடலின் போது அவர்களுள் ஒருவனாக கார்த்திக்கும் தவறாமல் இடம் பெறலானான்.

முன்பைப் போல அவன் செய்வதை எல்லாம் சொல்லாமல் நிறைய விஷயங்களை வடிக்கட்டி இவள் சொல்ல, அதாவது மடிக் கணிணி பையை தூக்கிக் கொண்டது, சாண்ட்விச், உணவு பார்சல் இவற்றைச் சொல்லாமல் அலுவலகத்தில் அவள் வேலையை செய்ய விடாமல் கடுப்படித்தது மற்றும் மடிக் கணிணி பையை பூட்டி வைத்தது குறித்து அவள் சொல்ல,

“உனக்கு அப்படித்தான் வேணும்கா” சித்ரா விழுந்து விழுந்து சிரித்தாள்.

உரையாடல் முடியும் நேரம் அம்மா அழைக்கவும் சித்ரா அங்கிருந்துச் செல்ல அவர்களது அறையின் கதவை பூட்டிய சுசித்ரா எதிரில் இருந்தவளிடம்,

“அக்கா”

“என்னடா?”

“ஐ திங்க்… ஐ திங்க்” [நான் என்ன நினைக்கிறேன்னா…]

“என்ன யூ திங்க்?” சித்ரா அறையை விட்டுச் சென்றதும் அவளைப் போட்டுக் கொடுக்க ஏதோ தன்னிடம் பேசுகிறாள் போல என எண்ணியவள் சிரிப்பாய் தங்கையிடம் கேட்க,

“ஐ திங்க் ஹி இஸ் இன் லவ் வித் யூ” [அவர் உன்னை காதலிக்கிறார்னு நினைக்கிறேன்] என்றாள் மிரண்டவளாக,

“ஓ, இதுக்கா இவ்வளவு தயக்கம்?” தங்கையிடம் முறுவலித்தாள் மீரா.

“நீ திட்டிருவியோன்னுதான்…” மிடறு விழுங்கினாள் சுசித்ரா. மீரா சில விஷயங்களில் கண்டிப்பானவள்.சித்ரா முன்னால் எதையும் சொல்வதும், ஊரெல்லாம் தண்டோரா போடுவதும் இரண்டும் ஒன்றுதான் எனப் புரிந்ததால் தயங்கினாலும் தமக்கையிடம் தனியே சொல்லி இருந்தாள்.

தமக்கை எதையாவது சொல்வாளா? என சுசித்ரா பார்த்திருக்க, மீராவோ ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். தங்கையின் முக பாவனைகள் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது.

தாம் சொல்வதற்கு மாறாகத்தான் செய்யப் போகின்றோம் என்பதை அறிந்திராதவளாக, “முன்பின் தெரியாத யாரையும் எப்படி காதலிக்கவெல்லாம் முடியும்? சொல்லு…” கேட்டாள்.

“ஆமாக்கா, அது முடியாது. ஆனால், உனக்குதான் உன் பாஸை தெரியும் தானே?”

“தெரியாதுமா… நான் அலுவலக பழக்கத்தை அலுவலகத்திலயே முடிச்சிருவேன். என்னிக்காவது அலுவலக நட்புக்களை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்திருக்கின்றேனா சொல்லு?”

இல்லையென தங்கை தலை அசையவும் கதவின் அந்த பக்கம் இருந்து சித்ரா கதவை தொம் தொம்மென அடித்துக் கொண்டிருக்க, இருவரும் உரையாடலை முடிவு செய்தனர்.

“சனியனே, இதோ வரேன்… கதவை உடைக்காத” இணைப்பை துண்டிக்கும் முன்பாக சுசித்ரா கத்தியது காதுக்குள் ஒலிக்க, மீரா புன்னகையோடு அலைபேசியை துண்டித்தாள்.

இரவு மீரா மன உளைச்சலில் வெகு நேரம் உருண்டு புரண்டுக் கொண்டிருக்க, இவள் கண்ணயர்ந்த அந்த பண்ணிரெண்டு மணிக்கு இவளது மடிக்கணிணிக்கான சாவி எந்த லாக்கரில் வைக்கப் பட்டுள்ளது என்கின்ற தகவலை கார்த்திக் அனுப்பி இருந்தான்.

அடுத்த நாள் மீரா அலுவலகம் சென்ற அந்த நேரம் கார்த்திக் வராவிட்டாலும் அவன் சொன்ன அந்த ட்ராவில் இருந்து சாவியை எடுத்துக் கொண்டு பையை திறந்து மடிக் கணிணிபை எடுத்து வெளியில் வைத்தாள். அடுத்த பத்தாவது நிமிடம் பாஸ்கர் வந்து அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தான். “ப்ரொஜெக்ட் சில நாட்கள் தாமதமானாலும் கூட பரவாயில்லையாமாம். அதனால் அவள் நிதானமாக வேலை செய்து கொடுத்தால் போதுமாமாம்.”

பாஸ்கர் யார் சொல்லி இதனை பேசுகிறான் எனப் புரியாத விரல் சூப்பும் குழந்தையா இவள்? மனதிற்குள்ளாக அத்தனை இறுக்கம். கார்த்திக்கின் தலையீடு அவளால் சகிக்கவே முடியாததாக இருந்தது. அவர்களது வேலைகளில் குறிப்பிட்ட நாட்களில் ப்ரொஜெக்டை முடிப்பதுதான் சவாலானது. அலுவலகச் சுவர்களெல்லாம டைம்லைன் டைம்லைன் என்றே அலறும். இவன் தனக்காக அந்த டைம்லைனை நீட்டித்து வாங்கி இருக்கின்றானாமே?

மீராவிற்கு கோபத்தில் நாசி விடைத்தது, ‘யாரும் எனக்கும் பரிதாபப் படக்கூடிய நிலையில் தான் இல்லை’, என மனதிற்குள்ளாக உருவேற்றிக் கொண்டாள். தானாகவே இறுகிய அவளது முக பாவனைகளைக் கண்டு பாஸ்கர் என்ன நினைத்தானோ? இன்முகமாக விடைப்பெற்று அங்கிருந்து நகர்ந்தான்.மீராவும் முகத்தை இன்முகமாக மாற்றி விடைக் கொடுத்தாள்.

அதன் பின்னர் இடது கை மட்டும் உபயோகப்படுத்தினாலும் தனது முழு கவனத்தையும் செலுத்தி வேலை செய்துக் கொண்டிருக்க சில நேரங்கள் கழிவறைக்கும், தண்ணீர் குடிக்கவும் வேண்டி எழுந்தாளன்றி வேறெந்த காரணமாகவும் அவள் இருக்கையை விட்டு எழவில்லை.

மதியம் இரண்டரை மணி இருக்கையில் அவளுக்கு பிடிக்காததென அவள் நினைக்கும் அந்த நிழல் அவளைச் சூழ்ந்தது.

“வா சாப்பிடலாம்” கார்த்திக் தான் வேறு யார்? ஒரே அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்கள் சேர்ந்து உண்ண அழைத்ததுப் போலத்தான் அவனது அழைப்பும் இருந்தது.

“இல்லை எனக்கு பசிக்கலை, அப்புறமா சாப்பிடுறேன்” என்றவள் காலை உணவும் எடுத்திருக்கவில்லை, மதிய உணவும் சமைத்து கொண்டு வந்திருக்கவில்லை. களைப்பில் படுத்தவள் எழும்பி புறப்படவே நேரமாகி இருக்க எங்கே சமைக்க? என அலுவலகத்தில் உணவைப் பார்த்துக் கொள்ளலாமென வந்திருந்தாள்.

பாஸ்கர் மூலமாக கார்த்திக் செய்தி அனுப்பி விட்டிருக்காவிட்டால் அவள் தான் நினைத்த வண்ணம் உண்டிருக்க வாய்ப்புண்டு. அவன் சொன்னதற்காகவே பிடிவாதத்திற்காக இவள் கூடுதலாக வேலை செய்ய அவனும் எப்படியோ விபரம் தெரிந்து, அன்று அலுவலகம் வர வேண்டிய நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு அடித்து பிடித்து வந்து நின்றான்.

“பொறு உன் வேலையை பார்க்கிறேன்” என அவளது கணிணியை தன் பால் திருப்பி பார்த்தவன் பிறர் கேட்க,

“சரி மீரா நாம சாப்பிட போகலாம்” என்றவன் அவள் மட்டும் கேட்க,

“இப்ப வரியா? இல்லை லேப்டாப் தூக்கிட்டு நான் போய்ட்டே இருப்பேன்.” என்றான்.

தனது பொறுமை பறந்த மீரா, “நீ உன் லிமிட்ல இரு, இல்லின்னா செக்ஸீவல் ஹேராஸ்மெண்ட் (Sexual Harrassment) கேஸ் கொடுத்து போய்ட்டே இருப்பேன்” என்றாள். கோபத்தில் ஜ்வலித்த அவளது கண்களும் உக்கிரமாய் அவன் கண்களும் ஒரு நொடி மோதிக் கொண்டன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here