இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி

2
1503

அத்தியாயம் 6

அந்த சிறிய வீடு அன்பால் சூழப்பட்டு இருந்தது, அங்கு விமலாவின் மனது சற்று சஞ்சலமற்று நிர்மலமாக இருந்தது. விமலாவும் வீரேந்திரனும்

அந்த வீட்டிற்கு இரவு உணவிற்கு அங்கு வந்திருந்தனர். கணவன் வழி உறவு முறையில் எத்தனையோ பேரின் பந்தாவையும் பகட்டையும் பார்த்தவள் அந்த இனிமையான தம்பதிகளை அதுவரையில் சந்தித்து இருக்கவில்லை. அவர்கள் வீரேந்திரனின் அன்னையின் சொந்த தங்கையும் தங்கை கணவரும். ஆசிரியராக பணிபுரியும் வீரேந்திரனின் சித்தப்பாவின் குணம் மிக கனிவானதாக இருந்தது.

தான் கண்ட தனது மாமியாரின் சமீபத்திய டாம்பீகமும் அதிகார முகமும் அவரது தங்கையிடம் சற்றும் அவளால் காண முடியவில்லை. இவர்கள் ஒரே வயிற்றில் தான் பிறந்திருக்கக் கூடுமா? எனும் ஆச்சரியம் அவளுக்கு எழுந்தது எனலாம்.

இலகுவான கலகலப்பான பேச்சில் மலர்ந்து இருந்தவளின் முகத்தை கணவனவன் கண்டானா? இல்லையா? வென தெரியவில்லை. அதே மன நிலையில் உணவு வேளை முடிந்து, அந்த வீட்டின் பின்புறம் இருந்த படிகளில் ஏறி குட்டி மொட்டை மாடியில் தம்பதிகள் இருவரும் போய் நின்றனர்.

ஏற்கெனவே அவளுக்கு சூட்டுவலி ஆரம்பித்திருந்தது. சிறு நீர் கழிக்க முடியாமல் வெகுவாக சிரமப் பட்டிருந்தாள். மதியம் உள்தொடையில் அவனது பெல்ட் அழுந்த பதிந்து இழுத்ததில் இரத்தக் காயம் வேறு. அதனை யாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்?

நடக்கவே இயலாமல் இருந்தாலும் கடந்த சில மணித்துளிகளில் தனது வலி மறந்த மானாக அந்த படிகளில் தன்னால் இயன்றவரையில் முயன்று மேலே ஏறிவிட்டிருந்தாள்.

அந்த இரவு வேளையில் சரசரவென காற்று அவளை அள்ளிச் சென்றது. கடந்த நாட்களில் நிகழ்ந்தவைகளை எல்லாம் சற்றுத் தள்ளி வைத்தவளாக கையைக் கட்டிக் கொண்டு இயற்கையை இரசித்தவாறு விமலா நின்றிருந்தாள்.

உடை அணிவதற்கென்று சிறப்பு பயிற்சி பெற்றிருப்பவள் போல அவளது தோற்றமிருக்கும். தங்களது குடும்பத்தை விடவும் வசதி குறைவு எனினும் வீரேந்திரன் குடும்பத்தினர் அவளை தெரிவு செய்தது அவளது உடை அணியும் விதத்தால் என்பதால் கூட இருக்கும். எதை அணிந்தாலும் அவளிடம் ஒரு நேர்த்தி காணப்பட்டது.

தோற்றத்தின் மட்டில் உயரம் குறைவு, மாநிறம் சற்று கன்னம் வைத்து புசுபுசுவென்ற தோற்றம் என்றாலும் அவளது கண்களில் எப்போதும் ஒரு மலர்ச்சி இருக்கும். தன்னம்பிக்கையான அவள் தோற்றம் சிலருக்கு பாராட்டச் சொல்லும் எனில் சிலருக்கு பொறாமைகளை தூண்டி விட்டிருக்குமோ?

இருபத்தியோரு வயதில் வீட்டின் அடக்குமுறைகளில் நான்கு சுவர்களுக்குள் வளர்ந்தவள் பிறரின் தீ நாவுகள், தீய எண்ணங்கள், தீய செயல்கள் குறித்து அறிய நேராமல் இருந்தது குறித்த ஆச்சரியங்கள் இல்லை.

அருகில் வருகின்றவனின் நோக்கம் அறியாதவளாக இருந்தாள்.

“நம்ம கல்யாணம் எப்படி நடந்துன்னு உனக்குத் தெரியுமா விமலா?”

அவன் கேள்வி கேட்டாலே வில்லங்கம் தான் என அவளுக்குத் தெரிந்தாலும் பதில் சொல்லாமல் இருக்க முடியாதே…

“உங்க வீட்ல அண்ணன் கல்யாண போட்டோ பார்த்துட்டு என்னை உங்களுக்கு கட்டணும்னு சொன்னதா, பெண் கேட்டு விட்டதா சொன்னாங்க” என்றாள்.

“அதெல்லாமே பொய் தெரியுமா?”இவள் நெற்றிச் சுருங்கியது.

“இல்ல அப்படித்தான் சொன்னாங்க”

“அது வசதியான வீட்ல உன்னை கட்டிக் கொடுக்கணும்னு உங்க அம்மாவும் அப்பாவும் உன் கிட்ட பொய் சொல்லிருக்காங்க”

‘பொய் பொய்’ என மனம் ஓலமிட்டாலும் அவனிடம் பேசுவது விரயம் என்றறிந்து அமைதியானாள். அவன் தான் சொன்னதையை இன்னும் ஐந்தாறு விதங்களில் விலாவரியாக விவரித்து அடித்து பேசிக் கொண்டே இருந்தான். அவள் அவன் சொல்வதை நம்பும் வரையிலும், அவள் அவன் சொல்வது சரிதான் என ஏற்றுக் கொள்ளும் வரையிலும் அவன் விடுவதாக இல்லை போலும்.

விமலாவின் பார்வை கணவன் மீது வெறித்தவாறு பதிந்திருந்தது. ‘இவன் கூறுவது போல தனது பெற்றோரைக் குறித்து எண்ண வேண்டுமென்றாலும் கூட அதில் ஒரு பொருள் வேண்டாமா? அம்மா அப்பா பொய் சொல்லலாம், சுமதி எப்படி பொய் சொல்வார்?’

கண்ணை மூடிக் கொண்டு இருட்டு இருட்டு என தானும் கத்துவதோடு அவளையும் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறான் போலும். அவள் அவன் சொன்னவற்றுக்கு பதில் கொடுக்கவில்லை.

“அப்படின்னா அண்ணா கல்யாண ஆல்பத்தில் நீங்க என்னை பார்க்கவே இல்லை அப்படித்தானே?”

“ஆமா உன்னை முதல் முதல்ல பார்த்தது பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்ன ஒரு போட்டோ தந்தாங்க அதில் தான்”

“ஓ” என்றவளது எண்ணம் அந்த புகைப்படத்தைக் குறித்து சிந்தித்தது. அது ராஜாவின் பெயர் சூட்டு விழா நேரம் எடுத்த புகைபடம்.

அன்று அவள் பட்டுச் சேலையில் மிக அழகாக தோற்றமளித்து இருந்தாள். விழாவின் அந்த ஹாலை அடுத்து இருந்த பூங்காவை நோக்கிய வண்ணம் அவள் நின்றிருக்க அண்ணன் சிவா கேமராவை வைத்துக் கொண்டு அவளை அந்நேரம் அழைக்கவும் முகம் நிறைந்த புன்னகையோடு அவள் திரும்பி இருந்த போது சட்டென்று எடுத்த புகைப்படம் அது. அவளுக்கு மட்டுமல்ல வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான அவளது புகைப்படம் அது.

“உன் போட்டோவை பார்த்ததும் ஷாக்காகிடுச்சு”விமலா புரியாமல் விழிக்க,

“போட்டோல எருமை மாடு மாதிரி இருந்த நீ”

ஆங்க் பேச்சற்றுப் போனவள் அதன் பின் பேசவே இல்லை. துரத்தி துரத்தி அவளை அடித்துக் கொண்டே இருந்தன அவனது பேச்சுக்கள். அவளது தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மடிய ஆரம்பித்தது அப்போதுதானாக இருக்கும்.

அந்தப் படிகளில் ஏறிய போது இருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை. அதனாலேயே முன்பு உணராத அந்த தொடை வலி, உள்ளுறுப்புகளின் வலி இப்போது அதிகரித்து இருந்தது. உணவு உண்டதால் சிறுநீர் செல்ல உந்துதல் ஏற்பட்டாலும் சூடு பிடி எனும் சூட்டுவலி காரணமாக இலகுவாக சிறு நீர் கழியாமல் அவளை வருத்த பற்களைக் கடித்துக் கொண்டு இறங்கினாள்.

அடுத்த தெருவில் தான் அவர்களது வீடு என்பதால் கார் எடுத்து வந்திருக்கவில்லை. வலி காரணமாக அந்த குறைந்த தூரம் நடக்கவும் அவளுக்கு மிக சிரமமாக இருந்தது.

உடனே வீட்டிற்குச் செல்ல அவள் துடிக்க, அவனோ மற்றொரு உறவினர் விட்டிற்கும் அவளை அழைத்துச் சென்றே வீட்டிற்கு அழைத்துச் சென்றான். மறைக்க முடியாமல் தனது பிரச்சனையை அவள் அவனிடம் சொல்லியிருக்க, அவன் சிரித்துக் கொண்டான். சற்று ஆசுவாசமாக உணர்ந்தது போலொரு முகபாவம் அவனிடம். இரவில் ‘உனக்கு வலிப்பதால் இன்று வேண்டாம்” என அவளை அவன் அணுகவில்லை, இப்போது அவளுக்கும் சற்று ஆசுவாசமே. ஆயினும், அவனை அவளால் புரிந்துக் கொள்ள இயலவில்லை.

அடுத்த நாள் காலை எழுந்து வழக்கம் பொல பதினொன்றிற்கு உணவு கிடைக்கப் பெற்று உண்டு அவள் அமர்ந்திருந்த போது வெளியே செல்வோம் என வீரேந்திரன் அழைத்தான். முதன் முதலாக சுற்றுலாத்தலம் செல்லும் ஆர்வம் அவளில் தொற்றிக் கொண்டது. ஆனால், கணவன் மனைவியுடன் கூட கூடுதலாக உறவினன் ஒருவன் காரில் ஏறுகையில் அவளுக்கு சஞ்சலமாயிற்று.

ஏதோ சிந்தனையில் இருந்தவளை உசுப்பினான் வீரேந்திரன். அங்கே பார் என்றான் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன உனக்கு அதுக்குள்ள உங்க அம்மா அப்பாவை மறந்துப் போச்சா?” ‘முன் தினம் உன்னை ஏமாற்றி எனக்கு திருமணம் செய்வித்தார்கள் என தனது பெற்றவர்கள் மீது குற்றம் சுமத்தியவனா இவன்?’வியப்பில் ஆழ்ந்தவளாக வெளியே பார்க்க முன்புறம் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தவர்கள் அவளது பெற்றோரே.

அவர்கள் அருகில் காரை நிறுத்தச் சொன்னவன் இவள் பெற்றோரை தங்களோடு வண்டியில் ஏறச் சொல்லி அழைக்க அவர்கள் மறுத்தனர்.

‘வாங்க வீட்டில் கொண்டு போய் விட்டுடறேன்”தயங்கினர் இருவரும் உள்ளே இருந்தவளும் தான். ‘பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் என குற்றம் சாட்டப் பட்டவர்களை எப்படி காரில் ஏறச் சொல்வது? இன்னும் கேவலமாக பேச மாட்டானா என்ன?’

“என்ன விமலா உங்கம்மா அப்பாவை வண்டியில் ஏறச் சொல்ல மாட்டியா?” ஒரு நிமிடத்தில் பெற்றோர் முன்பாக அவளை குற்றவாளியாய் ஆக்கி அதட்டினான்.

“வாங்கப்பா வாங்கம்மா”’திருமணமானதும் மகள் மாறிவிட்டாளென எண்ணி இருப்பார்களோ? பணக்காரி ஆகிவிட்டாள் அதனாலேயே பெற்றோரைக் கூட காரில் ஏறச் சொல்லவில்லை என எண்ணி இருப்பார்களோ?’மனம் சஞ்சலம் கொண்டது.

மகளும், மருமகனும் மறுபடி மறுபடி அழைக்க, மறுப்புச் சொல்லாமல் இருவரும் பின் சீட்டில் ஏறி அமர்ந்தனர்.

அவர்கள் வீட்டில் இறக்கி விட்டவன் தாங்கள் எங்கே சுற்றச் செல்கிறோம் என்பதை விளக்கிக் கூறினான். அவன் பேசிய விதத்தில் விமலாவின் பெற்றோருக்கு பெருமிதம் தாளவில்லை.

திடீரென ஏதோ நினைவிற்கு வர விமலா தன் பெற்றோருடன் வீட்டிற்கு சென்று வர அனுமதி கேட்டாள். அவளை இறங்கிச் செல்ல அனுமதித்தானே ஒழிய அவன் காரை விட்டு இறங்கவில்லை.

மாலதி மகளின் மடத்தனத்தை இரசிக்கவில்லை. எங்கோ செல்ல புறப்பட்ட நேரம் அதென்ன தங்களோடு வந்து வீட்டிற்கு வருவது?

“அம்மா என்னோட அந்த கண்ணாடியை காணோம், அதை தேடத்தான் வந்தேன்.” என்றவள் அவசரமாய் தேடினாள் கிடைக்கவில்லை. ஐந்து நிமிடங்கள் கழிந்ததும் வந்த வேகத்தில் காருக்கு திரும்பினாள்.

ஓவல் வடிவ அந்த கையால் பிடித்து பார்க்கும் வண்ணம் அமைந்த குட்டிக் கண்ணாடி. அதன் பின்புறம் இருந்த அந்த ஆணும், பெண்ணும் அவளது காதல் சூழ் திருமண வாழ்வின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த ஓவியம். அதனைத் தேடித்தான் அவள் வந்தது. அவளது காதல் வாழ்வின் எதிர்பார்ப்பைப் போலவே அதுவும் திடீரென மறைந்துப் போய் இருந்தது.

தொடரும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here