நானும்/எனக்கும்_நெடுங்கதை_ஜான்சி

0
332

இடம் இந்திய நாட்டின் ஏதோ ஒரு நகரம், அவள் ஒரு நிமிர்வான பெண் என ஒற்றை வரியில் சொல்லிச் செல்லலாம் தான் ஆனால், அப்படிச் சொன்னால் அது செய்தியல்லவா?

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதோ அவளது கதையை. அவள் சந்திரா அவளது தோற்றத்தை வரையறுக்க வேண்டுமானால் சராசரி உயரம், நிறம் கருப்பு நிறம், உடை அணியும் விதத்தில், நிமிர்வில், நேர்மையில் அழகு எனும் வரையறைக்குள் வருகின்ற பெண்ணவள். செல்வாக்கு கொண்ட வீட்டின் மூன்று அண்ணன்களுக்கும் ஒரு தம்பிக்கும் நடுவில் பிறந்து வளர்ந்தவள். வறுமை என்றால் என்ன? என்பதையே பார்த்தறியாதவள்.

அவள் குடும்பத்தினர் அவளுக்காக பார்த்துப் பார்த்து தேடிக் கண்டு பிடித்த மற்றொரு செல்வாக்கான குடும்பத்தின் மருமகளாகி அங்கும் வளமையாக வலம் வந்தாள்.

கணவனுக்கு நல்ல வேலை, அந்த அன்பான தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று. குடும்பத்தை கவனிப்பதிலும் மகளை கல்வியும், கலைகளுமாக வளர்ப்பதிலும் சந்திராவின் நேரம் செலவழிந்தது. மகள் எட்டு வயதாக இருக்கையில் கணவனது எதிர்பாராத மரணம் அவர்களை அதிரச் செய்தது.

சந்திராவின் கணவன் குடும்பமோ மகனது சொத்தின் பங்கைக் கொடுத்து தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டிருந்தனர்.அவள் தனது மகளோடு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். அவளது குடும்பத்தினர் சந்திராவிற்கும் அவள் மகள் மோனிஷாவிற்க்கும் தங்கள் வீட்டின் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்து ஆதரித்து தாங்கிக் கொண்டனர்.

கணவன் இல்லாத வெற்றிடம் வெற்றிடம்தான் என்றாலும், பார்த்துப் பார்த்து செலவழிக்கும் அளவிற்கு எல்லாம் சந்திராவிற்கு பணத்திற்கு பஞ்சமில்லை. பெண்களை பொறுத்தவரையில் பெற்றோரின் வீடு திருமணத்திற்கு முன்பு வேறாகவும் அதன் பின்னர் வேறாகவும் இருக்கும் என்பதை தெளிவுற அறிந்திருந்தாள்.எனவே, பெற்றோர்களுடன் தான் தங்கி இருக்கின்றோம் என்றாலும் அவர்களிடம் இலவசமாக எதையும் பெற அவள் விரும்பவில்லை.

தனது பணத்தில் வீட்டிற்கு தேவையான மாதாந்திர பொருட்களை நிரப்பி விடுவாள், மற்றும் தங்களது செலவினங்களையும் தானாகவே பார்த்துக் கொள்வாள்.

சந்திரா தனது பெற்றோர் வீட்டில் நிலையாக வந்து இருந்ததில் ஒரு சில சங்கடங்களும், அசௌகரியங்களும் ஏற்பட்டனதான்.ஆனால், அதைக் கண்டுக் கொண்டால் எப்படி முடியும்? பிறன் வீட்டுப் பெண்கள் என்றாலே போகப் பொருள்தான் என எண்ணும் ஆண்கள் வாழும் சமூகத்தில் பின்னிருபதுகளில் இருக்கும் அவளும், அவள் மகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் இங்கே தங்கள் வீட்டில் இருக்கும் அசௌகரியங்களை பொறுத்துத்தானே ஆக வேண்டும்?

உடலும் மனதும் நலிந்து போன அம்மாவின் கரங்களில் இருந்த அதிகாரங்கள் எப்போதோ அண்ணிகள் கைகளுக்கு மாறி இருந்தன. தனது முதுமையில் எந்த பிரச்சனைக்கும் இடம் கொடாமல் அப்பாவும் கூட தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பார். இவளும் இவள் மகளும் கூட அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் அமைதியாக, பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் கடந்து விடுவர் என்பதால் வெளி உலகத்திற்கு வெகு இணக்கமான குடும்பம்தான்.

இவ்வாறு சந்திரா தன் கணவனை இழந்த முதல் ஒரு வருட காலத்தை கழித்திருந்தாள். இனி கணவனின் முகத்தை காண முடியாது எனும் நிதர்சனத்தை உணர்ந்துக் கொள்ளவும், எதிர்பாராமல் எதிர்கொள்ள நேர்ந்த அந்த பெரிய துக்கத்தை ஜீரணிக்கவுமே அவளுக்கு பல மாதங்கள் ஆகி இருந்தன. மகளுக்காக தாயும் தந்தையுமாய் தாங்கள் சேர்ந்து செய்வதாக யோசித்து வைத்திருந்த அத்தனை விஷயங்களையும் தான் தனியளாக செய்ய வேண்டும் எனும் எண்ணமே அவளை மருட்டியது.

சில நேரங்களில் பயம், சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மை, சில நேரங்களில் வெறுமை என தனது பல்வேறு உணர்வு போராட்டங்களில் அந்த ஒரு வருடம் கடந்திருந்தது. அதே நேரம் அந்த ஒரு வருட காலத்தில் அவள் கையில் இருந்த பணமும் கணிசமாக செலவழிந்திருந்தது.

யார் யாருக்கு எங்கெங்கு ஞானம் பிறக்குமோ? சந்திராவிற்கு ஞானம் பிறந்ததென்னமோ கணவனின் திதிக்கு அடுத்த அந்த நட்ட நடுராத்திரி வேளையில் தான்.

தனது கையிருப்பு இந்த வேகத்தில் செலவானால் மகளின் திருமணச் செலவிற்கு என்ன செய்வது? எனும் கவலை வந்த பின்னர் அன்றும் தொடர்ந்த சில நாட்களும் அவளால் தூங்கவே முடியவில்லை. எதிர்கால கவலைகள் வந்த பின்னர் கடந்தகால துன்பங்களை நினைக்க வழியேது? ஓ அப்படியென்றால் கவலைகளும் நலன் பயப்பன போலும்?!

அவர்களது சமூகத்தில் பெண் எத்தனை படித்திருந்தாலும், பணி புரிகின்றவளாக இருந்தாலும் திருமணத்தின் பொழுது ஐம்பது முதல் எண்பது பவுன்கள் நகை, சில இலட்சங்கள் வரதட்சணையாக கொடுக்கப் பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாயிற்றே? தனது மகளுக்கு இவை எல்லாம் ஏற்பாடு செய்ய பத்து முதல் பதினைந்து வருடங்களாவது இருக்கின்றன. எனினும், அவள் இப்போதிருந்தே தன் செலவினங்களுக்கு கையை சுருக்கி, வருமானத்தை பெருக்கினாலொழிய அது சாத்தியப்படாது என புரிந்தது.

அவளுக்கு தனது மாமனார் வீட்டினர் சொத்தை பிரித்துக் கொடுத்ததோடு தங்களை கைகழுவியதன் காரணம் இப்போதுதான் வெகுவாக புரிந்தது. பிரித்துக் கொடுத்ததால் சொத்தோடு போயிற்று. இவர்கள் அங்கேயே இருந்திருந்தால் மகளின் திருமணத்தை முடித்துக் கொடுப்பதுவும் கூட அவர்கள் பொறுப்பாகி விட்டிருக்குமல்லவா?

அது மட்டுமல்லாமல் தான் தனது சோகத்தில் மூழ்கி இருந்த சமயம் மகளை கவனிக்காமல் விட்டு விட்டோமோ? எனும் மனதின் குற்றம் சுட்டும் எண்ணங்களும் எழுந்தன. ஒன்பது வயதில் குழந்தை இத்தனை அமைதியாக இருக்குமா? தகப்பனில்லை, தான் வளர்ந்த வீடில்லை, உறவினர் இல்லை, சோகத்தில் உழலும் தாய் குழந்தை என்னச் செய்யும்?

ஞானம் பிறந்ததும், தன் நிலைமை புரிந்ததும் சந்திரா மாறினாள். மகளுக்காக சிரித்தாள், மகளுக்காக உற்சாகமாக இருந்தாள். மாதத்திற்கு ஒருமுறையேனும் மகளுடன் வெளியே சுற்றி வந்தாள்.

அறிந்தவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்ததில் அவளுக்கு வேலை கிடைத்தது. தனது வீட்டிலும் பேசி, மகளுக்கும் புரிய வைத்து, எங்கோ கவனிக்கப் படாமல் வைத்திருந்த தனது படிப்பு சான்றிதழ் கொண்டு அந்த தனியார் அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில் பணிபுரிய ஆரம்பித்தாள்.

வீட்டினருக்கு அவள் வேலைக்கு செல்வதால் தங்களது கௌரவம் குறைந்து விடக் கூடாதெனும் ஒரு உணர்வு உண்டு. எனவே,

“நான் தான் தங்கையின் செலவினங்களை, தங்கை மகளின் செலவினங்களை பார்த்துக் கொள்கின்றேன்” என வாய் கூசாமல் பொய் சொல்லும் அண்ணன்களையும்,

“அவ பாட்டுக்கு வீட்டில இருந்து சாப்பிடலாம். வேலைக்கு போக தேவை என்ன இருக்கு? ஆனால் அவளும் வெட்டு வெட்டுன்னு வீட்டில இருந்து என்ன செய்வா? நேரம் போகலைன்னு வேலைக்கு போயிட்டு வரா. அப்படியாவது மனசு ஆறினால் சரிதான்” என பொய்யாகப் புளுகும் அம்மாவையும் கண்டுக்கொள்ளாமல் கடக்கப் பழகினாள்.

அவளது இயல்பிற்கு வெறுமனே எதிலும் கலந்துக் கொள்ளாமல் இருப்பதெல்லாம் அவளுக்கு சரிவராது.பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே எல்லா போட்டிகளிலும் கலந்துக் கொள்ளும் உற்சாகமான குணமுடையவள். இப்போது மகளை ஊக்குவிக்கும் பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாய் தனது இயல்பிற்கு மாறினாள். மகளுக்காக முயன்றதில் காலம் அவள் காயத்தை ஆற்ற அவள் அனுமதித்தாள்.

வீட்டிலேயே இருந்திருந்தால் என்னவாக உருமாறி இருப்பாளோ என்னமோ ஆனால், வெளி உலகம் அவளை இரும்பாக்கி இருந்தது. இப்போது மகள் பத்தாவது வகுப்பில் இருக்க, தனது ஈடுபாட்டில், முயற்சியில் இன்னும் நல்ல உயர்வான வேலை, பிறர் மதிக்கும் படியான சம்பளம் என்று மாறி இருந்தது.

தந்தையுமானவளாக மாறி மகளை எல்லா விதத்திலும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டு இருந்தாள்.

மகள் வளர, வளர தனது பெற்றோரின் வீட்டில் அத்தனை இயல்பாக இருக்க முடியவில்லை என உணர்ந்ததும் தங்களுக்கென்று வீடு ஒன்று வேண்டும் என அவள் எண்ணிய போது கணவன் சொத்தில் கிடைத்த அந்த பழைய வீட்டை மராமத்து செய்து குடியேறினாள். அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் என்பதாலும் இரவு துணைக்கு படுக்க அன்னை வந்து விடுவதாலும் அவர்களுக்கு அங்கே பயம் எதுவுமில்லை.

இப்போது வருடங்கள் கடந்திருந்தன முதலில் தந்தையின் இழப்பு நேர்ந்திருந்தது. மகளின் திருமணத்தை முடித்த சில நாட்களில் தாயை இழந்திருந்தாள் மகளுக்கு திருமணமாகி ஓரிரு வருடங்கள் ஆகி இருந்தன.

மகள் வெளிநாட்டில் கணவனோடு இருக்க, சந்திரா மனதிலோ இன்னும் கருவுற்றிருக்காத மகளின் பிரசவத்திற்காக ஏற்பாடுகள் குறித்த சிந்தனைகள் தான். இப்படி நம்மிடையே எத்தனை எத்தனை சந்திராக்களோ? இவள் புதிதானவள் அல்ல. இப்போது அவளின் இந்த நெடிய வாழ்க்கை பயணத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை பார்க்கலாம்.

சம்பவம் 1:

ஞாயிறன்று அந்த பள்ளிக்கு ஏழு வயது மோனிஷாவுடன் தாயும் தந்தையும் வந்து இருந்தனர்.

“நல்லா பேசிட்டு வா சந்திரா, நாங்க வெளியே காத்திட்டு இருக்கிறோம்” புன்னகைத்தான் சந்திராவின் கணவன்.

“ஆல் தி பெஸ்ட் அம்மா” முத்தமிட்டு வழியனுப்பினாள் மகள்.

இரண்டு மணி நேரங்களில் வெளியே வந்தவள் அரட்டை அடித்துக் கொண்டே வந்தாள்.

“மோனி உங்கம்மாவுக்கு பேச விட்டா மணிக்கணக்கா பேசிட்டே இருப்பாளே சன் டிவி விசுவின் அரட்டை அரங்கத்தில் பேச வாய்ப்பு கிடைச்சிருக்குமா?”

“பார்த்தா அப்படி தெரியலையே டேடி” மகள் நாடியை வருடிக் கொண்டு யோசிக்கவும் அவன் சிரித்தான்.

“ஏங்க, இது என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்” சில ஆண்களையும், பெண்களையும் அறிமுகப்படுத்தினாள்.

வணக்கங்கள் பரிமாறப்பட்டன, அவர்கள் அவளின் கணவனிடமும், மகளிடமும் பேசினர்.

“அப்பப்ப நான் மார்க்கெட்ல எல்லாம் இவங்களை பார்த்து பேசுவேன். இன்னிக்கு தான் உங்க கூட அறிமுகப் படுத்த கிடைச்சது.”

தனக்கு பள்ளிச் செல்லும் மகள் இருப்பதை மறந்து, மனைவி தன் பள்ளி காலத்திற்கே சென்று விட்டதான் நினைவில் மலர்ச்சியாய் நிற்பதைக் கண்டு கணவனும் அவர்களோடு மகிழ்ச்சியாய் பேசிக் கொண்டு இருந்தான்.

அரை மணி நேரங்கள் கடந்த அரட்டைக்கு பின்னர் தங்கள் காரில் ஏறி அமரவும், முன் சீட்டில் தகப்பனோடு மகள் அமர்ந்துக் கொள்ள பின் சீட்டில் சந்திரா இருந்தாள்.

“அம்மா நீங்க செலக்ட் ஆகிட்டீங்களா?”

“இல்லைடா” பதில் வரவும், தகப்பனும் மகளும் சந்திராவிற்கு தெரியாமல் கண்களை சிமிட்டி அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

சம்பவங்களின் தொகுப்புகள் 2:

சந்திராவின் கணவனது அகால மரணத்தை ஒட்டி அவளது பள்ளி நண்பர்கள் வந்திருந்தனர். ஆறுதல் சொல்லவும், சில நட்புக்கள் அவ்வப்போது அழைத்து பேசவும் இருந்தனர்.

ஏறத்தாழ பைத்தியம் போல இருந்த நிலையில் அவ்வப்போது தனது மனக்குமுறல்களை நெருக்கமான நட்புக்களிடம் அவள் பகிர்ந்துக் கொண்டாள். சில நட்புக்கள் அவ்வப்போது செய்திகள் அனுப்புவதும், அழைப்பதுவுமாக அவளோடு நட்பில் இறுகினர்.

வேற்று ஊரில் இருக்கும் நட்புகளும் கூட தங்களது உறவினர்களை சந்திக்க வரும்போது இவளை சந்திக்க வருவதை வழக்கமாக்கி இருந்தனர். வயது முதிர, முதிர தனது நட்பையும் குடும்பமாக எண்ண ஆரம்பித்த நிலையில் நட்பில் ஆண் பெண் பேதம் பார்க்கும் நிலை அவளிடம் இல்லை. உறவினர்களிடம் பரிமாற இயலாத தனது துன்பங்களை நட்பிடம் தானே பரிமாறிக் கொள்ள முடிகின்றது?

அமைதியான அவளது வாழ்க்கை போர்க்களமாக மாறி இருக்க, தான் முதலில் சொற்ப சம்பளத்திற்கு வேலை சென்றது முதலாக, தற்போது நல்லதொரு வேலையில் இருக்கும் வரையிலான நீண்ட நெடிய போராட்டத்தில் அவளது பள்ளி நட்புக்களுடனான அவளது உரையாடல்கள்தான் பாலைவன நீரூற்றாக இருந்தது. அவை அவளுக்கு மகிழ்ச்சியை தந்து, புன்னகை வரவழைப்பனவாகவே இருந்தன.

தனிமையின் வெளிப்பாடுகளான உணர்வுகளை மனதிற்கு நெருக்கமான நட்புக்களுடன் பகிர்ந்துக் கொண்டது அவள் மனதை இலகுவாக்கியது. ஆம், நட்புக்கள் வாழ்வில் இன்றியமையாதவர்கள்.

அவளது நட்புக்களுக்கு அவளையும், அவள் வாழ்வில் நிகழ்வனவைகளும், அவளுக்கு அவள் நட்புக்களைக் குறித்தும் மிக நன்றாகவே தெரிந்திருந்தன.

சம்பவங்களின் தொகுப்புகள் 3:

சந்திரா மகளுடன் தனியே வீட்டிற்கு குடியேறி வந்திருந்தாலும் கூட உடன் பிறந்தோருடன் அவளுக்கு சுமூகமான உறவு இருந்தது. யாரையும் பகைக்காமல், வெறுக்காமல் இன்முகத்தோடு கடந்துச் செல்வது அவள் இயல்பாக இருந்தது. மோனிஷா இப்போது கல்லூரி செல்ல ஆரம்பித்து இருந்தாள்.

மோனிஷாவிற்கு பள்ளி வரையிலும் தாயின் துணை அதிகமாக தேவையாக இருந்திருக்க, இப்போது தனது வேலைகளை தானே பார்த்துக் கொள்வதால் சந்திராவிற்கு தனது அலுவலக வேலை, சமையல் வேலை, தாய் தந்தையை பார்த்துக் கொள்வது தவிர அதிகமான வேலைகள் இல்லை.

அப்போது அவள் முகநூல் மற்றும் வாட்சப் வந்து சில வருடங்களாகி இருந்தன. சமூக ஊடகங்கள் சந்திராவிற்கு அவளது தனிமையான அல்லது தனியளான வாழ்வில் ஆசுவாசம் அளிப்பனவாக இருந்தன.

நன்றாக தெரிந்த நட்பு அடிக்கடி அழைக்கும் நட்பான குமரேஷின் அழைப்பு அன்றும் வரவே என்னவென்று விசாரித்தாள். தங்களது பள்ளி நண்பர்கள் அனைவரையும் இணைக்கும் விதமாக வாட்சப் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் அவளையும் அதில் இணைக்கப் போவதாகவும் சொல்லவும், அனைத்து பள்ளி நண்பர்களையும் மறுபடி சந்தித்து அளவளாவும் ஆசையில் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முதல் வாரத்தில் வாட்சப் குழுவில் அனைவரும் பேசியே தீர்த்தார்கள். மோனிஷாவே தாயிடம் சலிக்கும் அளவிற்கு சந்திராவின் சாட்டிங்க் இருந்தது. கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பான நட்புக்கள் கூடி இருக்க, பேசுவதற்கு செய்திகளா இல்லை. மகிழ்ச்சி, மகிழ்ச்சி மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

நண்பர்கள் அனைவரும் மாதம் ஒரு நாள் சந்திக்கவும், பிறந்த நாள் கொண்டாடுவதும், அளவளாவவுமாக இருந்தனர். நண்பர்களோடு இருக்கும் தருணங்களில் சந்திரா அதிகம் புன்னகைக்க பழகி இருந்தாள்.

அவள் வீட்டிற்கு அவளது நட்புக்கள் வந்துச் செல்வதும் கூட வழமையாகி இருந்தன. சந்திராவின் அப்பா தவறிய பின்னர், அவளின் வீட்டிற்கே தாய் வந்து விட்டிருந்தார். மகள் வேலைக்குச் சென்று திரும்ப வரும் வரை தங்கள் பதின் வயது பேத்தி தனியாக இருக்க நேரிடும் என்பதுவும் கூட அதன் காரணமாகும்.

அவருக்கு எப்போதுமே இரண்டாம் திருமணத்திற்கு மறுத்து விட்டிருந்த மகளைக் குறித்து கவலைகள் உண்டு. தான் இன்னும் எத்தனை காலம் துணை இருப்போமோ? பேத்திக்கு திருமணம் ஆன பின்னர் மகளின் நிலை என்னவாக இருக்கும் என கவலையுடன் சிந்திப்பதுண்டு.

தனது வயது முதிர்ந்து, உடலும் நலிந்துக் கொண்டே வர, தனது மகன்களிடமும், மருமகள்களிடமும் சந்திராவின் தோழர்கள் தோழிகள் யார் வந்தாலும் அவர்களிடம் அவர்,

“நீங்களும் கூட அவளின் உடன் பிறந்தவர்கள் போலத்தான் எனச் சொல்லி என் மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என அடிக்கடி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

சந்திராவை இரண்டாம் திருணத்திற்கு கேட்டவர்கள் எல்லாரும் மோனிஷாவை விட்டு விட்டு வரச் சொல்லி இருக்க, சந்திரா திட்டமாக மறுத்திருந்தாள். இப்போதைய சூழலில் யாரையும் நம்ப முடியாத நிலை இருக்க, முன்பின் தெரியாத யாரையோ இரண்டாம் கணவராக தனது வாழ்க்கையில் கொண்டு மகளின் பாதுகாப்பிற்கு பங்கமாகி விடுமோவெனும் பயம் அவளில் உண்டு.

அது போக தங்களது எதிர்காலமே மிரட்சியாக இருக்க, அவளுக்கு இரண்டாம் திருமணம் அதன் மூலமாக புதியதாக பிரச்சனைகள் என எதையும் எதிர்கொள்வதில் விருப்பமில்லை.

சம்பவங்களின் தொகுப்புகள் 4:

தனது தகப்பனின் செல்லப் பெண்ணாகவும், கணவனின் செல்ல மனைவியாகவும் இருந்தவரைக்கும் பணத்தை தண்ணீராக செலவழித்து பழகிய சந்திரா. ஒற்றை பெற்றோராக மாறிய தருணம் தொட்டு சிக்கனம் சிக்கனமே.

தாய்க்கு சிரமம் கொடுக்காத வகையில் மோனிஷாவும் தங்கள் நிலை அறிந்து நடந்துக் கொள்ளும் நல்ல மகள்தான். விலை குறைந்த அதே நேரம் நன்கு பகட்டாக தோற்றமளிக்கும் உடைகள் கிடைக்குமிடம் அவளுக்குத் தெரியும்.

வெளி உலகினர் இவர்களுக்கு என்ன குறை? என எண்ணும் விதமாகத்தான் அம்மா மற்றும் கல்லூரிச் செல்லும் மகளின் உடை முதல் தோற்றம் வரை அமைந்து இருக்கும்.

சந்திரா இதுவரையிலும் தன் மகளுக்கு நாற்பது பவுன் நகைகளை சேர்த்திருந்தாள். தேவைப்பட்டால் மீதி நகைகளுக்கு தன்னுடைய நகைகளை பாலிஷ் செய்யக் கொடுத்து சேர்த்து போட்டு விட வேண்டும் எனும் கணக்கீடுகள் அவள் மனமெங்கிலும் இருந்தன.அத்தனையும் அவளது சிக்கனத்தினாலேயே சாத்தியமாகி இருந்தன.

அந்த மெயின் பஜாரில் விலை குறைந்த வெங்காயங்களை இரண்டு கிலோக்கள் வாங்கிக் கொண்டாள். பழங்களும், காய்களுமாக அவளது பைகள் கனத்திருந்தன.

பெரிய கப்கள் விலைக்கு வைக்கப் பட்டிருக்க, ஒரு கப் நூறு ரூபாய்களுக்கு விற்கப்படும் வகை கப்கள் எண்ணிக்கையில் ஆறு இருந்தன. அவைகள் அனைத்தும் மொத்த விலை ரூ.150 ரூபாய்களுக்கு கிடைப்பதாக இருக்க… ‘அட அழகான கப்கள், இவை மோனிஷாவிற்கு பிடிக்குமே’ என எண்ணியவைகளாக வாங்கிக் கொண்டாள். வீட்டிற்கு வந்தவள் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தாள்.

“அம்மா ஒரு கப் முப்பது ரூபா தான் விலை வருது. எவ்வளவு விலை குறைவு பாருங்க.” சந்திரா தாயிடம் கூற,

மோனிஷாவோ தாயிடம் “அம்மா எல்லா கப்லயும் ஐ லவ் யூ எழுதி இருக்கம்மா” எனச் சொல்லிச் சிரித்தாள்.

“ஆமாம், காஃபி போடுற அம்மா லவ்ஸ் காஃபி குடிக்கிற மோனி பாப்பா” சந்திரா சொல்ல மகள் தாயை கட்டிக் கொண்டு மறுபடியும் சிரித்தாள்.

ஆறு கப்களில் மூன்று மூன்று பெண்களுக்கும் எடுத்து வெளியே வைக்கப் பட்டிருக்க, மீதி மூன்றும் ப்ளாஸ்டிக் டப்பா ஒன்றில் தாள்களால் பொதிந்து பத்திரப் படுத்தி வைக்கப் பட்டன.

“இன்னிக்கு காலேஜ்ல என் பிரண்ட்ஸ் உங்களை சந்தூர் மம்மின்னு சொன்னாங்க.”

“ஏனாம்?”

“நீங்க பார்க்குறதுக்கு இளமையாக, எனக்கு அக்கா போல இருக்கிறீங்களாம்.”

“ஓ” சந்திரா புன்னகைத்தாள்.

“என்னம்மா வெங்காயம் நிறைய வெட்டுறீங்க?”

“இன்னிக்கு பிரியாணிடா”

“வாவ், அம்மா நானும் வெட்டுறேன், என்ன எல்லாம் செய்யணும் என்றுச் சொல்லுங்க. செஞ்சு தரேன்.”

“மத்த நேரம் ஒரு உதவி செய்யறதில்லை. பிரியாணின்னு சொன்னா போதுமே… விழுந்து விழுந்து வேலை செய்வா உன் மக” சந்திராவின் தாய் சொல்லவும்,

“படிக்கிற புள்ளமா இப்ப படிப்புதான் முக்கியம்” சந்திரா பதில் கொடுத்தாள்.

“பாட்டி… ஷ் ஷ் போட்டுக் கொடுக்காதீங்க பாட்டி”

பாட்டியும் பேத்தியும் காரசாரமாக பேசிக் கொண்டு இருக்க பிரியாணி வெந்துக் கொண்டு இருந்தது.

சம்பவங்களின் தொகுப்புகள் 5:

பள்ளி நட்புகள் ஜோராக ஆரம்பித்து இருந்தாலும், நாளாக நாளாக அந்த சுவாரஸ்யங்களும் குறைந்து இப்போதெல்லாம் வாட்சப்பில் ஒரு சிலர் மட்டுமே உரையாடும் நிலை. தினம் தோறும் எதை விவாதிப்பதாம்? அதுவும் இப்போது ஒருவர் மற்றவரின் குணநலன்களை அறிந்து இருந்தனரே. எல்லாருக்கும் எல்லாருடனும் ஒத்துப் போகும் நிலை இல்லை.

சந்திராவிற்கும் ஒரு சிலருடன் தான் வழக்கமான உரையாடல்கள் நிகழ்ந்து வந்தன.

அந்தக் குழுவில் திருமணமாகாத சிலர் இருந்தனர். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இரவானால் போதை போட்ட பின்னர் வாட்சப் குழுவில் வந்து எல்லாரிடமும் வம்பிழுக்கும் ஓரிருவர் மற்றவர்களை வம்பிழுக்கும் பணியை செவ்வெனே செய்து வந்தனர்.

காரணம் என்ன? என புரியாவிட்டாலும் “குழுவில் இப்படி பேசக்கூடாது. வயது நாற்பதை கடந்து விட்டோம், இன்னும் முதிர்ச்சியாக பேச பயிலவில்லையா?” என கண்டிப்பது சந்திரா மற்றும் சகதோழிகளின் வழக்கம்.

வம்பிழுக்கின்றவர்கள் போதையில் அத்தனையையும் செய்கின்றனர். அவர்களிடம் பேசி திருத்துவதும் தலையை எங்காவது கொண்டுச் சென்று முட்டிக் கொள்வதும் ஒன்றுதான் என அவளுக்கு புரியவில்லை.

காலை நேரம் வாட்சப் மெசேஜ் டோன் கேட்கவும் எட்டிப் பார்த்தாள்.

“ஹாப்பி ஃபாதர்ஸ் டே” என வாழ்த்திக் கொண்டிருந்தனர்.பலரின் வாட்சப் டிபி (display picture)ல் தத்தம் அப்பாக்களுடனான புகைப்படங்கள் மாறி இருந்தன.

தகப்பனில்லாத மகள் முன்பு இவள் எப்போதுமே இத்தகைய நாட்களை பெரிது படுத்துவதில்லை. இப்போதோ இருவருக்குமே இல்லை என்றான பின்னர் கண்டுக் கொள்ளாமல் நகர்ந்தாள்.

மதியம் மகளிடமிருந்து ஏதோ தகவல் வருகையில் வாட்சப் டிபி பார்க்க கண் கலங்கிப் போயிற்று. “ஹாப்பி ஃபாதர்ஸ் டே எனச் சொல்லி தான் தகப்பனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றில் தாயுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்துடன் கொலாஜ் செய்திருந்தாள். அதாவது தாயை தகப்பனாக சித்தரித்திருந்தாள்.மனமோ வேறென்ன வேணும்? என தளும்பிக் கொண்டு இருந்தது.

இரவு நேரம் சப்பாத்தியும், காய்கறிக் கூட்டுமாய் அவ்வீட்டின் மூன்று தலைமுறை பெண்களும் உண்டு எழும்பினர்.

“நான் கழுவிடறேன்மா” மகள் தட்டுக்களை எடுத்துச் சென்று கழுவ ஆரம்பித்தாள்.

தாய்க்கு மாத்திரைகளை எடுத்துக் கொடுத்த சந்திரா தனது குறுக்குவலிக்கான மாத்திரையையும் போட்டுக் கொண்டாள்.

மாலையில் இருந்து எட்டிப் பார்க்காத தங்களது வாட்சப் குழுவை எட்டிப் பார்த்தாள். குடும்ப வாட்சப் க்ரூப்கள் தகவல் தெரிவிக்க மட்டும் என மாறி இருக்க அங்கு எப்போதுமே காற்று வீசாத மௌனங்கள் தான். பள்ளிக் குழுவில் தான் நல்லதாகவோ, கெட்டதாகவோ ஏதாவது உரையாடல் நிகழும்.

ஹாப்பி பாதர்ஸ் டே எனச் சொல்லி குமரேஷ் பகிர்ந்திருந்த செய்தியை தான் சிலர் கிண்டலடித்து இருந்தனர்.

“உனக்கு கல்யாணமே ஆகலையே? அப்புறம் எப்படி ஃபாதர்ஸ் டே எல்லாம் நீ கொண்டாடுற?” குதர்க்கமாக ஒருவன் கேட்டிருந்தான்.

குமரேஷ் அந்த குழுவில் மிகவும் அமைதியானவன். சந்திராவிற்கும் மிக நெருங்கியதொரு நட்பு. வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கின்றவன் என்கிற வகையில் தனது சகோதரங்களுக்கு அடுத்தபடியான ஒரு சகோதரம். மனம் விட்டு அத்தனையும் பேசக் கூடியவன். சிறுவயதில் அவனுக்கு ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டிய நிகழ்வெல்லாம் இன்னும் சந்திரா மறக்கவில்லையே?

“ஏன் இப்படில்லாம் பேசறீங்க? திருமணம் ஆகுறதுதான் பெரிய தகுதியா? அவரவர் வாழ்க்கை எப்படியும் இருக்கலாம். இனி யாரும் இந்த க்ரூப்பில் மத்தவங்க தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து இப்படி பேசக் கூடாது.” கண்டிப்பாய் சந்திரா பதிவிட, மற்றவர்களும் இவளுக்கு ஆதரவாக பேச கிண்டலடித்தவர்கள் அமைதியாகினர்.

குழுவில் தவறான எது நிகழ்ந்தாலும் சந்திரா அதை கண்டிப்பாள் எனினும் கூட, அனைவர் மனதிலும் குமரேஷிற்கு எதிராக பேசினால் சந்திராவிற்கு பிடிக்காது என்பதான பிம்பம் எழுப்பப் பட்டது இவளுக்கு தெரியாமல் போயிற்று.

சில மாதங்கள் கடந்திருந்தன, ஏதேச்சையாக தங்களது பள்ளி நண்பி ஒருவளின் அலைபேசி அழைப்பு வரவும் எடுத்து பேசினாள். அவள் சமீபத்தில் தான் அவர்களது வாட்சப் குழுவில் இணைந்து இருந்தாள். வெகுபல வருடங்களுக்கு பின்னர் பேச கிடைத்ததும் இருவரும் மனம் விட்டு பேசி இருந்தனர்.

வழக்கமான பேச்சுக்களில் ஒரு வார காலம் நீண்டிருக்க, அன்று அந்த தோழி அவளிடம்,

“நீயும், குமரேஷீம் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படி செய்தால் பள்ளி நண்பர்கள் நாங்கள் எல்லோரும் தவறாக எண்ணிக் கொள்வோம் என தயங்குகிறீர்களா?” எனக் கேட்கவும் இவளுக்கு அந்த அபத்தமான கேள்வியின் காரணம் புரியவில்லை.

“ச்சே ச்சே இதென்ன கேள்வி? அவன் என் சகோதரன் போல உறவு. இனி ஒரு போதும் இப்படி கேட்காதே” எனச் சொல்லி அழைப்பை முடித்திருந்தாள்.

அடுத்த நொடியே குமரேஷிற்கும் அழைத்து இப்படி எல்லாம் அவள் நம்மை இணைத்து கேள்வி கேட்டாள். நான் இவ்வாறு பதில் கொடுத்தேன் எனச் சொல்லி ஆதங்கப்பட்டாள். ஆணும், பெண்ணும் நட்பாக பழகக் கூடாதா? பழகினாலே தப்பர்த்தம் செய்துக் கொள்ள வேண்டுமா?

அவனின் குடும்பச் சூழ்நிலையில், அவனுக்கு திருமணம் நிகழ வாய்ப்பே இல்லை என அவன் பகிர்ந்து இருந்தானே? ஒருவர் ஒருவரின் துன்பங்களை, பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ளும் விதத்தில் குமரேஷிற்கும், சந்திராவிற்குமான நட்பு தொடர்ந்தது இன்னும் அழகாய், ஆழமாய்.

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நடக்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது.

நட்புக்கு ஆண் பெண் தெரியாது.

சம்பவங்களின் தொகுப்புகள் 6:

மகளின் திருமணத்தை வெகு சிறப்பாக முடித்திருந்தாள் சந்திரா. சில பல கடன்கள் இருந்தன. அதனை உழைத்து திரும்பச் செலுத்தி விடலாம் எனும் தன்னம்பிக்கையும் அவளிடம் இருந்தன.

மகளும் கணவனுடன் வெளி நாட்டிற்கு பயணப்படுவதாகத்தான் ஏற்பாடு. திருமணம் முடிந்த பின்னர் ஒரு மாதம் கழித்து, மருமகன் கடந்த வாரம் வெளிநாடு சென்றிருக்க, விசா தாமதப்பட்டதன் காரணமாக மோனிஷா இந்தியாவில் இருந்தாள்.

மாமியார் வீட்டில் இருந்தாலும், தாய் வீடு அதிக தூரமில்லை என்பதால் அம்மாவிடம் அவ்வப்போது வந்துச் செல்வாள்.

அன்றைய காலை சந்திராவிற்கு வெகு மோசமாக ஆரம்பித்து இருந்தது. காலையில் வழக்கம் போல தாயை எழுப்பச் செல்லுகையில் தான் அவளின் தாய் தனது இறுதி மூச்சை எப்போதோ விட்டிருந்தார் என்பது அவளுக்கு புரிய வந்தது.

அழுகையும் ஆற்றாமையுமாக தனது சகோதரன்களுக்கு அழைத்து விபரங்கள் கூறினாள்.உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டிருக்க, சற்று ஒதுக்குப் புறமான அந்த வீட்டில் அன்று அத்தனை கூட்டம். அனைவரும் கூடி நின்று, சந்திராவின் தாய்க்கு விடையளித்தனர்.

மோனிஷா தன் பாட்டியின் இறப்பின் ஒரு மாத காலம் தாயுடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டாள். அடுத்து மோனிஷாவின் விசாவும் தயாராகி இருந்தது. அவள் சில நாட்களில் கணவனுடன் பணிபுரியும் நாட்டிற்குச் செல்ல வேண்டும்.

மகளின் வாழ்க்கை சிறக்க வேண்டும் எனும் வேண்டுதலோடு, விமான நிலையம் சென்று மகிழ்ச்சியோடு மகளை வழியனுப்பி திரும்ப வந்த சந்திராவிற்கு தனது வீட்டின் வெறுமை முகத்தை அறைந்தது.

மாதங்கள் கழிந்திருந்தன தாயின் நினைவுகள் வரும் போது கண்ணீர் உகுப்பதுவும், மகளுடன் வீடியோ காலில் உரையாடுவதும், அலுவலக வேலைகளில் ஆழ்ந்து போவதும், மாதாந்திர வரவு செலவுகளில் கடன்களை எப்படி திரும்பச் செலுத்துவது என கணக்கிடுவதுமாக வாழ்க்கை வழக்கம் போல அவளை சுறுசுறுப்பாக வைத்து இருந்தது.

சம்பவங்களின் தொகுப்புகள் 7:

சந்திரா முன்தினம் அம்மாவின் திதி முடித்து வந்து இருந்தாள். ‘எப்படித்தான் சில வருடங்கள் கடந்துச் சென்றனவோ?’ என எண்ண எண்ண அவளுக்கு ஆச்சரியமே. பழுத்த இலைகள் மரத்தினின்று வீழ்வது போல, வாழ்வில் ஒவ்வொருவராக உதிர உதிர இன்னும் தனக்கு வாழ்க்கை என்ன வைத்திருக்கின்றதோ?

தன்னை விட்டால் மகளுக்கு யாருமில்லை. மகளுக்கும் பேறுகாலம் எல்லாம் பார்க்கும் வரையில் கடவுள் தனக்கு ஆயுள் கொடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருந்தாள்.

பார்வைக்கு நாற்பத்தி ஐந்து வயது சந்திரா இளமையாக தெரிந்தாலும் ஓடோடி உழைத்து உழைத்துக் களைத்த உடலும், தனிமையின் சோர்வும், சமீபத்தில் மெனோபாஸை நெருங்கிக் கொண்டு இருக்கும் இந்த நேரம் மாதத்திற்கு பத்து நாட்களாவது பெருக்கெடுத்து ஊற்றும் குருதிப் பெருக்கும், அவளை உடலளவிலும், மனதளவிலும் சோர்வுற வைத்து இருந்தன.

தனிமையில் ஒவ்வொன்றாக நினைத்து மனம் புழுங்கிக் கொண்டு இருந்த போது மகளின் வாட்சப் செய்திகள் அவள் நலனை விசாரித்து வர பதிலளித்துக் கொண்டு இருந்தாள்.

அதே நேரம் குமரேஷின் வாட்சப் தகவல்கள் வந்ததாக அலைபேசியில் தெரிந்தன. அவற்றிற்கு உடனே பதில் அளிக்க அவள் விரும்பவில்லை.

அவள் வீட்டிற்கு உறவினர்கள் தவிர்த்து யாரும் அதிகமாக வருவதில்லை. அவள் வர அனுமதிப்பதும் இல்லை. அக்கம் பக்கத்தினர் தவறாக கதைக் கட்டி விடக் கூடாதென்பதில் அவளுக்கு அத்தனை கவனம் இருக்கும்.

சில மாதங்கள் முன்பு குமரேஷ் அவளது பிறந்த நாளை நினைவு வைத்து அவளை அவள் வீட்டிலேயே சந்தித்து வாழ்த்துக்கள் சொல்லிச் சென்று இருந்தான்.சந்திராவும் அவனுக்கு தன் வீட்டில் இருந்த கேக்கை கொடுத்து காஃபியோடு உபசரித்து இருக்க வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தான்.

“தனக்கு ஏராளமான திருமணக் கனவுகள் உண்டு. ஆனால், ஆகவில்லையே… நான் ஒரு நல்ல ஆண். எனக்கு இந்த கெட்டப் பழக்கங்களும் இல்லை. நான் நல்லவன், திருமணமான பின்னர் மனைவியை சிறப்பாக வாழ வைக்க ஆசை உண்டு. ஆனால், இத்தனை வயதிற்கு பிறகு திருமணம் செய்து பிள்ளை எல்லாம் பெற்றுக் கொண்டால் சரிவராது/ எனக்கு ஒன்றென்றால் மனைவி மற்றும் பிள்ளைகள் என்னாவார்கள்?” என பலவாறாக பலவற்றையும் பேசிக் கொண்டு இருந்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கவலை என எண்ணிய சந்திரா அறுதலாக பேசி சமாதானப்படுத்தினாள். அதன் பின்னர் தனது வீட்டிற்கு சென்ற குமரேஷ் என்ன நினைத்தானோ? “தான்அதிகமாக பேசி இருந்தால் மன்னிக்கவும்” என இவளுக்கு தகவல் அனுப்பினான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை உன் மனதில் இருந்த கவலையை பகிர்ந்துக் கொண்டாய் அதில் தவறென்ன?” என இவளும் பதில் அனுப்பினாள்.

இப்படி சாதாரணமான பேச்சுக்கள் தான் அவர்களிடையே நிகழ்ந்து வந்தாலும் சமீபத்தில் அவனிடம் சில மாற்றங்கள். என்றாவது இருவரும் அலைபேசியில் பேசி முடித்தார்களெனில் அதன் பின்னர் அன்றைய இரவு அவன் அனுப்பும் செய்தியானது, “குட் நைட் டியர்” என இருக்கும். அடுத்த நாள், “குட் மார்னிங்க் டியர்” என்றிருக்கும்.

பல நாட்களாக அந்த டியர் சந்திராவை முள்ளாக உறுத்தியது, வெகுவாக தொந்தரவுச் செய்தது. அப்பாவி போல பேசும் அவனது இந்த வகையான பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளவா கூடாதா? என்றே அவளுக்குப் புரியவில்லை. எதையாவது கேட்கப் போய் நான் தவறாக எண்ணி சொல்லவில்லை என்பானோ? நட்பில் விரிசல் ஏன் என கவனிக்காமல் விட்டாள்.

அவளால் தன்னிடம் மிக நன்றாக பழகிய ஒருவனை சட்டென்று சந்தேகப்பட முடியவில்லை. அதே நேரம் அவனது டியர் அழைப்பிற்கு பதிலும் கொடுக்க மாட்டாள். என்னை அல்ல யாரையோ? என்பதைப் போல அதைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பாள்.

தான் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால் தனக்கு அவனது பேச்சுக்கள் பிடிக்கவில்லை என புரிய வைத்து விடலாமென அவளிடம் ஒரு எண்ணம் இருந்தது. அவள் எண்ணம் சரியானதா?

இப்படி தனது நண்பன் குறித்து சமீப காலத்தில் மனதில் சஞ்சலங்கள் இருந்தாலும் மகளிடம் பேசி முடித்த பின்னர் காலம் தாழ்த்தியே அவனது செய்திகளை படித்தாள். அவர்களுடைய பள்ளி நட்பான செல்வியின் தகப்பனார் முன் தினம் தவறி விட்டதாக அவன் குறிப்பிட்டு இருந்தான். இவர்களது பள்ளி நட்பான செல்வி அவனது வீட்டருகே இருக்கின்றவள் தான்.

சந்திராவின் வீட்டை தாண்டிச் சென்றால் தான் பஸ் வழித்தடத்தை அடைய முடியும். எனவே, வழக்கமாக தினமும் அவர்கள் இவளது வீட்டைத் தாண்டி அவர்கள் வேலைக்கு சென்று வருவர்.

முன்பு ஓரிரு முறைகள் குமரேஷோடு செல்வி மற்றும் நட்புகள் இவளை சந்திக்க வந்து சென்றதுண்டு.

குமரேஷின் தகவல் கிடைத்ததும் செல்விக்கு அழைத்து துக்கம் விசாரிக்க வேண்டும் என சந்திரா எண்ணினாலும், ஏதோ மனச் சோர்வில் சந்திரா படுத்து தூங்கி விட்டிருந்தாள்.

ஏனென்றால், கடந்த ஒரு வார காலமாக அவளுக்கு கடும் உதிரப் போக்கு ஆரம்பித்து இருந்தது. வெகு அயர்ச்சியாக இருந்தாள். நாப்கினா? அதெல்லாம் ஜீஜீபி என்பது போல இரத்தப் போக்கு தீவிரமாக இருக்க, ஒரு பெட்ஷீட்டை நான்காக கிழித்து அவள் உபயோகித்ததில் தினமும் நான்கைந்து துணிகள் ஈரமாகிக் கொண்டு இருந்தன. அதனினூடே அவள் தனது வழக்கமான வீட்டு வேலைகள் முடித்து அலுவலகமும் சென்று வர வேண்டும்.

அன்று அவளுக்கு அலுவலக விடுமுறை இருந்தது. காலை முதல் தூங்கி எழுந்ததும் சற்று உடல் நிலை பரவாயில்லை போலிருக்க, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். உள்ளாடைகள் முதலாக வழக்கமாக உபயோகிக்கும் எல்லா துணிகளும் துவைக்கப் படாமல் பாத்ரூமில், வாஷிங்க் மெஷினில் என அங்கங்கே இருந்தன.

வேறு வழியின்றி பாடாவதியான அந்த மெல்லிய நைட்டியை அணிந்திருந்தாள்.மின்விசிறி அணைத்து வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்ததில் வியர்த்துக் கொட்டி உடம்பை ஒட்டிக் கொண்டு இருந்தது அந்த காட்டன் நைட்டி.

வீட்டை சுத்தம் செய்த பின்னர் குவிந்திருக்கும் பாத்திரங்களை துலக்க வேண்டும். காலை முதல் படுத்தே கிடந்ததில், அவள் ஒரு கிளாஸை கூட கழுவி இருக்கவில்லை. தண்ணீர் குடிக்க சொம்பு ஒன்றைத் தவிர உபயோகிக்க பாத்திரம் இல்லை.

திடீரென அவள் அலைபேசி ஒலித்தது குமரேஷ் அழைத்து இருந்தான். தான் இன்னும் ஐந்து நிமிடத்தில் அவள் வீட்டிற்கு வருவதாக கூறினான். தான் எப்போதோ சில மாதங்கள் முன்பு கேட்ட பொருள் ஒன்றை வாங்கிக் கொண்டு வருகின்றானாம். அவனது பணியிடத்திற்கு அருகில் கிடைக்கும் குறிப்பிட்ட ப்ராண்ட் வீட்டு உபயோகப் பொருள் எதையாவது அவள் தனக்காக வாங்கி வரச் சொல்வதும், அவன் வாங்கி கொடுத்ததும் காசை கொடுப்பதும் அவர்களுக்குள் வாடிக்கைதான்.

ஐந்து நிமிடத்தில் வருகின்றானாமே? என்னச் செய்வதாம்? அவனுக்காக காஃபி போட பால் இருக்கின்றதா? என பார்த்தாள். பால் இருந்ததும் ஆசுவாசமானாள். நைந்த நைட்டிக்கு மேலாக துணி ஒன்றை மாராப்பாக போர்த்திக் கொண்டாள். அவன் வந்துச் சென்ற பின்னர் மீதி வேலையை தொடர வேண்டும் என எண்ணும் முன்பாக வாசலில் அவன் வந்து நின்றிருந்தான்.

வீட்டிற்கு வெளியாட்கள் வந்தால் தன்னை யாரும் தவறாக எண்ணி விடக் கூடாதெனும் முனைப்பில் கதவை திறந்து வைத்துக் கொண்டே பேசும் விதமாகத்தான் அன்றும் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பால் கொதித்தது, காஃபி கலக்க கிளாஸ் வேண்டும் என எண்ணுகையிலேயே கழுவாத கிளாஸ்கள் மனதில் வலம் வந்தன.

‘ஓ கிளாஸ்களை மறந்து விட்டேனே? இப்போது அழுக்குப் பாத்திரங்களுக்குள் கிளாஸ் தேடப் போனால் அசிங்கமாக இருக்கும்…. ம்ம்… சரி இப்படி செய்யலாம்?’ என எண்ணியவளாக அவனது இருக்கையை நகர்த்தி அமரச் சொல்லி உயரத்தில் ஏறினாள்.

சமீபத்தில் கழுவி துடைத்து வைத்திருந்த கப்கள் வைத்து இருந்த டப்பாவை எடுத்தாள். அதனுள்ளே இருந்த கப்களில் ஒன்றை எடுத்தாள். சுற்றி இருந்த தாள் கவரை அகற்றி, கப்பை கழுவி காஃபி கலக்குகையில் பவர் கட் ஆனது.

“அச்சச்சோ”, மொபைலின் டார்ச்சை உயிர்ப்பித்தவள் அவனுக்கு காஃபியை கொடுத்தாள். அவன் காஃபியை குடிக்க ஆரம்பிக்கையில் தான் அந்த கப்பில் ஐ லவ் யூ என பிரிண்ட் இருப்பது நினைவிற்கு வந்தது.தவறாக எண்ணிக் கொள்வானோ? என்றொரு சிந்தனை எழுந்தது.

“எனக்கு ஒரு வாரமாக சுகமில்லை, இன்றுதான் வேலை செய்ய ஆரம்பித்தேன். எல்லா பாத்திரமும் அழுக்கு அதனால் இந்த கப்பில் காஃபி தந்தேன்” என பேச்சோடு பேச்சாக கூறினாள்தான். அதன் பொருள் சரிவர அவனிடம் போய் சென்று இருந்திருக்குமா? அன்று அவன் விடைப்பெற்று வாசலை அடைந்த போதுதான் மின் இணைப்பு செயல்பட ஆரம்பித்தது. அது அவளுக்கான தகவலோ?

சம்பவங்களின் தொகுப்புகள் 8:

சந்திராவின் வழக்கமான அலுவலக பணி நேரம் அவளது அலைபேசி அழைத்தது. அப்போது சற்று ஆசுவாசமாக இருந்த நேரமாதலால் எடுத்துப் பார்த்தால் அவளை செல்வி அழைத்து இருந்தாள். உடனே சந்திராவிற்கு, ‘அடடே அவள் தந்தையின் இறப்பிற்கு தான் விசாரிக்கவில்லையே?’ என குற்ற உணர்வு தோன்ற எடுத்துப் பேசினாள்.

அதற்கடுத்து தொடர்ந்து சில நாட்கள் செல்வியின் அலைபேசி அழைப்புகளும், குட்மார்னிங்க், குட் நைட் செய்திகளும் சந்திராவின் தனிமையான மனதிற்கு இதமாக இருந்தன.

இத்தனை நாட்கள் இல்லாமல் செல்விக்கு தன் மேல் இப்போது ஏன் இவ்வளவு கரிசனை? என அவளுக்கு தோன்றி இருக்க வேண்டுமோ? ஆனால் அவள் அவ்வாறு யோசிக்கவில்லை.

பல நாட்களின் உரையாடலுக்குப் பின்னர் அன்று செல்வி தன்னை சந்திக்க வருவதாக சொல்லி இருக்கவும், சந்திரா அவள் வருகைக்காக காத்திருந்தாள்.

சொல்லப் போனால் செல்வி அவளை சந்திக்க வருவது முதல் முறை அல்ல.ஏனைய நட்புக்களோடு அவள் முன்பும் கூட அவளது வீட்டிற்கு வந்து இருந்தாள்.

வெகு நாளைக்குப் பின்னான இருவரின் சந்திப்பு ஆரம்பத்தில் மனதிற்கு நிறைவாக இருந்த போதும் வெகுவாக நெருடியது. செல்வி தான் சந்திரா வீட்டில் இருந்த அந்த மூன்று மணி நேர பேச்சினிலும் உடல் உறவு தவிர்த்து வேறு எதையும் பேசி இருக்கவில்லை. அது மட்டுமல்லாது இன்னும் பலவும்…

“என் கணவன் மிக ஆர்வமுள்ளவர், ஆனால் எனக்குத்தான்….” என உடலுறவு சார்ந்த பல பிரச்சனைகள் குறித்த வியாக்கியானங்கள் செய்ய, ‘ஐயோ நம் தோழிக்கு என்ன பிரச்சனையோ?’ என சந்திராவின் மனம் பரிதவித்துப் போயிருந்தது.

‘ஓ எதுவும் பிரச்சனையா? வேண்டுமானால் மருத்துவரை சந்திப்போமா? நான் உன்னுடன் துணைக்கு வேண்டுமானால் வருகிறேன்” என்றாள்.

“ஐயோ அது எதுக்கு? வயசு நாற்பது கடந்தாச்சு, இனி என்னவாம்?” அவளே நொடித்துக் கொண்டாள்.

“அப்படிச் சொல்லாதே? வயதிற்கும் இதற்கும் என்ன?”

பேச்சு தொடர்ந்துக் கொண்டிருக்க,

“நீ ஏன் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளவில்லை, உன் மகள் ஏதாவது சொல்லி விடுவாளென பயப்படுகின்றாயா?”

மகளை குற்றப் படுத்திக் கேட்டவள் மீது கோபம் வந்த அதே நேரம் முன்பொருமுறை இது போலவே வேறு விதமாக கேள்விக் கேட்ட மற்றொருத்தியின் நினைவு வந்தது.

‘ஓ, மறுபடியும் அதே போலொரு கேள்வி’ ஏனோ இம்முறை செல்வியிடம் துக்கம் விசாரிக்கச் சொல்லி தன்னை அடிக்கடி நினைவூட்டிய குமரேஷ் மீது சற்று சந்தேகம் வந்துச் சென்றது. இருந்தாலும் கூட தான் வழக்கமாக எல்லோருக்கும் பதில் சொல்வதைப் போல,

“நான் திருமணம் செய்வதற்கென்ன? என் விருப்பம் தான். யார் என்னை தடைச் சொல்லப் போகின்றார்கள்?” என்றாள்.

“ஓ அப்படி என்றால் செய்துக் கொள்ள வேண்டியதுதானே? நான் கணவனோடு இருக்கிறேன், எனக்கு ஒரு குறையும் இல்லை.”

“மகிழ்ச்சி”

“உனக்கு அந்த ஆசை எல்லாம் கிடையாதா?”

“அதெல்லாம் ஒன்றும் கிடையாது?”

“அதெப்படி?”

“ஒரு சிலருக்கு அதிகம் பசிக்கும், ஒரு சிலருக்கு குறைவாக பசிக்கும், ஒரு சிலருக்கு பசிக்கவே பசிக்காது அது போலத்தான் எனக்கு பசி இல்லை.” நறுக்கெனச் சொன்னாள்.

“சரி அதை விடு… உனக்கு திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்றால் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்?”

விட மாட்டேன் என்கிறாளே என்பது போல “பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும்” எனச் சொல்ல,

“குமரேஷீம் நல்லவன், பரந்த மனப்பான்மை கொண்டவன்தான்” ஒரு வழியாக அவளே போட்டு உடைத்து விட்டாள்.

“ஓ, முன்பு ஒருத்தியும் இதே போல குமரேஷை திருமணம் செய்யச் சொல்லி பேசினாள்.அப்போது அவளுக்குச் சொன்னதைத்தான் இப்போது உனக்கும் சொல்கிறேன். அவன் எனக்கு சகோதரன் போல, அவனுக்கு நான் ராக்கி எல்லாம் கூட கட்டி இருக்கிறேன்.”

“முன்பா? பேசியது யார்?” ஆச்சரியப்பட்ட செல்வி விபரங்களை கேட்டுக் கொண்டாள்.

“ஆனாலும் பாரேன் அவன் நல்ல மனிதன்.”

“யார் இல்லையென்று சொன்னார்கள், அதற்காககெல்லாம் மணமுடித்து விட முடியுமா?”

சுற்றி சுற்றி குமரேஷைக் குறித்தே செல்வி பேச சலிப்பானது.

“என்னைப் பொருத்தவரையில் அவன் என் நட்பு. உன்னை பார்க்கையில் உன்னுடன் பேசுகையில் என்னவாக உணர்கின்றேனோ அது போலத்தான் அவனுடனும் உணர்வேன்.அவன் என் நட்பு மட்டும் தான்.”

“ச்சே அதென்ன அப்படி சொல்லி விட்டாய். அவன் கூட என்றால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். நான் அப்படியா?” கெக்கலித்து சிரித்தவளுக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றாள் சந்திரா.

சிரித்தவள் தொடர்ந்தாள், “இப்போதெல்லாம் பெண்கள் பெண்களுடன் கூட செக்ஸ் வைத்துக் கொள்கின்றார்களாமே பெயர் கூட ஏதோ ஸ்பியனாம்.”

“அது லெஸ்பியன்” என்றாள் சந்திரா.

நீ வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? என் வாழ்க்கையை பார். வாழ்க்கையில் உடலுறவு இல்லாமல் ஏது இன்பம்?? இப்படியாக செல்வியின் விவரிப்புகள் தொடர குமரேஷ் குறித்து கூற ஆரம்பித்தாள்.

“அவன் ஒரு பேக்கு தெரியுமா? குட் மார்னிங்க், குட் நைட் மெசேஜ் மட்டுமே போட்டுக் கொண்டு இருந்தால் எந்த பெண்ணாவது மடிவாளா?” எனச் சொல்ல, “நீ என்னதான் சொல்கிறாய் சொல்லி முடி… முதலில் கேட்டுக் கொள்கிறேன்” என்பதாக சந்திரா ஊம் கொட்டிக் கொண்டு இருந்தாள்.

“நான் அவனிடம் சொல்லி விட்டேன், நீ இனி திருமணம், குழந்தை என்றெல்லாம் ஆசைப் படாதே. நீ வேண்டுமானால் யாருக்கும் ஆதரவாக துணையாக இருக்கலாம்.”

“…”

“ஆமாம், ஒரு கணவனை இழந்தவளோ, துணை இல்லாதவளோ இருந்தால் அவன் வேண்டுமானால் ஆதரவளிக்கலாம். மற்றபடி இனி நாற்பது கடந்த பின் அவன் வாழ்க்கையில் எல்லாம் கல்யாணமாவது ஒன்றாவது? என்ன நான் சொல்வது சரிதானே?” இதையே பல முறைகள் பல விதங்களாகச் சொல்லி விட்டு சென்றிருந்தாள்.

செல்வி வந்து சென்ற பின்னர் வந்த நாட்கள் சந்திராவிற்கு நரகமாக கழிந்தன. செல்வி மூன்று மணி நேரம் பேசியவற்றை உணர்ந்துக் கொள்ள அவளுக்கு மூன்று நாட்கள் பிடித்தன.

இப்படி ஒரு தாக்குதலை அவள் செல்வியிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை.வார்த்தைகளால் ஒருவரை குற்றுயிராய் ஆக்க முடியுமா? கணவன் இறந்து போய் பதினைந்து வருடங்களாய் துறவியைப் போல வாழ்க்கையை கடந்திருந்தவள் உடலும் மனமும் ஒன்றும் இரும்பால் ஆனது அல்லவே?

குமரேஷ் குறித்து சந்திராவிற்கு இருக்கும் அபிப்ராயம் மாறப் போவதில்லை. அவன் எந்த விதத்திலும் அவளுக்கு இணை ஆக முடியாது. அப்படி ஒன்று என்றும் நிகழவும் போவதில்லை.

ஆனால், தனி மனுஷியாக தான் இதுவரை எதையோ சாதித்த உணர்வில் இருந்தவளை செல்வியின் வருகையும் பேச்சும் சுக்கு நூறாக்கி விட்டிருந்தன.

அவள் சொல்ல வருவதென்ன?

உடலுறவு மிக முக்கியமானது.

அதற்காக தான் குமரேஷீடன் தொடர்பு வைத்துக் கொள்வதாமா?

அவன் எனக்கு ஆதரவு அளிப்பதா? எனக்கு கை கால்கள் நன்றாகத்தானே இருக்கின்றன? அறுபத்தி ஐந்து பவுன் நகை போட்டு மகளை கட்டிக் கொடுத்தவள் எனக்கு தன்னை பார்த்துக் கொள்ள முடியாதாமா? ஆதரவு தேவையாமா?

அப்படியே எனக்கு ஆதரவு தேவை என்றால் என் உடன் பிறந்தவர்கள் இருக்க, இவனை நான் நாடுவானேன்?

செல்வி பேசிய இத்தனைக்கும் பின்பாக தான் நட்பென நினைக்கும் அல்லது நினைத்திருந்த குமரேஷ் தான் காரணம் என இருந்தால் அவனது நட்புத் தொடர்பை வேரோடு இழுத்து அறுத்து எறிந்து விடலாம். ஆனால், ஒருவேளை அவன் செல்வியின் பேச்சிற்கு காரணமாக இல்லாவிடின்? தவறு செய்யாதவனை தண்டித்தது போலாகி விடுமோ? பெரும் குழப்பத்தில் இருந்தாள். அவளிடம் யாரைக் குறித்தும் எந்த தெளிவும் இல்லை.

சம்பவங்களின் தொகுப்புகள் 9:

அன்றைய இரவே குமரேஷிற்கு தான் கொடுக்க வேண்டிய பணம் ஏதும் இருக்கின்றதா? என தனது டைரியை பார்த்தாள். கடந்த முறை அவன் வாங்கித் தந்த பொருளுக்கான பணம் இன்னும் கொடுத்திருக்கவில்லை எனக் கண்டாள். உடனே பணத்தை அனுப்பினாள்.

“அடடே என்ன ஏன் இத்தனை அவசரம்?”

“மறந்து விடக் கூடாதல்லவா? உன் உதவிக்கு நன்றிகள்” என்று பதிலளித்ததொடு சரி அதன் பின்னர் அவள் அவனுடைய செய்திகளுக்கோ செல்வியின் செய்திகளுக்கோ பதில் அளிக்கவே இல்லை.

மனதிற்குள் தீ பற்றி எரிந்துக் கொண்டு இருந்தது.

தான் இவர்களோடு நட்பு பாராட்டி இருக்கக் கூடாதோ?

அந்த வாட்சப் குழுவில் இணைந்திருக்கக் கூடாதோ?

எல்லாரிடமும் ஒன்று போல பழகி இருக்கக் கூடாதோ?

தன்னைப் போலத்தான் பிறரும் என எண்ணி இருக்கக் கூடாதோ? விடை தெரியாத கேள்விகள் பல இருக்க, சந்திராவின் மனதிற்குள்ளாக பாதுகாப்பின்மை சூழ்ந்திருந்தது.

தனது இத்தனை வருட தனிமை வாழ்வில் முன்பு ஒருபோதும் இத்தனையாக பாதுகாப்பின்மையாக அவள் உணர்ந்ததே இல்லை எனலாம்.

தான் உற்ற தோழன் என வெகுவாக நம்பி தனது வீட்டிற்குள் எல்லாம் அனுமதித்த ஒருவன் தன் மேல் மோசமான எண்ணம் கொண்டவனாக இருந்ததாக உணரும் போது பெண்ணிற்கு எழும் பாதுகாப்பின்மை உணர்விற்கு அளவில்லை.

செல்வி சொன்னவற்றை அர்த்தப் படுத்திப் பார்க்கையில் தோன்றியவை எல்லாம் மிரட்சியே.

யாரும் அருகில் இல்லாத வகையான சற்று ஒதுக்குப் புறமான வீடு அவளது.அவள் வீட்டிற்கு யார் வந்தாலும் சென்றாலும் அவ்வளவாக பிறருக்கு தெரிய வராது.அக்கம் பக்கத்து வீட்டினர்களும் பெரும்பாலும் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருக்கின்றவர்கள் தான். குமரேஷின் வீட்டில் அவன் திருமணம் செய்வதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று என இவளுக்குத் தெரியும்.

அப்படி என்றால் அவன் நாடியது என்ன? ஒருவேளை அலுவலகத்தினின்று தனது வீடு செல்லும் நடுவில் இங்கு இவளுடன் தினம் தோறும் பழகி…  விட்டுச் செல்வதா? ச்சைக் கற்பனை செய்த பொதே நரகலை தின்ற உணர்வெழுந்தது.

நான் அவனுடன் நன்றாக பேசிப் பழகியதாலேயே இத்தனையாக யோசித்து விட்டானா? அத்தனை இளப்பமா நான்?

அந்த நேரம் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க மனம் திதிம் திதிம் என முரசுக் கொட்டியது. யாரென்று பார்த்து விட்டே கதவின் தாழ்ப்பாள்களை நீக்கினாள். பெரிய அண்ணன் வந்திருந்தான்.

“என்ன பாப்பா இந்த பகல் நேரம் கதவை இப்படி அடைச்சு வச்சிருக்க?” எத்தனை வயதானாலும் தமையனுக்கு அவள் பாப்பாதான். பெருகிய வியர்வையை துடைத்துக் கொண்டவள்,

“சும்மாதான்னா தூங்கிட்டு இருந்தேன்” பொய் சொன்னாள். அது பொய்தான் அவள் நிம்மதியாக தூங்கி சில நாட்களாகி இருந்தனவே?

அவளுக்காக வீட்டில் இருந்து எதையோ உண்ணக் கொண்டு வந்து இருந்தான். அவ்வப்போது எதையாவது கொண்டு வருவதும், பார்த்துச் செல்வதுமான அவள் உறவுகளின் அரவணைப்புகளுக்கு குறையில்லை. ஆனால், அவரவர் அவரவர் குடும்பச் சூழலில் இருக்க, இவள் அங்கு போய் இருப்பது சாத்தியப்படாது. அலுவலகத்திற்கு சென்று வர வேண்டி, புறப்பட்டு செல்லவும் இவள் இங்கு தனி வீட்டில் இருப்பது தான் சௌகர்யம்.

அண்ணனின் வருகை சந்திராவின் மனதிற்கு இதமளித்தது.அவள் முகம் பார்த்து என்ன எண்ணினானோ? இரவு அண்ணன் மகன் வந்து துணைக்கு படுத்துக் கொண்டான்.

“அத்தை அத்தை” என கல்லூரி படிக்கும் அண்ணன் மகன் பேசவும், சிரிக்கவுமாக இருக்க மனம் இலகுவானது. டிவியை போட்டுக் கொண்டு அவன் முன்னறையில் இருந்த போதும், டிவி சத்தம் அலறிய போதும், அவளால் அன்று நிம்மதியாக தூங்க முடிந்தது.

சம்பவங்களின் தொகுப்புகள் 10:

செல்வி வந்துச் சென்ற பின்னர் நான்கைந்து நாட்கள் ஆயிற்று. சந்திரா செல்வி அல்லது குமரேஷ் இருவரின் தகவல்களையும் வாசிக்கவில்லை.அவர்களுக்கு பதிலளிக்கவில்லை, அழைப்புக்களுக்கும் பதில் அளிக்கவில்லை. அவளது மனம் மட்டும் ‘எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்’ என கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தது.

அவளுக்கு யார் மீதும் பழி சுமத்த மனம் வரவே இல்லை.இத்தனை வருடங்கள் நட்பாக பழகிய பழக்கத்தில், இன்னும் கூட அவளால் யாரையும் குற்றம் சாட்ட முடியவில்லை. தனது உடல் நலக்குறைவுகளுக்கு இடையே,  பல்வேறு மன உளைச்சல்களுக்கிடையே, தன் மனதிற்குள்ளாக அவள் ‘எனக்கு உண்மை தெரிந்துக் கொள்ள வேண்டும்’ என உருப் போட்டுக் கொண்டே இருந்தாள்.

அவளின் மனபாதிப்புகளின், மனப்போராட்டங்களின் விளைவோ என்னமோ அன்று காலை முதலாக அவளுக்கு அழைத்துக் கொண்டிருந்த செல்வி அன்று அலுவலகத்தினின்று திரும்புகையில் அவளைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டிருந்தாள்.

செல்வியை அவளது மனதின் குற்றக் குறுகுறுப்பு மறுபடியும் சந்திராவிடம் இழுத்து வந்திருந்தது. சந்திரா கதவை திறக்காமல் உள்ளே இருக்க, கதவை திறக்கும் வரை திரும்பச் செல்ல மாட்டேன் என்பதாக செல்வி காலிங்க் பெல்லை அடித்துக் கொண்டிருந்தாள். பத்து நிமிடங்கள் தவிர்த்தும் வேறு வழியில்லாமல் சந்திரா தன் வீட்டின் கதவை திறந்து செல்வியை உள்ளே அனுமதித்தாள்.

“நான் தவறு செய்து விட்டேன், மன்னித்து விடு. நீ எனக்கு பதிலளிக்கவில்லை என்றதும் என் மனசாட்சியே என்னை கூறு போட்டு விட்டது.” அவள் கைகள் சந்திராவை நோக்கி கூப்பி இருந்தன.

மனதிற்குள்ளாக வெம்பி இருந்த சந்திரா கேட்டு விட்டிருந்தாள்.

“நீ அன்று வந்தது பேசியது எல்லாம் என்னவென்று உனக்கு புரிந்ததா? யாரைக் குறித்து பேசினாய்? என்ன பேசினாய்? என்பதெல்லாம் நினைவிருக்கிறதா? எனக்கு அவன் ஆதரவாக இருப்பதா? எனக்கு அவன் ஆதரவு எதற்கு தேவையாம்? என்னை தே**யா நிலைக்கு தாழ்த்த தான் வந்தாயா?”

“ஐயோ” தன் காதுகளை பொத்திக் கொண்டாள் செல்வி.

“மன்னித்து விடு, மன்னித்து விடு, அவன் தான் அப்படி சொன்னான். மாதக்கணக்காக உன்னைக் குறித்து பேசிப் பேசி, என்னை இப்படி எல்லாம் பேசும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான்.”

‘நான் தேடிய உண்மை என்னைத் தேடி வந்து விட்டது’ சந்திராவின் மனதிற்கு ஆசுவாசமானது.

“கொஞ்சம் பொறு” என செல்வியை சொல்லி விட்டு அடுத்த ஐந்து நிமிடங்களில் குமரேஷை தனது அத்தனை தொடர்புகளில் இருந்தும் block ப்ளாக் செய்தாள்.

“ம்ம் என்னச் சொன்னான்?” அவளிடம் மீதம் இருக்கும் விஷயங்களையும் வாங்க வேண்டி இருந்தது. செல்வி முதலில் எதையும் சொல்ல விரும்பாவிடினும் தான் சொல்கின்றவைகளை அவள் யாரிடமும் சொல்லக் கூடாதென உறுதியை பெற்றுக் கொண்டு செல்வி சொல்ல ஆரம்பித்தாள்.

“இரண்டு வருடங்களாக அவன் மனதிற்குள் உன்னைக் குறித்த வேறு மாதிரியான எண்ணங்கள் உண்டாம். நீ அவனை கண்டதும் மலர்ந்து சிரிப்பாயாம்” என அவள் சொன்னதைக் கேட்டதும்

‘கணவனை இழந்தவள் தன் துன்பங்கள் தாண்டி சிரித்து உற்சாகமாக வலம் வருவதற்கு எத்தனை கற்பிதங்கள் கற்பிப்பார்களோ? நான் எல்லோரிடமும் மலர்ச்சியாகத்தானே பேசுவேன்? இவனுக்காக சிரிப்பேனாமே?’ என எண்ணிய இவளது அதரங்கள் இகழ்ச்சியாக மடிந்தன.

“அவனை வாட்சப்பில் கிண்டல் செய்து பேசுவது, அவனுக்கு வக்காலத்து வாங்குவது எல்லாம் உனக்கு அவன் மேலுள்ள காதலால் தானாம்…”

‘அடக் கடவுளே, அந்தக் குழுவில் தாம் மட்டுமா கிண்டல் செய்தோம், எல்லாருமே ஒருவரை ஒருவர் காலை வாருவோமே? அதுவும் இவள் மட்டுமல்ல எல்லாருமே அவனை வம்பிழுப்பார்களே? வக்காலத்து வாங்குவதா? என்ன தவறென்றாலும் சுட்டுவது அவளது இயல்பு. ஒரு முறை இவன் செய்த தவறுகளை கூட காட்டமாக சுட்டிக் காட்டி இருந்தாள். தனக்கு தேவையானது மட்டும் பொறுக்கி எடுத்துக் கொள்வான் போலும்?!’ கேட்டவள் நொந்திருந்தாள்.

“மற்றவைகளை விடு கடைசி முறை வந்த போது அவனுக்கு எந்த கப்பில் காஃபி கொடுத்தாய்?”

‘ஆண்டவா? அதற்காக நான் அவனுக்கு விளக்கம் கூட கொடுத்திருந்தேனே?’ மனதிற்குள் பதறியவள் வீட்டில் இருந்த ஆறு கப்களையும் செல்வி முன்னே கடை பரப்பினாள்.

“பார்த்துக்கோ என் வீட்டில் இப்படி ஆறு கப் இருக்கு. ஏதேச்சையா அன்றைக்கு இந்த கப் கையில் அகப்பட்டு விட்டது. அதற்கு அவனுக்கு விளக்கம் கூட சொல்லி இருந்தேன்.”

“அவன் என்னன்னா அவனுக்காக தேடித் தேடி எடுத்து அந்த கப்பில் ஸ்பெஷலாக காஃபி கொடுத்ததாகச் சொன்னானே?”

“அவன் நினைத்ததில் ஒரு சதவிகிதம் கூட நிஜம் கிடையாது.எல்லாம் அவன் கற்பனைகள் தான்.”

“ம்ம்… எனக்கு இப்போது புரிந்தது. ஆனால், அவன் பல மாதங்களாக புலம்பி தீர்த்ததில் உண்மை என்ன? என தெரிந்துக் கொள்வதற்காகத்தான் நான் அன்று அப்படி பேசினேன். என்னை மன்னித்து விடு” மறுபடியும் கைகூப்பினாள்.

“ம்ம்” என்ற சந்திரா…

“செல்வி நீ அன்று பேசியவை எல்லாமே அதீதம். உனக்கு புரிகின்றதோ இல்லையோ ஒரு விஷயம் சொல்கிறேனே…

ஒருவன் நலமாக நடமாடிக் கொண்டு இருக்கின்றவனை பிடித்து தள்ளினான் என்றால் ஒருவேளை அவன் மறுபடியும் எழுந்து நிற்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், நொந்து நூலாகி பாதாளத்தில் கிடக்கின்ற ஒருவனை, மிகுந்த சிரமங்களுக்குப் பின்னர் துளித்துளியாக தனக்கு தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டு சிறுபிள்ளை போல பயந்து பயந்து ஒவ்வொரு நடையாக நடந்து எழுந்து நிற்கின்றவனை தள்ளி விட்டால் என்னாகும்?…

எத்தனையோ சிரமங்களுக்கூடாக தனது பலமெல்லாம் சேர்த்துக் கொண்டு எழுந்தவன் மறுபடி வீழ்வான் என்றால் ஒன்று அவன் விழுந்த இடத்திலேயே கிடந்தே கூட மடிந்து போவான்.

அந்த பாவம் தள்ளி விட்டவனை சும்மா விடாது. சும்மா விடவே விடாது, நான் எத்தனை வேதனைகளை கடந்து நடமாடிக் கொண்டு இருக்கிறேன் என உனக்குத் தெரியுமா? எல்லாரிடமும் நன்றாக பேசிப் பழகினால் அதற்காக… என்ன வேண்டுமானாலும் பேசி விடுவாயா?”

“தப்பு தப்பு பெரிய தப்பு நான் செஞ்சது பெரிய தப்பு… மன்னிச்சுக்கோ” கைகள் கூப்பிய செல்வியின் கண்ணீர்த்துளி தெரித்தது.

“விடு, இப்போதாவது என்னால் உண்மையை தெரிந்துக் கொள்ள முடிந்ததே என நான் எண்ணிக் கொள்கின்றேன். தெரிவித்த உனக்கு நன்றி.”

“ஆம், நான் செய்தது தவறென்றாலும் இதுவும் நன்மைக்கே என எண்ணிக் கொள், நான் சென்றதும் என்னையும் ப்ளாக் செய்து விடு” என்றதும் சந்திரா, “நிச்சயமாக” என்றாள்.

“ஆனால், நான் வந்து உண்மைகள் சொன்னது யாருக்கும் தெரிய வேண்டாம்.”

“ம்ம்”

செல்வி சென்றதும் புயலடித்து ஓய்ந்தார் போலிருந்தது. சந்திரா இருவரையும் ப்ளாக் செய்து விட்டாள். உறவுகளை துண்டிப்பது இத்தனை எளிதா? நன்று மிக நன்று.

மகளின் அழைப்பு வரவும் பேசினாள்.

“அம்மா இப்பதான் செக் செஞ்சேன், ப்ரெக்னென்ஸி கன்பர்ம் மா”

“எம் புள்ள…” சந்திராவின் கண்கள் கலங்கின.

மகளுக்கும் மருமகனுக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, அழைப்பை துண்டித்தாள். ஆசை ஆசையாக பாயாசம் செய்தவள் அதனை எடுத்துக் கொண்டு தனது சகோதரன்களை சந்திக்கச் சென்றாள்.இரவுணவை அண்ணன் வீட்டிலேயே முடித்து திரும்ப வரும் போது ஏதோ ஒன்று அவள் மனதை உறுத்தியது.

‘காரணமே சொல்லாமல் இருபத்தி சொச்ச வருட நட்பை முறிப்பது தவறல்லவா? அதே நேரம் செல்வி சொன்னவைகளையும் குறிப்பிட்டு அவன் முகத்தில் காறி உமிழ முடியாது. புதிதாக எதிரிகளை சம்பாதிக்க வேண்டாம்.அவர்கள் நல்லவர்களாகவே இருந்து விட்டுப் போகட்டும்.’  எண்ணியவள் குமரேஷின் எண்ணை unblock செய்து டைப் செய்ய ஆரம்பித்தாள்.

“உன்னோடு நட்பாக இருப்பதால் யார் யாரோ என்னையும் உன்னையும் இணைத்து பேசுகின்றனர். அதனால் உனக்கும் எனக்குமான நட்பை இன்றோடு முறித்துக் கொள்கின்றேன். நீ நலமாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்.” என தகவல் அனுப்பினாள்.

“அதற்காக ப்ளாக் செய்வானேன்? நான் வந்து உன்னை சந்திக்கிறேன். நமது நட்பு ஆயுளுக்குமானது” அவனது பிதற்றல்கள், பொய்யான பிதற்றல்களை பதட்டமின்றி வாசித்தாள் சந்திரா.

‘எப்படிப்பட்ட நடிகன் இவன்? மகா நடிகன். உள்ளமெல்லாம் கள்ளம், வாய் வார்த்தையில் நட்பு. உன்னை நம்பினேனடா?’

“நான் உன்னை சந்திக்க வருகிறேன், விளக்கம் கொடுக்கிறேன்.” குமரேஷின் தகவல் வந்தது.

“ஒன்றும் தேவையில்லை” என்றவளாக மறுபடி அவனை ப்ளாக் செய்தாள் அன்றிரவு நல்ல நிம்மதியான தூக்கம் வந்தது.

அடுத்த நாள் அவளின் மற்றதொரு எண்ணில் குமரேஷ் அழைக்க அதிலும் ப்ளாக் செய்தாள். அந்த எண்ணில் செல்வி அழைத்தாள் என்னவென்று கேட்க, “குமரேஷ் நீ ஏன் அவனை ப்ளாக் செய்தாய் என என்னிடம் கேள்விகளாக கேட்டு தொந்தரவு செய்கிறான் என்றாள்”

“நான் உன்னைக் குறித்து எதையும் சொல்லவில்லை. ஆனால், அவனைக் குறித்து என் சகோதரன்களிடம் சொல்லி விட்டேன்.எனக்கொன்று என்றால் அவர்களுக்கு தெரிய வேண்டுமல்லவா?” எனச் சொல்லவும் செல்வி பதறினாள்.

அழைப்பை துண்டித்த சந்திரா அந்த எண்ணில் இருந்தும் செல்வியை ப்ளாக் செய்தாள். இப்படிப்பட்ட நட்புகள் இருப்பதற்கு இல்லாதிருப்பது நலம்.

இவர்களால் சகோதரன்கள், உற்றார் உறவினர் இருக்கும் பெண்ணிடமே இப்படி எல்லாம் பேச மனம் வருகின்றதென்றால், துணையற்றவர்களிடம் இவர்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள்? இவர்கள் எல்லாம் நண்பர்களாம்? மனதெல்லாம் கசந்து வழிந்தது.

அன்று பொழுது சாய்ந்திருந்த நேரம் அலுவலக பணிகள் முடிந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சந்திரா அமர்ந்திருந்த போது வாயில் காலிங்க் பெல் அடித்தது.

குமரேஷ் வாயிலில் நின்றிருந்தான். அவனது முகமெங்கும் பதட்டம். வாயிலை திறந்தவள் அவனை உள்ளே வரவிடாமல் அங்கேயே நின்றாள். அவனுக்கு கொடுக்க வேண்டிய இடம் என்ன? என அவளுக்கு புரிந்து விட்டிருந்ததல்லவா?

“நாம் எப்படிப்பட்ட நண்பர்கள்?” அவன் குரல் தன்னை அறியாமல் உயர்ந்து விட்டிருந்தது. உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

“என்ன? உச்சஸ்தாயியில் பேசுகின்றாய்? குரலை அமர்த்து?” சந்திரா கண்டித்தாள்.

“இல்லை அது தானாகவே வந்துவிட்டது” குரலை தாழ்த்தினான்

“நான் முன்பே சொன்னதுதான் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் நிலையை நான் அறவே வெறுக்கிறேன். உன்னுடன் பேசி பழகினால் தானே இந்த பிரச்சனை. நாம் பேசவே வேண்டாம்.” உறுதியாக விழுந்தன சந்திராவின் வார்த்தைகள்.

“அதற்காக ப்ளாக் செய்வதா?” உணர்ச்சி வசத்தில் நடு நடுங்கிக் கொண்டு பேசினான்.

“ஆம், எதற்கு பிரச்சனை? ப்ளாக் செய்தாகி விட்டது. இனி பிரச்சனை இல்லை.”

“சரி சரி மற்றதை எல்லாம் விடு.. நான் ரக்ஷா பந்தன் அன்று உன் வீட்டிற்கு வருகிறேன். நீ எனக்கு ராக்கி கட்டு நாம் க்ரூப்பில் அந்த புகைப்படத்தை போடலாம்.”

அவன் பேச்சில் சந்திராவின் உடலே கூசியது. ‘எத்தனை திண்ணக்கம்? உண்மை தெரியாதிருந்தால் இவனது பசப்பான வார்த்தைகளை நம்பி, இவனை சகோதரன் போல எண்ணி நான் இன்னும் பழகி இருப்பேன். இவன் நல்லவனாக பேசிக் கொண்டு காம எண்ணத்தோடு என்னைச் சுற்றி வந்திருப்பான்.

இவனிடம் நான் இவனுக்கு முன்பு கட்டிய ராக்கிக்கே மதிப்பொன்றும் இல்லை. மற்றவர்களிடம் என்னிடம் நாட்டம் இருப்பதாக மாதக்கணக்காக புலம்பிய பின்னரும் கூட, என்னிடம் இனியும் ராக்கி கட்டிக் கொள்வதாக சொல்கிறான். இவனிடம் ராக்கிக்கும் மதிப்பில்லை. அந்த ராக்கிக்கான உணர்வுகளுக்கும் மதிப்பில்லை.

சொந்த அண்ணன் தம்பிகள் மட்டும் தான் சகோதரன்களாக முடியும் என நடு மண்டையில் நச்சென அடித்தாற் போல பதிய வைத்ததற்கு இவனுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.’ இவ்வாறு நொடி நேரத்தில் பல எண்ணங்கள் சந்திராவின் மனதிற்குள்ளாக வந்துச் சேர்ந்து இருந்தன.

“என்னது நான் உனக்கு ராக்கி கட்டுவதை படமெடுத்து க்ரூப்பில் போடுவாயா? எந்த டிராமாவும் வேண்டாம், அந்த வாட்சப் க்ரூப்பும் வேண்டாம்” சட்டென சொன்னாள்.

“ட்ராமாவா?” இவள் வார்த்தைகளால் அடிப்பட்டவன் போல நடிகர் திலகத்தின் மறுபதிப்பாக தனது வாசலில் நின்று முகத்தில் அத்தனை ரசங்களை காட்டிக் கொண்டு இருந்தவனை அவள் உணர்வற்றுப் பார்த்திருந்தாள்.

‘இவன் மகா நடிகன்’ மனம் எள்ளிச் சிரித்தது.

“நான் ரக்ஷா பந்தன் அன்றைக்கு மட்டும் வரேன்” மறுபடி சொன்னதையே சொன்னான்.

“நீ என் வீட்டிற்கு வரவே வேண்டாம்” தன் கதவை இழுத்து சாற்றினாள்.

அவன் தளர்ந்தவனாக தெருவை தாண்டிச் சென்றுக் கொண்டு இருந்தான். அவனது தளர்வான நடையை பார்க்க அவளுக்கு பரிதாபமாக இல்லை. சில சாத்தான்கள் கடவுள் உருவெடுத்து திரியுமாம். யார் கடவுள்? யார் சாத்தான்? என பிரித்தறிய விசேஷக் கண்கள் தான் வேண்டும் போலும்!

“நீ நல்லவளாக இருக்கலாம், ரொம்ப நல்லவளாகவெல்லாம் இருக்கக் கூடாது’

தனக்குத் தானேச் சொல்லிக் கொண்டவள் அந்த வாட்சப் குழுவில் இருந்து வெளியேறினாள். தனது அலைபேசியில் இருந்து அந்த க்ரூப்பை முற்றிலுமாக நீக்கினாள்.

இப்போது அவள் மனதில் அமைதி படர்ந்து இருந்தது.

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here