பிரபஞ்சத் துகள்_4_ஜான்சி

0
279

அத்தியாயம் 4

பிரஸ்மீட்:

அன்னம்மாவுக்கு அன்றைய பிரஸ் மீட்டில் அனைத்து கட்சி சார்ந்த நிருபர்களும் வருவார்கள் எனத் தெரியும் என்பதால் பலமுறைகள் வீட்டில் தயார் செய்து வந்த வண்ணமே மிகக் கவனமாக பதில் கொடுத்துக் கொண்டு இருந்தார்.கேள்விகளை எதிர்கொள்ளாது ஓடி ஒளிவதால் பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லையே?

தனது மகன் வண்புணர்வு செய்ததில் இறந்து விட்டிருந்த சிறுமி குறித்து கேள்விகள் வராத வண்ணம் ஏற்பாடு செய்தவரால் பூமா குறித்து செய்தி வெளிவராத வண்ணம் ஏற்பாடுகள் செய்ய முடியாது போயிற்று.

“என்னதான் அந்த பூமா பொண்ணுக்கு நீங்க பொறுப்புன்னு சொன்னாலும் கூட, அந்த பொண்ணை நீங்க இன்னும் உங்க கட்சி நடத்தும் காப்பகத்தில் வச்சு தானே பராமரிக்குறீங்க? உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போகலியே மேடம். இது குறித்து என்ன சொல்லுறீங்க?”என நிருபர் கேட்க சற்று உணர்ச்சிவசப்பட்டு இருந்த அன்னம்மாள் பாஸ்கரை கலந்தாலோசிக்காமலேயே கூட தனது வார்த்தைகளை விட்டார்.

“வீட்டுக்கு என்ன சார் வீட்டுக்கு, இப்ப இல்லைனா நாளைக்கே கூட வீட்டுக்கு அழைச்சுட்டு போயிடுவேன். வேணும்னா அவளை என் பையனுக்கு கூட கட்டி வைப்பேன். அவளுக்கு ஆசை இருந்தா என்னோட அரசியல் வாரிசாகவும் கூட பூமாவை ஆக்குவேன். அவ என்னோட மகள், என் வாரிசு, பூமா என்னோட பொறுப்பு, என் பொறுப்பு என்னன்னு நீங்க எனக்கு சொல்லி தர தேவையில்லை, அது எனக்கு ரொம்பவே நல்லாவே தெரியும்.”

அன்னம்மாள் தனது பேச்சால் அடுத்த வாரம் முழுக்க மீடியாவின் கவனத்தில் இருந்தார். ‘தனது வெடுவெடுப் பேச்சிற்கு எதிர்ப்பாக பாஸ்கர் எதையாவது சொல்வாரோ?’ என்று அன்னம்மாள் கவலையுடன் இருக்க, பாஸ்கரோ அவரிடம் “குட் மூவ்” என்றார்.

அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின, அதில் அன்னம்மாளின் இல்லத்தில் பூமா குடியேறியதுவும் ஒன்று.பூமா அன்னம்மாளின் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக இரசிக்கும் காட்சிகள் இணையத்தில் காணொளியாக வெளியிடப்பட்டன.

அடுத்த வருடம் வரும் தேர்தலை சந்திக்க அன்னம்மாளின் கட்சி முழு தயாரிப்புடன் இருந்தது. பூமாவுடன் தனது மகன் பிரதீபனின் திருமணத்தை தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வைத்தால் மக்களது ஓட்டு முழுக்க முழுக்க ஏழைப் பங்காளி அன்னம்மாளுக்கே என உறுதியாகி விடும் என பாஸ்கர் கணித்தார்.

பூமாவாக்கப் பட்ட அவள் ஒன்றும் புரியாமலேயே தனது உதவியாளருடன் வலம் வந்தாள். அவளுடைய உதவியாளர் ரஞ்சனி எனும் அழகிய யுவதி மாஸ்டர்ஸ் இன் ஹ்யூமன் ரிசோர்ஸ் (மனிதவளத்துறை மேலாண்மை) படிப்பை முடித்து சில வருடங்கள் தனியார் பணியில் இருந்து தற்போது அன்னம்மாள் சார்ந்த கட்சி அலுவலகத்தில் அட்மினில் பணிபுரிந்து வருகிறாள்.

தான் தற்போது செய்து வரும் வேலை, தன்னுடைய படிப்பிற்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட வேலையாகினும் கை நிறைய சம்பளம் காரணமாக அங்கேயே சில வருடங்களாக நிலைத்து விட்டிருந்தாள். பல மொழிகள் அறிந்தவள் என்பதாலேயே கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களுள் இவள் தெரிவு செய்யப் பட்டு இருந்தாள். ரஞ்சனிக்கு சில மாதங்களாக கொடுக்கப்பட்டு இருந்த வேலைதான்“மிஷன் பூமா”.

ரஞ்சனியின் பணி யாதெனில் பூமா எனப்படும் அந்த பெண்ணை கவனிப்பது. 24 மணி நேரமும் பூமாவை தனது கண்காணிப்பில் வைத்திருப்பது ஒன்றும் சுலபமான வேலை அல்ல. அந்த பூமா தன்னை அந்த மொட்டைப் போட்ட இடத்தில் இருந்து அழைத்து வந்த நாள் முதலாக ரஞ்சனியிடம், “நான் எப்ப திரும்ப போகட்டும்?” என கேட்டுக் கொண்டு இருக்க இவளிடமோ அவளுக்கான பதில் எதுவும் இல்லை.

சமூக வலைதளத்தில் சுற்றி வரும் அனைத்து மீம்ஸ் கண்டெண்ட் தரும் பூமாவின் புகைப்படங்களும், காணொளிகளையும் பகிர்வது ரஞ்சனி தான். தினம் தோறும் பூமா அறியாத வண்ணம் அவள் எடுக்கும் அத்தனை புகைப்படங்களும், காணொளிகளும் அவர்களது வாராந்தர மீட்டிங்கில் பகிரப்பட்டு அதில் எதை வெளியில் பகிர வேண்டும்? எதை பத்திரமாக வைத்து பின்னர் உபயோகிக்கலாம்? என முடிவெடுக்கப் படும்.

அதன் பின்னர் எந்த புகைப்படம் எப்படி வெளியாக வேண்டும் எனும் தகவலை இவர்களது கட்சியின் ஐ டி விங்குக்கு அனுப்பி விட்டதும் இவர்களது பணி முடிந்து விடும்.

மீதியை ஐ டி விங்க் தனது மூளையை விதவிதமாக செறிவூட்டி தன் விருப்பத்திற்கு சமூக வலைதளங்களில் வெளியிடும்.

பூமா செய்யும் ஒவ்வொரு விஷயமும் புகைப்படமாக, காணொளியாக சேமிக்கப் பட வேண்டும் என்பது தான் அவளுக்கான வேலை. இது நாள் வரையில் அலுவலகம் போலவே இருந்த கட்சியின் இடத்தில் பூமாவை வைத்து பராமரித்து இருக்க, இப்போது அன்னம்மாளின் வீட்டிற்க்கே வந்தது அவளுக்கு கொஞ்சம் மிரட்சியாக இருந்தது.

அன்னம்மாளின் மகன் பிரதீபன் ஒரு குழந்தையை ரேப் செய்து கொன்ற விதத்தில் வீட்டிலேயே வைத்து சகல உபச்சாரங்களுடன் வளைய வர, அடுத்த மகன் விபாகரன் பிடிபடாத குற்றவாளி எனும் அளவிற்கு அத்தனை கிரிமினல்தனங்களையும் செய்து வருகின்றவன் இன்னும் அன்னம்மாள் வளர்க்கும் அவரது அண்ணன் மகள், கணவன் என யாருமே சாதாரண மனிதர்களாக பழகும் அளவிற்கு மனித தன்மை உடையவர்கள் கிடையாது என்பது ரஞ்சனியை பொறுத்தவரையில் மிகமிகத் தெளிவு.

தனக்கு விருப்பம் இல்லையென்றாலும் மறுக்க முடியாதே? ஒரு வாரம் முன்பே ரஞ்சனியும் பூமாவும் அன்னம்மாளின் வீட்டிற்கு வந்திருந்தனர். பூமா வீட்டிற்கு வந்த அன்று அன்னம்மாளை கூட்டத்தோடு கூட்டமாக பார்த்ததுதான் அதன் பின்னர் வெளியூர் பயணத்திற்கு சென்றவர் ஒரு வாரம் கழித்து திரும்பி இருந்தார்.

திரும்பியதும் ரஞ்சனியை பார்க்க வேண்டும் என அழைத்திருக்க ரஞ்சனி தனக்கு கொடுக்கப் பட்டு இருந்த அந்த விஸ்தாரமான அவுட் ஹவுஸின் அறை ஒன்றிலிருந்து புறப்பட்டு அன்னம்மாளின் பங்களாவின் பின் வாசலில் இருந்து உள்ளே நுழைந்து அன்னம்மா எங்கே இருக்கின்றார்கள்? என வேலையாட்களிடம் கேட்ட வண்ணம் உள்ளே சென்றுக் கொண்டு இருந்தாள்.

அங்கே ஹாலில் கேட்ட சில உரையாடல்கள்பல சத்தங்கள் கேட்டுக் கொண்டு நின்றது குறித்து அதிர்ந்து நின்றாள்.

“அத்தே அந்த பிச்சக்காரி கூடவா பிரதீபன் அத்தான் கல்யாணம் செய்ய போறாங்க, ச்சீ ச்சீ அசிங்கம்”வீறிட்டுக் கொண்டு இருந்தாள் சப்னா, அன்னம்மாளின் அண்ணன் மகள். கத்திக் கொண்டு இருந்த மாமன் மகள் சப்னாவை பார்த்து கண்ணடித்த விபாகரன்,

 “சப்னா, வாயை மூடு, இப்ப அந்த பூமாவை இப்ப பிச்சக்காரின்னு சொன்னா யார் நம்புவா? கொஞ்ச நாளிலயே ரொம்ப அழகாகிட்டா இல்லையா? செம்ம பிகர்”

ஜொள்ளு விட அவனை நோக்கி சப்னா அருகாமையில் இருந்த ஒரு பாத்திரத்தை விட்டெறிந்தாள். பாத்திரம் பறந்து வந்ததைக் கண்டு விபாகரன் விலகிக் கொள்ள அந்த பாத்திரம் சுவற்றில் பட்டு கீழே விழுந்தது. சாப்பாட்டு டேபிளில் இருந்த அவர்கள் அனைவரும் சப்னா மற்றும் விபாகரனின் இந்த விளையாட்டை இரசித்த வண்ணம் ஹா ஹாவென சிரித்துக் கொண்டு இருந்தனர்.

“சப்னாமா… இவ்வளவு டென்சனா கூடாதுடா, எது அரசியலுக்கு இப்ப முக்கியமோ அதை நாம செஞ்சாகணும், அப்புறமா நம்ம கட்சி ஜெயிச்சதுக்கு அப்புறம் என்ன செய்யலாம்னு பார்த்துக்கலாம்டா”அன்னம்மாளின் கணவர் மருமகளை தேற்றினார்.

கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசு என்பதாலேயே தாய் தகப்பனில்லாத சப்னாவை தனது இரண்டாவது மகனுக்கு மனைவியாக்கும் எண்ணத்துடன் தங்களோடு வைத்து வளர்க்க ஆரம்பித்து இருந்தனர். அவளது வசதிகளுக்கு எந்த குறைகளும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்வர். அவள் சொன்னதுதான் அந்த வீட்டில் சட்டம், அவளை அங்கு யாரும் பகைக்க விரும்புவதில்லை.

வருங்கால மனைவியான அவளிடம் விபாகரன் விளையாட்டாய் சீண்டி பேசுவானாகிலும் ஒரு போதும் அவள் மனம் நோக எதையும் செய்த்து இல்லை.தனது அத்தனை விளையாட்டுக்களையும் வீட்டிற்கு வெளியேதான் வைத்துக் கொள்வது.

“அப்ப நிஜமாவே அந்த கல்யாணம் நடக்குமா?”

“ஆமாம், தேதி பின்னர் அறிவிக்கப் படும்”

“என்னது?” பிரபல நடிகரின் வசனத்தைச் சொன்னதில் மறுபடி அனைவரும் சிரித்து முடிக்க, அதுவரை சற்றுத் தள்ளி நின்று காத்திருந்த இவளை உள்ளே அழைத்தார் அன்னம்மாள்.

“சொல்லுங்க மேம்”

அப்போது அன்னம்மாளின் எதிரே நின்றுக் கொண்டிருந்த ரஞ்சனிக்கு தான் புர்க்கா அணிந்து வந்திருக்கலாம் எனும் எண்ணம் ஏற்படும் வண்ணம் அங்கிருந்த ஆண்களின் பார்வைகள் அவளை துளைத்தெடுத்தன.

“உம் பேர் என்ன?”

“ரஞ்சனி மேம்”

“ம்ம்… ரஞ்சனி… இப்ப நான் எதுக்கு உன்னை அழைச்சேன்னா… ஒரு சில விஷயங்கள் சொல்லணும்.”

“சொல்லுங்க மேம்”

“முதல் விஷயம் என்னன்னா நீங்க இரண்டு பேரும் பின்பக்கம் இருக்கிற கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறது யாருக்கும் தெரிய வரக் கூடாது. என்னப் புரியுதா?” அவரது கடுமையான குரலில் ரஞ்சனியின் தலை தானாகவே ஆமோதித்தது.

“நீங்க இரண்டு பேரும் என் வீட்டுக்குள்ளே இருக்கிறதாகத்தான் வெளி உலகத்தில் எல்லோரும் நம்பணும்.”

“சரிங்க மேடம்”

“வீட்டுக்கு யாராச்சும் வந்தா, நீங்க வந்து முகத்தை காண்பிக்க வேண்டியது இருந்தா கெஸ்ட் ஹவுஸில் இருக்கிற பச்சை லைட் எரியும் உடனே நீங்க இரண்டு பேரும் வரணும். அதிகாலையில் இருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் எப்பவும் நல்ல உடை, குறிப்பா சேலைதான் அந்த பொண்ணு கட்டி இருக்கணும்.வேறு எந்த உடையும் அணிய அனுமதி இல்லை என்ன புரியுதா?”

“சரிங்க மேடம்”

“அந்த பொண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிடறது உன் பொறுப்பு, முகம் வாடாம பார்த்துக்கணும், முழு நேரம் கலையாத மேக்கப் போட்டு வைக்கணும், எப்பவுமே அவ நல்ல உடையில் இருக்கணும். அப்பதான் யாராவது திடீர்னு வந்தாலும் கூட சட்டுன்னு வர வேண்டி இருந்தாலும் பார்க்க மோசமா தோணாது. சரியா? ப்ரீத்தி வேளா வேளைக்கு வந்து மேக்கப் போடலின்னா என் கிட்டச் சொல்லு”

“சரிங்க மேடம்”

“சரி சரி பச்சை லைட் எரிஞ்சதும் அடுத்த ஐந்து நிமிசத்தில் எந்த வழியில் வரணும்னு தம்பி சொல்லித் தருவான்.” என்றதோடு அன்னம்மாள் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அந்த தம்பி என்றழைக்கப் பட்ட மனிதன் நாற்பது வயதில் ஆஜானுபாகுவாய் இருந்தான்.

“வாங்க மேடம்” என்றவன் ரஞ்சனி அவுட் ஹவுஸிலிருந்து வர வேண்டிய வழியை காட்டினான். அந்த வழி அந்த மாளிகையின் தரைத்தளத்தில் இருந்த ஒரு அறையினூடே அமைந்து இருந்தது. அதன் வழியே கதவை திறந்து வெளியே வருகின்ற போது வெளியிலிருந்து பார்க்கின்றவர்களுக்கு அந்த அறையில் பூமா தங்கி இருப்பதாகவே தோற்றமளிக்கும்.

அவுட் ஹவுஸிலிருந்து புறப்பட்டு அந்த வீட்டின் பின் சுவரில் இருக்கும் ஒரு கதவை அழுத்தி திறந்து உள்ளே சில அறைகள் கடந்து கதவை திறந்து வந்தால் அன்னம்மாளின் வீட்டின் உள்ளே பிரவேசித்து விடலாம்.‘தேர்தல் முடியும் வரையிலான ஒரு சில மாதங்களுக்காக என்னமாக ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்?’ரஞ்சனி தனது வியப்பை முகத்தில் காட்டாதிருக்க வெகுவாக பாடுபட்டாள்.

“அப்படியே அந்த பூமா பொண்ணை அப்பப்ப காலையிலயும், சாயங்காலமும் வீட்டுக்குள்ள ஒன்னு இரண்டு தடவை அழைச்சுட்டு வரணும், அப்பதான் இங்க வேலை பார்க்குறவங்களுக்கு அவங்க இந்த வீட்டு எதிர்கால மருமகன்னு புரிய வரும்னு அம்மா சொல்லிருக்காங்க.”அந்த தம்பியாகப்பட்டவன் சொல்லி சென்றான்.

“சரி”ஆமோதித்து பதில் சொன்னவாறு ரஞ்சனி தனக்கும் பூமாவுக்குமான அறைக்குள் திரும்பி விட்டிருந்தாள்.

அங்கு வந்து அவள் பார்த்த போது பூமாவோ தரையில் அமர்ந்து சுவற்றில் ஊர்ந்துக் கொண்டிருந்த புழு பூச்சியை பிடித்து வைத்துக் கொண்டு எதையோ செய்து வைத்துக் கொண்டு இருந்தாள். அவள் அணிந்திருந்த அந்த சேலை அங்குமிங்குமாக இழுபட்டுக் கொண்டு கிடந்தது.

பூமா சாதாரணமாக எல்லோரையும் போல வளர்ந்தவளில்லை, குடும்பம் அதன் விதிமுறைகள் என எதுவும் அறியாதவள். கடந்த நாட்களில் அவளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட எதையும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் மனதில் எப்போதும் இந்த இரும்புச்சிறை தாண்டி எப்படிச் செல்வது என்பதான நினைவுகளன்றி வேறு எதுவும் இல்லை.

அவளுக்கு எதையும் புரிய வைப்பது வீண் என புரிந்துக் கொண்டிருந்த ரஞ்சனி பிரதீபனுடன் பூமாவிற்கு திருமணம் என்பது உட்பட எதையும் அவளிடம் சொன்னாளில்லை. தான் சொல்வது போல நடந்துக் கொண்டால் இந்த வீட்டை விட்டுச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்லிச் சொல்லியே அவள் தன் விருப்பத்திற்கெல்லாம் அவளை வளைத்துக் கொள்வாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here