இது இருளல்ல அது ஒளியல்ல_2_ஜான்சி

4
1790

அத்தியாயம் 2

அங்கிருந்து ஆரம்பித்தது விமலாவின் குழப்பம். அவள் குடும்பத்திற்குள்ளாக ஆண்களுடன் பேசி அறியாதவளல்ல ஆனால் இந்த கணவனாகப் பட்டவன் அவளிடம் பேசியவைகளுக்கான பொருளும் புரியவில்லை. அவைகளுக்கான நோக்கமும் அறிய முடியவில்லை. இப்படியெல்லாம் பேசுவார்களா என்றே அவளுக்குத் தெரியாது எனலாம்.

கணவன் சொல்வதைக் கேள், அதற்கேற்ப நடந்துக் கொள். நல்லப் பெண் என்னும் பெயர் எடு. குடும்ப மரியாதையை காப்பாற்று, மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்கள் எல்லோரோடும் பணிவாக நடந்துக் கொள்.எதிர்த்து கேள்வி கேட்பதாகாது. இன்னும் எத்தனையோ அறிவுரைகளை சுமந்து தான் மணவறைக்கு அவள் வந்ததே.

இங்கு என்ன நடக்கின்றது? எதற்காக இவன் இத்தனை வித்தியாசமாக நடந்துக் கொள்கின்றான் என யோசிக்கலானாள்.

ஒவ்வொன்றாய் யோசிக்கையில் ஆரம்பத்தில் திருமணம் முடிந்து போட்டோ எடுக்கும் போது போட்டோகிராபர் தனது தோளில் கை வைக்கச் சொல்லவும் ஏதோ நடுக்கத்தோடு வீரேந்திரன் தன் தோளில் கை வைத்ததை உணர்ந்தாள். தொட விரும்பாத வண்ணம் அல்லது தொட இயலாத வண்ணம் ஏதோ ஒரு தயக்கத்தோடு… ஏன் அப்படி?

கை பிடிக்கச் சொல்லும் போதும் அதுவே தான்… பெயரளவில் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் ஏனாம்? தனக்குத்தான் இது பிடிக்காத திருமணம் அவனுக்கு பிடித்த திருமணம் தானே? ஆசையாய் கைப்பற்றுவான் என்றால் ஏன் இந்த தயக்கம்?

விமலாவிற்கு இந்த திருமணத்தின் பின்பு ஒரு கண்மூடித்தனமான எதிர்பார்ப்பு இருந்தது. வாழ்க்கை ஒரு முறைதான் அதை பிடித்ததோ பிடிக்காததோ வாழ்ந்துதான் பார்த்து விடலாமே? எனும் நம்பிக்கை வைத்திருந்தாள். அவள் தன் மனதிற்குப் பிடிக்காமல் மணந்துக் கொண்டாலும் அவளுடைய கணவன் அவனே என்பதில் மாற்றம் எதுவும் இல்லை.

அவள் அவனிடமிருந்து அன்பை எதிர்பார்த்தாள். அவனது அன்பினால் முற்றும் முழுதாக அவனோடு மண வாழ்வில் மனமொப்ப வாழ வேண்டும் என்பதே அவளது எதிர்பார்ப்பும் கற்பனையும். ஆனால், நிஜத்தில் வாழ்க்கை அவள் படித்து படித்து மனதில் பதித்து வைத்திருந்த நாவல்களின் சுவாரஸ்ய திருப்பங்கள் போல அல்லவென்று அவளிடம் யார் சொல்வது?

கணவன் அவளது கை பிடிப்பதற்கு தயங்கினான் என்றாலும் கூட மேடையில் அமர வைத்ததும் தன்னிடம் பேச ஆரம்பிக்கவும் அதாவது அவளிடம் அவள் வயது கேட்கவும் அவள் சொன்ன பதிலை கேட்காதவன் போல தானாகவே “முப்பத்தொன்னா?” எனக் கேட்டு சிரிக்கவும் ‘ஏன் இப்படி?’ எனத் தோன்றினாலும் கணவன் தன்னிடம் சகஜமாய் பேசுவதை எண்ணி மனதை தேற்றிக் கொண்டாள். என்ன செய்வது? தனது மனவோட்டங்களை பிறரறியாதவண்ணம் தனது முகத்தை வேறு சிரிப்பு மாறாமல் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றதே?

“முப்பத்தொன்னு இல்ல, இருபத்தி ஒன்னு சொன்னேன்”அவனது சிரிப்பினூடே தனது பதில் கேட்கவில்லை போலும் எனும் எண்ணத்தில் திரும்பத் திரும்ப பதில் சொல்லிக் கொண்டிருந்த விமலாவை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.

தன் விருப்பம் போல சிரித்து முடித்த வீரேந்திரன் அடுத்ததாய் எதையோ யோசித்தவனாக தனது கால்சட்டைப் பையினின்று லெதர் பர்ஸை எடுத்தான். அது கொஞ்சம் பழைய பர்ஸ்தான், பிதுங்கி வழிந்துக் கொண்டிருந்தது. அதிலிருந்தவை அத்தனையும் அறிமுக அட்டைகள். அவற்றுள் ஒவ்வொன்றாய் எடுத்து விமலாவிடம் காட்டி விளக்க ஆரம்பித்தான். என்னென்னவோ சொன்னான் ஆனால், அவளுக்கு அவற்றுள் ஒன்றும் புரிபடவில்லை.முன் பின் தெரியாத ஒருவன் சற்று முன் கணவனாகி இருக்க அவனோடான முதல் முறையான உரையாடல் புரிகின்றதோ இல்லையோ தன்னை தவறாக எண்ணிவிடக் கூடாதெனும் ஆயத்தத்தில் தலையாட்டி கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“இது பெரிய கம்பெனி தெரியுமா?இவங்களுக்கு நான் தான் பார்சல் சர்வீஸ் செய்றேன். இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தான். அவனது வேலை குறித்தே இவளுக்கு முழுமையாகத் தெரியாது எனலாம். இதில் இத்தனை விபரங்கள் சொன்னால் எப்படி? அவன் கூறியது அனைத்தும் புரியாத பாடமாய் தோன்ற அவளுக்குத் தலை சுற்றியது.

அவன் அவளைக் குறித்தோ அவளுக்கு என்ன புரியும்? என்ன புரியாது? என்பதைக் குறித்தோ சற்றும் சட்டைச் செய்யாது தனது உலகில் ஆழ்ந்து இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவன் காட்டியதெல்லாமும், அவன் கூறுவதெல்லாமும் அத்தனையும் அவளுக்கு புரிந்தாக வேண்டும் எனும் பிடிவாதம் அவனில் இருந்தது.

விமலா ஏற்கெனவே பல்வேறு மன அழுத்தங்களில் இருந்தாள். திருமணத்திற்குப் பின்னர் தன்னைக் குறித்து தெரிந்துக் கொள்ளவோ, அவனைக் குறித்து பகிர்ந்துக் கொள்ளவோ செய்திருந்தால் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால், அவன் பிசினஸ் செய்யும் நிறுவனங்களைக் குறித்து அவனது மனைவி அன்றே அதுவும் திருமணம் முடிந்த சில மணித் துளிகளில் அப்போதே தெரிந்துக் கொள்ள தேவையென்ன?

‘தன்னுடைய விருப்பம் மதிக்கப் படாமலேயே கூட தான் அவனை திருமணம் செய்தாயிற்றே? இனியும் எதற்கு இந்த பந்தா? நான் பெரிய இடம் , பெரிய பணக்காரன், பெரிய பிசினஸ்மேன்..என எதற்காக இந்த அறிவிப்புகளும் அலட்டல்களும்?’அவளுக்குப் புரியவில்லை. ஆம், அவளது விருப்பமின்மை மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியாதது அல்ல. பல செய்திகளுள் ஒன்றாக அவையும் அவர்களுக்கு சென்றடைந்து இருந்தது.

இப்போது மதிய உணவு நேரம் முடிந்து முதல் மறுவீடென மண்டபத்திலிருந்து அவளது வீட்டிற்கு வந்திருந்தனர்.அவர்களை நடு வீட்டில் அலங்கரித்த இருக்கையில் அமர்த்தி இருந்தாலும் கூட கடந்துச் செல்வோர் பார்வை அவர்களிடமே பட்டு பட்டு சென்றது. புதுமணத் தம்பதிகளாயிற்றே?

‘உங்க வீட்ல யாராச்சும் ஸ்மோக் செய்வாங்களா?” இதென்ன கேள்வி தன்னிடம் கணவன் கேட்கும் இரண்டாவது கேள்வியின் பொருளும் அவளுக்குப் புரியவில்லை.

“இல்லை, அதெல்லாம் கிடையாது”

“உண்மையைச் சொல்லு உங்கப்பா”

“இல்லை அப்பா சிகரெட் குடிக்க மாட்டாங்க”

“உங்கண்ணன் குடிச்சாகணுமே, உண்மையைச் சொல்லு உண்மையைச் சொல்லு”

“இல்லை அவனும் குடிக்க மாட்டான்”

“ஹே பொய் சொல்லாத, இந்த காலத்தில யாராச்சும் சிகரெட் குடிக்காம இருப்பாங்களா?” நொய் நொய்யென அவன் நச்சரித்ததில்,

“இல்ல எனக்குத் தெரியாது, நான் பார்த்ததில்லை.”

“அப்ப உங்களுக்குத் தெரியாம குடிப்பானாக இருக்கும்” திருதிருவென முழித்தாளவள்.

“உங்க வீடு அவ்வளவு வசதியா இல்லை, இப்பவே எங்க வீட்டுக்கு உன்னை அழைச்சுட்டு போயிடட்டுமா?”

“ஆசையா? ஆதங்கமா?”அவன் கேள்வியின் பொருள் புரியாமல் திகைத்தாள். அவன் பேச்சுக்கள் தான் அவளுக்கு சற்றும் புரியவே இல்லையே?

சரி நான் இப்ப வரேன், சென்றவன் சில மணி நேரங்களாக வரவில்லை. தனியே அமர்ந்திருந்தவளைக் கண்டவர்கள் அவனை விசாரிக்க விமலாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

‘என்னமோ அவன் அவளிடம் சொல்லிக் கொண்டு போனது போல? வந்து வந்து விசாரிக்கின்றார்களே?’

பின்னர் உறவினர் ஒருவர் வந்து, “வாசல் பக்கம் நின்னு மாப்பிள்ளை சிகரெட் குடிச்சுட்டு நிக்கிறார், கூடவே அவங்க ப்ரெண்ட்ஸீம் நிக்கிறாங்க” எனவும் அவளுக்கு என்னச் சொல்வதெனத் தெரியவில்லை.

எல்லோரும் பார்க்க மணிக்கணக்கில் புகைப் பிடிப்பது நிச்சயமாக அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் முரணான விஷயம். வசதி படைத்தவன் என்றெல்லாம் யாரும் அதை பெரிது படுத்தாமல் விட மாட்டார்கள்.  தன்னை எங்கேயோ புரியாத சுழலில் மாட்டி வைத்து விட்டு, எல்லாவற்றிற்கும் தன்னிடம் காரணம் கேட்கும் உறவினர்களை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

தாலிதான் கட்டிருக்கான் அதில் ஒன்னும் மந்திர சக்திகள் இல்லை, கேள்விக் கேட்டு கொல்லாதீங்க மண்ணாந்தைகளா? கத்த வேண்டுமெனத் தோன்றிற்று.ஆனால், அவளால் கத்த தான் முடியுமா?

தொடரும்

4 COMMENTS

 1. Azhagana title sis… Avala vittiruntha avalachum nimmathiya irunthurupa.. venam venamnu sonna pillaiya pidichu… Ivan konjam sadist ah irukkano? Ava veetla smoke pannuvangalanu yen aluthi kettan? Avan seyyarathu sagajamnu sollava… But ivankitta etho prachanai irukku… Waiting for next epi sis… 🙂

  • Thanks dear
   இப்படித்தானே பல பெண்களுக்கு நடக்கின்றது.

   அவள் விதிவிலக்கு அல்ல…விதிவசப்பட்டவள்.

   ஆமாம் ஏதோ பிரச்சினை இருக்கு….கதையின் போக்கில் பார்ப்போம் மா.. ❤️

 2. இது தான் என் first novel on line படிக்கிறது அதுவும் டிரைவிங் பண்ணிட்டே
  பிரெஞ்சு ஆங்கில கிரைம் நாவல்கள் தான் (புத்தகமாக லைப்ரரியில எடுத்து ) படிப்பேன்

  உங்க fb போஸ்ட் களை படிச்சு ஒரு உந்துதல் உங்க நாவலசை படிச்சு பார்க்கணும்ன்னு
  வித்தியாசமா இருக்கு பிரண்ட் !

  தொடருவோம் …

  • அடடே

   நன்றிகள் பா

   இந்த கதை என் வழக்கமான ஸ்டைலில் இருக்காது… Anyway.. Thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here