2. பேராண்மை

0
523

பேராண்மை

அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே.அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.

பெற்றவர்கள் பேசி அவர்கள் திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்.இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே. இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்.ச்சேச்சே… அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது? அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்… அது அவளே தான்…! சத்யா, சத்யாவா அது, ஹரியால் ஒரு நிமிடம் அதை நம்பவே இயலவில்லை.

அவன் திகைப்புக் கொண்டது அவள் யாரோடோ பைக்கில் செல்வதைக் கண்டதால் அல்ல , எந்நேரமும் மின்னும் புன்னகையோடோ, எதையாவது விடாமல் தொண தொணத்துக் கொண்டோ, முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டவாறு யாரையாவது கிண்டல் செய்து ,வெடிச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த பெரிய கண்களைச் சுழட்டுவதாகவோ காணப்படும் அவள் முகத்தில் இன்று ஏன் இவ்வளவு குழப்பம்?

ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அவன் ‘உள்மனம்’ உணர்த்தியது.ஏனென்றால், ‘உள்ளே’ இருப்பவள் அவளல்லவா?! சிறிது தொலைவில் அவளைப் பின்தொடர ஆரம்பித்தான் அவன்.

அவளை அறிமுகப் படுத்தியதுஅம்மாவின் தோழி ஒருவர்தான், தனியார் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும்,நல்லக் குடும்பத்தைச் சார்ந்த நல்ல குணமுள்ளப் பெண் என்று அறிமுகப் படுத்த அவளைப் பார்த்து விட்டு வந்த அம்மா அதையே வழிமொழிய, ஒரு சுப தினத்தில் அவளை பெண் பார்க்கச் சென்று, அவள் போன் நம்பர் பெற்று வந்தது , இரவும் பகலுமாக பேசித்தீர்த்ததுமாக அனைத்து நினைவுகளும் மேலெழுந்தன.

இவர்களைப் பொறுத்த மட்டில் பேசித்தீர்ப்பது என்பது சரியான பதமில்லையோ?! அவள் பேசித்தீர்த்தாள், இவன் கேட்டுத்தீர்த்தான் என்பதே சரி போலும், அப்படி ஒரு “சாட்டர் பாக்ஸ்” அவள். ஒருவேளை அவளை சாப்பிடாதே என்றால் கூடக் கேட்டுக் கொள்வாள் போல, ஆனால் பேசாதே என்றால் அவளால் இயலாது என நினைத்துச் சிரித்துக் கொள்வான்.
தன்னுடைய இயல்பும் கூட இப்படி மாறிவிட்டதே , இதே மாதிரி அம்மா அவனிடம் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து பேசினால் முன்பெல்லாம் எவ்வளவாக அவன் சிடு சிடுப்பான் இப்போது சத்யா பேசுவது “இன்னொரு முறைச் சொல்லுங்க” விளம்பரத்தைப் போல மேலும் மேலும் கேட்க ரெடியாகி விட்டானே?

என்னதான் அம்மா சொல்லி அவளைப் பெண் பார்க்கச் சென்றிருந்தாலும் அவளைப் பார்த்ததும் பிடித்திருந்ததா? எனக் கேட்டால் அவனுக்கு அப்போதுச் சொல்லத்தெரியவில்லை. முன்பின் அறியாத பெண்ணை, பத்து பதினைந்து பேர் இவர்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்துக் கொண்டு சுற்றி அமர்ந்து இருக்கும் ஒரு சூழலில், ஒரு சில மணித்துளிகளில் பார்த்து அறிந்துக் கொள்வது சாத்தியமா? அதில் எப்படிப் பட்ட புரிதல் இருக்கும்(?!). இந்தியத் திருநாட்டில் இந்த ஃபார்முலா இவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் காரணம் என்ன? என்று அந்நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவளோடு பேசின இந்த சில வாரக் காலங்களாகத்தான்அவள் மேல் உண்மையான விருப்பம் வந்தது என்றே அவனுக்குத் தோன்றியது .வெளிப்படையான அவள் பேச்சு, அவன் மனதைக் கவர்ந்துக்கொண்டதில் சந்தேகமென்ன? இதோ இந்த மாதிரி பைக் சம்பவம் குறித்தும் அவள் ஏற்கெனவே பகிர்ந்துக் கொண்டு இருக்கிறாளே?

” நம்ம மக்களைத் திருத்தவே முடியாது ஹரி , அன்றைக்கு அப்படித்தான் என் கூட வேலைப் பார்க்கிற மனோஜ் என்னை ட்ரோப் செய்தான்.அவனை நான் வீட்டுக்குக் கூப்பிட்டேன், வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டுப் போனான். பக்கத்து வீட்டில இருக்கிறவங்க எல்லாம் இந்த பையனை உன் மகளுக்கு பார்க்குறியான்னு அம்மாகிட்ட விசாரிச்சிருக்கிறாங்க…எனக்கு வந்த கோபத்துக்கு…என அவள் பொறும … எனக்கும் உள்ளுக்குள் தாங்க முடியாத பொறாமை ஏனென்றால் அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் லிஸ்டில் உயராமாய், கட்டழகனாய் இருந்த அவன் உருவம் அப்போது என் கண்முன் நிழலாடியதே? …எதிர் முனையில் என்னவள் அயராது தொடர்ந்தாள்.

அவன் என்னை விட ரொம்ப டாலா இருப்பான் ஹரி, ஆனா என்னை விட ஃபோர் இயர்ஸ் சின்னவன், என் தம்பியா தான் அவனை நான் நினைச்சுட்டு இருக்கேன். மற்றவங்க ஒண்ணும் புரியாம பேசும் போது எவ்வளவு கோபம் வரும்னு தெரியுமா?(அப்பாடா நாலு வயசு சின்னவனா? அப்போ பரவாயில்லை அல்பத்தனமாக சந்தோஷப் பட்டது மனது) . சின்ன வயசில அண்ணாதான் என்னை சைக்கிள்ல ஸ்கூல் கூட்டிட்டுப் போவான், கொஞ்சம் பெரியவளானதும் அம்மா என்னை கூட்டிப் போக விட மாட்டாங்க…என்னதான் அண்ணன் தங்கையா இருந்தாலும் மற்றவங்க என்ன நினைப்பாங்கன்னு அம்மா சொன்னது கேட்டப்போ அவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?

“நான் இப்போல்லாம் அம்மா சொல்றது கேட்கிறது இல்ல அடம் பிடிச்சி காலை ஒரு நேரமாவது அண்ணாவை பைக்ல என்னை ஆஃபீஸ் விட்டு வர சொல்லி இருக்கேன்” என்றவளை ,

“சரி, உங்கிட்டதான் ஸ்கூட்டி இருக்கே அதில போறதுக்கு என்ன?”

என்றுக் கேட்டால்,

“எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப பயமா இருக்கு ஹரி…”

என்று அவள் சொல்லும் விதத்தில் கேட்டுக் கொண்டு இருக்கும் இவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“ஸ்கூட்டி ஓட்டத் தெரியலை, வாய் மட்டும் நல்லாப் பேசு”

என்று சொல்லிச் சிரிக்க மறுமுனையில் அவள் சிணுங்குவாள். இதோ ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நிச்சய மோதிரம் மாற்றி இரண்டே நாளாகிறது. லீவு முடிந்து இன்று ஆஃபீஸில் ஜாயின் செய்வதாகக் கூறியிருந்தாள்.

இப்போது முன்னே சென்றுக் கொண்டிருக்கும் பைக்கின் திசை மாறி ஒரு பெரிய பாலத்தில் ஏறும் வழியில் சென்றுக் கொண்டிருந்தது. சத்யாவோ பைக்கில் முன் பக்கம் சற்றுக் குனிந்து என்னவோச் செய்துக் கொண்டிருக்கிறாள் ஒன்றும் புரியவில்லை.

விர்ரென பைக்கின் சப்தத்தின் நடுவிலும் மெஸேஜ் டோன் ஒலிக்க , மனதில் ஏதோ தோன்ற பைக்கை ஓரத்தில் நிறுத்தி என்னவென்று வாசித்தான்.

” ஹரி, எதுவும் புரியவில்லை. ஆனால்,ஏனோ பயமாக இருக்கிறது xxx …பாலம் வழியாகச் செல்கின்றேன், நீயும் வா.சற்று நேரத்தில் நான் போன் செய்கையில் அட்டென்ட் செய்துக் கொண்டு கேட்கவும்.ஆபத்து எனத் தோன்றினால் என்னைக் காத்துக் கொள்ளவும்.”

வாசித்த ஹரியின் மன நிலையை என்னவென்றுச் சொல்ல?, பைக்கை மறுபடியும் ஸ்டார்ட் செய்து அசுர வேகத்தில் இயக்கினான். இதோ அவன் தன்னவளை சற்று முன் கண்டுக் கொண்டான். அந்த பைக்கை மிதமான வேகத்தில் பின் தொடர்ந்தான்.

மனதிற்குள்ளாக “கண்ணம்மா, பயப்படாதே நான் இருக்கிறேன்” என்றுச் சொல்லிக் கொண்டான். அவளுக்கு மெஸேஜ் செய்யும் கால அவகாசம் கூட அவனிடம் இல்லையே?.. எனவே காற்றை விட , இன்டெர்நெட்டை விட வேகம் கொண்ட அவன் எண்ண அலைகள் மூலமாக செய்தி அனுப்பினான், அது அவளைச் சேர்ந்திருக்கும் என நம்பினான்.

சற்றுத்தூரம் சென்று சத்யா பயணித்த பைக்காரன் நடுப்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி, இறங்கி அவளை அழைத்தவாறே முன்னேறிச் சென்றான். அங்கே பாலத்தில் வாகனங்கள் பயணிக்கும் சாலையை தவிரவும்,ஆட்கள் நிற்கும் படியான அமைப்பு இருந்தது.அதே நேரம் சத்யா தன் போனை எடுத்து ஹரியை அழைத்து தன் பேகின் உள்ளேயே போனை வைத்து விட்டாள். ஹரியும் 10 அடித்தூரம் தள்ளி பைக்கை நிறுத்திச் சற்றுத் தொலைவில் நின்று அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தவன், போனைக் காதுக்குக் கொடுத்தான்.சுற்றும் முற்றும் பார்க்க வெகு இடைவெளிகளில் சில பல மனிதர்களை தனிமையில் புகைத்தவாறோ, ஏகாந்தத்தில் திளைத்தவாறோக் கண்டாலும் ஆட்களற்ற, அதே நேரம் விரைவாக வாகனங்கள் மட்டுமே பயணிக்கும் அந்த பாதை ஆபத்தான செயல்கள் புரிய ஏற்றதே என்றுப் புரிந்தது.

அது யாராக இருந்தாலும் சரி,அவனுக்கு சத்யாவை இங்கு அழைத்து வர வேண்டிய தேவை என்ன?அவன்தான் அழைத்தாலும் இவளுக்கு அறிவில்லையா? என ஹரி பொறுமிக் கொண்டு இருந்தான். ஹரி இப்போது சற்றுக் கவனித்துப் பார்க்கையில் நேரில் பார்த்திராவிட்டாலும் சத்யாவை அழைத்து வந்தது மனோஜோ என அவனுக்குத் தோன்றியது.

சத்யாவின் முகத்தின் குழப்ப ரேகைகள்… ஹரி பின்தொடர்ந்து வந்தது அவளுக்கு தெரியாததால் ஹரியை தேடவும் தோன்றாமல் என்ன செய்வது என்றுப் புரியாமல், அவளை அழைத்து வந்தவன் எங்கோ பார்த்தபடியே நிற்க அவன் அருகேச் சென்று நின்றாள்.

“மனோஜ் ,முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றுச் சொன்னாய் என வந்தேன். ஆனால் இவ்வளவு தூரம் என்னை எதற்காக கூப்பிட்டு வந்திருக்கிறாய்? இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் இருட்டி விடும், வீட்டில் நேரமே போய் சேர வேண்டும் இல்லையென்றால் எல்லோரும் கவலைப் படுவார்கள். சீக்கிரமாகச் சொல்.

அவனோ , நீ என் காதலுக்கு உதவி செய்வதாக சொன்னாய் இல்லையா சத்யா?
ஆமாம் சொன்னேன், நீ தான் அது யார் என்று சொல்லவில்லையே…சொல் நான் வேண்டுமென்றால் அவளிடம் பேசுகிறேன். இதை நீ ஆஃபீஸில் கூடச் சொல்லி இருக்கலாமே?!..

ம்ம்…பெருமூச்சு அவனிடத்தில்…
சொல்ல முடிந்தால் ஏன் சொல்லாமல் இருக்கப் போகிறேன்?..
உனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது இல்லையா?

ஆமாம் அதுதான் உனக்குத் தெரியுமே, அதற்கு என்ன?

நீ அவனை திருமணம் செய்ய முடியாது என்றுச் சொல்லி விடு…

ஏன்?

ஏனென்றால் நான் தான் உன்னை காதலிக்கிறேன், அப்படி என்ற நான் தானே உன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்?

என்ன? அப்பட்டமாக அதிர்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.

நீ எனக்கு தம்பி மாதிரி, என்னை விட 4 வயது சிறியவன், எல்லாவற்றையும் விட நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை. நீ இப்படி சொல்வாய் எனத் தெரிந்து இருந்தால் நான் உன்னோடு இங்கு வந்திருக்கவே மாட்டேன்.

4 வயசு என்ன பெரிய விஷயமா? இப்போ கூட பாரு என் முன்னால நீ என்னை விட சின்னவளாக தான் தெரிகின்றாய். எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. இதுவெல்லாம் பெரிய விஷயமா? ஏன் சச்சின்…

டேய் நிறுத்துடா, கண்டபடி பேசிக் கிட்டு சச்சின் திருமணம் செய்தார்னா அவருக்கும் அவர் மனைவிக்கும் காதல் ,உனக்கும் எனக்கும் நடுவில அப்படி ஒண்ணும் இல்லங்கிறேன் , சொல்ல சொல்லக் கேட்காமல் அறிவுக் கெட்டத்தனமா பேசுறதப் பாரு…வெடித்தாள் அவள்.

ஏன்? எனக்கென்ன குறை?, உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க பாரு அவனும் அவன் கலரும் காக்கா தோத்துப் போயிடும்.

இங்க பாரு என் புருஷன மட்டும் எதும் சொன்னே…எனக்கு வர்ற கோபத்துல உன்ன இங்கயிருந்து தள்ளி விட்டுடுவேன் சொல்லிட்டேன்.

அப்போ வா நம்ம ரெண்டு பேரும் விழுந்துச் செத்துடலாம், நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல சத்யா …வா…

என அவள் கையைப் பிடிக்கச்செல்லும் முன் கன்னத்தில் டொம்மென்று ஏதோ சத்தம். காதுக்குள் ங்கொய்ய்…என்றது . சுயமாக ஒரு நிலையில் நிற்க அவனுக்கு ஒரு சில நிமிடம் தேவைப் பட்டது.

ஒருவழியாக சுதாரித்து நின்று எதிரில் பார்க்கையில் சத்யா தன்னை மீறிய பயத்தில் நடுங்கியவாறு ஹரியிடம் ஒண்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது.தன்னை ஆத்திரத்தோடு உறுத்துக் கொண்டிருக்கும் ஹரியை ஏறிட்டுப் பார்க்கவும் கூட அவனுக்கு துணிவில்லை.

ஹரி… என மேலும் நடுங்கினாள் சத்யா.
ஒண்ணுமில்லை, நீ பயப்படாதே என்று அவளை ஆறுதலாக தலையை வருடியவனின் பார்வையை எதிர்கொள்ளவும் துணிவில்லாமல், இன்னும் ஒரு அடியை நம்மால் தாங்க முடியாது எனப் புரிந்தவனாக…

ஸாரி சத்யா…

ஸாரி ஸாரி சர் என்றுச் சொல்லி
அவசரமாய் மனோஜ் தன் பைக்கை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

ஹரி சாரி…

அவனுக்கு இப்படி எண்ணம் இருக்கும் என எனக்கு தெரியாது. ஆஃபீஸில் ரொம்ப நல்லமாதிரி நடந்துக் கொள்வான்.
ஏதோ ஹெல்ப் கேட்டான் அதனால் தான் வந்தேன். பாதிவழியில் மனசுக்கு சரியாப் படவில்லை கொஞ்சம் குழப்பமாவே இருந்தது.வருடக் கணக்காக பழகியவனை சட்டுன்னு சந்தேகப்படவும் தோணாமல் இருந்தது. இந்த பாலம் கிட்டே வரவும் உங்களுக்கு மெஸேஜ் செய்தேன். எனக்கு எதுவும் ஆனாலும் உங்களுக்கு தெரிய வேணும்னுதான் உங்களுக்கு போன் செய்தது.

சத்யா …இப்போது உணர்ச்சிவசப்படுவது ஹரியின் முறையானது.“அப்படி எதுவும் ஆக நான் விடமாட்டேன் கண்ணம்மா,இனிமேல் ஒருமுறை இப்படிச் சொல்லாதே”

அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் அவன்.

வீட்டிற்கு சென்று சற்று நேரம் கழிந்த பின்னரே அந்நிகழ்வின் பாதிப்பு அவர்களிடம் மெதுவே குறைந்தது.
இரவின் தனிமையில் அவர்களுக்கேயான போன் உரையாடல் ஆரம்பிக்க,

சத்யா, நீ அந்த மனோஜிடம் கொஞ்சம் கவனமாகவே இரு. அவனை கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது நல்லது என்றே தோணுது. ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் உன் வீட்டில் கவலைப் படுவார்களோ என்று யோசிக்கிறேன். எதற்கும் ஒரு முறை நாளை நான் காலை உன் வீட்டில் வந்துப் பேசுகிறேன்.

ம்ம்…

என்ன…

ஹரி, நான் இனிமேல் வெளியில் யார் கூடவும் பேசவேக் கூடாது என நினைத்து இருக்கிறேன்.

இதென்ன தவறான எண்ணம், யாரிடமும் பேசாமல் எப்படி இருக்க முடியும். இன்றைக்கு நிகழ்ந்ததில் உன் தவறு என்ன இருக்கிறது? வீணாக மனதை குழப்பாதே சத்யா. ஒரு எல்லைக்குள் எல்லோரிடமும் பழகு, ஆனால் மிதமிஞ்சி யாரையும் நம்பாதே சரியா…

ம்ம்…

ஆனால், ஒரு ஆபத்து என்றதும் உன் அப்பா, அண்ணாவை அழைக்காமல் என்னை அழைத்தாய் பார்த்தாயா? எனக்கு இன்னும் வானத்திலேயே மிதந்து கொண்டே இருக்கிற மாதிரி இருக்கு தெரியுமா? … நான் உனக்கு அவ்வளவு ஸ்பெஷலா செல்லம்?

ம்ம்க்கும்…ரொம்பல்லாம் செல்லம் கொஞ்ச வேண்டாம்.அப்பாவ கூப்பிட்டிருந்தா அட்வைஸ் சொல்லி சொல்லியே காதில் ரத்தம் வந்திருக்கும். அண்ணாவ கூப்பிட்டிருந்தா மனோஜீக்கு மட்டுமில்ல எனக்கும் கன்னம் பழுத்திருக்கும். அதான் உங்கள கூப்பிட்டேனாக்கும்…

என் சத்யா ஃபார்மிற்கு வந்து விட்டாள்…ஆசுவாசமாகினான் அவன்.

ஏன் சத்யா? அவன் நான் காக்கா கறுப்புன்னு சொன்னவுடனே ஏன் உனக்கு அவ்வளவு கோபம்?பாலத்தில தள்ளி விடப் பார்த்த நீ…ஒரு நிமிஷம் நானே பயந்திட்டேன்.

பின்ன அவன் ஒரு அறிவுக் கெட்டவன், உங்கள ஏதாவது குறை சொல்லணும்னு சொல்லிட்டிருக்கான் அவனை சும்மா விட்டதே தப்பு.

சரி சரி அமைதி…அமைதி…

ஏன் ஹரி மனிதனுக்கு அழகு தோல் நிறத்தில இருக்குதா என்ன? …அதுவும் ஆண்களுக்கு எது அழகு தெரியுமா?..

சொல்லு…

நான் உங்க மனைவின்னு தெரிந்தும் என்னிடம் தவறான எண்ணத்தோடு பேச வந்த மனோஜின் புற அழகு , அவன் உயரம், நிறம் எல்லாம் உண்மை அழகில்லை ஹரி…

இலக்கியத்தில எப்பவோ படிச்ச ஞாபகம்,என் மனசில தங்கி விட்ட விஷயம் இது. பிறன்மனை நோக்காமை என்னும் பேராண்மை, ஆம் பேராண்மைதான் அழகு ஹரி.

அது உங்களிடம் இருப்பதை உணர்ந்த பின் தான் நம் திருமணத்திற்கு நான் சம்மதம் சொன்னதே. எனக்கு உங்களுடைய அந்த அழகு போதும் ஹரி…

அங்கே தன் மனைவியாக வரப் போகிறவளின் இந்த பேச்சைக் கேட்டுப் பேச்சற்று நின்றான் அவளுடைய பேராண்மையாளன்.

முற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here