2. பெண்களும் அவர்களுக்கான அறிவுரைகளும்

0
413

பெண்களும் அவர்களுக்கான அறிவுரைகளும்

இந்தப் பதிவு அல்லது கட்டுரை நாம் பொதுவாகச் சமூக வெளியில், வலைத் தளங்களில் காணப் படும் பெண்களுக்கான அறிவுரைகள் பற்றியது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் அறிவுரைகள் பெண்களுக்கே வழங்கப் பட்டு வருகின்றன.

அதாவது பெண்கள் என்ன தெரிவு செய்வது என்பது முதலாக இவர்களே கற்றுக் கொடுப்பார்களாம். இதன் மறைபொருள் இரண்டு விஷயங்கள் இருக்கலாம்.

ஒன்று பெண்ணுக்கு தனக்கான முடிவுகளை எடுக்கத் தெரியாது அதனால் அவளுக்கு அறிவுரைகள் வழங்கப் படுகின்றன என்பது. அல்லது

இரெண்டாவது பெண்கள் தாங்கள் குறிப்பிடும் வரையறைகளுக்குள்ளேயே வாழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

முத்தாய்ப்பாக எல்லாம் பெண்களின் நலனுக்காகத்தான் செய்கிறோம் என்றும் தெரிவிக்கப் படுவதுவும் உண்டு.

காலம் காலமாக நாம் காணும் அறிவுரைகளில் ஒன்று திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பெண்ணுக்காக ஒலிக்கப் படும் திரைப் பாடல். வரிகளைக் கொஞ்சம் பார்க்கத்தான் செய்வோமே?

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே… சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் …அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாரை மதிக்கணும்… உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்துக் கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்.
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததைக் கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வார்த்தை தள்ளாதே
நம்ம அப்பேன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் உயிரை மீட்டு தந்தவப் பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணு தான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவங்க ஆஸ்தி கணக்குச் சொன்னா கற்பு ஒண்ணு தான்
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரச்சேலையும் தாலியும் மஞ்சளும் குங்கும பொட்டும்
நகையும் நட்டும் குறைஞ்சிடாம நிறைஞ்சிகிட்டு
ஆ…ஆ…ஆ…
மக்களைப் பெத்து மனைய பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல புள்ளையைப் பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்குச் சாமி துணையிருக்குத் தங்கச்சி
நமக்குச் சாமி துணையிருக்கு … சாமி துணையிருக்குத் தங்கச்சி…

இது ஒரு பழைய பாடல் ஆனாலும் இன்றளவும் எல்லாத் திருமண வீடுகளிலும் ஒலிக்கின்றது. பாடலில் பெரிதாய் குறைகள் ஒன்றுமில்லை. ஆனால், கேட்கும் போது என்ன தோன்றுகின்றதென்றால் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த நபரிடம் இங்க பாரு மேனேஜர் கிட்ட இப்படி நடந்துக்கணும். இந்த வேலையை இப்படிச் செய்யணும். இவனுக்குச் சலாம் போடணும் அவனுக்குக் குல்லா போடணும் என்று சொல்கிறது போல இருக்கின்றது.

பெண்ணுக்கு அறிவுரை சொன்னவர் கொஞ்சம் மாமியார் மாமனார் பொறுப்பென்ன? என்பதையும், கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விட்டு விட்டார் என்பது தான் பெரும் மனக்குறை.

அதென்ன பெண்ணுக்கு மட்டும் எப்போது அறிவுரை?

திருமணம் என்பதே மிகப் பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு அதை எவ்வாறு திறம்பட நடத்த வேண்டும் என்பது தெரியாதா என்ன?

இல்லை அவளுக்குப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அறிவு முதிர்ச்சி இல்லையென்றால் எதற்காக அந்தப் பொறுப்பைக் கொடுக்கிறார்கள்?

அது போக இத்தனை அறிவுரை கேட்டு அந்தப் பெண் வழுவாமல் நடந்தும் எத்தனை வீடுகளில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் தாண்டவமாடுகின்றதாம்?

அது ஏன் பொண்ணுக்கு மட்டும் அறிவுரை? மத்தவங்களுக்கு ஏன் இல்லை?

அடுத்து வருவது உடை சுதந்திரம். அதாவது பெண்ணுக்கு எப்படி உடை அணிவது? என்று கற்றுத் தருகிறார்களாம். முழு அங்கி அணிந்த பெண்களை, துறவறம் பூண்ட பெண்களை, சிசுக்களைச் சீரழிக்கின்றவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே குற்றச் சாட்டு அவள் இலகுவான உடையணிகின்றாள். ஆடை மறைவினின்று வெளிப்படும் குறிப்பிட்ட வடிவம் கொண்ட உடல் உறுப்புக்களைப் பார்த்ததும் என்னால் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள முடிவதில்லை.

அதனால் சுடிதார் அணிந்தால் துப்பட்டா அணியுங்கள் தோழி…இப்படி முழுவதையும் மறைத்து அணியுங்கள் தோழி என்று… உன் காமுகக் கண்களுக்குக் கடிவாளம் இடேன். பார்த்து உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாதென்றால் கண்களைக் குத்திக் கொள்ளேன். குருடனாகி விடேன் அது எவ்வளவு எளிது தோழா…

அவள் உடை விருப்பத்தைக் கேள்விக்குக் கொண்டு வர நீ யார்? எல்லாம் செய்து விட்டு தவறுக்கும் காரணமாகப் பெண்ணையே சொல்கிறாயே? உனக்கும் காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.

பெண்ணுக்கு ஏன் அறிவுரை? எவனாவது அவள் துப்பட்டா விலகிய நேரம், அல்லது குனிந்து தன் வேலையைத் தீவிரமாகச் செய்யும் நேரம் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால், பேசினால் அவள் அவன் முகத்தை அடித்துப் பெயர்க்கட்டுமே?

போகிற இடமெல்லாம் அடி வாங்கினால், பெண்கள் முகத்தில் மூக்கை இருக்கும் இடம் தெரியாமல் திருப்பி வைக்கிற அளவிற்குக் கொடை கொடுத்தால் தானாகத் திருந்தி விட்டுப் போகிறான். அவனுக்கு அப்போது பெண்ணைத் தவறாகப் பார்க்காதீர்கள் டோழர் எனும் அறிவுரை கூடத் தேவையே படாதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அடுத்து சமூக வெளியில் வலம் வரும் பெண்களுக்கு அறிவுரை.

பத்து பதிவுகளில் இரெண்டில் இது மிக முக்கியமாக முகநூல் உபயோகிக்கும் பெண்கள் பார்க்க வேண்டிய காணொளி உடனே பாருங்கள். உடனே வாசியுங்கள். இந்த அதீத அக்கறை எதற்காகவாம்?

சமூக வலைதளங்கள் ஆணுக்கு எப்படியோ? அப்படியே பெண்களுக்கும் புதிதுதான். நடை பழகுகின்ற குழந்தை ரெண்டு மூன்று முறை விழும் , பின்னர் எழும், அதன் பின்னர் கெத்தாக நடை பயிலும்.

அது போலவே, பெண்களும் சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபத்தை சீக்கிரமே தாமாகவே உணர்ந்துக் கொள்வார்கள். தங்கள் அனுபவத்தால் கடந்தும் கொள்வார்கள்… குழந்தைகள் போலவே விழுந்து எழுந்து அவர்களையும் நடக்க விடுங்கள்.

அடுத்து டிக்டாக்…ஊரில் உள்ள பெண்கள் எல்லோரையும் திருத்த சில குழுக்கள் இருக்கின்றன.

டிக்டாக்கில் பெரும்பாலான மக்கள் செய்வது கொஞ்சம்/ நிறையக் கிறுக்குத் தனமாக இருக்கலாம். ஆனால், இத்தனை மன அழுத்தமான காலக் கட்டத்தில் சிலருக்கு இப்படி ஒரு செயல்பாடுகள் மன அமைதி தருகின்றன என்றால் அவர்கள் செய்து விட்டு போகட்டுமே?

சின்னதான ஒரு வாழ்க்கை… அதைச் சுவாரஸ்யமாக்க கொஞ்சம் கிறுக்குத்தனங்களும் தேவைப் படுகின்றதே? தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக எண்ணுகின்றார்கள் அதிலென்ன தவறு?

பலரும் தாங்கள் பிரபலமாக வேண்டுமென்று இவற்றை உபயோகப் படுத்துகின்றார்கள். சிலருக்கு சினிமா வாய்ப்புகளே இலக்கு. இப்படிப் பலருக்கும் பலவிதமாக இருக்கும் அந்தச் சமூக வலைத்தளம் அது எல்லோருக்கும் பிடிக்காது.

எல்லோருக்கும் எல்லாமும் பிடிக்கத் தேவையும் இல்லையே?அது உனக்குப் பிடிக்கலை என்றால் கடந்து போ…அதை விட்டுவிட்டு குறிப்பிட்ட பெண்ணின் வீடு வரைக்கும் போய்ப் பிரச்சனை செய்வது. மிரட்டுவது…குடும்பத்தைப் பிரிப்பது

ஊர் உலகத்துக்கு அறிவுரை அதுவும் பெண்களுக்கு மாய்ந்து மாய்ந்து அறிவுரை சொல்லும் நல்ல மனுசன்களுக்கு அடையாளமா இது?
.
நம் நாட்டில் சமூக வலைத்தளங்களின் பிரச்சனைகளால் நடக்கின்ற தற்கொலை, மன அழுத்தம் எல்லாம் பெண்கள் தவறாகச் செயல் பட்டதால் விளைந்தவை அல்ல.

நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்கள் மேல் மறுபடியும் மறுபடியும் சமூதாயம் திணித்து வைத்து இருக்கின்ற புனித பிம்பம், அது கொடுக்கிற அழுத்தம் தான் இவற்றிற்கு காரணி.

சமீபத்தில் மறுபடியும் ஒரு பெண் தற்கொலை செய்திருக்கிறாள். காரணம்? எவனோ தன்னுடைய புகைப் படத்தை நிர்வாணமாக இருப்பது போல ( கவனிக்க இதில் பெண் ஒரு தவறும் செய்யவில்லை. அவள் புகைப் படத்தை யாரோ ஒரு அறிவு மிகுந்த ஆண் மகன்) எடிட் செய்து வெளியிட்டு விட்டானாம்.

தவறு செய்தது யார்? தண்டனை யாருக்கு?
அறிவுரை சொல்லும் அறிவாளிகள் இந்த ஆண்மகனுக்கு அறிவுரை சொல்ல மாட்டார்களாமா?

அவளும் தான் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? தவறு செய்தவனுக்கே அவ்வளவு துணிச்சல் இருக்கும் போது தவறே இழைக்காத உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும். நீ அவனை அவமானப் படுத்தி நடுத்தெருவில் செருப்பால அடித்து இவன் தான் தவறு செய்தவன் என்று தூற்றும் படி செய்திருந்தால் பாராட்டி இருந்திருப்பேன் தங்கையே…

இல்லை என் புகைப் படத்தை எவ்வாறு இப்படிச் செய்யலாம்? உன்னால் எனக்கு எவ்வளவு அவமானம்? என்னை இழிவுப் படுத்திய உன்னைக் கொல்கிறேன் என்று அவனைக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருந்தாலும் மனமார பாராட்டி இருக்கலாம். அப்படியாவது சிறைச்சாலையின் உள்ளாவது நீ வாழ்ந்து இருப்பாய் அல்லவா? வீணாகத் தன் உயிரை இழந்து விட்டாயே?

இந்த இரெண்டும் வேண்டாம்… யாரோ என்னை அவமானப் படுத்தும் விதமாகச் செயல்பட்டதால் எனக்கு எந்த அவமானமும் இல்லை என நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சட்ட ரீதியாகப் போராடி இதெல்லாம் எனக்குத் தூசு என்று கடந்திருந்தாலும் அதுவும் பாராட்டுக்குரியதே.

இவற்றில் ஒன்றும் செய்யாமல் வெத்து வேட்டு மொக்கை அறிவுரை சாமிகள் பேச்சிற்கு ஏற்ற வண்ணம் நீ செயல்பட்டது மனம் வருத்துகின்றது.

ஊர் உலகம் என்று நாம் யாரோ எவருக்கோ என்று சாவது வரை முடிவெடுக்கத் துணிகின்றோமே அந்த ஊர் உலகம் உன்னிடம் காசு இல்லாத போது பசித்தால் ஒரு கவளம் சோறு தரப் போவதில்லை. அந்த உலகம் உனக்கு எதுவும் என்றால் உச்சுக் கொட்டி விட்டு நாலு நாள் உன் கதை பேசி விட்டு நகர்ந்து விடும். அந்த ஐந்து காசு பெறாத, கீழ்த்தரமான சமூகத்துக்குப் பயந்து பயந்து எத்தனை நாளைக்குப் பொண்ணுங்க வாழணும்?

பொண்ணுங்க என்ன கடவுள் அவதாரமா?
அவங்க தப்புச் செய்தாலும் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

பெண்கள் தானாகக் கற்றுக் கொண்டு இது நல்லது? இது கெட்டது? எனப் புரிந்து வரட்டுமே?

பெண்கள் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டு, விழுந்து எழுந்து சிராய்ப்போட வரும் போது, அவர்களை உங்கள் சொல் எனும் ஆயுதங்கள் கொண்டு சாவிற்கு இட்டுச் செல்லாமல் மட்டுமே நமக்கான பொறுப்பு இருக்கின்றது.

அதீத எச்சரிக்கை கொடுக்கின்ற அதீத ஆர்வத்தினால் அது என்னவென்று பார்த்து த்தான் வரலாமே? என்று தானாகப் போய் விழுகின்ற விட்டில் பூச்சிகள் தான் இங்கே அதிகம்.

பெண்ணுக்கு மட்டுமே விதிமுறைகள் வகுக்காதீர்கள்.

பெண்ணுக்கு மட்டுமே அறிவுரை சொல்லாதீர்கள்.

பெண்ணின் உடலில் மட்டும் பவித்திரம் தேடாதீர்கள்.

அந்தப் பவித்ரம் உலகின் ஒவ்வொருவர் கண்களிலும், மனதிலும் இருக்க வேண்டியது ஆகும்.

உலகனைத்தின் பவித்திரத்தையும் தன்னந்தனியளாய் பெண் ஒருவளே எத்தனை காலம் சுமப்பாள்?

உங்களுக்கே பாவமாக இல்லையா?

  • ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here