பிரபஞ்சத் துகள்_3_ஜான்சி

0
278

அத்தியாயம் 3

மாலை ஏழு மணி அந்த இடத்தில் கூட்டம் அல்லோலப் பட்டது. அன்னம்மாள் ஜனத்திரளின் நடுவில் உரையாற்றிக் கொண்டு இருந்தார்.அவரது குரல் மக்கள் மனதை உருக்கிற்று. “எனது உடல் நலம் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வெடுக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், சுற்றி முற்றி நடக்கின்ற கொடுமைகளை என்னால் எவ்வாறு கண்டுக் கொள்ளாமல் விட முடியும்? சொல்லுங்கள்”கணீரென்று அவரது குரல் ஒலித்தது.

“எத்தனை எத்தனை மனித உரிமை மீறல்கள்? எத்தனை எத்தனை கொடுமைகள்? இதனை உங்களுக்காக நான் கண்டிக்கா விட்டால், யார் கண்டிப்பார்கள்?”கசிந்த கண்ணோரத்தை துடைத்துக் கொண்டார். அவ்வுரையைக் கேட்டுக் கொண்டு இருந்தவர்களின் கண்களும் கசிந்தன.

“இன்று கூட நமது கட்சியின் மூலமாக நூறு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். எத்தனையோ முதிர் கன்னிகள் வரதட்சணை எனும் பிரச்சனையால் தங்களது வாழ்க்கையில் முடங்கி போய் விடும் நிலையில் இருந்து மாற்ற நாங்கள் சிறிதளவு முயன்று இருக்கின்றோம். ஆனால், உங்களுக்காக பணியாற்ற வேண்டுமெனில் நாங்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் தானே முடியும்?”

இன்னும் எதிரணியினர் குற்றங்கள் பலவற்றையும் பட்டியலிட்ட அன்னம்மாள் சமீபத்தில் மிகவும் கொடூரமாக வண்புணர்வு செய்து கொல்லப்பட்ட பெண்களைக் குறித்து கூறியவர் “இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பெண்கள் பாதுகாப்பு மிகவும் அரிதாகி விட்டது. கடந்த மாதத்தில் நிகழ்ந்த பெண்கள் வன்கொடுமைகளை நிகழ்த்தியவர்கள் ஆளும் கட்சியினர் ஆனால் அவர்கள் இதைக் குறித்து சற்றும் வருந்தாமல் மேலும் மேலும் குற்றங்களில் ஈடுபடுவது மனதை வருத்துகின்றது” என பேசி முடித்தார்.

பேச்சின் இறுதியில் “இன்று ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.முதலில் இதனை பொதுவில் தெரிவிக்கலாமா கூடாதா? என மிகுந்த சிந்தனையில் இருந்தாலும், எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் நீங்கள் அறியாதது என்ன இருக்கின்றது? அதனால் எனது உயிரினும் உயிரான மக்கள் முன்பாக இதனை தெரிவிக்க நினைத்தேன்.

கூட்டம் அவரது பேச்சை அமைதியாக கவனித்தது.

“இன்றைய ஏற்பாடுகளை சிரமேற்று நடத்திய எனது தொண்டர்களை முதலில் மனமார வாழ்த்துகிறேன். அவர்கள் மூலமாகவே இன்று வீடற்று, குடும்பமற்று திரிந்த ஒரு மகளை நாங்கள் கண்டுக் கொண்டோம். அந்த மகளை உங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் எனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளப் போகின்றேன்.

அவளுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். இனி அவளுடைய வாழ்க்கை எனது பொறுப்பாகும், இனி அவள் உறவுகளின்றி உணவுக்காகவும், தங்குமிடத்துக்காகவும் அலையப் போவதில்லை. அவளது துன்ப வாழ்க்கை இன்றோடு முடிவடைந்தன. அவளை நான் எனது கண்ணின் மணி போல காத்துக் கொள்ளப் போகின்றேன்.” கண்ணீரை சுண்டி விட்டார். மக்கள் கூட்டத்திள் பெருவாரியான மனங்கள் அசைந்தன.

பாஸ்கரின் கண்ணசைவில் அந்த பெண் மேடை ஏறினாள். அவளுக்கு அங்கு நிகழ்வன எதுவும் புரியவில்லை. அன்று தான் லாரி ஏறி வேறு மாநிலத்திற்கு செல்வதாக இருக்க ஒரு நபர் வந்து தன்னிடம் என்னென்னவோ சொல்லி பேசி இந்த மேடைக்கு அழைத்து விட்டிருந்தார்.

சட்டையும், வேட்டியுமாக இருந்த அவளது உடை மாற்றப் பட்டு இருந்தது, அவள் இப்போது சுடிதாரில் இருந்தாள். கைகள், கால்கள், காதில், கழுத்தில் என சுற்றி முற்றிலும் கடைகளில் அகப்பட்ட சில விலை குறைவான அணிகலன்கள் தற்போது ஏறி இருக்க பெண் என அனுமானிக்கும் வகையில் அவள் இருந்தாள். மொட்டையடிக்கப்பட்ட அந்த உருவம் அனைவரின் பரிதாபத்திற்கு உரியதாக கருதப்பட வாய்ப்பாக அமைந்தது.

மேடையில் அன்னம்மாள் அந்த பெண்ணை அணைத்து “என் மகளே” என நெற்றி முகர அனைத்து கேமராக்களும் பளிச்சிட்டன. ஏழைப் பங்காளி அன்னம்மாவின் அந்த பெரிய காரில் அவரோடு அந்த பெண்ணும் ஏற தொடர்ந்து கேமராக்கள் பளிச்சிட்டுக் கொண்டே இருந்தன. அந்த வாகனம் கண்பார்வையினின்று நகரும் மட்டும் கேமரா கண்கள் அவர்களை பின் தொடர்ந்தன.

செய்தி நிருபர்கள் இப்போது பாஸ்கரை மொய்த்தனர், “செய்தில போடணும், அந்த பொண்ணோட பேர் என்னங்க சார்?”

“அது ஏதோ ஒரு பேர் சொன்னாங்க ஞாபகம் இல்லையே?” அத்தனை செய்தவருக்கு நிஜமாகவே அந்தப் பெண்ணின் பெயர் கேட்க தொன்றவில்லை.

“பூமான்னு சொன்னாங்க, நல்லா ஞாபகம் இருக்கு” யாரோ சொல்ல அப்போதே அந்த பெண்ணுக்கு புதுப் பெயரும் சூட்டப்பட்டது.

பூமா…

அடுத்த நாள் தினசரிகளில் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் “பிரபல அரசியல்வாதி முன்னாள் எம் எல் ஏ அன்னம்மாள் கோவிலில் அனாதையாக ஆதரவற்று திரிந்த பெண் பூமாவிற்கு மறுவாழ்வு அளித்தார்”என தலைப்பு செய்தி வந்தது. அன்னம்மாள் பூமாவின் நெற்றி முகர்ந்த புகைப்படம் ஊரையே ஒரு கலக்கு கலக்கியது.

அடுத்தடுத்த நாட்கள் அன்னம்மா மற்றும் பூமாவை சுற்றியே பல செய்திகள் வெளிவரலாகின. அதுவரை சீண்டுவாரற்று கிடந்த அவரது இல்லம் இப்போது ஜே ஜேவென்று இருந்தது. பத்திரிக்கைகள் அவர்களை பேட்டிகள் எடுக்க வரிசையில் நின்றனர்.

அன்னம்மாள் பேட்டியளித்த போது பூமாவும் தினம் வெவ்வேறு விலையுயர்ந்த உடைகளில் அவரோடு கூடவே இருந்தாள். அடுத்தடுத்து பூமாவிற்கு கல்வியறிவு கொடுப்பதான புகைப்படங்கள் வெளியாகின. பூமாவிற்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதான புகைப்படம் ஆங்கிலோ இந்திய ஆசிரியருடன் இருப்பதான புகைப்படங்கள் வைரலாகின.

பூமா ஓரிரு வார்த்தைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டுத் தடுமாறி பேசும் காணொளிகள் யூட்யூபில் இலட்சங்கள் வ்யூவ்ஸை தாண்ட ஆரம்பித்தன. வாரத்திற்கு ஒரு செய்தியேனும் பூமாவைக் குறிந்து வராமல் இல்லை.

பூமா அந்த வழிபாட்டுத் தலத்தில் இருந்து சில மாதங்கள் முன்பாக கண்டடையப் பட்டபோது இருந்த தோற்றத்தையும், தற்போது நல்ல உணவு உண்டு பார்க்க செழுமையாகவும், நல்ல உடை அணிந்து அழகாகவும் இருப்பதான புகைப்படத்தையும் அருகருகே ஒப்பிட்டு காண்பிக்கும் மீம்ஸ் பகிர்ந்து அன்னம்மாளை அன்னை தெரசா அளவிற்கு மீடியாக்களில் வானளாவ புகழ ஆரம்பித்தார்கள்.

இப்படியே நன்றாக சென்றுக் கொண்டிருந்த போதுதான் அந்த சில திருப்பங்களும் நேர்ந்தன.

ஒரு முறை எதிர்கட்சிக்கு சார்பான சானல் நிருபர் அன்னம்மாளிடம் பூமாவை குறித்து குதர்க்கமாக பல விஷயங்கள் கேட்டு வைக்க அன்னம்மாள் உணர்ச்சிவசப்பட்டு அடுத்த சில செயல்களையும் செய்ய நேர்ந்தது.

தன்னை வைத்து இத்தனை அரசியல் சதுரங்கள் ஆடப் படுவதோ, தான் ஒருவர் தனது அரசியல் வாழ்வில் கோலோச்ச பகடைக் காயாக உபயோகப் படுத்தப் படுகின்றோம் என்பதோ அந்த கெச்சலான பெண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.

விதி போன போக்கில் சென்றுக் கொண்டிருந்த அவளது வாழ்வை பாஸ்கரும், அன்னம்மாளும் இன்னும் யார் யாரும் வளைக்க முயல, அவளது வாழ்வு என்னவாகும்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here