பிரபஞ்சத் துகள்_5_ஜான்சி

0
273

அத்தியாயம் 5

பூமாவின் அருகே அவளுக்கான ப்ரத்யேக மேக்கப் உமேன் மற்றும் ஹேர் ட்ரஸர் தனது தலையில் கை வைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள். ப்ரீத்தி ஏற்கெனவே அன்னம்மாளின் கீழ் வேலை செய்கின்றவள். ஒரு நாளைக்கு மூன்று முறைகள் வந்து பூமாவின் உடையை, முகத்தை, முடியை திருத்தம் செய்வது அவளது வேலை.

ரஞ்சனியைப் போலவே அந்த ப்ரீத்திக்கும் பூமாவைக் கண்டால் ஆதி காலத்து பெண் போலவே தோன்றும்.

முதல் நாளன்று “உன் பேர் பூமா தானே?” என ரஞ்சனி அவளிடம் கேட்ட போது திருதிருவென முழித்த போதே இந்த பெயர் இவளுடையது அல்ல என ரஞ்சனி மற்றும் ப்ரீத்திக்கும் புரிந்து விட்டிருந்தது. இந்த அரசியல்வாதிகள் எப்போது என்ன செய்வார்கள் என்றே தெரியாது என்பதை அவர்களும் அறிந்து இருந்தவர்கள் தானே?

இதுவரைக்கும் அந்தப் பெண்ணின் பெயர் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும் இனி பூமாதான் என தீர்மானித்த ரஞ்சனி அதை செயல்படுத்தினாள். கடந்த மாதங்களில் அந்த பூமாவை தனது விருப்பத்திற்கு ஆட்டி வைக்க இவள் பட்ட பாடு இவளே அறிவாள். அதைக் கண்டதால் ப்ரீத்திக்கு ரஞ்சனி மேல் பெரும் மதிப்பு ஏற்பட்டுவிட்டிருந்தது.

ப்ரீத்திக்கு மட்டும் என்ன பூமாவிற்கு நடை உடை பாவனை என்று அவளுக்கு கற்றுக் கொடுக்கும் முன்பாக உயிர் போய் வரும்.முன்பாவது பூமாவைக் குறித்து அன்னம்மாளின் தத்து மகள் எனும் அளவில் பேச்சு இருந்த போது இந்த இருவருக்கும் அதிகமான வேலைகள் இல்லை.

அன்னம்மாளுடன் பூமா வெளியில் செல்லும் போது மட்டும் பூமாவிற்கு சுடிதாரை அணிவித்து அவளை அன்னம்மாளின் முன்னும் பின்னும் உலவ விடுவார்கள். இப்போதோ பூமா அன்னம்மாளின் வருங்கால மருமகள் எனும் நிலை வந்து விட்டிருக்க இருவரின் வேலைகளும் இன்னும் அதிகமாக ஆகி விட்டிருந்தன.

பூமாவை சேலை அணிவித்து அழைத்துக் கொண்டு வரும் முன்பாக ‘ஐயோ ஐயோ’ என ப்ரீத்தியின் மனதிற்குள்ளாக வடிவேலு புலம்பித் தொலைப்பார்.  

ரஞ்சனி குறித்து இவர்களது அரசியல் இரகசியங்களை வெளியில் கடத்தாதவள் என நம்பிக்கை ஏற்பட்ட காரணத்தால் பூமாவுக்கும் பிரதீபனுக்கும் திருமணம் நடக்கும் வரையிலும் பூமாவை கவனிக்கும் பணியிலிருந்து விலகக் கூடாது என ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்கி விட்டிருந்தனர்.

அதற்கு முன்பணமாக பதினைந்து இலட்சங்கள் அவளது கணக்கில் ஏற்கெனவே போடப் பட்டிருந்தது. ரஞ்சனி கிராமத்தில் வசிக்கும் தனது பெற்றோருக்கு ஒரு வருடத்திற்கு தன்னால் வீட்டிற்கு வர முடியாதென விபரம் தெரிவித்ததோடு நில்லாமல் ஐந்து இலட்சங்கள் தந்தையின் கணக்கிற்கு அனுப்பி விட்டிருந்தாள். அதனால் ஊரில் அவளது வீட்டை கட்டும் வேலை ஜரூராக நடந்துக் கொண்டு இருக்கின்றது. எனவே, பிரதீபனுக்கும் பூமாவிற்கும் திருமணம் நடக்கும் வரை இவள் எங்கும் அசைய முடியாது.

ரஞ்சனிக்கோ முன்பு கட்சி அலுவலகம் சார்ந்த இடத்தில் பூமாவுடன் தான் தங்கி இருந்ததற்கும், இப்போது அன்னம்மாளின் வீட்டிற்கே வந்து விட்டதற்கும் வெகுவான வித்தியாசங்கள் இருந்ததால் தான் தனது பாதுகாப்பிற்கு இன்னும் மிகவாக விழிப்பாக இருக்க வேண்டுமென உணர்ந்தாள்.

அவுட் அவுஸின் இரண்டாவது நாள் இரவு…

அந்த பங்களாவில் இருந்து அன்னம்மாளும் அவரது கணவரும் ஒரு வண்டியிலும், பாதுகாப்பிற்காக இரண்டாவது வண்டியிலும் என இரண்டு வண்டிகள் வெளியேறிய பின்னர் அவுட் அவுஸின் கதவுகள் தட்டப்பட்டன. ரஞ்சனியின் இரத்த அழுத்தம் எகிற அவள் கதவை பார்த்துக் கொண்டிருக்க,

“ரஞ்சனி பூமாவை நான் இப்ப பார்க்க முடியுமா?”

பிரதீபன் வெளியே நின்று கதவை தட்டிக் கொண்டிருந்தான்.

ரஞ்சனி ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் பதிலே கொடுக்காமல் படுத்துக் கொண்டாள். வேறென்ன செய்வது? அவள் இருப்பது அவர்கள் இடத்தில் பூமாவிற்காக கதவை திறந்து அவன் அவளை என்ன செய்தாலும் கூட அங்கு தட்டிக் கேட்பவர்கள் யாரும் கிடையாது.

பிரதீபன் சற்று தயக்கமாகவே அங்கு வந்திருக்க வேண்டும், சற்று நேரத்தில் கதவு தட்டப்பட்ட சப்தம் நின்று போக ஆசுவாசமாக உணர்ந்தாள். அவள் அருகில் இவை எதுவும் தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் பூமா.

வீட்டின் அறைகளின் கதவுகளை உள்ளும் வெளியுமாக திறந்துக் கொள்ள முடியுமான அமைப்பு இருந்தது.ஆனால், அவுட் அவுஸ் அப்படி இல்லை. இவர்கள் உள்ளே மட்டும் பூட்டிக் கொண்டால் வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது. ரஞ்சனிக்கு அன்னம்மாள் இவர்களை அவுட் அவுஸில் தங்கச் சொன்னதன் காரணம் இப்போது புரிந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here