இது இருளல்ல அது ஒளியல்ல_13_ஜான்சி

0
819

அத்தியாயம் 13

தனது சப்ஜெக்டிடம் திடீரென ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் அலைப்புறுதலை டாக்டர் ஸ்டீஃபன் கவனித்துக் கொண்டு இருந்தார். முன்பைப் போல மூச்சுத் திணறல் ஆகின்ற நிலை வரும் எனில் அவளை மயக்கத்தினின்று, சுய நினைவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என அவரிடம் தீர்மானம் இருந்தாலும் கூட சப்ஜெக்டின் மாற்றங்களை அசைவற்றுக் கவனித்துக் கொண்டு இருந்தார்.

“எனக்கு நான் லோசன் தடவும் போது, கொழுந்தன் ஹாலில் இருந்தது தெரியாது…நான் கவனிக்கல… எப்பவும் போலத்தான் நான் அன்னிக்கும்….” மூச்சிரைத்தது. சற்று நேரத்தில் அமைதியானாள்…

“எனக்கு என்னைப் பத்தி இப்படி தப்புத் தப்பா சொல்லுறது இதெல்லாம் அப்ப உடனே தெரியலை…. அப்புறமாகத்தான் தெரியும். அப்புறம்னா ரொம்ப அப்புறம்… அதாவது தீபாவளிக்கு அப்புறம்…. அப்ப என்னாச்சுன்னா….” தனக்கு நினைவிற்கு வரும் துண்டு துண்டான நிகழ்வுகளை அவள் சொல்லச் சொல்ல அவரது ரெகார்டரில் அது பதிவாகிக் கொண்டு இருந்தது.

அதை தவிர்த்தும் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்த டாக்டர் அந்த துண்டு துண்டு சம்பவங்களை தனக்குப் புரிந்த வகையில் கோர்க்க ஆரம்பிக்க அவரது மனதிற்குள்ளாக அந்தப் பெண்ணின் பிரச்சனையின் நுனி கிடைத்தாற் போல இருந்தது.

மனித மனம் மிக மெல்லிய உணர்வுகளால் பின்னப் பட்டது. ஒரு சிறு சொல், ஒரு சிறு செயல், ஒரு சிறு நிகழ்வு கூட மனிதர்களின் மனதில் தைத்து விடும். ஒரு சிலர் எத்தனையோ சிறந்தவர்களாக இருப்பர் ஆனால் அவர்களால் வெற்றிகரமாக வாழ முடியாது. உள்ளத்தில் தைத்த ஏதோ ஒரு முள் அவர்களை கட்டிப் போட்டிருக்கும்.

ஹிப்னடிச பாடங்களை கற்கையில் பல்வேறு சப்ஜெக்டுகளைக் குறித்த உதாரணங்களை கற்றுக் கொடுப்பார்கள். அதில் ஒரு பெண் குறித்த கதை மிகவும் பிரசித்தமானது.

அந்தப் பெண் நடுத்தர வயதினள் எனினும் கூட, அவளுக்கு பூனையைக் கண்டால் மட்டும் மிகுந்த பய நடுக்கம். இத்தனை பெரிய பெண் நீ, இவ்வாறு பூனைக்கு பயப்படலாமா? என உறவினர்களே கேலி பேசுமளவிற்கு பயம் உண்டு.

அந்தப் பெண்மணியை ஹிப்னடிச தூக்கத்தில் ஆழ்த்தி, அவளது ஆழ் மனதிடம் அதன் காரணம் கேட்ட போது, அவள் தான் ஒரு வயது குழந்தையாக இருந்த போது ஒரு பூனை அவளை பயமுறுத்தியதையும் அதன் காரணமாகவே இன்றளவும் அவளுக்கு பூனைகளை கண்டால் மிகுந்த பயம் எனவும் அவள் கூறினாள்.

அவளிடம் ஹிப்னடிஸ்ட் கேட்டறிந்த படி அப்பெண் கூறிய அந்த அறையின் அமைப்பு எல்லாவற்றையும் ஒப்பிட்டு அவர்கள் வீட்டில் அறையை தேடிய போது முதலில் அப்படி ஒரு அறையே இல்லை என்று சொல்லி விட்டிருந்தனராம்.

அதன் பின்னர் அந்தப் பெண்மணி குழந்தையாக இருந்த போது பயன்பாட்டில் இருந்து இப்போது பல வருடங்களாக பூட்டி வைக்கப் பட்டிருந்த அந்த நிலவறைக்குச் (தரைக்கு கீழே இருக்கும் அறை) சென்று பார்வையிட்ட போது அவர் ஹிப்னடிச மயக்கத்தில் சொன்ன அத்தனை அமைப்புக்களோடு கூட அந்த அறை இருந்ததுவாம்.

மயக்கத்தில் இருந்த போது அவரால் அந்த அறையின் ஜன்னல் அமைப்பு, அது இருந்த திசை முதலாக எல்லாவற்றையும் குறிப்பிட முடிந்திருந்தனவாம். அவர் குறிப்பிட்ட எல்லாமும் ஒத்துப் போயிருக்கின்றன.

அவரது ஆழ்மனதில் இருந்து அந்த பயத்தை அகற்றிய பின்னர் அவர் பூனைக்கு பயப்படாமல் வாழ ஆரம்பித்து இருக்கின்றார். அது போல டாக்டர் ஸ்டீபன் விமலாவின் மெல்லிய மனதின் காயங்களை அறியவும் அதற்கேற்ப சிகிட்சை அளிக்கவும் முனைப்பில் இருந்தார்;

அவள் தொடர்ந்து பேச ஆரம்பிக்கவும் ரெகார்டர் சுழல ஆரம்பித்து இருந்தது.

சில நாட்களுக்கு அப்புறமாக அன்று ஏனோ வீரேந்திரனின் அருட்பார்வை விமலாவிற்கு கிடைத்து இருந்தது. அதிசயமாக வீட்டிற்கு இரவு எட்டு மணி போல  வந்தவன் அக்காக்கள், தங்கை, அம்மா இவர்கள் எல்லோருடனும் அளவளாவிய பின்னர் அவர்கள் அறைக்கு வந்து தாளிட்டான். கட்டிலில் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

எத்தனை சண்டை, பிரச்சனைகள் எவ்வளவு தான் அவன் அவளை காயப்படுத்தினாலும் கூட அவனது ஒரு அனுசரணையான பேச்சில் அவள் அவன் பக்கம் சாய்ந்து விடுவதாக இருந்தாள்.

திருமண வாழ்க்கை என்றால் இப்படித்தான் சண்டை சச்சரவு வரும் போகும் என எண்ணிக் கொண்டாள். அவளிடம் எப்படியாகினும் தனது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி விட முயலும் முனைப்பு இருந்தது.

‘சரி அன்று தான் போனில் அழைத்த போது ஏதோ வேலை மும்முரத்தில் தன்னை திட்டி விட்டிருப்பானாக இருக்கும்’ என தன்னுடைய தன்மானத்தை தூர வைத்து விட்டு சகஜமாக பேசினாள்.

விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல மறுபடி தலை தீபாவளிக்கு ஊர் செல்வது அவள் அவனிடம் கேட்கலானாள். இம்முறை அவன் அவள் சொன்னதை காது கொடுத்து கேட்டான். ஆனால், தனது பேச்சிலேயே நின்றான். தன்னால் அவளுடன் ஊருக்கு வரவே முடியாது என தன்மையாக மறுத்தான்.

இவளுக்கு பல நாட்கள் போலவே இப்போதும் அடுத்து என்னச் செய்வது எனப் புரியாமல் மனம் குழம்பிப் போயிற்று. ‘இவனுக்கு நிலைமை புரியவில்லையா? எதற்காக இப்படி செய்கிறான்? இவனில்லாமல் நான் தனியாக ஊருக்குப் போவது எப்படி? ஊரில் உன் கணவன் வரவில்லையா? என என்னை கேள்வியாக கேட்டு கொன்று விடுவார்களே?’ மனதிற்குள் குழம்பியவளுக்கு அவன் இன்னும் ஏதோ பேசிக் கொண்டு இருப்பது உடனே மண்டைக்குள் ஏறவில்லை.

“விமலா” கணவன் அழைத்ததும் தலையசைத்து கவனிக்க ஆரம்பித்தாள்.

“இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா… கணவன் மனைவி உறவுக்குள்ள லாயல்டி ரொம்ப முக்கியம்… சரிதானே?”

லாயல்டின்னா அந்த ஆங்கில வார்த்தையின் பொருளை அவள் யோசிக்க, எப்படியோ அது எதைச் சார்ந்தது என்பதுக் குறித்து கொஞ்சம் புரிய வந்தது. ‘லாயல்டினா உண்மையா இருக்கிறது…. ஆமா…ஆனா அதை ஏன் இப்ப சொல்லிட்டு இருக்காங்க?’

எதையோ தன்னிடம் வந்து பேசுகிறான், அதுவும் பற்பல நாட்களுக்கு அப்பாலான சண்டையற்ற, சாதாரண உரையாடல் அதை கெடுப்பானேன்? அவன் சொல்வதற்கெல்லாம் தலையை தலையை ஆட்டினாள்.

“ஹஸ்பெண்ட் வைஃப் கிட்ட லாயல்டியா இருக்கணும், அது போல வைஃப் ஹஸ்பெண்ட் கிட்ட லாயல்டியா இருக்கணும், என்ன நான் சொல்லுறது உனக்குப் புரியுதா?”

“புரியுதுங்க”

“என்ன புரியுது”

“ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப் எப்பவும் லாயல்டியா இருக்கணும்” பள்ளிச் சிறுமியாக சொல்லி தலையை ஆட்டி வைத்தாள். அதன் பின்னும் பதினைந்து நிமிடங்கள் அவளிடம் தொடர்ந்து பேசினான். அவனது எல்லா வாக்கியத்திலும் குறிப்பாக அந்த லாயல்டி இருந்தது. அவளுக்கு அந்தப் பேச்சின் சாராம்சம் சற்றும் புரியவில்லை.

‘ஒருவேளை தான் ஏதாவது தவறு செய்து விட்டதாக வந்து மனைவியிடம் சொல்ல நினைத்திருப்பானோ?’ எனக் குழம்பினாள்.

ஏனென்றால், ஊரிலிருந்து திரும்பிய சில நாட்கள் கழித்து ஒரு நாள் அவளிடம் தான் வழக்கமாக பார் செல்வதுண்டு எனவும், தன்னிடம் பெண்கள் எல்லோரும் வந்து பேசுவார்கள் என்றும் கூறியிருந்தான். இந்த வாழ்க்கை முறை அவளுக்கு புரியவில்லை என்றாலும் விளையாட்டைப் போல அவள் அவனிடம், “இப்போது உங்களுக்கு திருமணமாகி விட்டதால், இனி பெண்கள் உங்களைத் தேடி வர மாட்டார்களே” என கேலியாக பதில் சொல்லி இருந்தாள்.

“உனக்கென்னத் தெரியும்? திருமணமான பின் தான் ஐயாவோட வேல்யூ கூடும்…இனிதான் என்னைத் தேடி நிறையப் பெண்கள் வருவார்கள் பாரேன்” என்று பதில் பேசியிருந்தான். அவனது பேச்சுக்கள் எப்போதும் விளையாட்டுப் போலவே இருக்கும் என்பதால் அவள் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவர்கள் வீட்டில் மற்றவர்கள் வெளியாட்களிடம் அதிகம் பேசாமல் இறுக்கமாய் இருப்பார்கள் எனின் இவன் எல்லோரிடமும் நன்றாக பேசுவான்.

ஓரிரு முறைகள் இவள் கவனிக்கையில் தான் யார் ஒருவரிடம் நன்றாக பேசுகின்றானோ அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் அந்த நபரைக் குறித்து பச்சை பச்சையாக, வெகு கொச்சையாக இகழ்ந்துப் பேசுவதையும் கண்டு அதிர்ந்து இருக்கிறாள்.

வீரேந்திரன் வெளியில் போடும் வேடம் வேறு, உள்ளே போடும் வேடம் வேறு என்பதையும் சற்று தூரத்தில் நின்றே கவனித்து இருந்தாள். திருமணத்திற்கு அடுத்த சில நாட்கள் ஊரில் இருந்த போது அவளை பார்க்க வந்த பலரும் சொல்லி வைத்தார் போல அவளிடம் சொன்னது, “அந்த வீட்டிலேயே குணசாலி உன் கணவன் தான், உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி” என்பதாகவும் இருந்தது.

நாட்பட அவன் நிஜ ரூபம் தெரிந்ததில் இருந்து இவனால் எப்படி இரட்டை வேடம் போட முடிகின்றது என அவள் வியந்து இருக்கிறாள். இப்போது வெளியில் மற்றவர்கள் பார்வையில் அவர்கள் நல்ல தம்பதியர் தான். ஆனால், உள்ளே அவர்கள் அறைக்குள்ளே என்ன நடக்கின்றது என்பது அவள் மட்டும் தானே அறிவாள்?

இந்த கணம் அவளிடம் இன்பம் பொங்க சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றவன் தான் கடந்த நாட்களில் அவளையும், அவள் குடும்பத்தையும் “எனக்கு பெண் கொடுக்க உங்களுக்கு என்ன தராதரம் இருக்கின்றது?” டார் டாராக கிழித்து தொங்க விட்டது? எனக் கேட்டால் அவளுக்கே குழப்பம் வரக் கூடும் அந்த அளவுக்கு பேச்சில் வித்தகனாக இருந்தான்.

லாயல்டி குறித்த சிந்தனையில் இருந்தவளை எப்போது ஆக்கிரமித்தான் எனப் புரியாத அளவிற்கு அவனது செய்கை இருந்தது. அவனது இரண்டு நிமிட இளைப்பாறலுக்காக அவள் சில நிமிடங்கள் வதைப் பட்டு ஆசுவாசமானாள்.

அதுவரை லாயல்டி பேசியவன் அவளருகில் அயர்ந்து உறங்கி விட்டிருந்தான். கணவன் தன்னை நாடும் நாட்களுக்கு இடையேயான இடைவெளியை அவளால் இப்போது அனுமானிக்க முடிந்தது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை அவளது வதைப்படும் நாள் குறிக்கப் பட்டு இருந்ததை அறிந்தாள்.

அது ஏன் அப்படி? தேவை இருந்தால் மட்டும் தான் தன்னிடம் நன்றாக பேச வேண்டுமா? மற்ற நேரங்களில் என்னை திட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா? அவன் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறியும் அளவிற்கு அவளுக்கு அறிவில்லை என்பதே உண்மை.

இவ்வாறு நாட்கள் கடந்தனவே அன்றி அவளது தலைதீபாவளி பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் குழப்பத்திலேயே இருக்க, மகன் ஒருவேளை தகப்பனின் பேச்சைக் கேட்கக் கூடும் என நினைத்து மாமனாரிடம் தலை தீபாவளி குறித்த தன் விண்ணப்பத்தை எடுத்துச் சென்றாள். ஆனால், அவளது ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ வகை மாமனார் அவளிடம் வேறொன்றை தீர்வாகச் சொல்லி வைத்தார்.

“எப்போதுமே பெண்கள் ஆண்கள் கூட வரணும்னு எதிர்பார்க்காமல் தனியாக வெளியே போக வர கற்றுக் கொள்ள வேண்டும். இப்ப என் மகள்களையே எடுத்துக்கோயேன். தீபாவளிக்கு தங்கள் கணவர்கள் வர முடியாத நிலை என்று புரிந்ததும் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, ஊரிலிருந்து தனியே பிரயாணம் செய்து தானே வந்திருக்கிறார்கள். நீயும் ஏன் என் மகள்களைப் போல இப்படிப்பட்ட துணிவை வளர்த்துக் கொள்ளக் கூடாது.” என நீண்ட நெடிய பிரச்சாரத்தை நிகழ்த்தினார்.

அந்த அரிய வகை மாமனாருக்கு தங்கள் மகள்களுக்கு திருமணம் ஆகி பல வருட காலங்கள் ஆகி விட்டன என்பதுவும், மகனுக்கு இதுதான் தலைதீபாவளி என்பதுவும் காரண காரியத்தோடு மறந்து விட்டதுதான் அவளுக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அவளது பிரச்சனை ஒரு மில்லி மீட்டர் அளவும் நகராமல் குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டது போல ஆரம்பித்த அதே நிலையில் இருந்தது.

புகுந்த வீட்டை தன் பெற்றவர்களிடம் விட்டுக் கொடுக்க முடியாமலும், தலை தீபாவளி குறித்த பிறந்த வீட்டினர் கோரிக்கையையும் தட்டிக் கழிக்க முடியாமலும் விமலா வெகுவாக திகைத்துப் போனாள். தலை தீபாவளிக்கு அவள் தனியாக ஊர் சென்றாலும் அனைவர் வாய்களிலும் அரைபட வேண்டும். தான் செல்லாமல் இருந்தலும் அது அவளது பெற்றவர்களுக்கு அவமானமே? என்னச் செய்யலாம்?

அம்மாவிடம் பேசுகையில் கணவனுக்கு வேலை அதிகம் என்றும், தன்னுடன் அவனால் தங்கள் வீட்டிற்கு தீபாவளிக்காக வர முடியாது என்பதையும் தெரிவித்தாள். ஆனால், தன் மாமனார் மற்றும் வீட்டினர் அனைவரும் அவள் தனது வீட்டிற்கு தனியாக தீபாவளிக் கொண்டாடச் சென்றால் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை எனத் தெரிவித்ததாகவும் கூறினாள். குறிப்பாக மாமனாரின் அறிவுரைகளைச் சொல்லவும் மாலதிக்கு மனம் பதறி விட்டிருந்தது.

முன் பின் தெரியாத ஊரிலிருந்து அவர்களது செல்வ மகள் தனியாக பயணித்து ஊருக்கு வருவதா? அவளது கணவன் எத்தனைதான் முக்கியமான வேலை இருந்தாலும் கூட மனைவிக்கு துணையாகவாவது ஒரே ஒரு நாள் வந்து அவளை விட்டு விட்டு மாமியார் வீட்டில் தனது முகத்தை காட்டிச் சென்றிருக்கலாமே? என்பதான ஆதங்கம் ஏற்பட்டது.

கடைசியாக விமலாவின் பெற்றவர்கள் தான் இறங்கிப் போக வேண்டியதாயிற்று. எல்லாம் தங்கள் மகளின் நன்மைக்காக என தங்களது சிறுமைப் படுத்தல்களை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. குட்டக் குட்டக் குனிவதில் பெண் வீட்டாரை யாரால்தான் மிஞ்ச முடியும்.

தீபாவளிக்கு இரு நாட்கள் முன்பு விமலாவின் அண்ணன் சிவா அவளை அழைக்க வந்திருந்தான். விமலாவும் விடைப்பெற்றுச் சென்றாள்.அவளது வீட்டினருக்கு மகளைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி.

திருமணத்திற்கு அடுத்த நாள் மகள் வந்துச் சென்ற போது வீடு வசதிப் படவில்லை என்று அந்த வீட்டில் ஒரு சில மாற்றங்களை அவர்கள் செய்து இருந்தனர். மகளும், மருமகளும் வந்துச் சென்றால் தங்கவென்று மாடி அறையும், மகனுக்காக கீழே ஒரு தனியறையும் கட்டி இருந்தனர்.

விமலா வீட்டிற்கு வந்ததும் வீட்டினரோடு அளவளாவி மகிழ்ந்தாள். வீட்டின் மாற்றங்கள் அவளுக்கு மிகவும் பிடித்தது. வந்தது முதலாக தனக்கான மாடி அறையில் அடித்துப் போட்டாற் போல அயர்ந்து உறங்கினாள்.

வருடா வருடம் தீபாவளி நாட்களில் வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக செயல்படுகின்ற மகள் இப்போதோ வந்தது முதலாக உண்பதும் உறங்குவதுமாக இருக்க அதற்கு காரணம் அவள் கர்ப்பமாக இருப்பதே எனக் கருதிக் கொண்டார்கள். நன்றாக தூங்கட்டும் என்று அவளை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டனர்.

அவளது அயர்ந்த தூக்கத்திற்கு காரணம் கர்ப்பமாக இருப்பது அல்ல , இரவில் தன் கணவன் வீடு திரும்புவானா? மாட்டானா? எனும் குழப்பத்தில் பல வாரங்களாக அவள் தவற விட்டிருந்த தூக்கம் தான் காரணம் என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தீபாவளிக்கு முன்தினம் குடும்பமாய் சிரித்து உண்டு மகிழ்ந்து இருந்த விமலாவிற்கு கணவன் இல்லாத குறையை நினைக்கவும் நேரமில்லை.ஆனால், அன்றிரவு அவர்களது வீட்டின் கதவு தட்டப்பட்டது.

“உன் மருமகன் வந்திருக்கார், அவருக்கு இருட்டில் உன் வீடு அடையாளம் தெரியலை போலிருக்கு என்னை கதவை தட்டச் சொன்னார் என்னன்னு பாரு” பக்கத்து வீட்டு மாமா இவர்கள் கதவை தட்டி விட்டுச் சென்றார்.

கீழே இருந்த முதல் அறையில் படுத்திருந்த விமலாவின் அப்பா எழுந்து கதவை திறக்க வர, அதனால் எழுந்த சப்தத்தில் அடுத்த அறையில் இருந்த சிவாவும் கூட எழுந்து வெளியே வந்தான்.

கடிகாரத்தில் மணி இரவின் இரண்டே முக்காலை காண்பித்துக் கொண்டு இருந்தது.

வாசலை தட்டிய பக்கத்து வீட்டு நபர் தன் வீட்டிற்கு சென்று விட்டிருக்க,  வீரேந்திரனோ தன்னோடு கூட ஒருவனுடன் வாயில் அருகே நில்லாமல் பத்தடி தூரத்தில் நின்றிருந்தான். கதவை திறந்த பின்னரும் நின்ற இடத்தினின்று நகர்ந்தான் இல்லை. அந்த வீட்டினுள்ளே எதையோ கண்டுப் பிடிக்கும் ஆராயும் பார்வையோடு அங்கேயே நின்றான்.

அவன் நின்றிருந்த கோணம் சற்று அசாதாரணமானது. அந்த நிலையில் அவனால் அந்த வீட்டின் உள்ளும் புறமும் ஊடுருவும் வண்ணம் பார்வையிட இயலும். ஆனால், அதன் தேவை என்ன? என்பதை அவனே அறிவான்.

மாமனாரும், மச்சானும் மருமகனை வரவேற்க வீட்டின் வெளியே வந்து விட்டிருக்க தன் மனைவியை இன்னமும் காணவில்லையே? எங்கு இருக்கிறாளோ? என அவன் கண்கள் தேடின. மருமகன் எதற்காக அத்தனை தூரத்தில் நிற்கிறார் என புரியாதவர் மகளை அழைத்தார்.

 “விமலாம்மா வா கீழே, மாப்பிள்ளை வந்திருக்கார் பாரு.”

ஏற்கெனவே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து சற்று முழிப்பில் இருந்தவள் தகப்பனின் குரல் கேட்க மனம் மகிழ்ச்சியுற்றது.

‘தன்னிடம் தலை தீபாவளிக்கு வர முடியாது என்றுச் சொன்னாலும் கூட, ஊராரின் முன்பாக தன் மானம் காக்க தன்னைத் தேடி கனவன் வந்து விட்டானா?’ அவள் மனம் மகிழ்ச்சியில் பரபரத்தது. ஆனாலும், வயிற்றில் இருந்த தனது மூன்று மாத கருவை முன்னிட்டு அவள் அந்த மாடிப் படிகளில் இருந்து பொன் போல பாதம் பதித்து மெதுவாக இறங்கி வந்தாள். கணவன் ஏன் வீட்டிற்குள் வரவில்லை? ஏன் அவ்வளவு தொலைவாக நிற்கிறான்? என அவளுக்குப் புரியவில்லை.

வீரேந்திரனின் பார்வை மனைவியோடு கூட மாடியில் இருந்தது யார் என அறிய பரபரத்தது. அவளோடு பின்னாக மற்றும் இரண்டு கால்கள் தெரியவும் கள்ளனைப் பிடிக்கும் இலாவகத்துடன் அந்த உருவத்தை கவனிக்க கூர்ந்தான். மகளை முன்னே விட்டு விட்டு பின்னாக இறங்கிக் கொண்டிருந்தார் விமலாவிற்கு துணையாக படுத்திருந்த மாலதி.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here