இது இருளல்ல அது ஒளியல்ல_17_ஜான்சி

0
1099

அத்தியாயம் 17

சுகுமாரனின் கோபத்தை உணர்ந்து தான் டாக்டர் ஸ்டீஃபன் சிவாவை அழைத்து இருக்க வேண்டும்.இத்தனை அதிர்ச்சியான செய்திகளை குறித்து ஜீரணிக்கவே அவர்களுக்கு சில மாதங்கள் ஆகும் போலவே? இதை விமலா எப்படி தாங்கிக் கொண்டாளோ? மூவரின் மனதும் இரணமாகி இருந்தது.முகம் களையிழந்து சோர்ந்து கிடந்தது.

மருத்துவமனையில் இருந்து பாதி நாள் வேலைக்குச் செல்வதாக இருந்த சிவா விடுப்பு எடுத்துக் கொண்டான். ஏனென்றால், அவன் பெற்றோர் இதே மன நிலையில் வீட்டுக்குச் சென்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படத்தான் செய்யும். விமலா அறியாதபடி இத்தனை விபரங்களையும் தங்களை தனியே அழைத்து விபரம் சொன்ன மருத்துவரின் உத்தமமான நோக்கம் அறிந்தும் அதற்கு மாறாக நடக்க விடக் கூடாது அல்லவா?

மதிய உணவை வெளியில் முடித்து விட்டு, மூவரும் அமர்ந்து பேசும் வண்ணம் கூட்டமில்லாத பார்க் ஒன்றில் வந்து அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

“மாட்டேன்னு சொன்னவளை கட்டி வச்சேனே? எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” மடேர் மடேரென்று தலையில் அடித்துக் கொண்டு அழுத அன்னையை அரவணைப்பதா, உலகை வெறுத்தவராக கோபத்தில் அமர்ந்திருக்கும் தகப்பனை சாந்தப் படுத்துவதா? விருப்பமில்லாத திருமணத்திற்கு தங்கையை சம்மதிக்க வைத்த தனது பேச்சிற்கு தன்னை நோவதா? எனப் புரியாமல் அவன் முழி பிதுங்கிப் போயிற்று.

குற்ற உணர்ச்சியின் அழுத்தத்தில் அழுது, புலம்பி என அவர்களுக்கு சம நிலைக்கு வரவே சில மணி நேரங்கள் பிடித்தன. முகம் கழுவி துடைத்து அமர்ந்து மெதுவாக பேசலாகினர்.

“நாம வசதி குறைவா இருக்கிறவங்க, அவங்க என்னச் செஞ்சாலும் தாங்கிக்குவோம், பொண்ணை அவங்க கிட்ட விட்டுக் கொடுத்துருவோம்னு நம்பிருக்காங்க” சிவா முறுமுறுத்தான்.

“அந்தாளுங்க பேச்ச பார்த்தியா மவனே? யாராவது இவங்க இப்படிப்பட்டவங்கன்னு சொன்னா நம்மளை நம்புவாங்களாடா? வாய் முழுக்க இனிப்பு, மனசு முழுக்க வஞ்சகம்” பொருமினார் மாலதி.

“இப்ப இருக்கிற பிரச்சனையில நாம ஏதாவது செய்யப் போக அவங்க நம்ம விமலாவைப் பத்தி எதையாவது சொல்லி நாறடிக்க கூட யோசிக்க மாட்டாங்கமா? அவங்கல்லாம் பாம்பு மாதிரி விஷங்கள்”இந்தப் பிரச்சனைகள் என்னவாகவெல்லாம் மாற வாய்ப்புகள் உள்ளன. இதன் பின்னே என்ன வரும் என்பதை யோசித்து தகப்பனை சமாதானப் படுத்தி இருந்தான். இப்போது குடும்பம் தடுமாறும் சூழ்நிலையில் அவன் எல்லோரையும், எல்லாவற்றையும் தாங்கி முடிவெடுக்க வேண்டி இருந்தது.

“பிரச்சனைகள் வரும் தான், ஆனா என்ன ஆனாலும் நம்ம பாப்பாவை நாம விட்டுக் கொடுக்க முடியாதுமா. அவ உயிரை விட எதுவுமே பெரிசில்லை.”

தன்னால் தானோ? எனும் குற்ற உணர்ச்சிகளின் அழுத்தத்தில் சுகுமாரன் அழுதுக் கொண்டு இருக்க அவரது முதுகு குலுங்கியது.

“இதில் உங்க தவறு எதுவும் இல்லைப்பா, வருத்திக்காதீங்க…” தகப்பனின் முதுகை ஆதூரமாய் தடவி விட்டான்.

“அந்தாள் உடல் குறையை மறைச்சு திருமணம் செய்தது ரொம்ப பெரிய தப்பு. ஆனால், அப்படியே அவன் கிட்ட குறைபாடு இருந்தால் அவன் அதை சரிப்படுத்த பார்த்திருக்கணும், இல்லைனா குறைந்த பட்சம் மனைவியை அன்பாகவாவது நடத்திருக்கணும்.அவன் குறைபாடுக்கு நம்ம வீட்டுப் பொண்ணு பிணையா?”சிவா சொல்ல…

“இவன் கிட்ட குறையை வச்சுக்கிட்டு, நம்ம பொண்ணை மட்டம் தட்டிப் பேசி பேசி உயிரை குறைச்சிருக்கான்… இவன் உருப்படுவானா? வெளங்காதவன்”மாலதி புலம்பினார்.

இன்னும் அரை மணி நேரங்களாவது மனம் ஆறுதல் அடையும் வரையிலும் புலம்பிக் கொண்டனர்.

“இப்ப எதுவானாலும் முதல்ல நமக்கு நம்ம விமலாவோட மன நிம்மதி. அவ குழந்தை பெத்து பொழைச்சு சரியாகி வந்ததும் நம்ம என்னச் செய்யலாம்னு முடிவு செஞ்சுக்குவோம் புரியுதா அப்பா?”

பதில் சொல்லாமல் இருந்தவரை மறுபடி சமாதானப் படுத்தினான். “இப்ப நீங்க கோபப்பட்டு அவங்களை போய் வெட்டிட்டே வந்தாலும் கூட நம்ம பாப்பா பேரை தான்பா கெடுத்து பேசுவானுங்க. உங்க கோபத்தை கட்டுக்குள்ள வைங்கப்பா. இவனுங்க இதை மீறியும் எதையாவது செய்தா அப்ப நாம என்னச் செய்யலாம்னு பார்த்துக்கலாம்”சிவா சொல்ல மாலதியும் கணவனிடம் அதையே வலியுறுத்தினார்.

“முதலில் இந்தப் பொண்ணு நம்மக் கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்துக்கிற மாதிரி அவ உடல் நலத்தை நாம கவனிச்சு நல்லா ஆக்கணும். அதற்குப் பிறகுதான் எல்லாமே?” மாலதியின் உறுதியான பேச்சில் எழுந்து வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆரம்பித்த நாடகத்தை சரியே முடிக்கவென மாலதியும், சுகுமாரனும் முன்னதாக வீட்டில் வர தனது அலுவலகம் முடிந்து திரும்பும் நேரத்தில் சிவாவும் வந்துச் சேர்ந்தான்.

அன்று இரவு வீரேந்திரனிடம் இருந்து போன் அழைப்பு வராதிருக்க, விமலா நிம்மதியாக தூங்கி எழுந்தாள். அடுத்த நாள் தயங்கி தயங்கி அந்த போனை நோக்கி நடந்தவளை இவர்கள் பார்த்திருந்தனர்.

‘இரவு போன் கால் வராததால் தான் அவனுக்கு அழைத்துப் பேச வேண்டுமென எதிர்பார்ப்பானோ?’எனும் பயம் அவளிடம் இருந்தது. போன் ரிசீவரை காதில் வைத்துப் பார்த்தால் அதில் எதுவுமே சப்தமில்லை.

“அண்ணே போன் டெட்(dead)டா இருக்கு, சத்தமே வரலைணா” வந்தது முதலாக பேசாது இருந்தவள் அழைக்கவும் அருகில் போய் நின்றவன் ஆச்சரியமாக “அப்படியா மா?” என அவளுக்கு பதில் கொடுத்தவனாக பரீட்சித்துப் பார்த்தான்.

“போன் சரியில்லை போலிருக்கே, சரி நான் ஆஃபீஸ் போகிறப்ப கம்ப்ளேயின்ட் கொடுத்திடறேன். இப்ப எதுவும் அவசரமா பேசணுமா விமலா?”

“இல்லையே” சொன்னவள் அமைதியாகச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். “அத்த” என்றவனாக ராஜாவும் அவளிடம் விளையாடத் தொடங்க அவளுக்கு உலகம் மறந்து போனது.

ஒரு வாரம் கழிந்திருந்தது “மார்க்கெட்ல புதுசா இரண்டு பாத்திரங்கள் வாங்கினேனா அதில் ஒன்னு உனக்காக வச்சிருக்கிறேன் பார்த்துக்க. நீ உன் வீட்டுக்குப் போறப்ப இதை மறக்காம பேக் செஞ்சு கொண்டு போ என்ன?” என தினமும் புதிது புதிதாக தனக்காக எதையாவது வாங்கி அடுக்கும் அம்மா இத்தனை நாட்களில் தனது புகுந்த வீட்டிற்கு தான் திரும்பச் செல்ல வேண்டியது குறித்த எந்த பேச்சையும் பேசாமல் இருப்பது விமலாவிற்கு உரைத்தது.

‘சரியில்லாது போன போன் சரியாக ஒரு வார காலமா எடுக்கும்?’ போன் வயர் பின் சுவற்றில் வெட்டுப் பட்டு தொங்குவதை அவள் கவனித்து இருந்தாள். அவள் வீட்டினர் அவளை புரிந்துக் கொண்டு விட்டார்களா? இது எல்லாம் அவளுக்காகவா?’ தொடர்ந்த மாத்திரைகளில் புத்தித் தெளிவு வந்திருக்க, குடும்பத்தினரின் துணையும் தனக்கு இருக்கும் என புரிய வர விமலா தன் இயல்புக்கு திரும்பலானாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் தாயும் தானும் இருக்கும் நேரம் தனக்கு நிகழ்ந்தவற்றை அவள் சொல்லி அழ, அதுவரை தனியராக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மாலதியும் ஆறுதல் படுத்தியவாறு அழ ஆரம்பித்தார்.

வெளியில் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதென கதவை அடைத்துக் கொண்டு அவர்கள் கதறிய கதறல் சாவு வீட்டிற்கு குறைவில்லாமல் இருந்தது. அழுகை மிகப்பெரிய மருந்து, அழுது விட்டால் புதிய பாதைகளை கண்டுக் கொள்ள கண்கள் தெளிவு பெறும். அங்கே சற்று தெளிவுகள் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பெருகிக் கொண்டு இருந்தன.

இங்கே இவர்கள் தெளிவாகிக் கொண்டு இருக்க, தங்களுக்கு வாய்த்த அடிமை வீட்டினர் குறித்த கலக்கத்தில் அவளது புகுந்த வீட்டினர் இருந்தனர். கடந்த நாட்களில் ஒரு நாள் மாலதி அவர்களுக்கு அழைத்து,

“எங்க வீட்டில் போன் வேலை செய்யலிங்க சம்மந்தி, வெளியே PCO போய் போன் செய்கிற அளவுக்கு நடக்க விமலாவுக்கு தெம்பு இல்லைங்க, எப்ப பாரு களைப்பா படுத்தே இருக்கிறா. கொஞ்ச நாளில் நல்லா ஆனதும் அவளை அழைச்சுட்டு வந்து விட்டுடறோம்”என அவர்களுக்கு அழைத்து சொல்லி விட்டிருந்தார்.

அடிமை மருமகள் தங்களது போன் அழைப்பை ஏற்காமலும், தானாக முன் வந்து அழைக்காமலும் இருக்க தாங்கள் செய்தவை எல்லாம் திரும்ப வந்து விடுமோவென அவர்களை முதலில் பயம் நடுக்க ஆரம்பித்தது.

அடுத்து என்ன நடப்பதாக இருந்தாலும் அது மகளின் முடிவாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். அதே நேரம் ஏற்கெனவே நிறைய சேதப்பட்டு விட்ட நிலையில், இன்னும் இவர்கள் பங்கிற்கு பெண்ணை அவசரப் படுத்தி அந்த முடிவை எடுக்க வைக்க அவர்கள் எண்ணவில்லை. முதலில் அவள் முழுவதும் தேறி வரட்டுமே?

அவர்களிடையே தொலைபேசி பேச்சுக்கள் முற்றும் இல்லை என்பதாலோ தனது வேட்கைக்கான வேட்டை இருப்பது ஊரில் என்பதாலோ அன்று நள்ளிரவில் வீரேந்திரன் அதிசயமாக அவர்கள் வீட்டில் வந்து நின்றான். அவனோடு கூட நான்கு தெரு பொறுக்கிகள். எதற்கு அல்லது யாருக்குப் பயந்து அவர்களை துணைக்கு அழைத்து வந்தானோ? அவனுக்கே வெளிச்சம்.

தூங்கிக் கொண்டு வந்த மகள் கணவனுடன் ஹாலில் பேசிக் கொண்டு இருக்க, பெற்றவர்கள் வெளியே சென்று அமர்ந்துக் கொண்டனர். அந்த பொறுக்கிகள் படுக்க இடம் செய்ய தங்களது அறையை காலி செய்ய ஆரம்பித்தான் சிவா.

“அச்சச்சோ, அழாதடா ஜோ ஜோ ராஜா”பாதி தூக்கத்தில் மகனை ராராட்டிக் கொண்டே வந்தவளை விமலா தடுத்தாள். “நீங்க உள்ளேயே போய் படுங்க அண்ணி”அண்ணனிடம், “எதுக்குன்னா தூக்கத்தை கெடுத்துக்குற? நீ போய் தூங்கு.” என்றாள். சிவா பெற்றோர்களுடன் வெளியே சென்று அமர்ந்துக் கொண்டான்.

வீரேந்திரனிடம்,”உங்க ப்ரெண்ட்ஸ் தூங்கணும்னா மாடியில் என் அறையில் தூங்கட்டும்ங்க, நாம இங்கே உட்கார்ந்து பேசிட்டு இருக்கலாம்” என்றாள்.

வீரேந்திரனுக்கு விமலாவின் பேச்சு எரிச்சல் மூட்டியது, எனினும் தனது ஆயத்தங்களை வீண் செய்வானேன்? “இங்கே பாரு விமலா, உனக்கு இந்த ஊரில், அதுவும் இதே தெருவில் எத்தனை வீடு வாங்கணும்னு இருந்தாலும் சொல்லு. என்னால வாங்க முடியும். இதோ பாரு தனது லெதர் ஜெர்கின்னை உட்பக்கம் திறந்துக் காட்ட அங்கே பணக்கற்றைகள் இருந்தன.

“இங்க பாரு, ஒரு இலட்சம் வச்சிருக்கிறேன். நீ இப்பச் சொல்லு இங்கே நாலு வீடு வாங்கிடறேன்?”அவன் பேசிய அந்த தன்மையான தொனி அவன் அவளை படுக்கையறையில் சிதைத்து நொறுக்கும் முன்பாக நரி போல சாமார்த்தியமாக பேசி மயக்குகின்ற உத்தி என்பதை அவளால் உணர முடிந்தது.

‘இதற்கு மேலுமா?’ அவள் மனம் கேட்டது. அவனது பேச்சுகளுக்கு அவள் உரிய பதில்கள் கொடுத்தாலும் கூட, அவனது பசப்புகளுக்கு அவள் ஏமாறவில்லை. அவனோடு அவள் தனியறை செல்லவே இல்லை, பலியாடாகவும் இல்லை. ஆத்திரத்தோடு புறப்பட்டுச் சென்றவன் அதன் பின்னர் செய்தவை எல்லாம் வித விதமான பிரச்சனைகளும் குடைச்சல்களுமே.

ஏற்கெனவே தனது ஜாதிச் சங்க பதவியை மன உளைச்சல் காரணமாக ஒழுங்காக செய்ய இயலாமல் இருந்த சுகுமாரன் “உன் மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி விடப்பா” என சங்கத்தில் இருந்தவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அறிவுரைகள் சொல்லிச் செல்ல ஒரு கட்டத்தில் தன் உடல் நிலையை காரணமாகச் சொல்லி தனது பொறுப்பில் இருந்து விலகினார்.

தினம் வீட்டிற்கு யாராவது ஒருவர் வருவதும், கணவன் வீட்டிற்கு திரும்பச் செல்லும் படி அறிவுறுத்துவதுமாக ஆரம்பித்தனர். தான் செய்து வைத்த திருமணத்தை வெற்றிகரமாக மாற்றியே தீருவேன் என வீறு கொண்ட சுமதி விமலாவின் மாமியார் வீட்டினர் அவளுக்கு எதிராகச் சொன்ன அத்தனை அபாண்டங்களையும் வந்து இங்கே போட்டுடைக்க அதில் விமலா அடங்கா பிடாரியாகவும், ஆஸ்துமா முற்றிய நோயாளியாகவும், கணவனுக்கு உணவு கூட கொடுக்காத பொல்லாதவளாகவும் இன்னும் என்னென்னவாகவும் சித்தரிக்கப் பட்டு இருந்தாள்.

இவர்கள் யாரிடமும் எதையும் சொல்லாமலும் கூட ஊரெங்கிலும் விமலாவைக் குறித்த கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. அத்தனையையும் குடும்பமாக நின்று கடந்து வந்துக் கொண்டு இருந்தனர். பொறுமை மீற மாலதியும், சுகுமாரனும் கூட அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கூறி பதிலடி கொடுக்க வேண்டி இருந்தது.

வீட்டில் அமைதியற்ற சூழ் நிலை இருக்க, ராஜா தான் அந்த புயலில் அனைவருக்கும் தென்றலாக இருந்தான்.

விமலாவின் வயிற்றின் கரு தலை தான் இது என அனுமானிக்கும் வண்ணம் வயிற்றினுள்ளே உந்திக் கொண்டு இருப்பது தெரியும் படி அடிக்கடி ஆக, அது குறித்து அவர்கள் மருத்துவரிடம் கேட்டனர். அவளது மன பாதிப்புகள் காரணமாகவே அதுவும் நிகழ்கின்றது. உள்ளே இருக்கின்ற குழந்தைக்கு கூட அதனால் பாதிப்பு எனவும் அவர்கள் சற்று பயந்து தான் போனார்கள். எத்தனை தான் தாங்குவது?

விமலாவின் தகப்பன் வீட்டு சொந்தத்தினர் “குடும்பம்னா பிரச்சனை வராமலா இருக்கும். நல்ல வாழ்ந்த பிள்ளையை வாழ விடாம அழைச்சுட்டு வந்து வீட்டுல வச்சிருக்கிறான், அறிவில்லாதவன்” என அவர்களை தூற்றியது. தாய் வழிச் சொந்தங்களோ “பெரிய பணக்காரன்னு தானே சொந்தத்தை மதிக்காம அசலில் கட்டிக் கொடுத்தான், நல்லா அனுபவிக்கட்டும்”, என மகிழ்ச்சிக் கொண்டது. ஒருவர் வீழ்ச்சியில் இத்தனை பேருக்கு மகிழ்ச்சியா?

“வீரேந்திரன் மாதிரி ஒரு குணசாலியை ஊர் உலகத்திலேயே பார்க்க முடியாது தெரியுமா? இப்ப அவன் குடிச்சு குடிச்சு வம்பா போறான். இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் ஆணுங்க வாழ்க்கையை அணு அணுவா சாகடிச்சுருவாங்க” அவனது நண்பன் ஒருவன் இவர்கள் வாசலில் வந்து சொல்லி தூற்றிவிட்டுப் போனான். இன்னும் அவர்கள் பார்த்தது கொஞ்ச நஞ்சமல்ல.

இத்தனை மன அழுத்தங்களில் விமலாவின் தொடர் இடுப்பு வலியோடு கூட வயிற்று வலியும் சேர்ந்துக் கொள்ள இரு முறைகள் உயர் இரத்த அழுத்ததின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு ஒவ்வொரு வாரம் தங்கி சிகிச்சைப் பெற்றும் திரும்பி இருந்தாள்.

கடந்த சில மாதங்களில் அவளது வாழ்க்கையில் நிகழ்ந்த எதையுமே அவளால் ஜீரணிக்க முடியவில்லை. தனியே இருக்கும் வேளைகளில் எல்லாம் அழுதே கரைந்தாள்.

“நான் என்ன செய்தேன்? எனக்கு ஏன் இப்படி?” எனும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கக் கேட்க கண்ணீர் வற்றாத ஊற்றாக பொழிந்துக் கொண்டே இருக்கும். அந்த செல்வாக்கான ஒரு குடும்பத்தை எதிர்த்த விதத்தில் இவர்கள் ஊரும், உறவுகளும், உற்றார்களும் அனைவரையும் எதிர்க்கும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தனர். ஊரார் பார்வையில் வீரேந்திரனின் குடும்பத்தினர்கள் நல்லவர்கள்.

பிறரது பிரச்சனைகளை அறிந்துக் கொள்ளாமலே, அல்லது தனக்குத் தோன்றிய விதத்தில் பிறர் பிரச்சனைகளை அனுமானித்து அதற்கு நிறம் கொடுத்து பிறரை இழிப்பது பற்பல காலமாக உலகத்தில் நடைபெறுவது தானே?

இத்தனை போராட்டங்களுக்கு நடுவில் அந்தக் குடும்பத்தினர் வீட்டிற்குள்ளாக சிறிய அளவில் வளை பூட்டினர்.

‘எத்தனை விமரிசையாக நடக்க வேண்டியது?’எண்ணிய போதே நெஞ்சில் இரத்தம் வடிந்ததை அவர்கள் விமலாவிற்கு தெரியாமல் மறைக்க வேண்டி இருந்தது. விமலாவும் தன் குடும்பத்தினருக்கு மனதின் வலியை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள்.

சில நாட்கள் கழிந்த பின்னர் விமலா மறுபடி தனது கால்கள் வீங்கி, உடல் பாகங்கள் எல்லாம் தண்ணீர் போட்டு வீங்கி இருக்க, கடும் வயிற்று வலியில் துடிக்க high bp உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக அட்மிட் ஆகி இருந்தாள்.

இம்முறை கடந்த இரு நாட்களாக போராடியும் அவளது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதாக இல்லை. சோனோகிராஃபியில் காலை முதலாக அவளது உடல் நிலையோடு போராடிக் கொண்டு இருந்த அந்த மருத்துவர் இரவு பதினோரு மணிக்கு வந்துப் பார்க்கையில் அவளின் வலியும், இரத்த அழுத்தமும் கட்டுக்கடங்காமல் இருக்க எதையும் செய்ய முடியாத சலிப்பில் சலைனை எடுத்து தூரப் போட்டார்.

“நாளைக்கு உங்க பெண்ணிற்கு டெலிவரி, தயாராக இருங்கள்”சொல்லியவர் விறுவிறுவெனச் சென்று விட்டார்.

“ஐயையோ, இன்னும் கொடுத்த நாள் முடிய இன்னும் மூணு வாரம் இருக்கே” மாலதி கண்முன் வந்த அத்தனை தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்து மகளுக்கு விபூதி பூசி இடையறாது பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்.

அடுத்த நாள் காலை ஒன்பதரை மணி பிரசவ அறைக்கு நடந்துச் சென்றவளை நார்மல் டெலிவரிக்கான அறைக்கு அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த அறை ஒருவேளை சிசேரியன் செய்ய வேண்டி இருக்குமானால் தேவைப்படலாம் எனும் அவசரத்தில் தயார் செய்யப் பட்டுக் கொண்டு இருந்தது. குழந்தை பிறந்ததும் வர வேண்டிய குழந்தை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தை என்பதால் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படலாம் என்பதால் வந்த முன்னெச்சரிக்கை.

முதலில் இரவு வந்து ஆபரேஷன் குறித்து சொல்லிச் சென்ற ஆண் மருத்துவர் உள்ளே சென்றிருக்க, மற்றொரு பெண் மருத்துவர் மாலதியை தனியே அழைத்து “தாய்க்கும் பிள்ளைக்கும் இருவர் உயிருக்குமே இப்போது எங்களால் உத்தரவாதம் தர இயலாது” தோளைத் தட்டிச் சொல்லி சென்று விட மாலதி உள்ளம் வெடித்து அழுதவராக கடவுளின் பாதத்தை சரணடைந்தார்.

ஆளுக்கொரு பக்கம் நிற்க உள்ளே இருந்து அழுகை, கதறல்கள் கேட்டுக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் வீறிட்டதோடு சப்தம் நின்றிருந்தது.

மயக்கம் தெளிந்து கண் விழித்தவளுக்கு மணி காலை 10:51ஐ காண்பித்தது. “ஆண் குழந்தை” நர்ஸ் அருகில் வந்து சொல்லிச் சென்றாள்.

“மணி 10:51ற்கு தானே?” பலவீனமாய் கேள்வி கேட்டாள்.

“இல்லை 10:41ற்கு உன் மகன் பிறந்தான்.”’அப்படி என்றால் பத்து நிமிடங்களாகவா மயக்கத்தில் இருந்தேன்?’ அத்தனை வலியிலும் விமலாவின் மூளை கணக்கிட்டது.

உடல் வலி அடித்துப் போட்டாற் போல இருக்க, பிரசவத்திற்காக கிழித்து விட்டு பின்னர் தைக்கப் பட்டிருந்த அந்த பத்து தையல்கள் இன்னும் அதிகமாய் வேதனையாக இருந்தன. அந்த சாய்வு இருக்கையில் கால்களை அகன்று இருக்கும் விதத்தில் அவளுக்கு வசதியாக இல்லை. கால்களை நீட்டி, முதுகு சமதளத்தில் கிடத்தி நீண்ட நெடிய உறக்கம் உறங்கி எழ வேண்டும் உடல் கெஞ்சியது. விண் விண்னென் நாணேற்றியது போல ஏதோ போல இருந்தது.

சுற்றிலும் ஏதோ பரபரப்பாக நடந்ததே அன்றி அவளை யாரும் கண்டுக் கொள்ளாதது போல அவளுக்கொரு தோற்றம்.

“என்னை பெட்டுக்கு எப்ப அழைச்சுட்டு போவாங்க சிஸ்டர்?”

“இதோ இப்ப போயிடலாம்” அவளது இரத்த அழுத்தம் சோதிக்கப் பட்டது …

“சிஸ்டர் பிபி 150/ …” என ஒருவர் மற்றவரிடம் எதையோ சொன்னார் அதெல்லாம் அவள் காதுக்குள் விழவில்லை. சற்று தொலைவில் பார்வைக்குள்ளாக அந்த சதுர ட்ரே கண்ணில் பட்டது.

அந்த ட்ரேக்குள்ளே ஒரு குழந்தை வெள்ளை வெளேரென காலை அசைத்த வண்ணம் படுத்து இருந்தது. அதற்கு மேலே ஒரு நைட் லேம்ப் போன்ற ஒன்று மூலம் வெளிச்சம் பாய்ச்சப் பட்டுக் கொண்டு இருந்தது. ‘ஓ உடல் வெப்பத்திற்காகவா?’யோசித்தவளின் கைகளில் நர்ஸ் கொண்டு வந்து தந்த கலர் கலரான பத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள் கொடுக்கப் பட்டன விழுங்கி வைத்தாள்.

மறுபடி ஓரிரு முறைகள் அவளது இரத்த அழுத்தம் சோதிக்கப் பட்ட பின்னரே அவளை படுக்கைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை சில நாட்கள் இன்குபேட்டரில் வைக்க வேண்டுமென சொல்ல குழந்தையோடு மருத்துவமனைக்கு மாலதி சென்றார்.

குழந்தை பிறந்தும், குழந்தையை பார்க்க முடியாத சூழல் விமலாவின் உடல் நிலை சரியாக மூன்று நாள் எடுக்க அவள் உடனே குழந்தை இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.

இப்போது இன்குபேடரில் குழந்தையும், குழந்தை மருத்துவமனையில் ஒரு படுக்கை விமலாவிற்கு ஒதுக்கப் பட்டு இருக்க அவள் குழந்தைக்கு பாலூட்ட குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒரு முறை உள்ளே அனுமதிக்கப் பட்டாள்.

அந்த புதிதாய் வந்த பத்து தையல்களால் அமருகையில் அவள் உயிர் போய் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தையை டிஸ்சார்ஜ் செய்வார்கல் என எண்ணிய நாளன்று குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் என பதில் வர குடும்பத்தினர் மனம் நொந்து போனார்கள். விமலாவின் அழுகை தொடர்ந்தது.

அதுவரையில் வீரேந்திரனின் குடும்பத்தினருக்கு குழந்தை பிறந்தது குறித்த தகவலை கொடுக்காமல் இருந்தவர்கள் ‘ஒருவேளை குழந்தைக்கு என்னவும் ஆகிவிடுமோ?’எனும் அச்சத்தில் தகவல் விடுத்தார்கள்.

இரவு ஒன்றரை மணி சற்று முன்னர் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த விமலாவின் அருகில் வந்து நின்றாள் நர்ஸ்.

“கேட்டில குடிச்சுட்டு வந்து ஒரு ஆள் நிக்கிறார்மா. உன் புருசனாம், உன் புள்ளையை பார்க்கணுமாம். அட்மிட்டா இருக்கிறவங்களை பார்க்க வர்ற நேரமாம்மா இது? அவரை உள்ள விடணுமா? வேண்டாமா? நீ சொன்னா நான் விடறேன்.” சலித்துக் கொண்டாள் நர்ஸ்.

‘குழந்தை பிழைக்குமோ என்னமோ? அவன் பார்க்க வேண்டுமென்றால் பார்த்து விட்டு போகட்டுமே’ எனும் நினைவில் “பார்க்க விடுங்க நர்ஸ்”அனுமதித்தாள்.

நோய் தொற்றி விடும் என்பதால் இன்குபேடர் அறைக்குள் எல்லோரையும் வர விட மாட்டார்கள், முக்கியமாக கழுத்து முட்ட குடித்து வந்திருப்பவனை எப்படி அனுமதிப்பது? வேறு வழியில்லாமல் அந்த மனிதனை நர்ஸ் உள்ளே அனுமதித்தாள்.

அந்த சில்லிட்ட அறையில் இடுப்பளவு உயர மருத்துவ உபகரணத்தில் இரண்டு கிலோவிற்கும் சிறியதான குட்டியாய் ஒரு உருவம் தூங்கிக் கொண்டு இருந்தது. அதனை பார்த்தவன் உறைந்தான்.

“ இப்படில்லாம் குடிச்சுட்டு ஹாஸ்பிடல் வரக்கூடாது உங்களுக்குப் புரியுதா?”

நர்ஸின் பேச்சை அவன் எங்கே கேட்டான்? கேட்டின் வெளியே சென்று ஷீவை அணிய இருந்தவன் மறுபடி ஷீவை உதறி அடைக்கப் படாத அந்த கேட்டை தாண்டி உள்ளே சென்று இன்குபேடரை எட்டிப் பார்த்து வந்தான். முகமெல்லாம் பிரகாசம்…

இம்முறை வெளியே சென்றவன் அங்கே தன்னுடன் வந்திருந்தவர்களிடம் கத்திக் கத்தி உற்சாகமாய் சொல்லலானான்.

“குழந்தை அப்படியே அச்சு அசலா என்னை மாதிரியே பொறந்திருக்கான், அவன் என் குழந்தை, அவன் என் குழந்தை, அவன் என் குழந்தை”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here