4. மறக்க முடியுமா?

0
495

மறக்க முடியுமா?

நவம்பர் 1 2016:

அம்மா சம்பளம் வந்திடுச்சி……இந்த மாசம் எப்படியாவது நீங்க சேர்த்து வச்சிருக்கிற பணம் எல்லாம் சேர்த்து அந்த நெக்லஸை வாங்கிடலாம்மா…………

மகளின் பேச்சைக் கேட்டு அம்மாவின் முகம் பிரகாசித்தது. எத்தனை கால ஆசை இது, இதோ இப்போது தான் கைக் கூடப் போகிறது. அந்த நகைக் கடையில் விலைக் கேட்டு வந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாய் ரூபாய் சேர்த்து இப்போது தான் எப்படியோ முழுதாக ஒரு லட்சம் சேர்த்து விட்டாள். அத்தனையும் சூதாடியான தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் சேர்ப்பதற்க்குள் அவள் பட்டப் பாடு.

வீட்டில் எங்கு வைத்திருந்தாலும் அதை தேடி எடுத்துக் கொண்டுச் சென்று விடும் கணவனின் சமார்த்தியத்தை விட அவள் மிஞ்ச வேண்டியதாகி விட்டது. ஒரு நேரம் அரிசி டப்பாவில் என்றால் மறு நேரம் தலைகாணிக்குள்ளாக என்று தினமும் பத்திரப் படுத்தி வைப்பதற்க்குள் அவளுடைய ரத்த அழுத்தம் எகிறிப் போகும்.

பக்கத்திலிருக்கும் பள்ளியில் ஆயா வேலைப் பார்த்துச் சிறுக சிறுகச் சேர்த்த பணத்தோடு பள்ளிப் படிப்பை முடித்தது முதலாக மேலும் படிக்க வழியில்லாமல் எக்ஸ்போர்ட்டில் சில வருடங்களாக பணிபுரிந்து மகள் தந்த சம்பளப் பணமும் சேர்த்து வைத்தது தான் அந்தப் பணம்.

கதவை தாழிட்டு அன்னையும் மகளும் ஐநூறும், ஆயிரமுமாக இருந்த அந்த நோட்டுக்களை மறுபடியும் எண்ணி முடித்தனர். மனதிற்க்குள் பரவசம். இத்தனை ரூபாய்களை அவர்கள் மறுபடியும் , மறுபடியும் பார்க்க கூடியதா என்ன? வாஞ்சையோடு தங்கள் சேமிப்பை பார்வையிட்ட தாயும் மகளும் உருப்படாத அவர்கள் குடும்பத்தின் தலைவனுக்கு தெரியாமல் அதை ஒளித்து வைத்தனர்.

இந்த ஞாயித்துக் கிழம நாம நகைக் கடைக்கு போவோமா சுமி?

சரிம்மா……

கவனம் கவனம் உங்க அப்பாக்கு தெரியாம பார்த்துக்கணும், இப்படி கொஞ்சம் நகையை சேர்த்தா தான் உன் கல்யாணத்துக்கு கொஞ்சமாவது நகையை சேர்க்க முடியும் , உங்க அப்பனை நம்பிக்கிட்டு இருந்தா அவ்வளவுதான்…. பெருமூச்செரிந்த அன்னையை

என்னம்மா எப்ப பார்த்தாலும் சோகமா பேசிக்கிட்டு…… எதுக்கு கவலப் படுற அடுத்தால ரூவா சேர்த்து உன் கைக்கு வளையல் செய்யணும்னு இல்ல நான் நினைச்சிட்டு இருக்கேன்… என்றாள் சுமி என்னும் சுமித்ரா.

ஆமா இப்போ நான் தான வாலிப பிள்ளை எனக்கு தான் வளையல் செஞ்சு போடணும்…. பேச்சப் பாரு…… மகளின் பேச்சை மறுத்துப் பேசினாலும் மகிழ்வாகவே அடுத்தடுத்து செய்ய எண்ணியுள்ளவற்றை கண்களில் கனவுகள் மலர்வுற உரையாடிக் கொண்டிருந்தனர்.

6 Nov 2016 ஞாயிற்றுக் கிழமை:

என்னம்மா இது அப்பா இன்னிக்கு வெளியவே போகாம இருக்காரு ………

ஆமாடி………

இப்ப என்னச் செய்யிறது இவரு முன்னாடி எப்படி ரூவாய எடுக்கிறது……

அதானே……

சற்று நேரம் கழித்து….

ஏண்டி அறிவுக் கெட்டவளே ………இன்னிக்கு சாப்பாடு எதுவும் போடுறதா இருக்கியா இல்லியா….

இதோ வரேங்க……

…………….

அம்மா இன்னிக்கு முழுசும் இப்படி நாம கடைக்கு போக முடியாம ஆகிப் போச்சே….

ஸ்ஸ்… சும்மாயிரு அப்பா முழிச்சிடாம… நீ.போய் தூங்கு …….அடுத்த ஞாயித்துக் கிழம போகலாம்……….

சரிம்மா………

8th Nov 2016:

அம்மா அம்மா என்னாச்சும்மா ஏம்மா இப்படியிருக்கிற………எதுக்கும்மா அழற?

பாவி மகளே நாம கஷ்டப் பட்டு சேர்த்த பணமெல்லாம் வீணாப் போச்சேடி…

என்னாச்சும்மா…

நம்ம பணமெல்லாம் இனி செல்லாதாம் இன்னிக்கு ராத்திரி வரைக்கு தான் செல்லுமாம்………….சொல்லி ஓவென ஒப்பாரி வைத்தாள் அந்த எளியப் பெண்மணி.

என்னது யாரு சொன்னா அப்படி, பொறும்மா என் ஃபிரண்டு முகேஷ் கிட்ட கேட்டுட்டு வரேன். அவனுக்கு எப்படியும் எல்லா விபரமும் தெரியுமா இருக்கும்…

சுமித்ராவும் முகேஷூம் பள்ளி நண்பர்கள் இவள் படிப்பை இடையில் விட்டது குறித்து அவனுக்கு வருத்தமே. தற்போது கல்லூரிப் படிப்பை நிறைவுச் செய்து விட்டு தனியார் அலுவலகத்தில் பனி புரிந்து வருகின்றான் அவன். சுமித்ராவுக்கு என்ன உதவி தேவையென்றாலும் முதலில் முன் நிற்பான்.

அம்மா அம்மா இங்க பாருங்க நான் சொன்னா நம்ப மாட்டீங்கன்னு முகேஷையே கூட்டிட்டு வந்துட்டேன்….அழாதீங்கமா அவன் என்னச் சொல்லுறான்னு கேளுங்க ……

அம்மா பயப்படாதீங்க உங்க ரூபா எல்லா வீணாப் போவாது ……………

கொஞ்சமே தெளிந்தவளாக அம்மா , என்னப்பா சொல்லுற”

“சரி உங்க கிட்ட பேங்க் அக்கவுண்ட் இருக்கில்ல அதுல ரூபாய போட்டுடலாம் சரியா?”

பாஸ் புக் எங்கே?

ஆரம்பித்தது தேடுதல் வேட்டை…….கசங்கி மடித்த அந்த பேங்க் பாஸ் புக்கை தேடி எடுப்பதற்கு ஆனது அரை மணி நேரம்.

“ஏன் சுமி நீ படிச்ச பிள்ளதான இந்த புக்கெல்லாம் பத்திரமா வைக்க கூடாது” கடிந்தான் நண்பன்.

அதே நேரம் சுமியின் அப்பா வீட்டுக்குள் வர……….

யாரு முகேஷ் தம்பியா? நல்லாயிருக்கியாப்பா? என்ன இது ஒரு நாளும் இல்லாம இன்னிக்கு ராத்திரி 9 மணியாச்சு இந்நேரம் தம்பி வீட்டுக்கு வந்திருக்கு……….

சுமித்ரா ஏற்கெனவே அவனிடம் சொல்லியிருந்ததால் அவன் சமாளித்தான்.

எனக்கு சுமிக்கிட்ட கொஞ்சம் வேலை இருந்திச்சுப்பா அதான்……

நல்லாயிருக்கியாப்பா……….

நல்லாயிருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க……

எங்க நல்லா இருக்கிறது இன்னிக்கு சீட்டடிக்கலாம்னு போனா ஒருத்தனையும் காணோம் ,500, 1000 ரூபாய் இனிச் செல்லாதாம். எல்லோரும் கடைக்கு சாமான் வாங்க போயிட்டானுங்க…….சாராயக் கடையெல்லாம் ஒரேக் கூட்டம். என் கிட்ட இருக்கிறது இந்த ஒரே ஒரு நோட்டு இத என்னச் செய்யிறதுன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருக்கேன்.

சரி சரி ஏ இவளே சாப்பாட்டப் போடு…. தம்பி நீயும் சாப்பிட்டுட்டு தான் போகணும்.

இல்லப்பா நான் ஏற்கெனவே சாப்பிட்டுட்டேன். போயிட்டு வாரேன்………

வாரேன் சுமி, வரேன்மா………

ஏங்க உங்ககிட்ட சில்லரையா ரூபா இருந்தா கொஞ்சம் தாங்க…நாளைக்கு அரிசி வாங்க ரூபா இல்லிங்க.

என் கிட்ட இருக்கிறதே இந்த செல்லாத ஐநூறு ரூபா தான், இத வச்சிக்கிட்டு நான் என்னச் செய்யிறது… இந்தாப் பிடி ……

முதல் முறையாக கணவன் தன்னிடம் ரூபாய் வாங்காமல் கொடுப்பதை எண்ணி செல்லாத ரூபாயாக இருந்தாலும் ஆச்சரியப்பட்டு வாங்கிக் கொண்டாள்.

ஏம்மா எனக்கு நாளைக்கு வேலைக்கு போக பஸ்ஸூக்கு காசு இல்ல, உங்கக் கிட்ட சில்லற ரூபா இருக்காம்மா……

இல்லடி கையில இருக்கிறதே அம்பது ரூவா சொச்சம் தான், சம்பள பணம் எல்லாம் கடன் பாக்கி கொடுத்துட்டு மிஞ்சின ஐநூறு ரூபாய் நாளைக்கு காலையில பால் வாங்குறப்போ சில்லற மாத்தணுமின்னு இருந்தேன்……… யாரும் வாங்குவாங்களோ மாட்டாங்களோ…. சரி அத விடு பால்காரவுங்க, மளிகை சாமான் எல்லாத்துக்கும் கடையில கடன் சொல்லிக்கலாம்……நீ பஸ்ஸுக்கு அந்த ரூபாய கொண்டு போ……

நான் என் உண்டியல உடைச்சிடுறேன்மா கொஞ்சம் சில்லறை கிடைச்சிடும்….

சற்று நேரத்தைல் டப் டப் பென்று உண்டியல் உடைப் படும் சத்தமும் சில்லறைச் சத்தமும் கேட்க…

அம்மா நூத்தி அறுவது ரூவா இருக்கும்மா……சரி சரி அதில ஒரு நாப்பது ரூவா தா பக்கத்து வீட்டுக்காரங்க அப்பவே கேட்டாங்க கொடுத்துட்டு வாரேன்.

தட்டுப்பாட்டிலும் தாராளம் நிலவியது அங்கு.

மறுநாள் மாலை,

சுமி ஏய் சுமி……

வேலையிலிருந்து திரும்ப வருகின்ற வழிப் போலும் தோளில் பையோடு வாயிலில் வந்து நின்றான் முகேஷ்…

ஏண்டா சும்மா அமைதியா வர மாட்ட , இதுவே இப்ப எங்க அப்பா இருந்திருந்தா என்ன வேலைன்னு கேட்டுருக்கும், நாங்க சேர்த்து வச்சிருக்க் ரூவாப் பத்தி மட்டும் தெரிஞ்சதுன்னு வையி……அவ்வளவு தான்.

ஏய் பிள்ளய உள்ள வரவிடு வாசலில வச்சு திட்டுற நீ…உள்ள வாடாப்பா.

சுமியை முறைத்தவாறே வந்து நின்றான் முகேஷ்……. நான் உங்களுக்கு ஹெல்ப் செய்யதான் வந்தேன்மா இவளுக்கு இல்ல……

சரி சொல்லு தம்பி

இன்னிக்கும், நாளைக்கும் தான் பேங்க் அடைப்பு, ஆனா சனியும் ஞாயிறும் திறந்திருக்கும். அன்னிக்கு உங்க ரூபாய டெபாசிட் பண்ணிருங்க…

அப்படியா…… சனிக்கிழம லீவு கிடையாது ஞாயிறுதான் போக முடியும். அன்னிக்கும் இந்த மனுஷன் வீட்ட விட்டு வெளிய போனாத்தானே ரூபாய வெளிய எடுக்கிறது. ஏன்ப்பா முகேஷ் நான் உங்கிட்ட ரூபாய தந்து வைக்கட்டுமா…….

ஐயையோ வேணாம் ஆண்டி., யாருக்கும் என் கிட்ட இவ்வளவு ரூபா இருக்குன்னு தெரிஞ்சதுன்னா கள்ளப் பணம்னு சொல்லிட்டாங்கன்னா….

ஏண்டாப்பா அப்ப எங்க ரூபா என்ன கள்ளப் பணமா, கஷ்டப் பட்டு சேர்த்தக் காசுடா. முகம் சுருங்கினாள்.

ஏண்டா எங்க அம்மா கவலைப் படுறாங்கன்னு உன்னை ஹெல்ப்புக்கு கூப்பிட்டா அம்மாவுக்கு டென்ஷனா குடுக்குற நீ….

ஏய் போடி….நான் தான் அம்மா கிட்ட பேசுறேன்ல, பிறகு நீ என்னத்துக்கு இடையில வந்து பேசிக்கிட்டு, உனக்கு நாட்டுல நடக்குற நிலவரம் ஒண்ணும் தெரியாதாக்கும், குப்பை கூளம் போல அங்கங்க ரூபா நோட்ட எரிக்கிறாங்க , துண்டு துண்டா வெட்டி வீசுறானுங்க………நம்ம சொந்தமா சம்பாதிச்ச பணமா இருந்தாலும் அத முறைப்படி பேங்கில கட்டுற வரைக்கும் நமக்கு டென்ஷன் தான அதச் சொன்னேன்.

ஏண்டாப்பா தூரப் போடுற அந்த ரூபாய கஷ்டப் பட்ட மக்களுக்கு கொடுத்து உதவக் கூடாதாப்பா…………

அந்தக் கவல எல்லாம் நம்ம மாதிரி மாச சம்பள ஆட்களுக்கு எதுக்கும்மா? பணக்காரங்களாச்சு , அவங்க பணமாச்சு. நீங்க உங்க ரூபாயை எப்படி சுமி அப்பாக்கு தெரியாம வெளியில கொண்டு வர்றது, பேங்க்ல எப்படி போடுறதுன்னு யோசிங்க , நானும் உங்களுக்கு துணையா வரேன் சரியா?

ஒருவழியாக ஞாயிற்றுக்கிழமை ரூபாயை எப்படியோ வீட்டிற்குள்ளிருந்து வெளியேக் கொண்டு வந்து பேங்க் வாசலில் வந்து நின்றால் அங்கோ அரைக் கிலோ மீட்டர் வரை கூட்டம் வரிசையாக நின்றது. வறியவர்கள், மதிய வர்க்கத்தினர், வயதானவர்கள் , இளைஞர்கள், மத்திம வயதினர் என்று அனைத்து தரப்பினரும் நின்றனர்.

வெயிலில் வாடி வதங்கி நின்ற அம்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்து மாற்றி நின்றாள் சுமித்ரா. முகேஷிம் கூடவே இருந்தான். மதியம் லன்ச் அவர் தாண்டியும் இன்னும் அவர்கள் வரிசை கிட்டே வந்திருக்கவில்லை.

இப்போது அம்மாவிற்கு தலைச்சுற்றி விட சுமி முகேஷை வரிசையில் நிற்க வைத்து விட்டு அம்மாவை அழைத்துச் சென்று நிழலில் இளைப்பாறச் செய்தாள்.

தான் இன்னும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்காதது குறித்து மனதில் வருந்திக் கொண்டவாறே
“முகேஷ் லைன் கிட்ட வந்ததும் கூப்பிடுடா , அம்மாவை எழுப்பி வரச் சொல்றேன்.” என்று அவனிடம் சொல்லியிருந்ததாள்

அதான் ஸ்லிப் நிறைச்சாச்சு இல்ல, மத்த தேவையான எல்லா பேப்பர்ஸும் வச்சிருக்கேன் தேவைப்பட்டா உனக்கு கால் செஞ்சு கூப்பிடுறேன்…

சில மணித்துளிகள் கழிந்தது, இன்னும் முகேஷின் ஃபோன் கால் வரவில்லை. அம்மாவிற்கோ வருடக் கணக்காக சேர்த்த பணத்தை எவ்வாறு பத்திரப் படுத்துவது என்றுக் கவலை. நான்கு நாட்களாக அவள் புலம்புவது நிற்கவில்லையே….

மொத்த ரூபாயையும் வாங்கிக்குவாங்களா இல்ல கொஞ்ச கொஞ்சமா டெபாஸிட் செய்யணுமா? ஒண்ணுமே தெரியலியே இன்னிக்கே எப்படியோ உங்க அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு வந்தாச்சு , தினமும் வரணும் இப்படி லைன்ல நிக்கணும்னா அப்பாடி …… நம்மால முடியாதுப்பா….

மறுபடியும் புலம்ப….

சற்று நேரத்தில் சந்திரமுகி ஜோதிகாவிற்கு போட்டியாக தலைக் கலைந்து, கண்கள் சிவந்து, சட்டை கசங்கி, தலைச் சுற்றி களைப்பில் கிறங்கியவனாக முகேஷ் அவர்கள் எதிரில் வந்து நின்றான்.

என்னடா வந்துட்ட , டெபாஸிட் பண்ணிட்டியா?..இது சுமி

எல்லா ரூபாயும் வாங்கிகிட்டாங்களா முகேஷீ…… இது அம்மா.

பதிலே சொல்லாம சோகமா நிக்குது பாரு பக்கி…… பையை திறந்து பாரும்மா இவன் ஸ்கூல்லருந்தே இப்படித்தான் பேச வேண்டிய நேரத்துல பேச மாட்டான், மத்த நேரத்துல வாய் கிழிய பேசுவான்.

அவன் கையிலிருந்த ரூபாய் பையை பிடுங்கி திறந்தாள் சுமி, ஆர்வமாய் அம்மா அதை எட்டிப் பார்க்க, களைப்பில் இருந்த முகேஷ் எல்லாம் டெபாஸிட் பண்ணியாச்சு.பையில இருந்த ரூபா……….எல்லாமே முடிஞ்சிப் போச்சு, என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி….!

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here