இது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி

0
905

அத்தியாயம் 9

பொண கனம் கனக்குறான்யா… எனும் சொல்லின் அர்த்தம் விமலாவிற்கு இப்போது புரிந்தது. கொஞ்சம் சதைப் பற்று உள்ளவள்தான், நேரா நேரத்திற்கு உண்டு பலமாக இருக்கின்றவள்தான் ஆனால், எலும்பும் அது போர்த்திய தோலுமாய் ஆறடி உயரத்தில் தங்கள் படுக்கையறையில் தரையில் உருண்டுக் கொண்டு இருக்கின்றவனை அவளால் அசைக்கவும் இயலவில்லை.

வீரேந்திரனோ ‘தான் எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்?’ எனும் உணர்வு கூட இல்லாதவனாக அந்த அறையின் நடுவே மட்டையாகி கிடந்தான். சட்டை அதன் மேல் மழைக்கு அணிந்திருந்த அந்த லெதர் கோட், காற்சட்டை என வெகு டீசண்டான தோற்றம். ஆனால், மனிதர்கள் அருகே செல்ல முடியாத அளவுக்கு அத்தனை வீச்சமாய் இருந்தான். அவனது லெதர் கோட்டை அவள் ஒருவாறாக இழுத்து கழற்றி எடுக்கும் முன்பே அவளது கைகள் கழன்று விடுவன போல வலித்தது.

அவனோடு உனக்கு திருமணம் செய்து வைத்தாயிற்று, இனி உன் பாடு அவன் பாடு என்பது போல ஹாலில் இழுத்து மூடிக் கொண்டு படுத்திருக்கும் மாமனாரிடமும் அடுத்த அறையில் கதவை சாற்றிக் கொண்டு அடைந்துக் கொண்ட மாமியார் மற்றும் நாத்தனாரிடமும் எந்த உதவியும் கேட்க அவளது சுயமரியாதை அனுமதிக்கவில்லை.

அவனது சட்டையின் பொத்தான்களை கழற்ற முடிந்தவளால் அவ்வண்ணம் அவனது கால்சட்டையின் பொத்தான்கள் மேல் கை வைக்க முடியவில்லை. திருமணத்தின் அடுத்த நாள் காலை நேரடியாகச் சொன்னான் தான். ஆனால், அத்தோடு நில்லாமல் விளையாட்டாக பேசுவது போல சில பல அம்புகளையும், கத்திகளையும் வாய் வார்த்தைகளால் அவள் மேல் அவன் சொருகாமல் இல்லை.

“முத நாளே சரின்னுட்ட பெரிய ஆள்தான் நீ”, எங்க வீட்ல கேட்டா இவதான் ஆசையா கிட்ட வரான்னு சொல்லுவேன்” என்பதாக இன்னொரு நாள். இன்னும் பலவாக அதற்கடுத்த சில நாட்களிலும் அவளை அவன் தரக்குறைவாக அவ்வப்போது பேசிக் கொண்டிருப்பான்.

திகைத்து இவள் பதில் தேடும் முன்பாக “இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷனாகுற? விளையாட்டா தானே பேசினேன்” என்பதாக இளித்து விட்டு சென்று விடுவான். சொல்வதை எல்லாம் அவன் எளிதாகச் சொல்லிச் சென்று விட அவளுக்குத்தான் அருவருப்பாக இருக்கும். அவள் மோசமானவள், அலைகின்றவள் என சித்தரிப்பதாகவே அவனது கிண்டல்கள் இருக்கும்.

அவன் சட்டையை கழற்ற தடுமாறியவளிடமிருந்து அவன் சட்டென்று எழுந்து நின்றான். சகிக்க முடியாத அந்த வாடையில் அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அவளை கண்டுக் கொள்ளாமல் சட்டென்று கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டான்.

அவளுக்கு அவனது செய்கைகளில் கோபமும், அழுகையும் போட்டிப் போட்டன. மற்ற எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவளால் அவனது இந்த செய்கையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளது வளர்ப்பு அத்தகையது. அவளது வீட்டில் இவையெல்லாம் மிகவும் அவமானகரமானவை. கண்ணீர் வடிய நின்றவள் தங்களை தண்ணீர் தெளித்து விட்ட கணவன் வீட்டினர் முன்பாக அவனிடம் சண்டையிட்டு தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

வழக்கம் போல இதற்கு எப்படி தீர்வு காண்பது என சிந்திக்கலானாள். தினமும் ஒரு பரிணாமம் காண்பிக்கும் கணவனைக் குறித்து அவளால் கணிக்கவே முடியவில்லை. ஒரு முறை அவளோடு அவன் நன்றாக பேசிக் கொண்டிருக்கும் போது ஊரில் தன்னிடம் தான் குடிப்பேன் என பாட்டில்களை காண்பித்ததை குறித்து பேசி இருந்தாள். அன்பாகவே இனி அதெல்லாம் வேண்டாம் என சொல்லி இருந்தாள். அன்று அவனது பேச்சிற்கு ஓரளவு செவிசாய்ப்பவனாக தெரிந்தவன் இன்று முற்றிலும் மாறி நிற்பது அவளுக்கு மிரட்சியாக இருந்தது.

“உன்னைப் பத்தி நாள் முழுசும் யோசிச்சு யோசிச்சே எனக்கு கவலை”எதையோ எண்ணி உளறினான்.

“நீங்க நல்லா இருந்தாலே போதுமே, எனக்கு வேற எதுவும் வேண்டாம்” அவன் காதில் கேட்டதோ இல்லையோ தெரியவில்லை இருந்தாலும் இவள் அவனிடம் இறைஞ்சினாள்.

“என்னால உனக்கு ஒன்னும் செய்ய முடியலைனு நினைக்கும் போது……” உளறல்கள் தொடர்ந்தன.

‘இவனாவது நான் சொல்வதை காதில் கேட்பதாவது?’ அவனது புரியாத பேச்சில் அவள் யோசித்தவாறு நிற்க, “ஆமாம் விமலா உன்னை நினைச்சாலே எனக்கு வருத்தமா இருக்கு தெரியுமா?”

“இப்ப நீங்க தூங்குங்க, காலையில் பேசிக்கலாம்”கோபத்தில் தான் எதையும் பேசி சண்டையாகி விடக் கூடாதென பேச்சை தவிர்க்க முயன்றாள்.

“ஆனாலும், உன் தகுதிக்கு இதுவே அதிகம் இல்ல, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்குமா? இல்ல கிடைச்சிருமா… ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும்”

“……”

“…..இல்ல உனக்கு இவ்வளவு போதும் தான்…. எதுக்கு நான் கவலைப் படணும்?”

“…….”

“ஒரு தகுதி தராதரம் இல்லாத குடும்பத்தில பொண்ணெடுத்து எனக்கு ரொம்ப அவமானமாகிப் போச்சு. உங்க அப்பா அவர் பொழைக்கிற பொழைப்புக்கு இப்படி சிட்டில ஃப்ளாட்ல இருக்குற மாப்புள கேட்குதோ”

பேச்சுக்கள் திசை மாறிச் செல்ல தனது வீட்டினரை தாழ்த்தி பேசவும் அதற்கு மேல் பொறுமையாக இருக்கவியலாமல் அவள் பொரிய ஆரம்பிக்க அடைக்கப் பட்ட கதவின் உட்பக்கம் பெரியதொரு வாக்குவாதம் நடைப்பெற்று ஓய்ந்தது.

வழக்கத்திற்கு மாறாக தாமதமாக உறங்கியதால் எழ நேரமாகி விட்டிருந்தது. அவர்களது அறையின் கதவு தட்டப்பட்டது. ‘யாருக்காவது இவர்கள் அறையின் உள்ளே இருக்கும் கப்போர்டில் இருந்து உடை எடுக்க வேண்டி இருக்கும், அதனால் தான் அந்த கதவு தட்டப் படுகின்றது’ என எண்ணியவள் அவசரமாக கதவை திறந்தாள். கதவின் வெளியே கணவனின் அண்ணன் நின்றுக் கொண்டு இருந்ததும், அவரது பார்வை விரிக்கப் பட்டிருந்த பாயில் நிலைத்ததும் கண்டு திடுக்கிட்டாள். இரவில் இவள் தரையில் பாய் விரித்து தூங்கி இருந்ததை அவர் கண்டுக் கொண்டார். அந்த வீட்டில் தான் மதிப்பிற்கு உரியவராக எண்ணியிருக்கும் நபர் முன்னால் தனது விஷயம் வெளிப்பட்டது குறித்து சங்கடமாக உணர்ந்தாள். விரித்த பாயை மடிக்காத மடத்தனத்தை நொந்தவளாக அவர் முன்பாகவே பாயை மடித்து வைத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

‘தன் தம்பியின் விபரம் தெரிந்து வந்திருப்பாரோ? அப்படித்தான் இருக்க வேண்டும். ஏதோ ஒருவராவது அக்கறையுடன் இருப்பது நல்லதுதானே?’

இரவு நிகழ்ந்தவை குறித்து வீட்டில் யாரும் அவளிடம் என்ன விஷயம் என்று வந்து விசாரிக்கவில்லை. அவர்களது புறக்கணிப்பில் இவளுக்கும் அவர்களிடம் சென்று, எதையும் சொல்ல விருப்பமில்லை.

மகன் மனைவி பக்கமாய் சாய்ந்து விடுவானோ? எனும் பயத்திலிருந்து வீரேந்திரனின் அம்மாவிற்கு விடுதலை கிடைத்தாற் போல இருந்தது. இவள் பெரிய அழகியாக இருந்தால் என்ன? இனி கொஞ்சம் கொஞ்சமாக என் மகனை என் பக்கம் இழுத்து விடுவேன் எனும் ஆசுவாசம் எழுந்தது. அது நாள் வரை அமைதியாக இருந்தவள், மகனிடம் சண்டை போடுமளவு மாறி விட்டிருந்தது அவருக்கு சாதகமான ஒன்றாயிற்றே? மனிதர்களின் மனங்களும் மனக்கணக்குகளும் ஒவ்வொரு விதங்களால் ஆனவை.

விமலா தனது அன்னையிடம் பேசும் போது எதையும் பகிர்ந்துக் கொள்ள இயலவில்லை, அதை அவள் விரும்பவும் இல்லை. எப்படியும் வீட்டு போனுக்கு அவர் அழைக்கும் போது அனைவர் முன்பும் நன்றாகத்தான் பேசியாக வேண்டும். PCO ல் பேசவென்று பத்திருபது ரூபாய்கள் தேவைப்படும் பல நேரங்களில் காய்கறி வாங்கியது போக போன் பேசுமளவு அவளிடம் சில்லறைகள் மீந்து போவதில்லை. ‘இங்கு நடக்கின்றவைகளை அங்குச் சொல்லித்தான் என்னவாக போகின்றது?’ எனும் மன நிலைக்கும் விமலா வந்துவிட்டிருந்தாள்.

அந்த பிரச்சனைக்குப் பிறகு ஓரிரு நாட்கள் வீரேந்திரன் அவளுடன் பேசாதிருந்தான். பாராமுகமாக நாட்கள் கடந்திருக்க திடீரென அவன் வாங்கிக் கொடுத்ததாக யார் மூலமாகவோ அவளுக்கு இரண்டு புது சுடிதார்கள் வந்து சேர்ந்திருந்தன.

இரண்டுமே அவளது அளவிற்கு டபிள் சைஸ். தன்னை எருமை மாடு எனக் குறிப்பிட்டு இருந்தது போலவே நினைத்து உடைகளை எடுத்திருக்கிறான் என அவளுக்கு கசந்த முறுவல் எழுந்தாலும் கூட ‘ஏதோ இதுமட்டும் வாங்கித் தந்தானே’ என்று ஒரு திருப்தி. இவைகளோடு ஒப்பிடுகையில் என்னுடைய உடைகள் நன்றாக இருந்தனவே, அதை எதற்காக எல்லோரும் சேர்ந்து தானம் கொடுக்கச் சொன்னார்கள்? மண்டையை பிய்த்துக் கொள்ளும் படியான நிலைதான்.

இரவு வீட்டிற்கு வந்தவனிடம் அந்த உடைகள் பெரிதாக இருக்கின்றன மாற்ற வேண்டும் என அவள் சொல்ல முன்வந்த போது “உன் சைஸ் எல்லாம் இங்க யாருக்கு தெரியும்? என் கிட்ட வேலை பார்க்கிறவன் கிட்ட பணம் கொடுத்து வாங்கச் சொல்லி இருந்தேன். அவன் வாங்கி இங்கே கொடுத்து விட்டுருந்திருக்கான். உனக்கு பிடிச்சதுன்னா போடு இல்லை தூரப் போடு. என் கழுத்தை அறுக்காதே” பொரிந்தான்.

கூடுதலாக “இந்தா பாரு இந்த தினம் டிஃபன்ல சப்பாத்தி அனுப்புறது அது இதுன்னு ரொம்ப டிராமா செஞ்சுட்டு இருக்காதே என்ன புரியுதா? சாப்பாடு பண்ணிட்டாளாம் பெரிய சாப்பாடு. நீ அனுப்புற டிஃபன்லாம் அந்த வேலைக்காரனுக்குத்தான் தினமும் நான் சாப்பிடக் கொடுப்பேன். நாளையில் இருந்து எனக்கு டிஃபன் அனுப்பக் கூடாது” என்றான். விமலாவிற்கு கணவன் பால் கொஞ்ச நஞ்சம் மீதி இருந்த மெல்லிய உணர்வுகளும் அடிப்பட்டு போயின.

ஓரிரு நாட்கள் கடந்திருந்தன, தான் ஏற்றிருந்த பொறுப்பில் குறை வைப்பானேன் என காலை எழுந்து வழக்கம் போல சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அவளால் தரையில் அமரவே இயலவில்லை, ‘கீழே விழுந்து விடுவோமோ?’ என பயப்படும் படி தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

இப்படி முன்பு ஒரு நாளும் தனக்கு ஆனதில்லையே? மாமியாரிடம் சொல்லிக் கொண்டு படுக்கையறையில் சென்று படுத்துக் கொண்டாள். இப்போது தலைச்சுற்று கொஞ்சம் பரவாயில்லை எனும்படி இருந்தது.

“வந்ததில் இருந்து பெரிய இவளாட்டம் சிலுப்பி, சிலுப்பி இரண்டு வாரம் தொடர்ந்து வேலை செஞ்சதோட சரி.நானும் நினைச்சேன் புது தொடப்பம் நல்லா கூட்டுதேன்னு இன்னிக்கு நீட்டி நிமிர்ந்து படுத்தாச்சு” எங்கோ பேச்சு சப்தம் கேட்டது… கண்ணயர்ந்தாள். சாயங்காலம் அவளால் ஓரளவு தன்னிலையில் நிற்க முடிந்ததும் வேலைக்காரப் பெண் மூலமாக அறிமுகமாகி இருந்த அந்த க்ளினிக்கிற்கு தனியாகவே சென்றாள்.

அவள் சொன்னதை கேட்டவர்“ப்ரெக்னென்சி போலத்தான் இருக்கு, இதோ யூரின் டெஸ்ட் செய்யணும் இதைச் செய்……”

சற்று நேரத்தில் அந்த கருவியில் அவளது கர்ப்பம் உறுதியாகி விட்டிருந்தது. மருந்து மாத்திரைகள் வாங்க மறுத்தவள் தான் கணவனோடு வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி வீட்டிற்குச் சென்றாள்.

முதலில் தாய்க்கு தெரிவித்தவள் கணவனை மருத்துவர் அழைப்பதாகச் சொல்லி கட்டாயமாக வரவழைத்தாள். வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவன் இம்முறை தனியாக வந்தானில்லை. டாக்ஸி டிரைவர் மற்றும் டாக்ஸி டிரைவரின் காதலி என இருவரோடு கூட அந்த டாக்ஸியில் மருத்துவமனை சென்றவன் மருத்துவர் சொன்ன தகவலை இருமுறை உறுதிப் படுத்திக் கொண்டான். “என் மனைவி படிக்காத முட்டாள், நீ கொஞ்சம் விபரம் கேட்டுச் சொல்லேன்” தன் நண்பனின் காதலியிடம் வந்து மருத்துவரிடம் கேட்டுச் சொல்லும்படி உதவி கேட்டான். அவ்ன் அவளை அவமானப் படுத்திய விதத்தில் விட்டால் அங்கேயே நடனமாடி விடுகின்றவன் போல இருந்தவனின் உற்சாகம் கண்டு அவளால் மகிழ்ச்சிக் கொள்ள இயலவில்லை.

அந்த அமர வாகாக இல்லாத வண்டியில் இரயில்வே ஸ்டேசன் வரை சுற்றிக் கொண்டு வர இவளுக்கு இடுப்பும், முதுகும் கடுக்க ஆரம்பித்தன. அந்த வண்டியில் இருந்த நால்வரில் இவளை யாரும் பொருட்படுத்தாத நிலை. வீட்டிலும் நான் பொருட்டில்லை கணவனுக்கும் நான் பொருட்டில்லை என மனதிற்குள்ளாக ஏதோ ஒரு உணர்வு வந்துச் சென்றது. அவளை இரவு 9 மணியளவில் வீட்டில் விட்டுச் சென்றவன் அதன் பின்னர் வீட்டிற்கு வரவே இல்லை.

வழக்கம் போல கணவனை எதிர்பார்த்து விழித்திருந்தாலும் இன்று அவளது இடுப்பும் முதுகும் அணுஅணுவாக வலித்துக் கொண்டிருக்க மரக்கட்டையாய் முதுகை கட்டிலில் சாய்த்துக் கிடந்தாள். சாற்றியிருந்த கதவின் கீற்றின் நடுவில் இருந்து சில உரையாடல்கள் மிக மெலிதாக கசிந்துக் கொண்டிருந்தன.

“பதினேழு நாளில் யாராவது கர்ப்பம் ஆவாங்களா?”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here