இது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி

0
984

அத்தியாயம் 7

கேரளா

அது சுற்றுலாத் தலமாக மாறியிருந்த பழங்கால அரண்மனை. கணவன் தங்களுடன் வந்த உறவினனுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க ஏதோ தன்னை ஏடாகூடமாக கேள்வி கேட்காமல் விட்டால் சரி எனும் மன நிலையில் விமலா இருந்தாள்.

அவளது சூட்டு வலிக்கு அவன் பார்த்துப் பார்த்து ஓரிரு முறைகள் இளநீர் வாங்கித் தர கணவன் நல்லவன் தான் எனும் நேர்மறை சிந்தனைக்கு நீர் வார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். அந்த மியூசியமாக்கப் பட்ட மன்னரின் படுக்கையறையில் இருந்த புகைப்படத்தை அவள் நிதானமாக பார்வையிட்டுக் கொண்டு இருந்த போது மற்ற சுற்றுலாப் பயணிகள் இல்லாத அந்த நேரம் அதிசயத்திலும் அதிசயமாக அவளது கன்னத்தில் அவன் முத்தமிட திக்குமுக்காடி மகிழ்ந்தாள்.

“என் கணவன் இப்படி இருந்தால் போதும்” மனம் குதூகலித்தது.

அவனது கவனிப்பில் சூட்டுவலி குறைந்திருக்க, மனதின் மகிழ்ச்சியில் இன்னும் அழகாக தோற்றமளித்தாள். அந்த நாளை சுற்றி விட்டு வீடு திரும்ப இருட்டி விட்டிருந்தது, அமைதியாக கழிந்தது அந்த இரவு. அடுத்த நாள் வீரேந்திரன் குடும்பத்தினர்கள் இருக்கும் அந்த நகரத்திற்கு செல்ல வேண்டியதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன.

பெண் தன் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள் என்பதால் அவளது வீட்டினர் வந்து சந்தித்துச் சென்றனர். அந்த பச்சை நிற சுடிதாரில் அவளது அழகு அள்ளியது. தாய் தந்தை வந்துச் சென்ற சில நேரத்தில் அவளது அத்தை வந்தார். அமர வைத்து பேசியவளுக்கு தனது சொந்தங்களைப் பார்த்த மகிழ்ச்சி. அத்தை விடைப்பெற்றுச் செல்லவும் அவளது பார்வை வாயிலில் அமர்ந்திருந்த கணவன் மேல் பட அவன் அவளை ஆழ்ந்துப் பார்த்திருந்தான்.

அந்தப் பார்வையில் அவளுக்கு கூச்சம் பிடுங்கித் தின்றது. தடுமாறியவள் தங்களது அறைக்குச் சென்று பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தாள். இப்போது அவர்கள் இருந்த வீடும் அவர்களது தான் என்றாலும் கூட அதே ஊரில் திருமணமாகி இருக்கும் மகளின் வசம் அந்த வீடு இருந்தது. திருமணத்திற்காகத்தான் அனைவரும் ஒருசேர ஊருக்கு வந்தனர் போலும், மற்றபடி அந்த வீட்டில் எப்போதாவது ஒருமுறை வருவதுதானாம் இதுவும் அவளுக்கு கிடைத்த செவிவழி செய்திகளுள் ஒன்று.

‘எவை எவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்? எவை எவைகளை விட்டுச் செல்ல வேண்டும்’எனும் சிந்தனையில் அவள் அங்கேயே விட்டுச் செல்ல வேண்டிய தனது பொருட்களை ஒதுக்கிக் கொண்டு இருந்தாள். தற்போது ட்ரெயினில் அதிக லக்கேஜ் கொண்டுச் செல்ல வேண்டி இருப்பதால் உடைகளைத் தவிர மற்றனைத்தையும் அந்த வீட்டிலேயே விட்டுச் செல்ல வேண்டுமென மாமியார் சொல்லியாகிற்று.

கடந்த நாட்களின் இலகுத் தன்மையில் மாடியில் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு அவள் தனது பொருட்களை அடுக்கிக் கொண்டு இருந்தாள். சப்தமிடாமல் அவளது அருகில் வந்து நின்றவனை ஏறிட்டாள்.

“உனக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாதில்ல?”மறுபடி சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்க…

என்னச் சொல்ல வருகிறான்? என்றே அவளுக்குப் புரியவில்லை, அவனே சொல்லும் மட்டும் பதிலைக் கேட்க ஆயத்தமாக அவள் நின்றாள். ‘என்னச் சொல்ல வருகிறான்?’ எனும் யோசனையில் அவளது நெற்றிச் சுருங்கியது.

நான் நம்ம கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னாடித்தான் இதெல்லாம் விட்டேன். அவன் விரல் நீட்டிய இடத்தில் உயரத்தில் உயர்தர மதுப்பட்டில்கள் அணிவகுத்து இருந்தன.

அதிர்ச்சியில் அதைக் கண்டு வாய்பிளந்து நின்றவளிடம்

“அதனாலத்தான் அந்த மூணு நாள் என்னால முடிஞ்சது”குரலை தாழ்த்தி அவன் சொன்ன பாவனையில் அவன் என்னச் சொன்னான்? என அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. “எந்த மூணு நாள்? என்ன முடிஞ்சது?” மனதிற்குள் மற்றக் கேள்விகளுள் அவைகளும் சேர்ந்துக் கொண்டன.

குழந்தையாய் மிரண்டு பார்க்கும் அவளிடம் அவன் இளித்தான்.

“அதென்ன எல்லா ட்ரெஸீம் இத்தனை பட்டிக்காட்டுத் தனமாக தைச்சு வச்சிருக்க? இந்த ட்ரெஸ் எல்லாத்தையும் இங்க யாருக்காவது கஷ்டப்பட்டவங்களுக்கு கொடுத்திர வேண்டியது தானே? சிட்டிக்கு போய் புதுசா வாங்கிக்கலாம்”

‘அவளிடம் இருந்த அத்தனையும் புதுத் துணிகள், யாரிடமும் அவற்றைக் கொடுக்க அவளுக்கு மனமே இல்லை. ஆனால், என்ன செய்வது?’அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் வீட்டினரும் அவளது துணிகளை கொடுத்து விடுமாறு வலியுறுத்தினர்.

அடுத்த நாள் மாடியிலிருந்து தனது உடைகள் அனைத்தையும் ஒரு பையில் அள்ளி வந்தாள். அதில் முன் தினம் அணிந்திருந்த அந்த பச்சை சுடிதாரும் துவைத்து காய வைத்து மடித்து வைக்கப் பட்டு இருந்தது. அங்கு தனது இஷ்டத்திற்கு தனது சாதனைகளை பேசிக் கொண்டிருந்த சுமதி கண்ணில் பட அத்தனை துணிகளும் சுமதியின் வீட்டிற்கு அவளது மகளுக்காக கொடுக்கப் பட்டன.

இனி அவளிடம் இருப்பவை சேலைகள் மட்டுமே… ‘சரி நகரத்திற்குச் சென்று வாங்கித் தருவேன் என்ற கணவன் தனக்கு வாங்கித் தருவான்’ என மனதை தேற்றிக் கொண்டவள் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டாள்.

இரயில்வே ஸ்டேசனில் மகளை வழியனுப்ப வந்த பெற்றோர் வீரேந்திரன் அவளுக்கு கரிசனையாக இளநீர் வாங்கி கொடுப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். விடைப்பெற்றவள் அந்த ஏசி கோச்சில் அமர வண்டி வேகமெடுத்தது.

மேலும் கீழுமான இரண்டு படுக்கைகள். கீழே இவள் இருக்க, அவளை கண்டுக் கொள்ளாமல் மேல் படுக்கையில் சென்று வீரேந்திரன் தூங்கி விட்டிருந்தான்.

சில மணித்துளிகளில் ஸ்டேசன் வந்துவிடும் எனும் நிலையில் கீழே இறங்கி வந்தவன் தனியே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்க அவனது முகம் எரிச்சலைக் காட்டியது. அவனது மாறி, மாறி வரும் முகபாவனைகளை புரிந்துக் கொள்ள அவள் ஏழு ஜென்மங்கள் எடுத்தாக வேண்டும் போலவே?

“நீ ஒன்னா நம்பர் தத்தி தத்தி”என்றானவன்.

“என்னாச்சு?” அவள் குரல் கம்மிவிட்டிருந்தது.

“ஓரு சேலை டீசெண்டா உடுக்கத் தெரியலை, உன்னை கட்டிக் கிட்டு எனக்கு என்ன என்ன பிரச்சனை எல்லாம் வரப் போகுதோ?”

‘என்னது எனக்கா சேலை கட்டத் தெரியாது. எங்கள் குடும்பத்து திருமணங்களில் நான் தானே மணமகள்களுக்கு முதலாக சேலை அணிவித்து விடுவேன், இது என்ன அபாண்டமான பேச்சு?’ மனதிற்குள் தான் குமுற முடிந்தது.

“உனக்கு இங்கிலிஷ் தெரியுமா?”

“தெரியும்”

“என்னத் தெரியும் உனக்கு? படிச்சது தமிழ் மீடியம் வேற. சரி இப்பச் சொல்லு, நம்ம வீட்டுக்கு பிசினஸ் பேச யாராவது வந்தாங்கன்னா இது என் வைஃப்னு அறிமுகப் படுத்துரப்ப “ஹவ் ஆய் யூ மேடம்?”னு உன் கிட்ட கேட்பாங்க. அப்ப நீ என்ன பதில் சொல்லுவ?”

“ஐயாம் ஃபைன்”னு சொல்லுவேன்.

“பேசுறதைப் பாரு சொங்கி மாதிரி, கொஞ்சம் சத்தமா தொனிப்பா, கம்பீரமா உனக்குப் பேசத் தெரியாதா? முட்டாள், முட்டாள்”

பரீட்சையில் வாங்கின எழுபதுக்கு மேலான சதவிகித மதிப்பெண்கள் அவன் கண்முன் வீணாகி நின்றன.

“இப்ப நான் சொல்லுறேன் கேளு, யாரும் வந்தா எப்படி எழுந்து நிக்கணும்?” கம்பார்ட்மெண்ட் சீட்டில் அமர்ந்திருக்கின்றோம் எனும் உணர்வற்று அவள் எழுந்து நிற்க தலை மேல்பகுதியில் இடித்துக் கொண்டது. அதற்கும் சேர்த்து அவன் திட்டவும் அவளது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

“முட்டாள், முட்டாள் இப்படி நின்னு, இப்படி கை நீட்டி “ஹவ் டு யூ டூ” னு பதில் சொல்லணும். என்ன புரியுதா?” கண்டிப்புக் காட்டினான்.

புரிந்ததாக தலையாட்டினாள். ஆனால், அவன் சொன்ன கம்பீரக் குரல் அவளுக்கு வெளிவரவே இல்லை. அவனது கீழ்மைப் படுத்தலில் அத்தனையும் காணாமல் போயிற்று.

மாலை நான்கு மணியளவில் அவர்கள் அந்த பிரபல இரயில்வே ஸ்டேசனை அடைந்தனர். குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டிருக்க வெறிச்சென்று இருந்த அந்த இடத்தில் கணவனும் மனைவியும் மட்டும் இருந்தனர்.

இத்தனை நாட்களில் அவர்களது குடும்பத்தினர் இரயில்வேயின் மூலம் பார்சல்கள் அனுப்பும் பணியில் இருப்பதாக அவள் அறிந்து இருந்தாள். ‘வீட்டிற்கு எப்போது அழைத்துச் செல்வான்?’என்று அவனையே அவள் பார்த்திருக்க இப்போது அவர்கள் அந்த இரயில்வே ஸ்டேசனைத் தாண்டி சில நிமிட நடையில் நின்றனர்.

புதுச் சேலை, புதுமணமகளுக்குண்டான அத்தனை நகைகள், வீட்டில் போட்ட நகைகள் மட்டுமல்லாமல் உறவினர்கள் பரிசாக பூட்டிய நகைகள். மாமியார் வளையல் என்று வந்திருந்த இரண்டு பவுன் தடித்த காப்பு ஒன்று என நகைக்கடை மாடல் போல நின்றவளுக்கு அங்கு நிற்க ஏதோ போல் இருந்தது. அதுவரையிலும் அவளுடன் நின்றவன் முன்பின் தெரியாத அந்த இடத்தில் அவளை நிறுத்தி விட்டு “இதோ இப்ப வந்திடறேன் விமலா” என்று எங்கோ சென்று விட்டிருந்தான்.

அரை மணி நேரம் ஒரு மணி நேரமாக பதட்டத்தில், பயத்தில், தனிமையில் வெடவெடத்துக் கொண்டு நின்றிருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் எங்கிருந்தோ அவளருகே வீரேந்திரன் வந்து நின்றான் .

‘எனை தனியாக விட்டு விட்டு எங்கு சென்றாய்?’ என கேட்கவும் கூட அவளுக்கு நாவெழவில்லை. அவன் வந்ததே போதும் எனும் உணர்வு தான்.

வாடகை கார் வந்ததும் அதில் ஏறி அமர்ந்தனர், கடந்த மணி நேரங்களின் படபடப்பு இன்னும் அவளை விட்டு அகன்று இருக்கவில்லை. வண்டி புறப்பட்டது.

“அந்த எதிர்த்தாப்ல இருக்கிற கம்பெனி பார்த்தியா?”

எதையோ சொல்கிறான், அவனே சொல்லட்டும் என விமலா அமர்ந்திருந்தாள்

“அவன் தான் நம்ம போட்டிக் கம்பெனிகாரன்”கடகடவென இளித்தான்.

மிரண்டுப் பார்த்தவளிடம்…

“எனக்கு கல்யாணமே நடக்காதுன்னு அவனுக்கு ஒரு நினைப்பு, இப்ப எப்படி நான் கல்யாணம் முடிச்சிட்டு வந்தேன்ல?”

“…”

“அவன் நல்லா பார்த்து வயிறெரியட்டும்னு தான் அவன் கம்பெனி எதிரே, அங்கே அந்த நடு ரோட்டில் உன்னை விட்டுட்டு போயிருந்தேன். நல்லா பொறாமையில் வெந்து சாகட்டும்” அவன் பற்கள் நறநறத்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here