இது இருளல்ல அது ஒளியல்ல_10_ஜான்சி

0
821

அத்தியாயம் 10

‘பதினேழு நாளில் யாராவது கர்ப்பம் ஆவாங்களா?’ விமலாவுக்குமே அந்த கேள்வி மிக நியாயமானதாக இருந்தது. மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘அவளுக்கும் அவனுக்குமான உடல் ரீதியான உறவுகள் அதனை ஒரு கைவிரல்களுக்குள்ளாக அடக்கி விடலாம். இதில் அவளுக்குள் இவ்வளவு சீக்கிரமாக குழந்தை உருவானது எப்படி?

’திருமண வாழ்வே புரியாத புதிராக இருக்க குழந்தை வரவு குறித்தெல்லாம் அவளால் எதையும் தீர்க்கமாய் யோசிக்க முடியவில்லை. அவள் மட்டில் நல்ல உடல் நலனோடு இருந்தவளை இந்த மசக்கையால் எழ முடியாதவாறு படுக்கையில் போட்டிருப்பதான மாற்றம் ஒன்றுதான் துன்பப் படுத்தியது. ஒன்றும் புரியாமல் விருப்பு வெறுப்பற்ற மன நிலையில் இருந்தாள்.

வழக்கம் போல இரவின் தனிமை தந்த பயத்தை போக்க அந்த அறையில் ட்யூப்லைட் எரிந்துக் கொண்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பாக அன்னையை கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிய நிம்மதியான தூக்கங்கள் எல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தன.

கணவன் இதோ இப்பொழுது வருவான், வந்து விடுவான் எனும் எதிர்பார்ப்பில் இருந்தவள் கவனம் மூடிய ஜன்னல் இடைவெளி வழியே வந்த சப்தங்களில் பதிந்தது. அந்த பில்டிங்கின் அருகாமையில் இருந்த பெரிய சாலையில் வாகனங்கள் கடந்துச் செல்லும் சப்தம் கேட்கும் போதெல்லாம் கணவன் வந்துவிட்டிருப்பானோ? என அவனை எண்ணி மனம் உந்தித் தள்ளியது.

குழந்தை உண்டானது குறித்த செய்தியை மருத்துவரிடம் இருந்து கேட்ட பின்னர் உற்சாகமான கணவனது மகிழ்ச்சி கண்டு அவளுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி இவர்கள் இருவருக்குமானதல்லவா? கணவனும் மனைவியுமாய் இவர்கள் கொண்டாட வேண்டியதல்லவா? அதை ஏன் அவன் செய்யவில்லை? மனதிற்குள்ளாக குடைந்தது.

அவன் தனக்கு வாழ்த்துச் சொல்லவோ, தன்னை கொண்டாடவோ இல்லை என்பதை மிகச் சாதாரணமான எதிர்பார்ப்புக் கொண்ட அவளது மனதினால் இயல்பாக ஏற்றுக் கொள்ளவே இல்லை.

திருமண வாழ்வின் ஆரம்பம் முதலாக அவனிடம் அணுசரனையான வார்த்தைகள் தேடித் தேடி ஏங்கிப் போனவளாகவே அவள் இருந்திருக்கிறாள். திருமணத்தின் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் பரவாயில்லை.இப்போது நாட்பட நாட்பட அவனது செயல்பாடுகள் மோசமாக ஆகி விட்டிருந்தன. நாட்கள் கூடக் கூட இப்படித்தான் ஆகி விடுமோ?

“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்றுச் சொல்வார்களே? இதுதானா அது? அப்படி இருந்தாலும் அவர்களுக்கு திருமணமாகி இன்னும் முப்பது நாள் கூட முடிந்திருக்கவில்லையே?

விமலா தன் திருமன வாழ்க்கையை பிடித்ததாக, வெற்றிகரமானதாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் கணவனையும் இயன்ற அளவில் தன் மனதிற்கு பிடித்தவனாகவே வரிக்க ஆரம்பித்து இருந்தாள். ஆனால், அவளது அதற்கான எதிர்வினைகள் தான் எதிர்பாரா வினைகளாக அவளை அவ்வப்போது தாக்க ஆரம்பித்து விடும் எனலாம்.

நகர வாழ்க்கைக்கு வந்த பின்னர் அன்று ஒரு நாள் வீரேந்திரன் தன் வேலையினின்று நடுவில் வீட்டிற்கு வந்து, அதன் பின்பு மறுபடி புறப்படுகையில் கண்ணாடிப் பார்த்து, தன் மண்டையின் பின்பக்கத்தில் மீதமிருந்த முடிகளை வாரிக் கொண்டு சாதாரணமாக விமலாவிடம் ஏதோ பேசிக் கொண்டு நின்றான்.

அந்நேரம் பெண்ணவளின் மனதில் ஏதோ தோன்ற அவன் அருகில் சென்று அணைக்க முயல, அவளைக் கண்டு தீ பட்டாற் போல விதிர்த்து விலகி நின்றானே? அவன் செய்கை கண்டு கணவன் இத்தனை அதிர்ச்சி அடையும் படியாக நான் என்ன செய்து விட்டேன்? என மிக அதிர்ச்சியாக உணர்ந்தாள்.

மற்றொரு நாள், அன்று ஞாயிற்றுக் கிழமை ஹாலில் வேறு யாரும் இல்லாதிருக்க அவள் பார்த்துக் கொண்டிருந்த பாடல்களுக்கான டிவி சானலில் காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன.

அப்போது அந்த பக்கம் வந்த வீரேந்திரன் அவளது கையினின்று ரிமோட்டை வாங்கிக் கொண்டு அவள் ஏதோ பார்க்கக் கூடாத அசிங்கத்தைப் பார்த்து விட்டாள் என்பதைப் போல விசித்திரமாக அவளை பார்த்த வண்ணம் டிவியின் சானலை வேண்டுமென்றே மாற்றி வைத்தானே? அந்தப் பார்வை அதன் பொருள் என்னவாம்?

கணவன் மனதில் என்னதான் இருக்கின்றது? எனப் புரியாமல் தவித்தாள். தன்னை கண்டுக் கொள்ளாமல் திரிகின்றவனை உணவு மூலமாக கவனத்தை ஈர்க்கலாம் எனும் முயற்சியில் டிஃபன் அனுப்பி வைக்க அது எப்படியாக முடிந்தது என்பதை எண்ணி அவளது உடல் கூசியது.

கணவனின் கவனத்தை ஈர்க்க என்னவெல்லாம் செய்து விட்டோம் எனும் கூச்சம் அவளை தின்றது. ஏனென்றால், டிஃப்ன் அனுப்புவது கணவனுக்குத் தானே? எனும் மிதப்பில் சின்னச் சின்ன குறிப்புகள் “ படம் பார்க்கச் செல்வோமா?” “சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள், காத்திருக்கிறேன்” என்பன போன்றவைகளை கடந்த நாட்களில் குட்டிக் குட்டி தாள்களில் தினம் எழுதி அவள் அடுக்கு டிஃபன்களுக்கு ஊடாக வைத்து அனுப்பி இருந்தாள்.

கொடுத்து விட்ட டிஃபனை திறந்தும் பாராமல் வேலையாளிடம் வீரேந்திரன் கொடுத்து விட்டதாக சொன்னான் எனில், தனது செய்திகளை அந்த வேலையாள் வாசித்து இருப்பான் தானே? அச்சோ என்ன கேவலம்? மனம் கூசியது. தனக்கும் கணவனுக்குமான வெளியில் தங்களைத் தவிர்த்து பலரும் இருப்பதான சங்கடமான உணர்வு அவளை ஆட்கொண்டது.

அது மட்டுமல்ல, அன்று அவள் தரையில் பாய் விரித்து படுத்திருந்ததை வீரேந்திரனின் அண்ணன் கண்டுக் கொண்டது என பலவும் நினைவுக்கு வர சஞ்சலமாக படுத்திருந்தாள். எப்போதும் சொல்வதைப் போல அவள் மனதில் ‘தான் யாருக்குமே பொருட்டு இல்லை, தன் கணவனுக்கும் கூட’ எனும் எண்ணம் சூழ மனம் மறுபடி நைந்துப் போனது.

தனது புண்களை தானே சுரண்டி சுரண்டி வலி அனுபவிக்கும் நிலையில் அவள் இருந்தாள்.

அந்த நேரம் கதவின் பெல் அடித்தது, கணவன் தான் வந்திருக்க வேண்டும், கதவை திறக்க எழுந்தாள். கடிகாரம் மணி நான்கை காண்பித்தது, முன் தினம் இரவு சென்றவன் அடுத்த நாள் அதிகாலை வந்திருக்கின்றான். கதவை திறந்தாள், உள்ளே அமைதியாக வந்தவன் தங்கள் அறைக்குள் நுழையவும் அவள் அறைக்கதவை தாளிட்டாள். கணவனது துள்ளலான நடை அவளுக்கும் மகிழ்ச்சி தந்தது.

அது வரையிலும் ஒரு நாளும் திறந்திராத அவர்களது அறைக்கு அடுத்த அந்த பால்கனி கதவை திறந்து வெளியில் சென்றான். குளிர்ந்தக் காற்று முகத்தில் அறைந்தது. இப்போதாவது வாழ்த்துவானா? தன்னை ஒரு வார்த்தை கொண்டாடுவானா? தனது உடல் நலனை விசாரிப்பானா? என விமலாவின் மனம் ஏங்கியது.

“__ ஹோட்டல் தெரியுமா? அந்த ஹோட்டலில் இன்றைக்கு பெரிய பார்ட்டி கொடுத்தேன். எல்லாம் என் மகனுக்காக?”

‘குழந்தையை சுமப்பவளுக்கு எதுவுமில்லையா?’ மனம் சுணங்கினாலும் கூட ‘மகனா? இப்போதே எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறார்?’ இவளால் அதனை மனதில் எண்ணிக் கொள்ளத்தான் முடிந்தது.

“என் மகனை நான் எப்படி வளர்ப்பேன்னு தெரியுமா? அந்த் வானத்தில் இருக்கிற நிலவைப் போல என் மகனை வளர்க்கப் போறேன். அவன் எங்க படிப்பான் தெரியுமா?…………..” இன்னும் என்னென்னவோ அவனது பேச்சுக்கள் வளர்ந்துக் கொண்டே சென்றன.

பிறக்காத குழந்தையைக் குறித்து இப்படி பேசுவது தவறோவென அவளது மனதிற்குப் பட, “குழந்தை பொறந்த பின்னாடி இதெல்லாம் பேசிக்கலாங்க” எனச் சொன்னாள்.

தனது கற்பனைகளை தடுத்த அவள் மேல் சினம் ஏற்பட விருட்டென அறைக்குள் சென்று கோபத்துடன் படுத்துக் கொண்டான். அவனது அந்த மௌனம் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடித்தது,

‘தனக்குத்தான் பேச தெரிவதில்லை, பேசத் தெரியாமல் எதையாவது பேசி விடுகின்றோம்’ என அவள் தன்னையே வருத்திக் கொண்டாள்.

மகள் குழந்தை உண்டாகி இருப்பதான செய்தி கிடைத்த சில நாட்களில் அவளது பெற்றவர்கள் அவளை சந்திக்க வந்து விட்டிருந்தனர். மகளைக் குறித்த கவனிப்புகளைக் குறித்து தயங்கி அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்க விமலாவின் மாமனார்,

“அதெல்லாம் எதுக்கு கவலைப் படுறீங்க? அதெல்லாம் உங்க மக அஞ்சு நேரம் சாப்பிடுவா” என்றார். இவர்களது முகம் விழுந்து விட்டிருந்தது.

அன்று விமலாவின் பெற்றவர்கள் பேசிக் கொண்டு இருந்ததில் தாமதமாகி விட திரும்பச் செல்ல வேண்டிய ட்ரெயின் அடுத்த நாள் தான் இருக்கின்றது எனும் நிலையில் மகள் வீட்டில் தங்கினர்.

அந்த ஹாலின் ஓரத்தில் கிடைத்த இடத்தில் விரித்துப் படுத்து தூங்கிக் கொண்டு அடுத்த நாள் ஊருக்குச் சென்றனர். தங்களை மகளின் புகுந்த வீட்டினர் மதிக்காவிட்டால் என்ன? தங்கள் மகளை நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும் என்பதான சிந்தனை அவர்களுக்கு.

நாட்கள் கடந்த கணவனின் கோபம் விமலாவிற்கு பொறுக்கவியலவில்லை. அன்றிரவு அவள் தனது அருகில் படுத்திருந்தவன் முகத்தை விளையாட்டாய் வருடினாள். காதுகளை வருடி இழுக்க எரிச்சல் கொண்டு அவள் கையை தட்டி விட்டான். அவளது செயல்களில் இப்படியாவது தன்னிடம் பேசி விட மாட்டானா? எனும் முயற்சி இருந்தது.

அடுத்த நாள் அவளிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்தவன் பேச்சோடு பேச்சாக , “டாக்டர் இன்னும் சில மாதங்களுக்கு உன்னை சிரமப் படுத்தக் கூடாதென சொல்லி இருக்கிறார். அதனால், நமக்குள்ளான உறவு கொஞ்ச நாட்கள் இருக்க முடியாதென விலகி இருக்கிறேன்” என ஏக்கம் கொண்டவன் போல மனைவியிடம் சொல்லிச் சென்றான். ஊரில் அவளுக்கு சூட்டுவலி வந்த போது அதை முன்னிட்டு “உன் நலனுக்காக விலகி இருக்கிறேன்” எனச் சொன்ன அதே தொனியல்லவா?

வித விதமான அனுபவங்களோடு சில நாட்கள் கழிந்திருந்தன. வலி கட்டுக்குள்ளாக இருந்தது. கணவன் சில நாட்களில் போதையிலும், சில நாட்கள் போதை இல்லாமலும் சில நாட்கள் நேரத்துடனும் சில நாட்கள் நேரம் கழித்தும் என வீட்ட்ற்கு வந்துக் கொண்டு இருந்தான். கண்டு சிலவற்றை,காணாமல் சிலவற்றை விமலா தவிர்த்துக் கொண்டிருந்தாள். அது அவளது வாழ்வாயிற்றே?

மதியம் சமையல் வேலை முடித்து ஹாலில் வந்து அமர்ந்தாள். டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டு இருந்தது. கருத்தரித்தது முதலாக அவளுக்கு “டிஸ்கவரி சானல்” பார்க்கக் கூடாதென குடும்பத்தினரால் கண்டிப்பான கட்டளை இடப்பட்டு இருந்தது. விலங்குகள் சானலை பார்ப்பதன் காரணமாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு நிகழ்ந்து விடும் என்பதாக அவர்கள் சொன்ன கருத்து ஏற்றுக் கொள்ளும் படி இருந்ததோ என்னவோ ஆனால், அதில் இருந்த அக்கறை அவளுக்கு மனதிற்கு உவப்பானதாக இருந்தது.

மாமியாரும், மாமனாரும் ஹாலில் அமர்ந்திருக்க பேச்சுப் பேச்சாய் சில விஷயங்களை அவளிடம் போட்டு வாங்க அவர்கள் மறக்கவில்லை. புன்னகை முகமாய் தன்னிடம் பேசும் கணவனின் பெற்றோர்கள் மேல் அவளுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவளுக்கும், கணவனுக்கும் இடையேயான விஷயங்களை நலம் விரும்பி போல அவர்கள் தேன் தடவி கேட்பதுவும் அவர்கள் கேட்கும் விதத்தில் அவள் மனதில் இருப்பவற்றை பகிர்ந்துக் கொள்வதுவும் என வழக்கமாயிற்று.

வாழ்க்கை என்பது மேடும், பள்ளமும் தானே? கடந்து விடலாம் என்பது அவளது நம்பிக்கை. கடலுக்குள் பயணிக்கையில் மேடும், பள்ளமும் பார்த்து நடந்தாலும் பிழைத்துக் கிடக்க சாத்தியக் கூறுகள் இருக்க முடியுமா என்ன?

சில வாரங்கள் கழித்து மருத்துவ்ர் சொன்னதாய் சொல்லி விலகி இருந்த அதே வீரேந்திரன் தனது சில நிமிடம் தாக்குப் பிடிக்காத செயல்பாட்டிற்காக அவளை தன் அதே மூர்க்கத் தனத்தோடு மடக்கி, நொறுக்கிக் கொண்டு இருந்த போது குழந்தைக்கு எதுவும் ஆகி விடுமோவென அவள் பயந்து வயிற்றிற்கு அணைவாக கைகளை கோர்த்துக் கொண்டு இருந்தாள்.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here