3. பேசுவோம்

0
430

உங்களுக்கு வயசாகிடுச்சு…

இது வாசிக்க மிக சாதாரணமான ஒரு வாக்கியமாக/பேச்சாக தோன்றும். ஆனால், நம் இந்திய குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் இவ்வாக்கியம் நிச்சயமாய் சாதாரணமான ஒன்றில்லை.

அது எப்படி என கேட்பவர்களுக்கு?

இந்த கேள்வி வேலை கிடைக்காத நபரிடம் கேட்கப் பட்டால்,

நீ இன்னுமா வேலையில் அமரவில்லை என்று அர்த்தம். ( விளைவு: தாழ்வு மனப்பான்மை)

இதே கேள்வி மணமாகாத பெண்ணிடம்/பையனிடம் கேட்கப்பட்டால்…

நீ இவ்வளவு வயசாகியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லையா? என்பது அர்த்தம். ( விளைவு: மனத்துயரம்)

இந்த கேள்வி மணமாகி குழந்தையற்ற தம்பதியினரிடம் கேட்கப்பட்டால்…

உங்களுக்கு இவ்வளவு வயதாகியும் இன்னுமா குழந்தை பிறக்கவில்லை? என்று அர்த்தம். (விளைவு: விரக்தியும் மனச் சோர்வும்)

இந்த கேள்வி பெண் குழந்தையின் தகப்பனிடம் கேட்கப் பட்டால்… ( அதுவும் குறிப்பாக கிலோ கணக்கில் நகை வரதட்சணையாக கொடுக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி இன்னபிற பகுதி மக்கள் எனில்)

நீ இன்னுமா உன் மகளுக்கு நகை சேர்க்கவில்லை? என்று அர்த்தம். (விளைவு: பதட்டம் , மன அழுத்தம் & கவலை)

உடை, முடி அலங்காரம் எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட வயது தான் என்று ஸ்டாம்ப் குத்தி இருக்கும் சமுதாயத்தில் ( பி.கு என்னுடைய பதின் வயதிலேயே அம்மா சடை பின்னுவதை நிறுத்தி கொண்டை போட ஆரம்பித்து விட்டிருந்தார்)

உனக்கு வயசாகிடுச்சு என்று வாலிப பிள்ளைகளின் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டால்

நீ இந்த வயதில் இப்படி உடை/முடி அலங்காரம் செய்துக் கொள்ள தேவையா?

என்று கேட்டதாக அர்த்தம்.( விளைவு: அவமான உணர்வு, குழப்பம்& மனச்சோர்வு)

ஆட்டம், பாடல், ரோமான்ஸ் கதை வாசிப்பது என பல்வேறு இரசனை மிகுந்த நபரிடம் இக்கேள்வி கேட்கப்பட்டால்

உனக்கு இந்த வயதில் இது தேவையா? என்பது அர்த்தம் ( விளைவு: அந்த நபர் உற்சாக மன நிலை இழந்து விடுவார்)

தான் உழைத்து ஒட்டு மொத்த குடும்பத்தை பராமரிப்பவரிடம் இந்த கேள்வியை கேட்டால்,

உனக்குதான் வயசாகி விட்டதே, இனி உன்னால் உழைக்க முடியுமா? இந்த வயதிற்கு உனக்கு வேறு வேலை கிடைக்குமா? என்பது அர்த்தம்.( விளைவு : பயம் & கவலை)

இதே கேள்வி நோய்வாய் பட்டவரிடம் கேட்டால்

உனக்கு வயதாகிவிட்டது சாக வேண்டிய வயதுதானே? எதற்காக நோய்க்காக பயப்படுகின்றாய்? என்று அர்த்தம். ( விளைவு: பயம்)

ஆக கேள்வி சாதாரணமானது தான்.ஆனால், அது யாரிடம் கேட்கப் படுகின்றது? இந்த கேள்வியை அவர் எவ்விதமாக எடுத்துக் கொள்வார்? என்று யோசித்து கேட்க வேண்டியது மிக்க அவசியமான ஒன்றாகும்.

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த “ரூமி” என்னும் அறிஞர் கூறுவது.

Before you speak, let your words pass through three gates:

At the first gate, ask yourself “Is is true?”

At the second gate ask, “Is it necessary?”

At the third gate ask, “Is it kind?”

~ Rumi

உங்கள் வார்த்தைகள்(பேச்சு) மூன்று வாயில்களை கடந்து வரட்டும்.

முதல் வாயில், “இது உண்மையா?”

இரண்டாவது வாயில், ” இது தேவையானது தானா?”

மூன்றாவது வாயில், ” இவை கனிவு கொண்டவையா?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here