நலம் வாழ வா…_சிறுகதை_ஜான்சி

0
302

கண்ணாடிப் பளப்பளப்பில் மின்னியது அந்த அலுவலகம். கையில் லேப்டாப்புடன் தன்னைக் கடந்துச் சென்றவளை முறைத்தான் அமர்.

“உங்களுக்குள்ள எல்லாம் சரியாதானே இருந்துச்சு, இப்ப என்னாச்சு?” தன்னிடம் கேட்ட சிவாவை கடித்துக் குதறி விடும் எண்ணத்துடன் பார்த்தவன்

“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும், அதுக்கெல்லாம் உனக்கு நான் பதில் சொல்ல முடியாது, இனி ஒரு தரம் என் கிட்ட அவளைப் பத்தி கேட்குறதெல்லாம் வச்சுக்காத… அப்புறம் உன் மூஞ்சு இருக்கும் ஆனா மூக்கு இருக்காது. என்ன புரியுதா?”

அதன் பின்னர் அமர் தனது சிஸ்டத்தில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருக்க இவன் பின்னால் சில உரையாடல்கள் நிகழ ஆரம்பித்தன. அந்த அலுவலகத்தில் சில நாட்கள் முன்பு சேர்ந்திருந்த லீனாவிற்கு அமர் எதற்காக இத்தனை கோபமாக சிவாவிடம் பேசினான் எனத் தோன்ற ஆரம்பிக்கவும் ஆர்வத்தில் அவனிடம், “என்ன பிரச்சனை?” எனக் கேட்க, அதற்கு சிவா பதில் சொல்ல என இவர்களுக்குள்ளான உரையாடல்தான் அது.

“அவங்க இரண்டு பேரும் அதுதான் மதிராவும் அமரும் ஒரே நேரம் தான் இங்க வேலைக்குச் சேர்ந்தாங்க, கொஞ்ச நாளில் இரண்டு பேருமே ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க. காலையில் வந்ததில் இருந்து வீட்டுக்கு போகிறது வரை ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியுறதே இல்லை. கஃபேடேரியால அரட்டை அடிச்சுட்டே சாப்பிடறது, வேலை நேரம் நடு நடுவில வந்து பேசுறதுன்னு ஒரே அலம்பல். இவங்க ஆஃபீஸோட நிறுத்திட்டாங்கன்னா அது மட்டும் இல்லை… வீக்கெண்ட்ல குடும்பத்தோட கூடச் சேர்ந்து ஊர் சுத்த அதனால இப்ப ஒரே குடும்பமாவும் ஆகிட்டாங்க.”

“ ம்ம்…”

“இப்ப அவங்களுக்குள்ள என்னப் பிரச்சனைன்னா ஒரே தகுதியும், படிப்பும் இருக்கிற இரண்டு பேரில் ஒருத்தருக்குத்தான் பதவி உயர்வு கிடைக்கணும், அது அமருக்கு கிடைக்காம மதிராவுக்கு கிடைச்சிருச்சு. இப்ப ஆன்சைட் ஆஃபரும் அவளுக்குத்தான் போயிருக்கு… அது தெரிஞ்சதில் இருந்து அமர் மதிரா கிட்ட பேசுறதில்ல. என்ன இருந்தாலும் ஆம்பள ஈகோன்னு ஒன்னு இருக்கில்ல?”

“ஒரே படிப்பு, ஒரே திறமைன்னு சொல்ற அப்புறம் ஆம்பள பொம்பளன்னு அங்க என்ன வந்துச்சு? அதென்ன என்ன இருந்தாலும் ஆம்பள ஈகோன்னு தூக்கிப் பிடிக்கிற? உன் கிட்ட வந்து கதை கேட்டேன் பாரு… ப்போடா” லீனா திட்டிவிட்டு சென்று விட்டாள். சிவா மண்டையை சொரிந்துக் கொண்டு நின்றான்.

‘இன்னிக்கு நேரம் சரியில்லையோ?’ சிவாவின் மனதில் மணியடிக்க கணிணியை எட்டிப் பார்க்க அவனது ரிப்போர்டிங்க் மேனேஜர் உடனடியாக மீட்டிங்கிற்கு வரும்படி அழைத்திருக்க அவனது நேரம் சரியில்லை என்பது நூறு சதம் நிரூபணமானது.

மதிரா அமரின் டெஸ்கில் வந்து நின்றாள், சற்று பெருத்திருந்த அவளது வயிற்றின் மேல் அமரின் கண்கள் பதிந்தன. அவளது கைகளில் இருவருக்குமான உணவும் இருக்க அதை வாங்கிக் கொண்டு இருவருக்கான இடம் பார்த்து அமர்ந்தான்.

அவள் வந்து எதிர் இருக்கையில் அமரவும் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். அவளது ப்ளாஸ்கில் தேவையான வெந்நீரை பிடித்துக் கொண்டு வந்து சூட்டை சரிபார்த்தான். ப்ளேட்டுகளுடன் வந்தவன் எடுத்து வந்த உணவை சூடாக்க நீண்ட வரிசையில் நின்று டப்பர் வேரில் இருந்த சாதம், குழம்பு, கூட்டு எல்லாவற்றையும் அவனில் சூடாக்கி வந்து தனக்கு எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தான்.

அமைதியாக இருந்த மதிரா தங்களுக்குள்ளாக ஒரு வாரமாக நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வர என புரியாமல் தவித்தாள். இப்போது தான் என்ன பேசினாலும், அவன் உண்ணாமல் எழுந்து போய் விடுவான் என அறிந்ததால் மௌனமாக உண்டுக் கொண்டு இருந்தால். அவனுக்குப் பிடித்தமான அந்த உருளைக் கிழங்குப் பொரியலை தனக்கு எடுத்துக் கொண்டு மீதத்தை அவன் பக்கம் நகர்த்தினாள்.

டப்பாவோடு அதை எடுத்து தன் தட்டில் கவிழ்த்தியவன் உண்ட விதத்தில் அவளது சமையல் இன்று பாஸ் என அவளுக்கு உறுதியானது. தாயில்லாத குடும்பம் அவனது, அவளது சமையல் எப்படி இருந்தாலும் மற்றவர்கள் சத்தமே இல்லாமல் உண்டுச் செல்ல அமர் எதையாவது கண்டுப் பிடித்து குறைச் சொல்லிக் கொண்டு இருப்பான்.

“ நீ என்னிடம் பேசாதே…” எனும் விதமாக தான் உண்டதும் அவன் கை கழுவி, அவசரமாக எல்லாவற்றையும் எடுத்துச் சென்றவன் அவளது டெஸ்கில் வைத்து விட்டு வந்து தனது இடத்தில் அமர்ந்து வேலை செய்யலானான்.

“Call me once you are free” ( நேரம் கிடைத்ததும் எனக்கு அழைப்பு விடு) என அலைபேசியில் வந்த அம்பிகாவின் தகவலை கண்டும் காணாதது போல பதிலளிக்காமல் வைத்து விட்டவனது வாயில் இருந்து, “இங்க தான் ஒருத்தி கடுப்பேத்துரா… அவளை திட்டக் கூட முடியலைன்னா இவ வேற? நான் உனக்கு அழைச்சுப் பேசினாத்தானே? ..” என சலிப்பான வார்த்தைகள் மனதில் விழுந்தன.

ஒரு சில நாட்கள் இப்படியே பட்டும் படாமல் கடந்திருக்க, மதிரா பேசச் செல்கையில் எல்லாம் அமர் பேச முற்படாமல் விலகிக் கொண்டே இருந்தான். அலுவலகத்தில் தான் இப்படியென்றால் வீட்டிலோ இன்னும் சுத்தம். அவளைக் கண்டதும் கதவை இழுத்து அடைத்துக் கொள்வான்… போடாவெனச் சொல்லி தள்ளி விட முடியாமல் இவர்களுக்குள்ளான உறவு தடுத்துக் கொண்டு இருந்தது. அது தள்ளி வைக்கும் உறவா என்ன?

“மாமா, தயவு செய்து அவன் கிட்ட பேசுங்க, புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறான்.” தன்னை விட இரண்டு வயது பெரியவனை அவன் இவன் எனப் பேசும் மருமகளை அந்த மாமனாருக்கு எப்போதும் பிடிக்காதுதான். ஈவினிங்க் வாக்குக்கு புறப்பட்டு நின்றவர் அவளிடம் தலையை அசைத்துக் கொண்டு லிப்டை நோக்கிச் சென்றார்.

“அமருக்கும் இவளுக்குமான விஷயத்தில் தலையிடாத அந்த அவரை இனி நடுவில் இழுத்து விட வேண்டியதுதான்… என முடிவுக்கு வந்தாள். “சரி…எப்ப வருவார்?” காத்திருந்தாள்.

யாரை எதிர்பார்த்தாளோ அவரைக் காணும் முன்பாக அமர் வந்து அவள் எதிரில் அமர்ந்தான்.

“கடைசில உன் திமிர காட்டிட்டீல்ல”

“ஏ அமர்”

“நீ ப்ராசஸ் ஹெட் ஆகிட்டீன்னா அது உன் வரைக்கும் தான், உன் அதிகாரம் என் கிட்டச் செல்லாது. இந்த அமருக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் செய்து பழக்கம். நேத்து வந்தவங்களுக்காக எல்லாம் என் முடிவுகளை நான் மாத்துரதா இல்ல.”

அலைபேசி அடிக்க அதை துண்டித்தான்… ‘இவ வேற’

அவனது பேச்சில் எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள். இத்தனையாய் முன்பெப்போதும் பேசிராதவன் பேசி இருக்க மதிராவின் கண்கள் கலங்கி இருந்தன.

அவன் எரிமலையின் கனலை அடக்கியபடி அவளை கூர்மையாக பார்த்துஎன் பத்தின விசயம் ஆஃபீஸ்ல பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக.

அவளோ உன் கோபம் என்னை பாதிக்காது என்கிற வகையில் தன்னை சம நிலைப் படுத்தியவளாய்ஏன் கேட்கணும்? உனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்என்றாள்.

“புல் ஷிட்” என சட்டென்று எழுந்தவன் மறுபடி வந்த அழைப்பை ஏற்றவனாக இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதேஎன்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

“போடா போடா நீ என்ன பெரிய இவனா? உன்னோட கோபம் எனக்கு தெரியாதா?” கலங்கிய கண்களை மறைத்தவாறு முகம் சுளித்தவாறு அமர்ந்திருந்த மனைவியின் அருகில் வந்து அமர்ந்தான் சிரஞ்சீவி.

“அமர் சொல்றதிலயும் நியாயம் இருக்குடா நீ என்னதான் அவனோட பிரண்டா இருந்தாலும் எல்லா விஷயத்திலயும் அவனுக்காக முடிவு எடுக்கிறது சரியில்லடா”, என்றான்.

“உங்க தம்பியாச்சே இப்படித்தான் சொல்வீங்க, உங்களை மாதிரி கண்டும் காணாம என்னால இருக்க முடியாது”, நொடித்துக் கொண்டவளின் கலங்கிய கண்களை துடைத்தான், அவன் தோளில் சாய்ந்தவள் விசும்பிக் கொண்டிருக்க…

“இப்ப நான் என்ன செய்யலைன்னு இப்படிச் சொல்லிட்டு இருக்க, அவன் காதல் தெரிஞ்சதும் முதல்ல அந்த விஷயமா அப்பா கிட்ட சொன்னது நான் தான் ஞாபகம் வச்சுக்கோ…”

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க தொந்தி இடிக்குது”, என்று சற்றே பருமனான கணவனை கிண்டலடித்ததோடு அதற்கு மாறாக இன்னும் நெருக்கமாய் கை வளைவிற்குள் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டவள் அவன் மார்பில் கவலையாய் சாய்ந்துக் கொண்டாள்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க, அமர் காதலிக்கிற அந்த பொண்ணு சொந்தத்தில கொஞ்ச நாள் முன்னே தான் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கு.”

“ம்ம்.. அன்னிக்கு சொன்னில்ல… இவங்க எப்பதான் திருந்துவாங்களோ?”

“இப்ப அமர் காதல் விஷயம் தெரிஞ்சு இவனை கவனிச்சுட்டு அலையுறாங்க, இந்த நேரம் இவன் ஆன்சைட் போயிட்டான்னா இவன் மேல இருந்து அவங்க கவனம் திரும்பிடும். அப்படியே கொஞ்ச நாள் கழிச்சு அந்த பொண்ணுகிட்ட பேசி அவளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு அமரை வரவழைச்சு அந்த பொண்ணை கல்யாணம் செய்து வச்சு உடனே அவனோட அனுப்பிட்டோம்னா அவனும் பத்திரமா இருப்பான். இப்படி நினைச்சு தான் ஆபீஸ்ல ஹெட் கிட்ட எனக்கு வந்த ஆன்சைட் வாய்ப்பை இவனுக்கு கொடுக்க சொல்லி பேசிட்டு வந்தா நான் இவனை தூரமா அனுப்பி வச்சு இவன் காதலையே பிரிக்க போறதா நினைச்சுட்டான் போலிருக்கு…” மேலும் பேச முடியாமல் கண்ணீர் சிந்தியவளை தன் பக்கம் இழுத்து தலையை ஆட்டினான் அமர் என்னும் அந்த நெடியவன்.

“அழுகுணி பொண்ணு வேணான்னு சொன்னேன் நீ கேட்டியா அண்ணா” என சிரஞ்சீவியை கிண்டலடித்தவன்.

“இப்படி ப்ளான் பண்ணிட்டிருக்கன்னு சொல்லிட்டு செஞ்சா என்ன? இப்பதான் அம்பிகா சொன்னா…”

‘சொல்ல வந்தப்ப எல்லாம் முறைச்சுட்டே திரிஞ்சல்ல நீ, அவ போனையும் எடுக்கலை.”

“எதையும் செய்ய முன்னாடிச் சொல்லணும், செஞ்சுட்டு சொன்னா நான் என்ன கிறுக்கனா? இதில நடக்கிறது என்னன்னு புரியாம ஆஃபீஸ்ல வம்பு பேசிட்டு திரியுது ஒரு கூட்டம்.”

“அப்போ அம்பிகா சொன்னா தான் நீ நம்புவ, நான்லாம் எதுவும் செஞ்சா இவ நம்ம நல்லதுக்கு சொல்லுறான்னு உனக்கு புரியாதோ?”

அழுகையால் கண்ணொடு மூக்கும் வழிய உறிஞ்சிக் கொண்டு உக்கிரமாய் நின்றவளிடம்,

“டால்டா கம்பெனில ஸ்டாக் தீர்ந்துப் போச்சாம். உன் நம்பர் கொடுக்கட்டா மதிரா…”

“டேய்”, தன் வயிற்றை தூக்கிக் கொண்டு துரத்தியவளிடம் தானாகவே மாட்டிக் கொண்டு அடிவாங்கினான் அமர்.

“நானும் அம்பிகாவும் கல்யாணம் செஞ்சுட்டு நிம்மதியா இருப்போம்கிற வரைக்கும் நீ சொன்னது சரிதான். எங்க பிரச்சனையில் உங்களை அவங்க வீட்டில ஏதாவது செஞ்சுட்டா என்ன செய்யறது?”

பதிலில்லாமல் விழித்தவளிடம்…

“சரி நீ சொல்லுறது போல இப்ப ஆன்சைட் போறேன்… இந்த ப்ரோஜெக்டை வெற்றிகரமா முடிக்கிறேன், அதே நேரம் முடிந்த வரைக்கும் அம்பிகா வீட்டில பேசி நல்லபடியா திருமணம் செஞ்சுக்க பார்க்கிறேன். என்னால யாருக்கும் பிரச்சனை வேண்டாம்” என்றவனுக்கு “போடா போடா” என்றவள் சமையலறை நோக்கிச் செல்ல எழ,

“சும்மா உட்காரு… உனக்கு காஃபி நல்லாவே போடத் தெரியாது… நான் போட்டுட்டு வரேன்.”

“கோபத்தில என்னவெல்லாம் பேசினான் பார்த்தீங்கல்ல… திமிராம்… அதிகாரமாம்…” சிரஞ்சீவி தலை சிறந்த கணவனாய் மனைவி சொன்னதற்கெல்லாம் தலையசைத்து கேட்டுக் கொண்டு இருக்க காஃபியின் மனம் ஹாலை நிறைத்தது.

மூவரும் தத்தம் காஃபியில் இலயிக்கையில்…மதிரா

“சரி கோபத்தில அது என்ன சொன்ன?, இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதேன்னா? அப்படி எதுக்குடா நான் உன்னை எதிர்பார்த்திட்டு இருந்தேன் சொல்லு?”… காதை திருகியவளிடமிருந்து எழுந்து விலகி நின்று,

கையால் பொறு பொறு என்று அமைதியாய் சைகை காட்டியவன்… காஃபிக் கோப்பையை அருகில் வைத்து விட்டு எழுந்து நின்ற வண்ணம்

“நான் என்ன சொல்ல வந்தேன்னா……….. உனக்கு காய்ச்சல் அடிக்கும் போதெல்லாம் முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்னு சொல்லி ப்ரிட்ஜ்ல இருந்து ஐஸ்க்ரீம் கொண்டு வரச் சொல்லுவ இன்னும்…” அவன் பேசியதை கேட்டதும் கலவரமாகி எழுந்து அருகில் சென்று அவன் தொடர்ந்து சொல்லும் முன்பாக அவனின் வாயை மதிரா அழுத்தமாய் பொத்த,

தனக்கு பின்னே முறைத்துக் கொண்டு நிற்கும் கணவனை பார்த்து அசடு வழிந்தாள் மதிரா……….சற்று நேரத்தில் அவர்கள் இல்லத்தில் சன்னமாய் வெடித்து சிதறியது பூஞ்சிரிப்பு.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here