பிரபஞ்சத் துகள்_9_ஜான்சி

0
286

அத்தியாயம் 9

அன்னம்மாவின் வீட்டின் அலுவலக அறையில் பாஸ்கர் நுழைந்தார். இருவரும் தனியே சில பேசிக்கொண்டிருக்க முதலில் தம்பி வந்தான். அவன் முகம் கனன்று இருந்தது. தன் பாதுகாப்பை மீறியும் பல விஷயங்கள் நடந்தது குறித்து அவனுக்கு அவமானமாக இருந்தது. செய்தது அன்னம்மாளின் மகனாக இருக்க அவனால் அதைக் குறிப்பிட்டும் சொல்ல முடியவில்லை.

“கேமரா எல்லாம் செயல்படாம போயிருக்கு… நான் இல்லாத நேரத்தில் இதுதான் இந்த வீட்டை நீ கவனிச்சுக்கிற இலட்சணமா தம்பி?” பாஸ்கர் முன்பாக அன்னம்மாள் கேட்டதில் குறுகினான்.

“சரி நாளையிலருந்து நம்ம ஃபேக்டரி இன்சார்ஜ் கனகு கீழ நீ வேலை செய்யணும்… வீட்ல செக்யூரிட்டிக்கு வேற ஆளை நியமிச்சுட்டேன்.”

“….”

“நீ போலாம்…”

தம்பி தலைக்குனிந்து அங்கிருந்து நகர்ந்தான்.

“மீனா…?” பாஸ்கர் கேட்டார்.

“அந்தக் கழுதை இரண்டு போட்ட போட்டில அவுட் ஹவுஸிலயே சுருண்டு கிடக்குது. விபா தான் சொன்னான்னா… நமக்கு ஏதாவது போனாவது போட்ருக்கலாம்ல கழுதை? காச வாங்கிட்டு என்ன வேலை பார்த்திருக்கு? உண்ட வீட்டுக்கு இரண்டகம்… ம்.. ஊருக்கு பத்தி விட்ரணும் இல்லன்னா முடிச்சு விட்ரணும்.”

“சரி அதை பிறகு பார்த்துக்கலாம்.”

ப்ரீத்தி அறையினுள் வந்தாள்… புரிந்தும் புரியாமலும் நின்றாள். பூமாவை காணவில்லை. மீனாவையும் காணவில்லை. அவுட் ஹவுஸ் வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருக்கின்றது. அந்த வீட்டிற்குள் என்னென்னமோ நடக்கின்றதாக மனதிற்குப் புரிகின்றது. ஆனால், ஒருவரிடம் இருந்தும் ஒரு வார்த்தையும் வாங்க முடியாது. அழைப்பிற்கு ஏற்ற வண்ணம் சிலையாய் வந்து நின்றாள் ப்ரீத்தி.

“ப்ரீத்தி, பத்து நாளில் நம்ம பிரதீபுக்கும் பூமாக்கும் கல்யாணம் ப்ளான் ஆகிருக்கு தெரியும்ல?”

“யெஸ் மேம்”

“நாளைக்கு சின்னதா நிச்சயதார்த்தம் செய்யறதா இருக்கோம். வீட்டு ஆட்கள் மட்டும் தான்.”

“சரி மேடம்”

“இப்ப ஒரு சின்ன பிரச்சனை, பூமா ஊருக்கு போயிருக்கா… அவ வர்ற வரைக்கும் விழாவை தள்ளிப் போட முடியாது பாரு. பாஸ்கர் சார் அதே உருவத்தில ஒரு பொண்ணை அழைச்சுட்டு வருவார். நீ என்ன செய்யறன்னா அது பூமா இல்லைனு கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு, பூமா போலவே அந்தப் பொண்ணுக்கு மேக்கப் செய்யற… முகம் பெரும்பாலும் மறைஞ்சு இருக்கிற மாதிரி முடியோ… பூவோ தொங்கிற மாதிரி… உனக்குத்தான் ஏதாச்சும் ஐடியா இருக்குமே? செய்யலாம் தானே?”

“யெஸ் மேம்”

“இது போலத்தான் கல்யாணத்தன்னிக்கும் செய்யணும்”

“சரி மேம்”

“நம்மளுக்குள்ள இருக்கிற இந்த விஷயம் நம்மளுக்குள்ள தான் இருக்கணும்… என்ன புரியுதா?”

‘யெஸ் மேம் … யெஸ் மேம்”

“உன் வீடு அந்த ____ஏரியால தான இருக்குது. அம்மா, அப்பால்லாம் கூட…”

“யெஸ் மேம்”

“சரி நீ போகலாம்”

உதறிய கைகளிரண்டையும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு ப்ரீத்தி வெளியே வந்தாள். ‘பூமாவுக்கு என்னவாயிற்று? அல்லது என்னவாகி இருக்கும்?’ எனும் கேள்வி அவளை இனி வாழ்நாள் முழுவதும் துரத்தும்.

அடுத்து பிரதீபன் உள்ளே வரவும் பாஸ்கர் எழுந்து நின்றார்.

“நீங்க எங்க போறீங்க? இருங்க” அவரை அமர்த்தினார்.

“பிரதீபா…”

“நீங்க சொன்னது புரிஞ்சதும்மா… ஒரு நாள் கூத்துதானே இந்த நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாம்… அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. முன்னவும் கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பூமாவை கண்காணாம ஆக்கணும்னு தானே இருந்தோம். இப்ப அதுக்கு முன்னமே போயிட்டா அவ்வளவுதான். சீக்கிரம் இந்த நாடகம்லாம் முடிஞ்சு என்னை ஏதாச்சும் நல்ல வெளி நாட்டுக்கு அனுப்புங்க… வீட்டுக்கு உள்ளயே வருசக்கணக்கா அடைச்சுக் கிடந்து முடியலை எனக்கு.”

“மூத்த மகன்னா மூத்த மகன் தான்… என் மனசு புரிஞ்சு நடக்கிறவன். நீதான் டா பொறுப்பான புள்ள” அவன் தலையை வருடினார்.

“சரி போ” அவன் சென்றதும் அடுத்து சந்திக்க இருக்கின்றவன் குறித்து யோசித்தவர்.

“பாஸ்கர் சார், கொஞ்ச நாளைக்கு நம்ம ஐ டி விங்க் கிட்ட பூமாவோட மத்த க்ளிப்பிங்கஸ் போட்டு ஓட்டச் சொல்லுங்க. அடுத்து என்னன்னு நாளைக்கு நாம யோசிப்போம்.” விடைக் கொடுக்க,

“சரி” பாஸ்கர் விடைப்பெற்றுச் சென்றார்.

விபாகரன் வந்தான்…

“ஏன்டா அறிவுக்கெட்டவனே…என்ன செஞ்சு வச்சுருக்க தெரியுமா? இத்தனையும் யாருக்காவது ஒரு துளி கூட தெரிஞ்சிருந்தா என் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனம் தான். உங்கண்ணன் தான் ஒரு தப்பை அறியாம செஞ்சான்னா சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சே நீ இதை செஞ்சுருக்க… இத்தனை நடந்தும் சப்னா உன்னை கொல்லாம விட்டதே பெரிசு.”

“……”

“சப்னா கிட்ட பேசுனியா?”

“ம்ம்… கோபமா இருக்கா? சண்டை போடுறா?”

“பிறகு உன்னை கொஞ்சுவாளா என்ன?”

“….”

“கொஞ்ச நாள் பொறுமையா இரு… இத்தனை சொத்துக்காரி உனக்காகத்தான் இந்த வீட்ல இருக்கா… நான் அவளை ஆசைக்காட்டி இருக்க வச்சிருக்கேன். உனக்காக நான் என்னன்னமோ செய்ய உனக்கு அந்த பிச்சக்காரி தேவைப்பட்டுருக்கா…அதுவும் உன் அண்ணன் கூட அவளுக்கு கல்யாணம்னு சொன்னதுக்கு பிறகும்… சரி என்னமோ போ… கொஞ்ச நாள் சப்னா சண்டை போட்டாலும் பொறுத்துப் போ…”

“ம்ம்ம்… வேற வழி?” முனகியவன் சென்றான்.

“எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குங்க பாரு ஒவ்வொன்னும்…”

அன்னம்மா களைப்பாகி தலையை பிடித்துக் கொண்டு சேரில் சரிந்து அமர்ந்தார். இண்டர்காமில் அழைத்து தனக்கு இஞ்சி டீ சொல்லி விட்டு கண்களை மூடினார்.

அந்த வீட்டின் மற்றொரு அறையில் சப்னாவை அன்னம்மாளின் கணவர் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க அந்த வீட்டில் நிச்சயத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்தன.

லாரி:

பூமாவென அழைக்கப்பட்டிருந்த சமேலி தான் கடத்தப்பட்டிருப்பதை வெளியே யாரிடமும் சொல்லி தப்பிக்க முடியாத நிலையில் இருந்தாள். நள்ளிரவில் தப்பிப் போவது குறித்த முடிவை அவள் தற்போது தள்ளிப் போட்டிருந்தாள்.

இரவின் குளுமையில் அவள் தூங்கி விட்டிருக்க அவளது கைகளை இறுக்கக் கட்டியவனும் தூங்கி இருந்தான்.

வெகு விரைவாக பயணித்த அந்த வண்டி தமிழக எல்லையை கடந்து கர்னாடகாவை அடைந்தது. தமிழ் நாட்டிற்குள்ளாக அவர்கள் எதையும் செய்ய முடியாத நிலை எனவே, அடுத்த நாள் தங்களுக்கு வசதியான இடம் வரும் மட்டும் இரவு வரையிலும் அவளோடு பயணிக்க வேண்டி இருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here