இது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி

0
842

அத்தியாயம் 8

கணவனுடைய தொழில் சார்ந்த அந்த நகர வாழ்விற்கு விமலா வந்துச் சேர்ந்து இரு வாரங்கள் கழிந்திருந்தன. அந்த வீட்டின் நடைமுறைகள் வகையில் அவள் வெகுவாக தடுமாறிக் கொண்டு இருந்தாள். அவளது பிறந்த வீட்டு இயல்பான வாழ்க்கை முறைகளுக்கும் இங்கே இவர்களது வாழ்க்கை முறைகளுக்கும் மிகுந்த வித்தியாசங்கள் காணப்பட்டன.

அவர்கள் வீடு 2 BHK (2 Bedroom, Hall, Kitchen)  எனப்படும் வகையான ஃப்ளாட் ஆகும். நன்கு விஸ்தாரமான வீடு தான், அந்த வீட்டின் இரண்டு அறைகளுள் ஒன்று புதுமணத் தம்பதிகளான இவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தது. அதுவரையிலும் அந்த இரண்டு அறைகளும் அனைவருக்கும் பொதுவாக உபயோகப் படுத்தப் பட்ட அறைகளாக இருந்தன போலும். எனவே, அவர்களது அறையில் இருந்த இரண்டு கப்போர்டுகளில் இருக்கும் துணிமணிகளையும் எடுக்க எந்த நேரமும், யாரும் அந்த அறைக்குள்ளாக வருவதும் போவதுமாக சகஜமாக இருந்தனர்.

அப்படி இருந்த போதிலும் விமலாவிற்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. ஏனென்றால், கணவன் மதியம் வேலைக்குச் செல்பவன் இரவில் வீடு திரும்ப வருவதாக இருக்க அவளது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறாக அங்கு எதுவும் இருக்கவில்லை. கணவனும், மனைவியும் தனியாக இருப்பதான சூழல் இருந்தால் தானே பிறரின் இடையூறுகள் பெரிதாகத் தெரியும்?

விமலாவின் சூட்டு வலி இன்னும் சரியாகி இருக்கவில்லை. மாமியார் அவளுடன் சகஜமாக பேசும் சூழல் இருந்திருந்தால் மாமியாரிடம் இது குறித்து கேட்டிருப்பாள். தற்போது தனது பிரச்சனையை அவளால் கணவனிடம் மட்டுமே சொல்ல முடிந்தது. அவள் பிரச்சனையை சொன்ன நாள் முதலாக இரவு நேரத்தில் அவன் அவளை நாடாமல் இருந்தான்.

“உனது உடல் நலனுக்காகத்தான் விலகி இருக்கிறேன்” என தனது தரப்பை அவன் வெகு தெளிவாக அவளிடம் முன் வைத்து இருந்தான். ‘உடல் உறவு மட்டும் தானா கணவன் மனைவிக்குள்ளான பிணைப்பு? ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதும், விருப்பு வெறுப்புகளை அறிந்து வைத்து இருப்பதுவும் கூட மண வாழ்க்கைக்கு தேவையான ஒன்றுதானே?’விமலாவிற்கு இந்த சிந்தனைகள் எல்லாம் தோன்றினாலும் கூட, வீரேந்திரன் சட்டென்று அவளை எதையாவது பேசி அவமானப்படுத்தினால் தாங்கிக் கொள்ள இயலாது என்பதால் அவள் தன் கணவனிடம் இதைக் குறித்து மனம் விட்டு பேசினாளில்லை.

“உனக்கு உடல் நலமில்லை என்பதால் தான்” என அவன் குறிப்பிட்டு இருந்ததால் அவன் மேல் அவளுக்கு நல்ல எண்ணம் உண்டாகிற்று. எல்லாவற்றிலும் நன்மை தேடும் நிலையில் தான் அவளும் இருந்தாள்.

கணவன் அன்று வேலையிலிருந்து வந்து மருத்துவமனை அழைத்துச் செல்வதாக இருந்ததனால் அவனை எதிர்பார்த்து சாயுங்கால நேரம் அந்த சிகப்பு நிற சேலையை அணிந்துக் கொண்டாள், லிப்ஸ்டிக் தீற்றி தன்னை அலங்கரித்துக் கொண்டாள். காரணம் கணவனுடன் வெளியே செல்வதான உற்சாகம் தான் வேறென்ன? அந்த அறையின் கதவு எப்போதும் திறந்து இருக்கும் என்பதால் அவளது அலங்காரங்கள் மற்றவர்கள் கண்களுக்கு தப்பவில்லை.

“கத்தரிக்கா மாதிரி இருந்துக் கிட்டு…” மாமியார் எதையோ தன் மகளிடம் சொல்ல அவர்களுக்குள் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

தன்னிடம் எதையும் கூறினார்கள் போலும் எனும் உணர்வில் அவர்கள் அருகில் சென்று“என்ன மாமி?” என்றாள்.

‘ஒன்னுல்ல வீரேந்திரனைப் பத்தி தான் பேசிட்டு இருந்தேன் என்றார். கத்தரிக்காய் என்று குள்ளமானவர்களைப் பற்றிதானே பேசுவார்கள். கணவன் வளர்த்தியானவன் அல்லவா? என யோசித்தாலும் அப்போது அது தன்னைக் குறித்த நக்கல் பேச்சென அவளுக்குப் புரியவில்லை.

ஏழு மணியளவில் வீட்டிற்கு வந்த வீரேந்திரன் புறப்பட்டு இருந்த மனைவியுடன் அந்த பில்டிங்கின் தரைத்தளத்திற்கு இறங்கினான். மனைவி தனது அலங்காரங்கள் குறித்து ஏதாவது சொல்வானா? என மனைவி அவனை பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு புரியாமல் இல்லை. வெளியில் வந்ததும் அவன் ரிக்ஷா ஒன்றை நிறுத்தி முதலில் அவளை அமரச் சொன்னான்.அடுத்து தானும் அமர்ந்தவன் அடுத்ததாக மூன்றாவதாக அமர ஆளைத் தேடினான்.

அவசரமாக சுற்றும் முற்றும் தேடியவன் கண்ணில் அங்கே நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஒருவன் அகப்படவும், அவனை தன்னுடன் அமர்த்திக் கொண்டான். ஹாஸ்பிடலை நோக்கி ரிக்ஷா விரைந்தது. அவனோ மறுபக்கம் அமர்ந்திருக்கும் மனைவியை தவிர்த்து தன்னுடன் இருந்தவனுடன் பேச ஆரம்பித்தான்.

வெளியே செல்லும் போது கணவனுடன் பலவற்றையும் பேச வேண்டும் எனும் எண்ணத்தில் இருந்தவள் அவன் தன்னை கண்டுக் கொள்ளாததில் குழம்பினாள். அன்றும் கூட ஊரில் தாங்கள் கேரளா சுற்ற சென்ற போது தங்களோடு கூட ஒரு பையனை அவன் அழைத்து வந்ததுவும் ஞாபகம் வந்து தொலைத்தது. ஒரு சில விருந்து வீட்டிற்கு தவிர்த்து வெளியே சுற்ற சென்ற போதெல்லாம் தனிமையில் அவன் அவளுடன் நேரம் கழித்தது இல்லை என்பதே உண்மை. திருமணத்தின் ஆரம்பத்தின் சில நாட்களுக்கு அப்புறமாக அவனது நடவடிக்கைகள் இப்படித்தான் இருந்தது.

அவளது மனதிற்குள்ளாக இந்த கேள்வி குடைந்த போதிலும் மருத்துவமனை சென்றதும் கவனம் திசை மாறியது. அந்த பெண் மருத்துவர் அவளது உடல் பரிசோதனை செய்த போது கூச்சமாக உணர்ந்தாள். அவளது சூட்டுவலி பிரச்சனைக்கு உடலுறவின் போது பெண்ணுறுப்பில் ஏற்படும் உராய்வுகளினால் ஏற்பட்ட புண்கள் போன்ற சரும தடுப்புகள்அ.கா வீக்கங்கள் தான் காரணம் என விளக்கம் கொடுத்ததோடு நில்லாமல் சில மாத்திரைகளை வாங்கி வரச் சொல்ல வீரேந்திரன் வாங்கி வந்தான்.

அவன் அவளை வீட்டில் விட்டுச் செல்லவும் மாமியாரும் நாத்தனாரும் அவளை விசாரிக்க ஆரம்பித்தனர்.

“எங்கே சென்றீர்கள்? என்ன காரணம்? எதற்காக? இன்ன பிற…” கேள்விகள் அவளிடம் அணிவகுத்தன.

‘மாமியாரிடம் சொல்லலாம், தன்னை விட பெரியவளானாலும் திருமணமாகாத நாத்தனாரிடம் இதனை எவ்வாறு சொல்வது?’ தயங்கியே பதிலளித்தாள். தயக்கம் எல்லாம் விமலாவிற்குத்தான், அவள் நாத்தனார் திருமணமாகி நான்கு குழந்தைகள் பெற்ற அனுபவஸ்தி போல படபடவென பொரியலானாள்.

“இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா? இதுக்காகவா அந்த பெரிய ஹாஸ்பிடல் போகணும், பக்கத்தில இருக்கிற கிளினிக் போனாலே சரியாகிருக்கும். என் கிட்ட சொன்னா நானே அழைச்சுட்டு போயிருப்பேன் க்கும்”வெகுவாக சலித்துக் கொண்டாள். அன்றைய பிரச்சனை அவர்கள் திட்டுக்களை கேட்டதோடு தீர்ந்தது. விமலாவை மக்கு என்றும் முட்டாளென்றும் முடிவு செய்வதில் அவர்கள் இருந்தனர்.

சில நாட்களில் கணவனுடன் பிறந்த மூன்று சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என மொத்தம் உடன்பிறப்புகள் மொத்தம் 6 பேர். தகப்பனுடன் மூன்று ஆண் மக்களும் இரயில்வே பார்சல் அனுப்பும் தொழிலில் இருந்தனர். பெரிய பெரிய கம்பெனிகளுக்கான பொருட்களை அனுப்பி வைப்பதில் அவர்களுக்கு பெரிய அளவில் பண வரவு, அனைவரும் தமக்குள்ளாக பிரித்துக் கொள்வர் எனப் புரிந்துக் கொண்டாள்.

இங்கு வந்து சில நாட்களாகியும் தனக்கு உடைகள் வாங்கி தரவில்லையே என விமலாவிற்கு மனச்சுணக்கமாக இருந்தது. எல்லா நேரமும் சேலை அணிய முடியாதே அவள் வீட்டிற்கு, மார்க்கெட்டிற்கு என அணிந்துக் கொண்டிருக்கும் ஓரிரு உடைகள் எல்லாம் அவளுடைய நாத்தனாருடையன.

தங்களது தகுதிக்கு அணிந்தாலும் கூட ஒற்றைப் பெண்ணான காரணத்தால் அவள் யாரோ ஒருவரின் உடுத்து கழிந்த உடைகளை அவள் அணிந்ததே இல்லை எனலாம்.ஆனால், வீரேந்திரனுக்கு அவளது மனக்குறைகள் குறித்தெல்லாம் எந்த அபிப்ராயங்களும் இல்லை. ஓரிரு முறைகள் சொல்ல முயன்ற போது தீயாக சொற்களை விட்டெறிந்தான். அதன் காரணமாக அவள் அவனிடம் இப்போது கேட்பதையும் நிறுத்தி விட்டிருந்தாள்.

வீரேந்திரனின் அண்ணன் அதே நகரத்தில் தனிக்குடித்தனம் இருந்தார். ஒரு நாள் அங்கே தம்பதியர் விருந்து உபச்சாரம் என்று சென்று இருந்தனர். அவளுடன் அவர்கள் நன்றாக பழகினாலும் மற்றவர்களைப் போலவே அங்கும் வெளிப்படையான அன்பு பரிமாற்றம் இன்றி ஒரு விலக்கமான மனநிலையே காணப்பட்டது. மனைவியை வீரேந்திரன் அங்கேயே விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டிருந்தான்.

அருகாமையில் யாரும் இல்லாத நேரத்தில் அவனுடைய அண்ணி அவளிடம் “உன் கணவன் திருமணத்திற்காக ஊருக்கு வந்த போது என்னிடமிருந்து மூன்று பவுன் செயினை வாங்கிச் சென்று இருந்தான். ஆனால், அதை திரும்ப தரவில்லை. வீட்டு நகைகளை விற்பது அவனுக்கு சகஜமான ஒன்றுதான்” என சாதாரணமாக சொல்வது போல சொன்னார். விமலாவிற்கோ அவர் அவளிடம் அதைச் சொன்ன நோக்கமும் புரியவில்லை. அவருக்கு என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை.

மற்றொரு நாள் அவளை மாமனார் அழைத்து,“ உன் நல்லதுக்காகத் தான் சொல்லுறேன் விமலா, உனது நகைகளை பத்திரமாக வைத்துக் கொள், ஒரு போதும் வீரேந்திரனிடம் கொடுத்து விடாதே” என சூசகமாக சொன்ன போது மனதிற்கு திக்கென்று இருந்தாலும் சரியென தலையை ஆட்டியவளாக தனது அறைக்கு சென்று விட்டிருந்தாள். கணவனைக் குறித்து எந்த ஒரு முடிவிற்கும் அவளால் இன்னும் வர முடியவில்லை.

அவனது இரண்டு சகோதரிகள் ஊரில் அவரவர் புகுந்த வீட்டில் இருக்க, இவர்களோடு கூட அந்த வீட்டில் அவனது பெற்றோர்கள் மற்றும் திருமணமாகாத தம்பி மற்றும் தங்கை இருந்தனர்.

அருகாமையில் இருந்த குடிசைப் பகுதியில் இருந்து அவர்களது வீட்டு வேலைக்கென வந்துச் செல்லும் பெண்ணும் தற்போது விமலாவிற்கு பரிச்சயமாகி இருந்தாள். கணவனுடைய குடும்பத்தினர் அவளிடம் தாமரை இலை தண்ணீர் போலவே உறவாடினர்.

அவளிடம் அவர்களுக்கு எதையாகிலும் சொல்ல வேண்டுமானால் அழைத்துச் சொல்வதோடு சரி. மற்ற படி தானுண்டு தனது வேலையுண்டு என்று இருப்பர். அவளை அந்த வீட்டின் உறுப்பினராக ஏற்றுக் கொண்டதான எந்த சகஜ சூழ்நிலையும் அங்கு இல்லை. அவளிடம் எச்சரிக்கை உணர்வுடனே நடந்துக் கொண்டனர்.

 விமலாவின் வீட்டில் அவள் அன்னை மாலதி காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து எட்டு மணிக்கு டான் என காலை உணவை கணவனுக்கும் மகளுக்கும் பறிமாறி தானும் உண்பது வழக்கம். காலை பரபரப்பிலும் அந்த வேளையில் குடும்பமாக அவர்கள் பேசி சிரித்து, உண்டு அதன் பின்னர் தத்தம் அலுவலில் ஈடுபடுவர். ஆனால், அவளது புகுந்த வீட்டில் காலை உணவு என்பதே அகராதியில் இல்லை என்பதை கண்டாள்.

பதினோரு மணிக்கு எழுந்து, வெகு சாவகாசமாக இரண்டு மணி நேரங்கள் எடுத்து புறப்பட்டு ஒரு கிளாஸ் பால் அருந்தியதோடு சரியென கணவனும், கொழுந்தனும் மாமனாரும் வேலைக்கு சென்று விடுவர்.. அதற்கு சற்று முன்பாக நாத்தனார் தன் வேலைக்கு சென்று இருப்பாள். அதன் பின்னர் அவர்கள் மதியம் எப்போது உண்பார்கள்? உண்பார்களா மாட்டார்களா? என்பதே அவளுக்கு புதிராக இருக்கும்.

தனது வீட்டின் வழக்கப் படி இவள் காலை உணவு, மதிய உணவு, சாயங்கால டீ ஸ்னாக், இரவு உணவு என வரிசைக் கிரமமாக வஞ்சனையில்லாமல் உண்பது அவளது புகுந்த வீட்டினருக்கு வியப்பாக இருந்தது. தான் உண்பது மட்டுமல்லாமல் மற்றவருக்கும் சமைத்தாலும் சூட்டோடு சூடாக உண்பவர்கள்தான் அங்கு இல்லை.

மாமியார் சொல்லிக் கொடுத்த செய்முறை படி கணவனுக்கு டிஃபனில் சப்பாத்தியும், கூட்டும் செய்து அனுப்புவதையும் அவள் வழக்கப் படுத்திக் கொண்டாள். சில நாட்கள் அவன் அதனை தவிர்த்துச் செல்ல முயன்றாலும் பின்னோடு ஓடி அவனுக்கு டிஃபன் கொடுத்து வந்தால் தான் அவளுக்கு திருப்தி. அப்படியாக மனைவியாக தனது கடமைகளை ஆற்ற ஆரம்பித்து இருந்தாள்.

கணவன் தன் தம்பியின் காரில் வேலைக்கு செல்வதையும், அவனுக்கென்று வாகனம் எதுவும் இல்லை என்பதையும் அவள் கவனித்து இருந்தாள். அவர்கள் தங்களது செல்வ நிலை குறித்து ஊரில் சொல்லிக் கொண்ட அளவு பெரிய பணக்காரர்களாக இல்லை. சொத்து, கார்கள் என அவர்கள் அளந்து விட்டதில் கால் பகுதியும் கூட அங்கு இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது. நல்ல வருமானமும் அதற்கு அதிகமான செலவினங்களும் கொண்ட குடும்பத்தினர் எனச் சொல்லும்படி வாழ்ந்தனர்.

விமலாவிற்கோ ஆரம்பத்தில் இருந்தே அந்த பணம், பொருள் போன்றவற்றில் பெரிய ஈர்ப்பில்லை. விருப்பமில்லா திருமணத்தை விருப்பமானதாக மாற்ற கணவன் தன்னுடன் நன்றாக பேசி பழகி இருந்தாலே போதும் என்பதான எதிர்பார்ப்புகள் மட்டும் தான் இருந்தன.

விமலாவை பெண்பார்க்க வந்திருந்த அன்று அவளின் தாயாரிடம் அவள் மாமியார்“உங்கள் மகளை எங்கள் வீட்டில் கட்டிக் கொடுப்பதுக் குறித்து கவலைப் படவே வேண்டாம், எங்கள் விட்டில் லேண்ட்லைன் போன் இருக்கின்றதே, அவள் தினமும் உங்களிடம் பேசுவாள்” என்று தேனொழுக பேசி இருந்தார். அந்த போன் மூலமாக அவள் தனது தாயிடம் ஓரிரு முறைகள் பேசி இருந்தாள். அவ்வப்போது அவளின் அன்னையும் ஊரிலிருந்து அவளுக்கு அழைத்து பேசிக் கொள்வார்.

தாய் மகளுக்கான இவர்களது போன் பேச்சுக்கள் வீட்டினர்க்கு அவ்வளவு விருப்பமானதாக இல்லை என விமலா புரிந்துக் கொண்டதால் தங்கள் வீட்டில் வேலைக்கு வரும் பெண்ணின் உதவியால் அக்கம் பக்கம் இருக்கும் PCO க்களில் பேசவும் பழகிக் கொண்டாள்.

“பரவாயில்லையே, இப்ப விமலா வேலை செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறமா எனக்கு வேலையே இல்லாதது போல இருக்கு”, என்று மாமியார் சொல்லவும் புளங்காகிதம் அடைந்தாள். பெண்ணாய் பிறந்த பயன் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதில் தான் இருக்கின்றதல்லவா?

மருத்துவர் தனக்கு தந்த மாத்திரைகள் பலனளித்ததில் அவள் சில நாட்களில் நலமாகி இருந்தாள். அது வீரேந்திரனுக்கு புரிந்திருக்க வேண்டும் வழக்கமான கணவனின் 10 நிமிட அரக்கத்தனம் இப்போது ஐந்து நிமிடமாக சுருங்கிய விதத்தில் அன்றிரவு அவள் நரகத்தை வெகு அருகில் கண்டாள். அவன் அவளிடம் காட்டும் இத்தனை அவசரம், இத்தனை மூர்க்கத்தனம் எதற்காக? அவளுக்கு புரியவே இல்லை.

சில நாட்கள் கழித்து விமலாவின் பெற்றவர்கள் மகளை சந்திக்க வருவதாக இருந்தனர். ஊரிலிருந்து அங்கு வந்துச் சேர நான்கு முதல் ஐந்து மணி நேர பயண நேரம். தாய் தாங்கள் வருவதாக தனக்கு விபரம் தெரிவித்ததில் இருந்து விமலா வெகு பரபரப்பாக இருந்தாள். வீரேந்திரன் தன்னால் அவளது பெற்றோர் வீட்டிற்கு வரும் அந்த நேரம் வீட்டிற்கு வர முடியாது என தெரிவித்து விட்டு இருந்தான்.

அந்த மதிய நேரம் காலிங்க் பெல் அடிக்கவும் பெற்றோரை எதிர்பார்த்து இருந்த விமலா கதவை நோக்கி விரைந்துச் சென்றாள். கணவனின் தம்பியும், தங்கையும் அதுவரையிலும் தாங்கள் இருந்த ஹாலில் இருந்து விரைந்து உள்ளறைக்குச் சென்று அடைந்துக் கொண்டதையும் கண்டாள். அவர்கள் செய்கை அவளுக்கு முகத்தில் அடித்தார் போல இருந்தது.

நீண்ட பயணத்தில் விமலாவின் பெற்றோர்கள் களைத்துப் போய் வந்திருந்தனர். இருவரையும் பார்த்தவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. மகளின் புகுந்த வீட்டினருக்கு பழம், ஸ்வீட்ஸ் என கொண்டு வந்து இருந்தவர்கள் மகளுக்கு பிடித்தமான திண்பண்டங்கள் பலவற்றோடு கூட தோசை மாவு முதலாக பெருமளவு பொருட்களை கொண்டு வந்து இருந்தனர்.

விமலாவின் மாமியாரும், மாமனாரும் சம்பந்திகளுடன் பதவிசாக சில உரையாடல்கள் நிகழ்த்தி விலகிக் கொண்டனர். மகள் வீட்டில் அதிகமாக உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது எனும் எண்ணத்தில் விமலா எவ்வளவோ வற்புறுத்தியும் காஃபியுடன் மட்டும் அவர்களது விருந்தோம்பல் நின்றது. அங்கு அவளை தவிர்த்து அவர்களை யாரும் சாப்பிடும் படி சொல்லவும் இல்லை.வந்தவர்களோ மகளுடன் ஹாலில் இருந்தே பேசி சில மணி நேரங்களில் உடனே திரும்பவும் புறப்பட்டனர்.

கணவனையும், கணவனின் குடும்பத்தினரையும் விமலாவால் புரிந்துக் கொள்ள இயலாமலேயே நாட்கள் கடந்தன. இன்றைய தினத்திற்கு நேற்றைய தினம் பரவாயில்லை என்பது போல அவளது நாட்கள் இருந்தன.

அன்றிரவில் குடிபோதையில் நடக்க இயலாமல் தடுமாறிக் கொண்டு கணவன் வந்த போது அவளுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.

 அவனது பெற்றோர்கள் எதையாவது சொல்வார்களா? இந்த மாதிரி இன்னொரு நாள் குடித்து விட்டு வீட்டிற்கு வரக் கூடாது என அவனை கடிந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என பரிதவித்தவளாக ஹாலுக்கு விரைந்தாள்.

தனது படுக்கையை விரித்துக் கொண்டு தூங்குவதற்கு ஆயத்தமாக இருந்த மாமனாரைக் கண்டு சில நிமிடங்கள் பேச்சற்று நின்றாள். ‘கணவன் தடுமாறி வீட்டிற்கு வரும் போது இவரும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார். இப்போது இவரால் ஒன்றுமே நடவாதது போல எப்படி இருக்க முடிகின்றது?’மனம் கொந்தளித்தது.

“மாமா, உங்க மகன் குடிச்சுட்டு வந்து கீழே உருண்டுட்டு இருக்காங்க”அவமான உணர்வுடன் கூறியவளை திரும்பியும் பார்க்காதவராக,

“அவன் எங்கேயோ ரோட்டுல விழுந்து எழுந்து வந்திருப்பான் போலிருக்கு. போ போய் அவன் துணியை மாத்தி அவனை பெட்ல படுக்க வை” என்றார்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here