இது இருளல்ல அது ஒளியல்ல_11_ஜான்சி

0
1020

அத்தியாயம் 11

விமலாவிற்கு கணவன் பேசுவதும், செயல்படுவதும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் தெரியும். முதலில் அவளிடமிருந்து விலகி இருக்க அவனே ஒரு காரணம் சொல்வான். அதன் பின்னர், அவனுக்குத் தோன்றும் நேரம் அவனே அவளை அணுகுவான். அதுவும் எவ்வாறு? தாம்பத்தியமே கசந்து விடும் நிலையில் தான் அவனது அணுகுமுறைகள் இருக்கும்.

கதைகள், திரைப்படங்கள் என விமலா வாசித்தவை, பார்த்தவை கேட்டவை எல்லாம் தாம்பத்தியத்தை சொர்க்கமாய் உருவகித்து இருந்திருக்க, இப்போது அவளுக்கு ‘இந்த நரகத்திற்கா இத்தனை பில்டப்பு? இதற்கு திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்து இருக்கலாமே?’ என தோன்ற வைத்திருந்தது

அந்த நரகத்தோடு கூட அவன் அவளை விட்டு விட்டாலும் பரவாயில்லை. அவள் அவனை அன்பாய் அணைக்கச் சென்றால் கூட, தன்னை அவள் கூடலுக்காகத்தான் நெருங்குகிறாள் என விதிர்விதிர்த்து தள்ளி நிற்கும் அவனிடம்தான் அவள் இப்போதெல்லாம் நெருங்குவதே இல்லையே? இருந்தும் தன்னிடமிருந்து பிரச்சனை எதுவும் வேண்டாம் என விலகி நிற்கின்றவளை அப்படியே விட்டு விடுகின்றவனா அவன்?

தானுண்டு தன் வேலையுண்டு என தன் போக்கில் இருப்பவளிடம் தானாக எதையாவது பேச ஆரம்பித்து விளையாட்டு போல அவளை குத்திப் பேசுவான். ‘இவனுக்கு என்னதான் வேண்டுமோ?’ என்ன பதில் பேசினாலும் இறுதியில் அவளையே குற்றவாளி ஆக்கும் அவனது தீ நாக்கிற்குப் பயந்து அவள் இப்போதெல்லாம் அவனது சீண்டல்களுக்கு பதில்கள் எதுவும் கொடுப்பதே இல்லை. இவ்வாறு பற்பல காரணங்களால் திருமணமாகி ஒரு மாதத்திலேயே அவள் வெகுவாக சலிப்படைந்துப் போனாள்.

விமலா கருவுற்று இருப்பதாக அறிந்ததும் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தை என குடும்ப சகிதம் இவளை சந்திக்க வந்து சீராடி விட்டு சென்றிருந்தார்கள்.

“உங்கள் மகள் ஐந்து நேரம் சாப்பிடுகின்றவள் தானே?” என அவள் பெற்றோர் முன்பாகவே விமலாவின் மாமனார் குத்திக் காட்டி இருக்க, ‘மருமகள் சாப்பிடுவதை இத்தனையாக கவனித்து அதை நையாண்டிச் செய்கின்ற பெரியவர்கள் அவள் கர்ப்பமாக இருக்கின்ற இந்த நேரத்தில் எப்படி கவனிப்பார்கள்? வேண்டியதை எல்லாம் எப்படிச் செய்துக் கொடுப்பார்கள்?’எனும் எண்ணத்தில் அவளுக்கு பிடித்தவற்றை எல்லாம் அவர்கள் பாத்திரம், பாத்திரம் நிரம்ப செய்து அடுக்கிக் கொண்டு வந்து அவளது அறைக்குள்ளேயே கொண்டு போய் இறக்கி விட்டிருந்தார்கள்.

“உனக்கு வேண்டியதை வாங்கி உண்ணு” எனச் சொல்லி அவளது கைச்செலவுக்கும் கூட பணம் கொடுத்து இருந்தார்கள். அவளோடு அளவளாவி விட்டு சில மணித்துளிகளில் உடனே புறப்பட்டு விட்டிருந்தார்கள்.

அன்று“இடுப்பு வலி, முதுகு வலி இருக்கின்றதம்மா”என்றுச் சொன்னவளிடம் அண்ணியும், அன்னையும் ஓய்வெடுக்கும் படியாக, இடுப்பிற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும் படியாக இன்னும் பலவாக அறிவுரைகள் சொல்லிச் சென்றனர்.

அவள் தனது சித்திக்கு தொலைபேசி செய்து பேசிய நேரமும் வலி குறித்து சொல்லி இருக்க அவரோ சின்னப் பெண் பயப்படுவாள் எனக் கூட யோசிக்காமல், “இப்படி வலி இருந்தால் குழந்தை தப்பி பிழைக்காது, அபார்ஷன் ஆகி விடும் என கேள்விப் பட்டு இருக்கின்றேனே?” என தனக்குத் தோன்றிய எதையோ பேசி வைக்க அன்றிலிருந்து விமலா வெகுவாய் கவனமாக இருந்தாள்.

அப்படி ஒரு நாளில் தான் அவனது அவசர தேடுதலை அவளது கணவன் நடத்தி முடித்திருந்தான். தனது தேடல் முடிந்தவன் கண்ணீர் முட்ட, தனது வயிற்றில் கைகளை அணைவாக வைத்துக் கொண்டு இருந்தவளை வழக்கத்திற்கு மாறாகக் கவனித்தான். அவனுக்கு என்ன தோன்றியதோ? முதல் முறையாக அவளிடம் “சாரி” என்றுச் சொல்லி விலகி படுத்து விட்டான்.

மறு நாள்

“அண்ணி நாளைக்கு நாம இரண்டு பேரும் உங்களுக்கு துணி எடுக்கப் போவோமா?” தன்னிடம் பேசிய நாத்தனாரை ஆச்சரியமாக பார்த்தாலும் “சரி” என பதில் கொடுத்தாள் விமலா. “சிட்டி போனதுக்கு அப்புறம் துணி வாங்கிக்கலாம்” எனச் சொன்னவளுக்கு இப்போது தன்னை அழைத்துச் செல்ல ஞாபகம் வந்ததே பெரிய விஷயம் தான். அதற்கு மறுப்புச் சொல்லுவானேன்?

அன்றொரு நாள் குளிர்சாதனப் பெட்டியில் ஆரஞ்ச் மற்றும் கோக் சுவையுமான குளிர்பான பாட்டில்கள் இருக்க தனது வீட்டைப் போல எண்ணி விமலா அவற்றை எடுத்து குடித்திருந்தாள்.

பாட்டிலில் குளிர்பானம் அளவு குறைவாக இருந்ததைப் பார்த்து புரிந்ததும் அதை யார் குடித்திருப்பார்? என அவளுக்கு புரிந்திருந்து இருக்க வேண்டும் அல்லவா?

அந்த வீட்டில் புதிதாக வந்தவள் விமலா தானே? அவர்களது வீட்டின் விசித்திர விதிமுறைகளும் அறியாதவள் அவள் மட்டும் தானே? இவை என்னுடையன நீங்கள் குடிக்க வேண்டாம் என அவளிடம் நேரடியாகக் கூட அவள் சொல்லி இருந்து இருக்கலாம். ஆனால், அன்று அப்படி எதுவும் அங்கே நிகழவில்லை.  

“நான் வாங்கி வச்ச, என்னுடைய கூல் ட்ரிங்க்ஸை எடுத்து குடித்தது யார்?” என்று அவள் அரை மணி நேரம் கத்திக் கத்தி எகிறியதில் அந்த வீடே அன்று அதிர்ந்து தணிந்து இருந்தது.

அதன் பின்னர் விமலா தன் கணவனின் தங்கையிடம் சற்று இடைவெளியோடு தான் பழகுவாள். அவ்வீட்டில் பிறர் வாங்கி வைத்த எதையும் அவள் கை வைப்பதுவும் இல்லை. தனது உடைகள் இல்லாதிருக்க அவளது பழைய உடைகளை அணிவதான கூச்சம் இருந்தாலும் கூட அவளுக்கு வேறு வழியில்லையே?

‘உரிமையான பேச்சுக்கள், அன்பு, அரவணைப்பு எதுவும் இல்லாமல் உடுத்த கணவனின் தங்கையின் பழைய உடைகள், செய்ய சமையல் வேலை, மார்க்கெட் செல்லும் வேலை என்று இருக்க புகுந்த வீட்டினர் அனைவரும் தன்னை வேலைக்காரி போலத்தான் பாவிக்கின்றார்கள் போலும்?’ என அவள் மனதில் அடிக்கடி தோன்றி மறையும் கேள்விகளும் பல உண்டு.

ஒருவாறாக நாத்தனார் அவளிடம் அன்று இறங்கி வந்து பேசி இருக்க, அடுத்த நாள் அந்த நகரத்தின் பிரபல மார்க்கெட் சென்று அங்கு நான்கு அழகான சுடிதார் துணிகள் எடுத்து அவற்றை தைப்பதற்கு கொடுத்தும் வந்தார்கள். தனக்கான சொந்த உடைகள் சீக்கிரம் தைத்து வந்து விடும் என எண்ணி விமலா மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

அந்த வீட்டில் எல்லோருக்குமே இரைந்து பேசுவதான பழக்கம் தான் போலும்?

மற்றொரு நாள் வழக்கத்திற்கு மாறாக ஏழு மணி அளவில் வீட்டிற்கு வந்திருந்த வீரேந்திரன் தன் அம்மா, அப்பா என வீட்டினரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, ஏதேச்சையாக தனது அறையின் கதவு திறந்து நின்று அவனை பார்த்த விமலாவிடம் ஆத்திரத்தில் எகிறினான்,

“இங்கே எங்க வீட்டில் நடக்கிறதை எல்லாம் கேட்டு, அங்கே உன் வீட்டில் போய் சொல்லுறதா இருக்கிறியோ? போ போ உள்ளே”

அவன் இரைய ‘நான் என்றைக்கு இங்குள்ள பிரச்சனையை அங்கே சென்றுச் சொன்னேன்?’எனக் குழம்பியவள் அந்த சத்தத்தில் நடுங்கி அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.

வீரேந்திரனின் குடிப்பழக்கம் பல வருடங்களாக உள்ளது என அறிந்துக் கொண்டாள். அவன் இப்போதெல்லாம் தினமும் குடிக்க ஆரம்பித்து இருந்தான். அவ்வீட்டில் அவனை யாரும் கண்டிப்பதாக இல்லை. ஆரம்பத்தில் இரவு ஏழு, எட்டு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டு இருந்தவன் இப்போதெல்லாம் இரவு முழுவதுமே வீட்டிற்கு வருவதில்லை.

அப்படியே நடு இரவில் வந்தாலும் கூட, தங்களது அறைக்குள் வந்த உடனேயே அவளிடம் சண்டை இழுப்பதுவும் அவளை அவள் குடும்பத்தை தரை மட்டமாக கேவலமாக பேசுவதுமான இருக்க ஆரம்பித்தான்.

அவளும் அவனது பேச்சுக்களை எவ்வளவுதான் பொறுப்பாள்? அவனது முறையற்ற, தரமற்ற பேச்சுக்களுக்கு பதிலுக்குப் பதில் பேசி விடுவாள். அவர்களிடையே தேவையற்ற வாய் தகராறுகள் முற்றிக் கொண்டே சென்றன. அவன் அவளிடம் எதற்காக காரணமே இல்லாமல் இத்தனையாக சண்டை இடுகின்றான் என அவளுக்கு சற்றும் கூடப் புரியவில்லை.

ஏற்கெனவே கூட அவன் அவ்வளவு நல்லவனில்லை. இதில் சிலர் அவன் சிந்தனையில் விஷம் கலந்து விட்டால் அது சண்டையாய் வெடிக்காமல் இருக்குமா? இது எங்கே போய் முடியக் கூடும்? நிச்சயமாக நல்லதாய் முடிய வாய்ப்பில்லை அல்லவா?

கணவன் மனைவி அளவில் காரணமே புரியாமல் நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிக் கொண்டு சென்றனவே தவிர, குறையவில்லை. தங்களுக்குள் சண்டை, பிரச்சனை என வெளியே தெரியாமல் அவற்றை மறைப்பதற்கு அவள் பெரும்பாடு பட்டுப் போவாள்.

என்னதான் இருந்தாலும் ஒரு சுவற்றைத் தாண்டி இருக்கும் அடுத்த அறையில் இருப்பவர்களுக்கு அந்த சண்டைகள் கேட்காமலும் புரியாமலும் இருக்கக் கூடுமா? இவர்களது சண்டைகளை அறிந்துக் கொண்டவர்களுக்கு ஏற்பட்டது இன்பமா? துன்பமா? அவள் அறியாள்.

இப்படியாக நாளும் பொழுதும் கடந்துக் கொண்டு இருக்க, மற்றொரு நாள் வீரேந்திரன் தனது அடுத்த பரிணாமத்தை அவளுக்குக் காட்டினான். அன்று, அவன் வீட்டிற்கு வந்த போது இரவு மூன்றரை மணி ஆகி இருந்தது.

“ நீ தூங்கி இருக்க வேண்டியது தானே? இருந்திருந்து வீட்டிற்கு வந்தால் உனது முகத்தில் முழிக்க வேண்டி இருக்கின்றதே?”என அறைக்குள் வந்ததும் பிரச்சனையை ஆரம்பித்தவன் அவள் பதிலளிக்க அதற்கு அவன் பதிலளிக்க என விவாதம் சூடு பிடித்த நேரம் சட்டென்று அவள் எதிர்பாராத அந்த வேளையில் தனது தலையணையை, படுக்கையை தூக்கிக் கொண்டு தனது அன்னை, தங்கை இருக்கும் அடுத்த அறையில் சென்று விட்டிருந்தான்.

‘தானாகவே வந்து சண்டையிட்டான், இப்போது அடுத்த அறைக்கு படுக்கச் சென்று விட்டான்.’ அவனது செய்கையால் தன்னை அவமானப்படுத்தியதாக விமலா உணர்ந்தாள்.

‘கணவன் மனைவிக்கான பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நபரிடம் கொண்டுச் செல்லக் கூடாது’ எனும் எண்ணம் கொண்ட விமலாவால் கணவனது செய்கையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அடுத்த நாள் கணவனின் செய்கையால் புண்ணான மனதை முகத்தில் காட்டாமல் கடப்பாறையை முழுங்கி வைத்தது போல தனக்குள் இறுகியவளாக தனது வேலைகளை அவள் செய்ய ஆரம்பித்தாள். அவனும் தங்களது அறைக்குச் செல்லாமலே கூட அன்னையின் அறையினின்று புறப்பட்டு வேலைக்கு சென்று விட்டிருந்தான்.

 மதிய உணவு வேலைகள் முடிந்த பின்னர் ஹாலிற்கு வந்தவள் தன் அன்னைக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தொலைபேசியை எடுத்துச் சுழற்ற அந்த தொலைபேசி அவளிடம் “unlock code”  கோட் எண்களை கேட்டது. ஏனென்றால், அவுட்கோயிங்க் அழைப்புகள் செல்ல முடியாத வண்ணம் அந்த போன் லாக் செய்யப்பட்டு இருந்தது.

போன் பில்லை பார்த்து அவர்களுக்குள்ளாக இத்தனை அதிகமாக பில் வந்திருக்கே? என தங்களுக்குள்ளாக திட்டிக் கொண்டிருந்ததை அவள் கவனித்து இருந்தாள். வியாபார விசயமாக அந்த போன் மூலமாக நாடு முழுவதுமே எஸ் டி டி போன் செய்வது அவர்களுடைய வழக்கம் தான். இப்போது மட்டும் புதிதாக என்ன பில் கூடி இருக்கக் கூடும்? திட்டுவது அவர்களுக்குள்ளா? இல்லை அது அவளுக்கான செய்தியா? என்பது அப்போதே அவளுக்கு சந்தேகம் தான்.

இந்த போன் லாக் செய்த ஏற்பாடு அவளுக்காகத்தான் என அவளுக்குப் புரியாது இருக்குமா? அதிக பட்சம் ஒரு நாளைக்கு ஒரு நேரம், ஒரு தொலைபேசி அழைப்பு அதுவும் அவளது அன்னைக்குத்தான் அவள் அழைப்பாள். வேறு எவரிடமும் அவள் அவ்வளவாக பேசுவதில்லை. அவளது அந்த ஒரு போன் அழைப்பிற்குமா இந்த வீட்டினரின் இந்த கஞ்சத்தனம்? என எண்ணியதும் அவள் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன.

அது கஞ்சத்தனம் எண்ணினாளே அன்றி அவள் மீதான கசட்டுத்தனம் என்பது அப்போது அவளுக்கு புரியாதது விந்தைதான்.

அதன் பின்னர் “அம்மா வெளியில் மார்க்கெட் வந்தேனா, அதான் உங்களுக்கு போன் செய்ய தோணுச்சு” தினம் தோறும் பத்து ரூபாயேனும் செலவழித்து அவள் தன் அன்னையிடம் பேசி விடுவாள். தான் தன் அன்னையிடம் பேசி விடக் கூடாதென்று தன் புகுந்த வீட்டினர் மற்றும் கணவன் போனை லாக் செய்ததைச் சொல்லி அவரை மனம் வருந்தச் செய்வானேன்?

விமலாவின் அன்னையை பொருத்தவரைக்கும் மகள் புகுந்த வீட்டில் மகாராணியாக கோலோச்சுகிறாள். அந்த கற்பனை கலைந்திடாமல் அப்படியே இருக்கட்டும், அட இருந்துவிட்டுதான் போகட்டுமே?

அந்த போன் லாக் செய்ததற்கு அடுத்து ஒரு வார காலம் கழிந்திருக்கும் அன்று வீரேந்திரன் குளியலறையில் இருந்தான்.

அவன் குளிக்கச் சென்றால் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொள்வது அவனது வழக்கம், தாமதமாக எழுந்து விட்டானெனில் குளிக்க அவனுக்கு வேண்டிய நேரம் குறைவுப் பட்டது எனில் குளிக்காமல் கூட வெளியே சென்று விடுவானே அன்றி அவனது அகராதியில் அவசரக் குளியல் என்பதே கிடையாது.

இப்படி தொடர்ந்து ஒரு வாரமேனும் கூட குளிக்காமல் அவனால் இருக்க முடியும் என்பதை விமலா கவனித்து இருந்தாள். அதென்னவோ அவர்களது வாழ்க்கை முறைகள் இவளுக்கு எப்போதும் புதிராகத்தான் இருக்கும். வீரேந்திரனின் அந்த நீண்ட குளியல் காரணமாகவே ஒரு நாள் லாக் செய்து வைத்திருந்த, அந்த தொலைபேசியின் கோட் நம்பர் அவளுக்குத் தெரிய வந்தது.

அன்று காலை வீரேந்திரன் குளியலில் இருந்த போது, ஹாலில் இருந்த போன் அழைப்பு வரவும் அவன் தங்கை அதை எடுத்து பேசி விட்டு துண்டித்தாள். அவளுக்கு கிடைத்த செய்தியின் படி உடனே வேறொரு எண்ணுக்கு அவள் அழைக்க வேண்டி இருந்தது.

“அண்ணா, அண்ணா” அலறி அழைத்தவளிடம் வீரேந்திரன் குளியலறையில் இருந்து என்னவென்று கேட்க,

“அவசரமா கால் செய்யணும், கோட் என்னன்னு சொல்லுண்ணா”

“பொறு நான் வரேன், வந்துச் சொல்லுறேன்”

“இல்லை, ரொம்ப அவசரம் பிசினஸ் சம்பந்தப்பட்டது, உடனே கால் செய்யணும்”

தங்கை மறுபடி அலறினாள். வேறு வழியில்லாமல் அவன் குளியலறையில் இருந்து அந்த கோட் நம்பர் சொல்ல நேர்ந்தது. அந்த நம்பரை தங்கை மட்டுமல்ல மனைவியும் நினைவில் வைத்துக் கொண்டதை அவன் அறிந்து இருந்திருப்பானா?

லாக் நம்பர் கணவன் சொன்ன விதத்தில் தன்னை வீட்டு தொலைபேசியில் பேச விடாமல் போனை லாக் செய்தது கணவன் தான் என அறிந்து நியாயமாக அந்த மடப் பெண்ணிற்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால், அவளுக்கோ கோபம் வரவில்லையே? எதையோ கண்டு பிடித்த உற்சாகத்தில் எண்ணை மனனம் செய்துக் கொண்டாள். உதாசீனங்களுக்குப் பழகிய மனம் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் போலும்!

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஊரில் இருந்து வீரேந்திரனின் இரு அக்காக்களும், அவர்களது குழந்தைகளும் இங்கு வந்து விட்டிருந்தனர். அனைவரும் இருந்ததில் வீடு கலகலப்பாக இருந்தது. நலம் விசாரித்த விமலாவுக்கு அவர்கள் பதில் சொன்னதோடு சரி இவளை கணக்கில் கொள்ளாதவர்களாக தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு வழக்கம் போல தனிக்குழுவாக அந்த அறையில் இருந்தனர்.

முன்பு மாமியாரும் ஒரு நாத்தனாரும் அந்த அறையில் குழுமி பேசுவார்கள் எனில் இப்போது ஒன்றுக்குப் பதில் மூன்று நாத்தனார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி அவளது வாழ்வில் எதுவுமே மாற்றமில்லை. வந்ததும் சமையலறையையும் அவ்வீட்டின் மகள்கள் தங்களது கைவசம் எடுத்திருக்க விமலாவுக்கு வேலையற்று போய் விட்டிருந்தது.

அடுத்த நாள் வழக்கம் போல மாமனார் வெளியே சென்று விட்டிருக்க, மதிய நேரமே தாயும் மகள்களும் தீபாவளி பர்ச்சேஸ் செய்யப் போவதாகச் சொல்லி புறப்பட்ட போதுதான் தன்னை தனியாக அழைத்துக் கொண்டு போய் துணிகள் வாங்கிக் கொடுத்த நாத்தனாரின் நோக்கம் புரிந்தது.

இப்படி அவர்கள் செல்லும் போது, தானும் கூடச் சென்று அவர்களது மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்து விடக் கூடாதென்றே தனக்கு தனியாகப் போய் உடை எடுத்துக் கொடுத்து இருக்கிறாள்.

“உன்னை உள்ளே வைத்து பூட்டி விடுகிறோம், வேலைக்காரி வருவாள் இல்லையா? அவளிடம் வீட்டுச் சாவி உண்டு. அவள் வந்து வீட்டை சாயங்காலம் திறந்து வேலையை செய்து சென்று விடுவாள். நாங்கள் வர இரவாகி விடும்”மாமியார் சொன்னார்.

விமலாவை வீட்டின் உள்ளே வைத்து பூட்டி விட்டு அவர்கள் சென்று விட்டனர். இனி நீண்ட நெடிய நேரம் அவள் அந்த பூட்டப் பட்ட வீட்டிற்குள் இருந்தாக வேண்டும்.

‘வேலைக்காரியிடம் சாவி கொடுப்பார்களாமாம், மருமகளை வீட்டினுள்ளே பூட்டி வைப்பார்களாமாம், விசித்திரக் குடும்பம் என்றால் இதுதான் போலும்?’மனதிற்குள் வியந்துக் கொண்டாள்.

ஏற்கெனவே, அவர்களது புறக்கணிப்பு பழகி விட்டிருந்ததால் இந்த செயலும் அவளை அதிகமாய் பாதிக்கவில்லை. ஆனால், மனதின் அடியாழங்களில் அத்தனையும் காயங்களாய் சேமிக்கப் பட்டுக் கொண்டு இருந்தன.

“எத்தனை நேரம் தான் வீட்டினுள்ளே சுற்றிப் பார்ப்பதாம்?”டிவியும் சலித்து விட்டிருக்க அங்கிருந்த தொலைபேசி அப்போது அவளை நோக்கி கண் சிமிட்டியது.

‘அடடே அந்த கோட் நம்பர் என்னிடம் இருக்கின்றதே?’குழந்தையாய் மனம் துள்ளியது. ‘அம்மாவிற்கு போன் செய்வோமா?’ தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

‘ம்ம்… இப்ப நான் போன் செய்தால் அடுத்த போன் பில் வந்தால் அதில் நம்பர் பார்த்து நான் தான் போன் பேசினேன்னு கண்டுப் பிடிச்சிருவாங்களே’ அவள் மனம் எச்சரித்தது.

‘அடுத்த போன் பில் வரும் போது தானே நான் போன் செய்தது தெரிய வரும்? அதை அப்ப பார்த்துக்கலாம்’ விசமமாய் அதே மனம் மற்றொரு யோசனை சொல்லித் துள்ளியது.

போனை எடுத்து கோட் எண்ணை போட்டு தங்களது வீட்டிற்கு அழைப்பு விடுத்தாள்.

PCO ல் பேச வேண்டும் எனில் ஒரு ரூபாய்க்கு மூன்று நிமிடம் பேச முடியும் என்று இருக்க, காசு முடிய முடிய காயின் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் கால் கட் ஆகிவிடும். அந்த கவனத்தில் நிம்மதியாய் பேசவும் முடியாது.  

இப்போதோ வீட்டில் யாரது இடையூறும் இல்லாமல் இருக்க, கிடைத்தது சந்தர்ப்பம் என்று முதலில் அம்மாவிடம் பின்னர் அப்பாவிடம், அண்ணணிடம், அண்ணியிடம், ஏன் குட்டிப் பையனிடமும் கூட வெகு நேரமாக பேசியதில் மனம் நிறைவுற்று விட்டிருந்தது.

அடுத்த போன் பில் வரும் போது தாம் பிடிபட்டு விடுவோமோ? என்று சற்று முன்பாக பயந்தவள், தாம் அந்த நேரம் சுய புத்தியில் கூட இருக்கப் போவதில்லை என அறியாது இருந்ததில் வியப்பில்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here