மழை மழை!_சிறுகதை_ஜான்சி

0
226

நரகம் மன்னிக்க நகரம் ஒன்றின் ஒரு கான் கிரீட் சுவர் மீது இருவரும் ஏறிக் கொண்டு இருந்தனர். ஷப்பா…இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறினதிலும் பிரயோஜனம் இல்லாமல் இல்லை. இது நல்ல இடமா இருக்கும் போலவே? சடசடவென தண்ணீர் சாடிக் கொண்டு இருந்த அந்தக் குழாயை தாண்டி அவர்கள் இருவரும் உள்ளே சென்றிருந்தனர்.

அது சோப்புத் தண்ணீரென புரியாமல்,

“உப்பு கரிக்குதப்பா…” என்றது.

“ஆமா”

“ஆனாலும், குளுமையா இருக்கு அப்பா”

“ம்ம், ஆமாம்”

“அப்பா, அப்பா, நம்ம குடும்ப கதை சொல்லுங்க.”

“நம்மளை விவசாயிகளின் நண்பன் என்று சொல்லுவாங்க மகனே. நாம இருந்தால் தான் மண்ணுக்குள்ள இருக்கிற சத்துக்களை உண்டு செரிமானமாக்கி அவர்களுக்கு உரமாக்கி தருகின்றோமாம். நமது இருப்பு விவசாயிகளுக்கு மட்டுமல்ல அவர்கள் விளைவிக்கும் உணவுகளை உண்ணும் மனிதர்கள் அனைவருக்கும் மிக முக்கியமாம்”

“ஓ நாம அவ்வளவு முக்கியமானவங்களா அப்பா?” பெருமிதமாக எண்ணிய போது சட்டென்று தன் மேல் ஏதோ வீசப்படவும் ஆவென அலறித் துடித்தது.

“அப்பா வலிக்குது” அது மிகவும் கதறியது. அப்பாவைத் தேடி எட்டிப் பார்க்க அப்பாவோ மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தது தெரிந்தது. மேலும் மேலும் உப்பை தூவி தூவி விட்டிருக்க, அதனால் தன் மெல்லிய தேகம் எரிய அதன் உயிர் துடி துடித்து அடங்கியது.

“இந்த மழை ஏன் தான் வருதோ?”

தன் முப்பது சொச்ச லட்சம் செலவழித்து கட்டிய வீட்டின் பாத் ரூமில் உப்பை தூவிக் கொண்டு இருந்த வீட்டின் எஜமானி புலம்பினாள்.

“மழை காலம் வந்தாலே போதும் எப்ப பாரு பாத்ரூம் டைல்ஸ்ல மண்புழுக்கள் அசிங்கமா ஊர்ந்துக் கிட்டு …ச்சைக்”

“அம்மா, நான் குளிக்க வரட்டுமா? எனக்கு அந்த பூச்சியை பார்த்தாலே உவ்வேன்னு இருக்கு.”

“வாடா வா… நல்லா கழுவி விட்டுட்டேன். சீக்கிரம் குளிச்சுட்டு வா… ஸ்கூலுக்கு நேரமாகுது.”

மூன்றாம் வகுப்பு படிக்கும் வருண் குளித்து முடித்து வெளியே வந்து டிவியின் அருகே நின்றான். அங்கே மராத்தி செய்திகளை பார்த்ததும்… தனக்கு அம்மா எடுத்து வைத்திருந்த அயர்ன் செய்யப்பட்ட சட்டை காற்சட்டையை உடுத்தாமல், டணக்கு டனன்… டணக்கு டனன்… டணக்கு டனன் டன் என ஆடிக் கொண்டு இருந்தான்.

“என்னடா புறப்படாமல் ஆட்டம் வேண்டிக் கிடக்கு… யூனிபார்ம் போடு” அம்மாவின் கடுப்புக் குரல் இவனை எட்டியது.

“ஆயி ஆஜ் ஷாலா நாஹி” (அம்மா இன்றைக்கு ஸ்கூல் இல்லை) என மறுபடி ஆட ஆரம்பித்தான்.

வருணின் அப்பா தனக்கு அலுவலகம் செல்ல லோக்கல் ட்ரெயினிற்கு அறிவிப்பு இருக்கின்றதா இல்லை இல்லையா எனப் பார்க்க காலையில் எழுந்ததும் டிவி செய்தி பார்த்துக் கொண்டு இருந்தார். பெரும்பாலான இரவுகளில் தொடர்ந்து மழை பெய்யும் போது இரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் நிறைந்து விடுவதால் இரயில்வே முடங்கி விடுவது வழக்கம். முன்னிரவு மழை போட்ட போட்டில் என்ன நிலவரமோ? என விபரங்கள் தெரிந்துக் கொள்ளலாமென வைத்திருந்த டிவி செய்தி சானலில்,

“மும்பையில் மழை விடாமல் பெய்து வருவதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பள்ளி விடுமுறை என முதலமைச்சர் அறிவித்துள்ளார்” என ஃப்ளாஷ் நியூஸ் வந்துக் கொண்டிருந்தது.

மும்பை மாநகரம் இயற்கை அன்னையின் அன்பு நகரம். பிறரின் கண்பட்டு, கண்பட்டு அதனால்தான் அடிக்கடி செய்திகளில் அகப்படுகின்றதோ என எண்ண வைக்கும் மாநகரம். மாபெரும் இதயத்தோடு அனைவரையும் அரவணைத்து பாதுகாக்கும் தாய்நகரம்.

மும்பை பருவமழை ஜீன் முதலாம் வாரத்தில் பெய்ய ஆரம்பிக்கும். ஜீன் 8ம் தேதி மழை பெய்யும் என கண் மூடிக் கொண்டு பந்தயம் கட்டலாம்.

இயற்கைத்தாய் சில நேரம் மும்பைக்கு சீக்கிரமாக மே மாதமே வந்து தன் மழைக்கொடையை ஆரம்பித்து விடுவாளே அன்றி குறிப்பிட்ட காலத்தில் வராமல் இருந்ததில்லை.

ஜீன் மாதம் முதலிரு வாரங்களில் மழை அடித்து ஊற்றாவிடினும் தான் வந்து விட்டதாக சாரலாகவாவது பொழிந்து கட்டியம் கூறாமல் மழைத்தாய் சென்றதில்லை.

அந்நகரத்தின் ஆக்சிஜன் சப்ளைக்கு நாங்க கியாரண்டி என அந்நகரத்தின் இயற்கை சூழ் மலைத் தொடர்களும், சுற்றி உள்ள கடலும், கடற்கரைகளும் என கோடானு கோடி அளவிலான ஆக்சிஜன்களை வள்ளன்மையாக வழங்குபவன.

வருடத்தில் நான்கு மாதங்கள் பெய்யும் மழையினில், இங்குள்ள அணைகள் நிரம்புவதைக் கொண்டு வருடம் முழுக்க நகரத்தின் மக்களுக்கு தாகம் தீர்க்கும் அமுத மழை அது. அதை தனிப்பட்ட விதமாக “மழை சேகரிப்பு” என சேமிப்பவர் எவருமிலர். அவ்வானமுதம் வீணாக சாக்கடைகளில் கலந்து அசுத்த நீராகி, தேங்கி நாறி, கடலைச் சேரும்.

எட்டுக்கு எட்டு, எட்டுக்கு பத்தென அளவிலான வீடுகளில் இருப்பவர்கள் மழை நீரை எப்படி சேமிப்பதுவாம்? வருடம் முழுக்க செழிக்க செழிக்க தண்ணீர் கிடைக்கும் போது அதை சேமிக்க தேவையும் இல்லை அதனால் அதை சேகரிப்பானேன்? எனும் மனநிலையும் காரணி.

பல நேரங்களில் இந்தியாவின் இந்த பொருளாதார மாநகரத்தின் நிலை மழை நாளில் தான் பல்லிளிக்கும். நகராட்சிகள் தீர்வு காண மழை இல்லாத மீதி 8 மாதங்களை உபயோகிக்காமல் மெத்தனமாக இருப்பதாலும், மக்களுக்கும் விழிப்புணர்வுகள் அதிகமாக கிடையாது என்பதாலும் ஒவ்வொரு வருடமும் ஒரே சுழற்சியாக மழை போலவே மனிதர்களும் இருக்க, வருடா வருடம் மழை போல வருடா வருடம் அதே பிரச்சனைகள்.

“நல்லதா போச்சு வருண். நீ ஸ்கூல் போக வேணாம். லோக்கல் ட்ரெயின்ஸ் இல்லை என்பதால நான் ஆஃபீஸ் போக வேணாம்…. எஞ்சாய். அம்மாவை படாடா வடா (batata vada/உருளைக் கிழங்கு வடை) இல்லைன்னா பஜ்ஜி போடச் சொல்லு வருண்.”

“ம்ம்… எனக்கு மட்டும் லீவு இல்லை” சமையலறையும் சமையலறை உரிமையாளரும் சலித்துக் கொண்டனர்,

வெளியே சோவென மழை பெய்துக் கொண்டிருக்க, உள்ளே சுடச்சுட பதார்த்தங்களால் மணம் பரவ… குடும்பத்தோடு கொண்டாடப் படும் மழை சொர்க்கம் அல்லவா?

*******************************************************************************

இரயில்வே நிலையம்

மும்பை தாதர் ஸ்டேஷன்:

“பயப்படாதீங்கமா. நான் பத்திரமா வந்திர்றேன். லோக்கல் ட்ரெயின் எல்லாம் கான்சல்மா. எப்படியோ ஸ்டேஷன் வரைக்கும் வந்திட்டேன். அம்மா ஏதோ ஒரு அனவுன்ஸ்மெண்ட் கேட்குது. பொறுங்க மறுபடி கால் செய்றேன்.

மராத்தியிலும், ஹிந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலுமாக ஒலித்த அடுத்த ட்ரெயின் விபரம் கேட்டுக் கொண்டு நின்றவள் பரிதவித்தவளாக நின்றாள். வேலை விஷயமாய் வந்திருந்தவள் அவசரமாய் புறப்பட வேண்டியதாயிற்று.

‘மழை நேரம் இவ்வாறாகும்… மாட்டிக் கொள்வோம் என அவளுக்குத் தெரியாதே? என்ன செய்வது?’ திகைத்து நின்றவளுக்கு யாரோ தண்ணீர் பாட்டிலும் வடாபாவும் கையில் கொடுத்து சென்றார்கள்.

அவர்கள் அந்த இடத்தை சார்ந்த சமூகசேவை புரியும் இளைஞர்கள் தான். அங்கங்கே இருந்தவர்களுக்கு அவர்கள் உணவளித்துக் கொண்டே கடந்து சென்றுக் கொண்டு இருந்தனர். அவர்களை பார்க்கையில் அந்த பதட்டத்திலும் அவள் முகத்தில் புன்முறுவல் வந்துச் சென்றது.

அறிவிப்பின் படி இதோ அவள் செல்ல வேண்டிய இரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வரவிருக்கின்றதாம். தன் மனப்பாரம் குறைந்து கையில் இருந்த வடாபாவை ஒரு கடி கடித்தாள். ஸ்ஸ்… சுர்ரென மிளகாய் கடித்து விழுங்கியதில் அவள் கண்களில் நீர் தேங்கி இருந்தது. தண்ணீர் பாட்டிலை திறந்து குடித்ததில் கொஞ்சம் உரைப்பு கட்டுப் பட்டிருந்தது.

“நீங்களும் திருநெல்வேலி போகிற ட்ரெயின் தானா?” அருகில் ஒருவர் விசாரித்தார்.

“ஆமாம்”

“எந்த கோச்?”

“அது…”

உரையாடிக் கொண்டே சென்ற இருவருக்குள்ளும், உணவு வழங்கியவர்களுக்குள்ளும் உறவாய் சகோதரமாகி இருந்தது அந்த மழை.

*******************************************************************************

“அரே தேவா….” தலையில் கையை வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் கமலா பாய்.

மழைத்தண்ணீர் சாக்கடையாகி வீட்டின் பாதி அளவிற்கு நிறைந்து விட்டிருந்தது. என்ன செய்வது? இந்த சனியன் மழை இப்போது விடும் போலத் தெரியவில்லையே? ஐயோ என் வீடு என் வீடு… ஐயோ என் பொருட்கள்!” புலம்பி அழுத கமலாபாயின் கண்களும் மழைக்கு நிகராக பொழிந்தன.

“ஆயி ஆயி” (அம்மா) அருகில் இருந்தவர்கள் அவளை அழைக்க வந்து இருந்தனர். தன்னை மட்டும் பார்த்துக் கொண்டால் எப்படி? தன் வீடு… தன் பொருட்கள்?

தன்னுடைய பொருட்கள் நாசமாகி விடுமே?… என திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே,விருப்பமே இல்லாமல் வீட்டை பூட்டிக் கொண்டாள். அந்த சாக்கடை மழையில் நீச்சலடிக்காத குறையாக பயணமாகி கமலா பாய் பத்திரப்படுத்தப் பட்டாள்.

அவள் பயணப்படும் வழியெல்லாம், சோவெனப் பொழியும் மழையில் மணிக்கணக்காக தொப்பலாக நனைந்து நிற்கும் இளையோர். பொங்கி பிரவகிக்கும் மழை நீரில் யாரும் அடித்துச் செல்லப் படாதவாறு அவர்கள் தங்கள் கைகளால் அரண் அமைத்து நின்றிருந்தனர்

அவர்கள் இளைஞர்கள். ஆம், அன்று இளைஞர்கள் கையில் தான் அந்த நகரம் பாதுகாப்பாக இருந்தது.

கடந்துச் சென்ற கமலா பாயின் கண்களிலோ துயரமாய் கவிந்திருந்தது அந்த மழை.

*******************************************************************************

“டேய் அந்த தாத்தா கட்டர்(சாக்கடைக் குழாய்)ல மழைத்தண்ணில அடிச்சு போயிட்டாராம்டா.”

‘ஐயோ அப்புறம் என்னாச்சு?”

“அந்த மெயின் ரோடு கட்டர்ல அந்த பிர்லா கம்பெனி இருக்கில்ல அங்க… அங்க அவங்களை யாரோ காப்பாத்தி எடுத்துட்டாங்களாம்.”

“நல்லா இருக்காரா?”

“பொழைச்சுக்கிட்டாராம்… இத்தனை பெரிய மழையில அரை மணி நேரம் சாக்கடை குழாயில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு பொழைச்சது எல்லாம் பெரிய அதிசயம்ல?”

“ஆமாமாம்”

தாத்தாவின் உயிர் பலம் பார்த்து அதிசயமாய் வியந்து இருந்திருக்குமோ அன்றைய மழை.

*******************************************************************************

“கணேஷ் என்னாச்சு? ஏன் இந்த பதட்டம்”

“டிசோசா அண்ணா தவறி விழுந்து… மழைத் தண்ணியில அடிச்சுட்டு போயிட்டாராம்டா” அடை மழையில் கண்ணீர் மழைகள் சேர்ந்தன.

“ஐயோ ஒரு வாரம் முழுக்க நம்ம கூட நின்னு எவ்வளவு வேலை செஞ்சாங்க…எத்தனை பேர் உயிரை காப்பாத்திருப்போம்… அதெப்படி?”

“ஐயோ”

நெஞ்சு முட்டி நின்றதந்த கூட்டம்.

இனி ஒரு வாரமோ… எப்போதோ உடல் கிடைத்தால் தானே உண்டு. தான் பிறவி எடுத்து வாழ்ந்ததற்கு கைமாறு செய்திருந்தவனை எண்ணி அன்று சோவென… அவர்களோடு கூட அழுது நின்றதந்த மழை.

*******************************************************************************

விதர்பா, மஹாராஷ்டிரா

“பாபா சாப்பிட வாங்க.”

வெங்காயம் மற்றும் மசாலாவுடன் அந்த ரொட்டியை விழுங்கவே அவருக்கு முடியவில்லை. விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையே உணவு எப்படி உள்ளே செல்லும்? 

நிலம் இருந்து என்ன? வானம் திறக்கவில்லையே? மழையும் இல்லை… மண்ணை கொத்தி வளமாக்க மண்புழுவும் இல்லை.

மழை சில நேரங்களில் முரணானது.பெய்ய வேண்டிய இடங்களில் அது பொழிவது இல்லை. பெய்ய வேணாத நேரத்தில் பெய்து ஓயும். வழமையாய் பொழிகின்ற இடத்தில் பேணப்படுவதில்லை. சாக்கடையாக கடந்துச் செல்ல விடுவோரில் மழையின் அருமையை உணர்வாரும் இல்லையே?

அந்த நகரத்தில் பெய்யும் மழை இங்கு இல்லை. அங்கு நகரத்தில் வெறுக்கப் படும் மண்புழு வாழ இங்கு வழி இல்லை.

தொண்டைக்குள்ளாக சிக்கிக் கொண்ட உணவை எப்படியோ விழுங்கி வெளியே வந்தார் அவர். அவருக்கு இப்போது நிம்மதியாக தெரிந்தது ஒன்றே அது மரணம்.

தூக்கில் தொங்க சில தனிமையான நேரங்களும், ஒரு மரமும் அவசரமாக தேவை. மனிதன் மட்டும் தான் தூக்கில் தொங்கும், பிரச்சனைகள் தூக்கில் தொங்காது. இவர் இறந்து விட்டால் இவர் குடும்பம் கடன் தீர்க்க அடிமையாகும். அடிமைகளுக்கு என்று விடிவுகாலம்?

‘ஆனால், தான் என்ன செய்வதாம்?’ வானத்தைப் பார்த்து நின்றாரவர்.

அவர் மகள் அவர் அருகில் வந்து நின்றாள்.அவள் கண்களில் கடந்த வாரம் தூக்கு போட்டுக் கொண்ட காக்கா (மாமா) நினைவிற்கு வரவே தகப்பனின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.

இருவரும் வானத்தை பார்த்து நின்றனர்… இன்றாகிலும் வருமா அந்த மழை மழை?!

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here