4. பட்டிமன்றம்

0
486

பட்டிமன்றத்திற்காக எழுதியது.

தலைப்பு: குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கணவனா? மனைவியா?

இந்த வாதம் சிறந்தது மனைவியே எனக் கூறுகின்றது.

எங்கள் பெருமதிப்பிற்குரிய நடுவர் அவர்களே,

இன்றைய பட்டிமன்றத்தின் தலைப்பு இன்றைய குடும்பங்களில் முக்கிய பங்கு வகிப்பது கணவனா? மனைவியா?

இந்த தலைப்பின் கீழ் நான் இன்றைய குடும்பங்களில் முக்கிய பங்கு வகிப்பது மனைவியே என்று பேச வந்திருக்கின்றேன் நடுவர் அவர்களே

வாதத்தை துவங்குவதற்கு முன்னதாக ஒரு சின்ன விளக்கம் திருமண வாழ்வில் கணவன் மனைவி என்பவர்கள் யார்? ஒரு குடும்பத்தில் இரு தூண்கள் அல்லவா? இரண்டு பேரும் இன்றியமையாதவர்கள் அல்லவா? பிரித்துணர முடியாது திருமணம் என்கின்ற பந்தத்தில் “இனி நீங்கள் இருவரல்ல, ஒருவர்” என்று இணைக்கப் பட்டவர்கள் அல்லவா?

இந்த இருவரும் ஒரு வண்டியில் கட்டப் பட்ட இரு எருதுகளைப் போல ஒரே இலயத்தில் இயங்கினால் தானே குடும்பம் என்னும் வாகனம் நகரும்.

இந்த காலத்தில் குடும்பம் நடத்துவது அவ்வளவு எளிதா? பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்ப பிரச்சனைகள் , சொந்தக்காரர் பிரச்சனைகள், அக்கம் பக்கத்தார் வீட்டுப் பிரச்சனைகள் என்று எத்தனையோ சமாளிக்க வேண்டி இருக்கின்றது.

இப்படிப்பட்ட குடும்பம் என்கின்ற நுகத்தடி மாட்டப்பட்ட கணவனும் ,மனைவியும் இருவரில் யார் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்கின்ற விவாதத்திற்கு வருவோம்.

திருமணத்தன்று என்ன வாக்குறுதி கொடுக்கிறார்கள் நடுவர் அவர்களே…” உன் சுகத்திலும், துக்கத்திலும் வாழ்விலும் தாழ்விலும் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன்”

ஆனால், எத்தனை ஆண்கள் மனைவி வெங்காயம் அறிந்து துன்பப்படும் போது வாங்கி அரிந்துக் கொடுத்திருக்கிறார்கள்? எத்தனை ஆண்கள் மனைவி முடியாமல் இருக்கும் போது ஒரு டீயோ காஃபியோ போட்டு கொடுத்து இருக்கிறார்கள்?

ஓ உனக்கு காய்ச்சலா? சரி சரி சூடா காஃபி மட்டும் போட்டுகொடுத்து விட்டு படு என்று தானே சொல்கிறார்கள்.

அது மட்டுமா நடுவர் அவர்களே, ” நீங்கள் இருவர் அல்ல ஒருவர்” என்று கூறுவதன் பொருள் என்ன?

மனைவிக்கு ஒன்று என்றால் கணவனுக்கு வலிக்க வேண்டும், மனைவியின் துன்பத்தை கணவன் தனதாக பாவிக்க வேண்டும்…அது போலவே மனைவியும் நடந்துக் கொள்ள வேண்டும்.

நமது வீடுகளில் நடப்பது என்ன?

கணவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டையே இரெண்டு படுத்தி விடுவார். அதை தா, இதை தா, இப்படி செய் அப்படி செய் என்று.

அதே நேரம் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கண்டு கொள்வதே கிடையாது…காஃபி என்ன காஃபி சுடுதண்ணி கூட போட்டு கொடுப்பது கிடையாது. கூடவே அலம்பல் ஆரம்பித்து விடும்.

வீடு ஏன் இவ்வளவு குப்பையா கிடக்கு? துணி ஏன் மடிக்கலை? இப்படி ஆயிரத்தோரு குறைகள்.

ஏன் வீட்டை அவர் சுத்தம் செய்தால் ஆகாதா? துணி இவர் மடித்தால் மடிய மாட்டேன் என்று தர்ணா செய்யுமா?

இல்லை ஏன் என்று கேட்கிறேன்.

… தன் பிறந்தகத்தை மறந்து , ஊரை மறந்து, உற்றாரை மறந்து கணவனையும் கணவனின் குடும்பத்தையும் தனதாக்கிக் கொள்கின்ற மனைவியின் அருமை பெருமை உணர்ந்து அவளை பாராட்ட வேண்டாமா?.

புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய பழக்க வழக்கங்கள் என தன்னை தானே மெனக்கெட்டு மாற்றிக் கொண்டு கணவன் குடும்பத்தாரோடு அன்பு பாராட்ட விழைகிறாள் மனைவி.

ஆனால், கணவன் என்ன எதிர்பார்க்கிறான்…என் பெற்றோரை அவள் அன்பாய் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அவள் பெற்றோரை சந்திக்க, அடிக்கடி மனைவியை அழைத்துச் செல்ல உறவு பாராட்ட தேவையில்லை.

இவர் மனைவி கணவன் குடும்பத்தோடு இணக்கமாய் பழக வேண்டுமாம்.ஆனால், மனைவி குடும்பத்தாரோடு இவர் இணக்கமாய் பழக மாட்டாராம். அமர்ந்து பேச மாட்டாராம்…சார் எப்போதும் ரொம்ப பிஸி…மாமியார் வீட்டிற்கு போவதே கிடையாது சென்றாலும் காலில் வென்னீர் ஊற்றியது போல துடிதுடித்து மனைவியை கையோடு அழைத்து வந்து விடுவது.

ஏனென்றால் , திருமணம் முடிந்து விட்டதாம். இதுவெல்லாம் நியாயமா நடுவர் அவர்களே.

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆரம்பத்தில் இப்படி புதிய இடத்தில், புதிய உறவுகளோடு பேச , பழக உறவாட எப்படி இருக்கும் என்றால் திக்கு தெரியாத காட்டில் விட்டது போல இருக்கும் நடுவர் அவர்களே, மாமியார் என்ன பொடி வைத்து பேசுகிறார் என்பதும் புரியாது. தன்னிடம் வாய் பிடுங்கி கணவனின் உறவினர்கள் எப்படி வத்தி வைத்து போவார்கள் என்றும் புரியாது. ஒன்றும் புரியாமல் திக்கி திணறி, திகைத்து இத்தனை சிரமத்திற்கு அப்பாலும் … அவள் தன் கணவன் பால் கொண்டுள்ள அன்பால், மனைவியாக தான் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறாள்.

ஆக, முக்கியமான தனது பொறுப்புக்களை நிறைவேற்ற பணிக்கப் படுகின்ற மனைவி முதலில் செய்வது தன்னை முற்றிலுமாக அர்ப்பணிப்பது . இதனை

கணவனிடம் எதிர்பார்க்க இயலுமோ? சபையோரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

அடுத்து

திருமணத்தின் போதே மணமக்களுக்கு தங்களது எதிர்கால சந்ததியினரை குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பு வழங்கப்படுகின்றது.

குழந்தைகளே நம் எதிர்காலத் தூண்கள், அவர்களை நல்நெறியிலும் குணத்திலும் வார்த்தெடுக்கப் படும் பணி கணவனுக்கும் மனைவிக்கும் கொடுக்கப் பட்டாலும் நமது சமுதாய அமைப்பின் படி அந்த பொறுப்பு ஒரு குடும்பத்தின் மனைவி கையிலேயே கொடுக்கப் படுகின்றது.

ஆக மனைவியாக குடும்பத்தையும் கவனிக்க வேண்டும், காலை முதல் இரவு வரை சமையல் வேலைகளைப் பார்த்து வயிறு வாடாமல் அனைவரையும் காக்க வேண்டும், குழந்தைகளின் படிப்பையும் கவனிக்க வேண்டும், குடும்பத்தை கட்டிக் காக்க வேண்டும் என குடும்பத்தில் அதிகப் படியான பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது யார்?

பெண்கள் தானே? இதை மறுக்கவும் மறைக்கவும் இயலுமா? அது அந்த சூரியனின் ஒளியை மறைப்பது போன்ற சாத்தியமற்ற ஒன்றல்லவா?

அதனால் என்ன? மனைவி இத்தனை வேலைகளும் செய்ய , கணவனாகிய நான் சம்பாதிக்கிறேனே என கணவன் சொல்லலாம்.

இன்றைக்கெல்லாம் மனைவியும் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த பணிபுரிகின்றாள்.

அதனால் மட்டும் என்ன மாறி விட்டது அவள் வாழ்வில்?..அவள் வீட்டுக்கு வரும் முன்னதாக கணவன் வீட்டுக்கு வந்து விட்டால் ஒரு நாள் ஒரே ஒரு நாள் சமைத்து இருப்பார்களா? நடுவர் அவர்களே…

சமையல் எல்லாம் விடுங்கள் ஒரு டீ , காஃபி, பூஸ்ட்…ம்ம்ஹீம்…இதையெல்லாம் கணவனிடம் எதிர்பார்க்க முடியுமா?

ஆக தற்போது ஏற்கெனவே செய்துக் கொண்டிருந்த குடும்பத்தை கவனித்து வருதல், காலை முதல் இரவு வரைக்கான சமையல் வேலைகளைப் பார்த்து வயிறு வாடாமல் அனைவரையும் காத்து, குழந்தைகளின் படிப்பையும் கவனித்து, குடும்பத்தை கட்டிக் காக்கின்ற கடமையோடு பொருள் ஈட்டுகின்ற கடமையும் கூடுதலாக மனைவிக்கு சேர்ந்து விடுகின்றது.

இதிலிருந்து குடும்பத்தில் அதிகப் படியான பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது யார்? என உங்களுக்கு புரிய வந்திருக்கும்.

அடுத்ததாக வெளிநாட்டில் பணிபுரியும் கணவரானால் முற்றும் முழுதாக ஒற்றைத் தூணாக குடும்பத்தை நடத்துவதும் பெண்களே…

அடுத்து ஒரு குடும்பத்தில் ஒரு இழப்பு மனைவி இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்…சுகவாசியான ஆணுக்கு எப்போதுமே தனக்கு இளமை ஊஞ்சலாடுவதாக ஒரு எண்ணம் உண்டு. பெரும்பாலும் குழந்தைகளின் பொறுப்பை தட்டி விட்டு விட்டு மனைவியின் கல்லறையின் ஈரம் காயும் முன்பே மற்றொரு திருமணம் செய்து கொள்வார்.

முதல் திருமணத்தில் தான் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதாக கடவுள் திருமுன் செய்துக் கொண்ட உடன்படிக்கையை நொறுக்கிப் போட்டுவிட்டு இரண்டாவது திருமண உடன்படிக்கையை மேற்கொள்வார்.

குழந்தைகள் சித்தியின் கொடுமைக்கு உட்பட்டோ, எங்கோ அனாதரவாக ஹாஸ்டலிலோ விடப் படுவர்…இவ்விதம் அக்கணவர் தனது முதல் திருமண உடன்படிக்கையை மீறுகிறார்.

அதே வேளை அந்த குடும்பம் கணவனை இழக்க நேருகையில் பெண் தன் உடன்படிக்கையை மீறுவதில்லை.வாழ்வின் இறுதி மூச்சு வரைக்கும் அதை கருத்தாய் கடைப் பிடிக்கிறாள். இறைவனுக்கு உகந்த பிள்ளைகளாக கவனமாக வளர்த்தெடுக்கிறாள்.

தன்னுடைய சுய நலம் பாராமல் குடும்பத்திற்காகவே உழைத்து ஓடாகி தேய்ந்து அர்ப்பணமாகுபவள் மனைவியே…

இவ்வாறு ஒரு குடும்பத்தில் மனைவியின் பணியே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை இறைவார்த்தைகளைக் கொண்டே நாம் அறிய நேரிடலாம்.

இவ்வாறு இன்றைய குடும்பங்களில் முக்கிய பங்கு வகிப்பது மனைவியே என்று உறுதி செய்கின்றேன், வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here