இது இருளல்ல அது ஒளியல்ல_15_ஜான்சி

0
871

அத்தியாயம் 15

கடந்த இரவு நிகழ்ந்தது குறித்து இப்போது மனதில் ஓட்டிப் பார்க்க அவளது உள்ளுணர்வுகள் விழித்துக் கொண்டன. இதுவரை திருமண வாழ்க்கையில் தனக்குப் பிடிக்காத பலவும் சரியாகி விடும் என எதை எதையோ எண்ணி தன்னை சமாதானப் படுத்தி வைத்திருந்தவளின் மனதிற்குள்ளாக திடீரென எழுந்து இருந்தது அந்த பள்ளம். அது நம்பிக்கையின்மை எழுப்பிய பள்ளம். அந்தப் பள்ளத்தில் அவள் விழுந்து, நொறுங்கி சிதறிப் போனாள்.

அண்ணனும் தம்பியுமாக ஒரே காரில் வந்து இறங்குகிறார்கள். அண்ணன் காரில் தங்கி விடுகிறான். தம்பி அண்ணனின் அறையில் அண்ணனின் மனைவி படுத்திருக்கும் அந்த நள்ளிரவு நேரம், காரணம் எதுவும் இன்றி வாயிலில் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் நிற்கிறான் என்றால் அவன் நோக்கம் என்ன? தம்பியை தனது மனைவி இருக்கும் அறைக்கு நடு இரவில் அனுப்பி வைத்து விட்டு தம்பியின் காரில் தூங்கி நிதானமாக காலை பதினோரு மணிக்கு வருகின்றவனின் நோக்கம் என்ன?  அப்படி காலையிலெழுந்து வீடு வருகின்றவன் தன் மனைவியை ஏறெடுத்தும் பாராமல் பார்வையை தவிர்த்து விட்டு அன்னையின் அறையில் சென்று படுத்துக் கொள்கின்றான் எனின் அதன் காரணம் என்ன?

முன்னிரவு அண்ணனும். தம்பியும் நிகழ்த்திய அல்லது நிகழ்த்தவிருந்தது எல்லாமும் அந்த இருபத்தியோரு வயது வளர்ந்த குழந்தைக்கு தெளிவாக புரிந்து விட்டிருந்தது. அவளது புகுந்த வீடு அவளை ஒரு போதும் தாங்கவில்லைதான். அன்பு காட்டி அரவணைக்கவில்லைதான். ஆனால், அவளிடம் அந்த நிலைமை மாறும் எனும் நம்பிக்கை இருந்தது.

அவள் தான் ஊரில் எல்லா பெண்களின் வாழ்க்கையையும் பார்த்து வந்திருக்கின்றாளே? “வீட்டிற்கு வீடு வாசப்படி” என்பது போல ஆளுக்கொரு பிரச்சனை என்று இல்லாத வீடு எதுவும் இல்லை. மற்றவர்களை அவள் ஒப்பிடுவானேன்? ஏன் அவள் வீட்டில் அவளது அப்பாவை குறித்தென்ன? சுகுமாறன் தம் வீட்டில் மற்றவர்கள் தனது அடிமைகள் என்பது போல எவரிடமும் சுடு சொல் தவிர்த்து வேறு பேசியறியாதவர் அல்லவா?

மனைவியோ, மகளோ யாரையும் சமமாக நடத்தாத பெண்களை மதிக்காத குணம். அவரறியாமல் அந்த வீட்டில் ஒரு துரும்பும் அசைக்க முடியாது. தனது உறவினர்களை வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்ற அதே வாய்தான் மாலதியின் உறவினர்கள் வருகையில் ஒற்றைச் சொல்லில் வரவேற்று விட்டு“நான் தூங்கப் போறேன்” எனச் சொல்லும். தன் வீட்டிற்கு உறவாட வந்தவர்களுடன் நல்லபடியாக பேசவும் கூடச் செய்யாமல் அங்கிருந்து விருட்டென மறைந்தும் விட்டிருப்பார்.

பிற ஜாதி நட்புக்கள் வந்தால் வாயிலில் நின்று பேசக் கூட அவர் அனுமதித்தது இல்லை. இவரது கடுகடு முகத்தை பார்த்தே வீட்டுக்கு வரத் துணியாத விமலாவின் நட்புக்கள் பலருண்டு. தொலைபேசியில் அவரது குரலைக் கேட்டே அதன் பின்னர் அவளுக்கு அழைக்கத் துணியாத தோழிகளும் உண்டு.

அம்மா வாழவில்லையா?‘தனது வாழ்வும் இவைகளில் ஒன்றைப் போலத்தான். நாளாக, நாளாக நமக்கு இந்த வாழ்க்கையின் சூட்சுமம் கற்றுக் கொள்ள முடியும்’என எண்ணி இருந்தாள். இதுவரை தனக்கு கணவனிடம் இருந்து அன்புதான் கிடைக்கவில்லை என்று எண்ணினால் இப்போதோ கணவனே தன் தம்பியை வேறு நோக்கத்தில் தனது அறைக்கு அனுப்பி வைப்பதானால் இனி இந்த வீட்டில் பாதுகாப்பும் இல்லை என்றாகி விட்டதா? மனம் குமுறியது.

‘எதுவும் சரியில்லை’மனம் ஓலமிட்டது. அங்கிருந்து ஓடிப் போய்விட மனம் சொன்னதும் அல்லாடிப் போனாள். ‘ஐயோ அவள் எங்கே செல்ல முடியும்? அவளுக்கு போக்கிடம் இல்லையே?’ சிந்தித்து சிந்தித்து மருண்டு போனாள்.

‘என்னை தவறான வாழ்க்கைக்கு வலியுறுத்தி விடுவானோ?’ கணவனைக் குறித்து மனம் நடுங்கியது. ஒன்று எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது அங்கிருந்து நீங்கி வேறு இடம் செல்ல வேண்டும்.

எதிர்த்துப் போராடுவதெனில் யாருடன் எப்படி போராடுவது? நீ இன்னவிதமாய் செய்தாயா? இப்படி செய்யக் கூடாது என தன் கணவனிடம் எதையுமே பேசப் முடியுமா? தன்னிடம் குற்றம் இருந்தால் அவன் நிகழ்ந்ததை மாற்றிக் கூட பேசுவான். “என் தம்பியை நீதான் உன்னறைக்கு அழைத்து இருப்பாய்” என அவன் மாற்றிப் பேசினால் அவள் மானக் கேட்டில் செத்தே போவாளே?

அங்கிருந்து நீங்கி வேறிடம் செல்வதென்றால் அவளுக்கு பிறந்த வீட்டைத் தவிர வேறு எந்த இடமும் தெரியாதே? இவள் இங்கு நடக்கின்றவைகளை சொல்லப் போனால் அதை அவர்கள் நம்பவும் மாட்டார்கள்.

விமலா விருப்பமின்றியே திருமணத்திற்கு சம்மதித்து இருக்க திருமணம் முடிந்த ஆரம்ப காலத்தில் இவள் வீட்டில் இவள் ஒழுங்காக நடந்துக் கொள்கின்றாளா? என ஆராய்ந்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.இப்போதும் கூட இவள் இங்கு நடக்கின்றவைகளை சொல்லப் போனால் இவளை நம்புவார்களோ என்னமோ?

வீரேந்திரன் மற்றும் குடும்பத்தினர் குறிப்பாக அவளின் மாமனாரின் நாவன்மைக்கு முன்னால் இவளது உண்மைகள் மதிக்கப் படுமா? வாய்ப்புக்கள் இல்லை என்று மனம் அடித்துச் சொன்னது.

என்னதான் இருந்தாலும் வீட்டில் அவளுக்குத் துணையாக மாமனார், மாமியார், நாத்தனார் இருப்பது அவளுக்கு பாதுகாப்பு தான் என்பதால் நிகழ்ந்தவற்றில் அவளுக்கு சற்று ஆசுவாசம் தான்.

வீரேந்திரன் மட்டும் தான் வேலைக்குச் செல்கின்றவன் நள்ளிரவோ, அடுத்த நாளோ வருவதாக இருந்தான். அவனது அப்பா சாயங்கால நேரம் வீடு திரும்பி விடுவார், பல நேரங்களில் மதியமும் கூட திரும்பி விட்டிருப்பார். ஆனால், அவன் தம்பியை எந்நேரமும் வீட்டில் காண முடியும். ஹால் சோஃபாவில் டிவியை பார்த்தவண்ணம் அமர்ந்திருப்பான். அல்லது அன்னையின் அறையில் இருப்பான். அப்பாவோடு ஹாலில் தான் இரவில் உறங்குவது.

அது நாள் வரையில் அதிகமாக கவனிக்கப் படாத தனது கொழுந்தனின் நடவடிக்கைகளை அவள் திடீரென கவனிக்க வேண்டியதாயிற்று. இரவில் மற்றவர்கள் தூங்கிய பின்னர் அவன் நடந்துக் கொண்டதைப் போல பகலில் நடந்துக் கொள்ள முடியாது எனும் ஆசுவாசமும் எழுந்தது.     

மனித மனம் சில நேரங்களில் தனக்கு தான் விரும்பாதது நிகழ்ந்து விடுமோ? எனும் அச்சத்தில் பற்பல சிந்திக்கும், உருவகிக்கும், அவையெல்லாம் நிகழ்ந்து விட்டதாகவே பயந்து நடுங்கும். அவைகள் நிகழ்ந்து விடக் கூடாதே எனும் அச்சத்தில் அதையே சிந்தித்து, சிந்தித்து தானே உருவாக்கிக் கொண்ட நரகத்தில் உழலும்.

வெளியிலிருந்து பார்க்கின்றவர்களுக்கு அது மிகவும் சாதாரண விஷயம், அந்த மனஅழுத்தத்தில் உழலுபவருக்கு அது மாமலை. அந்த சுழலுக்குள் விமலா மாட்டிக் கொண்டாள் அதுவும் மிகவும் மோசமாக சிக்கிக் கொண்டாள்.

யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என தனக்குள்ளாக புதைத்திருந்த பலவும் வெடிக்க தக்க சமயம் பார்த்திருந்தன. அரவணைப்பு கிட்டாத சிறுபிள்ளையாக அவள் மறுகிப் போனாள். இத்தனைக்கு நடுவில் அவள் மாமியாரும், நாத்தனாரும் ஒரு மாதத்திற்கு ஊர் செல்வதாக பேசிக் கொண்டிருக்க இங்கு இவள் மனதை பயம் கவ்வியது. அவர்கள் ஊருக்குச் சென்று விட்டால் பகல் நேரம் அவளும், அவள் கொழுந்தனும் மட்டுமல்லவா இருக்க வேண்டும்? ஐயோ எதுவும் தவறு நிகழ்ந்து விடுமோ?

அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தில், பூட்டிய வீட்டிற்குள் கணவனின் அனுமதியோடு ஒருவன் தனியளாக இருக்கும் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? அவளுக்கு என்று உதவ அந்த ஊரில் யாருமே இல்லையே? பகலில் வீட்டை விட்டால் அவளும் எங்குச் சென்று ஒளிந்துக் கொள்ள முடியும்? சில வாரங்கள் கழித்து நிகழ்ந்து விடுமோ என தான் அஞ்சுகின்றவற்றை எண்ணி, எண்ணி மனம் பதைபதைக்க ஆரம்பித்தது.

உணவில் நாட்டம் குறைந்தது, தூங்காமல் வெறிக்க ஆரம்பித்தாள். இயந்திரத்தனமாக வேலையை செய்யலானாள். வயிற்றில் குழந்தையும் அதனால் அவள் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களோடு கூட இத்தனை விஷயங்களும் சேர்ந்திருக்க மன அழுத்தத்தில் அவளுக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்து இருந்தது.

இப்போதெல்லாம் அவள் கேட்கும் படியாகவே அவளது நாத்தனாரும், மாமியாரும் அவளை குத்திப் பேசத் தொடங்கினர்.

‘ஆஸ்துமா நோய் இருக்கவளை போய் கட்டிக் கொடுத்துருக்காங்க பாரேன்” மகளிடம் நொடிக்க,

“சுகமில்லாதது போல இவ நடிப்பாளா இருக்கும் மா… அப்பதானே வேலை செய்யாம மட்டம் போடலாம். சின்ன அண்ணனுக்கு லோசன் தடவுற மாதிரி காலை காட்டி மயக்க நினைச்சவதானே இவ?” மகள் அலறினாள்.

“ஐயோ அப்படி எல்லாம் இல்ல…” மனதிற்குள் கதறினாலும் விமலாவிற்கு எதையும் பேச முடியவில்லை. அவள் சம்பாசனைகள் எல்லாம் மனதிற்குள்ளாகத்தான்.

உள்ளேயே ஒடுங்கி, தகர்ந்துப் போனாள். கணவன் வந்து திட்டுவதற்கெல்லாம் அவள் இப்போது பதிலளிப்பதில்லை. அவளது வெறித்தப் பார்வை அவர்களுக்கு கலக்கமளித்தது. ஊருக்குச் செல்லும் நாட்கள் நெருங்கிக் கொண்டு இருந்தன.

அவர்கள் ஊரிலிருக்க்கும் நாட்களில் இந்த மருமகளாகப் பட்டவள் பொங்கிப் போட்டு, வீட்டைக் கவனித்துக் கொள்வாள் என எண்ணினால் அவளோ மோட்டை வெறித்தவளாக பார்த்துக் கொண்டு இருந்தால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

வீட்டிலேயே அடைந்து கிடப்பானேன் என மார்க்கெட் செல்வதை வெளிக்காற்று வாங்கச் செல்வதாக எண்ணி விமலா உற்சாகமாக சென்று வருவாள். அதுவரையிலும் மார்க்கெட் செல்லும் வேலையை தனதாக்கிக் கொண்டு இருந்தவள் அதில் பத்திருபது ரூபாய்களை போன் செய்ய உபயோகிப்பதாக அறிந்து இருந்தும் மாமியார் கண்டுக் கொண்டதில்லை.

இப்போதோ மார்க்கெட் செல்லவும் வேலைக்காரப் பெண்ணை நாட வேண்டி இருந்தது. அவளோ சில மாதங்கள் விடுபட்ட தனது வேலையை செய்ய மிக சுணங்கினாள்.

‘இவளுக்கு என்ன இழவு வந்தது, முன்போல எல்லாவற்றையும் பொறுப்பாக செய்தால் என்ன?’மாமியாருக்கு சுருசுருவென வர ஒரு நாள் அவள் மயங்கி விழவும் தான் வீட்டினர் பயந்து விட்டிருந்தனர்.

அவளது மயக்கம் தெளிந்ததும் வீரேந்திரனையே அவன் மாமனாருக்கு போன் பேச வைத்தனர். உங்கள் மகளை நலமாக்கிக் கொண்டு வந்து விடுங்கள் எனச் சொன்னதும் சுகுமாறனும், மாலதியும், சிவாவும் ஓடோடி வந்து மகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.

அவளது மாமியார் வீட்டில் ஒவ்வொருவரும் அமர்த்தலாக, வெகு நாகரீகமாக பேசிய விதத்தில் அவர்கள் மீது இவர்களுக்கு எந்த குற்றம் குறையும் தோன்றவில்லை.

வீட்டில் கவனிக்க யாருமில்லாத நேரத்தில் மருமகள் தாய் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கட்டுமே? என எண்ணியதாக புரிந்துக் கொண்டனர். அதற்கேற்ப விமலாவின் மாமியார் ஒருமுறை வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்து அன்பாக, பண்பாக பேசி நலம் விசாரித்துச் சென்று இருந்தார்.

கர்ப்ப காலத்தில் வரும் பிரச்சனைதான் என எண்ணி ஒரு மாதம் அவள் விருப்பம் போல ஓய்வெடுக்க விட்டிருந்தனர். தனக்குள்ளேயே உழன்றுக் கொண்டிருந்த விமலாவிற்கு தன் தாய் வீட்டிற்கு வந்தது கூட உணர்வில்லை. அவளுக்கு தனது புகுந்த வீடு எப்படி அன்னியமாக இருந்ததோ அது போலவே தாய் வீடும் அன்னியமாகவே இருந்தது.

எங்கும் அவளுக்கு உரிமை இல்லையே? அவளது உணர்வுகளை மதிப்பவர்கள் இல்லையே? அவளே வந்து பகிர்ந்தாலும் கூட அவளது பேச்சுக்களை நம்புகின்றவர்களும் எவருமில்லையே? இப்படி இருக்கையில் இரண்டு வீடுகளும் அவளுக்கு அன்னியம் தானே?

முதல் இரண்டு வாரங்கள் மகளை அவள் போக்கில் விட்ட பின்னரே மாலதிக்கு மகளின் போக்கு கொஞ்சம் புரிந்தது. இது தன்னுடைய மகளின் வழக்கமான இயல்பு இல்லை. சண்டையோ சச்சரவோ அவள் தன் யோசிக்கின்றவைகளை உடனுக்கு உடனே வெளிப்படுத்தும் இயல்பினள். இப்போதோ மோட்டுவளையை வெறிக்கும் பார்வை. பிடித்தமானவைகள் எதையும் அவள் உண்ணவில்லை. உடலிலும் கூட சற்று மெலிவு தென்படலாயிற்று.

புரிந்ததும் மகளுக்கு என்னவோ? என மாலதி பதறினாள். மகள் வாய்விட்டு எதையும் சொல்லாதிருக்க அவளது புகுந்த வீட்டினரைக் குறித்து அவர்களுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை.

ஓரிரு முறைகள் மகள் கணவனிடம் அலைபேசியில் பேசி முடித்த போது மட்டும் அன்றிரவு வரை மூச்சிரைப்பால் சிரமப் பட்டாள். இந்த மூச்சிரைப்பு அவளுக்கு முன்பு எப்போதும் இல்லாத ஒன்று. இப்போது எப்படி?

“வீட்டிற்கு எப்போது வருகிறாய்?” என மருமகன் கேட்பதற்கு எல்லாமா மகளுக்கு மூச்சிரைக்க வேண்டும்? மாலதிக்கு புரியவே இல்லை. தெரிந்தவர்கள் டாக்டர் ஸ்டீஃபன் குறித்த விபரங்கள் சொல்ல அவர்கள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். மகளுக்கு இது ஐந்தாவது சிட்டிங்க் (5 வது முறையான ட்ரீட்மெண்ட்) பெரும்பாலும் ஐந்து சிட்டிங்க் வரையிலும் போதும் என டாக்டர் அவர்களிடம் சொல்லி இருந்தார்.

மாலதியும், சுகுமாறனும் அந்த மருத்துவமனையின் வெளியே காத்திருந்தனர். மகளின் உடல் நிலை குறித்த கவலை அவர்களை கப்பி இருந்தது. முதல் முறை வந்த போது அவர்களிடம் உங்கள் மகள் புகுந்த வீடு சென்றால், உயிரோடு திரும்புவது சிரமம் என்று டாக்டர் சொன்னாரே அது முதலாக அவர்கள் தங்களுக்குள்ளாக பேச ஆரம்பித்து இருந்தனர்.

அவர்கள் என்றால் விமலாவின் பெற்றோரும், அண்ணன் அண்ணியும்… தங்கள் வீட்டுப் பெண் இத்தனையாக பாதிக்கப் பட்டு இருக்கிறாள் என்றால் அவள் புகுந்த வீட்டில் ஏதும் பிரச்சனை இருக்குமோ? எனும் கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்து இருந்தனர்.

ஆனால், ஒரு போதும் மகள் அவர்களிடம் எதையும் சொன்னது இல்லையே? புன்னகை மாறாமல் வந்துச் செல்வாளே? எது உண்மை? எது பொய்? புரியாமல் குழம்பி நின்றனர். அவசரப்பட்டு எதையும் பேசி மகளின் வாழ்க்கையை குழப்பிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

ஒரு மாதம் கடந்ததில் இருந்து “விமலா திரும்ப எப்போது வருவாள்?” எனும் போன் கால்கள் வர ஆரம்பித்து இருந்தன. நடுக்கிக் கொண்டே போனை எடுப்பாள் விமலா. அல்லது தூங்குவது போல படுத்துக் கொள்வாள். போன் உரையாடல்கள் இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

உள்ளே ஹிப்னடிச மயக்கத்தில் இருந்த சப்ஜெக்ட் அதாவது விமலா…

“போன் செஞ்சு வீட்டுக்கு எப்ப வர?னு ஒரே திட்டு, கெட்ட வார்த்தைகள் என்னால காதுக் கொண்டு கேட்க முடியலை.” விம்மினாள்.

“எனக்கு அங்க போக பயமாருக்கு, எனக்கு அங்கே போக பிடிக்கலை. அங்கே என்ன வேணா செய்வாங்க”

……

“அன்னிக்கு என் புருசன் போன் செஞ்சு திட்டிட்டு இருக்க நடுவில் ரிசீவர் வாங்கி பேசி அவ என் நாத்தனார் சொல்லுறா… அவங்களைப் பத்தி ஏதாவது தப்பா பேசினா அவ என்னை இரண்டா கிழிச்சிருவாளாம். இன்னும் என்னென்னவோ கெட்ட வார்த்தைலாம் சொன்னா” முகம் வியர்த்தது….

“எனக்கு அங்கே போக வேணாம்” அடுத்து மூச்சிரைக்கும் நிலை வரும் முன்பாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவளின் மயக்கத்தை நீக்கும் ஆணைகள் விடுத்தார். ஹிப்னடிச மயக்கத்தில் ஆழ்த்த அவர் தலை முதல் கால் வரையிலும் செய்த அசைவுகளை இப்போது கால் முதல் தலை வரையிலுமாக மாற்றிச் செய்யலானார்.

தூக்கத்தில் இருந்து விழித்தார் போல எழுந்து அமர்ந்தவளுக்கு புன்னகையை டாக்டர் பரிசளிக்க விமலாவின் உதடுகளில் சில நொடிகல் முயன்று வருவித்த சின்னப் புன்னகை வ்ந்துச் சென்றது.

“யூ ஆர் ஆல்ரைட் சைல்ட், போங்க போய் அம்மா அப்பாவை வரச் சொல்லுங்க”

முதல் நாள் வந்தது போலல்லாமல் சற்றுத் தெளிவாக இருந்தவள் பெற்றோரிடம் சென்று டாக்டர் சொன்னதைச் சொல்லி உள்ளே போகச் சொல்லி விட்டு வெளியே காத்திருந்தாள். வயிற்றினுள்ளே அவள் குழந்தை அசைவதை முதன் முறை உணர்ந்தாள்.

வயிற்றின் மேல் தன் கரத்தை வைத்தவளுக்கு சிலிர்த்தது.தாயும், குழந்தையுமாக தங்களது உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினர்.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here