இது இருளல்ல அது ஒளியல்ல_5_ஜான்சி

0
1006

அத்தியாயம் 5

திருமணத்தின் அடுத்த நாள் காலை

வீட்டில் சொல்லி விட்டிருந்தபடி படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கச் செல்ல வேண்டுமென எழ முயல, “ச்சீ பேட் ஹேபிட், நீ அதை இப்படி பார்க்க ஆசைப்படுவன்னு நான் நினைக்கலை” சடாரென தனது உடையைமேலே இழுத்து விட்டுக் கொண்டு தன்னை மறைத்தான்.

திடுக்கென புரியாமல் விழித்தவள் அவனது பேச்சுக்களின் பொருள் புரியாமல் திருதிருவென விழித்தாள்.

எழுந்து உடையை சரிசெய்தவள் தனது பெட்டியில் இருந்து அவசரமாக உடை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினாள். காலை ஐந்தரை மணி ஆனால், யாரும் வீட்டில் விழித்து இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் இருந்த பாத்ரூமில் துவைக்காத துணிகள் குவிந்து கிடந்தன. பல்துலக்கவும், குளிக்கவும் வழி தேடினாள். இலட்சக் கணக்கில் திருமணத்திற்கு செலவழித்த தன் பெற்றவர்கள் தனக்கு தற்போது உபயோகிக்க கூடுதலாக புது பேஸ்ட், ப்ரஷ், டவல், சோப்பு இதையெல்லாம் வாங்கி தந்திருக்கலாமோ? மனம் சடைத்துக் கொண்டது.

அவள் நல்ல மன நிலையில் இருந்தால் அவளே கூட அதனை வாங்கி வைத்திருந்து இருப்பாள். மனதின் இறுக்கம் அவளது சிந்தனைகளை மழுங்கடித்து விட்டிருக்க, அவளும் தனக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கவில்லை. வீட்டினரும் அவளுக்கான பொருட்களை அவளுக்கு தந்து விட்டிருக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டினர் பார்த்துக் கொள்வார்கள் எனும் நம்பிக்கையோ என்னமோ?

அங்கிருந்த பேஸ்டை விரலில் எடுத்து பற்களை தேய்த்துக் கழுவினாள். இதுவரையிலும் குளிர் நீரில் அவள் குளித்ததே இல்லை எனலாம். ‘முன் பின் தெரியாத இடத்தில் யாரிடம் போய் வெந்நீர் கேட்க?’ சற்று அருவருப்பாக உணர்ந்தாலும் கூட வேறு வழியில்லையே? ஒரு வழியாக என யாரோ உபயோகித்த அந்த சோப்பை நன்கு கழுவி உபயோகித்து, குளிர் நீரை வெடவெடக்க தலைக்கு ஊற்றி குளித்து முடித்தாள்.

முதல் நாள் கெட்ட மருமகள் எனப் பெயர் வாங்கி விடக் கூடாது என பிரயத்தனப் பட்டு ஐந்தரை மணிக்கே எழுந்து புறப்பட்டு அமர்ந்து இருக்க அங்கு ஒருவரையும் காணோம். அங்கு அவர்கள் கிச்சனில் வேலை எதுவும் செய்ய அவளுக்கு பயமாக இருந்தது. எனவே, காலை நேரம் ஒரு காஃபிக்கு கூட வழியில்லாமல் திருதிருவென அமர்ந்திருந்தாள். மாடியறையில் அவள் கணவன் நன்கு உறங்கிக் கொண்டு இருக்க, அங்கு இப்போது செல்வது தவறாக எண்ணப் படும் என்பதால் அங்கேயே சிலை போல இருந்தாள்.  

முதலில் எழுந்து வந்தவள் அவ்வீட்டு பாட்டியே, முதுகு கூனிய வண்ணம் இருந்தாலும் திடகாத்திரமான நடைதான். விருந்தாட வந்திருக்கும் உறவு பாட்டி என அவள் அறிந்து இருந்தாள். மறுபடி புதுப் பெண்ணின் பாத்திரங்களைக் குறித்த பேச்சு திரும்பியது.

ஒரு போல சற்று பெரிய சைஸில் அவளது பெற்றோர்கள் பத்து டம்ளர்களை வாங்கி அடுக்கி இருந்ததை அவள் பார்த்திருந்தாள். அந்த டம்ளர்களை தான் இப்போது அந்தப் பாட்டி இகழ்ச்சியாக மறுபடியும் என்னமோ சொல்லிக் கொண்டு இருந்தார் போலும்.

விமலாவிற்கு அவசரமான அந்த திருமணம், கணவனின் முரணான பேச்சுக்கள் என்று மூளையே கலங்கலாக இருந்ததால். எதையும் நிறுத்தி நிதானமாக யோசிக்க அவளால் இயலவில்லை.அதனால் பாட்டியை பொருட்படுத்தவில்லை, யாரும் என்ன சொன்னாலும் சரிதான் என்பதான் பொம்மை மனநிலை.

வீரேந்திரன் தூக்கம் கலைந்து எழவும், அவர்கள் திருமண உடைகளை மறுபடி அணிந்து அவளது வீட்டிற்கு மறுவீடு சம்பிரதாயத்திற்கென சென்றனர். திருமணத்தன்று தம்பதிகள் பெண் வீட்டிற்குச் செல்வது முதலாம் மறுவீடு. திருமணத்திற்கடுத்த நாள் செல்வது இரண்டாம் மறுவீடு. சில நாட்கள் கழித்து மறுபடி செல்வது மூன்றாம் மறுவீடு. ஆகையால், இவர்கள் இப்போது சென்றது இரண்டாம் மறுவீடு சம்பிரதாயம். மணமகள் வீட்டில் உண்டு, ஓய்வெடுத்து திரும்ப வருகையில் அங்கிருந்து புதுத்துணி அணிந்து வருவது ஊர் மரபு.

அந்த மறுவீட்டிற்கெனவும் கூட பிராண்டட் உடை வாங்க வேண்டுமென மாப்பிள்ளை மாமனாரிடம் பணத்தை ஏற்கெனவே கறந்து விட்டிருந்தான், அதிலெல்லாம் வெகு சமர்த்தன் தான்.

விமலாவை அம்மா தனியாக அழைத்துச் சென்று அவர்கள் மணவாழ்க்கை ஆரம்பித்து விட்டதா? என ஒளிவு மறைவாக கேட்க ஆம் என விமலா தலையசைத்தாள். மகளிடம் அந்த விஷயத்தைக் கேட்டு தெரிந்துக் கொள்ளும் முன்பாக மாலதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது, ஆனால் கேட்ட பின்போ மகிழ்ச்சி.

அம்மாவின் திருப்தியான முகம் பார்த்த பெண்ணவளுக்கு ‘தனக்கு முன் தினம் நிகழ்ந்தது தமக்கு பிடித்ததோ, பிடிக்கவில்லையோ அது எதுவாகினும் அதைக் கேட்டு அம்மாவிற்கு மகிழ்ச்சி எனில் நிகழ்ந்தது நன்மைக்கே… நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்’ எனும் திருப்தியான மன நிலை உண்டாகிற்று.

மதிய நேரம் புதுமணத் தம்பதிகளான அவர்களுக்கு இடம் கொடுத்து அவள் வீட்டினர் வெளியேறி இருந்தனர். அவர்கள் முன் வீடு சற்று சின்னது ஆனால் முற்றம் பெரியது. இவர்களுக்கு படுக்க இடம் கொடுத்து விட்டு அவர்கள் அங்கு முற்றத்தில் தான் இருக்க வேண்டும் என அவளுக்குப் புரிந்தது. அத்தனையாக இவர்களுக்கு இராஜ உபச்சாரம் தான்.

வீட்டிலிருந்து எல்லோரும் வெளியேறி இருக்க, தூங்கிக் கொண்டிருந்த அவளது அண்ணன் மகன் ராஜா மட்டும் அவர்களோடு அந்த அறையில் தொட்டிலில் இருந்தான். அதற்கடுத்து இருந்த கட்டிலில் தான் இருவரும் படுத்திருந்தனர். இரவு தூக்கம் கெட்டிருக்க அவன் மறுபடி அசந்து தூங்கினான் என்றால், அவள் தூக்கமின்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

‘அது என்னவானாலும் சரி, பிரச்சனை இல்லாமல் தனது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சனை என்று திரும்ப அம்மா வீட்டிற்கு வரவே கூடாது’அவள் மனதிற்குள் தீர்மானம் உருப்பெற்றது. ஆம் இப்போது அவளுக்கு தனது குடும்பத்தினரை பார்த்தும் கூட மிகவும் பயமாக இருந்தது. என்ன பிரச்சனை என்றாலும் தான் திருமணம் செய்துக் கொண்ட குடும்பத்தில் முற்றும் முழுதாக பொருந்திப் போவது சிறந்தது எனத் தோன்றியது.

‘என்னவானாலும் சரி, அம்மா வீட்டிற்கு திரும்பி வரும் நிலை வரவே கூடாது’ மனனம் செய்யலானாள்.

அருகில் தூங்கிக் கொண்டிருப்பவன் மீது பார்வை படிய மனதிற்குள்ளாக‘இவன் முரணாக தெரிகின்றானே? அன்பிற்கு நிறைய சக்தி உண்டு எங்கின்றார்களே? நானும் என் கணவனை மிகவும் நேசித்து, அன்பு செய்து சரி செய்துக் கொள்ளப் பொகின்றேன்.’ மனதிற்குள் இறையை வேண்டிக் கொண்டாள். நிலைமை சீராகி விடும் எனும் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டு இருந்தாள். எல்லா நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறுவது இல்லையோ? என்னமோ?

யோசனையில் அமர்ந்திருந்தவள் எதிரில் இருப்பவனை கவனிக்க மறந்தாள். வீரேந்திரன் எப்போது எழுந்தானோ தெரியவில்லை சட்டென்று இவளது சேலைக்கும், ஜாக்கெட்டுக்கும் இடையேயான வெற்று இடையில் நறுக்கென கிள்ளி வைத்து சிரிக்க திகைத்தாள்.

அதே நேரம் தொட்டிலில் இருந்து அண்ணன் குழந்தை நெளிய ஆரம்பிக்கவும் எழுந்தவள் அவனை தூக்கத்திற்கு ஆட்டி விட முயன்றாள். அவனோ மொட்டு மொட்டென்று முழுக்க முழித்து விட்டிருந்தான். முழித்த சின்னவன் இன்னும் சற்று நேரத்தில் அன்னையை தேடுவான் என்பதால், அண்ணியை அழைத்து குழந்தையை கொடுக்கலாம் என்று கதவை திறக்க முயன்றாள். முன்னறைக்கு செல்லும் கதவு வெளியிலிருந்து தாழிடப் பட்டிருந்தது. குழந்தையை தூக்கிக் கொண்டு, நடு அறைக்கு அடுத்து இருக்கும் விறகடுப்பு சமையலறையின் கதவை திறந்து வெளியே வந்தவள் அண்ணியை தேடி குழந்தையை கொடுத்தாள்.

புதுமணத்தம்பதிகள் முழித்து விட்டார்களென்று வீடு மறுபடி பரபரப்புற்றது. சாயங்கால பலகாரம் முடித்து வீடு திரும்பினர்.

கணவன் எங்கோ சென்று விட்டிருக்க, அவர்கள் வீட்டில் எல்லாம் வேலைக்காரர்களே செய்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் தொலைந்த குழந்தையாக விமலாவும் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கென அங்கே எந்த வேலையும் இல்லை. யாரும் வா என்றோ, போ என்றோ சொல்லவும் இல்லை. உரிமையற்ற உறவாக கண்டுக் கொள்ளப் படாதவளாக அமர்ந்து இருந்தாள்.

அவளது கவனம் சில விஷயங்களை உள்வாங்க முயன்றது. கணவன் புது நிறமென்றாலும் அவனது அக்காக்காள் இருவரும் அட்டைக் கறுப்பு நிறம் எனலாம். திருமணமாகாத அவனது தங்கை சற்று அழகாக இருந்தாள். வீட்டின் ஆண்மகன் கணவன் மட்டுமல்ல திருமணமான பெரிய அண்ணனும், ஒரு தம்பியும் கூட இருப்பதாக அறிந்தாள். எல்லாமே பேச்சு வார்த்தைகளில் அவள் உணர்ந்துக் கொண்டவை.

அத்தனை உறவுகள் இருந்தும் யாருமே அவளிடம் வந்து சகஜமாக பேசி இருக்கவில்லை. பெண் பார்க்க வந்த போது,தன்னிடம் சகஜமாக பேசியவர்கள் இவர்கள் தானா? ஆச்சரியமாக உணர்ந்தாள். இந்தியாவும் பாகிஸ்தானும் போல விமலாவுடன் அவர்களது பேசும் பழகும் முறை இருந்தது.

அவர்களுள் எதை பேசினாலும் தனியாக, இரகசியமாக பேசிக் கொண்டனர். அவர்களோடு அவளால் இயைந்து போக முடியவில்லை. அனைவருக்கும் விமலாவின் முக இலட்சணத்தில் சற்று பொறாமையோ? இல்லை பயமோ? இல்லை வேறெதுவுமோ? இல்லை என்னவாக இருக்கும்?

விமலா தனது இரவு உணவு முடித்து தட்டை கழுவ, சோப்பை தேடுகையில் அது கிட்டாமல் போக வெறுமனே தட்டை நீரால் கழுவி வைத்தாள். அதுவரை அவளிடம் பேச முற்படா விட்டாலும் தட்டு விஷயத்தில் அவளிடம் அவளது சின்ன நாத்தனார் இயல்பு போல பேச முயன்று தோற்றாள்.

“அண்ணி அதை வேலையாள் வந்து கழுவி வச்சிடுவாங்க, நீங்க கழுவ வேணாம்”

முகம் சுளிப்பிற்கு மாறி இருந்தது.தன்னை அவர்களளவிற்கு சுத்தமில்லை என நினைக்கின்றாள் போலும் என எண்ணியவள் அவள் முக பாவனையை புரிந்த வண்ணமாக அந்த பாத்திரம் கழுவும் சிங்கில் தான் உண்ட தட்டை வைத்தாள்.

மறுபடி அதே இரவு, மறுபடி அதே வீரேந்திரனின் பத்து நிமிட அவசரம் மறுபடி அவளது அதே அவஸ்தைகள்.

‘ம்ம்ம் அழக் கூடாது’, தனக்குள் மனதை தேற்றிக் கொண்டாளவள்.

இரண்டாம் நாள் அதே காலை வேளை இப்போது மணி பதினொன்றாகி இருந்தது. அங்கு காலை உணவு எனும் வழக்கமே கிடையாது போலும், விமலாவின் வயிற்றில் பசி மிகுந்து எலிகள் உருண்டோடத் தொடங்கின.

இனி என்னச் செய்வது என நினைக்கும் முன்பாக பதினொன்றரைக்கு அவள் கையில் வந்திருந்தது காலை உணவு புட்டு. ஆசுவாசமாக உண்டவள். “அவங்களுக்கு சாப்பிட கொண்டு போகட்டுமா?” என கணவனுக்காக கேட்க அனைவரும் ஒன்று போல நகைச்சுவையைப் போல சிரித்து வைத்தனர்.

“அவன் எப்பவுமே காலையில சாப்பிடறது இல்லை”

“ஓ, சரி” என்றவள் ஏதேனும் வேலை செய்யட்டுமா? எனக் கேட்க யாரும் அவளை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. மதிய உணவு நேரம் தான் அவள் கணவனைக் கண்டாள். அவன் குளித்ததையோ பல் விளக்கியதையோ கண்டாளில்லை. அவர்கள் வீட்டு நடைமுறைகள் அவளுக்கு புரியவில்லை.

சற்று நேரம் கழித்து பார்த்த போது தனது இரண்டு அக்கா கணவன்களுடனும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் இவனை விடவும் களையான தோற்றம் கொண்டவர்களாக இருந்தனர். அக்கா கணவர்களுடன் நல்ல நெருக்கம் போலும், மனம் பதிய வைத்துக் கொண்டது.

இந்த இருவரும் திருமணத்தின் மூலம் வந்த சொந்த முறையின் படி பார்த்தால் விமலாவிற்கு அண்ணன்களாக நடந்துக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால், அவர்கள் திருமணத்தன்று விமலாவை சீண்டியதும் விளையாட்டும் நக்கலுமாக கடந்ததும் அவர்களிடம் அவளால் இயல்பாக பேச முடியவில்லை. எனவே, அருகே செல்லாமல் இருந்துக் கொண்டாள்.

திருமணத்தன்று அவனோடு புகைப் பிடித்தவர்களுள் அவர்களும் அடக்கம் என்றறிந்ததில் இருந்து பெண்ணையோ, பெண் வீட்டையோ அவர்களில் யாரும் மதிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக அவளுக்குப் புரிந்து விட்டிருந்தது.

மதியம் மணி பண்ணிரெண்டரை அப்போதுதான் நடுவீட்டில் அமர்ந்து அவளது பெரிய நாத்தனார் சப்பாத்தி உருட்ட ஆரம்பிக்க, தயங்கி தயங்கி அவளுடன் அமர்ந்தாள். அவளுக்கு இன்னும் வட்டமாய் சப்பாத்தி உருட்ட தெரியாதுதான். ஆனாலும், எவ்வளவு நேரம் சும்மா இருப்பது? “நான் செய்யட்டுமா?”ஏனக் கேட்டு, எதையோ செய்ய முயலும் முன்பாக மாடியிலிருந்து சப்தம் கேட்க எழுந்தாள்.

“விமலா கொஞ்சம் வா”

வீரேந்திரன் அவளை அழைக்க, அருகில் இருந்தவர்களை அனுமதி கோரும் வண்ணம் பார்த்தவள் அவர்கள் இவளை கண்டுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து, மாடிக்குச் சென்றாள். அன்று வெளியில் எங்கும் செல்வதாக இல்லை என்பதால் சேலை அணியாமல் சுடிதாரில் இருந்தாள். மாடிக்குச் செல்லும் போதும் தனக்குள் சிந்தனையில்…

‘எதையோ பேச அழைக்கின்றான் போலும்?’எண்ணிக் கொண்டாள்.

அவன் அருகாமையில் கட்டிலில் அமர்ந்திருக்க பேச்சு ஆரம்பித்தது. தன்னுடைய வேலையை குறித்து எதையோ சொன்னவன், ‘உனக்கு இன்னும் ஊர் எல்லாம் சுத்தணும்னு ஆசை இருக்கா இல்லை என்னோட ஆஃபீஸ் இருக்கிற ஊருக்கு நாம போயிடலாமா?’

பதில் சொல்வதற்கு அவளிடம் எதுவும் இல்லை.ஏனெனில், இதுவரை யாரும் எதையுமே அவளிடம் சொல்லாதிருக்க அவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

“எனக்கெதுவும் தெரியலை, உங்க விருப்பம்” மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

சடாரென அவர்களது அறையின் கதவு திறக்க, அவள் தனது மாமியாரை அங்கே எதிர்பார்த்து இருக்கவில்லை. கட்டிலி இருவரும் இருந்த விதத்தில் அவளுக்கு கூச்சமாக இருந்தது.

“என்ன நம்ம வேலையை போட்டுட்டு எத்தனை நாள் இங்கே இருக்க முடியும்? எப்ப திரும்ப போக டிக்கெட் எடுக்கணும்னு சொன்னா தானே எடுக்கச் சொல்ல முடியும்?”மகனிடம் படபடவென பொரிந்தாள் வீரேந்திரனின் அன்னை.

“இன்னும் மூணு நாள் மம்மி”அவன் பதிலளித்தான்.

“சரி” வந்த வேகத்தில் அவர் திரும்பிச் சென்றார்.

மறுபடி அவர்கள் அறைக்கு வெளியே சில சப்தங்கள். மாடியில் இருந்த ஒற்றை அறைக்கு அடுத்து பால்கனிதான். இவர்கள் அறை அடுத்து வாயிலுக்கு அந்தப் புறம் யாரோ வந்திருக்க அவளை உள்ளறையில் இருக்கச் சொல்லி விட்டு அவன் வெளியே சென்றான். அவர்கள் பால்கனி சென்று உரையாடி இருக்க வேண்டும். பிறருக்கு கேட்காது எனும் தைரியமோ என்னமோ அவனோடு பேசியது யாரென்று தெரியவில்லை ஆனால், அவர்கள் குரல் மட்டும் கொஞ்சம் விட்டு விட்டு உள்ளே வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

“என்னடா, ஒரு வாரம் இரண்டு வாரம் ஊர் சுத்திட்டு வரப் போறேன்னு சொன்ன,இப்ப உடனே புறப்பட்டுட்ட?”

“அது விருப்பமில்லாம கட்டுனதால உடன்பட மாட்டானு நினைச்சிருந்தேன்.கொஞ்சம் ஊர் சுத்திக் காட்டி, பேசி மடக்கலாம்னு… ஆனா அவ மடங்கிட்டா. இனி எதுக்கு நேரத்தை வீணாக்கிக் கிட்டு… அதான் ஊரப் பார்த்து திரும்பப் போயிடலாம்னு…”

“பொண்ணை இல்லை கண்ணையே ஒப்படைக்கிறேன்.சின்னப் புள்ள …சின்னப் புள்ளன்னு சொன்னானுங்க… இப்படி முத நாளே மடங்கிட்டா… பயங்கர உஷார் போலடா…அலையுறவ போலிருக்கு”

கிசுகிசுவென சிரிப்புகளும் பேச்சுக்களும்…இன்னும் என்னென்னவோ? …

சற்று  நேரத்தில் சட்டென உள்ளே வந்தவன் கதவை தாளிட்டான். அவனோடு கூட அழையா விருந்தாளியாக புகையும் வந்தது. எதற்காக சுடிதார் அணிந்தோம் என அவள் வருந்தும் படியாக, அவளது அடுத்த பத்து நிமிடம் கழிந்தது.

அவசரத்தில் அவனது பேண்ட் பெல்ட் கீறி இருக்க, அவளது உள் தொடையில் ஆழமாக காயம் உண்டாகி இருந்தது. அது வெளியில் சொல்ல முடியாத காயங்கள் பலவற்றுள் மற்றொரு காயமாக மாறி விட்டிருந்தது.

இன்னும் பற்பல காயங்களும் அவளுக்கு காத்திருந்தனவே? அவள் மீள்வாளா?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here