மனதோரம் உந்தன் நினைவுகள்_9_ஜான்சி

0
276

Manathoram Unthan NinaivukaL_Epi 9_Jansi

அத்தியாயம் 9

சகஜம்

ஒவ்வொரு முறையும்

என் முகம் ஏன் பார்க்கின்றாய்? என்றறிவேன்.

உந்தன் பேச்சும், நெருக்கமும், அக்கறையும் 

உணர்த்தும் உந்தன் காதலுக்கான பதிலை

என்னிடம் தேடுகின்றாய்.

உனக்கான உணர்வுகளை

 பிரதிபலிக்காத என் முகம் பார்த்து

ஒருபோதும் மனம் தளராதே…

ஆர்ப்பரிக்கும் கடலின்

அடியாழங்களில் அமைதி நிலவுவது

சகஜம் தானே?

****

POSH அதாவது Prevention of Sexual Harassment at the Workplace எனும் சட்டம் பணி புரியும் இடத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டமாகும். இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் இச்சட்டம் நாடு முழுவதும் 9 டிசம்பர் 2013 அன்றைய தினம் முதலாக நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின் படி கீழ்வருவன பாலியல் துன்புறுத்தல்களாக கருதப்படும்,

1. அத்துமீறிய தொடுகைகள் மற்றும் பாலியல் அழைப்பிற்கான சைகைகள்.

2. ஏதேனும் ஒரு செயலுக்கு பிரதி உபகாரமாக பாலியல் உறவை கேட்பது.


3.   Making sexually coloured remarks. பாலியல் சார்ந்த விஷயங்களை கோடிட்டு காட்டிக் கொண்டு இருப்பது.அ.கா அருவருக்கத் தக்க பேச்சுக்கள், சாடைகள் கையசைவுகள் முதலியன.

4.   நிர்வாணப் படம் காண்பிப்பது.

5.   தனது பாலியல் எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டுவது, அல்லது வேலையில் இடையூறுகள் செய்வது.

6.   வெறித்து வெறித்துப் பார்ப்பது.

7.   குறிப்பிட்ட நபரை எந்த நேரமும் பின் தொடர்ந்துக் கொண்டு இருப்பது.அவரது விபரங்களை அவர் அறியாமல் சேகரிப்பது. அவருக்கு மனரீதியான பயமூட்டும் இச்செயல்களை செய்வது.

8.  ஒருவரின் உடையை, அலங்காரத்தை புகழ்வது, வருணிப்பது மற்றும் வழிவது.

இன்னும் நிறையச் சொல்லலாம். பொத்தாம் பொதுவில் சொல்வதானால் பெரும்பாலான நாவல்களிலும், சீரியல்களிலும், படங்களிலும் காதல்…அதீதக் காதல் என் காட்டப்படுவன Sexual Harrassment எனும் பாலியல் துன்புறுத்துதல்கள் தான் என்றால் அவை மிகையாகாது.

குறைந்த பட்சம் 15 பேர் பணி புரியும் அலுவலகங்கள் முதலாக இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் மனித வளத்துறையினரால் நிர்வகிக்கப்படும் POSH குழுவில் நிறுவனத்தின் பெரிய பதவியில் இருக்கின்ற பலரும் இருப்பர். பணிக்கு புதிதாகச் சேருகின்றவர்களுக்கு POSH பயிற்சி கொடுக்கப்படும். பாலியல் துன்புறுத்தல்களைக் குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டி சம்பந்தப்பட்ட குழுவின் மின்னஞ்சல்கள் விபரங்கள் தெரிவிக்கப் படும்.

குற்றச்சாட்டுகள் எழுமானால் விசாரணையின் முடிவில் குற்றமுள்ளவர்களாக அறியப்படுகின்றவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்.

“உன்னுடைய பெர்ஃப்யூம் வாசனை நன்றாக இருக்கின்றது” எனச் சொன்னதற்காக தன் வேலையை இழந்த நபர்களும் உண்டு. “உன்னுடைய சேலையின் நிறம் எடுப்பாக இருக்கின்றதே? எனச் சொல்லி அதனால் பல்வேறு விசாரணைகளை எதிர்கொண்ட நபர்களும் உண்டு.

அட இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதையெல்லாமா பாலியல் துன்புறுத்தல் எனச் சொல்ல வேண்டும் என மேற்போக்கான நிலையில் இவை எடுத்துக் கொள்ளப் படுவது இல்லை. ஒருவருக்கு பிடிக்காத பட்சத்தில் அவரது தனிப்பட்ட விஷயங்களில் நிகழும் அதீத மூக்கு நுழைப்புகள், அதிகாரங்கள் அவை துன்புறுத்தல்களாகவே கருதப்படும்.

விசாரணையின் முடிவில் வேலையிழக்கும் அபாயங்கள் இருக்கும் நிலை ஒன்று என்றால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதே தனது தனிப்பட்ட ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அது எவ்விதமாக ஆண்களை பாதிக்கும் என்பதை விவரிக்க தேவையிராதென எண்ணுகின்றேன்.

***

மீரா, “நீ உன் லிமிட்ல இரு, இல்லின்னா செக்ஸீவல் ஹேராஸ்மெண்ட் கேஸ் கொடுத்து போய்ட்டே இருப்பேன்” என்றாள். கோபத்தில் ஜ்வலித்த அவளது கண்களும் உக்கிரமாய் அவன் கண்களும் ஒரு நொடி மோதிக் கொண்டன.

கார்த்திக் இயல்பாக பேசுகின்றவன் இலகுவானவன் தான் ஆனால், மீரா கோபத்தில் விட்டெறிந்த வார்த்தைகளை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சில நொடிகளில் அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருக்க, அவனது மூச்சு விடும் வேகம் அதிகரித்து இருந்தது.

‘எப்படிப்பட்ட குற்றச்சாட்டை தன் மேல் சுமத்தி விடுவதாகச் சொல்லி விட்டாள்?’ அவனது தன்மானம் ‘தான் இன்னமும் அவளுக்காக பரிந்துக் கொண்டு அவள் பின்னால் செல்லத்தான் வேண்டுமா?’ என அங்கலாய்க்க அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவனை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து விட்டிருந்தது.

தன்னையறியாமல் தான் சொல்லிவிட்டிருந்த வார்த்தைகளை எண்ணி மீராவும் அதிர்ந்திருந்தாள். கார்த்திக்கின் செயல்கள் தன்னை எரிச்சல் மூட்டியது என்னவோ உண்மைதான். ஆனால், அவை பாலியல் துன்புறுத்தல் இல்லையென்று அவள் அறியாமலில்லை. எத்தனை பெரிய வார்த்தைகளை பிரயோகித்து விட்டோம்? என நியாயவாதியான அவளது மனது அவளை சுட்டெரித்தது.

கார்த்திக் நின்றவண்ணமே நின்றான். அவனது பார்வை அவளை விட்டு அகலவே இல்லை. அவள் கூறியதை அவள் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்பது போல பிடிவாதமாய் நின்றான்.

பேசிய அடுத்த கணமே நெருடலாக உணர்ந்தவள் “சாரி” என்றாள். அவனது முறைப்புகள் அவளை விட்டு இன்னும் அகலவில்லை.தனது சொற்களால் முகம் கன்றி நின்றவனை பார்க்கும் போதே மீராவுக்கு பயமாகி விட்டிருந்தது.

‘காதலை ஏற்றுக் கொள்ளாத பெண்களை ஆண்கள் படுத்தும் பாடு அவளறியாததா என்ன? இத்தனைக் காலம் பொறுமை காத்து இருந்தது போல இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாம். இப்படி பேசி மாட்டிக் கொண்டோமே?’ என்றிருந்தது.

அவள் உபயோகித்த வார்த்தைகள் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், அவன் தனக்காக செய்கின்றவைகள் அதீதமானவைகள் தானே? தனக்கு எரிச்சல் மூட்டுவதை அவளும் எத்தனை நாட்கள் தான் பொறுக்க முடியும்?

அவர்களது பிரச்சனைக்கு முடிவுக் கட்டுவதைப் போல அந்நேரம் அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்திருந்தது. அவள் ஸ்விக்கியில் சற்று நேரம் முன்பாக ஆர்டர் செய்திருந்த சைனீஸ் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வந்து விட்டதாக தகவல் வரவும் தனது மடிக்கணிணி வைத்து தன்னை மிரட்டிக் கொண்டிருந்தவனையும், மடிக்கணிணியையும் அம்போவென விட்டுவிட்டு பர்ஸ் சகிதம் புறப்பட்டாள்.

மடிக்கணிணியைக் கூட லாக் செய்யாமல் செல்கின்றவளை முறைத்தவன் “போகாரு சூடு” (திமிரைப் பார்) என்று முனகியவனாக அவனே அதனை லாக் செய்து அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றுதான் ‘தான் எதையாவது தவறாக செய்கின்றோமோ?’ என கார்த்திக் முதன்முறையாக யோசிக்க ஆரம்பித்தான். அதாவது அவளது வார்த்தைகள் அவனை அவ்வாறு யோசிக்க வைத்திருந்தன. தான் மற்றவர்களிடம் பழகுவதைப் போலத்தானே அவளுடனும் பழகினோம்? என்றெண்ண, ‘அப்படியா? நீ மற்றவர்களிடம் பழகுவதைப் போலத்தான் அவளுடனும் பழகினாயா?’ அவன் மனம் அவனிடமே முரண்பட்டு நின்றது.

வார இறுதியில் தாத்தாவிடம் செல்ல வேண்டும் என மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டான்.தாத்தா இன்னும் கழுவி ஊற்றுவாரோ? என மனதிற்குள்ளாக தோன்றினாலும் அவனுடைய ஆபத்பாந்தவன் அவர்தானே?

சற்று நேரம் கழித்து கஃபேடேரியாவில், தனக்கு வந்த உணவு பார்சலைப் பிரித்து வலதுக் கையின் காயப்படாத மூன்று விரல்களால் மெதுவாக, மிக மெதுவாக உணவை ஸ்பூனில் அள்ளி உண்டுக் கொண்டிருந்த மீராவைப் பார்த்த பின்னர் தான் கார்த்திக்கிற்கு ஆசுவாசமாக இருந்தது.

“திமிர் பிடித்தவள்” முனகியவன் அதன் பின்னர் அவளை தூர நின்று கவனித்துக் கொண்டானே அன்றி அவளுடன் எதையும் பேச முற்படவில்லை. அன்றும் அடுத்தடுத்த நாட்களிலும் அவள் வீடு திரும்புகையில் எல்லாம் வலிய அவளது மடிக் கணிணி பையை சுமந்து அவள் ரிக்ஷாவில் ஏறும் வரை கூடவே செல்கின்றவன் அதை பூட்டி தினம் ஒரு இடத்தில் அதன் சாவியை வைப்பதுவும், இரவு தகவல் தெரிவிப்பதுமான சேவையை நிறுத்தவில்லை.

அவளை அவன் ஓரிரு முறைகள் வலுக்கட்டாயமாக மாலை நேர சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்ல, தான் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துக் கொள்வதாகச் சொல்லி மீரா அவனிடம் கண்டிப்பாக கூறி விட்டிருந்தாள்.

இப்போதெல்லாம் மீரா அதிகமாக பேசுவதுமில்லை, ஆர்ப்பாட்டம் செய்வதுமில்லை. அவனை எல்லாம் மனிதனாக கண்டுக் கொள்வதுமில்லை. தனது மடிக் கணிணிப் பையை அவன் எடுத்துக் கொள்ள அந்த பைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல வெடுவெடுவென முன்னால் நகர்ந்து விடுவாள். யாராவது அவனையும் அவளையும் சேர்த்து வைத்து புறணி பேசினால் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாதெனும் அச்சமே காரணி.

அவளது கோபத்தை தூண்டவென்றே அடுத்த வார இறுதியில் சுஜித்தின் அழைப்பு வந்தது.வழக்கமான அழைப்பென்று எடுத்து இவள் பேச, அவரோ அவளை மறுபடி சென்னைக்கு திரும்ப வரச் சொன்னார். தான் வந்த ப்ரொஜெக்ட் இன்னும் முற்றுபெறாதிருக்க அவளுக்கு திரும்ப செல்ல வேண்டிய காரணமே புரியவில்லை.

“நீ வந்து இங்கிருந்து அந்த ப்ரொஜெக்டை தொடர்ந்துக் கொள்”, என அவர் முடிவாகச் சொல்லி விட்டார். பாஸ்கரும், அனுராதாவும் தங்களது ப்ரொஜெக்டை அவள் சென்னை சென்ற பின்னர் ஆன்லைன் மீட்டிங்குகளில் தொடர்ந்துக் கொள்ளலாம் என இலகுவான குரலில் இயம்பினர். இப்படிச் செய்வதானால் அவள் ஹைதராபாத் வந்திருக்க தேவையே இல்லையே? இவை அனைத்தின் பின்னாலும் இருப்பவன் யாரென்று அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.

அன்று மீரா ஹைதராபாத் அலுவலகத்திலிருந்து புறப்பட வேண்டிய கடைசி நாள். தான் அங்கிருந்து மட்டுமே செய்யக் கூடிய பல வேலைகளை பரபரப்பாக செய்ய வேண்டி இருந்தது. தன்னை கைப்பாவையாய் ஆட்டும் கார்த்திக் மீது சினமிகுந்திருந்தாள்.

இங்கு தான் வந்ததில் இருந்து எல்லாவற்றிலும் அவனது தலையீடுகள் அவளது தனிப்பட்ட உலகத்தை ஆட்டிப் படைத்து இருந்தவன் மேல் கொலைவெறியில் இருந்தாள். அன்று அவனை காலை முதலே அவள் பார்த்திருக்கவில்லை.

‘என் எதிரில் அவன் வந்தானென்றால் கிழித்து தோரணம் கட்டி விடுவேன், அவன் வராதவரைக்கும் சரிதான்’ என மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டு இருந்தவள் எதிரே “சைத்தானின் பெயரை எடுத்ததும் சைத்தான் ஆஜராகி விடும்” எனும் உருது பழமொழிக்கேற்ப வந்து நின்றான் அவன்.

“கையை பார்த்துக்கோ”

“……”

“கொஞ்ச நாள் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்க”

“……”

“நான் சுஜித் கிட்ட பேசி இருக்கிறேன்.”

வலிய வாங்கிக் கட்டிக் கொள்ள பேசிக் கொண்டு இருந்தான். தலைவிதியை யாரால் மாற்ற முடியும்?

“உங்க அட்வைஸ் எனக்கு தேவையில்லை, நான் பார்த்துக்கிறேன்.”

“உன் நல்லதுக்காகத்தான் சொல்கிறேன்” கார்த்திக் சொல்லவும் மீரா மறுபடி ஆத்திரத்தில் அறிவிழந்தாள்.

“பொண்ணுங்கன்னாலே இப்படித்தான் எல்லாருக்கும் அக்கறை பொத்துக்கிட்டு வரும்” குத்தலாய் சொல்ல…

“நா டெக்ரா டெப்பா படுதாவு” (என் கிட்ட அடி வாங்கப் போற) ஆத்திரமாய் மொழிந்தவன் அங்கிருந்து அகன்றான்.

அன்றிரவு அலுவலகத்தினின்று வந்த வாகனத்தில் பயணிக்கும் போதும், விமான நிலையம் சென்று விமான பயணம் முடிந்து சென்னை விமான நிலையத்தில் தன்னை அழைத்துச் செல்ல வந்த அப்பாவைக் கண்டு மீரா மகிழ்ந்தாள்.

தனது விரல்களின் காயங்களின் கதைகளை அப்பாவிற்குச் சொல்லி, பின்னர் அம்மாவிற்குச் சொல்லி அவளோடு கூட “எங்களுக்குத்தான் அக்காவிற்கு அடிப்பட்டது முன்பே தெரியுமே?” என்பதாக தங்கைகளும் அது குறித்து கதைகதையாய் வீட்டில் சொல்லினர்.

அம்மா அவள் காயம் அறிந்ததும் முதலில் கண்ணீரோடும், பின்னர் அக்கறை கவனிப்போடும் சீராட்டினார். அவள் ஹைதராபாதில் இருந்து திரும்ப வந்ததில் இருந்து சில வாரங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்து அதன் பின்னரே அலுவலகம் சென்றாள்.

மீராவிற்கு ஒவ்வொரு முறையும் தான் கடைசியாகப் பார்த்த கார்த்திக்கின் கோபமும், முறைப்பும் கண்களுக்கு உள்ளேயே வந்து அவளை மிரட்டும்.

தான் கார்த்திக்கிடம் பேசிய மற்றும் நடந்துக் கொண்ட விதம் எல்லாம் சரியா? தவறா? என அவள் தன்னைக் குழப்பிக் கொண்டு இரவு தூக்கங்களை தொலைத்து விட்டு பகலில் தூக்கத்தை துரத்திக் கொண்டு இருந்தாள். அவளது பிரச்சனைதான் என்ன?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here