பிரபஞ்சத் துகள்_8_ஜான்சி

0
258

அத்தியாயம் 8

சனிக்கிழமை இரவு:

அந்த லாரி எங்கோ தூர பயணத்தில் விரைந்துக் கொண்டு இருந்தது. அதன் பின் பகுதியில் கைகள் மற்றும் கால்கள் கட்டிய வண்ணம் கிடந்தாள் அவள். அவளது போதை கலைய ஆரம்பித்திருந்தது. தன்னைக் கட்டிப் போட்டிருந்தாலும் கூட தான் அகப்பட்டு இருந்த அந்த பங்களாவில் இருந்து தான் வெளியே வந்து விட்டதான ஆசுவாசம் எழுந்தது. இனி எப்படியும் தப்பித்து விடலாம் எனும் தைரியம் அவளுக்கு வந்து விட்டிருந்தது.

அவளை கண்காணித்த வண்ணம் எதிரில் முரட்டு மனிதன் ஒருவன் இருந்தான். தனது கையில் இருந்த மதுவை வாயில் சரித்தான். தனியாக இருந்ததால் அவளுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். அவனது கூட்டாளி லாரியை ஓட்டிக் கொண்டு இருந்ததால் அவன் அவளுடன் பேசுவதை யாரும் தடுப்பாரில்லை.

அன்னம்மாள் இல்லம்:

அவ்வில்லம் வெளியில் அமைதியாக தோன்றினாலும் உள்ளே சப்தமின்றி அமளிதுமளிப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை வர வேண்டியவர் சப்னா அழைக்கவும் அடித்துப் பிடித்து சனிக்கிழமை இரவே வந்திருந்ததை எல்லோரும் புதிருடன் பார்த்திருந்தனர். வீட்டிற்கு வரும் முன்னரே பிரதீபனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. அவனது முகபாவனைகளை யாராலும் கணிக்க முடியவில்லை. வீட்டு வேலைக்காரர்கள் அனைவருக்கும் சில நாட்கள் கட்டாய ஒரு வார விடுமுறை அளிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

தனது அரசியல் வாழ்விற்கு ஆதாரமான பூமா குறித்து சப்னா செய்ததை அவரால் கண்டிக்க முடியாத நிலை. அடுத்து என்னச் செய்ய என்று அங்கே வெகுவான ஆலோசனைகள் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன.

சம்பந்தப்பட்ட இருவர் முகங்களும் இருவேறு பாவனைகளை காட்டின. விபாகர் பிடிப்பட்டு விட்டோமே என தவித்து நிற்க, சப்னா கல்லாய் நின்றுக் கொண்டு இருந்தாள்.

‘ஆனாலும், சப்னா தன் திட்டத்திற்கு மாறாக ஒரு நாள் முன்பு இன்று சனிக்கிழமை காலையிலேயே வீட்டிற்கு திரும்ப வந்திருக்கக் கூடாது. வந்திருந்தாலும் பூமாவை அவுட் ஹவுஸில் உடனே பார்க்கச் சென்று இருக்கக் கூடாது. சென்றிருந்தாலும் அந்த வேலைக்கார மீனா சப்னாவிடம் உளறிக் கொட்டி, பூமா வீட்டில் இல்லை எனும் உண்மையை அறியும் படி செய்திருக்கக் கூடாது…

பூமா இல்லை என்றதும் விபாகரன் மேல் சப்னா சந்தேகப்பட்டு இருந்திருக்கக் கூடாது. சந்தேகம் வந்ததும் விபாகரன் திரும்ப வரும் வரை காத்திருக்காமல் சப்னா ஓய்வே எடுக்காமல் இவர்களை தேடி இருக்கக் கூடாது. விபாவையும் பூமாவையும் ஒவ்வொரு இடமாய் தேடி கடைசியாய் அவனும் பூமாவும் ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் நடுவில் வந்து நின்றிருக்கக் கூடாது….’

விபாகர் மனதில் இப்படி பல கூடாதுகள் இருக்க, விபாகரனின் செயலால் காயமுற்றிருந்த சப்னா தன் அத்தையும் மாமாவும் தன்னை எத்தனையாக சமாதானப் படுத்தியும் தீயாய் நின்றாள்.

சப்னாவை சமாதானப்படுத்தும் பொறுப்பை அன்னம்மாளின் கணவர் கையில் எடுத்துக் கொள்ளவும் அடுத்தடுத்த திட்டங்களை அன்னம்மாள் தீட்ட பாஸ்கரும் நள்ளிரவில் ஆலோசனைக்கு வரவழைக்கப்பட்டார்.

***

அந்த லாரி வெகு வேகமாக விரைந்துக் கொண்டு இருந்தது. ஒரு அங்கி போன்ற உடையில் கைகள் கால்கள் கட்டப்பட்டவாறு கிடந்தவளும் அவனும் அந்த இரவில் தனித்து இருந்தனர். லாரியின் வெளிப்பக்கம் பக்காவாய் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்க உள்ளே இந்த இருவர் இருந்தது தெரிய வாய்ப்பில்லை.

கொல்வதற்கு அழைத்துச் செல்லப் படுகின்றோம் எனத் தெரிந்தும் மிக இலகுவாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும் அந்தப் பெண் குறித்து அவனுக்கு ஆச்சரியமாக தோன்றி இருக்க வேண்டும். தன் முன்னே கிடக்கும் அவளைப் பார்த்து அவன் கேள்விகள் கேட்கலானான்.

“ஏ லட்கி தேரா நாம் க்யா போல்?” (உன் பெயரென்ன பெண்ணே சொல்லு?”)

“சமேலி”

“ஃபிர் வோ சப் துமே க்யூ பூமா நாம் சே புகார்தே ஹை?” (உன் பெயர் சமேலி என்றால் அவங்க எதுக்கு உன்னை பூமான்னு அழைக்குறாங்க?)

மீதி உரையாடல் தமிழில்…

“எதுக்காக பூமான்னு கூப்பிடுறாங்கன்னு எனக்கென்ன தெரியும்? அவங்களே நல்ல சாப்பாடு போடுவோம்… எங்க வீட்டில கொஞ்ச நாள் தங்கி இருன்னு அழைச்சுட்டு போனாங்க, அவங்களே என் பேர் பூமான்னு சொன்னாங்க, இப்ப அவங்களே என்னை உன் கிட்ட கொல்லச் சொல்லிருக்காங்க. சரி நீ என்னை எப்படி கொல்லப் போற?”

சற்று முன்னர் தன்னிடம் விபரம் கேட்டுத் தெரிந்துக் கொண்டவள் தன்னிடமே துடுக்காக கேட்க “ஹா ஹா” வென சிரித்தான் அவன்.

“உன்னை இங்க எல்லாருக்கும் தெரியுமாமே? அதனால இந்த ஊர்ல கொல்லக் கூடாதுன்னு உத்தரவு. தப்பித்தவறி யார் மூலமாகவும் தெரிய வந்தா பிரச்சனை ஆகிடுமாமே?”

“ஓ”

“சப்னாம்மாக்கு நீ செத்துப் போனதா இல்லாம இப்ப தானா வீட்ட விட்டு ஓடி வந்துட்டதா காண்பிக்கணுமாம். அதான் வேற ஊருக்கு கொண்டு போய் உன்னை கொன்னுட்டு உன் துணியை கொண்டு போய் காண்பிச்சுட்டேன்னா போதும். உன்னை நான் எப்படி வேணா கொல்லலாம்? உனக்கு விருப்பம் எப்படின்னு சொல்லு?”

“நீ காசு வாங்கிருக்க உன் விருப்பம், எப்படி வேணா கொல்லு?”

“ஹா ஹா, சாகப் போறோம்னு உனக்கு பயமாவே இல்லையா?”

“அங்க இருந்து வெளிய வரணும்னு நினைச்சேன், வந்துட்டேன் அதான் இப்ப சந்தோஷமா இருக்கு. கை கால் அவிழ்த்து விட்டேன்னா நான் இங்கருந்தும் ஓடிருவேன்.”

“அதெல்லாம் உன்னால எங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓட முடியாது.”

“பார்த்துக்கலாம்.”

மறுபடி ஹா ஹாவென சிரித்தான் அவன்.

“சரி கொஞ்சம் அங்க திரும்பி சிரி, எனக்கு பான்பராக் வாட வருது.”

“ஏன் உனக்கு பிடிக்காதா?”

“ஏன் பிடிக்காது அதெல்லாம் திம்பேனே…ஆனா உன் வாய்லருந்து வர்ற வாடை எதுக்கு எனக்கு பிடிக்கணும்?”

“ரொம்ப வாய் பேசுற நீ” மறுபடியும் சிரித்தான்.

“நினைச்சதை பேசி எவ்வளவு நாளாச்சு தெரியுமா? அங்க எல்லாத்துக்கும் கத்துக் கொடுப்பாங்க? எப்படி பார்க்கணும்? எப்படி இருக்கணும்? என்ன பேசணும்? எப்படி பேசணும்? …ஹவ் டு யு டூ சர்… ம்க்கும்… நல்ல வேளை சப்னாம்மா என்னை கொஞ்சம் தூரம் கொண்டு போய் கொல்லச் சொல்லிருக்காங்க அவங்களுக்கு நன்றிதான் சொல்லணும். கொஞ்ச நேரம் நினைச்சது போல பேசிக்குவேன்ல. கிடைக்கிற வாய்ப்பில தப்பிச்சுக்குவேன்.”

“அதெல்லாம் ஆசைப்படாத… உன்னை தப்பிக்க விட மாட்டோம்… சரி சமேலி …எந்த ஊர் நீ?”

“யாருக்குத் தெரியும்? பொறந்ததில் இருந்தே இப்படித்தான் சும்மா கிடைச்ச லாரி வண்டில தொத்திட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்தேன்.இப்பவும் லாரிலதான் இருக்கேன்.என் பொறப்பு இறப்பு இரண்டுக்கும் லாரிதான் வாய்ச்சிருக்குப் போல..”

“கல்யாணமாகிருச்சா?”

“அப்படின்னா?”

“உனக்கு இது கூடவா தெரியாது?”

“ம்ஹீம்…அதென்னது?”

“தாலி கட்டிக்கிறது, ஆம்பளைக்கு அடங்கி நடக்குறது, குடும்பம் நடத்துறது குழந்த குட்டி பெத்துக்கறது.”

“ஓ நான் எங்க அதெல்லாம் பார்த்தேன்? …. தினம் தினம் சாப்பாடு எங்க கிடைக்கும்னு தேடுவேன். அது கிடைச்சதும் தூங்க இடம் தேடுவேன். அவ்வளவுதான் என் வாழ்க்கை… சரி இந்த கல்யாணம் இதெல்லாம் எதுக்கு செஞ்சுப்பாங்க?”

“அப்பதான நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கும். நினைச்ச நேரம் …வும் செஞ்சுக்கலாம்”

“ஓ என்னதது?” அவன் கலவியைக் குறித்த மறைமுகமான வார்த்தையைச் சொல்ல, அதைக் கேட்டு விசாரித்துக் கொண்டவள்.

“அது செய்யறதுக்காக கல்யாணம்லாம் எதுக்கு செய்துக்கணும்? முன்னாடியும் லாரில நிறைய பேர் போவோம் வருவோம்… தோணுச்சின்னா செஞ்சுக்க வேண்டியதுதானே. நாய் பூனை எல்லாம் கல்யாணமா செஞ்சுட்டு இருக்கு?”

“நீ நல்ல குடும்பத்தில வளரலை அதான் இப்படி இருக்க?” முகம் சுளித்தான் அவன்.

“ஓ எது அந்த வீடு, குடும்பம் அதுபோலவா?” அன்னம்மாளின் வீட்டை நினைவு கூர்ந்தாள். அங்கு எப்படிப்பட்ட அமைப்பு இருந்ததென யோசித்துப் பார்த்தாள். காலையில் எழுந்ததில் இருந்து சேலை உடுத்துவதும், மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் செய்வதும், அன்னம்மாளின் வீட்டில் சென்ற பின்னர் சுற்றிச் சுற்றி புகைப்படம் காணொளி எடுப்பதும் தவிர அவளுக்கு எதுவும் நினைவிற்கு வரவில்லை.

“பொம்பளயா அடுக்க ஒடுக்கமா இருந்தா இன்னிக்கு சாகற நிலை வருமா என்ன?” அவள் சிந்தனை கலைந்தது.

“அடக்க ஒடுக்கமா? அப்படின்னா? சரி ஏன் எதுக்காக என்னை கொல்ல சொல்லிருக்காங்க சப்னாம்மா?”

“நீ அவ வருங்கால புருசன் கூட தப்பான உறவு …… வச்சுக்கிட்டியாம்?” அவன் அதற்கான தனது கோட் வர்ட் சொல்லவும் அவள் புரிந்துக் கொண்டாள்.

“யாரு விபாகரா?”

“ம்ம்…”

“அவன் தான் வெளியில் சுத்தப் போவோம் வான்னு சொன்னான். வெளியில போகிறப்ப எப்படியாவது எங்கயாவது கீழே இறங்கிப் போய் தப்பிச்சுரலாம்னு பார்த்தேன். அப்புறமா ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போனான். அவனும் …. கேட்டான் எனக்கும் பிடிச்சது… ஒரு நாள் முழுக்க அப்படியே போச்சு. அடுத்த நாள் திரும்ப போகலாம்னு சொன்னான்.”

“…”

“அவன் பேச்சக் கேட்டு நடந்தா திரும்ப போகிறப்ப எப்படியாவது வழியில இறங்கிக்கலாம்னு நினைச்சேன். அதனால அடுத்த நாளும் அங்க இருந்தோம். நல்லா சாப்பிட்டு குடிச்சு நல்லா இருந்துச்சு எல்லாமே. என்னாச்சுன்னு தெரியலை திடீர்னு சப்னாம்மா கதவை திறந்துட்டு உள்ள வந்து நின்னா… நான் வேற அப்பதான் … அந்த விபாகர் கூட எதுக்கோ சப்னாம்மா சண்டை போட்டுச்சு… கொஞ்ச நேரத்தில பார்த்தா நான் இந்த லாரில இருக்கேன். சரி இதுக்கெல்லாமா யாரையும் கொல்லுவாங்க? அப்படின்னா விபாகரையும் அவ கொன்னுட்டாளா?”

மறுபடி காவிப்பற்களைக் காட்டியபடி அவன் சிரித்தான்.

“என்னிக்காவது ஆம்பளைங்களை இதுக்காக கொன்னுருக்காங்களா? உனக்கு நிறைய விஷயங்கள் தெரியலைனாலும் பல விஷயங்களை சரியாதான் பேசுற போ. ……விபாகரை சப்னாம்மா கொல்லலை, கொல்லவும் முடியாது. ஏன்னா, அவன் அன்னம்மா பையனாச்சே? நீ கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம்… இல்ல இல்ல கேர் ஆஃப் லாரி அதான் உன்ன பேக் பண்ணி கொல்லறதுக்கு அனுப்பிடுச்சுங்க. நாங்க எல்லாம் சப்னாம்மா குடும்பத்துக்காக வழக்கமா வேலை செய்றவங்க. ஒரு போன் போட்டதும் வந்து தூக்கிப் போட்டுட்டு வந்துட்டோம். நீ அன்னம்மா வீட்ல இல்லாம வெளி வீட்டில இருந்தது வேற எங்களுக்கு வசதியா போச்சு.”

“ம்ம்” கேட்டுக் கொண்டு இருந்தவள் சில நிமிடங்களில்… “கொஞ்ச நேரம் கட்டு அவிழ்த்து விடேன்” இயற்கை உபாதை எனச் சொல்லி ஒரு விரலை காட்டினாள்.

“நாளைக்கு பொலி போடப் போற ஆடுதான்னாலும் கூட, இன்னிக்கு இப்ப இந்த லாரிய நாறடிச்சுருவன்னு தான் பார்க்க வேண்டி இருக்கு.உன் கூட நான் வேற வரவேண்டியதா இருக்கே” புலம்பியவன் சமிக்ஞை கொடுக்க அந்த லாரி நடுக்காட்டில் நின்றது. அவளது அவசரம் தீரும் மட்டும் அவள் ஓடி விடாத வண்ணம் தன் மூக்கைப் பொத்திக் கொண்டு அவளது பின்னேயே நின்றானவன்.

அன்னம்மா இல்லம்:

அன்னம்மா ஒரு முடிவிற்கு வந்து விட்டதான முகபாவனை தெரிந்தது. தனது அலுவலக அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். முக்கியமான இடத்திற்கு அலைபேசியில் அழைத்து,

“அந்த ரஞ்சனிப் பொண்ணை இனி வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிருங்க.”

“…”

“வேணாம் பணம் கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும். விபரம் கேட்டா எதையும் சொல்ல வேணாம்.”

“…”

“கொஞ்ச நாளைக்கு அந்த பொண்ணை கண்காணிப்பில் வச்சிருங்க, நமக்கு ஏதாவது பாதகம்னா யோசிக்காம போட்டுத் தள்ளிருங்க.”

“…”

“ம்ம்ம்… ம்ம்ம்”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here