“வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

0
507

“வளி”யவள்

புகைப்படச் சிறுகதை

என்ன அதிசயம்!

எந்தன் உயிருக்குள்

உந்தன் பார்வைகள்

நீர் வார்த்ததுமே

எந்தன் மன வெம்மைகள்

மாயமாகினவே.

என்ன அதிசயம்!

எந்தன் கனவுக்குள்

உந்தன் கனிவுகள்

காட்சியானதும்

எந்தன் மன வெறுமைகள்

நிறைந்து தளும்பினவே.

என்ன அதிசயம்!

எந்தன் வாழ்க்கைக்குள்

உந்தன் வரவுகள்

அடியெடுத்து வைத்ததுமே

எந்தன் வெற்றிகள்

வசப்பட்டனவே.

வாழ்வும் நீ

வளியுமானவளே

அந்த அறையை கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது. இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாகவே அந்த அறை அப்படித்தான் இருக்கின்றது. முழித்திருக்கும் தருணங்களில் எல்லாம் ஏதாகினும் ஜதியை முணுமுணுக்கின்றவளது அதரமும் கூட அமைதியை அணிந்துக் கொண்டதன் காரணம் என்னவென்றே புரியவில்லை.

“யாமினி” அவனது முதல் அழைப்பில் திரும்பிப் பார்த்தவளுக்கு அவனை என்னவென்று அழைக்க என்றும் கூடத் தெரியவில்லை. அத்தானா? மாமாவா? மச்சானா? மகேந்திரனா? அவனை என்னவென்று அழைப்பதாம்?

“ம்ம் சொல்லுங்க?”

“நான் இரண்டு நாளில் மும்பை போகணும்.”

“ம்ம்…”

“நீ என்ன நினைக்கிற?”

‘தான் என்ன நினைப்பதாம்? சாகும் முன்பாக இவன் கையில் தன்னை ஒப்படைத்துச் சென்ற அம்மாவின் அன்னையான அவளது பாட்டி எதையும் சொல்லிக் கொடுத்துப் போகவில்லையே?’

“நீங்க சொல்லுங்க”

“மும்பைல இருக்கிறேன் தான் ஆனா நான் ஒன்னும் பெரிய பணக்காரன் எல்லாம் இல்லை. பார்க்கிறது சின்ன கம்பெனியில் ஒரு வேலைதான். எட்டுக்கு எட்டு அறையில் தான் நாங்க இருக்கிறதே. நாங்கன்னா நான் என்னோட மற்ற இரண்டு நண்பர்கள். வாடகையை நாங்க பகிர்ந்துப்போம். இனி இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் தனியா ஒரு அறையை நான் வாடகைக்கு பார்க்கணும்.”

‘இனி தனி வீடு பிடித்து இருக்க வேண்டும். ‘வாடகை தனியாக கொடுக்க வேண்டுமென வருந்துகின்றானோ?’ யாமினிக்கு சிரிக்கவா? அழவா? வென்று இருந்தது.

“அது… அது இன்னொரு விஷயம் என்னன்னா…. வீடு இங்க இருக்கிறது போலவெல்லாம் வசதியா இருக்காது. இந்த தேக்கு மரத்தால இழைச்ச வீடு, இப்படி அழகான ஊஞ்சல் அதெல்லாம் விடு… இப்படி வீட்டுக்கு உள்ளேயே டாய்லெட் வசதி எல்லாம் கூட கிடையாது. என் கிட்ட முன் பின் கேட்காமலேயே என் அம்மாப்பா பாட்டியம்மா நிலைமையை பார்த்து கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல வச்சுட்டாங்க.”

‘இதற்காகத்தான் இத்தனை தயக்கமா?’ தன்னிடம் அவன் சகஜமாக பேசாத காரணத்தை அறிந்த பின்னே யாமினிக்கு சட்டென்று இலகு உணர்வு.

“என்ன மும்பைனா பயமா இருக்கா? மும்பையிலயும் நம்ம ஊர் மக்கள் நிறைய இருப்பாங்க. நல்ல ஊர்தான் ஆனால், இந்த அளவுக்கு வசதிலாம் என்னால செஞ்சு கொடுக்க முடியும்னு தெரியலை. பரத நாட்டியம் எல்லாம் கத்துக்கிட்டு இருக்க… அதையெல்லாம் அங்க வந்து வீணாப் போகுமேன்னு கூட கஷ்டமா இருக்கு.”

‘தன்னை இந்த மாளிகையின் உரிமையான பெண்ணாக எண்ணி மருகுகின்றான் போலும்? தன்னைக் குறித்து எதுவுமே தெரியாதோ? சரி மெதுவாக தெரிந்துக் கொள்ளட்டுமே? வாழ்க்கையில் எல்லாமே உடனே தெரிந்துக் கொண்டால் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகின்றது?’ முறுவலித்தவள் பேசும் முன்பாக, தனது அடுத்த கவலையை வெளிப்படுத்தி இருந்தான்.

“நான் பண்ணிரெண்டாம் வகுப்பு பாஸீ… இல்ல சாரி ஃபெயிலு” தடுமாறினான் “நீ?” கேட்டவனிடம்,

“நான்… நான் க்ராஜீவேஷன் முடிச்சிருக்கேன்.”

“ம்ம் யாமினி இன்னொரு விஷயமும் சொல்லணும். நான் இப்பதான் இரண்டாவது தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிருக்கேன், நிறைய கடன் இருக்கு. நான் இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் செய்துக் கொள்ளுறதாதான் இருந்தேன். ஆனால், அம்மா தான்…” குறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

திருமணம் முடிந்து அடுத்து பாட்டியின் ஈமக் காரியத்தின் அன்று வந்துச் சென்ற இவனது உறவினர்களுள் யார் யார் தங்கைகள், தங்கைக் கணவர்கள் என நினைவூட்ட முயன்றாள் முடியவில்லை.

“…”

“உனக்கு விருப்பமில்லைனா வேணும்னா…” பிரிவைப் பற்றி அவன் பேசும் முன்னரே யாமினி அவனிடம்,

“நான் உங்க கூட மும்பை வரேங்க.” என்றிருந்தாள்.

பல நாட்களாக அவளது மனதை அரித்துக் கொண்டிருந்த பல கரையான்களை மகேந்திரன் தனது நேர்மை எனும் பூச்சிக் கொல்லிகள் கொண்டு கொன்று இருந்தான்.

திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன் தனது உறவினளான கேரளாவின் அரண்மனைக் கிளி ஒன்றை மணம் செய்து மும்பைக்கு பயணித்துக் கொண்டு இருந்தான். அவனது பெற்றோர் அவர்களுக்கு விடைக் கொடுத்து நெல்லையில் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.

அந்த பங்களாவை அடைத்துக் கொண்டிருந்த ஒரு முதிய உயிர் மேலுலகுக்கும், இன்னொரு உயிர் மும்பைக்கும் பயணித்ததில் அந்த உரிமையாளர்களுக்கு பற்பல வருடங்கள் கழித்து வெகுவான ஆசுவாசம் எழுந்திருந்தது.

யாமினியின் திருமணச் சீர்களில் கொஞ்சம் மும்பைக்கும் மற்றவை நெல்லைக்கும் பார்சலாகின. அவள் அந்த அரண்மனைக்கு திரும்பி வந்து விடக் கூடாதெனும் முனைப்பில் அத்தனையும் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் மூலமாக வழித்தெடுத்து இரு பக்கமும் அனுப்பி வைக்கப் பட்டன.

நிஜமாகவே அவளது உரிமைகளெல்லாம் அவளது பாட்டியில் இறப்போடு முடிந்து விட்டனதான். அவளது பெற்றவர்கள் ஏற்கெனவே சொத்துக்கள் எல்லாம் பிரித்து வாங்கி, செலவழித்து முடித்து விட்டிருந்ததோடு தாங்களும் உலகத்தினின்று விடைப் பெற்றிருந்தனர்.

அந்த பெற்றவர்கள் மீதம் வைத்தவைகளும், பாட்டி இவளுக்காக சேர்த்தவைகளும் மட்டும் தான் இப்போது இவளுடைய சீர்களாக இருந்தன. இந்த எளியவளின் பொருட்கள் அவளது மாமா குடும்பத்தினர் தப்பு தப்பு மாளிகையினருக்கு எதற்கு? அதனாலேயே அவர்கள் அத்தனை பொருட்களையும் செலவு பாராமல் அனுப்பி வைத்து விட்டிருந்தனர்.

யாமினிக்கு அந்த இரயில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மும்பையை நோக்கி முப்பத்தி சொச்ச மணி நேர இரயில் பயணம். சுடச் சுட இரயில்வே காண்டீனில் இருந்து வரும் கட்லெட், பஜ்ஜி என அவள் எதையும் வாய்விட்டு கேட்கும் முன்பே அவள் முகம் பார்த்தே அவன் சலிக்காமல் வாங்கிக் கொடுத்தான். ஐஸ்கிரீம், கூல் ட்ரிங்க் என்றும் கூட பயணம் சுற்றுலா போல அமர்க்களப்பட்டது.

பாட்டியின் வீட்டை விட்டு புறப்படுகையில் அந்த சமையல்காரம்மா அவளுக்காக பாசமாக கட்டித் தந்திருந்த வகை வகையான கட்டுச் சாதத்தை பரிமாறும் போது. அவனுடன் பகிர்ந்து உண்ணும் போது, தானாகவே அவர்களுக்குள்ளாக நட்புறவு ஆரம்பித்து இருந்தது. இருவரும் கொஞ்சம் கொஞ்சம் சகஜமாக பேசவும் ஆரம்பித்து இருந்தனர்.

பேச்சோடு பேச்சாக தான் மும்பையில் இருந்து ஊருக்கு வருவதே ஒரு விழா போல தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் இந்த இரயில் பயணத்தில் சுடச் சுட வாங்கி உண்பதற்காகவே தனியாக காசு சேர்த்து வைத்திருப்பான் என்றெல்லாம் அவன் சொன்ன போது சாப்பாடு முதலாக தனது செலவுகளை எவ்வளவாக சுருக்கி வாழ்ந்து இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள்.

இரயில் ஆந்திராவின் அந்த பெரிய பெரிய மலைச் சூழ்ந்த பாதைகளை கடந்து, மஹாராஷ்டிரா பார்டர் சோலாப்பூரை தாண்டி பயணித்துக் கொண்டு இருந்தது.

மும்பைக்கு நான்கு மணி நேரம் முன்பாக வரும் ‘பூனா” ஸ்டேஷனை இரயில் கடந்த பின்னர் குகைகளை குடைந்து இரயில்வே ட்ராக்குகளை அமைத்திருக்கின்றனர். அந்த குகைகளூடே இரயில் கடக்கும் அந்த சில நிமிட அனுபவங்கள் அலாதியானவை.

குகைக்குள்ளே இரயில் பயணிக்கையில் எழும் சப்தம், அந்த மஞ்சள் நிற விளக்கின் ஒளி, குகையினூடாக பாய்ந்தோடும் மழை நீரின் சப்தங்கள். அப்பப்பா என்னவொரு அனுபவம்?

மகேந்திரன் அவற்றை எல்லாம் முன்பும் பலமுறைகள் உணர்ந்திருந்த போதும் இப்போதும் யாமினியுடன் அவற்றை இரசித்தவாறு வந்தான். மழை நேரமாதலால் அந்த இரயில் பாதைகளின் இருமருங்கும் நெடுக உயர்ந்த மலைகளும், பள்ளத்தாக்குகளும், அவற்றில் பாய்ந்தோடிக் கொண்டு இருக்கும் அருவிகளுமாக என அழகோ அழகாய் இருந்தன. இயற்கை அழகு மிக்க மஹாராஷ்டிரத்தை யாமினி கண்ணார தரிசித்துக் கொண்டு இருந்தாள்.

லோனாவாலா மற்றும் அங்குள்ள டைகர் லீப், பஜா கேவ்ஸ், கர்லா கேவ்ஸ், புஷி டேம், ட்யூக்ஸ் நோஸ், டிக்கோனா ஃபோர்ட், பவ்னா லேக், ரய்வுட் பார்க், லோஹாகட் ஃபோர்ட், வன்வன் டேம் பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அந்த இடத்தை சார்ந்தவைகள் தானே? லோனாவாலா சுற்றுலாப் பகுதி மும்பையில் இருந்து சில மணி நேர பயண தூரம் மட்டுமே என்பதால் மும்பை ஜனத் திரள் இங்கே அடிக்கடி இங்கே வந்துச் செல்வதுண்டு.

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் கொண்ட இரயில் பெட்டி என்பதெல்லாம் அங்கே பெயரளவிற்குத்தான். அதனை லோக்கல் ட்ரெயினை போல பாவித்து நிறைய மக்கள் கூட்டமாக ஏறி அமர்ந்திருந்தனர். அதனால் ஊரில் இருந்து வருகின்றவர்களை தத்தம் லக்கேஜீகளை பாதுகாப்பாக கவனித்துக் கொண்டு வருவதே பெரிய வேலையாக இருந்தது.

அப்போது “சிக்கி சிக்கி லோனாவாலா சிக்கி (chikki)” என அந்த இரயில் பெட்டிக்குள்ளாக விற்பனையாளர்கள் உலவ ஆரம்பித்தனர்.

இங்கே சிக்கி எனப்படுவது நம்மூர் கடலை மிட்டாய்கள் வகைகள்தான். அவைகளில் பல வகைகளில் இருக்கும். அவற்றில் நான்கு விதமான பாக்கெட்டுக்களை வாங்கி யாமினியிடம் கொடுத்து பத்திரப் படுத்தினான். அவளையும் உண்ணச் சொன்னவன் மும்பை சென்றதும் அக்கம் பக்கத்தவருக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லிக் கொண்டான்.

ஒரு வழியாக அவர்களது நீண்ட அந்தப் பயணம் முடிவுற அவர்கள் தாதர் ஸ்டேஷனில் இறங்கினர்.

“வாடா மகேன், வாங்க அண்ணி நல்லா இருக்கிறீங்களா?” இவர்களை எதிர்பார்த்து இருவர் நின்றிருக்க இவர்களது லக்கேஜை வாங்கிக் கொண்டனர்.

மாற்று நிலத்தில் தாய்மொழி கேட்டதில் இருந்த ஆசுவாசத்தில் யாமினி முகம் மலர புன்னகைத்தாள். எதைப் பேச? என்ன பேச? எனப் புரியாமல் தலையை ஆட்டி வைத்தாள்.

ரிக்ஷாவில் சென்று அந்த நெருக்கடியான இடத்தில் இறங்கினர். இரவு எட்டரை ஆகி விட்டிருந்தது. யாமினியிடம் இருந்த கட்டுச் சோறெல்லாம் எப்போதோ முடிந்து விட்டிருந்தது. ‘இனி சமைக்க சாப்பிட எப்படி?’ என குடும்ப ஸ்த்ரீயாக சிந்தித்தாலும் தனது அண்ணபூரணனை ஏறிட்டுப் பார்த்தவள் ‘இவர் நம்மை பட்டினிலாம் போட மாட்டார்’ என எண்ணிக் கொண்டாள்.

சந்து, பொந்து எல்லாம் கடந்து இவர்கள் பயணம் ஒரு இடத்தில் வந்து முடிந்தது. அது பல வீடுகள் அடங்கிய ஒரு நீளமான பகுதி.

மற்ற வீடுகளில் இருந்த பற்பல மாநிலத்தை சார்ந்தவர்கள் தத்தம் வாசலில் நின்று புதுமணத் தம்பதிகளாகிய இவர்களை வேடிக்கை பார்க்க ஒரு அக்கா வந்து இவர்களுக்கு ஆரத்தி எடுத்தார். அந்த வீடு சின்னச் சின்ன அலங்காரத்துடன் இருந்தது.

யாரோ அக்கறை எடுத்து வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்து என அங்கே அத்தனையிலும் வெளிப்பட்டதென்னவோ அன்புதான்.

“வாம்மா வா” பெரியவர் ஒருவர் சொல்ல தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். அவரவர் ஊரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

“நேரமாகுதில்ல இங்க வாம்மா” பெரியவள் ஒருவள் அழைக்க அங்கே ஒரு ஸ்டவ்வில் பால் காய்ச்ச தயாராக இருந்தனர்.

“நம்ம அக்கா கை ரொம்ப ராசியாக்கும்” எனச் சொல்ல அந்த முதியவள் பாசமாக அவளை வழி நடத்தியதில் சின்னதாக பால்காய்ச்சி முடித்தனர். இவர்களுக்காக அவர்கள் வீட்டிலிருந்து உணவு வந்திருந்தது.

யார் எவர் எனத் தெரியாதவர்களெல்லாம் அவர்களுக்காக கூடி வரவேற்று இத்தனை செய்யவும் யாமினி நெகிழ்ச்சியாக உணர்ந்தாள். தெரியாத ஊரில் எத்தனை உறவுகளை சம்பாதித்து வைத்து இருக்கிறான் என கணவன் மீது மரியாதை எழுந்தது.

“தம்பி ரொம்ப பொறுப்பான பையன், அதிர்ந்தே பேசாது. கெட்டப் பழக்கம்னு ஒன்னும் கிடையாது” சரளா அக்கா வந்துச் சொல்லிச் செல்ல அந்த அக்காவிடம் மனதளவில் நெருங்கிப் போனாள்.

அந்த வீட்டின் பிரச்சனை என இருந்தது கழிவறைதான். டாய்லெட் ரூம் இல்லாதது அதற்காக வெளியே பொதுக் கழிப்பிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட ஓரளவு சமாளிக்கலாம் என்றால் குளிக்க ஒதுங்க கூட மறைவில்லை.

மொத்தமே ஒரு ஆள் நிற்குமளவிற்கு இடுப்பளவு ஒற்றைச் சுவர் மறைப்பு தான் “மோரி” என அழைக்கப் படும் அதில் தான் எல்லாம் செய்துக் கொள்ள வேண்டும்.

இதுவரையிலும் இல்லாத தயக்கம் இருவருக்குள்ளும் வந்து விட்டிருந்தது. அனைவரும் புறப்படவும், அவளுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றான்.

திரும்ப வந்த போது அவள் உடை மாற்றி நைட்டியில் இருந்தாள்.

“ஏங்க?”

அட்டைப் பெட்டியை கட்டி இருந்த கயிறு அவள் கையில் இருந்தது.

“ம்ம்” இந்த கயிறை இப்படி குறுக்கா கட்டுனீங்கன்னா என் சேலையை மறைப்பா போட்டுக்குவேன்”, என்றதும் அவன் அந்த ஒற்றை அறையின் நடுவில் சுறுசுறுப்பாக கயிற்றை இழுத்துக் கட்டினான். அந்த கயிற்றின் மேல் யாமினி தனது அழுத்தமான சேலை ஒன்றை மறைப்பிற்கு தொங்க விட்டவள் ஆங்காங்கே ஊக்குகளைக் குத்தினாள்.

மோரிக்கு மறைப்பு போட்டாயிற்று இனி குளிக்கக் கொள்ள, அவசரத்திற்கு பயன்படுத்த தயங்க வேண்டாம். சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது அடுத்து உறக்கம் கண்களைச் சுழட்டுவதால் படுக்கை விரித்து தூங்க வேண்டும்.

இருவருக்கும் சேர்ந்து படுக்க என்னமோ போலிருக்க இருந்த கொஞ்ச இடத்திலும் தனித்தனியாக எதிரும் புதிருமாக விரித்து படுத்திருந்தனர்.

என்னதான் மின்விசிறியின் காற்று தாலாட்டினாலும் கூட, மகேந்திரனுக்கு மனப்புழுக்கம் அதிகமாக இருந்தது.

“சாரி” என்றான் அவன்.

“ஏன்? எதுக்கு?”

“ம்ம்…” அசௌகரியங்களை குறிப்பிட தயங்கினாலும் இவளுக்கு புரிந்தது.

“இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் என்றுச் சொல்லித்தானே அழைச்சுட்டு வந்தீங்க… அதனாலென்ன பார்த்துக்கலாம்.”

அலட்சியமாக சொன்னவளின் மாளிகை அவனது கண்முன்னே வந்தது.

“ஆவ்…” கொட்டாவி விட்டவள் அவனிடம்,

“உங்களுக்கு லேடீஸ் சைக்காலஜி பற்றி தெரியலை ஆனாலும் ஒரு சிலது சரியாதான் செய்யறீங்க.”

“என்னது சைக்காலஜியா?”

“ம்ம்”

“எப்படி?”

“நீங்க இதெல்லாம் அதுதான் இந்த வீடு வசதிகள் இப்படி இருக்கும்னு சொல்லாம கொள்ளாமல் என்னை இங்கே அழைச்சுட்டு வந்திருந்தால் அது உங்களோட தப்பாக ஆகி இருக்கும். அப்படி ஆகி இருந்தால் எனக்கு ஒருவேளை உங்க மேல் கோபம் கூட வந்திருக்கலாம். ஆனால், இதையெல்லாம் நீங்க முன்னமே சொல்லவும், நான் மனதளவில் இதற்காக தயாராகிட்டேன். அதனால அதைத் தாண்டி யோசிக்க எனக்கு சுலபமா இருந்தது.”

“ஓ”

“இன்னொரு விஷயம் ….”

“ம்ம்”

“இது உங்க வீடுன்னா என் வீடும் தானே?”

“நிச்சயமா” அவசரமாக பதிலிருத்தான்.

“ஆனால் நீங்க என்னை பார்த்திருந்தீங்கல்ல… அந்த மாளிகை அது என் வீடு இல்லை, என் மாமா வீடு. அங்கே நான் கிட்டத்தட்ட ஒரு அகதி மாதிரி.”

பேச்சற்று கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு முழுமையும் சொல்லாமல்,

“உங்களுக்கு இன்னொரு லேடீஸ் சைக்காலஜி சொல்லட்டுமா?”

“சொல்லு”

“பொண்ணுக்கு தனக்கு உரிமையான இடத்தில வாழறதுதான் ரொம்ப பிடிக்கும், உரிமைதான் முக்கியம் எல்லா நேரமும் இடத்தோட பரப்பளவு முக்கியமில்லை.”

அவளை ஆழ பார்த்திருந்தான்.

“இன்னிக்கு இவ்வளவு கத்துக்கிட்டது போதும். அதிகம் கத்துக்கிட்டீங்கன்னா என்னை விட ஸ்மார்ட் ஆகிருவீங்க, அது எனக்குத்தான் ஆபத்து.”

சற்று நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தவளை மென்முறுவலோடு பார்த்திருந்தான்.

அடுத்த நாள் காலையே அவளது பொருட்கள் வந்து இறங்கி விட்டிருந்தன. அவ்வீட்டின் பரப்பளவை முன்னிட்டு சிலப் பொருட்களைத் தான் மும்பைக்கு வரவழைத்து இருந்தான். காலை உணவை கடையில் இருந்து வாங்கி உண்டனர்.

“பரவால்லியே இங்கே இட்லிலாம் கிடைக்குது” என்றவளிடம்,

“இங்கே எல்லாமே கிடைக்கும்.” என்றான்.

பாத்திர ஸ்டாண்ட், சின்ன கப்போர்ட் எல்லாம் பார்சலில் வந்திருக்க, மதியம் வரையில் அத்தனையையும் அடுக்க உதவினான். மதிய உணவையும் வெளியில் இருந்து வாங்கி வந்தான்.

“என் லீவு நேத்தே முடிஞ்சிருச்சு யாமினி, அரை நாளாச்சும் நான் இன்றைக்கு வேலைக்குப் போயே ஆகணும்” எனச் சொன்னவன் அவசர அவசரமாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

இரவு யாமினி சரளா அக்கா உதவியுடன் மார்க்கெட் சென்று வந்திருந்தாள். அன்று தங்கள் வீட்டில் முதன் முறையாக சமைத்திருந்தாள். வேலையில் இருந்து லோக்கல் ட்ரெயினில் பயணித்து வந்த மகேந்திரன் கூட்ட நெருக்கடியில் நைந்தவனாக திரும்பி வந்து இருந்தான்.

இரவு அவன் தனது பெற்றோருடன் அவன் பேசுகையில் அவளும் அவர்களோடு பேசினாள். இப்படி இருவரும் தினமும் அவர்களுடன் பேசுவது வழக்கமானது.

அவனது தாய் அவளுடன் பேசும் போதெல்லாம் அவளுக்கு தாங்கள் வாழ்வளித்த வள்ளல்கள் என்பது போலவும், ஊர் உலகத்தில் இல்லாத மகனை தான் அவளுக்கு விட்டுக் கொடுத்தது போலவும் நொடித்துக் கொண்டே பேசவும், இதனை விட ஆயிரம் மடங்கு பேச்சுக்களை கடந்து வந்திருந்தவளது எருமை மாட்டுத் தோலுக்கு அது பெரிதளவில் உரைக்கவில்லை.

“அவர்களது மகனின் பணத்தை வீண் செலவு செய்யக் கூடாது. பணத்தை எப்படி சேமிக்க வேண்டும்.” என தாய் மனைவிக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கையில் மகேந்திரன் சங்கடமாக அமர்ந்திருப்பான்.

“என் மகன் உழைக்கிறதில மிச்சம் வைக்கிறது போல சிக்கனமா வாழப் பழகு. இப்பவே சிக்கனமா இருந்தாதான் அங்க சொந்தமா வீடெல்லாம் வாங்கலாம்”

‘என்னது? சொந்தமா இங்க வீடா?’ சின்ன குடிசை வாங்கணும்னா கூட இருபதில் இருந்து இருபத்தியைந்து லட்சம் வேணுமே?’ மகேந்திரன் மனதிற்குள்ளாக புலம்பிக் கொண்டான். ஆம் மனதிற்குள்ளாகத்தான்.

அவனது படிப்பிற்கு கிடைத்த க்ளெர்க் வேலையில் அவனுக்கு கிடைக்கும் சம்பளம் 15000 மற்றும் சில படிகள். அதில் ஐந்தாயிரம் வீட்டு வாடகைக்கு அதனோடு கூட மற்றொரு ஆயிரம் தண்ணீர் பில் மற்றும் எலெக்ட்ரிசிடி பில்லிற்கு. அது போக ஊருக்கு அனுப்புவது மற்றும் தங்கைகள் திருமணத்திற்கென வாங்கி இருக்கும் லோன் இன்ஸ்டால்மெண்ட்கள் எல்லாம் கழிந்து அவனிடம் எப்போதுமே வீட்டுச் செலவிற்கென சொற்ப பணமே இருக்கும்.

காலை, மதிய உணவை பத்திருபது ரூபாய்களில் வடாபாவ், மிசல்பாவ் எனத் தின்று கழித்துக் கொண்டு இருந்தவனுக்கு அவன் பெற்றோர்கள் தங்கள் உறவினரான பாட்டியின் இறுதி விருப்பம் என திருமணம் செய்து வைத்து விட்டதோடு நில்லாமல், அந்தப் பெண்ணை அவர்கள் அதட்டுவதை கேட்க என்னவென்றுச் சொல்ல?

அவ்வப்போது அவனது தங்கைகளும் யாமினியிடம் பேசுவர். அவள் தேவைக்கு அதிகமாக எதையும் பேசுகின்றவள் இல்லை என்பதால் மதினி நாத்தனார்கள் உறவுகள் இதுவரை சுமூகமாக சென்றுக் கொண்டு இருந்தன.

இவனின் பெற்றோருக்கு மகனின் வருமானம் என்னவென்று தெரியாது, தாங்கள் செலவினங்களை இவன் தலையில் சுமத்துவது எல்லாம் புரியாது. ஆனால், சில நாட்கள் முன்பு மகனுடன் திருமணமான பெண்ணிடம் இப்படியெல்லாம் அதிகாரமாக பேச மட்டும் தெரியும்.

மாமியார் ஆனதுமே இப்படி புத்தி மாறி விடுமோ? அதிசயமான அதிசயம் தான் என மனதில் எண்ணிக் கொண்டாலும் வெளிப்படையாக இதனை சொல்ல முடியாது.

சொன்னால் என்னவாகும்? கல்யாணமாகி நாலு நாளில் அவ முந்தானையில் முடிஞ்சுக்கிட்டா என ஊரெல்லாம் ஒப்பாரி வைப்பதற்கா?

முந்தானையில் முடிவது எனும் எண்ணம் வந்ததும் மனைவியை எட்டிப் பார்த்தான். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சிணுங்கி, அழுது ஊரைக் கூட்டும் பெண்ணைக் கூட ஒரு விதத்தில் ஆண் எளிதில் அணுகி விடுவான். அறிவார்த்தமான பெண்ணை அணுகுவது ஆணை பொறுத்த வரையில் மிகவும் சிரமம்.

அன்போ, அரவணைப்போ எதையேனும் ஆசிக்கின்றவளை இழுத்து அணைத்துக் கொள்ளலாம். ஆனால், எல்லாவற்றையும் தீர்க்கமாக அறிகின்றவளுக்கு அவனென்ன அணைத்து ஆறுதல் சொல்வது? கலங்காமல் நிமிர்ந்து நிற்கின்றவளை எங்கே சென்று அரவணைப்பது?

யாமினி தன்னை விட வயதில் சிறியவள் என்றாலும் அத்தனை அழுத்தமான பெண். படிப்பும், தெளிவும் என நிமிர்வாக இருக்கின்றவளை தாலி கட்டியாகி விட்டது எனும் ஒரு காரணத்தால் எல்லாம் மிக எளிதாக அவனால் அணுகி விட முடியவில்லை.

ஒன்றாகத்தான் இருவரும் இருக்கின்றனர்.ஆனால், கணவன் மனைவியாக எனச் சொல்லும் படியாக அவர்களுக்கிடையே இன்னும் எந்த பிணைப்பும் ஏற்படவில்லை. இவனுக்கு ஒரு பக்கம் தாழ்வு மனப்பான்மையும் மற்றொரு பக்கம் பொருளாதாரச் சிக்கல்களும் இருக்கின்றனவே? இவர்கள் இணைந்து எத்தனை தூரம் பயணிப்பர் என்பதே காலம் மட்டுமே கணிக்க இயலும்.

இப்படியே கணவன் மனைவி என இவர்களின் இந்த புதிய உறவும், பற்பல குழப்பங்களுமாக என ஓட்ட ஓட்டமாக அந்த வாரம் கழிந்து முடிந்திருந்தது. ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் வரை தூங்கி எழுந்தான். அவனுக்கு தனது நோட்டு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டு இருந்தவள் கண்ணில் விழுந்தாள்.

“யாமினி நாம எங்கேயாவது சுத்த போயிட்டு வரலாமா?” என இவன் கேட்டதும் மகிழ்ச்சியாக தலையசைத்தாள். மதிய உணவு உண்டு விட்டு லோக்கல் ட்ரெயின் மூலமாக தாதர் மார்க்கெட் சென்று ஒரு சில மணி நேரங்கள் சுற்றி வந்தனர்.

மல்லிகைப் பூக்கள் முதலான எல்லா பூக்கள் பஜாரும் தாதரில் உண்டு. விமானம் மூலமாக தென்னகத்திலிருந்து ஃப்ரெஷ் ஃப்ரெஷாக பூக்கள் இங்கு வரவழைக்கப் பட்டு விற்கப்படும். இப்பூக்களை பெரும்பாலும் பெரும் வியாபாரிகள், மற்றும் முழம் பூக்கள் கட்டி விற்கின்றவர்கள் வாங்கிச் செல்வர். அது தவிர்த்து வீட்டு உபயோகத்திற்கு பூக்கள் வாங்குவோரும் உண்டு.

பொதுவாக மும்பையில் எந்த இரயில்வே ஸ்டேசன் அடுத்துச் சென்றாலும் துணிமணிகள் முதலான எல்லா பொருட்களும் வகைவகையாக மிக மலிவான விலையில் கிடைக்கும். தாதரிலும் சாலையின் இருமருங்கும் துணி வாங்க மற்ற பொருட்கள் வாங்க எப்போதுமே கூட்டம் இருக்கும்.

யாமினிக்கு கால் கிலோ மல்லிப் பூவும், பூச்சரம் கட்ட நூற்கண்டும் வாங்கிக் கொடுத்ததும் அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இன்னும் கால் கிலோ பூக்களை சாமிக்கு கட்டவென அவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டவள். பின்கள், கிளிப்புகள் என அங்கு அவனுக்கு சிலச் சில செலவினங்களை வைக்க, அவன் முகம் சுளிக்காமல் வாங்கிக் கொடுத்தான்.

பானிப் பூரி, பேல் பூரி, தஹி பூரி என இருவரும் ஒவ்வொரு வகையாக ருசி பார்க்க, வயிறு நிறைந்துப் போயிற்று.

திரும்ப வந்தது முதலாக யாமினி மணிக்கணக்காக அமர்ந்து பூக்களை கட்டி முடித்து தனது தலைக்கு வைத்து, அக்கம் பக்கம் பெண்களுக்கும் மல்லிச் சரத்தை பகிர்ந்துக் கொடுத்தாள். சாமிக்கு வாங்கி பூக்களையும் கட்டி அப்படியே செய்தாள். பூக்கள் அளவில் அதிகமாக இருந்ததல்லவா?

குளிர்சாதனப் பெட்டி வீட்டில் இல்லாத வகையில் பகிர்தல் சரியான தீர்வாக இருந்தது. வீடெல்லாம் நறுமணம் நிறைந்து இருக்க, அவள் மனதிற்கு நிறைவாக இருந்தது.

சமையல் முடித்து, உண்டு வந்து படுக்கை விரித்தனர். அவள் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

“ஏங்க பொண்ணுங்க வேலைக்கு போகிறதைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?”

“லேடீஸ் சைக்காலஜி படி பொண்ணுங்க வேலைக்கு போகிறதை தடை செய்தால் பிற்போக்குத்தனமான ஆண் என்று நினைப்ப… நான் சரியா சொன்னேனா?”

அவள் பொய்யாய் அவனை முறைத்தவாறு, “பார்த்தீங்களா ஒரு வாரம் என் கூட இருந்ததும் மூளை ஓவர் டைம் வேலை செய்யுது.நான் உங்க கிட்ட சைக்காலஜி கேட்கலை, உங்க ஒபீனியன் தான் கேட்டேன் சொல்லுங்க.” எனவும் சிரித்தான்.

“அது அவரவர் விருப்பம் பொருத்தது, உனக்கு வேலைக்கு போகணும் என்றால் போ.”

“தப்பா நினைக்கலின்னா ஒரு விஷயம் கேட்கட்டுமா?”

“ம்ம்”

“நீங்க ஏற்கெனவே சொன்னதுதான், கடன்கள் இருக்குன்னு. இப்ப கூட இந்த செலவெல்லாம் அதாவது வீடு வாடகைக்கு எடுத்தது, அப்புறம் இந்த பொருட்கள் எல்லாம் கடன் வாங்கிதானே செய்றீங்க?”

தயக்கமில்லாமல் “ஆம்” என ஒப்புக் கொண்டான்.

“இந்த கடன்லாம் நமக்கு திருமணமானதனால்தானே?, இல்லைன்னா நீங்க நினைச்சது போலவே நிதானமா உங்க வாழ்க்கையை வாழ்ந்திருப்பீங்க.”

“அப்படியும் கூட சொல்ல முடியாது யாமினி நான் பின்பு எப்போது கல்யாணம் செய்திருந்தாலும் இதே தான் நிகழ்ந்திருக்கும். மத்திய தர மக்களின் வாழ்க்கை கடனோடு கடப்பதுதானே? இதற்கெல்லாம் உன்னை காரணமாக்காதேமா.” என்றான்.

“…..”

“உனக்கு நான் அத்தனை வசதிகளை தர முடியாதே எனும் தயக்கத்தில் தான் நான் முன்பு உன்னிடம் பேசியது. மற்றபடி உன்னால் எனக்கு எதுவும் சிரமமில்லைமா. திருமணம் எனும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது நான் எனில் நான்தான் வருமானத்தை உயர்த்த வழி பார்க்க வேண்டும். ஏற்கெனவே வேறு வேலை தேடிக் கொண்டு இருக்கின்றேன்.”

“……”

“நீ வேலைக்கு போவது உன்னுடைய விருப்பம்தான். எனக்காக என எண்ணி உன்னை நீயே சிரமப் படுத்திக் கொள்ளாதே யாமினி.”

“எனக்கு வேலைக்கு போக வேண்டும்.”

“ம்ம்… உனக்கு ஹிந்தி தெரியாது, ட்ரெயினில் எங்கேயும் போக வரத் தெரியாது. எப்படி சமாளிப்பாயாம்?”

“தெரியாதென்றால் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். இப்ப இணையத்தில எத்தனை கத்துக்கலாம். ஹிந்தி என்ன பெரிய விஷயமா? அது ஒரு மொழிதானே?”

பாட்டி வாங்கிக் கொடுத்த மொபைலை என தன் குருவை அறிமுகப் படுத்தினாள். கடந்த ஒரு வாரத்தில் தான் கற்ற ஹிந்தி வார்த்தைகளை அவனிடம் பட்டியலிட்டாள். அவளது நோட்டுப் புத்தகம் ஏற்கெனவே நிறைந்து இருந்தது.

அவளது ஆர்வத்தையும், தெளிவையும் துணிவையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேர்மறை எண்ணங்கள் தொற்றுமாமே? அவள் அருகில் இருப்பதாலேயே அவனுக்கும் நம்பிக்கை பெருகியது.

“எனக்கு நடனம் தெரியும், கணிணித் தெரியும் என்னோட தகுதிக்கு எங்கே எல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கே எல்லாம் வேலைக்கு அப்ளை செய்து வைத்திருக்கிறேன்.” என அவனிடம் தன்னம்பிக்கையாகச் சொன்னாள்.

சில மாதங்களில் ஒரு நடனப்பள்ளியில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. அவளது பணியிடம் தூரமாக இருக்கவே இருவரும் காலை முதலே சேர்ந்து அனைத்து வேலைகள் செய்து புறப்படுவர். இரவு யார் முன்பாக வந்தாலும் சமையலை ஆரம்பித்து விடுவர்.

உழைப்பின் அருமை புரிந்த தம்பதியர் வாழ்வில் முன்னேற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. சில மாதங்கள் கழிந்த பின்னர் சற்று வசதியான வீட்டில் குடியேறினர். ஆனால், அவர்களுக்குள்ளாக எதுவும் மாறி இருக்கவில்லை.

திருமணமான முதல் வருட கொண்டாட்டத்தை சமீபத்தில் சின்னதாக தங்களுக்குள்ளே வாழ்த்துகள் தெரிவித்து கொண்டாடி இருந்தார்கள்.

வேலையில், செலவில் பாதிப் பாதி என மனைவி பொருளாதார ரீதியாக அவனுக்கு உதவுவது அவனுக்கு பிடித்துத்தான் இருந்தது. கொஞ்சம் நிதானமாக மூச்சு விட்டாற் போல இருந்தது. ஆனால், மகேந்திரனின் அந்த நிதான மூச்சிலும் சில முட்கள் இருந்தன.

இருவரும் வாழ்வின் நெருக்கத்தில் வெறுமனே நண்பர்கள் போல இருப்பதே அன்றி கணவன் மனைவியாக இல்லாத போது அவளை வீட்டுச் செலவுகள் செய்ய அனுமதிப்பது அவனை நெருடியது.

அவனது தாழ்வு மனப்பான்மை அவளை நெருங்க அனுமதிப்பதாக இல்லை.நாங்கள் நண்பர்கள் மட்டும் தானா? ஒரு சில விளையாட்டுப் பேச்சுக்களும் சிரிப்புக்களும் மட்டும் போதுமானதா? அவன் மனதிற்குள்ளே தடுமாற்றங்கள் நிகழ ஆரம்பித்து இருந்தன.

மகேந்திரன் இப்போது பெரிய புத்தகக் கடையில் வேலைக்கு சேர்ந்திருந்தான். வேலையைப் போலவே சம்பளம் அதிகம்.பணி முடிந்து இவன் நொந்து நைந்து வருகையில் யாமினி மட்டும் இன்னுமாக பொலிந்து வருவாள்.

சமையலறையில் நிற்கும் போதே அவள் குரல் ஜதிகளை இசைக்கும்.

இரசித்து இரசித்து செய்யும் போது அது வேலையா என்ன? அது அவளது மனதை மலர்த்தும் வித்தையல்லவா? சிறு குழந்தைகளுக்கு அபிநயங்களை கற்பித்து அவர்கள் அதனை செய்வதை பார்க்கையில் கண்களில் தனிப்பட்ட பற்பல கனவுகள் விரியும். அதை பகிரப் போனால் கேட்கத்தான் எதிரில் ஆளிராது… ‘ம்ஹீம்… புது வேலையாம் …பிசியாம் ரொம்பத்தான்’

“மஹேன்… இன்னிக்கு எங்க நாட்டியாலயாவில் ஒரு ஜோக்… அந்த ஃப்ளர்ட் பத்தி சொன்னேன்ல…” இவள் ஆரம்பிக்கவும் அன்று அவன் அவளுக்கு முன்பாக சுருண்டு தூங்கி விட்டிருந்தான். நிஜமாகவே தூங்கி இருந்தானா?!

“மேரீட்னு சொல்லியும் கேட்க மாட்டேன்கிறானப்பா. நீங்க வந்து ஒரு நாள் பேசுங்க.”

என அவள் சொல்லிய அன்று தன் அலைபேசியில் வராத அழைப்பு வந்ததாக பாவித்து மகேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தான்.

அவனுக்கு என்னவாகிற்று? என அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.இப்படியே சில நாட்கள் கடந்திருந்தன…

அன்று வேலை நேரத்தில் மகேந்திரனின் அலைபேசி இசைத்தது. இந்த பரபரப்பான நேரத்தில் யாரழைத்தது?

“ஆப் மகேந்திரன் ஹோ க்யா?” ( நீங்கள் மகேந்திரனா?)

“ஹாஞ்சி” (ஆமாங்க)

“மை லலித், முஜே ஆப்சே பாத் கர்னா ஹை.” (நான் தான் லலித், உங்க கிட்ட பேசணுமே?)

அலைபேசியின் உரையாடலின் முடிவில் சாயங்காலம் அந்த கஃபேயில் மகேந்திரனும் லலித்தும் சந்தித்தனர்.

“எனக்கு யாமினியை பிடிச்சிருக்கு… அவளை கட்டிக்க விரும்புறேன்.”

“இதை என் கிட்ட வந்து கேட்க என்னத் திமிர்? நான் அவ தகப்பனில்ல…புருசன்.”

“அவளோட திறமைக்கும், அழகுக்கும் நீங்க எப்படி பொருத்தம்……….” அடுத்த நொடி அடியின் வேகத்தில் அவன் கன்னம் சிவந்து எரிந்து இருந்தது.

“ஹே மேன் என்னையே அடிச்சிட்டியா? யூ யூ…”

“இனி ஒரு தடவை அவ பக்கம் உன்னை பார்த்தேன் வெட்டி பொலி போட்டிருவேன்” மகேந்திரனின் மீசை துடிக்க, கண்கள் சிவந்திருந்தன. லலித் நடுங்கியவாறு அங்கிருந்துச் சென்றான்.

பில்லைக் கட்டியவன் தங்களைப் பார்த்துக் கொண்டு கூடி நின்ற கூட்டத்தை கண்டுக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தான். சற்றுத் தள்ளி ஆளரவமற்ற இடம் தேடி அமர்ந்தான். கோபத்தில் இன்னும் அவனது கைகள் நடுங்கிக் கொண்டு இருக்க, தனது அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைத்தான்.

“யாமி…” மூச்சு வாங்கியது.

“மஹேன் என்ன செய்யுது?”

“எங்க இருக்க?”

“வீட்டிலத்தான், உனக்கு என்ன சமைக்கட்டும்?”

அலைபேசியை துண்டித்தவன் ‘செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு கூலா என்ன சமைக்கட்டும்னு கேள்வி வேறயா?’ கடுப்பில் எழுந்து நடந்தான்.

லோக்கல் இரயிலில் இருந்து இறங்கி ரிக்ஷா பிடித்து வீட்டை அடைய இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது.

தனக்காக தாளிடப்படாமல் இருந்த கதவை திறந்து உள்ளே வந்து தாளிட்டான். வந்தது யாரென சமையலறையினின்று எட்டிப் பார்த்தவள் படுக்கையறையின் உள்ளே சென்றாள்.

‘திமிரைப் பாரு’ அவளை பின் தொடர்ந்தான்.

ஈரக் கைகளை துடைத்துக் கொண்டு இருந்தவள் முன்பு தன் சாந்தம் தொலைத்து உக்கிரமாய் நின்றான்.

“லலித்துக்கு என் நம்பர் ஏன் கொடுத்த?”

“அவன் கேட்டான், அதனாலக் கொடுத்தேன்.”

“அதெப்படி கொடுப்ப… உனக்கென்ன அவ்வளவு திமிர்?”

“அதெல்லாம் என் திமிர் உங்களை விட குறைச்சல்தான்.”

“கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு”

சரேலென அவளை தன் புறம் இழுத்தவன் ஆக்டோபஸாய் நெருக்கி கட்டிக் கொண்டான். அவள் முகத்தை மட்டும் நிமிர்த்தியவன்

“உன்னை கல்யாணம் கட்டிப்பானாமே?” தீக்கங்குகளாய் அவனது கண்கள் அவளை எரித்தன.

“அப்படி அவன் தானே சொன்னான்?”

“அதெப்படி அவன் அப்படிச் சொல்லலாம்?” உறுமினான்.

“அப்படி நான் சொன்னா ஏன்னு என் கிட்ட கேளு மஹி, எவன் எவன் சொன்னதுக்கெல்லாம் வந்து என் கிட்ட கணக்கு கேட்காத. நான் பேசினா என் புருசனே காது கொடுத்து கேட்க மாட்டான் நான் அந்த கடுப்பில இருக்கேன்.” பொரிந்தவளது குரல் சட்டென்று அவன் வாய்க்குள்ளாக தேய்ந்தது.

போராட விரும்புகின்றவள் தானே போராடுவாள் இவள் அவனுக்குள் அடைக்கலமாக துடித்துக் கொண்டு இருந்தவள் தானே? கிடைத்தது வாய்ப்பென்று அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டாள். அவனது நிலை இன்னும் மோசமானது.

உதடுகளை விடுவித்தவன் மறுபடி முனகினான்.

“அதெப்படி அவன் என் கிட்ட அப்படி கேட்கலாம்?”

“போடா போ… ஷராபி (குடிகாரன்) மாதிரி உளறாத…” கோபத்தில் வெடுவெடுத்தவளை மறுபடி இறுக்கிக் கொண்டான்.

அடுத்த மணித் துளிகளில் அவனது தாழ்வு மனப்பான்மை தாண்டி மனைவி மேல் இருந்த உரிமையுணர்வு வென்றிருந்தது.

அவனுக்கு லலித் மீதிருந்த கோபங்கள் அர்த்தமற்றவை என அவன் கைகளுக்குள் இருக்கும் காதல் மனைவியின் அணைப்பு உணர்த்திய கணத்தினின்று தனது இயல்புக்கு மாறினான். புதிதாக எழுந்திருந்த தாபங்கள் அவனது கோபத்தை மீறி இருந்தன. மனைவியை கொண்டாடித் தீர்த்தான்.

இங்கே தாழ்வு மனப்பான்மை எனும் முள்ளை பொறாமை எனும் முள் எடுத்து எறிந்து விட்டிருந்தது.

வேர்த்து விறுவிறுத்துக் கிடந்தவளை மார்பிலிருந்து விலக்கி முகம் துடைத்தான். குனிந்து அவளுக்கு முத்தம் வைக்கப் போக அவள் வீஞ்சிக் கொண்டு முதுகுக் காட்டிப் படுத்தாள்.

“மன்னிச்சுக்கோ ஒரு மாதிரி ஜெலஸ் ஆகிட்டேன்.”

“யார் தப்பு?”

கலைந்த உடைகளை சரிப்படுத்திக் கொண்டு இருந்தவளை உன்மத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தவன்,

“இப்ப இல்லை எப்பவுமே என் தப்புத்தான்” என்க,

“ம்ம்… அஃது” மனம் விட்டுச் சிரித்தாள். மனதின் இறுக்கங்கள் அகல வளியானவளின் சிரிப்பை தன் கண்களில் நிறைத்துக் கொண்டான். இப்போது அவ்வளியானது அவனது இரத்த நாளங்களில் புது மலர்ச்சியை பரப்பிச் சென்றிருந்தது.

“வாங்க பசிக்குது” சுத்தம் செய்து உணவு மேடையில் சென்று அமர கணவனும் அருகில் வந்து அமர்ந்தான்.

அன்றைய உணவு பறிமாற்றம் உணர்வுகளின் பறிமாற்றங்களுமாகி விட யாமினியின் கனவுகளில் அன்று அவர்களின் சின்ன பிரதியான ஒரு குட்டிச் சிட்டு “தகதிமி, தகஜொனு” என ஜதி இசைத்துக் கொண்டு இருந்தது.

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here