இது இருளல்ல அது ஒளியல்ல_14_ஜான்சி

0
822

அத்தியாயம் 14

தலை தீபாவளிக்கு நினையாத நேரத்தில் எதிர்பாராமல் வந்த மருமகனை அந்த வீடு கொண்டாடியது. அவனது நண்பனுக்கு ஒரு அறையை தயார் செய்து விட்டு அங்கே தூங்கச் சொன்னார்கள். நண்பனுடன் வீரேந்திரனும் அங்கேயே தங்கிக் கொண்டான். வந்தது ஒரு நண்பன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் 3 பேர் இருந்தனர்.

அவன் வந்தது தீபாவளி கொண்டாடத்தானா? எழுந்த குழப்பம் தீரவே இல்லை. தன்னைத் தேடி கணவன் வந்து விட்டான் எனும் பூரிப்பில் மகள் இருந்த நிலை பார்த்து அவர்கள் தங்கள் மனதின் குழப்பத்தை வெளியில் சொல்லவில்லை. மகள் மகிழ்ச்சியை கெடுப்பானேன்.

அதிகாலை எண்ணைக் குளியலோ மற்ற எந்த சாங்கியமோ எதையும் வீரேந்திரன் செய்தானில்லை. காலை பதினோரு மணி வரைக்கும் தூங்கிய அவனும் அவன் நண்பர்களும் எழுந்து உடனே திரும்பச் செல்ல புறப்பட்டனர்.இவர்கள் பார்த்துப் பார்த்து செய்து பரிமாறிய உணவுகளை வீரேந்திரனின் நண்பர்கள் உண்டனரே அன்றி அவன் உண்ணவில்லை.

வந்த வேகத்தில் காலை பதினொன்றரை மணிக்கு அனைவரும் திரும்பச் சென்று விட்டனர். ஊரில் கேட்டவர்களுக்கு எல்லாம் “ஆமாம் மாப்பிள்ளை வந்திருந்தாரு, ஆனால் வேலை இருந்ததால சீக்கிரம் போயிட்டாரு” எனச் சொல்லி மனதை தேற்றிக் கொண்டனர்.

திருமண மறுவீட்டிலேயே கூட அவர்கள் வீட்டில் துணி மாற்றாமல் அவன் சென்று இருந்ததால் இதெல்லாம் அவர்களுக்கு வழக்கமான ஒன்று போலவே தெரிந்தது. பெரிய வீட்டுப் புள்ளைங்க இப்படித்தான் இருப்பாங்க போலிருக்கு என்பதான் அனுமானம்.

தீபாவளி முடிந்த சில நாட்களில் தங்கையை மறுபடி அவள் வீட்டிற்கு விட்டு வந்தான் சிவா. தனிமையும், கசப்புமான நரக வாழ்வு மன்னிக்க நகர வாழ்வு தொடர்ந்தது.

உடல் உபாதைகள் முதுகுவலி எப்போதுமே அதிகரித்த வண்ணமாக இருந்தது. பொதுவாக கர்ப்ப காலத்தில் தாய்களுக்கு மிகுந்த காட்டமான மாத்திரைகளை பரிந்துரை செய்வதில்லை என்பதால் அவள் தான் மருத்துவர் சொன்னதைப் போல கிடைக்கும் நேரம் எல்லாம் இடுப்பிற்கு கீழே தலையணை வைத்தவளாய் விட்டம் பார்த்து படுத்தே கிடப்பாள். தலையணையின் அழுத்தத்தில் வலி சற்று மட்டுப் பட்டாற் போல தோன்றும்.

அப்படி படுக்கும் நேரங்களில் அவள் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். பதில் எழாத கேள்விகள். எதற்காக நாம் இப்படி வாழ்கிறோம்? மற்றவர்கள் திருமண வாழ்வைப் போல நமது திருமண வாழ்வு ஏன் இல்லை? எதற்காக இந்த தனிமையான உணர்வு? எதற்காக கணவன் முரணாக நடந்துக் கொள்கிறான்? தனது வாழ்வில் ஆசைக் கொண்ட அன்பான அனுசரணையான கணவனோடான குடும்ப வாழ்வு தனக்கு ஏன் கிடைக்கவில்லை? குறிப்பாக தாம்பத்தியம் அது ஏன் இத்தனை கொடூரமாக இருக்கின்றது?

படுத்த வண்ணம் எதிரில் பார்ப்பவளுக்கு அங்கு இருக்கு இரண்டு கப்போர்டுகளின் கண்ணாடி பிம்பத்தில் சாமி உருவப்படங்கள் தெரியும். “ஏன் சாமி எனக்கு இப்படியெல்லாம் நடக்குது?” கேட்டுக் கொள்வாள்.கணவனுக்கு தான் பொருட்டே இல்லாமல் இருப்பது குறித்ததான மன வருத்தங்கள் கண்களில் கண்ணீராய் திரளும்.ஆனால், அவற்றை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள்.

இப்படித்தான் இருக்குமோ? இனி குழந்தை வந்த பின்னர் நிலைமை மாறுமோ? கணவன் தன் மேலும் குழந்தை மேலும் இன்னும் அதிகமாய் அக்கறை செலுத்துவானோ? எதிர்பார்ப்பு நிறைந்த மனதை அடக்கத் தெரியாமல் திண்டாடுவாள்.

இப்போதெல்லாம் மாமியார் இவளை குறிப்புக் காட்டி கிண்டலடிப்பது சிலவற்றை அவளால் உணர முடிந்தது. இவர்கள் வீட்டுப் பலகாரத்தை தட்டில் வைத்து கொண்டுச் சென்றுக் கொடுத்த போது யாருமே அதை தொட்டும் பார்க்கவில்லை. முகத்தில் அசூயையான பாவனை வேறு.

அதனால் அதன் பின்னர் அவள் எதையுமே அவர்களுக்கு மறுபடி கொண்டுச் செல்லவில்லை.தன் தாயின் கைவண்ணத்தில் அந்த பண்டங்கள் எத்தனை சுவையாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், விரும்பாத மற்றவர்களுக்கு கொடுப்பானேன். தானே தன் அறையில் வைத்து அவ்வப்போது உண்டுக் கொள்வாள்.

உண்ணும் விசயத்தில் உணவை வீண் செய்யாது இருப்பதுவும், வேளாவேளைக்கு உண்ணுவதும் அவளது வழக்கம். என்ன மனக்கஷ்டம் இருந்தாலும் கூட அவள் தனது உணவில் மாற்றம் கொண்டு வரவில்லை. குழந்தையின் வளர்ச்சியும் கூட அவளை சார்ந்தது அல்லவா?

தீனிப்பண்டாரம் இன்னும் என்னென்னவோ? சரி சொல்லி விட்டுப் போகட்டும் என அவள் மாமியாரை கண்டுக் கொள்ளவில்லை. கணவன் அவள் ஊரில் இருந்து வந்த பின்னர் “பழையக் குருடி, கதவைத் திறடி” என்பது போல வழக்கமான தனது செய்கைகளை ஆரம்பித்து விட்டிருந்தான். இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் அவள் வதைப்படும் இரவு வந்துச் சென்றது. ஏதோ ஒரு அலைப்புறுதலிலேயே எப்போதும் கணவன் இருப்பது அவளுக்குப் புரியாமலில்லை.

அது தன்னால் இருக்கக் கூடும் எனும் அனுமானம் அவளிடம் சிறிதும் கூட இல்லை. அவன் தான் அவளிடம் பேசுவதே இல்லையே. கிடைக்கும் பொழுதுகளில் எல்லாம் அவளை திட்டித் திட்டி கூனிக் குறுக வைப்பதிலேயே காலத்தை கடந்து விடுகின்றவன் மனதில் என்ன இருக்கின்றது? என்பதை அவள் அறிய முடியவில்லை.

வழக்கமானதொரு இரவு, தனது அறையில் ட்யூப்லைட் வெளிச்சத்தில் கதவை சற்று சாற்றிய வண்ணம் கணவனுக்காக விமலா காத்திருந்தாள். மனம் சஞ்சலப் படுகின்றது என்பதனால் சில இறைபக்திக்கான புத்தகங்களை ஊரில் இருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.

குளிருக்கு ஏதுவாக போர்வையை கழுத்துவரை இழுத்து விட்டு படுத்தவாறு கையில் புத்தகத்தை ஏந்தி அதில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வாசித்துக் கொண்டு இருந்தவளுக்கு நள்ளிரவு இரண்டு மணி அளவில் ஏதோ சலனம் கேட்க கவனத்தை திசை திருப்பி புத்தகத்தை முகத்தினின்றி அகற்றிப் பார்த்தாள்.

அவள் அறையின் கதவு திறந்திருந்தது வாயிலில் அவள் கொழுந்தன் நின்றிருந்தான். ஆனால், அவன் அவளை அழைக்கவெல்லாம் இல்லை. வந்த வண்ணம் நின்றிருந்தான். உள்ளேயே நோக்கிய வண்ணம் நின்றிருந்தான்.

தனது ஊர் வழக்கம் போல கொழுந்தன் கொழுந்தன் என முறை வைத்து சில முறைகள் முன்னர் அவள் அவனை அழைத்திருந்த போது அவனது முகத்தில் விருப்பமின்மை தென்பட தன்னை பட்டிக்காட்டுப் பெண் என நினைக்கிறான் என எண்ணி அப்படி அழைப்பதை அவள் விட்டிருந்தாள்.

ஓரிரு முறைகள் அவனது காரில் மற்றவர்களோடு வெளியில் சென்று இருக்கிறாள். ‘அவளை அவன் கவனிக்கின்றானோ?’ என்பது போலெல்லாம் கூட அவளுக்குத் தோன்றும். ஆனால், கண்டுக் கொண்டதில்லை.

அதிகமாய் பேச்சுவார்த்தை இராத உறவு அவன். இப்போது எதற்காக வாயிலில் வந்து நிற்கின்றான்? என அவளுக்குப் புரியவில்லை. தனது உடைகளை அந்த கப்போர்டுகளில் இருந்து எடுக்க வந்திருப்பானாக இருக்கும்? என தனக்குள்ளே எண்ணியவளாக அவனிடம் கேள்விகள் எதையும் அவள் கேட்டாளில்லை.

பத்திருபது நிமிடங்கள் அவளது அறையின் வாயிலில் நின்றுக் கொண்டு இருந்தவன் எப்போது திரும்பச் சென்றான் என்பதை அவள் அறியாள்?

அவளுக்கு கணவன் வரவில்லை என்பதால் அது மற்றொரு விடியாத இரவாகி இருந்தது. பொட்டுத் தூக்கம் இல்லாதவளாய் இருந்தவள் காலை எழுந்து தனது கடமைகளை செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு இளைப்பாறவென மதிய நேரம் இருக்கின்றதே?

காலை பதினொன்றரை அளவில் விமலா சமையலறையில் நின்றுக் கொண்டு இருந்த போது விருட்டென அவளைக் கடந்து மாமியார் அறைக்குச் சென்றது யார்?

வேறு யார் வீரேந்திரன் தான்… ஆனால், அவன் இத்தனை நேரம் எங்கே இருந்தானாம்? இவள் மனதின் கேள்விக்கு அந்த அறையின் உள்ளே நிகழ்ந்துக் கொண்டிருந்த சம்பாசனைகள் பதிலளித்தன.

“என்ன இராத்திரி நீ எங்க இருந்த?” இது அவன் அம்மா.

“அம்மா இராத்திரி நானும் அண்ணனும் சேர்ந்துதான் வீட்டுக்கு வந்தோம்” இது அவன் தம்பி

“ஓ, ஆனா நீ வீட்டுக்கு வந்துட்ட தானே? இவன் எங்க இருந்தான் இவ்வளவு நேரம்?” அம்மா

“அண்ணன் காரிலேயே தூங்கிட்டான் மா” தம்பி.

இரவின் நிகழ்வுகளை அவர்கள் சொன்னவற்றோடு இணைத்துப் பார்க்க ஆரம்பிக்க மட முட்டாளாய் இருந்த அந்தப் பெண்ணின் மனதிற்குள் உலை போல திகுதிகுவென தீ பற்றி எரிந்தது அது அவளையே சுட்டும் பொசுக்கியது. அவள் மீள்வாளா?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here