5. பாலைவன ரோஜாக்கள்

0
687

உற்சாகம், இளமைத் துள்ளல், எதையாவது பிறர் கவனத்தைக் கவரும்படி பேசி தம் நட்பு வட்டத்திற்க்குள் கவனிக்கப் படுவதற்கான முயற்சிகள், ஓங்கிய கைகளின் ஹை ஃபைவ்களும், அலட்டலான குரல்களும், ஹே…உற்சாக ஆரவாரிப்புமென உலகத்தையே மறந்து ஒருவர் மற்றவரை பல காலமாய் அறிந்தது போல ஒட்டி உறவாடும் கல்லூரி என்னும் இனிய நட்புலகம்.

அங்கே அந்தக் கல்லூரியின் காரிடாரில் வைஸ் பிரின்ஸிபல் வளன் கடந்துச் சென்ற ஒரு நிமிடம் மட்டும் அமைதிப் பேணப்பட்டது. காரணம் பயமா? என்றால் இல்லை, அவர் குறித்த மரியாதை என்றேச் சொல்ல வேண்டும்.

தோழமை உணர்வோடு பழகும் அவருக்கு அக்கல்லூரியில் விசிறிகள் மிக அதிகம். முப்பதின் ஆரம்பத்தில் அவர் கல்லூரி மாணவன் போலவே தோற்றத்தோடு இருப்பது ஒரு காரணமென்றால், தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் மாணவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது, அனாவசிய அதிகாரத் தோரணை இல்லாத நட்பான அணுகுமுறை மற்றுமொரு காரணம்.

தான் பொறுப்யேற்று ஒரு சில வருடங்களிலேயே தனது அமைதியான அணுகுமுறையால் அந்த கல்லூரியின் பல்வேறு சின்ன சின்ன குறைபாடுகளை களைந்து அதிகம் கவனம் ஈர்த்துக் கொண்டவர்.படிப்பில் மட்டுமல்லாது கலை, விளையாட்டு என அக்கல்லூரியை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளதால் அனைவரின் நல்மதிப்பையும் பெற்றிருந்தார்.

தற்போது இரண்டு கோஷ்டியருக்கான சண்டையை சமாதானப் படுத்தி விட்டு தன் இருக்கைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.தம் அறையில் நுழைந்து ஓய்வாய் அமரும் வேளையில்,

“ஏய் அந்த வைஸி பேசினதப் பார்த்தல்ல…எப்படி அந்த கிரிக்கு சப்போர்ட்டா பேசினாரு…”எனப் பொருமும் சப்தமும் தொடர்ந்த உரையாடலும் கேட்டது.

தமது அறைசன்னலின் அருகே நின்றுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வளனுக்குப் புரிந்தது. வெளியே இருந்துப் பார்த்தால் உள்ளே யாரும் இருக்கிறார்களா , இல்லையா என அறிந்துக் கொள்ள இயலா அமைப்பு,அதனால்தான் தாம் உள்ளே இருப்பது அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணியவருக்கு கோபத்திற்கு பதிலாக புன்னகையே மலர்ந்தது. சிறுவராகவோ. பெரியவர்களாகவோ எண்ண இயலாத இரண்டும் கெட்டான் வயது இளமைப்பருவம். அளவற்ற ஆற்றல், ஆர்வம், கட்டுக் கடங்காத கோபம் எனும் குணாதிசயங்கள் தானே இளைஞர்கள் என்று எண்ணிக் கொண்டார்.

“என்னமோ பெரிய காலேஜ் பெருமை பேசினாரு…இங்கே எப்பவும் எதுவும் பிரச்சினையே நடக்காத மாதிரியும், ஏதோ நம்மளால அந்த பெருமைக் கெட்டுப் போன மாதிரியும் ரொம்பத்தான்”…

“சும்மாயிருடா, அதுதான் முடிஞ்சிடுச்சே…வா கிளாஸுக்கு போகலாம்”…

“தோ போடா வைஸிக்கு சப்போர்ட்டா நீ”…

“இவ்வளவுச் சொல்லுறாரே, முன்னே ஒரு தடவை இந்தக் காலேஜில தான் பெரிய சண்டைலாம் நடந்து போலீஸ் வந்து சமாளிக்க வேண்டியதாகிப் போச்சாம் உங்களுக்குத் தெரியுமா?”…

“எதுவும் சொல்றதுக்காக சொல்லாதே, என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதப் பாரேன். சும்மா அடங்குடா”…

“ஏய் நான் ஒண்ணும் சும்மாச் சொல்லல…எங்க அண்ணன் தான் சொன்னாரு”…

“அண்ணனோட க்ளாஸ்மேட் அரசுன்னு ஒருத்தன் பெரிய ரவுடியாம். யாருக்கும் பயப்படவே மாட்டானாம். யாரும் எதுவும் சொன்னால் போதும் பயங்கர அடி தடி தானாம். இவங்கல்லாம் எதுக்கு வம்புன்னு அவன் கிட்ட அளவாதான் பேசுவாங்களாம்”…

அப்புறம்…

ஏய் என்னடா கதை கேட்க ஆரம்பிச்சிட்ட, வா கிளாஸுக்கு போகலாம்.
விடுடா கொஞ்சம் நேரம் கழிச்சி போகலாம். நீ சொல்லுடா…போலீஸ் கேஸ் ஆகிற அளவுக்கு என்னாச்சு.
அவனை யாரோ கிண்டலா ஏதோ பேசியிருப்பாங்க போல , அடிச்ச அடில வம்பு பேசினவனுக்கு மண்டையில நாலுத் தையலாம்.அப்படி ரவுடிங்கலாம் இந்தக் காலேஜில இருந்திருக்காங்க.வந்துட்டாரு வெள்ளைக் கொடிய பறக்க விட்டுட்டு, பெரிய சமாதான தூதுவர்.

“இந்தக் காலேஜுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு” …

வளனை இமிடேட் செய்தவுடன் மற்றவர்கள் சிரிக்கும் சப்தம் கேட்டது.

ஏண்டா அப்போ அந்த அரசுவை டிஸ்மிஸ் செய்திருப்பாங்க இல்ல?

அடாத மழைப் பெய்தாலும் விடாமல் கதை கேட்கும் ஆர்வம் மற்றவனிடம்,

இல்லடா, அவங்க அம்மா வந்து மன்னிப்புக் கேட்டு எப்படியோ அவனை காலேஜ் விட்டு எடுக்க விடாம செய்துட்டாங்களாம். என்னதான் இருந்தாலும் அவன்லாம் படிச்சு உருப்பட்டுருப்பான்னு நினைக்கிற?..சான்ஸே இல்ல. இதுல சாருக்கு காதல் வேற…

காதல் என்னும் வார்த்தைக்கு அவ்வளவு ஈர்ப்பு சக்தி போலும் இப்போது அங்கு சுற்றியிருந்த கூட்டமே காதல் கதைக் கேட்கத் தயாரானது,

“செகண்ட் இயர் வரை அந்த ரவுடி இப்படி அடாவடிப் பண்ணுறதும் அவன் அம்மா வந்து மன்னிப்புக் கேட்கிறதுமா இருந்திருக்காங்க”.

கோரஸாக அப்புறம்…

அவன் தர்ட் இயர் படிக்கும் போது காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்த ஒரு பொண்ணைப் பார்த்து ஃபிளாட்டாயிட்டானாம்…

பின்னே…

பிறகென்ன எப்படியோ அவங்க லவ் ஸ்டார்ட் ஆகியிருக்கு. அதற்கு பின்னால எப்போ எங்கே சண்டை ஆரம்பித்தாலும் அவன் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் அவளைத் தேடிப் போய் கூப்பிட்டு வந்திடுவாங்களாம்.

ம்ம்

அவளைப் பார்த்ததும் அப்படியே இவனும் பாஸ் (Pause) பட்டன் அழுத்தின மாதிரி சண்டையை நிறுத்திடுவானாம்.

ஓ…

உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

ஒரு தடவை அவன் சண்டயை நிறுத்தினதும் எதிரில இருந்தவன் சட்டுன்னு தள்ளி விட்டதில் அவன் கண் புருவத்துக்கு மேல வெட்டி ஒரே ரத்தமாம்…

அப்புறம்…

ஏண்டா நான் என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன்? போங்கடா…

ஏய் சொல்லுடா…

வேற அதிகமா எதுவும் சொல்லல, அந்த பொண்ணு ரொம்ப வசதியாம், அவன் மிடில் கிளாஸ். அவங்க காதல் எங்கே சேர்ந்திருக்கப் போகிறது?

இப்படி ரவுடிக்கு எங்கே வேலை கிடைத்திருக்கும்?

எங்கயாவது ரவுடித்தனம் செய்துக் கொண்டு இருப்பான்.என்னச் சொல்றே நீ? …

அது சரி தாண்டா…சரி நேரமாச்சுப் போகலாம்.

சற்று நேரத்தில் அரவம் அடங்கியது , அவர்கள் வளனின் மனதில் ஆரவாரத்தை எழுப்பிச் சென்றிருந்தார்கள். கடல் அலையின் ஊடே கிழிஞ்சல்கள் கரைக்கும் கடலுக்குமாய் பயணிப்பதுப் போல அவன் ஞாபக அலையில் ஒரு சில நினைவுகள் வந்து அலைமோதின.

அ…ர…சு & பனி அ…ர…சி …எங்க பெயரிலேயே என்ன ஒரு பொருத்தம் பார்த்தியா?! …

அரசுவின் வாயிலிருந்து ஆயிரத்து நானூற்று எண்பத்தி ஒன்றாவது முறையாக இந்த வசனத்தைக் கேட்டு எஸ்கேப் ஆக முடியாமல் “டேய் வேற ஏதாச்சும் பேசுடா…” முனகினான் ஒருவன்.

“ஆனாலும் இவனுக்கு காதல் வந்திருக்க கூடாதுடா”…
மற்றவன்…

பெண் என்றாலே “போடா அதெல்லாம் அறிவுக் கெட்டவனுங்க தான் பொண்ணுங்க கிட்ட பேசுவானுங்க. ஒண்ணா நம்பர் பொய்காரிங்க நம்பவே கூடாது” என்பவன், பெண்களிடம் நட்பு பாராட்டவே தயங்குபவன், இப்படி ஒரு பெண்ணிடம் உயிராய் மயங்குவான் என்றோ, அவள் கண்ணசைவில் செயல்படுவானென்றோ யாருமே நினைத்திருக்கவில்லை.

“அவள் தேவதைடா, அதட்டிப் பேசக் கூட தெரியாது. இப்படில்லாம் பெண்கள் இருப்பாங்கன்னு எனக்கு இதுவரைத் தெரியாது.”

“ஏண்டா நீ இப்படி பேசுறது கேட்டு ஆச்சரியமா இருக்கு. சிஸ்டரைப் பற்றி உயர்வா பேசுற நீ முன்னெல்லாம் பெண்கள்னாலே வெறுப்பா இருப்ப… மற்றப் பெண்களை விடு உன் அம்மா எவ்வளவு அமைதி அவங்களைப் பார்த்துமா நீ பெண்களைக் குறைவாப் பேசினே அது தான் நம்ப முடியலை”

” அம்மா பாவம்டா அவங்க வாழ்க்கையையே ஒரு சிலர் தன்னோட பெருமைக்காக வீணாக்கிட்டாங்க.நல்ல விதமா மற்றவங்க சொன்னதை மட்டும் நம்பி சரியா விசாரிச்சிப் பார்க்காம குடிகாரனுக்கு கட்டிக் கொடுத்த என் அம்மம்மா ஒரு பெண். புகுந்த வீட்டில புருஷன் கொடுமையில் கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்த அம்மாவை புள்ளத்தாச்சின்னும் பார்க்காம கஷ்டப் படுத்தின என் பாட்டி, அத்தைகள் இவங்கல்லாம் பெண்கள். வேறு வழியில்லாம அம்மம்மாவோட வீட்டுக்கு வந்த எங்க அம்மாவையும் என்னையும் கடுமையா பேசுவதும், முகம் திருப்புவதும் புறக்கணிப்பதுமாக துன்புறுத்திய என் மாமியும் ஒரு பெண்தானேடா?பின்னே பெண்கள் மேல கோபம் வராம…?”

கேள்விக்கு பதில் சொல்வதோடு நிறுத்தாமல் தொடர்வான்.

எனக்கு சின்ன வயசில இருந்து கிடைக்க வேண்டிய அரவணைப்பு கிடைக்கவே இல்லைடா. எல்லோரும் அம்மா அப்பா கூட வெளியே போகும் போது எனக்கு எவ்வளவு ஆசையா இருக்கும் தெரியுமா? அம்மா எவ்வளவுதான் பார்த்துக் கிட்டாலும் நான் சின்ன வயசில அப்பாவுக்கு ஏங்கினது ஜென்மத்துக்கும் மனக்குறையாவே இருக்கும்டா.

அம்மா என் படிப்புக்காகத் தான் வேலைக்கு போறாங்க, என் மேல எவ்வளவு அன்பு இருந்தாலும் அவங்க வேலை காரணமா அன்பைக் காட்டுறதுக்கோ என்னை முழு நேரமும் கவனிக்கிறதுக்கோ அவங்களுக்கு நேரமில்லை அவங்களை குறைச் சொல்ல முடியுமா?

கோபத்தில நான் செய்கிற தப்புக்கெல்லாம் அம்மா மன்னிப்பு கேட்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா யாராவது எதுவும் சொன்னால் என்னால கோபத்தை அடக்க முடியலடா.
இவ்வளவு கஷ்டத்துக்கு காரணமான என் அப்பனை தூக்கிப் போட்டு மிதிக்கிறதுக்கு வழியில்லாம சீக்கிரமே செத்துப் போயிட்டான். கொடுத்து வச்சவன்…பொருமும் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கும் நண்பர் கூட்டம்.

நல்லவனோ கெட்டவனோ எல்லோருக்கும் அமைந்து விடுகின்றது ஒரு நண்பர் கூட்டம். அவர்கள் சமூகத்தில் எப்படி பட்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால்,அவர்கள் நட்பிற்க்குள் மட்டும் களங்கமும், கயமையும் கிடையவே கிடையாது.

“சரி நீ சிஸ்டரை முதன் முதலா எப்போ பார்த்த அதைச் சொல்லு? “

அவன் அமைதியாக அமர்ந்து இருப்பதை விரும்பாத கூட்டம் அவனை சகஜமாக்க, கேட்ட கதையையே மறுபடி கேட்க தயாரானது.

மிகச் சின்ன முறுவலாக ஆரம்பித்த அந்த மென்னகை அரசுவின் முகத்தை முழுவதுமாக மலரச் செய்து விட்டது.

அன்றைக்கு அப்படித்தாண்டா நான் சும்மா உங்களுக்காக காத்துக் கிட்டு இருந்தேனா…

எதிர்ல வந்த அவ…அவதான் பனியரசி …என் அரசிடா எங்கிட்ட வந்து பேச ஆரம்பிச்சிட்டா…

எனக்கு முதலில் ஒன்னுமே புரியல…
அப்போதான் சொல்றா,

“ப்ளீஸ் ஏதாவது பேசிக்கிட்டு இருங்க ஒரு ஜொள்ளுகிட்ட இருந்து எஸ்கேப்பாகி இங்க வந்திருக்கேன்னு…”

அது யாருடா அந்த ஜொள்ளுன்னு பார்த்தா …அது நம்ம பரசு…கூட்டத்திலிருந்த பரசு கோபத்தில் எழவும்.
மற்ற நண்பர்கள் தம் சிரிப்பை மறைத்தவாறே “சும்மா உக்காருடா இப்போ அவங்க நம்ம சிஸ்டர். என்ன இருந்தாலும் வலிய வலியப் போயி பேசினா எந்தப் பொண்ணும் அப்படித்தான் சொல்லுவாங்க”…

போக வழியில்லாமல் முணுமுணுத்துக் கொண்டு அமர்ந்தான் பரசு.
அதற்குமேல் அங்கு அரசுவின் வாய்ப்பேச்சு தொடரவில்லை. நிகழ்ந்தவற்றை சிந்தித்தவாறே எங்கோ கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் அவன். அவன் நண்பர்களும் அவனை தொந்தரவுச் செய்யாமல் தங்கள் பேச்சுக்களைத் தொடர்ந்தார்கள்.

அதென்ன அவனைப் பார்த்து ஜொள்ளுன்னு சொல்லிக்கிட்டு எங்கிட்ட வந்து பேசறீங்க, ஏன் நானும் கூட ஜொள்ளா இருக்கலாமே?

ச்சே ச்சே நீங்கள்லாம் அப்படி இருக்க முடியாது…

ஆச்சரியமாய் அவளை நோக்கினான் அரசு.

“நான் கூட முதல் தடவை காலேஜ் சேர்ந்தப்போ எல்லோரும் உங்களைக் காட்டி அவன் ரொம்ப பொல்லாதவன்னுச் சொன்னாங்க…”

“அப்புறம்”…

முதல் முறையாக ஒரு பெண்ணிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்றுப் புரிந்தது அவனுக்கு.

“நானும் 2 வீக்ஸா உங்களைக் கவனிக்கிறேன்”…

இப்போது ஆச்சரியமாய் புருவம் நெரித்தான் அவன் .

“நீங்க உங்கபாட்டுக்கு வர்றீங்க போறீங்க யார் கிட்டயும் பிரச்சினை செய்தா மாதிரி தெரியலை. யாராவது வம்பு பேசினா தான் உங்களுக்கு கோபம் வரும்னு புரிஞ்சிக்கிட்டேன்.”

அவன் ஆச்சரியத்தின் அளவு கூடிக் கொண்டேச் சென்றது.

“எந்த கர்ள்ஸ் கூடவும் அனாவசியமா பேசுறதும் இல்ல…அப்புறம் உங்களை ஜொள்ளுன்னு நான் ஏன் சொல்லப் போறேன்?”

பதில் பேசாமல் புன்னகைத்தான் அவன்.

“ரொம்ப நல்லவங்க மாதிரி ஆக்ட் கொடுக்கிறவங்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது தெரியுமா?அதுக்கு உங்கள மாதிரி வெளிப்படையா நடந்துக்கிறவங்களே பரவாயில்லை.சரி அப்போ நாம ஃபிரண்ட்ஸ் ஆகிடலாமா?”

கேட்ட அவளை நோக்கி தன்னையறியாமல் இவன் கை நீண்டது.

கைக்குலுக்கி விட்டு அவன் மனதையும் பூகம்பமாய் அசைத்துச் சென்று விட்டாள் அவள்.

அவன் செய்கைக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அமைதி காக்கும் அம்மாவைத்தவிர உறவில் மற்றெல்லாராலும் நீ பொல்லாதவன் , கோபக்காரன், உருப்படவே மாட்ட என்னும் வெறுப்பான வார்த்தைகளால் ஒதுக்கப்படும் அவனுக்கு இந்த அங்கீகாரம் மிகப் புதியது.அப்போ நானும் நல்லவன் தானோ? என்னும் நினைவே மனதில் ஆயிரம் பூக்கள் ஒன்றாய் பூத்த மலர்வையும் , நறுமணத்தையும் பரப்பியது.

தொடர்ந்த நாட்கள் அவள் நட்பில் களித்திருந்த இனிய காலமாயிற்று.அவன் நண்பர்கள் கூட்டத்தில் எல்லோருடனும் வந்து பேசுவாள்.அவளது வெகுளியான சிரிப்பாலும், நட்புணர்வாலும் அவர்களால் மற்றப் பெண்களைப் போல அவளிடம் கிண்டலடிக்க இயலவில்லை. அரசு… அரசு என்று அவனோடு பத்து நிமிடமாவது அரட்டை அடிக்காமல் அவளால் போகவே முடியாது.

அரசுவுக்கும் அந்த பத்து நிமிடங்களுக்காகவே தான் நாள் முழுதும் காத்திருப்பதாக புரிய வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவனால் இனியும் தன் மனதில் இருப்பதை மறைத்துக் கொண்டு இருக்க முடியும் என்றுத் தோன்றவில்லை.இன்றுக் கேட்டே ஆக வேண்டும் என்று நினைத்தவனாக அவளைத் தனியே அழைத்து தன் விருப்பத்தைச் சொன்னான்.

“நீ என்னைப் பற்றி இப்படி ஏன் நினைச்சே அரசு?” குழப்பத்தில் அவள் குரல் கம்மியதோ?..

“என்னை தப்பா நினைச்சுக்காத பனி…நீ காட்டுற அன்பு முழுசா எனக்கே எனக்குன்னு வேணுமின்னு தோணுச்சு”…

“சின்ன வயசில இருந்து அன்புன்னா என்னன்னே தெரியாம வெறுமையிலேயே வளர்ந்துட்டேன். நீ எங்கிட்ட பேசுறப்போ எல்லாம் இப்படியே நீ என் கூடவே இருந்திட்டா என்னன்னு தோணும் அதனால தான் கேட்டேன்”.

“உனக்கு விருப்பமில்லைனா வேண்டாம் . ஆனால் எங்கிட்ட பேசாம மட்டும் இருந்திடாத …எங்க ஃபேமிலியில யாருக்கும் என்னை பிடிக்கவே பிடிக்காது, நானும் அதைப் பற்றி பெரிசா நினைச்சதே இல்லை. நான் இப்படி கேட்டதால நீ மட்டும் என்னை வெறுத்திடாத பனி… என்னால தாங்க முடியாது…அந்த முரடனின் கண்களில் நீர்க் கோர்த்து விட்டிருந்தது.”

அதைப் பார்க்கவியலாமல் எழுந்த துடிப்பை மனதில் மறைத்துக் கொண்டவளாய்…எனக்கு கொஞ்ச நாள் டைம் தருவியா அரசு, நான் யோசிச்சு சொல்றேன் சரியா…
கேட்டவளுக்கு தலையசைத்து பதில் கொடுத்தான் அவன்.

சற்று நாட்கள் கடந்த பின் அவளும் தன் நேசத்தை தெரிவிக்க அவர்களுடைய சொர்க்க காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட அரசு தன் நண்பர்களிடமிருந்து விடைப் பெற்று வழக்கமாக பனி அரசியை சந்திக்கும் இடம் தேடிச் சென்றான்.

காதலில் கட்டுண்டவனாக இருந்தாலும் அவனுடைய கோபம் இன்னும் கட்டுக்குள் வந்திருக்கவில்லை. அவன் காதலை கொச்சைப் படுத்திப் பேசின ஒருவனை ஒரு நாள் அவன் மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருக்க எதிரில் அவளைக் கொண்டு நிறுத்தி இருந்தனர் அவன் நட்புக்கள். அவளது கலங்கிய கண்களைப் பார்த்து அப்படியே அவன் கோபம் வடிந்து விட்டதோ என்னமோ அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் அவன்.

கண்களால் சிரிக்க மட்டும் தான் முடியும் என்றுக் காட்டிக் கொண்டிருந்த அவனுடைய அரசியின் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்த தன் செய்கை மேல் அவனுக்கு அளவில்லா வெறுப்பு வந்து விட்டிருந்தது.

ஸாரிம்மா…தனக்கு அவள் காதல் பெற அருகதை இல்லையோ…தன்னை விட்டு அவள் சென்று விடுவாளோ என்று எப்போதும் தோன்றும் அவன் மனக்கலக்கம் இன்று பேயாட்டம் போட்டுக் கொண்டு இருந்தது.

இதோ இப்போது என்னை விட்டுப் போய் விடுவாள் என்று குமைந்து தலைக் குனிந்து அழுது விடுவோமோ எனத் தோன்றும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தி அமர்ந்து இருந்தவனின் தலையை பரிவாய் வருடியது அவள் கரங்கள். சட சடவென்று தலையில் நீர்ச் சிதறல்கள்.அழுகிறாளா என்ன?..

விதிர் விதிர்த்து நிமிர்ந்தவனின் கண்களுக்கு முகமெல்லாம் அழுகையில் நனைந்திருக்கும் அவள் நிலைப் பார்த்து மனம் பதறியது.

ஒருவருக்கொருவர் மௌனமாய் நேரத்தைக் கரைத்தவர்கள் அன்றைய தினம் மட்டும் பேசாமலேயே விடைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆழமாய் வேரூன்றிவிட்ட அவர்கள் காதலுக்கு எமனாய் வந்தது மற்றொரு நிகழ்வு, தன்னை வெகுவாக கட்டுப் படுத்தி இருந்த அரசுவின் பொறுமையை அவனுடைய தாயைக் குறித்த தேவையற்றப் பேச்சுக்களால் தகர்த்திருந்தான் ஒருவன். மூர்க்கமான அடிதடியின் நடுவில் அரசி விரைந்து வந்து நிற்க செயலற்றவனாக அரசு நின்றிருந்த அந்த ஒரு நொடிப் பொழுதை தனக்கு சாதகமாக்கிய மற்றவன் அவனைத் தள்ளி விட புருவத்தின் மேல்ப் பகுதியில் வெட்டு காயம். அதுவரையிலும் கல்லூரியின் வெளிப் பகுதியில் நடந்து வந்திருந்த சண்டைகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வராதிருக்க, தற்போது கல்லூரி காம்பவுண்டிலேயே நிகழ்ந்த இந்த விஷயம் முந்தைய அத்தனைப் பிரச்சினைகளையும் வெட்ட வெளிச்சமாக்கியது.

அரசுவின் அம்மாவின் மன்னிப்பை இந்த முறை ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் அவனை காலேஜிலிருந்து நீக்கியது. பனி அரசியின் காதலைப் பற்றித் தெரிந்துக் கொண்ட அவள் பெற்றோர் அவள் காலேஜை மாற்றி விட்டனர்.அதன் பின்னர் என்ன நடந்ததோ?..யாருக்குத் தெரியும்…

தன் பணிகள் அனைத்தும் சரிவர நிறைவேற்றியாகி விட்டதா எனக் கவனித்து விட்டு வெளியே வந்த வளன் சல்யூட் அடித்த செக்யூரிட்டியிடமிருந்து தலையசைத்து விடைப் பெற்று காரில் அமர்ந்து வீட்டை நோக்கிப் பயணித்தான்.

டோர் பெல் அடித்ததும் கதவைத் திறந்தது சேர் மேல் ஏறி நின்ற நான்கே வயதான ஏஞ்சலிகா…

ப்பா…தாவியவளை பெருமிதமாய் தூக்கிக் கொண்டான் அவன்.
அவள் முகத்தில் ரகசியமாய் ஏதோ சொல்ல வருகின்ற தீவிரம்.

ஏங்க …வந்துட்டீங்களா? கிச்சனிலிருந்து வந்தவள் “ஏஞ்சல் குட்டி… அப்பா டயர்டா இருப்பாங்க சேஞ்ச் செய்துட்டு வரட்டும் சரியா?”

தூக்க விழைந்தவளிடம் செல்லாமல் மறுத்தது அந்தக் குட்டித் தேவதை.
நீ போ பனிம்மா, பாப்பாக்கு எங்கிட்ட எதுவோ பேசணும் போல…

“ஓ…நல்லா பேசுங்க உங்க ரகசியத்தை”

மகளைப் பார்த்து ஒற்றை விரலை ஆட்டி மிரட்டியவளாய் நகர்ந்தாள் பனி அரசி.

அப்பா… அம்மா ஒரு சீக்ரெட் உங்க கிட்ட சொல்ல வேணான்னு சொல்லியிருக்காங்க…

ம்ம்…

நான் அதை உங்களுக்குச் சொன்னா என்ன தருவீங்க…வியாபார ஒப்பந்தம் ஆரம்பிக்கும் முன்னே மறுபடி டோர் பெல் அடிக்க மனைவியை தொந்தரவு செய்ய விரும்பாதவனாக கதவைத் திறந்தவன் ஆச்சரியப் பட்டுப் போனான்.

“வளனரசு” ஆசையாய் அழைத்தப்படி அம்மா நின்றிருக்க…
வாங்கம்மா, என்னம்மா சொல்லவேயில்லை . சொல்லியிருந்தா ஸ்டேஷனுக்கு கூப்பிட வந்திருப்பேனே… என்றவனாய் அம்மா கையிலிருந்த பைகளை அவசரமாய் வாங்கிக் கொண்டான் அவன்.

அதான் வழக்கமா வர்ற டாக்ஸி டிரைவருக்கு போன் செய்து கூப்பிட்டிருந்தேனே, கொஞ்ச நேரம் முன்னாலதான் மருமக கிட்டே விஷயம் சொன்னேன். எதுக்குப்பா நீங்கள்லாம் வீணா அலைஞ்சுகிட்டு…

தனியாகவே சுமைகளைச் சுமந்துப் பழக்கப் பட்டுப் போன அம்மாவைப் பார்த்து வியப்பாக எதுவும் தோன்றவில்லை அவனுக்கு வெளியேச் சொல்ல இயலாத ஆதங்கம் மட்டுமே மனதில் நிறைந்து நின்றது…
அதே நேரம் தன் டீலிங்க் தடைப் பெற்று விட்டதை எண்ணி கோபத்தில் பாட்டியிடம் செல்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள் ஏஞ்சலிகா.

“அடடே என் குட்டிம்மா சொல்ல வந்த சீக்ரெட் இதுதானா? நாளைக்கு அப்பா உனக்கு ஒரு பெரிய டைரி மில்க் வாங்கித் தரேன் சரியா”… என சமாதானத்தூது விட்டான் தகப்பன்.

பெரிய சாக்லேட்…அப்போச் சரி… சமாதானமாகியவள் பாட்டி எனத் தாவினாள்.மகிழ்ச்சியோடு பேத்தியை தூக்கிக் கொண்டு முத்தமிட்டவருக்கு பதிலுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சிக் கொண்டாள் ஏஞ்சலிகா.

தன் மகன் வாழ்க்கை நல்லபடியாக அமைந்தால் தான் நிறைவேற்றுவதாக எண்ணியிருந்த தன் வேண்டுதல்களை வேளாங்கண்ணி ஆலயம் சென்று நிறைவேற்றிய கையோடு சில சொத்துப் பிரச்சினைகளுக்காகவும் ஊர் சென்றிருந்த அம்மா அன்று திரும்புவதை அவனுக்கு ரகசியமாக வைத்திருந்த மனைவியையும் மகளையும் நினைத்து அவனுக்கு சிரிப்பாக வந்தது.

“அத்தே வாங்க… சுடுதண்ணி போட்டு வைச்சிருக்கேன் மேலுக்கு ஊத்திட்டு வாங்க,அப்புறமா எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்”என்றவளை “இருடி உன்னைப் பார்த்துக்கிறேன்” என்று ரகசியமாய் மிரட்டினான் அவன்.

“ம்க்கும்” அவனுக்கு மட்டும் புரியும் விதம் நொடித்துக் கொண்டுச் சென்று விட்டாள் அவள்.

“நம்ம எல்லோரும் சேர்ந்து வர்ற லீவில வேளாங்கண்ணிக்குப் போகணும்பா”
என்ற அம்மாவிடம்
அதுதான் நான் தீபாவளி லீவுக்கு சேர்ந்து போகலான்னு சொல்லியிருந்தேனே அம்மா நீங்க தான் அவசரமா போயிட்டீங்க. உங்களைத் தனியா விட்டுட்டு எனக்கு ரொம்ப கவலையா இருந்தது.

இப்பவே ரொம்ப லேட்டுப்பா, உன் திருமணம் முடிஞ்ச கையோட போகணும்னு இருந்தது. இப்போ ஏஞ்சலும் வளர்ந்தாச்சு இன்னும் வேண்டுதல் நிறைவேத்தலன்னா சரியில்லை. அதான் துணைக்கு தெரிஞ்சவங்க இருந்தாங்களே நீ எதுக்கு கவலைப் பட்டுக் கிட்டு” அம்மா எழுந்து சென்றார்கள்.

சாப்பாடு முடித்து பாட்டியிடம் கதைக் கேட்க ஒன்றிய மகளை விட்டு விட்டு தன் அறைக்கு திரும்பினான் அரசு என்னும் வளனரசு.

பெட்சீட்டை விரித்துக் கொண்டிருந்த மனைவியை பின்னால் நின்று அணைத்தான்.

என்ன வைஸி சார் ரொம்ப மிரட்டுனமாதிரி இருந்தது…

ம்ம்… பதில் சொல்லாமல் கையோடு அவளைத் தூக்கிக் கோண்டான் அவன்.
வர வர உன்னை தூக்க முடியலடி, குண்டம்மா ரொம்ப கனக்கிற நீ…

“குண்டம்மாவா நான்” அவளின் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாக அவளை தன் மடியில் இருத்தி அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

தன் தலை மேல் கன்னம் பதித்து இருந்த கணவனின் மௌனம் புரியாமல் ,
என்ன அரசு…எனவும்,

“ஒண்ணுமில்லம்மா ஏதோ பழைய ஞாபகம்.”

“ம்ம் என்ன திடீர்னு” என்றவளுக்கு காலேஜில் நிகழ்ந்தவற்றைச் சொன்னான் அவன்.

“ஓஹோ…அப்போ நாம காலேஜில எவ்வளவு ஃபேமஸ் பார்த்தீங்களா” சிரித்தவளை விழி நிறையப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் பனி நீ மட்டும் இல்லைன்னா, உன்னோட காதல் மட்டும் இல்லைன்னா நான் எங்கேயோ என் வாழ்க்கையை என் கண்மண் தெரியாத கோபத்துனால அழிச்சிருப்பேன் இல்ல. அந்த சம்பவத்துக்குப் பிறகு எப்படியோ வைராக்கியமா படிச்சி , அம்மா ஆசைப் பட்டமாதிரி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததுக்கு காரணம் நீதான்”

நெகிழ்வாய் பேசியவனை இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள்.கூடவே முந்தைய ஞாபகங்கள் தலைத்தூக்க அவன் புருவத்திற்கு மேல் சின்னத் தழும்பாக தற்போது மாறியிருந்த அந்த காயத்தை வருடி, அழுந்த முத்தமிட்டாள்.

எல்லாத்தையும் விட உன்னைத் திருமணம் செய்வதுக்குள்ளே பட்ட பாடு, நீ மட்டும் பிடிவாதமா என்னை மணந்திருக்காவிட்டால் நான் ரொம்ப உடைஞ்சிப் போயிருப்பேன். அவ்வளவு வசதியான மாப்பிள்ளைங்கள்லாம் விட்டுட்டு… சொன்னவனின் வாயை மூடினாள் அவள்.

“சும்மா இதையே பேசாதீங்க அரசு …உங்களை விட்டுட்டு அதெப்படி யாரையும் என்னால திருமணம் செய்திருக்க முடியும். நீங்கதான் என்னோட ஃபர்ஸ்ட் & லாஸ்ட் லவ்வாக்கும்”

அவனை இயல்பாக்கும் முயற்சியில் தன் மூக்கால் அவன் மூக்கில் உரசினாள் அவள்.

“எஸ்கிமோ கிஸ் வேணாண்டி எனக்கு வேற கிஸ்தான் வேணும்” கேட்ட கணவனின் கோரிக்கைக்கு அவள் செவிமடுக்க அவர்கள் கெஞ்சலும், கொஞ்சலும் தொடர்ந்தது.
**********

மனிதர்கள் வரவிரும்பா
வெற்று வெட்டவெளி நான்.

என்னிடம் ஆர்வமாய் வந்து என் உள்ளம் நிரப்பியவள் நீ.

கால் பதிப்போர் தாம் புதையும்
ஆழமிக்க மணல் நான்

என்னுள் புதைந்த புதையல் நீ

எப்போதும் சுடும் காற்றில் சுழலும் சூறாவளி நான்.

மென்மையாய் வருடிச் செல்லும்
தென்றல் நீ

தாகத்தில் துடிக்கச் செய்யும்
ஈரப்பதமற்றக் கானல் நான்.

அன்பு மழை எனில் பொழிந்து
என் வாழ்வில்

அழகுமிக்க ரோஜாக்கள்
மலரச் செய்தவள் நீ.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here