இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி

2
1364

அத்தியாயம் 12

அந்த வீட்டில் தீபாவளிக்கான அத்தனை ஆயத்தங்களும் தொடங்கின. இனிப்புகள் வெளியில் வாங்கிக் கொள்வார்கள் போலும், ஆனால் அலங்காரங்கள், ரங்கோலிகள் என வீடு களைக்கட்டியது.

நாட்கள் கடந்துக் கொண்டிருக்க, இப்போதெல்லாம் வீரேந்திரனை விமலாவால் அடிக்கடி வீட்டில் காணவே முடியவில்லை. அவனிடம் இருந்தது பேஜர் மற்றும் பெரும் பணக்காரர்களிடம் மட்டும் காணப்படும் ஆண்டெனா வைத்த கருப்பு நிற அலைபேசி. அந்த அலைபேசியில் இன்கமிங்க் கால் பேசுவதற்கு மட்டும் நொடிக்கு 18 ரூபாய் சார்ஜ் செய்வர். அவுட்கோயிங்க் அழைப்புகள் அதை விடவும் கூடுதல் ஒரு நிமிடத்திற்கு 28ரூபாய்.

பெரும்பாலும் அந்த கனமான அலைபேசி பேசுவதற்காக அன்றி, ‘என்னிடம் அலைபேசி இருக்கின்றது பார், நான் பெரும்பணக்காரன்’ என பெருமைக்காக சுமந்து திரிகின்ற பொருளாகத்தான் அப்போது இருந்தது. மற்றபடி அதை உபயோகித்து பேசுவதானால் சொத்தை விற்றுத்தான் பில் கட்ட வேண்டி வரும்.

எனவே அதனை பேசுவதற்காக பலரும் உபயோகப் படுத்துவதில்லை. ஏதேனும் அவசரத்திற்கு அதில் இருந்து அவன் அழைத்தாலும் கூட சுருக்கமாக நொடி நேரத்தில் தந்தி பாசையில் தகவல் தெரிவித்து விட்டு வைத்து விடுவான். அது போல வீட்டிலிருந்து அந்த அலைபேசிக்கு அழைத்தாலும் கூட தந்தி பாசையில் தான் சுருக்கமாய் நொடிகளுக்குள்ளாக பேசி முடிக்க வேண்டும். வழவழா கொள கொளா எல்லாம் காரியத்திற்கு ஆகாது. அப்படி பேசினால் போன் பில் அத்தனை பெரிதாக வந்து விடுமே?

இந்த தீபாவளி விமலா மற்றும் வீரேந்திரனுக்கு தலை தீபாவளி அல்லவா? கணவனுடன் இணையராக தாய் வீட்டிற்குச் சென்றால் தானே அவளுக்கு மதிப்பு. விமலாவின் தாய் கடந்த ஒரு வாரமாகவே மகளுக்கு நினைவூட்டிக் கொண்டு இருந்தார். அவருக்கு தீபாவளியை முன்னிட்டாவது மகளும், மருமகனும் வீட்டிற்கு வந்து ஒரு வார காலமேனும் தங்களோடு தங்கிச் சென்றால் நலமாக இருக்குமே எனும் மிகச் சாதாரணமான ஆசைதான்.

வீட்டில் கணவன் வரும் போதெல்லாம், விமலா தன் தாய் சொன்னதை அவனிடம் பேச முயன்று தோற்றாள். அவன் அவள் இருக்கும் இடம் நில்லாமல் கடந்துச் சென்று விட பேச முடியாமல் தவித்தவள் அவனுக்கு பேஜர் மெசேஜ் அனுப்ப தயங்கினாள்.

பேஜரில் தகவல் அனுப்புகையில் அதற்கு செலுத்த வேண்டிய தொகை சிறிதாகினும் அதில் முதலில் குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்து அந்த எண்ணில் அழைப்பை ஏற்கும் இருக்கும் பெண்ணிடம் தாம் யாருக்கு தகவல் அனுப்ப வேண்டும் எனும் விபரத்தோடு கூட அனுப்ப வேண்டிய தகவலை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.

வழக்கமான விஷயங்கள் என்றால் பரவாயில்லை மனப்பாடம் செய்து வைத்த சில வாக்கியங்களை சொல்ல அவள் அறிந்து இருந்தாள். அ ஆனால், இது வழக்கமான தகவல் அல்லவே, இவர்கள் இருவருக்குமான அந்தரங்க தகவல் அல்லவா?

முன்பு டிஃபன் பாக்ஸில் தாளில் சில குறிப்புகள் அனுப்பி அதை யாரோ ஒருவர் வாசித்ததாக அறிந்து அவள் ஏமாற்றம் அடைந்தது போல, இப்போது பேஜரில் தகவல் அனுப்பி அதை அவன் வாசிக்காமல் யாரோ வாசித்து மறுபடியும் பெருத்த அவமானத்தை சந்திக்க அவள் தயாரில்லை. அது போக இவள் எண்ணுவதை எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லுமளவு, வாக்கியம் கோர்க்கும் அளவிற்கு அவளுக்கு ஆங்கிலப் புலமையும் கிடையாது.

கணவன் அவள் அழைப்பதை விரும்ப மாட்டான் எனத் தெரிந்தும் கூட வேறு வழியில்லாமல் அவனது மொபைலுக்கு அவள் அழைத்தாள். அவள் மேல் ஏதோ கோபம், வெறுப்பில் இருந்தாலும் தவிர்க்காமல் அவளது போன் அழைப்பை அவன் ஏற்றான். இவள் வாயை திறந்து முழுவதும் சொல்லும் முன்பாக அவளது குறிப்பறிந்தவன் போல,

“இப்ப என்ன? உன்னை தலையில தூக்கி வச்சு ஆடணும்னு நினைக்கிறியா?” எனச் சொல்லி சட்டென்று காலை கட் செய்து விட்டான். அவனது செயலால் அந்த லேண்ட் லைனைச் சுற்றிலும் இருக்கின்ற அவனது குடும்பத்தினர் முன்பாக முகம் மாறாமல் காத்துக் கொண்டு அங்கிருந்து நகர்வது அவளுக்கு பெரும்பாடாக இருந்தது. இவ்வாறாக அவளது தலை தீபாவளி ஒரு முடிவுக்கும் வராமல் அல்லாடியது.

அந்த நகரமே சற்றுக் குளுமையை தன்னகத்தே கொண்ட நகரம் தான். 12 மாதங்களுமே சற்று குளுமை இருந்துக் கொண்டே தான் இருக்கும். குளிர்காலத்திலோ குளிர் பின்னி எடுக்கும்.

கர்ப்பமடைந்தது முதலாக விமலாவிற்கு சரும அரிப்பு ஏற்ப்பட ஆரம்பித்து விட்டது. குளிர் பிரதேசம் என்பதால் அது இன்னும் கூட அதிகமாகவே இருந்தது. அடிக்கடி குறைந்தது மணிக்கொரு தரம் சரும லோசன்களை அவள் கை கால்கள் என தேய்த்து விட்டுக் கொண்டே தான் இருப்பாள். அது அவளது அன்றாட வேலை அல்லது தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

எப்போதும் தாங்க முடியாத அரிப்புதான். இப்போதெல்லாம் அவளது  மார்பகங்களில் கூட நகங்களால் பிராண்டி வைத்து கோடு கோடாக தடமாக பதிந்து விட்டிருந்தது. அன்றும் கூட அப்படித்தான் அவள் வழக்கம் போல தங்கள் அறையின் உள்ளே இருந்து கால்களுக்கு லோசன் தடவப் போக அது அவளை மற்றொரு அபாண்ட குற்றச் சாட்டில் மாட்டி வைத்தது.

அதை புரிந்துக் கொள்ள வேண்டுமானால் அந்த வீட்டின் அமைப்பையும் சற்று புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். விமலா, வீரேந்திரனுக்கான அறையானது வீட்டினர் எப்போதும் எதையாவது எடுக்க உள்ளே வந்துச் செல்லும் வகையாக அனைவரும் புழங்கும் விதமானது.

அவள் உடை மாற்றும் நேரம் மற்றும் அவளும், கணவனுமாக தூங்கும் நேரமாக இருந்தால் ஒழிய அந்த அறையின் கதவுகள் எப்போதுமே உட்பக்கமாக தாழிடப் படுவது இல்லை, கதவை சற்று சாற்றி வைத்திருப்பாள் அவ்வளவே.

சாற்றிய கதவின் இடுக்கு வழியாகக் கூட அந்த அறையின் நேர்க்கோட்டில் ஹால் தெரியும். அந்த பார்வை வட்டத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சுவர் ஓரத்தில் இருக்க அதற்கு முன்னதாக அவளது மாமனாரின் படுக்கை இருக்கும்.

உண்பதும் உறங்குவதும் என அந்த கட்டில் முழுக்க அவருடையதே. அந்த இடத்தில் பொதுவாக ஏனைய வீட்டினர் யாரும் அமர்வதில்லை. அவரது படுக்கைக்கு எதிரில் அதிகமாக புழங்கப் படாத கண்ட, கண்ட பொருட்களால் நிறைந்திருக்கும் அந்த டைனிங்க் டேபிள் மற்றும் சேர்கள், அதை அடுத்து மற்ற அனைவரும் அமர்ந்து தொலைகாட்சி பார்க்கும், உணவு உண்ணும், பேசும் சோஃபா செட்டும் உண்டு.

அவள் மாமனாரைப் பொருத்தவரையில் மதிய நேரம் வெளியில் செல்கின்றவர் சில நேரங்களில் சீக்கிரமாக வந்து விடுவார் அல்லது நேரமாகும். வேலைகளை மகன்களிடம் ஒப்படைத்து விட்டதால் அதிகமான சுமைகள் இல்லை போலும். பகல் நேரத்தில் பெரும்பாலும் மாமியாரும், அவளும் உண்ணும் நேரம் சேர்ந்து இருந்தாலும் மீத நேரங்களில் அவரவர் அறைகளில் இருப்பர்.

விமலாவின் மாமனார் அமைதியாக இருப்பதாக தோன்றுமே தவிர அவரது கவனங்கள் வீட்டில் நிகழும் எல்லாவற்றிலும் இருக்கும். தான் பேச எண்ணியதும் ஒரு சில வார்த்தைகளில் பிறர் மனம் தைக்க சுருக்கென பேசி முடித்து விடுவார்.

‘அவர் பேசுவது சரி தானோ?’ அல்லது ‘உண்மையைத்தானே பேசுகிறார்’ என எண்ணும் படி அவரது பேச்சுக்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும்.

குடித்து தெருவில் விழுந்து எழுந்து வந்த மகனைக் குறித்து வெகு சாதாரணமாக “அவனை துணியை மாத்தி தூங்க வை” என்று சொன்னபோதே ‘இவர் எப்படிப்பட்டவர்?’ என்று அவள் மனதிற்குள்ளாக கொஞ்சம் கணித்து விட்டிருந்தாள். ‘உங்க மகள் ஒரு நாளைக்கு அஞ்சு முறை சாப்பிடுறாளே” என அவள் முன்பாக கூச்சமே இல்லாமல் அவளது பெற்றோரிடம் சொன்னபோது அவரிடம் மறுபடி கொஞ்சம் சுதாரித்து இருந்தாள்.

மாமனாரும், மாமியாரும் அவளிடம் மற்றொரு நாள் வாய் பிடுங்கி அவர்கள் இருவருக்கும் இடையேயான விஷயங்களை கேட்டு அறிந்த போது அவர்கள் தெரிந்தே கேட்கிறார்கள் என அறிந்தும் ஏதேனும் தீர்வு கிடைக்காதா? எனும் ஆதங்கத்தில் பகிர தோதான பல விஷயங்களை விலாவரியாக சொல்லியும் வைத்தாள்.

மகனைக் குறித்து ஏதோ அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்க ஏதோ ஒரு வேகத்தில் தன்னையறியாமல் ஏற்பட்ட உந்துதலில் “உங்க மகன் நார்மலா இருந்தால் பரவாயில்லை, அப்நார்மலா நடந்துக்கிறாரே” எனவும் கூடச் சொல்லி விட்டிருந்தாள். அவளும் எத்தனை நாள் தான் எல்லாவற்றையும் மௌனமாக கடப்பாள். அல்லது இவள் மனதில் இருந்தது போட்டு வாங்கும் உத்தியில் அவர்கள் வென்று விட்டதாக சொல்லியாக வேண்டுமோ?

இப்படியாக நாட்கள் கழிந்திருக்க ஒரு நாள் அவர்கள் தங்கள் தராதரத்தில் இறங்கியவர்களாக அவள் மீதான தங்கள் மகனின் குற்றச்சாட்டை அவள் முன் வைத்தனர்.

“என்ன நீ அவனுக்கு இடம் தராமல் மொத்தக் கட்டிலையும் பிடிச்சுக்கிறியாம்? அவனுக்கு தூங்க இடமே இல்லியாம்” அதிர்ந்தாள் அவள்.

 இதை அவர்கள் அவளிடம் எப்படித்தான் கேட்டார்களோ? ஆனால், அவளால் அதைக் கேட்கவும் சகிக்கவில்லை.

ஆரம்பத்தில் ஓரிரு முறைகள் தங்களிடையேயான பிணக்கை தீர்க்க அவனை அவள் ஒட்டிப் படுக்க அவன் அவளிடமிருந்து விலகிப் படுத்த நாட்களைக் குறித்துத்தான் அவன் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் ‘தான் இன்னும் எவ்வளவுதான் இறங்கிப் போவது?’ எனும் மனநிலையில் அவனிடமிருந்து அவள் விலகியேதானே இருக்கிறாள்.

அது போக அவன் வீடு திரும்புவதே காலைப் பொழுது என்று ஆகி விட்டிருக்க, இவள் எழுந்த பின்னர் முழுக்கட்டிலும் அவனுக்குத்தானே? அவனுக்கு படுக்க இடம் கொடாமல் அவள் இருந்த நாள் என்று ஒன்றும் இல்லையே?

‘இதையெல்லாமா தாய், தகப்பனிடம் சொல்வது?’ மறுபடி ஒருமுறை மூக்குடைப்பட்ட அவமானம் மற்றும் கூச்ச உணர்வு அவளிடம். பதிலே பேசாமல் எழுந்துச் சென்று விட்டாள்.

இரவில் வீடு வந்தவனிடம் அவளால் பேசவே முடியவில்லை. கணவன் பெற்றோர்களிடம் சொன்னது ஒரு காரணம் என்றால் சமீபகாலமாக அவன் மறுபடி பல நாட்களாக அவளை அவமானப்படுத்தவும் ஆரம்பித்து விட்டிருந்தான்.

அவள் சாதாரணமாக எதைப் பேசினாலும் கூட ,அவளை மட்டம் தட்டுவதன் மூலமாக பேச்சை திசை திருப்புவதும், அவளை கீழ்மையாக உணர வைப்பதுமாக அவனுக்கு அதில் ஒரு குரூர மகிழ்ச்சி.

 “உனக்கு டீசண்டா நடக்கவே தெரியலையே?”

“உனக்கு நல்லா உடை உடுத்தவே தெரியலையே? இதில் உன்னோட நான் வரணும்னு எப்படி எதிர்பார்க்கிற?”

மற்றொரு நாள் உணவு பறிமாறியவளிடம் தட்டை வாங்கி “சாதத்தை இப்படி பறிமாறனும், சாப்பாடு கூட பறிமாறத் தெரியலை.நீயெல்லாம் வாய் பேசுற?” அதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ள முடிந்தவளால் அவனது இன்னொரு பேச்சை பொறுக்கவே முடியவில்லை.

அன்று இரவில் உணவிற்குப் பிறகு வழக்கம் போல கிளாஸில் பால் கலக்கி அவனுக்கு குடிக்கக் கொடுத்தவளிடம் அந்த கிளாஸைக் காட்டி,

“நீ இந்த பாலில் எனக்கு விஷம் கலக்கி கொடுக்கலில்ல? உண்மையைச் சொல்லு… உண்மை சொல்லு” என அவளை உலுக்காதக் குறையாகக் கேட்ட போதுதான் அவள் மனம் வெகுவாக காயப்பட்டு போய் விட்டிருந்தது.

அவனது செயல்களுக்கு காரணம் புரியாவிட்டாலும் கூட, அவன் மனம் மாறி தன்னுடன் அன்பாக இருக்க வேண்டும் என எண்ணி இருந்தாளே தவிர, அவனை அவள் ஒருபோதும் வெறுத்தது இல்லை.

கணவனுக்கும் தனக்குமான புரியாத அத்தனைப் பிரச்சனைகளும் நலமாக வேண்டும். கணவன் தன்னுடன் அன்பாக இருக்க வேண்டும் என அவளுக்குத் தெரிந்த சாமிகளிடம் எல்லாம் அவள் வேண்டுதல்கள் பலவும் வைத்திருந்தாள்.

இப்போது கூட இத்தனை உடல் உபாதைகளுக்கு நடுவிலும் குழந்தையை அவள் சுமப்பது அவன் மேல் இருக்கும் அன்பால் தானே? “என் குழந்தை, என் குழந்தை” என அவன் எப்போதும் குழந்தைக் குறித்தே பேசுவதை உணர்ந்தே ‘என் கணவனுக்காக இத்தனை வலிகளையும் தாண்டி இந்தக் குழந்தையை நான் சிறப்பாக பெற்றெடுப்பேன்’ என அடிக்கடி எண்ணிக் கொள்வாள். முதுகை பிய்த்தெடுக்கும் அவள் வலி உபாதைகள் கூட அவள் கணவனுக்காக பொறுத்துக் கொண்டாள். இன்று இல்லாவிடினும் என்றாவது அவளது வாழ்க்கை சீர் பட்டு விடும் எனும் நம்பிக்கைக் கொண்டு இருந்தாள்.

அவனோ தாய் நன்றாக இருந்தால் தானே குழந்தையும் நலமாக இருக்கும் என்பதை அறியாதவன் போல, “நீ எப்படியும் போ, ஆனால் என் குழந்தை நலமாக இருந்தால் போதும்” என அவள் மீது அடிக்கடி வெறுப்பைக் கக்கத்தான் செய்தான். ஆனாலும், அத்தனையையும் பொறுத்துப் போனாள். சின்ன பூச்சிக்கும் கூட தீங்கு செய்ய எண்ணாத அவள் தனது அன்புக்கு உரியவனான அவனுக்கு விசத்தை கொடுப்பாளா?

‘அவனால் அவளிடம் எப்படி இப்படி கேட்க முடிந்தது?’

மனதிற்குள்ளாக இத்தனை விஷயங்களையும் உழப்பிக் கொண்டே தான் அவள் தன் கால்களுக்கு அந்த குளிர்கால லோசனை தடவிக் கொண்டு இருந்தாள்.

கணவன் மற்றும் குடும்பத்தினரால் இத்தனை பட்டிருந்தும் அவள் சுரணையின்றி இருந்திருக்கலாகாது. கழுகுப் பார்வை போல வீட்டினர் அனைவரும் அவளை கண்காணித்துக் கொண்டு, குற்றம் தேடுவதை தெரிந்தும் கவனமாக இராமல் இருந்ததுவும் அவள் தவறே.

ஹாலில் அந்த நேரம் யாரும் இருக்கப் போவதில்லை, குறிப்பாக மாமனாரின் படுக்கையில் யாரும் அமர்வதில்லையே எனும் நிச்சயத்தில் தனது முட்டிக்கு கீழே வறண்ட சருமத்தில் லோசனை தடவிய அனிச்சையான அந்த சில நொடிச் செயலுக்காக முன்னெச்சரிக்கையாக அவள் ஹாலை எட்டிப் பாராமல் இருந்ததுவும், குறைந்த பட்சம் சற்றுத் திறந்திருந்த அந்த அறையின் கதவை உள்பக்கமாக இறுக்கி மூடாமல் இருந்ததுவும் அவளது பெருங்குற்றமாகிற்று.

அண்ணி என்ற மரியாதை கூட இல்லாமல் ஹாலில் அமர்ந்திருந்த கணவனின் தம்பிக்கு, தன் அறையில் இருந்து சற்று திறந்திருந்த கதவின் வழியாக தனது கால்களை காண்பித்து, ஆசையை தூண்டி வேறு விதத்தில் அழைப்பு விடுத்ததாக அவள் குற்றம் சாட்டப் படுவாள் என அவள் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

இதைத்தான் வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று முன்னோர்கள் சொல்லி இருப்பார்களோ?

தொடரும்

2 COMMENTS

  1. அச்சோ என்ன குடும்பம் இது. இன்னும் எவ்வளவு தான் தாங்குவா. உண்மை கதைனு வேறு சொல்லி இருக்கீங்க. இப்போது நலமா இருக்காங்களா ஜான்சி.

    • Thank for ur cmt pa

      Yes இப்ப அவங்க நலம் தான்.

      நிறைய கஷ்டங்கள் தாண்டி இப்ப அவங்க வாழ்க்கை பரவாயில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here