பிரபஞ்சத் துகள்_6_ஜான்சி

0
289

அத்தியாயம் 6

பிரதீபன் காரணமாக அன்னம்மாளின் அரசியல் வாழ்க்கையில் அஸ்தமனம் ஏற்பட்ட போதும் அவனை வெளியே சுற்ற விடாமல் வீட்டிற்கு உள்ளேயே தேவையானவை எல்லாம் கிடைக்கும் படி அன்னம்மாள் ஏற்பாடு செய்திருந்தார். பிரதீபன் அறைக்குள் உலகின் அத்தனை வகை தண்ணியும் வற்றாமல் கிடைக்கும் மற்றும் ஏனைய கேளிக்கைகளுக்கும் குறைவில்லை.

 ‘எனது அதிகார பலத்திற்கு பாதிப்பு வராதவரைக்கும் என்னமோ செஞ்சுட்டு போங்கடா?’ என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது. யாருக்கும் புத்திச் சொல்லி திருத்தும் அளவுக்கு அவருக்கு நேரமோ… விருப்பமோ இல்லை.

அன்னம்மாளின் இரண்டாம் மகன் விபாகரனுக்கு தினமும் எல்லாமும் எல்லாமும் என்றால் எல்லாமும் தான் விதவிதமாய் வேண்டும். வீட்டில் பெற்றவர் முதலாக யாரும் தனக்கு புத்திச் சொல்லும் அளவில் யோக்கியம் இல்லை என்பதால் அவனுக்கு தனிப்பட்ட தெனாவட்டுகள் அதிகம். ஒரு சிலவற்றை வெகுவாக திட்டம் தீட்டி, தன் வருங்கால மனைவியின் கண்பார்வை படாவண்ணம் சாதித்துக் கொள்வதில் அவன் சமர்த்தன்.

சமீபத்தில் விபாகரனின் கவனம் தனக்கு கைக்கெட்டாமல் தூர இருக்கும் பூமா மீது திரும்பி இருந்தது. ஏதோ காட்டில் வளர்ந்த டார்ஜானைப் போல அவள் அவனது கவனமீர்த்தாள்.ஆம், ஒரு சிலருக்கு முரணானவைகள் கவனம் கவரும் தானே அது போலத்தான் பூமா விபாகரனின் கவனம் கவர்ந்தாள்.

அன்னம்மாளும் அவர் கணவரும் வெளியூர் சென்று திரும்ப வரும் வரையிலும் அவன் இரவு பூமாவை சந்திக்க பல்வேறு முயற்சிகள் செய்து பார்த்து சோர்ந்தான்.

அன்னம்மாளின் ஆணையின் படி ரஞ்சனியுடன் அவள் தினமும் அவர்களது வீட்டிற்கு தினமும் காலையும், மாலையும் என இருமுறைகள் அழைத்துக் கொண்டு வரப்பட்டாள். அவள் வரும் போதெல்லாம் வீட்டினர் அவளுடன் சகஜமாக பேசுவது போன்ற பல காட்சிகள் புகைப்படமாகவோ, காணொளியாகவோ எடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டன.

பூமாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகும் பிரதீபன் அவள் எதிரே நின்று பேசுவதான புகைப்படம் மிகவும் வைரலானது. அவர்கள் அருகே கனிவுடன் நிற்கும் அன்னம்மாளின் முகபாவம் வெகுவாக சிலாகிகப் பட்டது.

“She is down to earth yea” (அன்னம்மாள் மிக எளிமையானவர் என சிலாகித்தனர்.) சப்னாவுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ அவர்களுடன் அவளும் புன்னகைத்து நின்றாக வேண்டும். பலமுறைகள் அத்தகைய நேரம் தனது அறைக்குள் பதுங்கிக் கொள்வாள்.

பூமா மற்றும் சப்னாவுடன் அன்னம்மாள் நிற்பது போன்ற பல புகைப்படங்களும் அடிக்கடி எடுக்கப் பட்டன.

அப்படி நிகழ்வுகளில் ஒருமுறை பூமாவின் கைப்பட்டு சப்னாவுக்கு பிரியமான வால் ஹேங்கிங்க் ஒன்று உடைந்திருக்க அவள் ரௌத்திரமானாள். பூமாவை திட்டமுடியாமல் ரஞ்சனியை தனியே அழைத்து திட்டிய விதத்தில் ரஞ்சனி மறுபடி எந்த தவறும் நிகழா வண்ணம் கவனித்துக் கொண்டாள்.

பூமாவிற்கும் அங்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? எனப்பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க அதன் பின்னர் எந்த தவறும் நிகழவில்லை.

சப்னா வீட்டிற்குள் இருக்கும் போதெல்லாம் விபாகரன் பூமாவிடம் ஒரு புன்னகை கூட பகிர முடியாத நிலைதான் இருந்தது.ஆனால், சுற்றிலும் சப்னா இல்லாத போது விபாகரன் பூமாவிடம் அவன் பேசி நட்பு வளர்க்க ஆரம்பித்தான்.

இதுவரையிலும் தன்னிடம் யாருமே நட்பு பாவனை காட்டாது இருக்க விபாகரன் அன்பாக பேசவும், பூமாவும் தட்டுத் தடுமாறி அவனுடன் பேசலானாள். அதனை பார்த்துக் கொண்டு இருக்கும் ரஞ்சனி பூமாவை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால், விபாகரனை எப்படி கட்டுப்படுத்துவது? எனவே அத்தனையும் பார்த்தும் பாராமல் கடந்துச் செல்ல வேண்டிய சூழல்.

விபாகரனும் பூமாவும் பேசிக் கொள்வதை ஒருமுறை பார்த்த சப்னா அவனிடம் கோபமுற்றாள். “சப்னா… என்ன இருந்தாலும் அண்ணியா வரப் போறவங்க…” அவன் பேசி சமாளிக்க..

“இந்த பிச்சக்காரி உனக்கு அண்ணியா? புல்ஷிட்” சப்னா இரைந்தது ரஞ்சனிக்கு கேட்டது. பூமா இதைக் கேட்டாளா? அவளுக்கு புரிந்ததா? என்பதை அவளறியாள்.

பூமாவிற்கு எதிலுமே கவனம் இல்லை… சுதந்திரமாக திரிந்த தன்னை கொண்டு வந்ததோடு நில்லாமல எந்நேரமும் இதை செய் அதை செய் என துன்புறுத்துகின்றவர்களிடம் இருந்து, அந்த வீட்டிலிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை அவள் தேடிக் கொண்டு இருந்தாள். அது விபாகரன் மூலமாக நடந்தால் நல்லதுதானே என அவனது நட்புக்க்கரத்தை விரும்பினாள். விபாகரனோ பூமா குறித்த வேறு முயற்சிகளில் இருந்தான்.தேர்தல் நெருங்கிய சமயம் பூமாவுக்கும் பிரதீபனுக்கும் திருமணம் நடக்கும் முன்பாக அவனுக்கும் வாய்ப்பொன்று கிட்டியது. அவன் அதனை பயன்படுத்திக் கொண்டானா?

தன் அண்ணனை திருமணம் செய்யப் போகிறாள் எனத் தெரிந்தும் விபாகரனுக்கு அவளைக் கவர்ந்து தனது ஆதிக்கத்திற்கு கொண்டு வருவது தவறாகப் படவில்லை. அந்த கல்யாணம் ஏன்? எதற்கு? அதன் பின்னர் என்னவாகும் என்றும் எல்லாமும் தான் அவனுக்கு தெரியுமே.

பூமா குறித்த தனது திட்டங்களை செயல்படுத்த அவனுக்கு மிகவும் சவாலாக இருந்தது. தனது செயலால் தனக்காக திருமணத்திற்காக பேசி வைத்திருக்கும் சப்னா மனம் என்னவாகும்? என்று அவன் சிந்திக்க மறந்து விட்டான். விளைவுகளை அனுபவிப்பானா?

“இந்த பூமா எப்ப பாரு வீட்ட விட்டு ஓடுறதிலயே இருக்கு, இரண்டு மூணு நாள் கேட் வரை போனதும் பிடிச்சு கொண்டாந்து விட்ருக்காங்க. குறைந்த பட்சம் தேர்தல் வரைக்காவது பொண்ணை தவற விடாம பார்த்துக்கணும். இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கத்துக்குறா… இன்னும் நல்லா கத்துக்கிட்டு நம்ம கட்சி சின்னத்துக்கு வாக்கு கேட்டான்னு வச்சுக்கோங்க எல்லா ஓட்டும் நமக்குத்தான்” என்று கணவனுடன் பேசிக் கொண்டிருந்த அன்னம்மாள் தன் சேவைகளை பூமாவோடு நிறுத்தி இருக்கவில்லை.

மற்றொரு பகுதியில் சில நலத்திட்டங்களை நடத்திக் கொண்டு இருந்த போது அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஐந்து பெண் குழந்தைகளை மீட்டு படிக்க வைத்துக் கொண்டு இருந்தார். காதலனால் ஆசிட் வீச்சிற்குப் பலியான பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை இலவசமாக அளித்துக் கொண்டிருந்தார். இன்னுமின்னுமாய் தனது தொகுதியில் மற்றொரு அன்னை தெரசாவாக உருவெடுத்துக் கொண்டு இருந்தார். எனினும், அவர் தேர்தலை வெல்ல அவருக்கான துருப்புச் சீட்டு என்னமோ பூமாதான்.

அன்னம்மாளின் திட்டத்திற்கேற்ப தங்களது கட்சிக்கு ஓட்டு கேட்கும் விதமாக பூமாவை வைத்து சாம்பிளுக்கு சில வீடியோ ஷீட்டுகளும் எடுக்கப் பட்டன.

தேர்தல் நெருங்கவும் அடுத்த சில வாரங்களில் அவர்கள் பூமாவிற்கும் பிரதீபனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தனர். ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.

அன்னம்மாள் கணவனுடன் கட்சியின் மேலிடத்தை சந்தித்து சீட் பெற்றுக் கொள்ள புறப்பட்டார். மேலிடத்திடம் பேசி சீட்டு வாங்க இரண்டு வார திட்டங்கள் தீட்டி இருந்தனர்.அந்த இரண்டு வார காலத்தை விபாகரன் தனக்கேற்ற விதமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டான். காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக அவனுக்கு சாதகமாக இன்னும் சிலவும் நிகழ ஆரம்பித்து இருந்தன.

அன்னம்மாளும் அவர் கணவரும் தலைமையை சந்திக்கச் சென்று வாரம் ஒன்று கடந்த பின்னர் அன்று அதிகாலை நேரம் ப்ரீத்தி வந்து வெளிக்கதவை தட்டியபோது ரஞ்சனிக்கு பதிலாக பூமாவிற்கு துணைக்கு இருந்த மீனா கதவை திறந்தார்.

ஆம், அவசரமாக ரஞ்சனி தன் ஊருக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. வீடு கட்டிக் கொண்டிருந்ததில் ஏற்பட்ட விபத்தொன்றில் அவளது அப்பாவிற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ரஞ்சனி எப்படியோ அன்னம்மாளிடம் அலைபேசியில் பேசி கை காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சி கூத்தாடி லீவை வாங்கிக் கொண்டு சென்றிருந்தாள். அவசரத்தில் பூமாவுக்கு துணையாக யாரும் கிடைக்காமல் வீட்டின் பணியாளர் மீனாவையே அவளுக்கு துணையாக வைத்திருந்தனர்.

அன்னம்மாவோ தான் வீட்டுக்கு திரும்ப வர ஒரு வாரமாகும், இந்த வாரம் ரஞ்சனி இல்லாததால் பூமா குறித்து எந்த செய்தியும் பகிர முடியாதென ஐ டி விங்குக்கு ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். ரஞ்சனி ஏற்கெனவே தந்திருந்த பூமாவின் வீடியோ க்ளிப்புகளில் ஏதோ ஒன்றை வெளியிட்டு ரஞ்சனி திரும்ப வரும் வரை சமாளிக்க ஆரம்பித்து இருந்தனர். அது போகவும் அன்னம்மாள் செய்யும் மற்ற நல்லவைகள் குறித்த காணொளிகளும் தான் அவர்களிடம் இருந்தனவே அவற்றைக் கொண்டு அவ்வாரத்தை கடப்பது ஒன்றும் சிரமமாக இல்லை.

இவ்வாறு 24*7 பூமாவை சுற்றியே இருந்த காவல்களுள் ஒன்றான ரஞ்சனி ஒருவாறாக அகலவும் விபாகரனுக்கு உற்சாகமாயிற்று. தனது வீட்டு வேலையாள் மீனாவை தன்னிஷ்டத்திற்கு வளைப்பது ஒன்றும் விபாகரனுக்கு சிரமமில்லையே. சொன்னால் சொன்னபடி கேட்டுத்தானே ஆக வேண்டும்? மற்றபடி ப்ரீத்தி அன்னம்மாள் வீட்டில் இல்லாத நாட்களில் சனி ஞாயிறு அன்று வருவதில்லை. அன்னம்மாள் இருந்தால் தானே யாராகிலும் அவரை சந்திக்க வீட்டிற்கு வருவார்கள், கையோடு பூமாவையும் மேக்கப்போடு காட்ட நேரிடும்.

விபாகரனின் திட்டத்தின் படி ரஞ்சனி லீவில் சென்ற சில நாட்கள் கழித்து குறிப்பிட்ட சில நிமிடங்கள் அந்த வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த சில நிமிடங்களுக்குள்ளாக அவுட் ஹவுஸ் உள்ளே மற்றும் வெளியே சுற்றிலும் இருந்த கேமராக்கள் தற்காலிகமாக செயல்படாமல் முடக்கப்பட்டன. வீட்டின் உள்ளேயே அத்தனை தகிடுதித்தங்களும் செய்ய எல்லா இடமும் விபாகரன் காசை வாரி இறைத்தான்… அதுவும் மிகவும் கமுக்கமாக.

தான் செய்வது சரியா? தவறா? என எல்லாம் யோசிக்கும் நிலையில் விபாகரன் இல்லை. தன் மனதில் காட்டு ராணியாக வரித்துக் கொண்ட பூமாவிற்காக அவன் என்னவும் செய்ய தயாராக இருந்தான். அன்னம்மாள் இல்லாத போதும் தன்னையே சுற்றி வரும் கழுகுக் கண் சப்னாவை அவன் எவ்வாறு மறந்தான்? என்பதை அறியான். காதலுக்கு மட்டுமல்ல காமத்திற்கும் கண்கள் இல்லையாம்.

அன்று வெள்ளிக் கிழமை சப்னா தன் தோழிகளுடன் அவுட்டிங்க் சென்றிருக்க அவள் திரும்ப வர ஞாயிற்றுக் கிழமை ஆகி விடும், தனது பெற்றோரும் ஞாயிறன்று இரவு வீடு வந்து சேர்ந்து விடுவர். தன்னறையை தாண்டி வெளியே வராத பிரதீபனால் அவனுக்கு பிரச்சனைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை.

தானும் பூமாவும் சனிக்கிழமை இரவே திரும்ப வந்து விட்டால் ஒன்றும் பிரச்சனையிராது என திட்டமிட்டான். மீனாவிடம் பூமா அங்கு அவுட் ஹவுஸ் உள்ளேயே இருப்பது போலவே வெளியாட்களுக்கு தெரிய வேண்டும் எனச் சொல்லி சில பணக்கட்டுக்களை கொடுத்து பேசி சரிக்கட்டி இருந்தான். பயந்த மீனா வேறு வழியில்லாமல் அவனது பேச்சிற்கு உடன்பட்டாள்.

விபாகரன் வெள்ளிக்கிழமை இரவு தான் வெளியே சுற்றப் போவதாக வீட்டில் ஏற்கெனவே தெரிவித்து இருந்தான். அது வழக்கமானதாகவே கருதப்பட்டு இருந்தது. பிரதீபன் வழக்கமாக தனது அறையில் ஒரு கோப்பையில் குடியிருந்ததால் அவனுக்கு தம்பி சொன்னது தவிர மற்ற விஷயங்கள் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமே.

வெள்ளிக் கிழமை இரவு, மணி பதினொன்று தாண்டியதும் அவுட் ஹவுஸின் கதவுகள் தட்டப்பட உள்ளிருந்து வெளியே வந்த அந்த புர்க்கா உருவம் விபாகரனின் காரின் பின் சீட்டில் பதுங்கி படுத்துக் கொண்டது. உடனே, அந்த அவுட் ஹவுஸ் கதவு உள்ளே தாளிடப்பட்டன.

கார் சற்றுத் தொலைவு வந்ததும் புர்க்காவை எடுத்து வீசிய அந்த பூமாவெனப் பட்டவள் அன்று விபாகரன் கொடுத்திருந்த அதீத கவர்ச்சி உடையில் இருந்தாள். நளினம் என்றால் என்ன விலை? எனக் கேட்பாள் போலும்? தொடை வரைக்குமே இருந்த உடையை பொருட்படுத்தாமல் பின் சீட்டில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

“விபாகர் நீ என்னை போகிற வழியில் எங்காவது இறங்கி போக விட்டுருவியா ப்ளீஸ்?” தான் கற்ற மொழியை அவனிடமே உபயோகித்து கேட்டாள்.அதுதான் அவனது விருப்பத்திற்கு ஏற்ப அவள் இது நாள் வரையிலும் நடந்ததற்கு காரணமும் கூட.

‘மீடியாவில் இவளது முகத்தை அடிக்கடி காண்பித்து காண்பித்து, இந்த ஊரில் இவளை அறியாதவர் யாரும் இருக்கப் போவதில்லை. இதில் இவள் தப்பித்து ஓடப் பார்க்கிறாள் முட்டாள். அப்படியே இவள் தப்பித்தாலும் ஒரே ஒரு நாளில் யாராவது இவளை வீட்டில் மறுபடி கொண்டு வந்து விடத்தான் போகிறார்கள்.’ இகழ்ச்சியாக எண்ணியவன் அவள் தன்னுடன் வந்தால் தப்பித்து விடலாம் என எண்ணியே வந்திருக்கிறாள் என்பதை நினைவு கூர்ந்தவனாக தன் காரியம் முடியும் மட்டும் மறுப்பாக பேச விழையவில்லை.

பூமா மறுபடியும் அந்த இரும்புக் கோட்டைக்குள் திரும்பச் செல்லப் போவதில்லை என்பதே அவளது விதியாக இருந்தது யாருக்கும் தெரியாத ஒன்று. பூமா இப்படியென்றால் விபாகரன் முழுவதுமாக தன் வீட்டிற்கு திரும்புவானா?

பூமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக,

 “ஏன் பூமா உனக்கு இங்கே என்ன குறை? ஏன் போகணும்?”

“என்ன குறையா? இங்க பாரு இந்த ட்ரெஸ் எல்லாம் உடுத்த வேண்டி இருக்கு… இது உடம்பில எல்லாம் குத்துது, இது மட்டுமில்லாம தினம் நீளமா ஒரு துணியை சுத்துராங்க எரிச்சலா இருக்கு.”

“ஹா ஹா நீ தினம் உடுத்துர துணியோட மதிப்பு தெரியுமா உனக்கு? அந்த நீளத்துணியோட பேரு சேலை. இந்திய நாட்டு கலாச்சார உடை.” பதில் கொடுத்தாலும் விபாகரனின் கவனம் பாதையில் இருந்தது. வெள்ளி, சனி என ப்ரீத்தி திரும்ப வராத இரண்டு இரவுகள் மட்டுமே தனக்கு கிடைக்கும் என்றிருக்க அந்த வாய்ப்பை தவற விடாமல் கடற்கரையோரம் இருக்கும் பங்களாவிற்கு அவனது வாகனம் பயணப்பட்டுக் கொண்டு இருந்தது. சப்னாவுக்கு தெரியாமல் அவன் நடத்தும் ராசலீலைகள் எல்லாம் அங்கு நடைபெறுவனதான். அதாவது சப்னாவிற்கு அவையெல்லாம் தெரியாது என அவன் நினைத்துக் கொண்டு இருப்பதாக அவன் நடத்தும் ராசலீலைகள் நடத்தும் இடம்.

அந்த கடற்கரையோர பங்களா மிக நவீனமானது பெரும்பாலானவை ஆட்டோமேடிக் சிஸ்டம் கொண்டவை.எனவே அங்கு செக்யூரிட்டி கார்ட்கள் கிடையாது.

அன்னம்மாள் தனது அதிகார பலத்தால் யாரோ ஒருவர் இரசித்து இரசித்துக் கட்டியதை மிரட்டி தனதாக்கிக் கொண்ட உடைமைகளுள் அதுவும் ஒன்று. மகன் கேட்கவும் அதன் அத்தனை உரிமையையும் அவனுக்கு கொடுத்து விட்டு விலகி விட்டார்.

இப்படி ஒரு பங்களா இருப்பது அவருக்கு நினைவிருக்குமோ என்னமோ? இதெல்லாம் இதுவரை அபகரிக்கப்பட்டவைகளுள் எத்தனையோக்களுள் ஒன்று தானே?

கார் விரைந்துக் கொண்டிருக்க சேலையின் விலை குறித்து பேசியவனிடம் பூமா…

“என்னது இந்த சேலையா? இது எத்தனை மதிப்பா இருந்தாதான் எனக்கு என்ன? முன்னல்லாம் நான் என்ன மாதிரி சந்தோசமா இருந்தேன் தெரியுமா? இதைதான் உடுத்தணும்னு யாரும் என் கிட்ட சொல்ல மாட்டாங்க. பிடிக்கலைன்னா கழட்டி வீசிட்டு நிம்மதியா தூங்குவேன். இப்ப எப்ப பாரு இதை சுத்திட்டு… இது மட்டுமில்ல காலை ஆறு மணிலருந்து அந்த ப்ரீத்தி வந்துடும். அது வந்து, அடிக்கடி மூஞ்சக் கழுவி என்னென்னவோ தடவி மேக்கப்புன்னு செஞ்சு… அப்படியே கசகசன்னு இருக்கும். …ம்ப்ச்ச… அந்த பாஸ்கரு சாரு சொன்னதை கேக்காம நான் அன்னிக்கு மொட்டையடிச்சதோட லாரில போயிருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்.”

கேட்டவனுக்கு பூமா குறித்த பாஸ்கரனது திட்டங்கள் எல்லாம் நினைவிற்கு வர ‘என்ன மூளைடா சாமி?’ வியக்காமல் இருக்க முடியவில்லை.

“கவலையே படாத நாம போற இடத்தில நீ உன் விருப்பம் போல எல்லாத்தையும் கழட்டி வீசிட்டு நிம்மதியா இருக்கலாம். மேக்கப்லாம் உனக்கு தேவையே இல்ல…” காரின் முன் பக்க கண்ணாடியிலிருந்து அவளது அங்கங்களை மேய்ந்தது அவனது கண்கள்.

“அப்படியா… அப்படியே என்னை திரும்ப வரும் போது வழியில எங்கேயாவது இறக்கி விட்டுருவியா?” கேட்டாள் பூமா. விபாகரனின் எதிர்பார்ப்பு என்ன? என் அவள் புரிந்துக் கொண்டிருந்தாள். கொடுக்கல் வாங்கல் இதில் என்ன தப்பு? அது போக அவனது எதிர்பார்ப்பில் அவளுக்கு தயக்கங்கள் எதுவும் இல்லை. இதெல்லாம் அவளது முந்தைய வாழ்விலும் சகஜமானது தானே?”

‘இவள் விபரமானவள் வீட்டினின்று வெளியேறவே தன்னுடன் வந்திருக்கிறாள். இவளை வரும் வழியில் விட்டு விடுவதா? நெவர். இவளை தவற விட்டால் இவனது அம்மா இவனை பொலி போடவும் வாய்ப்பு இருக்கின்றதே? போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் பூமாவை மறுபடி அவுட் ஹவுஸில் விட்டு விடுவதுதான் அவன் உயிருக்கு உத்தரவாதம் தருவது. எனவே மறுபடி அவளது கேள்வியை தவிர்த்தான்.

‘குட்டி படிஞ்சிருவாளா? இல்லை…’ சிந்தித்தவன் கண்ணாடி வழியே அவளைப் பார்த்து… “நல்லா கொழுத்துப் போயிட்டா” மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தனது நெடு நாளைய ஆசை நிறைவேறப் போவது குறித்து அவனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

நினைப்பதெல்லாம் நினைத்த நேரத்தில், நினைத்த விதத்தில் கிடைத்து விடுமா என்ன?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here