இது இருளல்ல அது ஒளியல்ல_1_ஜான்சி

0
1569

இது இருளல்ல அது ஒளியல்ல

ஜான்சி

மொபைல் இண்டெர்நெட் புழங்காத காலக் கட்டம்

அத்தியாயம் 1

மாலதி தன்னைக் கட்டிக் கொண்டு தூங்கும் மகளை நோக்கினார். வயது 21 ஆகிவிட்டது திருமணத்திற்கு பார்த்தாகின்றது இன்னுமா இவள் இப்படி தன்னைக் கட்டிக் கொண்டு உறங்க வேண்டும்? முன் தினம் திருமணப் பேச்செடுத்த போது என்னமாய் வேண்டாமென்றாள்? இருபத்தைந்தில் கட்டிக் கொள்வாளாமே? வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டுமாம். திரைப்படங்கள் பார்க்க வெளியே போக வேண்டுமாம், உலகத்தைப் பார்க்க வேண்டுமாம். சுதந்திரமாக திரிய வேண்டுமாம்.

அச்சச்சச்சோ அது அடுக்குமா? பெண்ணாய் இருந்துக் கொண்டு குல வழக்கத்திற்கு மாறாக அவள் சிந்திக்கலாமா? அவளது அப்பார் சொன்னது போல பதினெட்டு முடிந்ததும் திருமணம் வைத்திருந்தால் இத்தனை பேசி இருப்பாளா? கொஞ்சம் படித்ததும் அதற்கென்றே திமிர் வந்துவிடுமோ?

அதுவும் அவர்களது ஜாதிச் சங்கத்தின் மதிப்பிற்குரிய பொறுப்பில் இருப்பவரின் மகளாக இருந்துக் கொண்டு அவள் சொன்னவை எல்லாமே திமிரான பேச்சுக்கள் தாம். பொண்ணாக அடக்க ஒடுக்கமாக இருக்காமல் அதென்ன திமிர்?

‘பெண்ணை வேலைக்கு விட்டு சம்பாதிக்கிறான்’என யாரும் வாயில் பல்லைப் போட்டு பேசி விட்டால் அவமானம் யாருக்கு? இந்தப் பொண்ணுக்கு ஒன்றும் புரிய மாட்டேன்கிறதே? இருந்தாலும் நல்ல பிள்ளைதான் இதுவரையில் காதல் கீதல் என ஒரு பேச்சும் கிடையாது. தரையை பார்த்து நடக்கச் சொன்னால் தரையைப் பார்த்து தான் நடப்பாள். யாரையும் பார்க்க மாட்டாளே? அவர்கள் சொன்னதுக்கு மாறாக ஒரு போதும் நடந்ததுமில்லை. பள்ளி, கல்லூரி என்றால் அங்கே, வீடு திரும்புவதென்றால் வீடு. நடுவில் வேறெங்கிலும் சென்றது கிடையாது.

என்ன இந்த வாய்தான் அதிகம்… பெருமிதத்தில் மகளை கரம்  வருடினாலும் மனதிற்குள்ளாக அத்தனை சிந்தனைகள்.அதுவரை இடம் மாறி படுத்திருந்த மகள் மறுபடி திரும்பி அம்மாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

அடுத்த நாள்

“அம்மா நான் இப்ப கல்யாணம் வேண்டான்னு சொல்றேனில்லமா”சொன்ன விமலா மாநிறத்தில், சராசரி உயரத்தில் களையாய் இருந்தாள்.

“நீ போய் உங்க அப்பா கிட்ட பேசிக்க”

“அவர்கிட்ட என்னிக்குமா நான் போய் பேசிருக்கேன், காட்டுக் கத்தலா கத்துவார். படிக்கிறதுக்காக எவ்வளவு திட்டுக் கேட்டு படிச்சிருப்பேன், இப்ப கல்யாண விஷயத்திலயும் அப்படித்தான். எல்லாம் உங்க கட்டாயம் தானா? என்னை விருப்பம் எல்லாம் கேட்கவே மாட்டீங்களா?” கண்ணில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

“அன்னிக்கென்னன்னா டைப்பிங்க் க்ளாஸ் போக துணைக்காக கமலா அக்கா மகளுக்காக நான் காத்திட்டு இருந்தேன். அப்பா அங்க அவங்க வீட்டுக்கே போய் அதெல்லாம் என் மக உன் கூட டைப்பிங்க் க்ளாஸ் வர மாட்டான்னு சொல்லிட்டு வந்துட்டாங்க, இதெல்லாம் என்னம்மா?”

“இப்ப உனக்கு எதுக்கு டைப்பிங்க் க்ளாஸ் எல்லாம்? அறிவுக் கெட்டத்தனமா பேசிக்கிட்டு, நம்ம ஜாதியில பெண் பிள்ளைங்க வேலைக்கு போக மாட்டாங்க தெரியாதா உனக்கு? இப்ப உன் அண்ணி தான் இருக்கா அவ வேலைக்கு போறாளா? நம்ம சொந்தங்களில் பாரேன் யாரும் வேலைக்கு போக மாட்டாங்க. உனக்குத்தான் வேலை ஆசை பிடித்து ஆட்டுது. புருசன் கொண்டு வர பணத்தில வீட்டை நடத்த தெரிஞ்சா போதும் போ”

பணப்பற்றாக் குறையால் ஒவ்வொரு முறையும் மாமனாரிடம் பணம் வாங்குகையில் கூனிக் குறுகும் அண்ணி மனதிற்குள் வந்துப் போனாள்.

பக்கத்து வீட்டு மாமி ஏதேச்சையாக அங்கு வர, ‘எல்லாம் இந்த மாமியால் தான்’ முகத்தை திருப்பி துடைத்துக் கொண்டாள்.

“என்னப் பொண்ணே இப்பவே கல்யாணக் களை வந்திருச்சுப் போல”

‘ம்ம் சவக்களை தான் வந்திருக்கு, இந்த லூசுக்கு கல்யாணக் களை போல தெரியுதோ? வந்திருச்சு ஊர் பெருமைக்கு ப்ரெயின் வாஷ் செய்யும். என் வீட்ல உள்ளதுங்களுக்கும் அறிவில்ல அடுத்தவங்க சொல்பேச்சுக்கு ஆடுவாங்க’ மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.

“அவங்க நல்ல இடம் தெரியுமா? வீட்டுக்கே அஞ்சாயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவை தான் கட்டிப்பாங்க தெரியுமா?, நம்ம பொண்ணுக்கு அங்கே போகணும்னா அதிர்ஷ்டம் தான் பார்த்துக்கோங்க”

“ஏன் மாமி எங்கண்ணா கல்யாண ஆல்பம் தந்தா நீங்க மட்டும் பார்த்துட்டு திரும்ப தர வேண்டியது தானே? அதென்ன வந்தவங்க போனவங்க எல்லோரும் பார்க்க கொடுக்கிறது? அப்படியே பார்த்தாலும் கல்யாணப் பொண்ணையும் மாப்பிள்ளையையும் பார்த்திட்டு திரும்ப தந்திட வேண்டியது தானே? இந்தப் பொண்ணைதான் எங்க பப்புக்கு கட்டணும்னு அவங்க சொன்னாங்கன்னு நீங்களும் இங்க வந்துச் சொன்னா என்ன அர்த்தம்?”

“ச்சீ வாய மூடு விமலா, சின்னவங்க பெரியவங்க மட்டு மரியாதை இல்லையா. போ உள்ள போ உள்ளன்னு சொல்லுறேன்ல”தாயார் சிடுசிடுக்க விமலா உள்ளேச் சென்றாள்.

“விடு மாலதி, நாம நல்லதுக்குத்தான் சொல்லுறோம்னு புள்ளைங்களுக்கு இப்ப புரியாது, நல்ல குடும்பம் பார்த்துக்க….” மூளையை கழுவ ஆரம்பித்தார்.

தனக்கு வாய் ஓயாமல் பேச ஒரு கதை, மற்றும் பெருமை பேச ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் இந்த திருமணத்தை நடத்தாமல் விடுவானேன்? தன்னால் இந்தக் காரியம் நடந்ததென ஊரெல்லாம் பெருமை பாராட்டிக் கொள்ளலாம் அல்லவா?. வாய் ஓயாமல் லொட லொடாவென பேசிக் கொண்டிருக்கும் சுமதியின் பேச்சுக்களில் மதிமயங்கிக் கொண்டு இருந்தாள் மாலதி அவள் கண்களுக்குள்ளாக பலக் கனவுகள்.

என்னதான் மாலதியின் கணவர் சுகுமாறனுக்கு ஜாதித் தலைவர் எனும் பெருமை இருந்தாலும், செல்வ வசதியில் அவர்கள் நடுத்தரம் தானே? மகளை கார் பங்களா என நல்ல வசதியுள்ள இடத்திக் கட்டிக் கொடுக்க வேண்டும் என மாலதியின் அடிமட்ட மனதில் இருந்த ஆசைகள் தற்போது கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருந்தன, அந்த நெருப்பில் யார் பொசுங்குவரோ? யார் பிழைப்பரோ?

இரண்டு மணி நேரம் சலிக்காமல் பேசியப் பின்னர் சுமதி சற்று அங்கிருந்து நகர்ந்தார். மாலதியின் கணவர் சுகுமாரன் வந்துக் கொண்டு இருந்தார் அல்லவா? இனி அடுத்த வீட்டில் இந்த வீட்டு விபரத்தை ஒப்பித்தால் தான் சுமதிக்கும் சற்றேனும் மன நிம்மதி கிடைக்கக் கூடும். விடைப்பெற்றுச் சென்றாள் சுமதி.

“என்னங்க?”

“அடுத்த வாரம் கோவில்ல பெண் பார்க்கப் போறாங்களாம், சொல்லப் போனா போட்டால பார்த்ததே அவங்களுக்கு நம்ம பொண்ணை ரொம்பவே பிடிச்சிருக்காம். இந்த ஏற்பாடு நமக்காக மட்டும் தானாம்” பெருமையில் அவர் மீசை துடித்தது. சொல்லப் போனால் அவரது வாழ்க்கையே ஜாதிப் பெருமையும், இந்தப் பெருமிதமும் மட்டும் தானே?

கோவில் சென்று திரும்பி இருந்தனர்…

“அம்மா எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலைமா? பார்க்கவே நல்லாயில்லை”

அந்த பெரிய விழிகளும், பெரிய மீசையும் முற்றிக் காய்ந்துப் போன முகமும், மெலிந்த தோற்றமும், முன் நெற்றியில் இல்லாத முடியும் அவளை வெகுவாக மிரட்டின. அவளது தோழிகளுள் சிலருக்கு திருமணம் ஆகி விட்டிருக்கின்றது தான். ஆனால், அந்த மாப்பிள்ளைகள் அப்படி இல்லையே? இந்த காலத்திற்கு ஏற்ற ஜோடியாக நிற்கையில் அவளும் பார்த்து இரசித்து இருக்கின்றாளே? நமக்கு மட்டும் ஏன் இப்படி மாப்பிள்ளை பார்க்கின்றார்கள்? குமைந்தாள்.

“அவர் இத்தனை பணக்காரரா இருந்தாலும் எவ்வளவு பணிவா பேசினார் கவனிச்சியா? நல்ல பையன். என்ன கொஞ்சம் முடி இல்லைதான் ஆனா முடியா வந்து சோறு போடப் போகுது போ. நாங்க எல்லாம் தாலி கழுத்தில ஏறும் வரைக்கும் மாப்பிள்ளையையே பார்த்ததில்ல. நாங்க வாழலியா? அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சாமார்த்தியம் வேணுமடி”அம்மா

“இப்ப மெலிஞ்சிருக்கார்,  நீ போய் சமைச்சு போட்டீன்னா உன்னை மாதிரி ஆக்கிற மாட்டியா என்ன?” அவளது உடல் எடையை குறிப்பிடுகின்றானாம். “நீ சொல்லி சின்ன வயசிலேயே அப்பா சிகரெட் விட்டுட்டாங்க, அது போல திருமணத்திற்கு அப்புறமும் அவரை திருத்திர வேண்டியது தானே?” இது அண்ணன்.

எல்லாம் இவன் கல்யாண ஆல்பத்தால் வந்தது, அதை அவங்க பார்த்திருக்கவும் வேணாம். தினம் சுமதி வந்து மூளைச் சலவை செய்யவும் வேணாம். இவங்க என்னமோ அந்த வீரேந்திரன் அலையஸ் பப்புவுக்கு என்னை கட்டிக் கொடுக்க இவ்வளவு சிரமப் படவும் வேணாம்.

விட்டா அந்த பப்பு தான் இவங்க மகன் போலவும், நான் வேண்டாதவ போலவும் பேச ஆரம்பிச்சுடுவாங்க போல? ஏதோ சுழலுக்குள் மாட்டிக் கொண்டு இருப்பதாகவே விமலாவுக்கு தோன்றியது.

அவசரமாய் தனது பெயரை அவனது பெயருடன் விதவிதமாக ஃப்ளேம்ஸ் போட்டு பார்க்க எல்லா நேரமும் அது Enemy எனக் காட்டித் தொலைத்தது. இன்னுமாய் மிரண்டாள், வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதெனும் அந்த அடிமைச் சூழலில் நட்பென எதுவும் வாய்க்காதிருக்க அவளது டைரியும், பென்-னுமே கூட அவளிடமிருந்து சற்று தூர போய்விட்டிருந்தது.

தனிமை தனிமை தனிமை மாற்றி மாற்றி யாராவது ஒருவர் அவளது மூளையையும் கழுவ ஆரம்பித்திருக்க அவள் திகைத்துப் போனாள். “இந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல மாட்டேங்கிறா அண்ணே” என தன் அண்ணன் முன்னால் தன்னைக் குறித்து பேசவும் கண்ணீர் விடவும் ஆரம்பிக்க விமலா கூசிக் குறுகிப் போனாள்.

எங்கும் போக முடியவில்லை, வரமுடியவில்லை. எல்லோரும் அவளுக்கு விதவிதமாக அறிவுரைச் சொன்னார்கள். எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்து விட வேண்டும் எனும் முனைப்பு அனைவரிடமும் இருந்தது.

“அவ அம்மாவை சாகக் கொடுத்துட்டுதான் நிம்மதியா இருப்பா”தன் காதுபடவே அப்பா பேசவும் அங்கு எட்டிப் பார்த்தால் அம்மா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்திருந்தாள். சுற்றி அண்ணன் சிவா, அண்ணி சுமிதா, கைகுழந்தை ராஜா என நின்றிருந்தனர். இவள் தான் தன் குடும்பம் இருந்தும் அன்னியப்பட்டுப் போனாள்.

“கொஞ்சம் வெள்ளத் தொலியா இருக்கால்ல அந்த திமிர்தான். அதுவும் அவங்களே வந்து பொண்ணு கேட்டாங்கல்ல அப்ப பொண்ணுக்கு திமிர் கூடிப் போச்சு”தாயின் கூற்றில் சிலையாய் சமைந்தாளவள்.

அன்று பேசி முடிக்க வந்திருந்தனர்…

மாப்பிள்ளை தரப்பில் குறைந்த பட்சம் இருபது பேர்களாவது இருக்க வேண்டும். இவர்களது கூரை வீடு அவர்கள் முகத்தில் இகழ்ச்சியை வரவழைத்திருந்ததோ? யாராலும் கண்டுணர முடியவில்லை.

உள்ளறையில் இருந்தவளை வீரேந்திரனின் மூன்று சகோதரிகளும் அம்மாவுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். மிகவும் இனிமையாக பேசினர். சரி மாப்பிள்ளை தான் பிடிக்கவில்லை, அவர்கள் வீட்டினராவது நன்றாக இருக்கின்றார்களே சந்தோஷம் அவளுக்கு. பிடிக்காத திருமணத்தை பிடித்ததாக ஆக்கும் அவளது மனதின் யத்தனங்கள் ஆரம்பித்து விட்டிருந்தன.

அவர்களின் வீட்டு நடு அறையில் கொடுக்கல் வாங்கல்கள் விவாதிக்கப் பட்டன. “மொத்தமே முப்பந்தஞ்சு பவுன் தானா?” யாருக்கோ மனச் சங்கடம் போலும். “கூட ஒரு பத்து பவுன் போடலாம்ல?”

“உங்களுக்கு இருக்கிறதோ ஒரே ஒரு பொண்ணு” மாட்டுப் பேரம் ஆரம்பித்தது ஆனால் படியவில்லை. மாலதி தனது கருத்தில் நிலையாய் இருந்தார்.

“எங்க பொண்ணுக்கு எங்க ஆசைக்கு இன்னும் செஞ்சு போடுவோம்ங்க அது வேற. ஆனால், இப்ப சொல்லி அதை செய்யலைன்னு வைங்க அதுவே ஒரு பிரச்சனையாகிப் போகும். அதனால முப்பத்தஞ்சு பவுன், அம்பதாயிரம் ரொக்கம் அவ்வளவுதான்.”

“சரி சரி பொண்ணு பிடிச்சிருக்குன்னு வந்துட்டு ரொம்பவும் கேட்கக் கூடாது இது ஒத்துக்குங்க” இது மற்றவர்.

“எங்க மாப்பிள்ளை புட்பால் ப்ளேயர் மாதிரி வளர்த்தி” எதற்குச் சொன்னாரென தெரியவில்லை தன்னை பெண்பார்க்க அழைத்ததற்கு தான் ஏதாவது பேசி ஆக வேண்டுமென்பதற்காக சொல்லி இருப்பார் போலும். வளர்த்தியாக இருந்தால் என்னவாம்? அதுவும் அதிகமான தகுதியாக கொள்ள வேண்டுமோ? உள்ளே அமர்ந்திருந்த விமலா சிந்தித்தாள். சொல்லப் போனால் தற்போதெல்லாம் அவள் சிந்திப்பதையும் பேசுவதையுமே நிறுத்தி விட்டிருந்தாள்.

இன்னும் சம்மதிக்காவிடில் பேசியே கொன்று விடுவார்கள் போலும் எனும் பயத்தில் தான் அவள் திருமணத்திற்கு சம்மதித்ததே. அதுவரையில் ஒரு லாபம், இப்போதெல்லாம் அவளை யாரும் எதற்கும் திட்டுவதில்லை.

யாரோ வந்தார்கள் போனார்கள், வீட்டின் முற்றத்தில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்க இவளை உடை மாற்றி அவனது சகோதரிகள் அழைத்துக் கொண்டு அருகில் வைக்க விமலாவோ தலையை உயர்த்தினாள் இல்லை. அதுதானே அடக்க ஒடுக்கத்திற்கு அடையாளம்?

மோதிரம் மாற்ற வேண்டுமாம் இவளது விரல்களில் அவன் மாட்டி இருக்க, இவள் மோதிரம் மாற்ற அவன் விரலை பிடிக்க அது போவேனா என மாட்டிக் கொண்டது. எலும்புகளால் ஆன கைகள் போல சதையை அவள் கண்டாளில்லை. அவன் கண்களில் மட்டும் ஏன் அவ்வளவு பிரகாசம்?

அன்று திருமணம் முடிந்து விட்டிருந்தது… வீட்டினுள்ளே பாலும் பழமும் கொடுத்து அமர்த்தி இருந்தனர்.

முதன் முறையாக அவளிடம் குனிந்து அவன் ஏதோ கேள்வி கேட்க அவள் என்னவென்று கவனித்தாள்.

“உனக்கு நிறைய வயசு இருக்கும் போலவே, எத்தனை வயசு?” விசாரித்தான்.

ஐந்தடியில் ஐம்பத்து மூன்று கிலோ எடையில் கனமான பட்டில் அவள் கொஞ்சம் அதிகமாய் உருண்டு திரண்டு இருந்ததால் எழுந்த கேள்வியோ என்னமோ?

“இருபத்தொன்னு”

“என்னது முப்பத்தொன்னா?”கடகடவென சிரிக்க ஆரம்பித்தானவன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here