இது இருளல்ல அது ஒளியல்ல_16_ஜான்சி

0
872

அத்தியாயம் 16

அன்று டாக்டரின் கோரிக்கையின் படி விமலாவிற்கு தெரியாத வண்ணம் வேலைக்குச் செல்வதாக வழக்கம் போல புறப்பட்டு வெளியே வந்திருந்த சிவாவுடன், உறவினர் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லி வெளியேறிய மாலதியும், சுகுமாரனும் இணைந்து பயணித்து டாக்டரின் வரவேற்பறையில் தாங்கள் சந்திக்க வேண்டிய நேரம் வரக் காத்திருந்தனர்.

விமலா ராஜாவை கவனித்துக் கொள்ள, சுமிதா சமைத்துக் கொண்டு இருந்தாள். ஒன்றரை வயது ராஜா தன் அத்தையை சிரிப்புக் காட்டி மயக்கிக் கொண்டு இருந்தான்.

“அத்த இது?” அவளது சற்று உப்பிய வயிற்றில் கரம் வைத்து கேள்வி கேட்டான்.

“இது பாப்பாமா”

“ஓ…” குனிந்து வயிற்றில் முத்தமிட்டான்… அவள் சிசுவுக்கு கிடைக்கும் முதல் முத்தம் எண்ணியவளின் கண்ணோரம் கரித்தது.

“பாப்பா… நான் தா அண்ணா” எதையோ சொல்லி அந்த குட்டிப் பையன் அத்தையின் வயிற்றை தடவினான். “என் செல்லம்” அண்ணன் மகனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள் விமலா.

மருத்துவமனை டாக்டர் அறை

“ஓ இவர்தான் உங்க மகனா?” டாக்டர் விசாரித்தார்.

“ஆமாங்க டாக்டர்”

“நான் எதற்காக இவரையும் அழைச்சேன்னா, பெத்தவங்களான உங்களை தவிர்த்தும் அடுத்த தலைமுறையில் இருக்கிறவங்களான இவங்க புரிதலும் உங்க மகளுடைய வாழ்க்கைக்கு இப்ப முக்கியமான தேவையாயிருக்கு”

“………”

“இப்போது இருக்கிற மனநிலையில் இருந்து உங்க மகளை நான் குணப்படுத்திடுவேன் அது பிரச்சனை இல்லை. இப்பவே கூட அவங்க கிட்ட சில மாற்றங்களை நீங்க கண்டு இருக்கலாம்”

“ஆமாங்க டாக்டர்” இது மாலதி.

“ஆனால், இப்போது நான் குணப்படுத்துவதோடு எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடாது என்பது தான் நிதர்சனம். அவங்களுடைய பிரச்சனையின் காரணமாக இருக்கிற அந்த குறிப்பிட்ட மனிதர்களுடன் அவங்க மறுபடி வாழ வேண்டிய சூழ்நிலை தொடர்ந்தால் அவங்க நிலைமை இப்ப இருப்பது போலவோ, இன்னும் மோசமாகவோ மாறலாம். ஏன், அவங்க உயிருக்கே கூட ஆபத்து வரலாம்…அதுதான் உண்மை. ஆக என்னுடைய மருத்துவம் தவிரவும் அவங்க மீண்டு வாழ உங்களோட மாரல் சப்போர்ட் இப்ப அவங்களுக்கு முக்கியமான தேவை.

“என் தங்கைக்கு அவளோட புகுந்த வீட்டில் பிரச்சனையா? என்னச் செய்யணும்னு சொல்லுங்க டாக்டர்” சிவா.

“இத்தனை மாதங்களில் அவ முகம் வாடி நாங்க பார்த்ததே இல்லையே டாக்டர்? அவ மாமியார் வீட்டில் பிரச்சனைனு எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க கவனிச்சு இருப்போம்” சுகுமாரன்.

“சார், நீங்க இந்த மேரேஜ் அவங்க விருப்பத்தை கேட்டுத்தான் செஞ்சு வச்சிருந்தீங்களா?”டாக்டரின் கேள்விக்கு சுகுமாரனின் தலைதாழ்ந்தது.

“நல்ல சம்பந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு கட்டாயப் படுத்தி தான் கட்டிக் கொடுத்தோம் டாக்டர், முதலில் அவளுக்கு விருப்பமில்லை. அப்புறம் அவ சந்தோஷமாதான் இருந்தா”குரல் தேய்ந்தது.

“அதாவது சந்தோஷமா காட்டிக் கிட்டா… இப்படியும் சொல்லலாம் இல்லீங்களா மா?” டாக்டரின் கேள்விக்கு ‘அப்படியும் இருக்குமோ?’மாலதி சிந்தித்தாள்.

“……”

“ஆமாம், உங்க பெண்ணுக்கு உங்களிடம் பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ளக் கூடாதென்று ஒரு பிடிவாதம். அது உங்களுடைய செயல்பாடு காரணமாக இருக்கலாம். இல்லை பிடிக்காமல் திருமணம் செய்ததால் வேண்டுமென்றே குறை சொல்கிறாள் என்று நீங்க எண்ணிக் கொள்வீங்க என்கிற மனதின் பயமாகக் கூட இருக்கலாம்”

‘உண்மைதானே?’ குற்ற உணர்ச்சியில் அமைதியாக இருந்தனர்.

“என்ன பிரச்சினை டாக்டர்” முதலில் தெளிந்த சிவா தான் கேள்வி கேட்டான், அவன் குரல் நைந்தே இருந்தது.

“ஆரம்பத்தில் இருந்தே உங்க தங்கை நிறைய மனப் போராட்டங்களை சந்தித்து, ஏதோ ஒரு கண்மண் தெரியாத நம்பிக்கையில் கடந்து வந்திருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்கு அப்புறம் அவங்களால் தாங்க முடியாத நிலைமை வரவும் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறாங்க. முதலில் ஆரம்பகால பிரச்சனைகளைச் சொல்லிடுறேன்”, என வீரேந்திரனின் செயல்பாடுகளை திருமண நாளிலிருந்து விமலா கர்ப்பமடையும் வரையிலான வரை சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.

“ஏன் டாக்டர்? எதுக்கு அவர் இப்படி நடந்துக்கணும்? எதுக்கு பொண்ணை மட்டம் தட்டணும்? ஐயோ மணிக்கணக்கா என் பொண்ணை பிறர் பார்வைக்கு விருந்தா நடு ரோட்டில் விட்டுருந்தானா அவன்?” சுகுமாரன் பொருமினார்.

“தங்கச்சி புருசன் பார்க்க ரொம்ப டீசண்ட் டாக்டர், நீங்க சொன்னது நம்பவே முடியலை. பொண்டாட்டியும், புருசனும் வெளியே போகிறப்ப எதுக்கு எப்பவும் மூணாவது ஆள்?”சிவா

“அந்த மனுசன் அப்ப சைக்கோவா?”அதிர்ச்சியாக மாலதி

“பொதுவாக பரிசோதனை செய்யாமலேயே கூட ஒருவரைக் குறித்துச் சொல்ல முடியாது. அப்படி சொல்வதும் தவறு எனினும் நான் சொல்லும் குறிப்புகள் எல்லாமே விமலாவின் மூலமாக எனக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து நான் அனுமானித்தவை என்பதை நீங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். சரியா?”

“சரிங்க டாக்டர்”

உங்கள் மருமகனின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலாகவே தன் மனைவி மீது சொல்லால், செயலால் தந்து மன விகாரத்தை வெளிக்காட்டி நோகடிப்பதாகவே இருந்திருக்கின்றது. இந்த சைக்கோத்தனம் மட்டுமல்லாமல் அவருக்கு உடல் ரீதியான குறைபாடுகள் காரணமாக இருப்பதாக அறிகின்றேன்.”

“உடல் ரீதியாகவா? என்ன பிரச்சனை டாக்டர்?”

“ஆண்மைக் குறைவு”

“என்னது?” மூவருமே அதிர்ச்சியாக அவரைப் பார்த்தனர்.

“என்ன டாக்டர் சொல்லுறீங்க நீங்க? என் பொண்ணு கர்ப்பமா இருக்குது, இந்த நேரம் மாப்பிள்ளைக்கு ஆண்மைக் குறைவுன்னு சொன்னா யார் நம்புவாங்க? என்னாலயே நம்ப முடியலியே?’

“அம்மா ஆண்மைக் குறைவு குறித்த பொத்தாம் பொதுவான சில கற்பிதங்கள் இருக்கின்றன. இங்கே infertility எனப்படும் ஆண் மலட்டுத்தன்மையும், impotent  எனப்படும் ஆண்மைக் குறைவும் ஒன்று போலவே கருதப் படுகின்றன.”

“……”

“மலட்டுத்தன்மை அல்லது infertility குறைபாட்டால் ஆண் தனது விந்தணுவின் குறைபாடுகளால் குழந்தையை கருவுறச் செய்யும் தன்மை இல்லாதவனாக இருப்பான். இந்த வகை ஆண்களுக்கு குழந்தைப் பெற இயலாத நிலை இருப்பினும் இவர்களால் தனது இணையோடு தாம்பத்திய வாழ்க்கையை நன்றாகவே வாழ முடியும். “

“……”

“ஆனால், ஆண்மை குறைவு impotent எனும் குறைப்பாடு உள்ள ஆடவனது விந்தணுக்களில் குறைபாடுகள் இராது. ஆனால், இந்த குறைபாடுள்ள ஆண்களால் பெண்ணோடு இயல்பான தாம்பத்திய வாழ்வை வாழ இயலாது.”

“……”

“தன்னுடைய குறை தெரிந்தே அவன் உங்கள் மகளை திருமணம் செய்து இருக்கிறான். உங்கள் மகள் மூலமாக குழந்தை உருவாகி விட்டால் போதும், அவனுடைய குறையானது உலகத்திற்கு தெரியாமல் மறைத்து விடலாம் என எண்ணி இருந்து இருக்கிறான். அவனுக்குத் தேவை உங்கள் மகள் மூலமாக தான் ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க ஒரு வாரிசு. அதே நேரம் மனைவி அவனது குறையை கண்டுக் கொள்ளக் கூடாதெனும் முன்னெச்சரிக்கையும் இருந்திருக்கின்றது. இந்தக் காரணங்களாலேயே அவன் வேண்டுமென்றே உங்களது மகளை செக்ஸிற்கு அலைகின்றவளாக உருவகித்து கிண்டல் செய்து இருக்கிறான்.”

“……”

“இப்படி அவன் விமலாவை தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதனால் அவள் அவனிடம் உடல் உறவு சார்பாக எதையும் பேச மாட்டாள், அவனிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள மாட்டாள், அதனால் அவனது குறைபாடு வெளிப்படாது என்பதான அவனது கணிப்பு ஓரளவிற்கு நிறைவேறியும் இருந்து இருக்கின்றது. இத்தனையும் செய்த அவன் பெரும் சுயநல குணமுடையவனாக இருந்ததால் தன்னுடைய செயல்பாடுகளால் விமலா அடையும் குழப்பங்கள், அவளது மனநிலை பாதிக்கப் படுவது குறித்து அவனுக்கு அக்கறை இல்லாது போனது.மனைவியை நேசிக்கும் கணவனால் இவ்வாறு நடந்துக் கொள்ள முடியாது. அவளை ஒரு பொருளாக, கருவியாக பாவிக்கும் மனிதன் மட்டுமே இத்தகைய புறக்கணிப்பையும், வெறுப்பையும் தன் மனைவியிடம் காட்டுவான்”

“……”

என்னவிருந்தாலும் எத்தனை கொடுமைப் படுத்தினாலும் பெண் சகித்துப் போய் தான் ஆக வேண்டும் எனும் எண்ணத்தில் அவள் கணவன் மட்டுமல்ல, அவனது குடும்பத்தினருமே விமலாவுடன் அவ்வாறு தான் இதுவரை நடந்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது ஊருக்கு ஒரு வேடம், உள்வீட்டில் மற்றொரு வேடம்.

தனது உடல்குறையை தாண்டியும் கூட உங்கள் மகளை கருவுறச் செய்வதற்கு அவனது திட்டமிடல் இருந்து இருக்கின்றது. தனது உடற் செயல்பாட்டை கூடுதலாக அவர்களது உறவு நிகழ்ந்திருந்த நாள் உங்கள் மகளின் கருவுறும் சுழற்சியின் நாளாக இருந்து இருக்கவும், உடனே கருவுற்று இருந்திருக்கிறாள். மற்ற படி அவர்களுக்குள் சாதாரணமான தாம்பத்திய வாழ்க்கை ஒன்றும் இருந்திருக்கவில்லை. உங்கள் பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதனால் பாதிக்கப் பட்டு இருக்கிறாள். விமலாவிற்கு தாம்பத்தியம் மீதான ஒவ்வாமை உணர்வு இருக்கின்றது என்பதையும் நான் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கின்றது.”

‘இன்னும் என்னென்ன வரப் போகின்றதோ?’ எனும் கலக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

 “உங்கள் மகளிடமே, “திருமணத்திற்கு முன்னதாக 10 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் தான் தன்னால் சில நாட்கள் உறவுக் கொள்ள முடிந்ததாக” விளையாட்டுப் போல சொல்லி இருந்து இருக்கிறார். அதை உங்கள் மகளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் உங்கள் மகளுக்கு இன்னமும் கூட அவள் அனுபவித்த துன்பங்களின் காரணம் தெரியாது அவளை தேற்றி வழி நடத்த வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கின்றது.”

“என்ன மாப்பிள்ளை குடிப்பாரா?” மூவரும் மறுபடி அதிர

“இதுகூட தெரியாதா? சுத்தம்…” எனக் கடுப்பாக பதிலளித்த டாக்டர் இன்னும் சில சம்பவங்களை பகிர்ந்துக் கொள்ள அதிர்ந்து அமர்ந்திருந்தனர்.

“குடிச்சுட்டு கீழே விழுந்து கிடக்கிறவன் துணியை என் பொண்ணு மாத்தணுமா?” சுகுமாரன் வெட்டவா? குத்தவா? எனும் மன நிலைக்கு வந்திருந்தார்.

“தினமும் குடிச்சுட்டு வருவாராமா? சண்டைப் போடுவாராமா? அப்படியா டாக்டர்? இந்தப் பொண்ணு ஒன்னும் கூட எங்க கிட்ட சொன்னதில்லை” மாலதியின் கண்ணீர் கண்டவர்…

“உங்கள் பெண்ணுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரச் செய்யுங்கள். அவளே உங்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வாள். புரிகிறதா?”

“ம்ம்”

“இப்ப நான் சொல்வதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், இத்தனையும் சகித்த போது வராத பிரச்சனை இப்போது ஏன் வந்தது அதை யோசிக்க வேண்டும். புரிகிறதா?”

“சொல்லுங்க டாக்டர்” சிவா

வீரேந்திரனின் உடல் நிலை பொருத்தவரையில் விமலா முதல் மாதத்திலேயே கருவுறாது இருந்தால், அதன் பின்னர் எப்போதும் கருவுற வாய்ப்பு இருந்திருக்காது இதுதான் உண்மை. முதலில் மனைவியின் தாய்மையில் மகிழ்ந்து இருந்த அவனது மனதை அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் குழப்பி இருந்திருக்கின்றனர்.

“அதெப்படி திருமணமான 16, 17 நாட்களில் கருவுற இயலும் என்பதுதான் அவர்களது கேள்வி?”

“அம்மாடியோ, இது அபாண்டம்” மாலதி.

“வழக்கமான மாமியார், நாத்தனார்தனத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த அவர்கள் விமலாவின் கணவனிடம் இப்படிச் சொல்லி இருந்திருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் இது இப்படி பேசினால் கணவன் மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் என எண்ணி இருக்கக் கூடும். ஆனால், தனது ஆண்மை குறைவு பிரச்சனை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்த வீரேந்திரனை பொறுத்தவரையில் அது நிஜமாகவே சந்தேகத்திற்கு உரிய ஒன்றாகி விட்டிருக்கின்றது.அதனால் அவள் தொடர்ந்த துன்பங்களை அடைந்து வந்திருக்கிறாள்.”

“……”

“விமலாவின் கணவனது சந்தேகம் தினமும் நேரம் தவறி வருவது, அதிகமாக குடிப்பது, அசிங்கமாக பேசுவது என வரையறை தாண்டி சென்றுக் கொண்டிருக்க, அவளை பரீட்சிக்கும் முகமாக தீபாவளி அன்று உங்கள் வீட்டிற்கு நீங்கள் எதிர்பாராத நேரம் வந்து விமலாவிற்கு யாருடனாவது தொடர்பு இருக்கின்றதா? என பரீட்சித்துப் பார்த்து இருக்கின்றான்.”

“அடக் கடவுளே”அன்றைய தின நிகழ்வுகள் அவர்கள் கண்முன் வலம் வந்தன, புரியாத பலவற்றின் பொருளும் கூட அவர்களுக்குப் புரிந்தது.

“தீபாவளி அன்று வந்து பரீட்சித்துப் பார்த்த அவனுக்கு அப்படியும் மனதிற்கு சமாதானம் கிட்டாமல் கடைசியாக அவன் செய்த விஷயம் தான் விமலாவிற்கு அரைகுறையாக புரிய வந்து, அவளை மனதளவில் உடைத்து முடமாக்கி விட்டிருந்து இருக்கிறது.”

“என்னச் செஞ்சான்___ அவன்?” சுகுமாரன் சில மரியாதையற்ற வார்த்தைகள உதிர்த்தார்.

“விமலாவின் கணவனுக்கு தான் மனைவியை விடவும் 11-12 வயது மூத்தவனாகவும், அழகற்றவனாகவும் இருப்பதான தாழ்வுணர்ச்சி இருந்திருக்க வேண்டும். அதனால் தன் மனைவியை சோதித்தறிய நள்ளிரவில் அவளறைக்கு தன்னை விட இளமையான தனது தம்பியை அனுப்பி வைத்து இருக்கிறான்”

அதற்கு மேலும் கூட அங்கே அமர முடியாமல் சிவா எழுந்து நின்று விட்டிருந்தான். மற்றவர்கள் கண்கள் இரத்த நிறம் கொண்டு இருந்தன. மாலதியின் விசும்பல் சத்தம் நிற்கவே இல்லை.

“அதன் பின்னர் அவர்கள் என்ன செய்வதாக இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், விமலா தன் கணவன் தனது தம்பியை தவறான முறையில் தன்னை அணுக அனுப்பி இருந்ததில் இருந்து பயந்து நடுங்கி இருந்து இருக்கிறாள். அவளது தனிமை உணர்வும், பயமும், ஆதரவற்ற நிலையும் அவளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு இருந்திருக்கின்றது. இப்போது உங்களுக்கு மகளின் பிரச்சனை புரிகின்றதா?”

“இதில் பாதிக்குப் பாதி, ஏன் முழுக்கவே எங்க பங்கு இருக்கிறதே? பணம் வசதி பார்த்தேன். குணம் பார்த்தேனா?” தலையிலடித்துக் கொண்டார் மாலதி.

“நான் அவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடறேன்” சுகுமாரன் கர்ஜித்தார்.

“ரொம்ப கோபப்படாதீங்க சார், நீங்க இப்ப இந்த சூழ் நிலையை எப்படி சமாளிக்கிறீங்க என்பது பொறுத்துதான் உங்க எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கிறது. யாரையோ கொன்னுட்டு உங்களுக்கு என்ன லாபம்? உங்க பொண்ணு என்னிடம் சொன்னது கால்வாசி கூட இருக்காது என்பது என் அனுமானம். இன்னும் அவள் பட்டத் துன்பங்களில் சொல்லாதது எத்தனையோ இருக்கும். உங்க பொண்ணு கிட்ட அன்பா, அரவணைப்பா பேசி அவங்க உங்களை நம்பும் விதமாக மாற்றுங்க. அவங்களுக்கு இப்ப உங்களோட அன்பும் அரவணைப்பும் தான் மிக முக்கியமான தேவை.”

“………”

“உங்கள் மகளின் கணவன் ஆண்மை குறைவுள்ளவன் என்றுச் சொன்னால் உங்கள் மகளுக்கு கெட்ட பெயர் ஆகும் என்று நினைத்தால் அதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் விளக்கம் சொல்ல தேவையில்லை. உண்மையை விளம்பரப் படுத்துவதை விடவும் மன நிம்மதிதான் உங்களுக்கு இப்போது மிகவும் தேவை.”

“சரிதானுங்க டாக்டர்”

“இன்னொரு விஷயமும் சொல்லி தரேன். இது அவங்க தரப்பில் ஏதேனும் சட்ட ரீதியாக உங்களை இதை வைத்து தாக்கினாங்கன்னா உங்களுக்கு உதவும். விமலாவின் திருமண தேதி 27 ஆகஸ்டு என்றாலும் கூட அவங்களோட மாதாந்திர சுழற்சி 21ம் தேதி நின்று இருப்பதால் அதை வைத்து தான் கருவின் வயதை கணக்கிடுவார்கள்.”

அவர்கள் முன்பாக டாக்டர் ஸ்டீஃபன் எடுத்து வைத்த விமலாவின் கருத்தரிப்பு ஆரம்ப நாளை குறிப்பிட்டிருந்த அட்டை இருந்தது. கருவின் ஆரம்ப நாளாக அதில் 21 ஆகஸ்டு தேதியும் இருந்தது.

“அவர்கள் சந்தேகப் பட்டு உருவாக்கிய பிரச்சனைக்கு மூலக் காரணம் இதுவாக கூட இருக்கலாம். அறிவியல் புரியாதவர்களுக்கு அதை விளக்கிச் சொல்லிக் கொண்டு இருக்க முடியாதே?”

“உண்மை டாக்டர்”இது சிவா.

“நீங்கள் இப்போது முன்னெடுக்க வேண்டியது உங்கள் மகளின், உடல் மற்றும் மன நலத்தை தான். உடனே, எந்த பிரச்சனையையும் ஆரம்பிக்காதீர்கள். முதலில் உங்கள் மகள் குழந்தைப் பெற்று நலமாக திரும்ப வேண்டும் என்பதை மட்டும் முன்னெடுங்கள். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் மகளிடம் கேட்டு செய்யுங்கள் சரிதானா?”

“நன்றி டாக்டர்” தங்கள் உணர்வுகளை அடக்க முயன்றவாறே அவரை நோக்கி கை கூப்பினர்.

மனதிற்குள் பேரலைகள் எழுந்துக் கொண்டு இருந்தாலும் கூட, மூவருக்குள்ளும் சில தீர்மானங்கள் ஏற்பட்டு இருந்தன.

தொடரும்

ஆசிரியர் குறிப்பு: மருத்துவருடனான உரையாடல்கள் வாசகர் புரிதலுக்காக நீட்டி விளக்கப் பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here