உள்ளம் உந்தன் வசம்_12_ஜான்சி

0
316

அத்தியாயம் 12

பெரியப்பா வீட்டிலிருந்து வரும் போதே இரவு எட்டு மணியாகி விட்டிருந்தது. ஆதவனின் பெரியம்மா பாசத்தில் மகன் மருமகள் இருவர் வயிற்றையும் ரொம்பவே கவனித்து அனுப்பி இருந்தார். அங்கிருந்து புறப்பட்டு வந்த கணவனுக்கும் மனைவிக்கும் நடந்து வந்தது போலல்லாமல் உருண்டு வந்தது போலொரு உணர்வு ஏற்பட்டது

வீட்டிற்கு வந்து காரை பார்க் செய்யும் முன்பாக ஏற்கெனவே அங்கே பார்க் செய்யப்பட்டிருந்த காரைப் பார்த்து அகிலா உற்சாகமானாள்.

‘கண்ணா அண்ணா வந்திருக்காங்க….பாருங்க… அவங்க கார்’, என்றாள்.

‘ம்ம்’ என்று பதிலளித்தவன் மனதிற்குள்ளாக,

நேற்று தானே இவள் தாய் வீட்டிற்குச் சென்று வந்தோம். என்னவோ பல மாதங்கள் கழித்துத் தன் குடும்பத்தைப் பார்க்கப் போவதைப் போல இவளுக்கு என்ன ஒரு உற்சாகம்?’ என எண்ணிக் கொண்டான்.

அவசரமாய்க் காரிலிருந்து இறங்கி நடந்தவளை, அவனும் பின் தொடர்ந்தான். முன்னறையில் பார்க்க அங்கோ அகிலா வீட்டிலிருந்து அனைவருமே வந்திருந்தனர். மகளைப் பார்த்துப் பெற்றவர்கள் கண்கள் மின்ன அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழ, பிரசன்னா தங்கையை நோக்கி வந்து,

‘பாப்பா நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்கு’

என்றவனாக மெலிதாய் அணைத்துக் கொண்டான்.

அதைக் கண்டவாறே பின்னால் வந்த ஆதவன் முகத்தில் மென்முறுவல் படர்ந்தது. அவனையும் அவள் வீட்டினர் விசாரிக்க அமைதியாய் பதில் கொடுத்துக் கொண்டு அனைவரையும் வரவேற்று பேசிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்தவர்கள் அதுவரை சம்பந்திகளிடமும் பங்கஜம் பாட்டியிடமும், பிரணவ் ரவி மற்றும் நிர்மலா விடம் அளவளாவி கொண்டு இருந்திருந்தனர். மகளுக்காக காத்திருந்ததற்கு ஏற்ப மகளைக் கண்டு பேசியதும் உடனே புறப்பட யத்தனித்தனர். ராஜியும் நிர்மலாவும் அவர்கள் அனைவரையும் சாப்பிடும் படி கட்டாயப் படுத்தி நிறுத்தி வைத்தனர்.

அம்மா, அப்பா சூழ அமர்ந்திருந்த அகிலா தன் பெரியண்ணா கண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கூட, முன் தினம் மூச்சு விடாமல் சண்டையிட்ட பிரசன்னாவிடம் மும்முரமாய் மற்றோர் ஓரமாக மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். இருவரும் தத்தம் அலைபேசிகளில் ஏதேதோ செய்து கொண்டு இருந்தனர்.

கால்வலி குறித்தும் மாத்திரை சாப்பிடுவது குறித்தும் பேச்சு எழுந்ததும் தாயிடம் ஆதவன் போட்டுக் கொடுத்து விடுவானோ? என்ற கள்ளப் பார்வை பார்த்தவள் அவன் ஒன்றும் சொல்லாதிருக்க முந்திக் கொண்டவளாக,

‘ஆமாம், அம்மா நான் மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறேன்’ என்று ஒப்பித்தாள்.

‘நம்ப முடியலியே?’ எனக் கண்ணன் இழுக்கவும் ஆதவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவனுக்கு அதே நேரம் மறுபடியும் அலுவலகத்திலிருந்து போன் அழைப்பு வரவும், தன் வீட்டினர் சூழ அமர்ந்திருந்தவளை விட்டு விட்டு வீட்டின் பின்புறம் சென்று பேசிவிட்டு, அரை மணி நேரம் கழிந்தே திரும்பி வந்தான்.

சாப்பாடு பறிமாறப்படக் கலகலப்பாய் பேசிக் கொண்டே அனைவரும் சாப்பிட்டனர். பங்கஜம் பாட்டி அகிலாவின் பெற்றோரின் ஊர் பக்கம் உள்ள சொந்தங்களைக் குறித்துத் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார்.

அகிலா ஏற்கெனவே சாப்பிட்டு இருந்ததால் நிர்மலாவை அமரச் சொல்லி விட்டு அத்தையிடம் கேட்டு கேட்டு ஒவ்வொன்றாய் எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டு இருந்தாள்.

அவள் வீட்டினர் விடைபெறும் முன்பாக மறுபடியும் பிரசன்னாவும் அகிலாவும் தத்தம் அலைபேசிகளோடு மல்லுக் கட்டிக் கொண்டு இருந்தனர்.

‘வந்திருச்சா…’

‘54 வந்திருச்சு… இன்னும் 60 இருக்கில்ல?’ என ஏதோ பேசிக் கொண்டார்கள்.

தாயும் தகப்பனும் ஆளாளுக்குச் செல்ல மகளுக்கு முத்தம் கொடுத்து கணவன் வீட்டில் விட்டு விட்டுச் செல்ல,

அவர்கள் சென்று இரண்டு நிமிடங்கள் ஆகும் முன்பாகப் பங்கஜம் பாட்டி தன் வேலையைக் காட்டி இருந்தார்.

‘இப்படிப் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு அடிக்கடி வந்துட்டும் போயிட்டும் இருந்தால் பிள்ளை மனசு புருசன் வீட்டுல ஒட்டுமா? அதுக்குத்தான் எங்க காலத்துல ஒன்னு ரெண்டு மாசத்துக்குத் தாய் வீட்டிலருந்து யாரும் பொண்ணைப் பார்க்க வரவே மாட்டாங்க.’

தடாலென அவர் பேசியதில் எல்லோரும் அமைதியாக இருக்க நிர்மலாவிற்குத் தான் கோபம் வந்து விட்டிருந்தது.

‘உங்க காலத்துக் கதைலாம் இப்ப எதுக்குப் பாட்டி? பொட்டப் பிள்ளைங்க கட்டிக் கொடுத்தவங்க மனசு எப்படின்னு அவங்களுக்குத்தான் தெரியும். இது அகிலா வீடும் தானே? அவங்க மக வீட்டுக்கு எத்தனை நேரமும் வருவாங்க போவாங்க நீங்க அதைப்பத்தி பேசாதீங்க. பெரியவங்களா இருந்தா மட்டும் போதாது. கொஞ்சம் யார் மனசும் கஷ்டப் படாத அளவுக்கு யோசிச்சும் பேசணும்.’

கோபத்தில் பேசியவளை பிரச்சனை வேண்டாமெனத் தடுக்க எண்ணிய ரவி ‘எதுக்கு அனாவசியமா பேசுற விடு, பிரணவ் என்னமோன்னு பயப்படுறான் பார்…’ என்று கையோடு இழுத்துக் கொண்டு சென்று விட்டான். பிரணவும் திடீரெனத் தாயின் குரல் உயரவும், என்னவோ ஏதோவென்று மிரண்டுதான் நின்று கொண்டு இருந்தான்.

மகனை கையில் வாரிக் கொண்டு கணவனோடு நிர்மலா தன் அறைக்குச் சென்று விட்டாள். ராஜிக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அத்தனை நேர கலகலப்பையும் துடைத்தாற் போல அந்த வீடு களையிழந்தது.

‘சித்தி நீங்களே வந்ததிலிருந்து எங்க மருமகளைப் பார்த்திட்டு தானே இருக்கீங்க? எல்லோர்கிட்டயும் நல்லா ஒன்றி போய்ட்டா, அன்பா அனுசரிச்சு போறா, ஏதாச்சும் குறை கண்டீங்களா? இப்ப எதுக்கு இப்படிப் பேசணும்?’ ராமானுஜம் தான் பேசினார்.

‘அதெல்லாம் புதுத் துடைப்பம் நல்லாதான் வீடு கூட்டும்… போகப் போகத்தான் தெரியும்.’

‘நிர்மலா சொன்னதுதான் சரி சித்தி… இது அகிலா வீடு, அவங்க அம்மா அப்பா எப்ப வேணா வருவாங்க போவாங்க, இனி இப்படி ஒரு வார்த்தை தப்பா பேசாதீங்க, நல்லாயில்ல…’ ராமானுஜம் சித்திக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.

‘சரி என்னமோப்பா நான் உலக நடப்பைத்தான் சொன்னேன்… அதுக்கு எதுக்கு உங்களுக்கு எல்லாம் இவ்வளவு கோபம் வருதுன்னே தெரியலை…’ தன் வெத்தலைப்பையை எடுத்து, சில வெத்தலைகளை எடுத்துக் காம்பை நீக்கி, சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார்.

அறைக்குள் சென்றவளை பின் தொடர்ந்து சென்றவன், எங்கோ பார்த்தவாறு உற்சாகமிழந்து நின்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனுக்கும் இந்த உறவினர்களின் பேச்சை எப்படிக் கையாள்வது என்று புரியவில்லை. குடும்பஸ்தனானால் இத்தனை பிரச்சனையா? இதுக்கே தனியாக பயிற்சி தேவைப்படும் போலவே? மிரண்டான்.

‘நான் பாட்டியை எதுவும் சொல்லலைன்னு கோபப்பட்டுறாதே அகிலா. சின்னப்பிள்ளையில் இருந்தே இந்தப் பாட்டி வந்தாலே அம்மா எதுவும் பிரச்சனை வேண்டாம்னு எங்களை விரட்டி விட்டுருவாங்க… நான் நிர்மலா எல்லாம் இவங்க கிட்ட அதிகமா எதுவும் பேசாம அவங்க திரும்பப் போகிற வரைக்கும் அவரவர் அறைக்குள்ளே தான் போய் இருப்போம். இப்ப அவங்க இப்படிப் பேசினதுக்கு அவங்க கிட்டே போய் என்ன பேசறதுன்னு எனக்குத் தெரியலை… சொன்னாலும் புரிஞ்சுக்கிற கேரக்டர் இல்லை…’

….

‘உன்னை உங்க அம்மா அப்பாவை சொன்னா என்னைச் சொன்ன மாதிரிதான் அகிலா. உங்க அம்மா அப்பாவும் எனக்கு அம்மா அப்பா மாதிரிதான் அந்தப் பாட்டி சொன்னதெல்லாம் மனசில வச்சுக்காதே… அவங்க வெளியாளு எதுவேணா சொல்லிட்டு போயிடுவாங்க… நம்ம குடும்பம் நம்ம குடும்பம் தான். வெளியாளால நம்ம மனசை கஷ்டப்படுத்திக்கக் கூடாது சரியா?’ முயன்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பவனைப் பார்த்து, தன் கண்ணில் சேர்ந்த நீரை உள்ளிழுத்தவாறு அமைதியாய் சிரித்தாள் அவள்.

‘சரி போ முகத்தைக் கழுவு…’

‘ம்ம்’ என்று அவள் செல்லவும் அவனுக்கு மறுபடி போன் வந்தது. பேசியவாறு வெளியே வந்தவன் பேசி முடித்துத் திரும்புகையில் காற்றோட்டமாக இருக்கும் தங்கள் வாயில் பகுதியில் இருக்கையில் அப்பா அமர்ந்து இருப்பதைக் கண்டான்.

‘அப்பா’ அழைத்தவாறே அவரருகில் போய் அமர்ந்தவன்.

இன்னும் இரெண்டு நாளைக்கு எங்கேயும் விருந்துக்குப் போக முடியாதுப்பா … யார் கிட்டேயும் சரின்னு சொல்லிடாதீங்க. இப்படித் தொடர்ந்து விருந்து சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டுட்டே இருந்தா தொந்தி வந்திரும் போலிருக்கு.

மகன் பேச்சைக் கேட்டு ஹா ஹாவெனச் சிரித்தவர்.

‘இப்பதான் உன் மாமா வீட்ல கூப்பிட்டதா அம்மா சொன்னாப்ல…’

‘அப்படியா அப்ப அம்மாக்கிட்டேயும் சொல்லிடறேன்பா…’

‘என்னாச்சு?’ கேட்டவாறே ராஜியும் வந்து சேர்ந்தார்.

பங்கஜம் பாட்டி ஏற்கெனவே தூங்க சென்றுவிட்டிருந்தார்.

‘அம்மா அகிலா முட்டியில பட்டிருக்கிற காயம் இன்னும் சரியாகலை. காலையில் மருத்துவமனை போனப்போ டாக்டர் அவளைக் கொஞ்ச நாள் போல ஓய்வு எடுக்கச் சொல்லிருக்கார். தினம் தினம் விருந்துக்குப் போனா சரியான முறையில் ஓய்வு எடுக்க முடியாது. மாமாக்கிட்ட நாங்க இரெண்டு நாள் கழிச்சு விருந்துக்கு வரோம்னு சொல்லிடுங்க…’

‘என்னைப் பத்தியா போட்டுக் கொடுக்கிறீங்க?’ என்றவளாய் அகிலா பின்னே வந்து நின்றாள்.

அவளை எட்டிப் பார்த்தவன் முகத்தில் முறுவல் பூத்திருந்தது.

பங்கஜம் பேசியதற்குப் பின்னர் மருமகளை அப்போது தான் ராஜியும் ராமானுஜமும் பார்க்கிறார்கள். முகத்தில் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் மலர்ச்சியாய் வந்து நின்றவளைப் பார்த்து அவர்களுக்கு ஆசுவாசமாயிற்று.

‘அந்த பாட்டி சொன்னதைப் பத்தி தப்பா எடுத்துக்காதம்மா… வயசானவங்களைச் சட்டுன்னு எதுவும் சொல்லவும் முடியலை…’ மருமகளின் நாடியை தாங்கி பேசினார் ராஜி.

‘அதெல்லாம் ஒன்னும் தப்பா எடுத்துக்கலை அத்த, விட்டுருங்க…’ என்று பேச்சை அங்கேயே தவிர்த்து விட்டாள்.

‘ம்ம்…’

சற்று நேரம் அளவளாவி விட்டு, தங்கள் அறைக்குத் திரும்பினர்.

தங்கள் அறைக்குள் வந்து சுத்தம் செய்து கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தவன் அருகில் அமர்ந்திருந்த அகிலாவின் கையில் அவனது அலைபேசி இருப்பதைக் கண்டான். ஏற்கெனவே அதை என்னென்னவோ செய்து பார்த்திருப்பாள் போலிருக்கிறது. திறந்துப் பார்க்க முடியாதவளாய்..

‘உங்க போன் பாஸ்வர்ட் என்ன? ….அ த் தான்’

அவள் தன்னை அழைத்த விதத்தில் சிரிப்பு வந்தாலும்,

‘ஏன் இப்ப உனக்கு அது எதுக்காம்?’

இங்கே பாருங்க… நமக்குள்ள ஜெண்டில் மேன் அக்ரீமெண்ட் போட்டுப்போமா? தன் மொபைலை அவன் கையில் திணித்தாள்.

என் மொபைல் பாஸ்வர்ட் 4568… ஓகே

இப்ப உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க?

இவக்கிட்ட நம்மால முடியாது என முடிவிற்கு வந்தவன் தன்னுடைய போனின் பேட்டர்னை காண்பித்தான். இரெண்டு முறை மறுபடி போனை லாக் செய்து, அன்லாக் செய்து முயன்று பழக்கப் படுத்திக் கொண்டவள்.

‘அந்த இன்னொரு போன் தாங்க…’ சிறுபிள்ளை போலக் கை நீட்டினாள்

‘அது எங்க ஆபீஸ் போன் ப்ளாக்பெர்ரி… உனக்குத் தர முடியாது. எல்லா ஆபீஸ் மெயில் அதில் தான் வரும். இந்தப் போன் பேட்டர்ன் கிடைச்சிட்டுல்ல… இதை வச்சுக்க… விடு.’

அவனை மெல்ல முறைத்தவள் தன் கையிலிருந்த அவன் ஆன்ட்ராய்ட் போனுக்குள் அங்குலம் அங்குலமாகத் தேடினாள்.

‘உங்க கிட்ட ஷேர் இட் இல்லியா?’ எனக் கேட்டதோடு நில்லாமல் (share it application- இரு அலைபேசிகளுக்கிடையே கோப்புகளைப் பறிமாற உதவும் செயலி) அதனைத் தரவிறக்கினாள்.

தன் அலைபேசியிலிருந்து சில பல புகைப்படங்களை அச்செயலி மூலம் கணவனின் அலைபேசிக்கு கடத்தினாள்.

ஒவ்வொன்றாய் அவன் அலைபேசிக்கு வர அவற்றை அருகிலிருந்து ஆதவன் கவனித்துக் கொண்டிருந்தான். எல்லாம் அவர்கள் திருமணத்தின் புகைப்படங்கள். அத்தனை அழகாகவும், தெளிவாகவும் இருந்தன.

‘ஃபோட்டோ ஷீட் ஆல்பம் கிடைக்க டைம் இருக்கு…இது அதில்ல…இதெல்லாம் பிரசன்னா அண்ணாதான் எடுத்திருக்கான்… நேத்துதான் எல்லாம் மொபைலில் டவுன்லோட் செய்தானாம். இன்னிக்கு எனக்குத் தந்தான்… எல்லாம் சூப்பரா இருக்கில்ல?…’ கணவன் கேளாமலேயே பதில் அளித்துக் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள்.

‘ஆமாம் ரொம்ப நல்லாயிருக்கு…’ அவன் கண்கள் அலைபேசியிலிருந்த புகைப்படங்களில் இருந்த அவள் மேலேயே நிலைத்து இருந்தன.

அத்தனை புகைப்படமும் தரவிறக்கம் செய்யப்பட்டதும் அவனது முகநூல் செயலியை தேடினாள். அது அவளிடம் கடவுச் சொல் கேட்டதும் அவனிடம் நீட்டினாள்.

‘நீயே லாகின் செய்’, எனப் பாஸ்வர்ட் சொன்னான்.

‘நானா கேட்காமத்தான் நீங்க சொன்னீங்க, ஆனா, நான் என் ஃபேஸ்புக் பாஸ்வர்ட் சொல்ல மாட்டேன்… என்ன டீலா?’

‘டீல் டீல்’ சொல்லிச் சிரித்தான்.

அவன் முக நூல் கணக்கில் நுழைந்தவள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் பகுதிக்குச் சென்று தேடினாள். ஏறத்தாழ 20 நட்பு அழைப்புக்கள் இருந்தன. கடைசியாக ஆறு மாதங்கள் முன்பு அவன் பிறந்த நாளில் எல்லோரும் வாழ்த்தி இருந்த பதிவுகள் மட்டும் இருந்தன. அவற்றில் அவன் இதுவரையிலும் பதிலும் அளித்திருக்கவில்லை.

உனக்கெல்லாம் ஃபேஸ்புக் தேவையா? என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்தவள் அவன் முன்பாகவே தான் அவனுக்கு விடுத்திருந்த நட்பழைப்பை உறுதி செய்தாள்.

கவிதாவின் நட்பழைப்பும் அதில் இருக்க அதை நீக்கினாள்… பார்த்துக் கொண்டிருந்தவனுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது.

அவனது ஸ்டாடஸீக்குச் சென்று தன்னுடைய முக நூல் ஐடியை டேக் செய்து Got married என்று தேதியை பதிவிட்டாள்.

அடுத்ததாக இருந்ததில் பத்து சிறந்த புகைப்படங்களைத் தேடி பொறுக்கி அதில் மறுபடி தன்னையும் டேக் செய்து பதிவிட்டாள்.

அத்தோடு விடாமல் அவன் ஐடியில் இருந்து தன் அண்ணன்களுக்கும், பெற்றோர்களுக்கும் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினாள்.

‘என்ன மேடம் எல்லா வேலையும் ஆகிடுச்சா?’ அவள் செய்தவற்றை எல்லாம் கவனித்து இருந்தவன் ஹாஹாவெனச் சிரித்திருந்தான்.

‘ம்ம் ஆமா, இப்பதான் நாம அஃபிஷியலி மேரீட் தெரியுமா?’ கண்ணடித்தாள்.

‘அப்ப அந்தத் தாலிக் கட்டினது, ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சதெல்லாம்… ம்ம்?’

‘அது ஓல்ட் ட்ரெடிஷன்… இதுதான் லேட்டஸ்ட்…’

புன்னகைத்தவாறே இருந்தவனிடம்…

‘பாருங்க அதுக்குள்ள 50 லைக்ஸ் விழுந்துட்டு…’ காட்டினாள்.

அவள் தலையைப் பிடித்து ஆட்டியவன்… ‘இவ்வளவுதானா? இல்லை புது ட்ரெடிஷன்ல இன்னும் ஏதாவது இருக்கா?’

‘அண்ணா உங்க ரிக்வெஸ்ட் அக்செப்ட் பண்ணிட்டான்.’

‘என்னது? என் ரிக்வெஸ்டா? நானா ரிக்வெஸ்ட் கொடுத்தேன்? சரி.. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு?’

‘என்ன கேட்டீங்க… கவனிக்கலை?’

‘புது ட்ரெடிஷன்ல இன்னும் ஏதாவது இருக்கானு கேட்டேன்?’

‘ஆங்க்… இன்னும் நிறைய இருக்கு… என் பிறந்த நாளைக்கு மறக்காம போஸ்ட் போடணும். நான் ரொம்ப நல்லவ, வல்லவன்னு புகழணும்…’

சிரித்தவனிடம்… ‘ரொம்பச் சிரிக்காதீங்க… பொய்யா இருந்தாலும் ஒரே ஒரு நாள் புகழலாம் தப்பில்ல. பதிலுக்கு நானும் உங்க பிறந்த நாளைக்கும் போஸ்ட் போடுவேன்ல?’

‘அது சரி … ஒரே ஜெண்டில் உமேன் அக்ரீமெண்டா இருக்கு…’

ஹி ஹி என அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். அவனிடம் மொபைலை திருப்பிக் கொடுக்கப் போனவள் மறுபடி தன்னிடமே திருப்பினாள்.

இப்போது வாட்சப்பை போய்ப் பார்த்தாள் அதில் அவள் எண்ணைத் தேட அதில் அவள் சில வாரங்கள் முன்பு அவனுக்கு அனுப்பி இருந்த ஹாய் எனும் செய்தி பதிலளிக்கப் படாமல் கிடந்தது. அவளது எண்ணையும் அவன் இன்னும் சேமித்து இருக்கவில்லை.

‘எல்லாம் நானே செய்யணும்’ கோபத்தில் சலித்தவள் தன் எண்ணை அவன் அவன் மொபைலில் Mrs. Adhav (திருமதி ஆதவ்) எனப் பதித்தாள்.

‘யார் இந்த ஆதவ்?’ கிண்டலாய் கேட்டவனை மறுபடியும் முறைத்தாள்.

‘யாரோ?’ என்றவளுடைய வாட்ச ப்ரொஃபைல் பிக்சரில் அவர்கள் இருவரின் புகைப்படமும் இருந்தது. இவனது ப்ரொஃபைல் பிக்சரோ புகைப்படமில்லாமல் இருக்கவும் தங்கள் மற்றொரு புகைப்படத்தை அதில் பதிவு செய்தாள். அத்தனையும் செய்த பின்னர் அவனிடம் மொபைலை திருப்பிக் கொடுக்க, அவன் வாங்கிக் கொண்டான்.

‘மாத்திரை போட்டியா?’ என்றவனுக்குப் பதிலளிக்காமல் தன் அலைபேசியில் முக நூலில் பதிவிட்ட புகைப்படங்களை, தங்களுக்கான வாழ்த்துக்களை வாசிக்க ஆரம்பித்தாள்.

‘மொபைலை தூக்கி அங்கே போடு… காலையில் பார்த்துக்கலாம் முதல்ல மாத்திரை போட்டுட்டு தூங்கு’ என்றவனிடம்…

‘இந்த ஆதவ் சுமதி பார்ட் டூவே தான்’ என்று தாயைப் போலக் கண்டிப்புக் காட்டும் ஆதவனை எண்ணி முனகியவளாக மாத்திரைகளை விழுங்கி வைத்தாள்.

அதற்குள் அவள் அலைபேசி அவன் கைக்குள் சென்றிருக்க வேறு வழியில்லாமல் மாத்திரைக்கு அப்புறம் இனிப்பொன்றை சாப்பிட்டுப் பற்கள் சுத்தம் செய்து வந்து ஆதவன் அருகில் படுத்து அயர்ந்து தூங்கிப் போனாள்.

அவள் தூங்கிய பின்னரும் இன்னும் தூக்கம் வராமல் இருக்கத் தன் அலைபேசியில் அவள் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். தங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்றே நாட்கள் தான் ஆகின்றது என்பதை அவனால் நம்பத்தான் முடியவில்லை.

ஏதோ காலம் காலமாய்ப் பழகியவளைப் போலத் தன்னோடு தன் குடும்பத்தோடு கலந்து விட்டவளை எண்ணியபோது எழுந்த வித்தியாசமான இனிமையான உணர்வுகளை இரசித்துக் கொண்டிருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here