இது இருளல்ல அது ஒளியல்ல_3_ஜான்சி

0
980

அத்தியாயம் 3

வெளியில் நின்று புகையை ஊதிக் கொண்டிருந்த வீரேந்திரன் இங்கு வீட்டின் உள்ளே தன்னந்தனியே அமர்ந்திருக்கும் அவனது மனைவி விமலாவிடம் அவளது உறவினர்கள் அனைவரும்“உன் கணவன் எங்கே?” “எங்கே? “எங்கே?”என கேள்விகள் கேட்டு அவள் சோர்வதற்கு முன்னதாக ஒரு வழியாக அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

ஏற்கெனவே திருமணத்தில் பல்வேறு குழப்பங்கள் விமலாவிற்கு, மரத்துப் போயிருந்த அவளது மண்டை அவன் அவளை தனியே விட்டுச் சென்ற நேரத்தில் சற்று சிந்தித்துப் பார்க்க முயன்றது.’அம்மா சொன்னது போல விமலாவிற்கு அவள் கணவன் பணிவாகவெல்லாம் தெரியவில்லை.ஆனால், வினோதமாக இருந்தான்’ எனலாம்.

விமலா இன்னும் முழுமையான நல்ல மன நிலைக்கு வந்தாளிலள். எனவே, அவளால் அவனுடன் எப்படி பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்னச் சொன்னால் அது சரி? என்னச் சொல்லக் கூடாது எனப் புரியவில்லை.

ஆரம்பம் முதலாக எந்த விஷயத்தையும் வீரேந்திரன் இரசிக்கவில்லை என்பதை அவளால் உணர முடிந்தது. திருமண ஏற்பாடுகள் பலவற்றிலும் ஏன் எல்லாவற்றிலுமே முரண்பட்டான் எனலாம். சொல்லப் போனால் ஆரம்பம் முதலே அவர்கள் கண்டதெல்லாம் வெத்து கெத்துதான்.

மாப்பிள்ளைக்கு இவர்கள் உடை வாங்க வேண்டுமென்பதாக இருக்க, “அவன் உடுத்தும் ப்ராண்டட் உடைகளை உங்களால் பார்த்து வாங்க முடியாது.அதனால் உடைக்கு பதிலாக பணம் கொடுத்து விடுங்கள்” எனச் சொல்லி விட்டனர். அதற்காக இவர்கள் எண்ணியதை விடவும் மூன்று மடங்கான பெரியதொரு தொகையை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுத்த பெற்றவர்களை இவளால் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

எல்லாவற்றிலும் ஆடம்பரம், பெருமை பீற்றல் இதனையே விமலா கண்டாள். பெண் வீட்டினர் கொடுக்கும் பணத்தில் தான் மணமகன் வீட்டினர் மணமகளுக்கும் உடைகளும் தாலியும் வாங்கி ஆக வேண்டும். கொடுத்த ஐம்பதாயிரத்தில் கொஞ்சம் விலை அதிகமான பட்டும், ஐந்து பவுன் அளவில் தாலிச் செயினும் அவளுக்கு செய்திருந்தனர்.

இந்தக் குடும்பத்தையும் சரி, தன் கணவனையும் சரி புரிந்துக் கொள்ளவே முடியவில்லையே அவளது சிந்தனை எதிரில் கேட்ட குரலில் கலைந்தது.

“நல்லாயிருக்கிறியா விமலா?” எதிரில் கருப்பாய், கட்டுடலுடன் நிற்கும் கிராமத்தான் அவளுக்கு மாமன் மகன் முறை ஆகவேண்டும். மாலதியின் உறவு என்பதாலோ அல்லது அவர்களளவிற்கு வசதி இல்லாததாலோ அந்த  அவளது தகப்பனால் உறவுகள் முக்கியத்துவப் படுத்தப்பட்டு இருக்கவில்லை.

“நல்லா இருக்கேன் அத்தான். நீங்க நல்லா இருக்கீங்களா?”வழக்கமாக உறவுகளுடன் பேசிப் பழகிய பாவனையில் அவளிடமிருந்து பதிலாக இலகுவான பேச்சு வந்தது. கூடவே ‘இவ்வாறு தனக்கு தாலி கட்டியவனிடம் ஏன் பேச முடியவில்லை?’ என்றும் சிந்தனை தோன்றியது.

அவர்கள் பேசிக் கொண்டதை அவள் அருகிருப்பவன் இரசிக்கவில்லையோ என்னமோ சட்டென எதையோ உணர்ந்தாற் போல அவள் அத்தான் அங்கிருந்து நகர அவர்களுக்குள் மௌனம்.

மௌனத்தை கலைக்கும் வண்ணமாக எதையோ பேச ஆரம்பித்தவன்,

“இன்றைய தேதி 27 ஆகஸ்டு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா?”

“இன்னிக்கு தேதி ஸ்பெஷலா? ஏன் எதுக்காக?” மலங்க மலங்க விழித்தாள்.

“இன்னிக்கு நம்ம கல்யாணம் நடந்திருக்கு, நான் அதைச் சொன்னேன்” பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னான்.

“ஐயோ ஐயோ சாரிங்க”தனது மனதின் பல்வேறு குழப்பங்களினூடே தான் தன் கணவனை காயப்படுத்தி விட்டதாக எண்ணி பரிதவித்தாள்.

முகத்தை திருப்பிக் கொண்டவனோ, “எப்பவுமே கணவன் மனைவிக்குள்ள சாரி, தேங்க்ஸ் இருக்கக் கூடாதுன்னு எங்கப்பா சொல்லிருக்காங்க”அதற்குப் பின்னர் அவன் அவளிடம் பேசினானில்லை.

எத்தனையோ முயன்றுப் பார்த்து அவள் ஓய்ந்து விட்டாள். திருமணத்தன்றே முகத்தை தூக்கிக் கொண்டிருப்பவனை அவள் என்ன செய்து சமாதானப் படுத்துவாள்?

ஒரு வழியாக மறுவீடு முடிந்து மணமகன் வீட்டிற்குச் செல்ல இரவாகிற்று.

காலையிலிருந்து உறவினர்கள் ஒவ்வொருவர் காலில் விழுந்து எழுந்து என விமலாவிற்கு ஒரு வழியாகி விட்டது. வீரேந்திரன் மட்டும் இவர்களது வீட்டினர் யாரிடமும் ஆசீர்வாதம் வாங்கி இருக்கவில்லை. இங்கு கணவன் வீட்டிலும் பெரியவர்களின் கால்களை விழுந்து விழுந்து வணங்கிக் கொண்டிருக்க கிடைத்த இடைவெளியில் மற்றொரு சொற்கத்தியை செருகினான்.

“நம் திருமணம் முடிந்ததும் என் அப்பாவிடம் அங்கு ஆசீர்வாதம் வாங்குவாய் என்று நான் நினைத்திருக்க நீ அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கவில்லையே?”

விமலா மறுபடி குழம்பினாள்… ‘ஆசீர்வாதம் வாங்கி இருக்க வேண்டுமோ? கோவிலில் பெரியவர்கள் கால் பணிவதுண்டா?’தெளிய விடாமல் மாற்றி மாற்றி எதை எதையோ அவன் பேசிக் கொண்டிருக்க அவள் தெளியாமல் யோசித்துக் கொண்டே இருந்தான்.

மாப்பிள்ளை வீட்டில் மறுபடி சின்னதாய் மேடையில் அமர்த்தி சில மணித்துளிகள் குட்டியாக ரிசப்ஷன் வைத்திருந்தனர். ஜாதிச் சங்க தலைவர்கள் வந்து மாப்பிள்ளை குடும்பத்தின் வழமையை புகழ் பாடி அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி விடைப் பெற்றனர்.

அவள் வீட்டில் தான் அவன் அவளை தனியே விட்டு வெளியே சென்றான் என்றால் அவனது வீட்டிலும் கூட தன் புது மனைவியை விட்டு விட்டு எங்கோ வீட்டினுள் செல்ல முயன்றான்.

வீரேந்திரனின் பெரிய அக்கா அவனுக்கு ஏதோ சைகை காட்டியவண்ணம் அவனை அடக்கி அமர வைத்தார் போல அவளுக்குத் தோன்றியது. அதன் பின்னர் அவன் வீட்டினுள்ளே செல்ல முயலவில்லை, அவர்களுக்குள்ளான பேசாமல் பேசும் அந்த உரையாடல் அவற்றுள் ஒன்றும் விமலாவுக்கு புரியவில்லை.

திருமணத்திற்கு முன்பு எப்படியோ, இப்போது திருமணம் முடிந்து அவனுடைய வீட்டிற்கு வந்த பின்னர் அவன் சகோதரிகள் முகமும் அவளை சற்று இகழ்வாய் பார்த்ததாக அவளுக்கு தோன்றியது.

“இத்தன பாத்திரம் தான் அனுப்பினாங்களாக்கும், இதுவா சீரு”இவளுடைய பெற்றவர்கள் அனுப்பிய ஒவ்வொரு பொருளையும் விரித்து வைத்து நெறுக்காத குறையாக அவன் பாட்டி அதனை குறைச் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டின் இரவு உணவு வேளை, அசைவ விருந்து வீட்டின் பெரிய பின் வளவில் (பின் கதவிற்கு அடுத்து இருக்கும் வெற்றிடம்) சாப்பாடு கனஜோராக நடந்துக் கொண்டிருக்க, புதுமணத் தம்பதிகளுக்கு தனியே உணவை எடுத்து கொடுத்து விட்டு தனிமையில் விட்டு நகர்ந்தனர்.

வீரேந்திரனோ அசிங்கமாய் புறங்கையில் வழிய உணவை பிசைந்தவன் அவளிடம் தன் கையை நீட்டி உணவை ஊட்ட யத்தனிக்க, வீட்டில் எச்சி உணவு உண்டிராதவள் இங்கு இவனது பாவனையில் அருவருப்பில் தத்தளித்தாள்.

‘இது பாசமா? அன்புத் தொல்லையா?’மனதிற்குள் நொந்துக் கொண்டாள். மனம் விரும்பாத திருமணம் தான் ஆனால் அதை விரும்புவதாக்க அவள் முயலும் அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகின்றதே? மனம் சோர்ந்தது.

உணவு நேரம் முடிந்து மகளை மாமியாரிடம் ஒப்படைத்து மாலதி ஒப்படைத்துச் செல்ல விமலாவின் கண்ணிலோ கண்ணீரே இல்லை. தனது விருப்பத்தை விடவும் மற்றவர்களின் விருப்பமே முக்கியமாக எண்ணிய அன்னையை அவளால் மன்னிக்கவே முடியவில்லை.

முதலிரவு

அந்த மாடியில் இருந்த தனியறை பூக்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. மனதிற்குள்ளாக வீட்டினர் அவளிடம் பலமுறை சொல்லிக் கொண்டிருந்த விஷயங்கள் ரோபோட்டிற்கு கொடுக்கப் பட்ட ஆணையாக மனதில் பதிந்து விட்டிருந்தன. “கணவனுக்கு பணிய வேண்டும், கணவன் வீட்டிலிருந்து ஒரு குற்றம் குறை எனப் பேச்சு வரக் கூடாது” இன்னும் என்னென்னவோ?

தன் உயிர் தோழி சொன்ன சம்பவமும் விமலாவின் மனதில் நிழலாடியது. “”அந்தக்கா பயந்து வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்…”உடலுறவிற்கு அஞ்சி நடுங்கிய மணமகள் மனதிற்குள் உருவகித்தாள். “அப்புறம் என்னாச்சுன்னா அந்த அக்கா ஹஸ்பெண்ட் வெளியில வந்து எல்லோரையும் கூப்பிட்டு நியாயம் கேட்டாராம்” ஓ… அந்தப் பெண்ணின் மானக் கேடு விமலாவின் மனதைச் சுட்டது. “உன்னைக் கட்டுனதே இதுக்காகத்தானே?, அதெப்படி நீ அவனை தொடக் கூடாதுன்னு சொல்லுவ?”மணமகனின் வீட்டினர் உடனே பெண் வீட்டினரை அழைத்து உடனே பஞ்சாயத்தைக் கூட்ட அதன் பின்னர் அந்த அக்காவிற்கு மறுக்க துணிவே எழவில்லையாம்.

‘அச்சச்சோ, அந்த அக்கா மாதிரி நமக்கும் மானக்கேடு ஆகிரக் கூடாது’மனதிற்குள்ளாக ஏற்கெனவே ஆயத்தத்தோடு தான் அவள் வந்திருந்தாள். திருமணத்திற்கு ஆயத்தமாகையில் அதனுள் இதுவும் அடக்கம் என்பதை அறியாதவளா அவள்?

அருகில் அமர்ந்தவன் மதியம் நிகழ்ந்த மனக்கசப்பை மறந்தவன் போல மிக மிக கனிவாக பேசலானான். நிறைய பேச்சுக்களுக்குப் பின்னர்…

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு… உனக்கு”

யோசித்தவளுக்கு அவன் இந்த இதமாய் அவளிடம் பேசினால் போதும் என்றிருந்தது. அவன் அவளிடம் லவ் யூ எதிர்பார்க்கிறான் எனப் புரிந்தாலும் கூட இப்போது அவளால் அவனை லைக் மட்டும் தான் செய்ய இயலுமென தோன்றியது.

“யெஸ் ஐ திங்க் லைக் யூ”

“ஓ அப்படின்னா நாம அப்புறம் லவ் செஞ்சதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்…”

“அப்படில்லாம் எதுவும் நான் சொல்ல மாட்டேன்”அவனது மறைமுக கேள்விக்கு சாதகமாக பதில் சொன்ன பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக அவளுக்கு என்ன நேர்ந்தது என அவளுக்குப் புரியவில்லை.

உடைகளை அகற்றுவதில் அவசரம், உடலுறுப்புகளை கையாள்வதில் அவசரம், தனது கால்கள் தெறித்து விழுந்து விடுமோவென அவள் திகைத்தாள். அழுதால் தவறாகுமோ? புரியவில்லை.

அவசரம், அவசரம், அவசரம் அவந் அவளிடம் தேடியதைக் கண்டுக் கொள்ள இயலாமல் எப்படியோ கண்டுப் பிடித்து… தட்டுத் தடுமாறி கதறக் கதற அவனின் அந்தப் போராட்டம் முடிந்து விட… அவள் சோர்ந்து கிடக்கையில்…

“ஆஹா நான் அப்பா ஆகிட்டேன்”

“ஆஹா நான் அப்பா ஆகிட்டேன்”

“ஆஹா நான் அப்பா ஆகிட்டேன்”

அவன் கட்டில் மேலேயே அதீத மகிழ்ச்சியில் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here