உள்ளம் உந்தன் வசம்_13_ஜான்சி

0
320

அத்தியாயம் 13

அடுத்த நாள் உறவினர் வீட்டிற்கு செல்வது எனும் எந்த அவசரமும் இல்லாததால் புதுமணத் தம்பதியருக்கு சற்று சோம்பலாகவே விடிந்தது. இரவு முழுவதும் ஆதவன் தன் லேப்டாப்பில் ஏதோ செய்துக் கொண்டிருக்க இரவில் விழித்து தண்ணீர் குடிக்கச் சென்றவள் அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அவ்வளவாக ஆதவன் தன் வேலையில் ஆழ்ந்திருந்தான்.

மறுபடி படுத்தவள் கண்கள் சொக்கவே அவனை தொணதொணவென்று கேள்விகள் எதுவும் கேட்காமல் தூங்கிவிட்டிருந்தாள். காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்கள் முடித்து, இன்றைக்கு சேலையிலிருந்து விடுதலை எனும் உணர்வில் சுடிதார் ஒன்றை அணிந்தவளாக சமையலறை நோக்கிச் சென்றாள்.தாமதமாக உறங்கியிருந்த ஆதவனின் துயில் இன்னும் களைந்திருக்கவில்லை.

‘அதெல்லாம் கிடையாது… நான் தர்றதை கொண்டு போகணும். அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் கொடுத்து விடுறது சம்பிராதாயம்’, என்று ராஜி நிர்மலாவிடம் ஹாலில் இருந்து எதற்கோ பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தார்.

தனக்கு காஃபி கலக்கிக் கொண்டு வந்தவள்.

‘அத்தை, நிர்மலா உங்களுக்கு காஃபி கலக்கட்டுமா?’ என்றவளாக அவர்கள் அருகில் அமர்ந்தாள்.

‘எங்களோட காஃபி ஆகிடுச்சு அகிலா… மாமா கொஞ்ச நேரம் கழிச்சு கேட்பாங்க அப்ப வேணுன்னா கலக்கிக் கொடு. எங்கே ஆதவன் இன்னும் எழலியா என்ன?’

‘இல்ல அத்தை… இராத்திரி முழிச்சிருந்து லேப்டாப்ல ஏதோ வேலை பண்ணிட்டு இருந்தாங்க போலிருக்கு…’

‘இவன் இன்னும் திருந்தலியாமா?’ நிர்மலா சலித்துக் கொண்டாள்.

மருமகள் தப்பாய் நினைத்துக் கொள்வாளோ? என ராஜி பார்க்க அவளோ காஃபியின் சுவையில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

‘இந்த பையனுக்கு கொஞ்சம் வேலையில் அதிக அக்கறை… அதைத்தான் சொல்லுறா?’ என்று மகனுக்கு பரிந்துக் கொண்டு மருமகளிடம் சொன்னார்.

‘அம்மா அகிலாக்கு தெரியக் கூடாதுன்னு மறைக்க என்ன இருக்கு? என் அண்ணா ஒன்னா நம்பர் வேலை பைத்தியம் அகிலா. வீட்டுக்கு வந்தும் ஏதாச்சும் ஆஃபீஸ் வேலையே தான் பார்த்திட்டு இருப்பான். அவனை அவன் போக்கில விடாத அகிலா… எல்லா இடத்துக்கும் சுத்த அழைச்சுட்டுப் போ என்ன? வேலை வேலைனு அவன் இஷ்டம் போல இருக்க விட்டுறாத…’

சொன்னவளிடம் ‘என்ன அருமையான நாத்தனார்’ எனும் உணர்வில் அகிலா மலர்ந்து புன்னகைத்து தலையை ஆட்டி வைத்தாள்.

‘அம்மா நாளைக்கு கூட ஒரு கல்யாணம் இருக்கில்ல… இவங்களை அனுப்பி வைங்க… இல்லன்னா இவன் கொலம்பஸ்.. கொலம்பஸ்னு அந்த அமெரிக்காவுக்கு பறந்திறப் போறான்…’ நிர்மலா என்ன நேரத்தில் சொன்னாளோ?

‘ஆமாம் நிர்மலா… அகிலா நீயும் ஆதவனும் நாளைக்கு சொந்ததில் ஒரு கல்யாணம் இருக்கு அதுக்கு போயிட்டு வந்திடுங்க… அதுக்கு முன்னாடி இன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்திடுங்க. அவன் வேலைக்கு அவனை எப்பவும் எதிர்பார்க்க முடியாது. இப்ப நீங்க கோயிலுக்கும், கல்யாணத்துக்கும் போயிட்டு வந்துட்டீங்கன்னா அடுத்து என் கூட வெளியே போகக் கொள்ளச் செய்யலாம்’ என்றவரிடம் அகிலா நல்லப் பிள்ளையாய் தலையாட்டி வைத்தாள்.

‘ம்மா…’ என பிரணவ் சிணுங்கும் சப்தம் கேட்க… இவனுக்கு முழிச்சதும் அம்மா வேணும் என்றவளாய் நிர்மலா தன் அறையை நோக்கிச் சென்றாள்

மாமியாருடன் சேர்ந்து காலை சமையல் வேலைகளை கவனித்தவளுக்கு தான் முன்னறைக்கு வரும் போது என்ன பேச்சு நடந்துக் கொண்டிருந்தது என அப்புறமாக தெரிய வந்தது. மறு நாள் நிர்மலா தங்கள் வீட்டிற்கு புறப்படுவதை அறிந்துக் கொண்டாள்.

நிர்மலா தன் பையில் ஏதோ எடுத்து வைத்துக் கொண்டிருக்க..

‘ஏன் நிர்மலா எல்லோரும் இவ்வளவு சீக்கிரமா திரும்பிப் போகிறீங்க? இன்னும் ஒரு வாரமாவது இருக்கலாம் இல்லையா?’

‘அவங்க லீவு முடிஞ்சுட்டு அகிலா… அதனால் இப்ப போயாகணும். நான் இடை இடையே வந்து விட்டு போகிறேன் சரியா?’ என்றாள்.

மாமனார் கேட்டதும் காஃபி கலக்கி கொடுத்தவள் தானும் மாமியாருமாய் சமைத்தவற்றை கொண்டு வந்து டேபிளில் வைத்தாள். ரவி சாப்பாட்டு மேடைக்கு வர ஒவ்வொருவராக வந்து காலை உணவு சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் கூட ஆதவன் எழுந்து வந்திருக்கவில்லை. ஓரிரு முறை அகிலா சென்று எட்டிப் பார்த்தாள். அடித்துப் போட்டாற் போல உறங்குகின்றவனை எழுப்ப மனம் வரவில்லை. அவளும் சாப்பிட்டுக் கொண்டாள்.

அசதியில் தூங்கி கொண்டு இருந்தவனை அவனுடைய அலைபேசி சப்தமிட்டு எழுப்பியது. அலைபேசியை காதில் வைத்தவாறு பேசிக்கொண்டே பனியனும் ஷார்ட்ஸுமாக வந்து முன்னறை சோஃபா இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் பேச்சு ஏதோ மும்முரமாக ஆரம்பித்ததும் அவன் பேசிக்கொண்டிருந்தது அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலம் என்பதிலேயே அவருடைய அலுவலக வேலை அமெரிக்காவில் இருந்து அழைப்பு என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

அரைமணி நேரம் தொடர்ந்தார் போல பேசிக் கொண்டிருந்தவன் கொட்டாவி விட்டுக் கொண்டே தன் அறைக்கு திரும்பினான். சற்று நேரத்தில் முகம் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் சாப்பிட அமரவும், அகிலா அவனுக்கு பரிமாறினாள். சாப்பிடும் வேளையில் அவனுக்கு மறுபடியும் அலைபேசி அழைப்பு வரவும் அகிலா அதனை தன் கையில் எடுத்துக்கொண்டாள். ஆதவன் முன் தினம் தந்திராத பிளாக்பெர்ரியை தான் இப்போது கைப்பற்றிக் கொண்ட சந்தோஷம் அவளுக்கு.

‘சாப்பிட்டு முடித்த பின் பேசிக் கொள்ளுங்கள்’ என்று அவனிடம் கண்டிப்பு வேறு…

‘ஏய்’ என்று அவளை முதலில் தடுக்க பார்த்தவன் தான் பசியில் இருந்ததால், ‘சரி சாப்பிடும் 5 நிமிடம் தானே? மறுபடி அழைத்துக் கொள்ளலாம்’ என அவளை கண்டுக் கொள்ளாமல் தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

அதற்குள்ளாக பிரணவ் அங்கே ஓடோடி வந்து அவளது கையிலிருந்த ப்ளாக்பெர்ரியை அகிலாவிடமிருந்து வாங்கிக் கொள்ள வந்து கேட்டு நின்றான்.

‘இது மாமாவோட ஆஃபீஸ் ஃபோன் இதில் கை வைக்க கூடாது’ என அகிலா பிரணவை கண்களை உருட்டி மிரட்டினாள். பிரணவ் அதை பிடுங்க துள்ளவும் அவனுக்கு எட்டாத வண்ணம் மொபைலோடு தன் கையை உயரமாய் தூக்கினாள்.

நான் நேத்து இவளுக்குச் சொன்னதை இவ அவனுக்கு சொல்லுறா போலிருக்கு? இரெண்டும் ஒரே மாதிரி தான் பெரிசா வித்தியாசம் இல்லை’ என்று தன் முன்னால் இருந்த வாண்டையும் 23 வயது மனைவியையும் ஒப்பிட்டுக் கொண்டான்.

இருவரும் நின்ற நிலவரம் பார்த்து தன் மொபைலுக்கு ஆபத்து என எண்ணியவன் அவசர அவசரமாய் வாய்க்குள் உணவை திணித்தான். அவன் கை கழுவி வரவும் அலைபேசி மறுபடியும் அழைக்க ஆரம்பித்தது.

ஒலித்துக் கொண்டிருந்த மொபைலை கையை உயர்த்தியே வைத்து இருந்த மனைவி கையில் இருந்து வெகு இலகுவாக கைப்பற்றி கொண்டவன் பின் வாசல் வழியாக சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தான். சற்று நேரத்தில் பிரணவும் அகிலாவும் அதே வழியில் சென்று வெளியே போய் பார்த்தனர்.இருவருக்கும் தனது ப்ளாக்பெர்ரியை தராத கல் நெஞ்ச்சக்காரன் அங்கே தான் இன்னும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.

அகிலா திருமணத்திற்கு பின் அதுநாள் வரையிலும் இருந்த நாட்கள் எல்லாம் விருந்திற்கு சென்றிருக்க கணவன் வீட்டை இன்னும் முழுமையாக பார்த்து இருக்கவில்லை. அதனால் பிரணவோடு கை கோர்த்தவளாக வீட்டை சுற்ற ஆரம்பித்தாள்.

ஆதவன் இருந்த பின் வாசல் பகுதி இருக்கையை கண்டுக் கொள்ளாமல் (கோபமாச்சே) பிரணவும் அகிலாவும் கைகள் கோர்த்தவர்களாக பின் வாசலில் இருந்த மரங்களையும் செடிகளையும் கடந்து, நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மரங்களின் உபயத்தால் காற்று அவர்களை இதமாய் தாலாட்டிக் கொண்டு இருந்தது. இவ்வாறு நகர்வலத்துக்கு இணையாக அந்த வீட்டின் இளையவர் இருவரும் வீடு முழுவதும் சுற்றி சுற்றி வந்தனர்.

ரவி தன் மகனை வைத்துக் கொண்டு சுற்றும் அகிலாவை பார்த்து புன்னகைத்தான். தன்னை பெரிய மனிதனாக பாவித்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அத்தையை பிரணவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இதுதான் என் டாய்ஸ் வைக்கிற ரூம், இங்கே தான் என் வண்டி இருக்கு’ என்று ஒவ்வொன்றாக காட்டினான். ‘இது மாமா பைக் என்னை ப்ரும் ப்ரும் சுத்த கூட்டிட்டு போவாங்க, இது மாமா கார்’ என ஆதவனின் காரையும், ‘இது நம்ம கார்’, என தங்கள் காரையும் அறிமுகப் படுத்தவும் மறக்கவில்லை. இங்குமங்கும் அலைந்தவாறே தன் போக்கில் எல்லாவற்றையும் அவளுக்கு விளக்கிக் கொண்டு இருந்தான்.

முன் வாசலிலிருந்து இருவரும் உள்ளே வர அப்போதுதான் தன்னுடைய வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்த ராஜி சோபாவில் அமர்ந்தார். அவரை பார்த்தது ‘பாட்டி’ என பிரணவ் ஓடத் துவங்க அவனுக்கு முன்னதாக ஓடிக் கொண்டு சென்று அகிலா அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

பிரணவிற்கு கோபம் வந்தே விட்டிருந்தது. அதுவரை கூடவே சுற்றியதை மறந்து, ‘இது என் பாட்டி, நீங்க எழும்புங்க’ என அகிலாவை மிரட்டினான்.

‘டேய் பொடியா’ உன் பாட்டியா? இது என் அத்தை எழும்ப முடியாது’ என அகிலா பதிலுக்கு அவனிடம் சண்டை பிடித்தாள். கோபத்தில் நின்றவனை ராஜி தனது மடியில் இன்னொரு பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டார். மற்றவர்கள் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர்.

அலைபேசியை அணைத்தவாறு பின்வாசல் வழியாக உள்ளே வந்தவனும் அதை கவனித்தான் மற்றவர்கள் போல அவனுக்கும் அக்காட்சி மனதை கவர்ந்தது, சிரிப்பும் வந்தது. ‘சின்ன பையன் கிட்ட போய் போட்டி போடுறாளே? இவளை என்ன சொல்கிறது? என்று எண்ணினாலும் கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து தங்கள் அறைக்குச் சென்றவள் ஆதவன் மறுபடியும் தன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருப்பதை கவனித்தாள். சற்று தூரம் அமர்ந்து எட்டிப் பார்த்தாலும் கூட அவளுக்கு அவனுடைய வேலை என்னவென்று புரிபடவில்லை. ஏதோ மைக்ரொசாப்ட் எக்ஸெல் ரிப்போர்ட் அதில் வேலை செய்கிறான் என மட்டும் தெரிந்தது. தான் கேட்டாலும் அவன் பதில் சொல்கிற அளவிற்கு இலகுவான மனநிலையில் இல்லை என்று பார்த்தாலே புரிந்தது.

மிகுந்த மும்முரமாக அவனுடைய வேலை நடந்து கொண்டிருந்தது இப்படியே மதிய சாப்பாடு முடிந்தும் அவன் வேலையை தொடர, இந்த முறை அவன் சொல்லாமலேயே மாத்திரைகளை அவளே எடுத்துக் கொண்டிருந்தாள்.

பங்கஜம் பாட்டி அன்று மதியம் ஊருக்கு புறப்பட்டார். திருமண நாட்கள் கழித்து அடிக்கடி வருகை தந்துக் கொண்டிருந்த உறவினர்கள் சிலர் வருகையும் குறைந்து விட்டிருந்தது. அவள் மதியம் ஒரு தூக்கம் போட்டு எழுந்த பின்னரும் ஆதவன் அது வரைக்கும் லேப்டாப்பும் கையுமாகவே இருந்தான்.

அகிலாவோ, ‘ ஆதவன்’ என்று அழைத்து அவன் காலை சுரண்டினாள். கேட்கவில்லை போல என நினைத்தவள் ‘அத் தான்…’ என்று இழுத்துப் பார்த்தாள். தன் அருகே படுத்துக் கொண்டு காலை சுரண்டுகிறவளை ஆதவன் என்னவென்று கேட்டான்.

‘ ஆதவன் உண்மைய சொல்லுங்க நீங்க இன்னிக்கு விருந்துக்கு போக வேண்டாம் என்று சொன்னது எனக்காகவா? இல்ல உங்களுக்காகவா? என கைகளை ஆட்டி அவள் கேட்ட தொனியில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் கூட அதை மறைத்தவனாக அவளை முறைத்து,

‘ உனக்காகத்தான்… பாவம் உனக்கு கால் வலிக்குதேன்னு பார்த்தேனே என்னை சொல்லணும்’ என்றான்.

‘என்ன எனக்காக பாவம் பார்த்தீங்க நீங்க? நீங்கதான் இப்ப முழு நாளும் பிஸியா இருக்கீங்க… சும்மா என் பேரைச் சொல்லி உங்க ஆஃபீஸ் வேலை பார்க்கிறீங்க சரியா?’

‘ம்ம் இல்ல?’

‘பின்னே? உண்மையை சொல்லுங்க..’

‘இவளை…’ என நொந்துக் கொண்டவன், ‘ஆமாம்மா தாயே… உனக்காக இல்ல எனக்காகத்தான் நான் விருந்துக்கு போகவில்லை சரியா?’

‘அப்படி சொல்லுங்க…’

‘கூடவே இதையும் கேட்டுக்கோ…உன் கூட விருந்து வீட்டுக்கு வர பயந்து போய் அப்பாக்கிட்ட உன் பேரை சொல்லிட்டேன் இப்ப திருப்தியா?…’

‘ஆங்க்… எப்படி? அப்படி நான் என்ன செஞ்சேன் உங்களுக்கு?’

‘நீ என்ன செஞ்சியா? என்ன செய்யலைனு கேளு சொல்றேன். நான் பார்க்காத நேரம் உனக்கு பிடிக்காத ஐட்டம், உனக்கு அதிகமா பரிமாறின சாப்பாடு மேஜிக் மாதிரி என் இலைக்கு நடந்து வந்திடும். நான் என் சாப்பாட்டையும் சாப்பிடணும் நீ எனக்கு எடுத்து எடுத்து வைக்கிறதையும் சாப்பிடணும். இது வயிறா? இது என்னது? என தன் வயிறை காட்டினான். அதுக்கு பயந்து தான் போகலை ஓகேயா… இப்ப திருப்தியா?’

‘ஹி ஹி’ அசட்டுச் சிரிப்பு சிரித்தவள்… ‘அப்ப நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களா? நான் எவ்வளவு டெக்னிக்கா செஞ்சும்… ச்சே…’ சலித்துக் கொண்டாள்.

‘இனி உனக்கு பிடிக்காதது வச்சா இல்லை சாப்பாடு அதிகமா வச்சா வேணாம்னா வேணாம்னு சொல்லணும்… எனக்கு வச்சியோ உனக்கு இருக்கு ஒரு விரலை காட்டி மிரட்டினான்.’

‘சரி நாளைக்கு உங்களுக்கு வைக்க மாட்டேன் ஓகே’

நாளைக்கு என்ன?

ராஜி, நிர்மலா கூறியதை சொன்னதும் …

‘ஓ அப்படின்னா நாளைக்கு மேரேஜிக்கு போறோமா? இன்னிக்கு கோயில் போகணுமா?’

ஆமென தலையை ஆட்டினாள்.

‘எந்த கோயில் போகணும்?’

அத்தை கிட்ட கேட்டுக்கலாம்…

சரி என்றவன் வேலையை தள்ளி வைத்து மனைவியோடு கோயில் சென்று வந்தான். அடுத்த நாள் உறவினர் திருமணத்தில் புதுமணத் தம்பதிகள் கலந்துக் கொண்டனர்.

ஆதவனுக்கோ தொடர்ந்து போன் கால்கள் வருவதும், அவன் லேப்டாப்பில் மூழ்கி எப்போதும் வேலையுமாய் இருக்க, அகிலாவிற்கு என்னவென்றே புரியவில்லை.

‘உங்க ஆஃபீஸ்ல லீவு நாளிலயும் வேலை பார்க்கணுமா?’ என்று தயங்கி தயங்கி கேட்டே விட்டிருந்தாள். இனியும் எதற்கு மறைக்க என ஆதவன் அவளுக்கு புரிகின்ற மாதிரி சுருக்கமாய் சொன்னான்.

‘நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் முடிச்சுக் கொடுத்து வந்த வேலையில் இன்னும் ஏதோ கூடுதலா வேலை பார்க்க வேண்டி வந்திருக்கு. சில நேரம் க்ளையண்டுகள் இப்படித்தான் முதலிலேயே சொல்லாம குழப்பி அடிப்பாங்க அகிலா…’

‘ம்ம்ம்’

‘இப்ப நான் லீவில் இருக்கிறதால் எங்க ஆஃபீஸ்லருந்து இன்னொருத்தரை அந்த வேலைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. ஆனால், ஆரம்பம் முதலே இரெண்டு மாசத்துக்கு மேல அந்த வேலையை பத்தி எல்லா விபரமும் எனக்கு மட்டும் தான் தெரியும்? அவங்க முன்னாடி பகிர்ந்துக் கொண்ட விஷயங்களை மறுபடியும் இந்த புது நபர் கிட்ட பகிர்ந்துக்க வாய்ப்பில்லை. அதனால நிறைய விஷயத்தில அந்த புது ஆள் திணறுறாரு.’

‘ஓ…’

‘இப்ப அவரால முடியலைனா நான் தான் மறுபடி போய் மீதி வேலையும் பார்க்க வேண்டி இருக்கும். போட்ட லீவ் எப்படி கேன்சல் செய்யறதுன்னு? நானும் முடிஞ்சவரைக்கும் உதவி செஞ்சுதான் பார்க்கிறேன். இப்ப இதுவரைக்கும் ஒன்னும் சரியாவே வரலை பார்த்துக்க… ஒன்னும் சரிவரலைனா நான் மறுபடியும் போக வேண்டி இருக்கும்.’

‘ஓஓ…’

அவன் சொன்னதில் அவள் கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லாததால் சரி சரியென கேட்டுக் கொண்டாள். அன்றிரவும் ஆதவனுக்கு அலுவலக வேலையால் உறங்காத இரவானது.

அடுத்த நாள் காலையே சாப்பாட்டு வேளையில் அனைவரிடமும் ஆதவன் தான் உடனேயே சில நாட்களுக்குள்ளாக ஓரிரு வாரங்கள் வேலை விஷயமாக யூ எஸ் செல்ல வேண்டும் என சொன்னான். அகிலாவிற்கு ஆதவன் முன்பே சொல்லியிருந்ததால் அமைதியாக இருந்தாள்.

நிர்மலாவிற்கு அண்ணன் சொன்னதைக் கேட்டதும் மிகக் கோபம் வந்தது, அகிலாவைப் பார்த்தாள் அவளோ அவளை கண்களாலேயே சமாதானப் படுத்தினாள். முன் தினம் ஆதவன் தன்னிடம் விளக்கமாய் சொன்ன பின்னரும் அடாவடியாக பேச அவளுக்கு மனம் வரவில்லை. தானும் பணிபுரிவதால் அலுவலக அவசர வேலைகள் குறித்து அவளாலும் ஓரளவு அனுமானிக்க முடியுமே?

‘கல்யாணம் ஆகி ஒரு வாரம் பத்து நாள் கூட ஆகலியேடா? உடனே வேலைக்கு போகணும்னு சொல்லுற?’ ராஜி புலம்பினார்.

நிர்மலா, ரவி மற்றும் பிரணவ் அன்று மதியமே பெங்களூருக்கு பயணமானார்கள். ஆதவனுடைய அதிகப்படியான வேலைகளைப் புரிந்துக் கொண்டவராக நிர்மலாவை வழியனுப்ப ராமானுஜம் சென்று வந்தார்.

தங்கள் அறைக்குச் சென்றதும் ஆதவனுக்கு பேக்கிங்க் செய்வதில் எதுவும் உதவி தேவையா? என அகிலா அவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அவனோ ‘இன்னும் இரெண்டு மூணு நாள் கழிச்சுதான் டிக்கெட் விபரம் தெரியும், அப்ப எடுத்து வச்சுக்கலாம்’ என்றான்.

‘அப்ப எல்லா துணியையும் அயர்ன் செஞ்சுடவா? வேணும்கிறதை பாக் செய்ய ஈஸியா இருக்கும்.’

‘நீ அதெல்லாம் செஞ்சுட்டு இருக்காதே, அவசரத்துக்குன்னா வீட்ல செய்யறதுதான். மத்த நேரம் கடையில் கொடுத்திடலாம்’ என தடுத்தான்.

ஏதோ கேட்கத் தோணவும் ‘எனக்கு இன்னும் லீவு இருக்கே நானும் உங்க கூட வந்திடட்டுமா? என்றாள் அகிலா,

யூ எஸ் வீசா ப்ராஸஸிங்க் குறித்து கூட சிந்திக்காமல் பேசுபவளை என்னச் சொல்வது என எண்ணியவன் அவள் மனம் கோணாமல் சொல்ல எண்ணியவனாய்,

‘எனக்கு இப்ப இங்க நாலு நாளா வேலையா இருந்தேன் பார், அங்கே போனாலும் இப்படித்தான் இருக்கிற மாதிரி இருக்கும். இங்க இருந்தாலாவது நீ உங்க அம்மா வீட்டுக்கு போய் வரலாம். என் கூட வந்தா போரடிச்சுடும் அகிலா. பின்ன ஒரு தடவை நாம சுத்திப் பார்க்கிறதுக்கு போகலாம் ஓகேவா? இந்த ப்ரோஜக்ட் நம்ம நிச்சயத்திலருந்து இப்ப வரை ஒரே ஆப்பா வைக்குது. இதை ஒரேயடியா செஞ்சு முடிச்சுட்டு வரேன்’ என்றான்.

‘ம்ம் சரி சரி புரிஞ்சது… அது சரி நீங்க இப்ப யூ எஸ் போகிறது பற்றி சொல்லணும்ல?’

‘யாருக்கு சொல்லணும்?’ என கேட்டான்.

‘முதல்ல எங்க வீட்ல சொல்லணும்’

‘வேலைக்கு போகிறதையுமா சொல்லணும்? இது வழக்கமா நான் போகிற மாதிரி தானே அகிலா?’

‘நீங்க லீவு முடிஞ்சு போகிறதா இருந்தா சொல்ல தேவையிருந்திருக்காது ஆதவன். இப்ப முன்னாடியே புறப்படுவதாக இருக்கிறதால் நீங்க அவங்க கிட்ட சொல்லாம போனீங்கன்னா எல்லோரும் எதுக்குன்னு என்னை கேள்வியா கேட்டு கொல்லுவாங்க. அதுக்கு முன்னெச்சரிக்கையா நீங்களே முதல்ல சொல்லிட்டீங்கன்னா நல்லது’ என்றாள்.

‘யாருக்கு நல்லது?’

‘எனக்குத்தான் எனக்குத்தான், வேற யாருக்கு’ நடிகர் வடிவேலு பாணியில் பேசி வைக்க அவனுக்கு புன்னகை மலர்ந்தது. அவன் இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு திரும்புவது குறித்து நிர்மலா, அம்மா எல்லோரும் அவன் மீது சிடு சிடுப்பாக மாறி விட்டாலும் இவள் இலகுவாக எடுத்துக் கொண்ட விதம் மனதிற்கு வெகுவாக பிடித்தது.

வழக்கம் போல தயக்கம் தடுக்க ‘நான் தான் சொல்லணும்னு என்ன இருக்கு? நீ சொல்லு அகிலா’ என்றான்.

அவளோ ‘அதெல்லாம் கிடையாது நீங்க தான் சொல்லணும்’ என்று பிடிவாதம் பிடித்தாள்.

சாக்குப் போக்குச் சொல்ல தேடியவன் ‘என் கிட்ட உங்க வீட்டு நம்பர் எல்லாம் இல்லை அகிலா.’ என்றான்.

 அதெல்லாம் ஏற்கனவே உங்க மொபைல் உள்ளே நான் எல்லாரும் தொடர்பு எண்களையும் சேர்த்துட்டேன். நீங்க இப்ப என்ன செய்யறீங்கன்னா என் அப்பா நம்பர் தேடி அவங்களுக்கு போன் போட்டு பேசுறீங்க ஓகே..

‘சரியான எமகாதகி’ என மனதிற்குள் மனைவிக்கு இன்னொரு பெயர் சூட்டியவன். மாமனாருடைய எண்ணைத் தேடி அழைத்தான். மருமகனுடைய அழைப்பை எதிர்பார்த்திராத அகிலா அப்பாவிற்கு ஆதவனின் அழைப்பு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, அவனிடம் மிக மகிழ்ச்சியோடு பேசினார்.

எல்லோருடைய நலத்தையும் விசாரித்து முடிக்கவும் அவன் ‘அடுத்த வாரம் தான் யூ எஸ் செல்வதாக இருப்பது குறித்து’ கூறினான். திருமணமாகி சிறிது நாட்களிலேயே அவன் வேலைக்கு திரும்புவது குறித்து அவர்களுக்கு சிறிதான சுணக்கம் ஏற்பட்ட போதும் அவ்வளவாக பெரிதுபடுத்தவில்லை.

இடைப்பட்ட நாட்களில் அகிலாவோடு வீட்டிற்குள் வரச் சொன்னார். அவனோ தன் பயணத்திற்கு முந்தின சில வேலைகளைச் சொல்லி தற்போது வர முடியாதென மறுத்தான்.

‘அப்படின்னா நீங்க யூ எஸ் போகிற அன்னிக்கு முன் தினம் இராத்திரி அகிலாவை இங்க விட்டுட்டு போய் விடலாமே? எப்படியும் அவ தனியா வந்தா நல்லா இருக்காது நீங்க ரெண்டு பேரும் வாங்க, இங்கே அவளை விட்டுட்டு நீங்க போங்க நீங்க வேலை முடிஞ்சு திரும்ப வர்ற வரைக்கும் அவ இங்க இருக்கட்டும்’ என்றார் அவர்.

அவனுக்கு அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவன் யூ எஸ்ஸிற்கு புறப்பட்டு செல்லும் போது அவள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை விரும்பினான். அதே நேரம் அவர் கூறியதற்கு எதிர்ப்பாக ஒன்றும் சொல்லவும் விரும்பாதவனாக

‘நான் அகிலா கிட்ட கேட்டு சொல்றேன் மாமா’ எனவும் அகிலா அவனுடைய போனை வாங்கி கொண்டாள்.

‘என்னாச்சுப்பா என்ன சொன்னீங்க பா?’ என்றாள். தன் தகப்பன் சொன்னதை கேட்டதும் அவள் சரி என்று சொல்லி விடுவாளோ? என்று சற்று பரிதவித்தவனாக ஆதவன் நிற்க,

‘ஒன்னும் பிரச்சினை இல்லபா… நான் லீவு கேன்சல் பண்ணிட்டு ஆபீஸ் போறதாகத் தான் இருக்கிறேன். தினமும் ஆபீஸில் இருந்து வரும் போது நம்ம வீட்டுக்கு வந்துட்டு அப்புறமா இங்க வந்து விடுவேன்’ (அகிலாவின் தாய் வீடு அலுவலகத்திற்கு அருகாமையில் இருக்கின்றது.) என்றாள். கேட்டவனுக்கோ தான் எண்ணியது போலவே யூ எஸ் செல்லும் முன் மனைவி வீட்டில் தான் இருப்பாள் என எண்ணி மனதிற்கு இதமாக இருந்தது. ஒரு வழியாக பேசி முடித்து போனை வைத்தனர்.

அதற்கடுத்த நாட்களில் ஆதவன் அலுவலகத்திற்கு சில பல வேலையாக சென்று வந்தான். அவனது பயணத்திற்கான தயாரிப்புகளும் செய்ய வேண்டி இருந்தன. இவன் உடனே செல்ல நேரிடலாம் என்று எண்ணியே ஏற்கெனவே அலுவலகத்திலும் எல்லாவற்றையும் ஆயத்தமாக வைத்து இருந்தனர். வீட்டில் அவனால் நேரம் செலவழிக்கவே முடியவில்லை. இதோ நாட்கள் வேகமாக கடந்து அடுத்த நாள் ஆதவன் பயணமாக வேண்டி இருந்தது.

அன்றைய இரவுணவில் ஆதவனின் பெற்றோரும் அவனும் அகிலாவும் இருந்தனர். அடுத்த நாள் இரவு சாப்பாட்டிற்கு தன்னோடு ஆதவன் இருக்க மாட்டான் என தன்னையறியாமல் அகிலாவிற்கு நினைவிற்கு வர மனதிற்குள் ஏதோ ஒரு புதிதான உணர்வு. ஆனால், ராஜி ஏற்கெனவே வருத்தத்தில் இருக்க அவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இரவும் துணையும்…

‘ம்ம்’ என்ற ஆதவன் மனைவியின் கரத்தை பற்றிக் கொண்டு இருந்தான். வீட்டின் பின்புறம் இருவரும் இருட்டில் உலவிக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வீசியது.

நடுங்கியவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.

‘உன்னைக் கண்டுக்காம அலையுறேன் உனக்கு கோபம் இல்லையா?’

‘நீங்களே ஏதோ டென்ஷன்ல இருக்கிற மாதிரி இருக்கு, இதில் நான் கோபப் பட்டு என்ன?’

‘ஸாரிடா அகிலா’

‘அச்சோ ஏன் சாரிலாம்?’

‘என் வேலையே கொஞ்சம் இப்படித்தான், இந்தக் கம்பெனிக்காரனுங்க அஃபிஷியலா போகிறதால தேவைக்கு அதிகமா ஒரு நாள் கூட நிக்க விட மாட்டானுங்க, உன்னை இப்போ விசா எல்லாம் இல்லாமல் அழைச்சு போக முடியாதுங்கிறது வேற விஷயம். போனாலும் நாம ரெண்டு பேரும் பேசிக்கக் கூட நேரமிருக்காது அதுதான் உண்மை’

‘ம்ம்’

‘இந்தியால இருந்தா 8 மணி நேர வேலையோட சரி அங்கேன்னா 24*7 வேலை பார்க்கணும், தூங்குற நேரம் தவிர வேற எல்லா நேரமும் வேலைதான்.’

‘ம்ம் புரியுது, இவ்வளவு கடும் உழைப்பு இல்லேன்னா இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய பதவியில் வந்திருக்க முடியாதில்ல’

கண்கள் மினுங்க பெருமிதமாகத் தன்னை பார்த்து பதிலிருப்பவளைக் கண்டு மெய்சிலிர்த்தான். தன்னைப் புரிந்துக் கொள்ளும் துணைவி, தன்னுடைய உழைப்பை உயரத்தை அங்கீகரிப்பவள், தன்னைப் பாராட்டுகின்றவள் வேறென்ன வேண்டும்? மனம் கேள்வி கேட்டது. இன்னுமாய்த் தன்னோடு இறுக்கி அணைத்தவனுடன் ஒன்றினாள். அந்தக் கதகதப்பு மிகவும் பிடித்திருந்தது.

‘தேங்க்ஸ்டாம்மா’ எனக் கூறினான்.

? என் கணவன் என் உச்சியில் முத்தமிட்டானா என்ன? முதல் முத்தம் தித்திப்பாய் அவள் உச்சந்தலையினின்று உள்ளுக்குள் இறங்கியது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here