பிரபஞ்சத் துகள்_1_ஜான்சி

0
323

ஆசிரியர் முன்னுரை: இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், காட்சிகள், அத்தனையும் முழுக்க முழுக்க கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல.

அத்தியாயம் 1

அண்டம் {(ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் (Universe) இத்தாலியில் யூனிவர்ஸஸ் (universes)} எனப்படுவது விண்வெளி, காலம் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீண் திரள்கள், திண்மம், திரவம், வாயு எனும் மூன்று வகையான பொருட்கள் அவற்றின் ஆற்றல்கள் ஆகும். ஆரம்பகால அண்டவியல் மாதிரிகள் பண்டைய கிரேக்க மற்றும் இந்திய தத்துவ ஞானிகளால் உருவாக்கப்பட்டன.அவை புவியை மையத்தில் வைத்தனர்.

***

இந்தியாவின் அந்த உலக பிரசித்த வழிபாட்டுத்தலம் அதிகாலை நேரத்தில் களைக்கட்ட ஆரம்பித்தது. பக்த கோடிகள் திரள் திரளாக வழிபாட்டுத் தலத்தை நோக்கி வந்துக் கொண்டு இருந்தனர். சாலையில் நடைபயணமாக பலர் வந்துக் கொண்டு இருந்தனர் எனில், வாகனங்களில் குடும்பம் குடும்பமாகவும் பலர் வந்துக் கொண்டிருந்தனர். அத்தனை பக்தர்களையும், ட்ராஃபிக்கையும் ஒழுங்குப் படுத்த ட்ராபிக் போலீஸ்கள் மும்முரமாக இருந்தனர்.

அந்த வழிபாட்டுத் தலத்தில் கூடும் கூட்டத்தை கருத்தில் கொண்டவர்களாக அந்த இடத்தைச் சுற்றிலும் வியாபாரிகள் தங்களது விதவிதமான கடைகளை பரப்பி இருந்தனர். போகிற போக்கில் வாங்கி உண்ண ஏதுவாக வழி நெடுக உணவுப்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களின் கடைகளும் அங்கு இருந்தன.

வழிபாட்டுத் தலத்தை சுற்றுலாவாக கருதும் பெரும்பாலான நபர்களுக்கேற்ப அத்தியாவசிய மற்றும் ஆசைக்கான பொருட்கள் வாங்க வசதியான கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுக்கான கடைகளும் அங்கு ஏராளமாக இருந்தன.

அந்த வழிபாட்டுத் தலத்தை நெருங்க, நெருங்க பக்தி கானங்கள் உரக்க ஒலித்தன.பல நாட்களாக முயன்று தத்தம் சேமிப்பை கொண்டு அந்த பயணத்தை நிறைவு செய்து இருந்தவர்கள் அந்த பக்தி கானங்களால் நெக்குருகியபடி பக்தி பரவசத்தில் வெகுவாக திளைத்தனர்.

வழிபாட்டிற்குத் தேவையான அனைத்தும் அங்குள்ள தெருவோர கடைகளில் கிடைத்தன.

“அம்மா பூ வாங்கிக்கோங்கம்மா”

“பூ, பத்தி வேணுமாம்மா பத்தி?” பக்தர்களை துரத்தியது கூட்டம். வழிபாட்டுத் தலத்தை சுற்றியுள்ள கடைகளில் கூட்டம் நெருக்கித் தள்ளியது.

“இந்த பத்தி வாங்கி வச்சீங்கன்னா குடும்ப தலைவனுக்கு நல்லது, இதை வாங்கி அப்படியே ஒன்பது நேரம் ஸ்தலத்தை சுத்தி வந்தீங்கன்னு வைங்க, உங்களை பிடிச்ச பீடையெல்லாம் ஒழிஞ்சு போயிடும்”

வியாபாரியொருவர் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அத்தனை நேரமாய் அவர் சொன்ன அத்தனையையும் தன் வாயை பிளந்தவர்களாக கேட்டுக் கொண்டிருந்த அந்த குடும்பத்திற்கு அந்த ஒரு கணமேனும் தங்கள் துன்பம் இத்தோடு தீர்ந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டிருந்தது.

அதுதான் அந்த வியாபாரிகளின் நுணுக்கமான பேச்சின் வெற்றி. ஐந்து நிமிடங்கள் அந்த குடும்பத்தை பேசி நம்ப வைத்ததில் அக்குடும்பத்தினர் அந்த 50 ரூபாய் மதிப்பிலான பொருளை 300 ரூபாய்க்கு மிகுந்த பயபக்தியோடு வாங்கியவாறு, வியாபாரி சொன்ன வழிமுறைகளை மனதில் இருத்திக் கொண்டு வழிபாட்டுத் தலத்தை நோக்கி நடை போட்டனர்.

அதே தலத்தின் மற்றொரு பக்கம் வரிசையாக நின்று தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை போட காத்திருந்தது ஒரு கூட்டம். ஒன்றை இழந்து மற்றொன்றை அடைய விரும்பும் மக்களுக்கான புகலிடம் அதுவே.

ஏற்கெனவே வழிபாட்டுத்தலத்தின் அலுவலகத்தில் மொட்டை போட பணத்தை கட்டி அங்கு அவர்களுக்கு கிடைத்த டோக்கனோடு வரிசையில் காத்திருந்தனர்.

 “இந்தா அடுத்த டோக்கன் யாரு? இங்க வாங்க”

அந்த சிகை கலைஞர் கர்ம சிரத்தையாக செயல்பட சற்று நேரத்தில் அடுத்தடுத்து பல்வேறு தலைகளின் நிர்வாணம் வெளிப்பட்டது. அதற்கு பின்னதாக செய்ய வேண்டி இருந்த மற்ற நடைமுறைகளைச் செய்ய மொட்டைப் போட்ட நபரின் குடும்பத்தினர் விழைய…

“மொட்டை போட்டதுக்கு அப்புறம் அதோ அங்க போயி தலைக்கு ஊத்திக்கிட்டா தான் வேண்டுதல் முடிவடையும். தண்ணீர் மோந்துக்க வாளி வேணுமா வாளி, வாளிக்கு அட்வான்ஸா ஐம்பதே ரூபாய்தான் கட்டணும்”

மொட்டையிடும் இடத்திற்கு அடுத்த அந்த கடைக்காரர் அந்தக் குடும்பத்தினரிடமிருந்து பணத்தை வசூலித்து வாளியை கொடுத்தார். இவ்வாறாக அந்த பிரபல வழிப்பாட்டுத்தலம் எங்கெங்கிலும் காசு விளையாடியது.

உள்ளூர் வாசிகளான அந்த இரண்டு நபர்களும் தத்தம் வேலையின் நிமித்தம் பேருந்து நிறுத்தத்திற்கு பயணித்துக் கொண்டு இருந்தனர். ஒருவரை மற்றவர் பார்த்ததும் தங்களுக்குள்ளாக உரையாட ஆரம்பித்தனர்.

“வழக்கத்தை விடவும் இன்னிக்கு எதுக்காக இத்தனை கூட்டம்?”

“அந்த அரசியல்வாதி அன்னம்மா இருக்காங்களே, அவங்க இன்னிக்கு சமூக சேவைக்காக நம்ம கோயிலுக்கு வர்றாங்களாமப்பா, அதான் இத்தனை கூட்டம்.”

“எத்தனையோ கோவில்கள் அனாமத்தா கிடக்க, இவங்களுக்கு இங்க தான் வரணுமா? இந்த கூட்டத்தால நமக்கு எப்ப பஸ் கிடைச்சு, எப்ப வேலைக்கு போகவோ தெரியலையே?”சலித்துக் கொண்டார் அவர்.

“ஏற்கெனவே ஜே ஜேனு இருக்கிற இடத்துக்கு வந்தா தானே அவங்களுக்கும் மதிப்பு? எந்த கோவில்ல அதிகம் கூட்டம் இருக்கோ, அத்தனை விளம்பரம். அப்படியிருக்க ஆளத்த இடத்துக்கு போவாங்களா என்ன? அது சரி இந்த விபரங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதா? ஒரு வாரமாவே போஸ்டர் பேனர்லாம் போட்டிருந்தாங்களே? பார்க்கலியா என்ன?”

“ஓ அந்த நூறு இலவச திருமணங்கள், ஏழை எளியவங்களுக்கு உடை, உணவு அது கூடவே, தெருவோரம் தங்கி இருக்கிறவங்களை குளிக்க வச்சு முகம் மழிச்சு விடறது எல்லாம் இவங்களோட ஏற்பாடுதானாமா?”

“ஆமாம், ஆமாம் அவங்களும் தன்னோட சரிஞ்சு போன அரசியல் மதிப்பை எப்படித்தான் தூக்கி நிறுத்துறது?”

“ஓ அந்த அன்னம்மா மகன் தெருவோரத்தில தூங்கிட்டு இருந்த பொண்ணை தூக்கிட்டு போய் ரேப் செஞ்ச கேஸீ இவங்க கைக்கும் மீறிப் போனதால அப்ப இருந்தே அவங்க அரசியல் வாழ்க்கையில் பின்னடைவுதான். அதுக்குத்தான் இது எல்லாமே…இப்படித்தான் எதையாவது செஞ்சு மக்கள் மனசுல இடம் பிடிச்சாகணும்.”

“…ம்ம்ம்”

“அப்புறம் அந்த பொண்ணு என்னாச்சு?”

“உசிரு பொழைக்கலைனு தான் கேள்வி, செய்தி வெளிவராம தான் அமுக்கிட்டாங்களே? பல இலட்சங்கள் கோடிகள் இடம் மாறினதாக கேள்விப்பட்டேன்.”

“ம்ம்… சரி, இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். நாம நம்ம வேலையை பார்ப்போம்”

பேச்சு கலைந்து தத்தம் திசைக்கு அவர்கள் சென்று விட்டிருந்தனர். அந்த புண்ணிய பூமியோ(?) அரசியல்வாதிகளால் அமளி துமளிப் பட்டுக் கொண்டு இருந்தது.

கோவிலுக்கு அருகாமையில் என்றாலும் கோவில் நிர்வாகத்திற்கு உட்படாத ஒரு பொது இடத்தில் அவசரமாக ஏற்படுத்தப்பட்டு இருந்த முடிமழிக்கும் இடமும், அவசர குளியலறையும் அதனை கவரேஜ் செய்ய தொலைக்காட்சி சானல்களுக்கான அழைப்பும், அந்த நிகழ்ச்சிக்காக தேடி தேடி சேர்த்திருந்த மக்களும் வெகு தூரம் வரைக்கும் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தனர்.

சுற்றி இருந்த பலரை போல பல வருட அழுக்கை சுமந்த அந்த கிழிந்த உடையுடன், தன் மண்டையை சொரிந்துக் கொண்டு நின்றிருந்த அந்த கெச்சலான உருவம் யாரிடமோ எதுவோ பேசிக் கொண்டு இருந்தது. அந்த மொழி எந்த மொழியென்று புரிந்துக் கொள்ள முடியாத பல்வேறு மொழிகளின் கலவையாக இருந்தது.

“புது துணியும் தராங்களாம்”

“எனக்கு புதுத் துணிலாம் ஒத்து வராது, அரிக்கும். எங்கினயாச்சும் பழசு தேடி உடுத்துக்கணும். இதை வித்திடணும் பார்த்துக்க”

“அதுவும் சரிதான், நானும் வித்திடப் போறேன்”

“இந்த மசிரு சனியன் இஷ்டத்துக்கு வளருது, அதான் மொட்டை போட்டுக்கிட்டா கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்.”மறுபடி மண்டையை சொரிந்தது.

கூட்டத்தை நிர்வகித்துக் கொண்டு இருந்தவர்கள்,

“ஏ எல்லாரும் இந்த பக்கம் வாங்க, ஒரே வரிசையில் நிக்கணும் என்ன?”

வரிசையை சரிப்படுத்தினர். வெயில் உச்சியில் ஏற ஏற வரிசையில் நின்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வியர்வை ஊற்றுக்கள் ஓவர்டைம் வேலை பார்க்க ஆரம்பித்தன.

இந்த நிகழ்வுகளை எல்லாம் மேற்பார்வை பார்த்து நடத்திக் கொண்டு இருந்த வினோத் எனும் தலைமையிடத்திற்கு விசுவாசியான நபரால் அந்த கப்பு வாடையை தாங்க முடியவில்லை. எதிரில் வந்துக் கொண்டு இருந்தவரோ வாடை தாங்க முடியாமல் தவித்து நிற்கும் அவனது கோலத்தை பார்த்தவாறு தனது உதடுகள் கோணும் படி சிரித்த வண்ணம்,

“எல்லாம் சரியா நடக்குதாப்பா வினோத்?”என அவனிடம் கேட்டார். தன் எதிரில் நின்றவரை கண்டதும் வினோத்தின் உடல் மரியாதையை அணிந்துக் கொண்டது.

“இதுவரை எல்லாம் நல்லா போயிட்டு இருக்குங்க ஐயா.”

“ம்ம்” தலையசைத்தவர் தனது தங்க நிற வெத்தலைப் பெட்டியை திறந்து அதில் இருந்த “மசாலா பான்” ஒன்றை எடுத்து போட்டு சவைத்து குதப்பலானார்.

“சரி எல்லாத்தையும் நல்லா பார்த்துக்க, எதுவும் உதவி தேவைனா சொல்லு, நான் இங்கினதான் இருப்பேன்”

“சரிங்கையா, சரிங்கையா” கூனாக வளைந்து குனிந்து வணக்கமிட்டான் வினோத்.

அவனிடம் அதுவரை உரையாடிய அந்த ஐயா அவர்தான் பாஸ்கரன். அவரது கண்களில் எப்போதும் மிகுந்த கவனமிருக்கும். பேச்சில் வெகுவான அழுத்தமிருக்கும். நரிக்குணம் கொண்டவர் அவரது உருவமும் நரி போன்று கருத்து சிறுத்தே இருக்கும். அவரை அரசியல்வாதி அன்னம்மாவின் வலது கை, அல்லது வலது மூளை என எதையாவது ஒன்றாகச் சொல்லலாம்.

பாஸ்கரது கார் வர இயலாத அளவிற்கு கூட்டமான இடம் என்பதால் அவர் வந்த காரை சற்று முன்னதாகவே நிறுத்தி விட வேண்டி இருந்தது. அதன் பின்னர் வேறு வழி இல்லாத காரணத்தால், வெகு தூரம் நடந்தே அங்கு வந்துச் சேர முடிந்தது. அவரைச் சுற்றி அரணாக அவரது அடிபொடிகள் இருந்தனர் என்பதால் அவரது பாதுகாப்பு குறித்த பயங்கள் எதுவும் இல்லை எனலாம்.

அன்னம்மா போட்டியிடும் தொகுதி பெண்களுக்கானது, அந்த தொகுதியில் கடந்த மூன்று முறைகளும் தனது செல்வாக்கால் வென்று எம் எல் ஏ வாக இருந்தவர். தன் மகன் பிரதீபனால் கடந்த சில வருடங்கள் முன்பு இழந்த செல்வாக்கையும் கடந்த முறை தேர்தலில் தோல்வியையும் கண்டவர். இப்போது மறுபடி தனது பழைய பதவியை, அதிகாரத்தை அடைந்துக் கொள்ள பாஸ்கரின் வழிகாட்டுதலின் பேரில் அத்தனையையும் நிகழ்த்திக் கொண்டு இருந்தார். குறிப்பிட்ட அன்னம்மா அளவிற்கு வெற்றி பெறும் வாய்ப்புக் கொண்ட வேறு வேட்பாளர்கள் இல்லாத பட்சத்தில் அவரையே வேட்பாளராக நிறுத்த அவரது கட்சியும் ஒப்புக் கொள்ளும் எனும் அதீத நம்பிக்கைதான் அதற்கு காரணம்.

அதனாலேயே தான் இத்தனைக் காலம் சுருட்டிய பணத்திலிருந்து சில கோடிகளை செலவழித்து இந்த நிகழ்ச்சிகளை அவர் ஏற்பாடு செய்து இருந்தார். கட்சி மேலிடத்திலும் தன்னுடைய செயல்பாடுகளைக் குறித்து தெரியப்படுத்தி இருந்தார். தனக்கு வழி நடத்த வேண்டி பாஸ்கருக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், காசுபணம் போனாலென்ன? பாஸ்கரது வழி நடத்துதல்கள் ஒவ்வொன்றும் அபாரம்.

இந்த நாட்டில் மக்கள் மனதை கவர வேண்டுமானால் மதம் தவிர வேறு மார்க்கம் ஏது இருக்கின்றது? குழுவாக மக்கள் கூடுமிடம் ஒன்று குடும்பமாக இருக்கின்றது அல்லது மதமாக இருக்கின்றது. குடும்பத்திற்குள்ளாவது சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். மதம் என்று வந்து விட்டால் அந்த வேறுபாடுகளும் குறைவே. மதம் எனும் நூலிழையை பற்றிக் கொண்டு அரசியல் செய்வது வெகு பாதுகாப்பானது. ஆனால் என்ன? தமது ஒவ்வொரு பேச்சிலும் கவனத்துடன் நடந்துக் கொள்ள வேண்டி இருக்கும். அதில் அன்னம்மா கில்லாடி ஆகிற்றே? எனவே, தங்களது முதல் முயற்சியாக அந்த வழிபாட்டுத்தலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தார்.

அரசியலில் நிதர்சனம், யதார்த்தம் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும் அதை நியாயப் படுத்தும் இனிய சொற்களுக்கு இங்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான்.

நம் மக்கள் எப்போதும் செயல்களை கவனிப்பவர்கள் அல்ல, முழுக்க முழுக்க பேச்சிற்கு மயங்குகின்றவர்கள். இல்லையென்றால், எவரோ ஒருவர் கருத்தில் உதித்த திரைக்கதை, வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசுகின்றவர்களின் பேச்சிற்கு மயங்கி தங்களது தலைவர்களை தெரிவு செய்வார்களா என்ன?

மக்களின் மன நிலையை, மக்களின் அன்றன்றைய நாடித்துடிப்பை அறிந்த வரையில் அதன் மட்டில் அன்னம்மாள் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை முடிவு செய்கின்றவர் பாஸ்கர் தான். இன்றைய நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை அதனால் தான் அவரே நேரடியாக அங்கு வருகை தந்திருக்கின்றார்.

பல கோடிகள் முதலீட்டில் இன்று இங்கு நடக்கும் நாடகம் அன்னம்மாள் எதிர்கொள்ளப் போகும் அரசியலுக்கு மிக முக்கிய தேவையான ஒன்று என்பதால் அத்தனையையும் பார்வையிட அவர் வந்திருந்தார். அன்றைய நிகழ்வின் இறுதியில் பத்து நிமிடங்களேனும் வந்து செல்லும் படி அன்னம்மாளையும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

பாஸ்கர் ஒன்றைச் சொன்னால் அன்னம்மாளிடம் அதற்கு மறு பேச்சு என்பதே கிடையாது.காலையில் இருந்து எல்லாம் சிறப்பாக நடந்தும் கூட பாஸ்கர் மனதிற்குள்ளாக வெகுவாக சிந்தனைகள். இத்தனை கோடிகள் செலவழித்ததில் இன்றைய தினம் அன்னம்மாள் குறித்து மக்களது மனதை கவரும் வண்ணம் ஏதேனும் ஒன்று கட்டாயம் நடந்தாக வேண்டும். ஏதோ ஒன்று… அது என்னவாகிலும்… அது மக்களின் மனதை அசைக்கும் படியாக இருக்க வேண்டும்.

தனக்கே என்னவென்று தெரியாத ஒன்றை கண்டு பிடிக்க அவருடைய கண்களும் காதுகளும் கூர்மையாக இருந்தன. சுற்றும் முற்றும் கவனித்துக் கொண்டே இருந்தார்.

“ஏ நீ என்ன பொட்டச்சியா? சொல்லவே இல்லை”குளிக்கும் இடத்தில் ஏதோ சப்தங்கள் கேட்க பாஸ்கர் அங்கு விரைந்தார்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here