1. Puthusattai _ Short Story _ Nilavadhani

0
462

புதுச்சட்டை

“அம்மா…அம்மா…இன்னிக்கு ஸ்கூல்க்கு புது ஸ்கெட்ச் பாக்ஸ் கொண்டு போணும்மா…இல்லன்னா மிஸ் வெளில நிப்பாட்டுவாங்க மா…நேத்திக்கே கொண்டு வர சொன்னாங்க …இன்னும் வாங்கலம்மா நீங்க,” என்று சிணுங்கினான் நான்காவது படிக்கும் கோபிராஜன்.

“டேய் ராஜா…நேத்திக்கே போயி உங்க தாத்தா கிட்ட கேட்டு வாங்க சொன்னேன்ல…நீ போகாம இருந்துகிட்டு இப்ப என்னைய குத்தம் சொல்றியா…போடா போ…அவர கூப்பிட்டு கிட்டு போய் தேவையானத வாங்கிகிட்டு ஸ்கூல் க்கு கெளம்பு” என்றாள் லலிதா.

“ அம்மா…நான் நேத்தே தாத்தாகிட்ட கேட்டேன்மா…ஆனா…”

“என்னடா இழுக்கற…தாத்தா என்ன சொன்னார்…வாங்கி தரமாட்டேன்னு சொல்லிட்டாரா? “

“ இல்லம்மா…அது வந்து…தாத்தா கிட்ட பணம் இல்லையாம்மா…பேப்பர் க்கு குடுக்க மட்டும்தான் மா காசு இருக்காம்…அதான்…என்று ராஜா இழுக்கவும்,

லலிதாவிற்கு ஆத்திரம் தலைக்கேறியது…

“என்னது காசு இல்லையாமா…அப்படின்னா ரூபாயா வச்சிருப்பார்…அதுல வாங்கி தர சொல்லுடா என்று கத்தினாள்.

கோபாலன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து பொருளாதார நிலையை காரணம் காட்டி வேலையிலிருந்து கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டவர்.ஒய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில், முக்கால் பாகம் மகன் எடுத்து கொண்டான்…மீதி கால் பாகத்தை பாங்க்கில் போட்டு வைத்து வட்டி பணத்தை எடுத்து அவரது செலவுகளை பார்த்து கொள்வார்.

கோபாலனின் மனைவி கோதையின் கட்டாயத்தின் பேரில் தான் அந்த பணத்தை இவர் பெயரில் பிக்ஸ்செட் டெபாசிட்டில் போட்டது…அவருக்கு மருமகளின் குணம் ஓரளவு தெரியும்.அதனால் தான் அப்படி செய்தார்.

கோதை உயிருடன் இருந்த வரையில் கோபாலனின் வாழ்வும் நன்றாக தான் இருந்தது.ஆனால் அவர் மறைவிற்கு பின் எல்லாம் தலை கீழாகி விட்டது.காலை காபி ஒன்பது மணிக்கு தான் கிடைக்கும். சாப்பாடு பதினொரு மணி தாண்டிவிடும்…அப்புறம் மதிய சாப்பாடு நினைத்தாலும் சாப்பிட இயலாது…நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதால் அஜீரண கோளாறு வேறு…மகனிடம் சொல்லி அவர்களுக்கிடையில் மன வேறுபாடு வருவதை விரும்பாததால் அவன் காதுக்கு இது வரை சொல்லவில்லை.

ஆனால் லலிதா இதில் கெட்டி…எல்லாவற்றையும் கோபாலனின் தலையில் போட்டு விடுவாள்.

கணவன் மகேஷ், அப்பாவுக்கு காபி குடுக்க வில்லையா என்றால் “மாமா இப்பல்லாம் காபி குடிக்கறத விட்டுட்டாருங்க…சரி வயசு காலத்துல பித்தம் உருவாக்குற காபி எதுக்குன்னு நானும் வற்புறுத்தலங்க” என்பாள்

“ நாந்தான் கோபிக்கு வேண்டியத வாங்கிட்டு வரேனே…அப்புறம் எதுக்கு அப்பாகிட்ட சொல்ற என்று கேட்டால்,” நான் எங்கே சொன்னேன்…பேரன் கேட்கிறான்…தாத்தா வாங்கி தரார்…என்பாள்.

இப்படி எதிலுமே அவளை குற்றப் படுத்தாவண்ணம் பார்த்து கொள்வாள் லலிதா.அவளை பொறுத்த வரையில், மாமனாரிடம் உள்ள பணம் அவருக்கு எதுக்கு…அதை தன் மகனுக்கு செலவளிக்கட்டுமே என்று நினைப்பாள்.

இப்படி அவரிடம் உள்ள வட்டி பணம் முழுமைக்குமே ஏதாவது செலவு உருவாக்கி விடுவாள் லலிதா…கோபாலனும் சில சமயம் அவர் பிரஷர், சுகர் மாத்திரைகள் வாங்க கூட பணமின்றி வாங்காமலே விட்டு விடுவார். இதனால் அவரது உடல் நிலையும் மோசமாகி தான் வருகிறது.இத்தனைக்கும் மகேஷ் நல்லதொரு கம்பெனியில் மென்பொருள் துறையில் தான் இருக்கிறான்.சம்பாத்தியத்திற்கும் குறைவு கிடையாது.ஆனால் லலிதாவின் மனநிலை, இவருக்கு எதற்காக பணம் என்ற அளவிலே தான் இருந்தது.

கோபாலன் எதுவும் சொல்ல மாட்டார்.தினமும் வாக்கிங் அருகிலுள்ள பூங்காவில். அங்கே சில நண்பர்கள் அவர் வயதையொத்தவர்கள்…

அதோடு அங்கே சுண்டல் விற்பதற்காக வரும் ஒரு குட்டி பையனும் அவருக்கு நண்பனே…பலநாட்கள் அவனை கவனித்து வந்தார்.சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்திற்கு பூங்காவினுள் வருவான்…அவன் சட்டை தூய்மையாக இருக்கும்.ஆனால் ஒட்டு போடாத இடமே இல்லை எனலாம். ஒருநாள் அவன் சுண்டல் விற்பதை பார்த்துவிட்டு,

“ஏன்பா, படிக்கிற வயசுல இப்படி சுண்டல் விக்கிறாயே…பள்ளிக்கூடம் போலாமில்ல” என்று கேட்டார்

அவன், “பள்ளிக்கூடம் போகிறவங்க சுண்டல் விக்க கூடாதுன்னு சட்டம் இருக்கா தாத்தா “என்று எதிர்கேள்வி கேட்டான்.

அவன் கேட்ட தோரணை புன்னகையை ஏற்படுத்த,

“என் பேரு கோபாலன் , உன் பேரு என்ன” என்றார் பெரியவர்

“என் பேரு விவேகானந்த் தாத்தா, அதெப்படி என்கிட்டே பேரை கேக்க முன்னாடியே உங்க பேர சொல்லிட்டு கேக்கறீங்க” என்று கேட்க,

“நான் உன் பேரை கேட்டவுடனே நீ அடுத்து என் பேரை தான் கேட்ப,அதான் நானே முந்திக்கிட்டு சொல்லிட்டேன்” என்றவர் “சரி…எனக்கு ஒரு பொட்டலம் குடு…வெங்காயம் லாம் போடாம குடு “ என்று வாங்கி கொண்டார்.

அப்படி தினமும் பரிச்சயமான புன்னகையோடு ஓரிரு நிமிடங்கள் பேசி கொள்வார்கள். அப்படி ஒருநாள், விவேக்கின் வியாபாரம் சீக்கிரம் முடிந்துவிட்டதால் அவனை அருகில் அழைத்து, அவன் குடும்பம் குறித்து மேலும் விவரம் கேட்டார் கோபாலன்.

விவேக்கிற்கு தாய் மட்டுமே…அவரும் உடல்நிலை சரியில்லாதவர்.

சில வீடுகளில் வேலை பார்த்து விவேக்கை படிக்க வைத்தார்.இப்போது உழைக்க உடல் ஒத்துழைக்க வில்லை…எனவே குடும்ப சூழலால் அவனும் மாலை வேளையில் இப்படி சுண்டல் விற்று பணம் சம்பாதிக்கிறான்…காலையில் பேப்பர் போடுவதாகவும் கூறினான்.

விவேக் பெயருக்கேற்ப புத்திசாலி…டக்கென்று பிடித்து கொள்வான். சுண்டல் விற்க வரும்போதே, சிலசமயம் புத்தகமும் கொண்டு வந்து படிப்பான்…அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில்…ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் விவேக்… கோபாலன் அவனுக்கு கணக்கு, அறிவியல் பாடங்களில் சந்தேகம் இருந்தால் சொல்லி கொடுப்பார்.இப்படி அவர்களது நட்பு வளர்ந்தது…

பார்க்கிற்கு வரும் கோபாலனின் நண்பர்கள் சற்றே வசதியானவர்கள்தான் ஆனால் கோபாலனின் வீட்டுக்குள் நடப்பது மற்றவர்களுக்கு தெரியாது…அவர்கள் வீட்டு நிலையின் உண்மை நிலவரமும் தெரியாது…எனவே அவர்களிடம் உதவும்படி சொல்வதில்லை…அத்தோடு அவர்கள் இந்த சிறு பையனிடம் பேசுவதும் இல்லை…

ஆனால், கோபாலனின் நெருங்கிய தோழன் சபேசன் மட்டும் கோபாலனின் கருத்திற்கு ஒத்து போவார்…என்றாலும் அவரது நிலை அந்தோ பரிதாபம்…கோபாலனின் நிலையை விட அவரது நிலை ரொம்ப மோசம்…ஏனெனில் அவருக்கு வருமானம் ஏதுமில்லை…அவரிடம் போய் என்ன உதவி கேட்க முடியும்…

கோபாலனுக்கு விவேக்கிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்…அதனால் வீட்டிற்கு பேப்பர் போட சொல்லி சொன்னார். அதற்கும் லலிதா கத்தினாள்.

“ஏற்கனவே ஹிந்து பேப்பர் வாங்குறோமே அது பத்தாதா…இப்ப எதுக்கு தமிழ் பேப்பர் “ என்று சொல்லவும் கோபாலன் தானே அந்த பேப்பருக்கு பணம் கொடுத்து விடுவதாகவும் கூறி விட்டார்.

விவேக்குக்கு ஒரு புது டிரஸ் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை கோபாலனுக்கு இருந்தது.ஆனால் பணம்…விவேக்கிடம் கூட புது சட்டை பற்றி கேட்கும் போது, அவன் கண்ணில் ஒரு நொடி தோன்றிய மின்னல், அவன் மனதில் இருக்கும் ஆசை புரிந்தது…

“வாங்கனும்னு தோணும் தாத்தா…ஆனா எனக்கு பள்ளிக்கூட பீஸ், புக்ஸ் எல்லாம் ஸ்கூல் பாத்துக்குது…ஆனா அம்மாவ நான் தானே பாத்துக்கணும்…இப்போ நான் சம்பாதிக்கிறதுல அம்மாக்கு மாத்திரை வாங்கவே பத்தாது தாத்தா…அப்புறம் நான் எப்படி தாத்தா புது சட்டை வாங்கறது…அதோட மத்தவங்க போட்ட ட்ரெஸ் வாங்கி போடறதுலையும் எனக்கு விருப்பமில்லை தாத்தா…ஏன்னா…என்று ஆரம்பித்துவிட்டு அங்குமிங்கும் கண்கள் அலைபாய, கண்களில் நீர் நிரம்ப தொடங்கியது…

அதை பார்த்த கோபாலன், “விவேக் என்னப்பா…வேணாம் விவேக்…சொல்ல கஷ்டமார்ந்தா விட்ருப்பா…”

“இல்ல தாத்தா…அது வந்து,…நா யார்கிட்டயாவது சட்டை வாங்கி போடும்போது மத்த பசங்க ஓசி சட்டை… அடுத்தவங்க போட்ட சட்டையை இவன் போடராண்டா…அப்படின்னு கேலி பண்றாங்க தாத்தா…எல்லாமே இவனுக்கு ஓசி அப்படின்னு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு தாத்தா…அதான்…டீச்சர் குடுத்தப்ப கூட நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்…” என்றான் விவேக்.

இதை கேட்டதும் கோபாலன் நெகிழ்ந்து விட்டார்… இந்த மாதமாவது சுகர் மாத்திரைகள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தார் கோபாலன்…ஆனால், விவேக்கின் பேச்சை கேட்ட பின்பு எப்படியாவது அவனுக்கு ஒரு சட்டை வாங்கி குடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.

அன்று ஏனோ விவேக்கின் முகம் வாட்டமாயிருந்தது…சரி அவன் வியாபாரம் முடித்து வரட்டும் என்று காத்திருந்த கோபாலன் மெதுவாக விவேக்கிடம் பேச்சு குடுத்து “என்னடா கண்ணா …ஏதும் பிரச்சனையா ஏன் டல்லா இருக்க என்றார்.

“ப்ச் …ஒண்ணுமில்லை தாத்தா…அம்மாக்கு மூச்சிறைப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு…அவங்க நா எவ்ளோ சொல்லியும் கேக்காம பஞ்சு கம்பனிக்கு வேலைக்கு போயிருக்காங்க தாத்தா…அது தூசி பட்டதும் அவங்க இழைப்பு அதிகமா ஆகிடுச்சு…இப்போ ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிட்டு தான் இங்க வரேன்”

“என்னடா…அம்மா எதுக்கு திடீர்னு வேலைக்கு போனாங்க “

“அது தாத்தா…அடுத்த வாராம் எனக்கு பிறந்த நாள் வருது…அம்மாக்கு எனக்கு ஒரு டிரெஸ் எடுத்துகுடுக்க ஆசை…அதான் காசு வேணும்னு எனக்கு தெரியாம வேலைக்கு போயிருக்காங்க…இப்ப பாருங்க ரொம்ப உடம்பு முடில தாத்தா…”என்றான் குரல் கம்ம…

“சரிடா எல்லாம் சரி ஆகிடும் “ என்று அவனை தேத்தியவர்,அவன் பிறந்த தினம் என்று என கேட்டார்.அவனோ,” அட போங்க தாத்தா…நான் அத எல்லாம் கொண்டாட முடியுமா…விடுங்க தாத்தா…”

விடாமல் அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டார் கோபாலன்.அப்போதே அவன் பிறந்த நாளன்று புது சட்டை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்றும் தீர்மானித்தார்.

ஆனால், அன்று இரவே கோபாலனுக்கு பி பி அதிகமாகி சுயநினைவின்றி போய் விட்டார்.சுகரின் அளவும் கூடவே அவரது நிலை மோசமடைந்தது.

லலிதா இதை கவனிக்க வில்லை…கோபி வழக்கம் போல் தாத்தாவிடம் வந்தவன், எழுப்பினான்…அவரிடம் அசைவில்லாததை கண்டவன் தாயிடம் சென்று கூற…அவளோ காலை நேர பரபரப்பில், “போடா…எல்லாம் எழுந்துக்குவார்…போ போய் நீ உன் வேலைய பாரு…ஸ்கூல் கு கெளம்புற வழிய பாரு…” என்று விரட்டவே அவனும் சென்று விட்டான்.

அன்று ஒரு மீட்டிங் கான்சல் ஆனதால் சீக்கிரமாகவே மகேஷும் வீட்டிற்கு வந்து விட்டான். “லல்லி , அப்பா எங்கே? ஆளையே காணோம்…இந்நேரம் தூங்க மாட்டாங்களே…என்ன ஆச்சு “என்றதும் தான் லலிதாவிற்கு மகன் காலையில் சொல்லியது நினைவிற்கு வந்து பதட்டம் ஏற்பட்டது…”அது…தெரிலங்க…இதோ பாக்கறேன்…”என்றவள் கோபாலன் படுத்திருக்கும் இடம் சென்று பார்க்க, அப்படியே படுத்த வண்ணம் இருந்தார்… அவரை லேசாக தொட்டு அசைத்து “மாமா மாமா ” என்று சத்தம் கொடுத்தான் அசைவில்லை .பயந்து போனவளாக , “ மகேஷ் , இங்க வந்து பாருங்க…மாமா உணர்வில்லாமல் படுத்திருக்கார்…” என்று கூற வேகமாக வந்த மகேஷ் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். வாசலுக்கு வருகையில், சபேசன் எதிர்பட…

“என்னப்பா மகேஷ்…என்னாச்சுப்பா…கோபாலனுக்கு என்ன?”

“தெரில அங்கிள்…அப்பா சுயநினைவு இல்லாம இருக்காங்க…அதான் வழக்கமா போற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போறேன்…நீங்க அங்க முடிஞ்சா வாங்க “என்றவன் காரை கிளப்பினான்.

வீட்டுக்குள் நுழைந்த சபேசன் எதிர்பட்ட லலிதாவை பார்த்து “என்னம்மா ஆச்சு அவனுக்கு…என்று தயங்கி தயங்கி கேட்டார்.

லலிதாவிற்கு சபேசனை பிடிக்காது…ஆனால் ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்த லலிதாவிற்கு அன்று ஒன்றும் தோன்றவில்லை…”அது…மாமா…காலயில இருந்து எந்திரிக்கல…இல்ல இல்ல.நான் வேலையில கவனிக்கல…அது இப்படி…இப்படி ஆகும்னு நினைக்கல…”என்று தடுமாறியவளை பார்த்து சபேசனுக்கு அவள்பால் இரக்கம் தோன்றியது…

“சரிம்மா…அவனுக்கு ஒன்னும் ஆகாது…சரி ஆயிடுவான்.நான் போய் பாக்கறேன் “ என்றவர் தான் வந்த வேலையை முடிப்பதா வேண்டாமா என்று குழப்பத்தோடு நடக்க தொடங்கினார்…

நாளை விவேக்குக்கு பிறந்தநாள்…அதற்காக பணம் கொடுத்து சபேசனை ஒரு புது ஆடை எடுத்து வரும்படி கோபாலன் சொல்லியிருந்தார்.அதை வாங்கி கொண்டு, கொடுத்து விட்டு போவோம் என்று தான் நேராக கோபாலன் வீட்டிற்கே வந்தார். வந்த இடத்தில் தான் விஷயம் தெரிந்தது.

சரி, ஹாஸ்பிடல் செல்வோம் என்று எதிர்பட்ட பஸ்ஸில் ஏறி ஹாஸ்பிடல் செல்ல, அங்கே கோபாலன் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது…காலையிலேயே உணர்வு தப்பியிருக்க வேண்டும் என்றும் இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் என்றும் டாக்டர் கடிந்து கொண்டார்.ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டார் கோபாலன்…சுகர் ஏகத்துக்கும் ஏறி இருக்கவே மீண்டும் டாக்டர் மகேஷை அழைத்தார்.”என்னப்பா…உங்க அப்பா சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரை போடறாரா இல்லையா…இப்படி ரெண்டுமே ஹையா இருக்கற வரை நீ என்ன பண்ணின…ஒழுங்கா கவனிக்கறது இல்லையா…”

“அது வந்து டாக்டர்…அப்பாவே எல்லாம் பாத்துப்பாங்கன்னு…

“அது சரி…இந்த காலத்து பசங்க எல்லாரும் இப்படி இருங்க…சரி இன்னும் 2 4 மணிநேரம் கழிச்சு தான் ஏதும் சொல்ல முடியும்…மைல்டா அட்டாக் வந்து தான் இப்படி அன்கான்ஷியஸ் ஆகிருக்கு…பட் பை காட்ஸ் கிரேஸ், திரும்ப அட்டாக் வராம இருந்தா தான் எதுவுமே சொல்ல முடியும்…” என்று கூறி விட்டு டாக்டர் நகர்ந்தார்.

மகேஷ் நிலை கொள்ளாமல் தவித்தான். அதற்குள் சபேசன் அங்கே வந்து சேர, அவரிடம் விவரம் கூறியவன் “அங்கிள், அப்பா மாத்திரை எல்லாம் போடுவாங்க தானே…அப்புறம் எப்படி…என்று அவரிடமே விவரம் கேட்டான்.

என்ன சொல்லுவார் சபேசன்…ஆனாலும்…இது மருத்துவம் எதையும் மறைப்பது தவறு என்று நினைத்து, “ இல்ல மகேஷ்…கோபால் மாத்திரை ரெகுலரா சாப்பிடறதில்லை…ஏன்னா அவனுக்கு சில நேரம் மாத்திரை வாங்க பணம் இருபதில்லை என்று கூற,

“வாட்…என்ன அங்கிள் என்ன சொல்றீங்க…அப்பாவோட வட்டிப்பணம் முழுசுமே அவங்க மருந்து மாத்திரை தானே வாங்கறாங்க…அப்புறமென்ன அங்கிள்…பத்தலன்னா என்கிட்டே கேட்டிருக்கலாமே…என்று கூற

அவனை முறைத்தார் சபேசன்,”மகேஷ்…உன்னை பொறுத்தவரை நீ அப்படி நினைச்சா அதுக்கு கோபால் என்ன செய்வான்…”

“என்ன அங்கிள் சொல்றீங்க…”

“இல்லப்பா…கோபாலன் ரொம்ப நாளாவே மாத்திரை வாங்கறதில்ல பா… எல்லா பைசாவும் செலவாகிடுது பா அவருக்கு…”

“அவருக்கு இத தவிர வேற என்ன செலவு அங்கிள்…”

“இதை சொல்றேன்னு என்னை நீ தப்பா நினைக்காத மகேஷ்…அவருக்கு மாத்திரை வாங்கறத தவிர மத்த செலவுகள் அதிகம் பா…உனக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லைன்னு சொல்ல மாட்டேன்.ஆனா நீயும் ஒரு காரணம்…வீட்டுல என்ன நடக்குதுன்னு நீ தெரிஞ்சிருந்துருக்கணும்…

ஏன்னா… உன் மகன் கோபிக்கு ஸ்கூல் ல குடுக்கற ப்ராஜெக்ட் வொர்க் முழுசுக்கும் பட்ஜெட் உங்க அப்பாவோடதுன்னு உனக்கு தெரியுமா?கோபி திடீர்னு ஸ்நாக்ஸ் கேட்டா அத வாங்கி குடுக்கறது உங்க அப்பான்னு உனக்கு தெரியுமா? இவ்ளோ ஏன் , பூக்காரங்க , காய்கரிகாரங்க யாராச்சும் உன் வீட்டுல வந்து காசு கேட்டா அதுக்கு ஸ்பான்சர் உங்க அப்பாதான் மகேஷ்…உன் மனைவிய நான் குறை சொல்லல பா…அவ நல்லவ தான்…ஆனா, வயசான காலத்துல இவங்க கைல எதுக்கு வீணா காசுன்னு நெனைக்கறா போல…அதான், கோபாலன் மாத்திரைகள நிறுத்திட்டான்…”

இதை கேட்ட மகேஷ் செய்வதறியாது திகைத்து நின்றான்…தன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் தனக்கே தெரியவில்லை…தன் தந்தைக்கு தான் செய்யாவிட்டாலும் அவர் பணத்தையும் தன் குடும்பமே சுரண்டியிருக்கிறது என்று தெரிந்து நொந்து போனான் அவன்…

அந்த நேரம் பார்த்து லலிதா, கோபியை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலை வந்தடைய மகேஷின் வருத்தம் கோபமாக மாறி லலிதாவிடம் கத்த தொடங்கினான்…

“ ஏய் , நான் உனக்கு சம்பாதிச்சு போடறது பத்தாதுன்னு நீ எங்க அப்பாகிட்ட உள்ள காச எல்லாம் பிடுங்கிருக்க…ஏன் இப்படி பண்ண…உனக்கு நான் எதுமே செய்யாட்டியோ அல்லது பணம் நமக்கு ஒரு பிரச்சனையா இருந்தாலோ நீ செஞ்சத நியாய படுத்த முடியும்…ஆனா நீ…ச்சே…”

“சாரி மகேஷ்…நான் வேணும்னு செய்யல …அது அவருக்கிட்ட பணம் நிறைய இருக்கும்னு தான்…”

“அவர்கிட்ட உள்ள பணத்த பத்தி உனக்கென்ன…ஏன் உங்க அப்பாக்கு நீதானே எல்லா மருந்து செலவும் பாக்கற…அத நான் எதாச்சும் சொல்லிருக்கேனா…ஆனா எங்க அப்பாவ நீ …

இதற்குள் கோபி ,ஐ சி யு வில் இருந்த தாத்தாவை கண்ணாடி வழியே பார்த்தவன், விழிகளில் கண்ணீர் சுரக்க “அப்பா தாத்தாக்கு என்னாச்சுப்பா…காலையிலேயே அவர் எந்திரிக்கல பா…நான் அம்மாகிட்ட சொன்னேன் பா…ஏம்ப்பா தாத்தாக்கு மூக்குல எல்லாம் டியுப் மாட்டிருக்கு…எப்போப்பா எந்திப்பார் தாத்தா…எனக்கு பேசணும் பா…தாத்தா பண்ணி குடுத்த ப்ராஜெக்ட் புல் மார்க் பா எனக்கு…” என்று தொடர்ந்து பேசினான் கோபி…

அவன் பேசிய மற்ற எதுவும் காதில் விழவில்லை மகேஷிற்கு…காலையில் தாத்தா எழவில்லை, அம்மா கிட்ட சொன்னேன் என்று கோபி சொன்னதுமே லலிதாவை முறைத்தவன் , அவளிடம் பேசவில்லை…இனி என்னாக போகிறது என்ற ரீதியில் ,சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான் மகேஷ்…

அதற்குள் ஒரு நர்ஸ் வந்து, “சார், பேஷன்ட் கு நினைவு வந்திருக்கு…யாராச்சும் ரெண்டு பேர் மட்டும் உள்ளே போங்க…ஆனா பேச்சு குடுக்காதிங்க “என்றாள்

உடனே எழுந்த மகேஷ் உள்ளே விரைய, பின் தொடர்ந்த லலிதாவை எரித்து விடுவது போல பார்த்தான்.அவள் பின் தங்கவும்…சபேசன் அவனோடு சென்றார்.

தானும் வருவேன் என்ற கோபியிடம், அப்பா போய் பாத்திட்டு வந்து உன்ன கூட்டி போறேன் பா…” என்று சொல்லி விட்டு சபேசனோடுஉள்ளே சென்றான் மகேஷ்.

“அப்பா…அப்பா என்று அழைக்க, மெதுவாக கண் திறந்த கோபாலன் மகனை பார்த்து அழாதே என்று செய்கை செய்தார் பின்பு விழிகளை சுழற்சியவர் , சபேசனையும் பார்த்து மெல்ல சிரித்தார். அவரை அருகில் அழைத்து, வி …வி…என ஆரம்பிக்க , சபேசன் கையிலிருந்த பொட்டலத்தை காண்பித்தார்.அதை பார்த்ததும் முகம் மலர்ந்த கோபாலன்,சோர்வோடு கண்களை மூடி திறந்தார்.

“அப்பா…என்ன மன்னிச்சிடுங்க பா…நீங்க மாத்திரை சாபிடலன்னு இப்ப டாக்டர் சொல்லி தான்பா எனக்கு தெரிஞ்சுது…சாரிப்பா…உங்கள் நா கவனிக்காம விட்டது தப்புதான் பா…ஏன்பா…என்கிட்டே நீங்க கேட்டிருக்கலாமே…ஏன்பா…இப்படி பண்ணினீங்க…”

அவன் தலையை தடவிய கோபாலன், ஒண்ணுமில்ல மகேஷ் எல்லாம் சரி ஆய்டும்… சபேசா…அத விவேக் கிட்ட குடுத்து போட்டுகிட்டு நாளைக்கு வர சொல்லு…நான் அவன பாக்கணும் என்றார்.

சரி என்று தலையாட்டிய சபேசன், இப்போதே கொடுத்து விட்டு ஆஸ்பிடலுக்கு வந்துவிடுவோம் என்று நினைத்து பூங்காவிற்கு விரைய, எதிரிலேயே விவேக் எதிர்பட்டான்.

“என்ன தாத்தா, நம்ம பிரெண்ட் எங்கே ?நீங்க மட்டும் வாரிங்க… “

“அது…ஒன்னுமில்லடா…அவனுக்கு லேசா உடம்பு சரிஇல்லை…அதான் உன்னோட பிறந்தநாள் பரிச குடுத்துட்டு வர சொல்லி இங்க அனுப்பினான்…இந்தா…இத போட்டுக்கிட்டு நாளைக்கு உன் பிரெண்ட் வீட்டுக்கு வந்திடு…சரியா “

டிரெஸ்ஸை பார்த்ததும் விவேக்குக்கு சந்தோஷம் பிடிபடவில்லை…ஆனாலும் “ நாந்தான் வேணாம்னு சொன்னேனே தாத்தா …எதுக்கு இது…” என்றவனின் கண்கள் பளிச்சிட்டது…கண்களில் நீர் தழும்ப ஆசையாக ஒரு முறை ஆடையை வருடியவன் ”சரி தாத்தா…நான் நாளைக்கு வரேன்…என் பிரெண்ட் உடம்ப பாத்துக்க சொல்லுங்க தாத்தா…ரொம்ப தேங்க்ஸ் தாத்தா…”என்றவன் குதித்துக் கொண்டு ஓடினான். சிறிது தூரம் சென்றவன் திரும்பி வந்து “தாத்தா என் பிரெண்ட் கு ஒன்னும் பயமில்லையே…” என்றான்.

அவன் பாசத்தை பார்த்த சபேசன் ,”ஒன்னுமில்லடா விவேக்…அவன் சரி ஆகிடுவான்…நாளைக்கு உனக்கு வாழ்த்து சொல்லணுமில்ல …அதுக்கு அவன் நாளைக்கு வீட்டில் இருப்பான்…நீ வா என்ன” எனவும்

போன மகிழ்ச்சி மீண்டும் முகிழ்க்க, “சரி தாத்தா என்று துள்ளிக்கொண்டு ஓடினான் விவேக்.வீட்டிற்கு வந்தவன், மருத்துவ மனையிலிருந்து வந்த தாயிடம் சட்டையை காண்பித்தான்.

“அம்மா இங்க பாருங்க…இப்படி ஒரு சட்டை எடுக்க தானே நீங்க வேலைக்கு போனீங்க…இப்போ பாத்திங்களா…எனக்கு, நான் அடிக்கடி சொல்ற என்னோட தாத்தா பிரெண்ட் எடுத்து குடுத்திட்டாங்க…” என்று ஆர்ப்பரித்தான்.

மகனின் மகிழ்ச்சியை பார்த்த தாயும் சந்தோஷத்தோடு மகனை அணைத்து கொண்டார்.

அன்று இரவு முழுதுமே விவேக் தூங்க வில்லை…தன் அருகில் சட்டையை வைத்து கொண்டு தடவுவதும், பிரித்து பார்ப்பதுமாய் இருந்தான்.அதைப்பார்த்த அவன் அன்னை வேதனையையும் அதே சமயம் பிறந்தநாள் அன்றாவது அவன் நல்ல உடுப்பு அணிகின்றானே என்ற திருப்தியோடும் பார்த்துகொண்டிருந்தார்…

ஒரு நொடிக்கொருமுறை ,

“ அம்மா இந்த கலர் இதுக்கு முன்னால நான் போடல இல்லம்மா “

“ நாளைக்கு ஸ்கூல்ல எல்லாரும் என்னையே பாப்பாங்க இல்லம்மா “

“ நல்லவேளைம்மா நாளைக்கு யுனிபார்ம் போடற நாள் இல்லை…”

“ அம்மா…யாராச்சும் இது ஏதுன்னு கேட்டா என்னம்மா சொல்றது…”

“ ப்ச்…பரவால்லம்மா…தாத்தா குடுத்ததுன்னே சொல்றேன் சரியா…”

“ அம்மா எனக்கு இது நல்லாருக்குமாம்மா”

“இப்பவே போட்டு பாக்கட்டுமா …என்னம்மா ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க…” என்று சிணுங்க,அவன் தாயோ, “டேய் விவேக்…நான் உன் முகத்துல உள்ள சந்தோஷத்த ரசிக்கிறேண்டா…என் பிள்ளை இவ்வளவு நாள் கழித்து உண்மையான சின்ன பையனா நடந்துக்கறத பாக்கறேன் டா பையா…இந்த சந்தோஷத்த குடுத்த அந்த பெரியவர் வீட்டுக்கு நானும் நாளைக்கு வரேண்டா…அவருக்கு நன்றி சொல்லணும் …என்னையும் கூட்டிட்டிட்டு போறியா “ என்றார்.

அதைகேட்ட விவேக், “சரிம்மா…கண்டிப்பா கூட்டி போறேன்”
“சரி டா கண்ணா இப்ப போய் தூங்கு…காலையில எந்திரிக்கனுமில்ல…போ போய் படு”

“சரிம்மா என்று படுத்தவன் மீண்டும் எழுந்து வந்து அந்த உடையை தன் பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்கினான்.

பொழுது அழகாக புலர்ந்தது…விடியலிலேயே எழுந்து விட்டான். எங்கே? அவன்தான் தூங்கவில்லையே…

“அம்மா, நான் கெளம்பிட்டேன் மா…ட்ரெஸ் நல்லருக்காம்மா” என்று முகமெங்கும் புன்னகை பரவ கேட்டான் விவேக்.

விவேக்கை பார்த்து கண்களில் நீர் நிறைய, அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு,”அழகா இருக்குப்பா…இந்தா இந்த காப்பிய குடிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு அப்புறமா பேப்பர் போட போ…சரியா…”

சரிம்மா என்றவன், சுறுசுறுப்பாக கிளம்பி கோவிலுக்கு சென்று முதலில் தாத்தாவின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்து விட்டு தன் வேலையை துவங்கினான்.

முதலில் தாத்தா வீட்டிற்கு போகலாம் என்ற நினைத்ததை மாற்றி, எல்லாருக்கும் போட்டு விட்டு அம்மாவை கூட்டிக்கொண்டு கடைசியாக போகலாம் என்று எல்லோர் வீட்டுக்கும் உற்சாகமாக பேப்பர் போட தொடங்கினான்.

மளமளவென்று வேலையை முடித்தவன், அம்மாவை கூட்டிக்கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்தான். எப்பொழுதும் வாசலில் இருக்கும் தாத்தாவைக் காணோமே என்று நினைத்தவாறே, வாசலுக்கு வந்தான்.கதவை தாண்டி உள்ளே செல்ல நினைத்தவன் , சபேசன் வேகமாக உள்ளே வருவதை பார்த்து வாசலிலேயே நின்றான்.

“தாத்தா, கோபால் தாத்தா எங்கே? இதோ நான் புது சட்டை போட்டுக்கிட்டு வந்திட்டேன் தாத்தா…நல்லாருக்கா” என்று புன்னகை ததும்ப கேட்டான்.

அவனை வேதனையோடு பார்த்த சபேசன், அவன் தோளில் கை போட்டு அணைத்துகொண்டு, அவன் தாயை ஒரு சிறு தலையசைவால் உள்ளே வர சொல்லி கூட்டி சென்றார் சபேசன்.

உள்ளே செல்ல செல்ல, ஹாலில் இருந்த கூட்டத்தை பார்த்து,“என்ன தாத்தா, என்ன ஆச்சு என்று ஒரு பரிதவிப்போடு அவர் முகத்தை ஏறிட்டான் விவேக்…

அதற்குள் விவேக்கின் தாய்க்கு ஓரளவிற்கு புரிய தொடங்கியது…ஐயோ என்று இருந்தது அவருக்கு…மகனின் கையை பற்றி கொண்டார்.

அங்கே கோபாலனை நடுநாயகமாக கிடத்தியிருந்தார்கள். அவரது உயிர் கூட்டை விடுத்து பறந்து நான்கு மணி நேரமாகி இருந்தது.சிவியர் ஹார்ட் அட்டாக் என்றார்கள்…ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம்…உயிர் என்னும் சொந்தம் அவரை விட்டு நீங்கி விட்டது.

விவேக் அப்படியே சிலையாக நின்றான்.கண்ணில் நீர் வரவில்லை…மெல்ல அவரது அருகினில் சென்றான்…பேப்பரை அவர் காலடியில் வைத்தான்.பார்த்தான்…பார்த்து கொண்டே இருந்தான்…அவனருகில் வந்த கோபி, அழுது கொண்டே “விவேக் அண்ணா…தாத்தா நேத்திலேர்ந்து இப்படி தான் தூங்கறாங்க…இனிமேல் வரமாட்டாங்களாம் “ என்றான்.அப்பொழுதும் அவனிடம் அசைவில்லை.

மெல்ல நகர்ந்த விவேக் சபேசனை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தான்… தான் போட்டிருந்த சட்டையை மெல்ல கழற்றி தாத்தாவின் மீது போர்த்தினான். சபேசனிடம் வந்த விவேக், “என்கிட்டே மாலை வாங்க காசு இல்லை தாத்தா…இதுதான் நான் அவருக்கு போடற மாலை…தயவு செஞ்சு இதை எடுத்திடாதீங்க “ என்றவன் கதறி அழ தொடங்கினான்…

அவன் அழுகை நிற்க எவ்வளவு நேரமாகுமோ?

அல்லது நாட்களாகுமோ?

அல்லது மாதங்களுமாகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here