இது இருளல்ல அது ஒளியல்ல_4_ஜான்சி

0
971

அத்தியாயம் 4

அந்த அறையில் ஏசியின் குளிர் சில்லிட்டது, இருட்டாக இருந்த அந்த பகுதியில் படுக்கையில் இருந்ததோ ஒரு கர்ப்பிணி உருவம். அந்த உருவம் மெலிந்து கருத்துப் போய் இருந்ததை அந்த சிறிதான விளக்கொளியிலும் கண்டுக் கொள்ள முடிந்தது.

“ஆஹா நான் அப்பா ஆகிட்டேன், ஆஹா நான் அப்பா ஆகிட்டேன், ஆஹா நான் அப்பா ஆகிட்டேன்”அவளது கண்கள் மூடி இருக்க வாய் மட்டும் இயந்திரத்தனமாய் எதற்கோ பதில் சொல்லிக் கொண்டு இருந்தது.

அடுத்த கேள்வி கேட்க மருத்துவர் ஆயத்தமானார். தெளிவான வார்த்தைகளை பிரயோகித்து, தனது கம்பீரமான ஊடுருவும் குரலில்

“அன்றைக்கு உங்கள் முதலிரவில் உங்கள் கணவர் உங்களை முத்தமிட்டாரா? அன்பான அரவணைப்பு, ஆறுதலான பேச்சு… இவற்றுள் ஏதேனும் செய்தாரா?”அவரது கேள்வி அவளை பதில் சொல்ல உந்தியது. வழக்கம் போல நெற்றிச் சுருங்கி எதையோ யோசித்து பதில் சொல்ல நேரம் எடுத்த அந்த சப்ஜெக்ட்டிடம் (ஹிப்னோதெரபிக்கு உள்ளாகும் பேஷண்டுகளை சப்ஜெக்ட் என்று அழைப்பர்)  இருந்து சற்று நேரத்தில் தயங்கிய வண்ணம் பதில் வந்தது

“இல்லை…இல்லை… அப்படி ஒன்றும் இல்லையே…”

சொல்லி முடிக்கும் முன்பாக அப்பெண்ணின் உடல் தூக்கிப் போட்டது. பலவருடங்கள் முற்றிய ஆஸ்துமாவைப் போல அவளுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது. அவளோடு கூட அவளது வயிற்றில் இருக்கும் சிசுவும் மூச்சிறைப்பால் போராடிக் கொண்டிருக்க அதுவரையிலும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மருத்துவர் தனது மருத்துவமுறையை அங்கேயே நிறுத்தினார்.

அவர் டாக்டர் ஸ்டீஃபன் மிகவும் பெயர்பெற்ற சைக்காலஜிஸ்ட் அவரது நரை முடிகள் அவரது அனுபவத்தை பறைச் சாற்றிக் கொண்டிருந்தன. முகத்தின் தசைகள் அவரது பொய்மையற்ற குணத்தையும், நேர் பார்வை நேர்மையையும் எடுத்துரைத்தது.

தற்போது தனது பேஷண்டுக்கு ஹிப்னோதெரபி சிகிட்சை முறையை பயன்படுத்தி இருந்ததால் ஹிப்னடிச மயக்க நிலையினின்று வெளிவந்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு நிதானமாக எழுந்து வர உரிய நேரம் அளித்து தனது டேபிளில் அமர்ந்து குறிப்புகளை சரிபார்த்துக் கொண்டு இருந்தார்.

பெண் தனது எதிரில் வந்து அமரவும் மருத்துவர் பெல் அடித்தார். வெளியிலிருந்து கதவை திறந்துக் கொண்டு பெண்ணின் உறவினர்களான அந்த இரு பெரியவர்கள் உள்ளே வந்தனர்.

“பொண்ணுக்கு சரியாகிடும்ல சார்?”தயங்கி கேட்டது பெண்ணின் அம்மா போலும்..

“ஆமா சார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்க அட்ரஸ் தேடி வந்தோம், எப்படியாச்சும் சரியாக்கிடுங்க சார். கல்யாணமான பொண்ணு சார்” ‘ஓ இது அப்பாவோ?’ மருத்துவரின் கண்கள் அளவிட்டது.

“சரியா தூங்குறதில்ல, சரியா சாப்பிடறது இல்லை. நல்லாவே பேசுறது இல்லையாம் சார். நீங்கதான் ஊசி இல்ல மருந்து மாத்திரை கொடுத்து சரியாக்கிடணும்”அம்மா மறுபடியும்

“ஏம்மா உன் மாமியார் வீட்டுக்கு போகறியா?” டாக்டர் கேட்க மலங்க மலங்க விழித்தவாறு விமலா சரியென தலையாட்டினாள்.

“சரிங்க சார்”தயங்கியே பதில் வந்தது.

“உனக்கு அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?” மருத்துவர் கேட்க அவள் தாயை நோக்கிப் பார்த்தாள்.

“அங்கென்ன சார் பிரச்சனை? தங்கமா வச்சு தாங்குறாங்க. டீசண்டானவங்க, காட்டு மிராண்டித்தனமா அடிக்கிறது சண்டை போடுறதுன்னு ஒன்னும் கிடையாது சார். இவ மாமியார் வீடு அவ்வளவு தன்மையானவங்க. மாப்பிள்ளை சத்தமா பேசக் கூட மாட்டார்னா பார்த்துக்கோங்க. இப்ப கூட உங்க மகளை சீக்கிரமா சரி செய்து அனுப்புங்கன்னு சொன்னாங்களே தவிர இந்தப் பிள்ளை ஒரு வேலை கூட செய்யாம மந்தமா உட்கார்ந்து இருக்கிறதைப் பற்றி ஒன்னுமே குறை சொல்லலை தெரியுமா டாக்டர்”

“ஓ”அவர்களுக்குப் பதிலாக ஒன்றும் சொல்லாதவர்

“நர்ஸ்”என்று குரல் கொடுக்க வந்து நின்ற நர்ஸிடம்

“நர்ஸ்…மிஸ். விமலாவுக்கு பிபி செக் செய்ங்க அப்படியே கொஞ்ச நேரம் …” ஏதோ சொல்ல இவர்களுக்குப் புரியவில்லை.

விமலா அங்கிருந்து நர்ஸீடன் கடந்துச் செல்ல,

“இங்க பாருங்க மேடம், இந்த ட்ரீட்மெண்ட் இப்படி ஒரு நாள்ல முடியறதில்லை. சொல்லப் போனா உங்க மகளுடைய தற்போதைய உடல் நிலை காரணமாக முழுவதுமாக என்னால் விபரங்களை சேகரிக்கவும் முடியலை, இன்னும் ஐந்தாறு சிட்டிங்க்ஸ் (ஹிப்னடிச மயக்கத்தில் ஆழ்த்த வேண்டிய விசிட்களை சிட்டிங்க்ஸ் என்றழைப்பர்) தேவைப்படலாம்”

எதிரில் இருப்பவர்கள் முகத்தில் தனது பேச்சினால் எழுந்த நம்பிக்கையின்மை குறித்து கணித்தார்.

“நீங்க உங்க பெண்ணை மறுபடி என்னிடம் அழைச்சுட்டு வருவதும் வராததும் உங்கள் விருப்பம், நீங்க நினைக்கிற மாதிரி ஒரே நேரத்தில் குணமாக இது காய்ச்சலோ, சளியோ இல்லை.”

“அப்ப எங்க மக பைத்தியம்னு சொல்றீங்களா டாக்டர்” பெண்மணியின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

“இல்லைமா, உங்க மகள் பைத்தியம் இல்லை”

“ஓ” கண்களை இருவரும் துடைத்துக் கொண்டிருந்தனர்.

“பிரச்சனை என்னன்னு கணிக்க சில நாளாகும்னு சொல்ல வரேன், அதற்குள்ளாக அவளை மாமியார் வீட்டில் விடணும்னு அவசரமா இருந்தால் நீங்க ஒன்னு செய்யலாம்”

“என்னங்க சார்?’

“உங்கள்ல மயானத்துக்கு அட்வான்ஸ்ல புக் செய்யற வசதி இருந்ததுன்னா அதை செய்துட்டு அதுக்கப்புறம் பொண்ணை அனுப்பி வைங்க… சீக்கிரம் செய்தி வரும்.”ஏதோ ஒரு கடுப்பில் வார்த்தைகள் வந்து விழுந்தன. அவரை முசுட்டு டாக்டர் என்று சும்மாவா மக்கள் அழைக்கின்றனர்.

“இதென்னச் சொல்லுறீங்க சார்? பெரிய டாக்டரா இருந்துட்டு இப்படி அச்சாணியமா பேசலாமா?” தாய் கோபத்தில் பொரிந்தாள்.

“எங்க மருமக எங்க புள்ளைய விளையாட்டுக்கு கூட அடிச்சது கிடையாது தெரியுமா?”

“உடம்புல அடிச்சா தான் அடியா சார்?”எதிரில் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களை கண்டுக் கொள்ளாமல்…பெல் அடித்தார் டாக்டர் ஸ்டீஃபன்.

“நர்ஸ், அடுத்த பேஷண்ட் அனுப்புங்க”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here