பிரபஞ்சத் துகள்_10_ஜான்சி (இறுதிப் பகுதி)

0
355

அத்தியாயம் 10

அன்னம்மாள் இல்லம்

நிச்சய விழாவிற்காக அவ்வீடு அமளிதுமளிப்பட்டுக் கொண்டு இருந்தது. ப்ரீத்தி கைகள் நடுங்க அந்தப் பெண்ணுக்கு அலங்காரம் செய்துக் கொண்டு இருந்தாள். அந்த நடிகைப் பெண்ணோ ஏற்கெனவே பூமாவின் நடை உடை பாவனைகளை தனக்கு கொடுக்கப்பட்ட காணொளிகளில் இருந்து கிரகித்துக் கொண்டு இருந்தாள். இரண்டு நாள் நடிப்பதற்கு கோடிப்பணம் கிடைக்க அதை தவற விடுவதற்கு அவளென்ன முட்டாளா?

மேக்கப் ஹேர்ஸ்டைல்கள் செய்து அவள் பூமா போல தெரிகின்றாளா? என ப்ரீத்தி பலமுறைகள் பார்த்து உறுதி செய்துக் கொண்டாள். தனக்கு கொடுக்கப்பட்ட விபரங்களின் படி அந்த நடிகையும் நிச்சயதார்த்த விழா முழுக்க தலை குனிந்தே கலந்துக் கொண்டிருக்க பொண்ணுக்கு வெட்கம் என அனைவராலும் கணிக்கப்பட்டது.

எக்ஸ்க்ளூசிவ் என புகைப்படங்கள் சுடச்சுட மீடியாவிற்கு வர, இலட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தனர். ஆம்.. அன்னம்மா மக்களின் மனதை வென்றிருந்தார்.

****

லாரி கர்னாடகாவின் அந்த ஓரப்பகுதியில் பயணித்துக் கொண்டு இருந்தது. முரண்டு பிடிக்காமல் பயணம் செய்தவளை துன்புறுத்தாமல் அந்த அவனும் அவளுக்கு செல்லும் வழியில் ஓரிரு முறைகள் உணவுகளை வாங்கிக் கொடுத்திருந்தான் பரம்வீர் சுக்லா. தன் கண்பார்வைக்குள் கழிவிடம் செல்ல அனுமதித்தான்.லாரிக்குள் வந்ததும் கைகள் கால்களை கட்டிப் போட்டான்.

வெளியில் செல்லும் போதெல்லாம் எப்படி தப்பிக்கலாம் என அவள் கண்கள் அலைபாய்வதை அவனால் கணிக்க முடிந்தது. அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த காட்டுப்பாதையில் மற்ற எந்த வாகனமும் வராது இருக்க தப்பித்துச் செல்வது கடினம் என்றறிந்தே அவள் எந்த முடிவிற்கும் வந்திருக்கவில்லை.

மக்கள் கூட்டமான இடத்தை அடைந்ததும் தப்பித்து விட வேண்டும் எனும் திட்டங்கள் அவளிடம் இருந்தன. வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனின் சப்தம் கேட்டு அவளுக்கு காவல் இருந்த பரம்வீர் சுக்லா விரைந்தான்.

கடும் வயிற்றுவலியில் துடித்துக் கொண்டு இருந்தான் சுரேந்தர் சிங் ஓட்டுனன். சுக்லா உடனே முடிவெடுத்து அருகாமையில் இருந்த மருத்துவமனையில் அவனைச் சேர்த்து பணத்தைக் கட்டி பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு புறப்பட்டான். எடுத்த காரியம் முடிக்க வேண்டி இருக்கின்றதே?

லாரி பயணித்துக் கொண்டு இருக்கின்றது… பெண்ணவளை கொன்று முகத்தை சிதைத்து கடலில் வீசி விட்டால் யாருக்கு அடையாளம் தெரியப் போகின்றது? மருத்துவமனையில் இருக்கும் தன் நண்பனை உடனே திரும்பச் சென்று பார்க்க வேண்டும் எனும் உத்வேகம் அவனை உந்தித் தள்ளியது. அந்தக் கடலின் ஒதுக்குப் புறமான ஆழமான பகுதியில் போட்ட பிணங்களை மீன்களே கடித்து தின்றுவிட எச்சங்கள் மிச்ச சொச்சங்கள் வெளி வருவதென்பது அபூர்வம்.

அன்று மதியத்திலிருந்து பசி தாகத்தில் களைத்திருந்த சமேலி தற்போது மயங்கி இருந்தாள். அவளை தூக்கி அந்த லாரியை விட்டு இறங்கினான் பரம்வீர் சுக்லா. ஆளரவமற்ற இது போன்ற பல இடங்கள் அவர்களுக்குத் தெரியும், இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய இப்படி இடங்கள்தானே சரி.

இழுத்து தரையில் போடப்பட்டு இருக்க சமேலிக்கு கடற்கரைக் காற்றில் சுரணை வந்ததும், கைகள் கட்டப்படாமல் இருக்க எழுந்து அமர்ந்தாள்.கால்கள் இன்னும் கட்டப்பட்டு இருந்தன.

சுக்லா ஏதோ ஒரு எண்ணத்தின் பிடியில் சிக்கிக் கிடந்தான்.

எழுந்து அமர்ந்தவள் முன் உணவையும் தண்ணீரையும் நீட்ட அந்த சுக்கா ரொட்டி தொண்டைக்குள் அடைத்து விக்குகையில் தண்ணீரை விழுங்கினாள் அவள்.

“நீ என்னை கொல்லலியா?”

“ஏதோ தயக்கமா இருக்கு…”

“ஏன்?”

“தெரியலை… ஏனோ தயக்கமா இருக்கு.”

“இது வரை எத்தனை கொலை செஞ்சு இருப்ப?”

“அது இருக்கும்… மனதில் எண்ணியவன் முன்னூறாவது இருக்கும்.”

“இப்ப ஏன் என்னை கொல்ல முடியலை?”

“நீதான் பயப்பட மாட்டேங்கிறியே… அழ மாட்டேங்கிறியே… என்னைப் பார்த்து துடிக்கலை. விட்டுருன்னு கெஞ்சலை. நான் எப்படி உன்னை கொல்லுறது? என்னவோ ஒரு சுவாரஸ்யமே இல்லாம இருக்கு?”

ஹா ஹாவென சிரித்தாள் சமேலி…

“சாவு விடுதலை… வாழ்க்கைதான் போராட்டம். ஆனால், போராட்டம் தானே நமக்கு பிடிச்சிருக்கு.”

“……” அவளையே வெறித்திருந்தான் சுக்லா.

“என்ன … வேணுமா?” கலவிக்கான அவனது குறிச்சொல் சொல்லி இவள் கேடக…

“அது எங்க விதிமுறைக்கு மாறானது?” என விரைத்தான் அவன்.

“அப்ப நானே என்னை கொன்னுக்கவா? கத்தி தர்றியா?”

“ச்சீ… நான் உன்னை கொல்ல முடியாத அளவுக்கு… அந்தளவுக்கு கையாலாகாதவனா?” தனது மானம் சீண்டப்பட்டவனாக துடித்தான்.

அவனுக்கு என்ன வேண்டும் என அவனுக்கே புரியாத நிலை. அப்போது அவள் அவனிடம் தணிவாக கேட்டாள்.

“அப்படின்னா என்னை விட்டுறியா?”

“அதெப்படி விட முடியும்? சப்னாம்மாக்கு தெரிஞ்சா பொலி போட்டிருவாங்க.”

“நான் தான் அவங்க வாழ்க்கைக்குள்ள வர மாட்டேனே?”

“அப்படியா?”

“ஆமா, அங்கிருந்து தப்பிக்க எத்தனை நாளா முயற்சி செய்தேன் தெரியுமா?, எனக்கெதுக்கு அவங்களும் அவங்க வீடும் மக்களும்?”

“நிஜமாவா?”

“நிஜமாதான்.”

“ஆனா உன்னைதான் எல்லோரும் டிவில மீடியால பார்க்குறாங்களே… அடையாளம் கண்டு பிடிச்சுப்பாங்க.”

“ஓ அதுதான் பிரச்சனையா?”

“ம்ம்”

“உனக்கு நான் போட்டிருக்கிற இந்த உடை சாட்சியா காட்டுறதுக்கு வேணும்ல?”

“ம்ம்… ஆமாம்”

சட்டென அந்த அங்கியை அவன் முன்னால் கழற்றினாள் அவள். உள்ளே உடையென்று இருந்தது நிர்வாணம் மட்டுமே…திகைத்து நின்றவனிடம் தன் உடையை கொடுத்தவள்…

“கொஞ்சம் கத்தி தாயேன்” என்றாள்.

கத்தியை வாங்கியதும் சரசரவென தன் முடிகளை மழிக்கலானாள். அதன் கூர்மையில் தலை வாங்க வேண்டிய அந்த கத்தி தலை மயிரை மட்டும் உதிர்த்து அவளது நிர்வாணத்தை முழுமைப்படுத்தியது.

அப்படியே கடலின் ஓரம் சென்றவள் கழுத்தளவு உயரம் வந்ததும் முங்கி எழுந்தாள். கடலினின்று வெளிவந்தவள் அந்த கருப்பு இருட்டில் ஆணா பெண்ணா என அடையாளங்கள் இல்லாதவள் போல வெற்று உருவமாய் சுக்லா முன் வந்து நின்றாள்.

“உன்னோட குர்த்தி ஒன்னு தரியா?” கேட்டவளுக்கு கைகள் நடுங்க தன் உடையை அவன் கொடுக்க தலை வழியாக போட்டுக் கொண்டாளவள்.

“இப்ப என்னை அடையாளம் தெரியுதா?”

இல்லையென்று அவன் தலையசைக்க… “இப்படி இருக்க எனக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா? நாடோடியா நினைச்ச நேரம் தூங்கி, நினைச்ச நேரம் எழுந்து, கிடைச்சதை தின்னு கிடைக்காட்டா கண்டுக்காம உறங்கி…” கண்கள் மின்னச் சொன்னவள் அந்த கடற்கரை வழியில் நடந்துக் கொண்டு இருந்தாள்.

“இப்ப வேணும்னாலும் நீ என்னை கொன்னுக்கலாம்… பிரச்சனை ஒன்னும் இல்லை” திரும்பி முறுவலித்தாள்.

தூரத்தே ஒரு புள்ளியாய் பிரபஞ்சத்தின் ஒரு துகளாய் கடந்துச் சென்றவளைப் பார்த்திருந்த சுக்லாவிற்கு இனி ஒரு தரம் அந்தக் கத்தியால் தன்னால் யாரையும் கொல்ல முடியுமா? எனும் ஐயம் எழுந்தது.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here