பிரபஞ்சத் துகள்_2_ஜான்சி

0
290

அத்தியாயம் 2

அந்த நேரம் அங்கு முன்னாள் எம் எல் ஏ அன்னம்மாவின் கட்சியினரால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்த பல்வேறு தரும காரியங்களில் ஒன்றான இலவசமாக முடியை மழித்து விட்ட பின்னர் குளிக்கச் செல்லும் ஒரு வரிசை மட்டும் வெகு பரபரப்பாக இருந்தது. முடி மழித்தவர்களுக்கு ஆளுக்கொரு ஐந்து ரூபாய் சோப்பு கொடுக்கப் பட்டு இருக்க அனைவரும் அங்கு சோப்பு தேய்த்துக் குளித்துக் கொண்டு இருந்தனர்.

அந்த குளியல் வரிசையை கடந்து வந்த பின்னர் அடுத்த வரிசையில் ஆளுக்கொரு துவாலை கொடுக்கப்படும். அதற்கடுத்த வரிசையில் இடுப்பில் துவாலை கட்டிக் கொண்டு வரும் நபர்களுக்கு உடைகள் வழங்கப்படும் என ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருந்தன.

அங்கு முடிமழிக்கவும், குளிக்கவும் வந்துக் கொண்டு இருந்தவர்களும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்களும் ஆண்களே என்பதால் அங்கு பெரிதளவில் மறைப்பு எதுவும் காணப்படவில்லை. ஆணின் நிர்வாணம் பெரிதளவில் கவனம் ஈர்ப்பதில்லை அல்லவா?

தனது முடியை மழித்து எறிந்த போது அந்த கெச்சலான உருவத்திற்கு தான் தேவையற்று சுமந்துக் கொண்டிருந்த எதையோ துறந்த ஆசுவாசம். அடுத்து குளிக்கும் இடம் வந்ததும், தான் அணிந்திருந்த ஆடையை களைந்து தண்ணீர் ஊற்றும் இடத்தில் வந்து நின்றது. வெயிலின் காரணமாய் வெதுவெதுப்பாக இருந்த தண்ணீர் சற்று தன் மேலும் படவும், தனக்கு கொடுக்கப்பட்ட அந்த ஐந்து ரூபாய் சோப்பை தண்ணீரில் காட்டி, குழைத்து உடலில் தேய்த்து அழுக்கை நீக்கிக் கொண்டு இருந்தது.

குறிப்பிட்ட நிமிடங்களே குளிக்கவும் அனுமதி என்பதால் ஒருவரை ஒருவர் கவனிக்காமல் தத்தம் செயலில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்த போதுதான் அங்கிருந்த ஒருவன் எப்படி கவனித்தானோ, அவளை பார்த்து கத்தினான்.

“ஏ நீ என்ன பொட்டச்சியா? சொல்லவே இல்லை.”

“பொட்டச்சின்னா?” தனக்கு அடுத்து இருப்பவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தவளின் உடலில் பொட்டுத் துணியில்லை. அவளிடம் அதற்கான எவ்வித பிரத்யேக உணர்வும் இல்லை.

அவனருகில் நின்றவன் “பொட்டச்சின்னா?”எனும் அவளின் கேள்விக்கு “தும் அவுரத் ஹோ க்யா? பூச் ரஹா ஹை”( நீ பொண்ணான்னு கேட்குறானுங்க)

“நான் அவுரத்னா இங்க குளிக்க கூடாதா?” புரியாமல் வினவினாள் அவள்.

ஆனால், அவளது சுற்றி நின்ற நபர்களின் கண்கள் அவ்வுடலை வெகு விருப்பமாக புசிக்கலாகின.

அத்தனை நேரம் தங்களுக்குள் ஒருவராக அந்த உருவம் நின்றுக் கொண்டு இருந்த போது தெரியாத கவர்ச்சி, மொட்டை அடித்து முழு நிர்வாணமாக தங்கள் அருகில் நின்ற போது தெரியாத அந்த உடலின் கவர்ச்சி “நீ பொட்டச்சியா?” என அவள் உறுப்பை கண்டு ஒருவன் கூவல் விடுத்த பின்னர் அவர்களுக்கு தெரிந்தது அதிசயமே! அந்த ஒரு உறுப்பிற்கு மக்களின் கண்களை கவருமளவு இத்தனை ஈர்ப்பு சக்தி உள்ளதா என்ன?

“ஏ பொண்ணு உனக்கு தமிழ் தெரியாது?”

“தெரியும், ஆனா பொட்டச்சி தெரியாது”அவள் அவனிடம் கொச்சையாக பதிலளித்தாள்.

“நீ எந்த ஊரு?”

“எல்லா ஊரும் என் ஊருதான், லாரில வந்தேன்… இனியும் லாரில ஏறி திரும்ப போகணும். மொட்ட போட, சாப்பிட வந்தேன்”கைகளை அசைத்து சைகைகளும், புரிந்தும் புரியாத மொழியுமாக பேசினாள்.

“லாரி எங்க இருக்கு?”

“அது அங்க தூரம் இருக்கு” கொச்சையான தமிழ் ஓரளவுக்கு பிறர் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு பேசினாள் அவள்.

இன்னும் அவளுக்கு துவாலையோ உடையோ கொடுக்கப் பட்டு இருக்கவில்லை. அவளுக்கான விசாரணை நேரம் சுற்று முற்றும் இருந்தவர்கள் தாங்களும் குளிக்காமல் ஸ்தம்பித்து போயிருக்க, பிறர் குளிக்க நீர் ஊற்றிக் கொண்டு இருந்த மற்ற கட்சிக்காரர்களும் கடந்த சில நிமிடங்களாக அவளது நிர்வாணத்தை வெறிக்க ஆரம்பித்து இருந்தனர்.

அந்த சில நிமிட தாமதம் அதற்கு பின்பாக வரிசையில் இருந்தவர்களை அவசரப்படுத்தியது. “சீக்கிரம் போங்கப்பா, நாங்களும் குளிக்க வேண்டாமா?”அனைவரும் முன்னே செல்ல அவசரப்பட அங்கு சற்று அமளி துமளியானது.

“தண்ணீ ஊத்து”

என்றாள் அவள். அவளுக்கு குளிக்க தண்ணீர் ஊற்றியவன் சிலையாக சமைந்திருக்க இப்போது அவளது குரலில் மறுபடி ஊற்றினான். போதுமளவு தண்ணீரை ஊற்றிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து துவாலையை பெற்றுக் கொண்டு வெயில் படும் இடத்தில் நின்று உடலை நிதானமாக துடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டவள் துணிகள் வரிசையில் நின்று கொடுக்கப்பட்ட வேட்டியையும்,சட்டையையும் அணிந்துக் கொண்டாள்.

அவளது பேச்சில் இந்திய நாட்டின் அத்தனை மொழிகளும் கலந்திருந்தன. அவள் வயதை அனுமானிக்க முடியவில்லை. உடையை அணிந்து முடிந்த பின்னர் தன்னோடு பேசிக் கொண்டு இருந்தவனிட்ம் “சாப்பாடு சாப்பிட்டுட்டு நாம லாரிக்கு போயிடலாம்” எனச் சொல்லிக் கொண்டாள்.

பாஸ்கர் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தார், அவர் மனதில் திட்டம் ஒன்று உருவாகி விட்டிருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here