இது இருளல்ல அது ஒளியல்ல_18_ஜான்சி

0
1213

அத்தியாயம் 18

அது குழந்தைகள் மருத்துவமனையின் வார்டு, அதில் இன்குபேடரில் இருக்கும் தன் குழந்தைக்கு பாலூட்ட வசதிக்காக இவளுக்கென்று ஒரு படுக்கை ஒதுக்கப் பட்டிருந்தது. இரண்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என அவள் குழந்தைக்கு பாலூட்டச் செல்ல வேண்டி இருந்தது. அதனால், அவளுக்கு சரியான தூக்கம் என்பது இல்லை.

அனைவரும் பயந்தது போலல்லாமல் விமலாவின் குழந்தையின் உடல் நிலை நலமாக ஆரம்பித்தது. நோய் சற்றாக குறைந்துக் கொண்டே வந்தாலும் தாய்ப்பால் குடிப்பதில் இருந்து பலவற்றிலும் குழந்தைக்கு சில பிரச்சனை இருந்தன.

அவளது பிரசவ நேர பெண்ணுறுப்புத் தையல்கள் காரணமாக சாதாரணமாக எழுந்து அமர முடியாத நிலையில் இருந்தாள். எனினும், இன்குபேடர் அறைக்குச் சென்று, குழந்தைக்கு பாலூட்ட அவள் வெகு நேரம் அமர வேண்டி இருந்தது. அமரும் போதும், எழும் போதும் வலியால் மிகவும் துடிதுடித்துப் போவாள்.

ஏற்கெனவே, அவளுக்கு இருந்த மன அழுத்தங்கள் ஒரு பக்கம், தற்போதைய சூழலின் காரணமாக உடல் மற்றும் மன வேதனைகள் மறுபக்கம் என அவளுக்கு மறுபடியும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கின.

அன்று மதிய வேளையில் மகளுக்கு உணவை கொடுத்து விட்டு அந்த கட்டிலின் கீழே விரிப்பை விரித்து மாலதி சற்றே அயர்ந்து தூங்கினார். விமலா சற்று முன்பாக உண்ணும் போது ஒரு வாகாக தனது கால்களை அமைத்துக் கொண்டு அமர முயன்று வெற்றிக் கண்டிருந்ததால், உண்ட பின்னரும் சற்று நேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தாள். குழந்தைக்கு பாலூட்டச் செல்ல இன்னும் நேரமும் இருந்தது.

அருகில் இருந்த சீப்பை எடுத்து தலையை வார முயன்றாள். அப்போதுதான் குறைந்த பட்சம் ஐம்பது பேர் தனது தலைக்குள்ளாக அமர்ந்து இடைவிடாது பேசினால் என்னவாக தோன்றுமோ அது போல உணர்ந்தாள். தன்னில் தன்னைத் தாண்டிய, தனது கட்டுப் பாட்டை மீறிய அந்த வித்தியாசத்தை அவளால் உணர முடிந்தது.

அதனினின்று தப்பித்துப் போக முயன்றாள் முடியவில்லையே? தலையை உதறிப் பார்த்தாள், தடவிப் பார்த்தாள் என்னென்னமோ செய்துப் பார்த்தாள் அவளால் தன் மண்டைக்குள்ளான அந்த இரைச்சல் சப்தத்தை தாண்டி ஜெயிக்க முடியவில்லை.

அந்த இரைச்சல் அவளை கடித்து விழுங்க காத்திருந்தது. அது அவளை இருட்டிற்குள் அமிழ்த்தியது. இனி நாம் அவ்வளவுதான், மீளவே போவதில்லை என அவள் அந்த தருணத்தில் முடிவு செய்துக் கொண்டாள். தாங்கவே இயலாதவளாக தனது இரு கைகளால் மண்டையை பிடித்துக் கொண்டு துடித்து விட்டிருந்தாள்.

“ஐயோ தயவு செய்து பேசுவதை நிறுத்துங்களேன்” மனதிற்குள் மன்றாடினாள், தனது நிலை மறந்தாள். எதிரில் இருந்த படுக்கையில் அட்மிட் ஆகி இருந்த ஒரு குழந்தையின் தகப்பன் குழந்தையை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, யாரோ எவரோ தான் அறியாத அவனைப் பார்க்க பார்க்க இவளுக்கு பயத்தில் குலை நடுங்கியது.

‘தன்னை அவன் கொல்ல வருவதாக மனதிற்குள்ளாக அச்ச உணர்வுகள் தோன்ற வீல் வீலென விமலா அலறியதில், மாலதி அடித்துப் புரண்டுக் கொண்டு எழுந்துப் பார்த்தார். தலைவிரி கோலமாக பயந்து நடுங்கிக் கொண்டு இருந்த மகளை அணைத்து, முதுகை தடவி விட்டு இன்னும் என்னென்னவோ செய்து ஆசுவாசப் படுத்தும் முன் இருவரும் ஒரு வழியாகி விட்டு இருந்தனர்.

குழந்தையை கவனிப்பதா? தாயை கவனிப்பதா? திண்டாடிப் போயிற்று அந்தக் குடும்பம். பன்னிரெண்டாம் நாள் தாயும், சேயுமாய் வீட்டை வந்தடைந்தனர். அது நாள் வரையிலும் தினமும் மருத்துவமனைக்கும், இரத்தப் பரிசோதனை நிலையத்திற்கும், வீட்டிற்குமாக பயணித்து ஓய்ந்திருந்த சுகுமாரனும், சிவாவும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டனர்.

தன் மகளின் வாழ்க்கையை கெடுத்து குட்டிச் சுவராக்கி மூலையில் உட்கார வைத்து விட்டோம் எனும் கவலை அந்த வீட்டினரை தின்றது. மகள் வாழ்க்கையை தாங்களே கெடுத்து விட்டதாக புலம்பிய தாயின் புலம்பல்களை எல்லாவற்றையும், “என்னை இதெல்லாவற்றையும் கொஞ்சம் மறக்க விடுங்களேன்” எனச் சொல்லி விமலா தடுத்து வைத்திருந்தாள்.

அவளுக்கு பழைய நினைவுகள் எதையும் நினைவில் கொண்டு வர விருப்பமில்லை. அதனை கடந்து வரவே முயன்றாள்.ஆம், தங்கள் கோபங்கள், ஆத்திரங்கள், புலம்பல்களால் எதுவும் ஆகப் போவதில்லை எனும் முடிவிற்கு அனைவரும் வந்து விட்டிருந்தனர்.

வீரேந்திரனுக்கு மகன் தன் சாயலில் பிறந்ததில் இருந்து தனது ஆண்மையை நிரூபித்து விட்ட பூரிப்பில் இருந்தான்.இனி அடுத்து மனைவி மற்றும் மகன் என குடும்பமாக வாழ்ந்தால் தான் தனக்கு மதிப்பு எனத் தோன்றவே தனக்காக பேசி மனைவியை வரவழைக்கச் செய்ய தன் குடும்பத்தினரிடம் தினம் தோறும் சண்டையிட்டு பிரச்சனைகள் செய்துக் கொண்டு இருந்தான்.

அவன் தாய் வேறு வழியின்றி விமலாவின் தொலைபேசிக்கு அழைத்து, “விமலா நான் உன் மாமியார் பேசுறேன்” எனப் பேச, “எனக்கு மாமியார்னு யாருமே கிடையாதே”என்றுச் சொல்லி அவள் அந்த தொலைபேசியை துண்டித்து விட்டிருந்தாள்.

தான் விமலாவின் வீட்டிற்குச் செல்வதும் தனக்குத்தானே சவக்குழியை வெட்டிக் கொள்வதும் ஒன்றுதான் என வீரேந்திரன் அறிந்து இருந்தான். சமரசம் செய்ய எத்தனை ஆட்களை அனுப்பியும், மனைவியோடு தனிக்குடித்தனத்திற்கு வர தயாரெனச் சொல்லி அவன் நோட்டீஸ் அனுப்பியும், விமலாவிடமிருந்து எவ்வித சாதகமான பதிலையும், ஏன் பல நேரங்களில் பதிலையுமே அவன் காணவில்லை.

அவன் விமலாவை சந்தித்து பேசவென்றே தற்போது ஊருக்கு வந்து சில நாட்கள் கடந்திருந்தன. தான் தூது அனுப்பிய ஆட்கள் சலித்து திரும்பி இருக்கவும் தானே விமலாவை சந்தித்து பேச வெகு முயற்சியோடு துணிவு கொண்டான். அப்போது ஏதோ ஒரு வேலையாக சென்று திரும்பிக் கொண்டு இருந்தவள் தனியாக ஆளரவமற்ற சாலையில் செல்ல அவள் எதிரில் வந்தவன்,

“விமலா, நல்லா இருக்கிறியா?”வீரேந்திரனின் குரலிலோ தேன் தடவிய பாவனை, அவளிடம் அவனுக்கு ஏதாகிலும் தேவை எனில் பேசுவானே அதே பாவனை … ஏதாகிலும் என்று என்ன சொல்லிக் கொண்டு? தனது நிமிட நேர அவசரத்திற்காக அவளது தேகம் தேவைப்படும் போது எல்லாம் அவன் பேசும் அன்பு மற்றும் பணிவு தோரணை தானே அது?

விமலாவின் மனதிற்குள்ளாக அவனது அந்த தோரணையும், அதன் காரணங்களும் அணிவகுக்க ஒரு காலத்தில் இந்த பேச்சுக்காகவும், இந்த சிரிப்பு மற்றும் அனுசரணைக்காகவும் தான் எவ்வளவு ஏங்கினோம்? என்பதை எண்ணி ஆயாசமாக இருந்தது. அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்றுச் சொல்வார்களே அது எத்தனை உண்மை.

‘கட்டிய தாலி ஒன்றிற்காக இவனிடம் அன்பை எதிர்பார்த்து தன் சுயத்தை இழந்து, தன் உடல் நலம் கெட்டு, தன் மன நிலை பாதித்து, தன் குழந்தையின் உடல் நிலை பாதித்து, எதற்காக தண்டிக்கிறான்? என்றே தெரியாமல் அவனது அத்தனை அசிங்கமான பேச்சுக்களையும், மனதை நொறுக்கி சில்லு சில்லுகளாக்கும் வார்த்தைகளையும் சகித்து… அவள் எத்தனை அடிமையாக வாழ்ந்து விட்டாள்?’

“என்னம்மா?” அவனது உருகலுக்கு இவளது இகழ்ச்சி முறுவலே பதிலாக இருக்க, அவனை எதிரில் கண்டதும் தானடைந்த அத்தனை துன்பங்களும் மனதிற்குள்ளாக மறுபடி அணிவகுத்தன.

“நீ யாரு, எதுக்கு என்னை வழி மறிச்சு இப்ப என்கிட்ட பேசிட்டு இருக்க?’ என்றாள்.

“ நான் நா நா உன் புருசன்… ஏம்மா விமலா இப்படி பேசுற நீ இப்படி பேச மாட்டியேடா?” பசப்பினான்.

“ஓ நீதான் புருசனா? அதாவது பொண்டாட்டியை புள்ளைங்களை கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்துற புருசன். அவங்களுக்கு எந்த தீங்கும் அண்டாத புருசன்… அப்படியா?”

“அது… ஏதோ அப்ப தப்பா நடந்திருச்சு… அதை விட்டுறேன்?”

“ஏது என்ன தப்பா நடந்திருச்சு? குழந்தை உன் சாயல்ல பொறந்துச்சு நீ நம்புன… இல்லன்னா என்ன செஞ்சிருப்ப நீ?”

“அதெல்லாம் அப்படியில்ல எங்க வீட்டில என்னை குழப்பிட்டாங்க, நானும் குழம்பிட்டேன்”

“ஏதேது அவங்க குழப்பி நீ குழம்புற உறவிலயா நீ என் கிட்ட இருந்த?, ஏன் நீ உன் மனச தொட்டுச் சொல்லு உன் கூட முத ராத்திரி இருந்தப்ப நான் கன்னிப் பொண்ணா இல்லியான்னு உன்னால அறிய முடியலை? முதலிரவுக்கு அப்புறமா இரத்தக் கறை படிஞ்ச அந்த பெட்ஷீட் அது கூடவா உனக்கு ஞாபகம் இல்லை? மத்தவங்க சொன்னதும் நீ என்னை சந்தேகப் படுற நிலைமைலயா நான் நடந்துக் கிட்டேன்? உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு பார்க்கலாம்”

“அது தப்புத்தான் விமலா அதை விட்டுடு, இனி குழந்தைக்கும் அம்மா அப்பான்னு நாம இரண்டு பேர் தேவை. அதை யோசியேன்”

“ஏதேது சாகக் கிடக்குறது தெரிஞ்சதும் கையில் இருக்கிற ரூபாய் எல்லாம் எடுத்திட்டு புள்ளைய காப்பாத்த ஓடோடி வந்த அப்பா தானே நீ? அடடா உன்னை மாதிரி அப்பாவா நிச்சயமா என் புள்ளைக்குத் தேவைதான். இல்ல பாதி உயிரா கிடந்த என்னைப் பார்க்க ஓடி வந்ததினால உன்னை மாதிரி புருசன் எனக்குத் தேவையா? ரொம்ப ரொம்ப தேவைதான். பிரசவத்தில அம்மாவும், புள்ளையும் நாங்க செத்திருந்தா கொள்ளி வைக்க கூட நீ வந்திருக்க மாட்ட அது மட்டும் தான் நிஜம். உன் நாடகத்தை இத்தோட நிறுத்திக்க இந்த அம்மா, அப்பான்னு எதையாவது தூக்கிட்டு மட்டும் வந்து நிக்காத புரியுதா?”

“என்ன இருந்தாலும் விமலா ப்ளீஸ் நமக்காக, நம்ம குடும்பத்துக்காக மறுபடி கொஞ்சம் யோசியேன்”

“சொல்லச் சொல்ல நீ சொல்லுறதைத் தான் நீ சொல்லிட்டே இருக்கிற…உன் கிட்ட என்ன பேசினாலும், உனக்குப் புரியாது. ஏன்னா நீ ஒரு சுய நல மிருகம். ஏன்னா உனக்கு உன் இஷ்டப்படி எல்லாரும் ஆடணும். ஏன்னா உனக்கு மத்தவங்க மனசை அடிச்சு, நொறுக்கி கொல்லுறது ரொம்ப சாதாரணம். நல்லா இருந்தவளை மன அழுத்தம் , பிபி இன்னும் என்னென்னவோ பிரச்சனைக்கு ஆளாக்கிட்டு ஒரு துளி கூட மனசில பயம் இல்லாம ஆளத்த இந்த வழியில வந்து நின்னு பேசிட்டு இருக்க பாரு நிஜமா சொல்லுறேன் உன் கிட்ட பேசி அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்ல”

“அதெல்லாம் யார் வீட்டுல தான் பிரச்சனை இல்லம்மா, நாம எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம். நம்ம வீட்டுக்கு நீயும், குழந்தையும் எப்ப வரம்மா?” என்றதுதான் தாமதம் தன் பொறுமையின் அளவு தீர்ந்து விட்டிருக்க காளி ரூபத்தில் மாறி இருந்தாள் விமலா.

“ஏன் நான் எதுக்கு உன் வீட்டுக்கு வரணும், ஏன் நீ உன் தம்பிக்கு என்னை கூட்டிக் கொடுக்கவா?”

என சடேரன தனது கால் செருப்பை கழற்றியவள் தனது மனதின் ஆத்திரங்கள் தீர அது பிய்ய பிய்ய அவனை அடித்து துவைததில் அங்கு கூட்டம் சேர்ந்து விட்டிருந்தது. மற்றவர்கள் எதிரில் தனது பெருமைகள் சிறுமையானதில் நொந்து நின்றிருந்தான் அவன். கொடுப்பவை ஏதோ ஒரு ரூபத்தில் திரும்ப வந்தே தீரும்.

விமலா தன் பல மாத கோபங்களை வெளிப்படுத்தி விட்டதால் தன்னையறியாமல் மனதில் அமைதி சூழ்ந்திருந்தது. அமைதியாய் வீட்டிற்கு வந்து அமர்ந்தாள்.அவள் வீட்டிற்கு வரும் முன்பாக அவள் செய்த காரியம் குறித்து வீட்டினருக்கு தெரிய வந்திருந்தது. தொட்டிலில் குழந்தை சிணுங்க ஒன்றுமே நடவாதது போல தொட்டிலில் குழந்தையை ஆட்டி விட்டாள்.

அத்தனை பட்ட பிறகும் கூட வீரேந்திரன் யார் யார் மூலமாகவோ தூது விட்டு பார்த்தும் முடியாமல் மிரட்டிப் பார்த்தான். குழந்தைக்கு பத்து வயதானதும் சட்டரீதியாக குழந்தையை அவனே பொறுப்பில் எடுத்துக் கொள்ளப் போவதாக தகவல் சொல்லி விட்டான்.

‘இருபத்தியோரு வயதான இத்தனை பெரிய மனுஷியை இவர்களால் குறைந்த பட்சம் அன்பை கொடுத்து கூட அரவணைக்கத் தெரியவில்லை. இவர்கள் எங்கே என் குழந்தையை வளர்ப்பது?” அதைக் கேட்டவளுக்கு இந்த எண்ணம் தோன்ற முகத்தில் இகழ்ச்சி முறுவல் எழுந்தது.

விமலா விவாகரத்திற்கு பெரு முயற்சிகள் செய்து முன்னெடுத்தாள். கேஸ் முடிய சில வருடங்களாகின. விமலா என்னையும், என் குழந்தையையும் நான் பார்த்துக் கொள்ள முடியும் எனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என மறுத்து விட்டிருந்தாள். ஒன்றுமே அனுப்பி வைக்காமலும் கூட வீரேந்திரனின் அன்னை தாங்கள் பேரனுக்கு செலவுக்கு பணம் அனுப்பி விடுவதாக ஊரெல்லாம் பொய் செய்திகளை பரப்ப மறுக்கவில்லை. அவர்களது பெருமிதத்திற்கு குந்தகம் வரக் கூடாதல்லவா?

வீரேந்திரனின் குடும்பத்தினரோ அவனை விமலா விவாகரத்து செய்த ஆறாவது மாதம் அவனுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். விமலாவின் பெற்றோரும், அண்ணன் அண்ணியும் வீட்டில் பொருமிக் கொண்டு இருந்தனர். விமலாவினால் அந்தப் பெண்ணிற்காக மனம் வருந்த மட்டும்தான் முடிந்தது.

தொடர்ந்த குடிப்பழக்கத்தால் அடுத்த வருடமே வீரேந்திரன் இறந்து விட்டதாக கேள்விப் படவும் விமலாவிற்கு யாரோ ஒரு அந்நியனின் இறப்புச் செய்தியை கேட்டது போலொரு எண்ணம் மட்டுமே.அவன் மட்டில் அவளுக்கு கொடுக்கலும், வாங்கலுமான கணக்குகள் முடிந்து விட்டதான ஒரு தோற்றம் மட்டுமே.

தன்னுடைய அகங்காரத்தால் மனிதன் எத்தனையோ பேர் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றான். தான் ஆயிரம் காலங்கள் வாழ்வதைப் போல, பிறரை மதியாமல் ஆணவமாக வாழ்கின்றான், இப்படி யாரும் முன்னறியா நாள் ஒன்றில் செத்துப் போவோம் என்பது அவனது நினைவில் இருப்பதில்லை.

“ நீ என் வாழ்வில் வராமலும், எனக்கு வாழ்வில் நரகத்தை காண்பிக்காமலும் இருந்திருக்கலாம்”இறந்தவனைக் குறித்து  விமலா மனதில் சொல்லிக் கொண்டாள். அவள் மனதில் இப்போது யாரைக் குறித்த துவேஷங்களும், கோபங்களும் இல்லை நிர்மலமாக இருந்தது.

“அம்மா பாத்தி வந்திருக்காங்க முதுகில் தொற்றிக் கொண்டு இருந்தான் நிகிலன் அவள் மகன். விமலாவின் பெரியம்மா வந்திருந்தார். நெருங்கிய சொந்தங்கள் தூரத்தில் நின்று விட்டிருக்க தூரத்து சொந்தமான இந்த மதிப்பிற்குரிய அன்பான உறவினர்தான் தற்போது அவள் படித்து வேலை பார்ப்பதற்கும் மிக முக்கிய காரணி.

தாயை அழைத்து வந்து ஹாலில் விட்டதோடு“பாத்தி விளையாடப் போறேன்” ஓடியே விட்டிருந்தான் அவன்.

“ஏன்டா விமலா உன் மகன் நிகிலனும் கொஞ்சம் வளர்ந்திட்டே வரான். இனி பாரு மூணு வயசும் ஆகிடும். இப்ப திருமணம் செய்தால் தானேமா நல்லது? படிப்பு, வேலைனு இப்படியே இருந்திடப் போறியா என்ன?”

“பெரியம்மா, திருமணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் தான் இல்லைனு சொல்லலை. ஆனால், என் மனசுக்கு இன்னும் பழைய காயங்கள் மறையாமல் இரணமா இருக்குதே?”

“அதையெல்லாம் கடந்து வர்றதுதான் வாழ்க்கைடா”

“ம்ம்…உண்மைதான் பெரியம்மா, அம்மா சொன்னாங்கன்னு கூட நான் ஒரு சிலரோட பேச முயற்சி செய்தேன்”

“அப்புறம் என்ன ஆச்சு? நீ எல்லோரையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுறியாம்?”

புன்னகைத்தவள்… “ நான் திருமணச் சந்தையில் ஒரு used piece  பெரியம்மா முதலில் நீங்க அதை புரிஞ்சுக்கணும்”

“ச்சீ, என்ன பேச்சு பேசுற நீ? இதை நான் உன் கிட்ட எதிர்பார்க்கலை”

“நீங்களே ஷாக் ஆனால் எப்படி நான் அதை உங்க தங்கையிடம் சொல்ல முடியும்? அதனாலத்தான் சொல்லலை. இந்த வார்த்தை நான் சொல்லலை நான் சந்தித்த ஒரு ஆண்மகன் என்னிடம் சொன்னது”

“……”

“வேறு ஒருத்தருக்கு என்னுடைய பிரசவம் நார்மலா இல்லை சிசேரியனா? எனும் கேள்வி இருந்துச்சு பெரியம்மா”

“எதற்காம்?”

“சேதப்படாத உடல் உறுப்பு தேவையாமாம்.”

“ச்சீ ச்சீ”

“பெரியம்மா இந்த இரண்டாம் திருமணம் எல்லாம் பொதுவாக உடல் தேவைகளாகவே கருதப் படுகின்றன. பெண்ணாக இருந்துக் கொண்டு எதற்காக அடக்கம் இல்லாமல் மறுபடி ஜோடி தேடுறா பாரேன்?” இதுதான் பலரோட பார்வையாக இருக்கிறது. முன்பு ஒரு முறை இப்படி அலைகிறவளாக, தரங்கெட்டவளாக இன்னும் என்னென்னவோவாக முத்திரை குத்தப்பட்டதே இன்னும் மனசு ஆறலையே”

“  நல்லவங்களும் இருக்காங்கடா”

“பார்க்கலாம் பெரியம்மா… என் கிட்ட திருமண வாழ்க்கைக்கான ரொம்ப ஒன்னும் பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. வாழ் நாளில் எதிர்கொள்ளுகின்ற மேடு பள்ளங்களில் அன்பா கை கோர்த்துட்டு கூடவே பயணிக்கிற மாதிரி ஒரு துணை. அத்தோட கூட நிகிலன் என்னோட உடலின் ஒரு பகுதி என்பதை உணர்கின்ற சாதாரண மனிதாபிமானம் உள்ள உறவுகளை நேசிக்கிற மனிதர் போதும்.”

“அழகா பேசுற போ”

“ம்ம்… பேச கத்துக்கிட்டேன் பெரியம்மா…இதோ கேளுங்க முழுசும் சொல்லிடறேன். நான் ஆசைப்படுவது கிடைக்கிற வரைக்கும் பார்க்கலாம்.  அது வரைக்கும் இந்த தனிமை வாழ்க்கை இருளல்ல, அந்த திருமண வாழ்க்கை ஒளியுமல்ல பெரியம்மா அதை நீங்க ஞாபகம் வச்சுக்கணும்” செல்லமாக அவரது தோளில் தலையை சாய்ந்தாள்.

சிவாவும், சுமிதாவும் அப்போது வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த சுகுமாரனும் மகளின் பேச்சை கவனமாக கேட்டு அமைதியாக தங்களது வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள். அவளது வாழ்க்கையை அவள் முடிவெடுக்க இடையூறாக இருக்கக் கூடாது என்பதே அவர்களது முடிவும்.

“அத்தே, நிகிலன் பாருங்க என் நோட்டை கிழிச்சுட்டான்”  

“அம்மா, நான் கிழிக்கலை அண்ணா பொய் சொல்லுறான்…”

“யார்டா அங்க பொய் பேசுறது? ராஜாவா? நிகிலனா?” தாயின் குரலுக்கு கிளுக்கென்று சிரித்தவாறு ஓட, துரத்திக் கொண்டு வந்தவள் எதிரில் வந்தவனுக்கு வழி விட்டு நின்றாள்.

“அத்தை, வாங்க போகலாம்” வாசலில் நின்றவாறு குரல் கொடுத்த விஜய் ஐந்தரை அடியில் இருந்தான். பெரியம்மாவின் உறவினன் என்பது வரைக்கும் அவளுக்கு விபரம் தெரியும்.

“நான் கூட தேடிக் கொண்டு இருக்கிறேன்”

“யாரை நிகிலனையா? உங்க கிட்ட ஏதாச்சும் சேட்டை செய்தானா?”

“நான் சொல்ல வந்தது என்னன்னா… நான் கூட வாழ் நாளில் எதிர்கொள்ளுகின்ற மேடு பள்ளங்களில் அன்பா கை கோர்த்துட்டு கூடவே பயணிக்கிற மாதிரி ஒரு துணையை தேடிக் கொண்டு இருக்கிறேன்”

தன்னுடைய பேச்சை ஒட்டுக் கேட்டு விட்டதாக அவள் கூனிக்குறுக… தாய் அவனை பிடிக்க துரத்தவில்லை எனும் தைரியத்தில் திரும்ப வந்த நிகிலன் விஜயின் முதுகின் பக்கம் ஒளிந்து நின்றான்.  நேரம் பார்த்து உள்ளே ஓடி விட்டிருந்தான்.

“ஸாரி தப்பா நினைக்க வேண்டாம், நிஜமாவே பெரியம்மா இந்த விஷயம் சொல்லி தான் என்னை அழைச்சுட்டு வந்தாங்க.  நீங்கன்னா நீங்க மட்டும் இல்ல நிகிலனையும் சேர்த்தது தான் நீங்க…”

“……”

“வாழ்க்கையில் ஏற்கெனவே சில மேடு பள்ளங்களை பார்த்து விட்டேன். என் மனைவி தவறி சில வருடங்களாகிடுச்சு. தனிமை வாழ்க்கை கொஞ்சம் வெறுப்பா இருந்தது. உங்களைப் போலத்தான் எனக்கும் மனிதாபிமானம் உள்ள உறவுகளை நேசிக்கிற மனிதர் போதும். அது நீங்களா இருந்தா எனக்கு மகிழ்ச்சி. உங்கள் விருப்பம் இல்லைனா வற்புறுத்த மாட்டேன்” புன்னகைத்தான்.

“……”

“வாழ்க்கையில் எதுக்குங்க தேங்கி நிற்கணும், இணைந்து கடந்து போகலாமே?”

அவர்கள் வாழ்க்கையில் இருளல்லாத அந்த தனிமை இருள் விலக நேரம் பார்த்துக் காத்திருந்தது.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here