உள்ளம் உந்தன் வசம்_14_ஜான்சி

0
258

அத்தியாயம் 14

ஆதவன் தன் திருமணத்திற்கு முன்னதாகவே செய்து கொண்டிருந்த அதே ப்ரோஜெக்டின் (transition) அடுத்தக் கட்ட ஒப்பந்தத்திற்காகத் தன்னுடைய திருமணத்தின் பன்னிரெண்டாவது நாள் அன்றே மறுபடியும் யூ எஸ் திரும்பி விட்டிருந்தான்.

விடுப்பு எடுத்தும் கூட வீட்டில் அலுவலக வேலையை முழு நேரமும் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதில் முற்றுமாக வேலையை முழுமைப் படுத்தி விட்டு மறுபடி விடுப்புகளை எடுத்துக் கொள்ளத் தீர்மானித்திருந்தான். திருமணமாகி சில நாட்களிலேயே மனைவியிடம் பேசாமல் வேலை வேலை என்று இருந்தால் அவ்வுறவிலும் சலிப்பு வந்து விடாதா?

அதுவும் அவன் மனைவி அகிலா எதையும் இலகுவாக எடுத்துக் கொள்கின்றவளாக அமைந்ததனால் நல்லதாகப் போயிற்று. அவள் மட்டுமல்ல அவள் குடும்பத்தினரும் இவன் திருமணத்தின் சில நாட்களுக்கு உள்ளேயே உடனே வேலைக்குத் திரும்புவதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதால் சங்கடங்கள் ஏதும் நேரமில்லை.

ஆதவன் தான் யூ எஸ் வந்தது முதலாகச் செய்ய வேண்டிய வேலைகளைத் தீவிரமாக முனைந்து செய்ததில் ஓரளவிற்கு எல்லாம் கட்டுக்குள் வந்து விட்டிருந்தன. இப்போதோ, மேலும் பத்து நாட்கள் கடந்து விட்டிருந்தன.

அவன் தங்கியிருந்தது அதே ஹோட்டல் ஆயினும் மற்றொரு அறை. அதே அதிகாலை நேரம் அன்று சனிக்கிழமை க்ளையண்ட் ஆஃபீஸ் செல்லத் தேவையில்லை. ஆயினும் வழக்கத்திற்கு முன்னதாக மூன்று மணி அளவிலேயே முழித்துக் கொட்டு கொட்டென்று விழித்திருந்தான்.

நினைத்த நேரம் தூங்கும், எழும் வரம் இம்முறை யூ எஸ் வந்ததிலிருந்து அவனது கைவிட்டு போய் விட்டது போலும். தூக்கப் பிரச்சனையால் வழக்கம் போலச் சுறுசுறுப்பாக இல்லாமல் மிகவும் மந்தமாக உணர்ந்தான்.

பொதுவாக யாருக்குமே நாடு விட்டு நாடு மாறுகையில் ஆரம்பத்தில் சில நாட்கள் மாறுபடும் இரவு பகல் கால நிலை காரணமாகத் தூக்கம் சரிவர இல்லாமல் படுத்தும் தான். ஆனால், இம்முறை போல அவனுக்கு முன்பு எப்போதும் சிரமப் படுத்தியதில்லை என்பதென்னவோ உண்மை.

வந்தது முதலாக ஆதவன் மனதில் ஏதோ ஒரு பரிதவிப்பு இருந்து கொண்டே இருந்தது. எத்தனை களைப்பாக வேலைகளை முடித்து, உணவுண்டு, உறங்க வந்தாலும், எதுவோ குறைவுப் பட்டாற் போலொரு உணர்வு. நள்ளிரவில் தூக்கம் கலைந்தவன் படுக்கையிலிருந்து எழ விடாமல் களைப்பு தடுக்கும். அதே நேரம் கண்களை மூட விடாமல் ஏதோ வெறுமை உணர்வு உள்ளத்தை வாட்டித் தொலைக்கும். கொட்டு கொட்டென்று விழித்தவாறு படுத்துக் கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் பொழுது புலர்வதற்காகக் காத்துக் கொண்டு இருப்பான்.

அடுத்த நாளே தன் வெறுமைக்குக் காரண(மானவளை)த்தைக் கண்டு கொண்டான்.

கடந்த சில நாட்களாகத் தன்னோடு வால் பிடித்துக் கொண்டு, கல கலச் சிரிப்புக்களோடு, குறும்புப் பார்வைகளோடும் சீண்டல்களோடும் இருந்தவள் இப்போதோ அவன் அருகில் இல்லை.

புதுமணப் பெண்ணுக்கே உரிய சந்தனம், மல்லிகை இன்ன பிற பெண்மையின் அத்தனை மணங்களோடு சில நாட்கள் அவன் அறையை ஆக்கிரமித்து, அவனது இரவுகளின் கனவுகளில் பூக்களை முகிழ்க்கச் செய்தவள் இப்போது அவன் அருகில் இல்லை.

குறும்புகள் செய்து விட்டு, ஒன்றுமறியாதவள் போல அப்பாவி முகம் காட்டுபவள் அவன் அருகில் இல்லை.

எத்தனையாய் ஆதவனைக் கிண்டலடித்து நிர்மலாவிடம் சீண்டி இருந்தாலும் பங்கஜம் பாட்டி வந்த போது அவன் கரத்திற்குள் கரமிட்டு, வழி நடத்தி ஆதவனை அவர் ஒரு வார்த்தையும் குறை சொல்லி விடாதவாறு அவர் பாதம் பணியச் செய்து மனம் குளிரச் செய்தவள் இப்போது அவன் அருகில் இல்லை.

அவன் பெரியம்மா அவனை ஒரு சுடு சொல் சொல்ல விடாமல் காத்துக் கொண்டவள் அவன் அருகில் இல்லை.

விளையாட்டாய் பேசினாலும் பெரிய மனுஷியாய் அவனது வேலையைப் புரிந்து கொண்டு தொந்தரவு செய்யாமல் அவனது பணியைச் செய்ய அனுமதித்து அவனுக்கு மன அழுத்தம் வராமல் காத்தவள் அவனது அருகில் இல்லை.

சில நாட்கள் தன்னுடன் இருந்தவளுக்காகவா நாம் தூக்கம் தொலைக்கின்றோம்?

அவள் என்ன அந்த அளவிற்கு எனக்கு இன்றியமையாதவளாக ஆகிப் போனாளா? எனத் தன் மனதிடம் அவன் கேட்ட கேள்விக்கு உரத்தப் பதிலாக ஆம் எனும் பதில் கிட்டியிருந்தது.

தன் அருகாமையில் இருக்கும் தலையணையை அணைத்து அதில் அவளைத் தேடுகின்றவன் அதில் திருப்தி கொள்ளாமல்

‘ச்சே இது அவள் ஸ்பரிசம் போல் இல்லை’

என உணர்ந்து சலித்துத் தானாகக் களைத்து தூங்கி விட்டாலும் கூட மறுபடியும் நள்ளிரவில் விழிப்பு வந்து விடும். அருகாமையில் கைகளைச் சுழற்றி அவளைத் தேடி இல்லையென உணர்ந்துக் கொள்வான். காதலும் குட்டி சிசுவைப் போலத்தான் இரவு தூங்க விடாமல் படுத்தி எடுக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டான்.

வழக்கமாகவே வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்கின்ற அவனுக்கு வீட்டைப் பிரிந்து வாரக் கணக்கு மாதக்கணக்காகினால் மட்டும் ஹோம் சிக் வருவதுண்டு. ஆனால், இப்போது சில நாட்களுக்குள்ளாகவே அதுவும் வந்து தொலைத்து விட்டது. பாவம் ஹோம் சிக் பொண்டாட்டி சிக் ஆகிப் போனதே? என்ன செய்வதாம்?

கையிலிருந்த அவனுடைய போன் அலாரம் ஒலிக்கவே, உனக்கு முன்னால் நான் எழுந்துக் கொண்டேனடா என்று எண்ணியவனாக அதை விரைந்து அணைத்தான். சோம்பலாக எழுந்து அமர்ந்தவன் கண்கள் மறுபடி தன் அலைபேசிக்குச் சென்றது.

அலுவலக மற்றும் வீட்டு தொலை தொடர்புக்கு மட்டும் அலைபேசியை உபயோகித்துக் கொண்டிருந்தவன் இப்போது மாறி விட்டிருந்தான். மாற்றிவிட்டிருந்தாள் எனச் சொல்லவும் வேண்டுமோ?

முக நூல் கணக்கு சும்மா பெயரளவில் வைத்துக் கொண்டிருந்தவன், அடிக்கடி அந்தப் பக்கம் எட்டியே பார்த்து இராதவன். இப்போதோ தூக்கம் வராத போதெல்லாம் அதிலேயே குடியிருப்பதை என்ன சொல்வது?

மனைவியின் கணக்கில் சென்று உலவுவதையே வேலையாக வைத்துக் கொண்டிருந்தான். அவளது முகநூல் கணக்கில் அத்தனை புகைப் படங்களிலும் அவள் விதவிதமான உடைகளில் இருந்தாள். அந்தச் சிரிப்பும், மிளிரும் கண்களும் பார்த்ததும் சன்னமாய்ப் பெருமூச்செழுந்தது. அத்தனை புகைப் படங்களிலும் உறவுகளோடோ அல்லது நட்புக்களோடோ இருந்தாளே அன்றி அவளைத் தனியாக ஒரு புகைப்படத்திலும் அவன் காணவில்லை.
ஒரு புகைப்படத்தைப் பெரிதாக்கி (zoom) பார்த்தவனின் விரல்கள் அவள் கன்னத்தை வருடிக் கொண்டு இருந்தது. இரவு பொழுதுகளில் எல்லாம் தன்னை அவள் அணைத்திருந்தது ஞாபகத்தில் இடறியது. அப்போது அவள் ஸ்பரிசம் எவ்வாறு இருந்தது? எனப் பலமுறை மனக் கண்ணில் கொண்டு வர முயன்றும் தோற்றான்.

தாயகம் திரும்பியதும் அகிலாவை கடத்திக் கொண்டு(?!) தேனிலவுக்குச் சென்று விட வேண்டும். மறக்க முடியாத அளவு அவளுடனான தருணங்களைச் சேகரிக்க வேண்டும் என்றெண்ணியவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை வந்து சேர்ந்தது.

மறுபடியும் மனைவியின் முக நூல் கணக்கில் முற்றுகையிட்டவன் சலிக்காமல் முன்னும் பின்னுமாய் நகர்த்தியவாறு அவளது புகைப்படங்களில் ஆழ்ந்திருந்தான். இதுவும் ஒரு கள்ளத்தனம் தான், என்ன செய்வது? பலர் காதலின் போது செய்வதை ஆதவனோ திருமணம் முடித்துச் செய்து கொண்டிருக்கின்றான்.

‘அந்தச் சிரிப்புத்தான்டி உனக்கு அழகு… என் வாயாடி’ அவள் புகைப்படத்தில் உதடுகளில் இப்போது அவன் விரல்கள் நிலைக் கொண்டிருந்தன. நீ அவளுக்கு இன்னும் உதட்டில் ஒரு முத்தம் கூடக் கொடுக்கவில்லையடா? என் அவன் மனசாட்சி காறி துப்பிக் கொண்டிருந்ததில் நனைந்து நீச்சலடித்துக் கொண்டிருக்கும் போதே நேரம் கடந்து போய்க் கொண்டிருக்க அவனது அலைபேசி ஒலித்தது.

இந்நேரம் அம்மாதான் அழைத்திருக்க வேண்டும். அகிலா இப்போது அலுவலகம் சென்று இருப்பாள்.அவளது வேலைக்கு நான் அழைப்பதோ அழைப்பதோ சரி வருவதில்லை.

அகிலா ஹெச் ஆராக ( HR மனித வள மேலாண்மை) பணி புரியும் அலுவலகத்தில் தற்போது குறிப்பிட்ட குழுவிற்காக மிகுதியாக ஆட்கள் தேவைப் படுவதால் நேர்முகத் தேர்வுகள் மிக அதிகமாக நடைப் பெற்று வருவதாகவும் அவள் விடுப்பை ரத்துச் செய்து பணிக்கு வந்ததில் அவள் தலைமையதிகாரி மிகவும் மகிழ்ந்ததாகவும் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தான்.

அதனால் அவள் அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் வசதி படும் போது இருவரும் அலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. தினமும் வாட்சப் செயலியில் அகிலா அவனுக்காகச் சில செய்திகளும் அனுப்பி வைப்பாள். சனிக்கிழமை அவள் அலுவலகத்தில் அரை நாள் பணி அதற்கேற்ப அவளுக்கு எத்தனை மணிக்கு அழைக்கலாம் எனக் கணக்கிட்டுக் கொண்டான்.

தாய் தந்தையிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தவன் ஏற்கெனவே வாசித்த மனைவியின் வாட்சப் செய்திகளை மறுபடி போய் வாசித்தான்.

காலை வணக்கம் சொல்லி இருந்தாள், அவன் நலம் விசாரித்து இருந்தாள். பதிலுக்குக் காலை வணக்கம் சொல்லி இருந்தவன் இவனும் சம்பிரதாய விசாரிப்பாக நலம் விசாரித்து இருந்தான்.

ஆதவன் இதுவரை தன் வீட்டினருடன் பேசுகையில் ஒரு போதும் முகம் பார்த்து பேசும் வகையில் வீடியோ கால்கள் செய்ததில்லை. இப்போது மனைவியைப் பார்க்க வேண்டி புதிதாய்ச் செய்யப் போக யாராவது கிண்டலடித்து விடுவார்களோ என இயல்பான தயக்கத்தில் ஆசையிருந்தும் அதனைத் தவிர்த்தான்.

‘நான் தான் செய்வதில்லை, அவளாவது எனக்கு வீடியோ கால் செய்தாலென்ன?’ என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

திருமணத்திற்குப் பின்னான சில நாட்கள் கைகள் பற்றுவதும், தோளணைப்பும், சில அணைப்புகளும் இரவில் அருகாமையில் தூக்கமும் எல்லா ஸ்பரிசங்களும் இருந்தும் அவை அதீதமாக இல்லாமல் சாதாரணமாகவே இருந்திருக்கச் சட்டென்று வீடியோ கால் செய்து வழிந்தால் தவறாக எண்ணிக் கொள்வாளோ? என்ற தயக்கமும் தடுத்தது.

தனது நேசத்தை முதலில் நேரில் சொன்ன பின்னரே வீடியோ கால் போன்ற மற்ற விஷயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தன்னை அடக்கிக் கொண்டான்.

தினம் தோறும் பேசினாலும் ஆதவனுக்கோ அகிலாவின் பேச்சில் ஏதோ ஒன்று குறைவு பட்ட உணர்வு.அவள் அவனிடம் பேசுகையில் ஏதோ மென்று முழுங்கியவாறு பேசுவதை அவனும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவளுக்கு என்னவாயிற்று? எதுவும் பிரச்சனையா? முன் போல அவள் ஏன் என்னிடம் சாதாரணமாக பேசுவதில்லை?

சிந்தனை புதுக் கோணம் எடுக்க அவளைக் குறித்த முரண்பாடுகளை மனம் கணக்கிட ஆரம்பித்தது. தான் யூ எஸ்ஸிற்குக் கிளம்பும் போது அவள் முகத்தில் வருத்தத்தின் சாயலே இல்லையே?

குறைந்த பட்சம் தன்னோடு விமான நிலையம் வரையாவது வந்திருக்கலாம் இல்லையா? அது கூட வரவில்லை என்று எண்ணியவனுக்கு அவள் அவனிடம் முன்பே தானும் அவனோடு யூ எஸ் வருவதாகக் கேட்டது வசதியாக மறந்து போயிற்று.

நன்றாகத்தானே இருந்தாள் இப்போது என்னவாயிற்று? வழக்கம் போல மனைவியைக் குறித்துக் குழம்ப ஆரம்பித்தான். அதிகப் படிப்பாளியாக இருப்பதுவும், எல்லாவற்றுக்கும் மூளையைப் பயன்படுத்துவதும் சரிவராது என்பதற்கு நம் நாயகனே சரியான உதாரணம்.

அலுவலகத்தினின்று அவசரமாய்ப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அகிலா. அரை நாள் என்றாலும் போக, வர என்று பயணத்திற்காகச் செலவிடும் நேரம் குறையப் போவதில்லை. வழக்கமாக ஏழு மணி அளவில் வீட்டை அடைகின்றவள் அன்று மதியம் நான்கு நான்கரை மணியளவில் வீட்டிற்குச் சென்று விட முடியும். முன் தினமே மாமியாரிடம் தெரிவித்து விட்டதால் இன்று அலுவலகத்திலிருந்து நேரடியாகத் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே இரவு சாப்பாட்டை முடித்து விட்டுப் புறப்படும் எண்ணத்தில் இருந்தாள்.

கணவன் இல்லாத வீட்டிற்குச் செல்லவும் மனம் சுணங்கியது. ஆனாலும், இரவு தாய் வீட்டில் தங்க அவளுக்கு மனதில்லை. அப்புறமாகக் கணவனோடு வந்து சில நாட்கள் தங்கிச் செல்வதாகத் தகப்பனிடம் உறுதி அளித்திருக்கிறாள்.

அவள் அலுவலகத்தினின்று தாய் வீட்டிற்குள் நுழையவும் கணவனின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

‘எப்படி இருக்கீங்க? இப்ப அங்கே என்ன டைம்? காலை சாப்பாடு ஆகிடுச்சா? வேலை அதிகமா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தாளே தவிர முன்பு போலப் பேச ஏனோ தயக்கமாக இருந்தது. அவளிடம் பேசியவன் மரியாதைக்காக அவள் வீட்டினரோடும் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு வைத்தான். அண்ணன்களோடு அரட்டை அடித்து விட்டு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புறப்பட்டவளை பிரசன்னா தன் பைக்கில் அழைத்து வந்து தங்கையின் மாமியார் வீட்டில் சேர்த்திருந்தான்.

வீட்டின் முன் இருந்த இடத்தில் வெளிக்காற்று வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த ராஜியும், ராமானுஜமும் பிரசன்னாவை வரவேற்க சில நிமிடங்கள் இருந்து பேசியவன் விடைப் பெற்றுச் சென்றான். உள்ளே சென்று உடை மாற்றி முகம் கழுவி வந்த அகிலா வெளியே வந்து அமர்ந்தாள்.

‘சாப்பிட்டாச்சா மாமா? சாப்பிட்டீங்களா அத்தை?’ எனப் பேச ஆரம்பிக்கச் சில அளவளாவல்களோடு பேச்சுக்கள் நிறைவு பெற்றது. பெரியவர்கள் உறக்கத்திற்காக வெளியிலிருந்து வீட்டிற்குள் செல்ல தன் கால்களில் இரும்புக் குண்டை கட்டியது போல அவளும் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

‘கொஞ்ச நாளில் என்னைக் கிறுக்குப் பிடிக்க வைத்து விட்டான் இந்த ஆதவன்’

அவள் மனம் பொருமியது. அவன் இல்லாத அறைக்குள் செல்லவே அவளுக்குப் பிடிக்கவில்லை. எத்தனை வேலையாக இருந்தாலும் அவள் பேச ஆரம்பித்ததும் ஒரு புன்னகையோடு பேச ஆரம்பிப்பான். அந்த முகத்தைக் காண அவளுக்கு மிகவும் ஏக்கமாக இருந்தது.

திருமண ஆல்பம் முன் தினம் வந்திருக்க அதில் அவனையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அதனை அவள் தன் கணவனோடு சேர்ந்து பார்த்து இருக்க வேண்டியது என மனம் முறையிட்டாலும் எத்தனையாவதோ முறையாக அத்தனையையும் புரட்டிப் பார்த்து கணவனை ஒவ்வொரு ஃப்ரேமிலும் இரசித்தாள். முன்பு அழகனாக இருந்தவன் இப்போது அவள் பார்வையில் பேரழகனாகத் தோன்றினான். எல்லாம் அவளது அகக்கண்களால் பார்த்ததால் நிகழ்ந்த மாயங்கள் அல்லவோ?

மறுபடி புகைப்படத்தைப் பார்க்க அவன் அதில் கம்பீரமாய் யாருடனோ பேசிக் கொண்டிருந்த அந்தத் தோரணையில் அவள் மனம் மறுபடியும் அசைந்தது.

‘அழகன்’ சொல்லிப் பார்த்தாள். மனம் குதூகலித்தது… எனக்கே எனக்கான அழகன். அமைதியான குணம், எண்ணி பேசுவான் என்றாலும் கூட அவளுக்கு அது எதுவும் குறையாகவே தெரியவில்லை. அவளோடு கூடச் சேர்ந்து சில நாட்களாய் அவனும் வாய்ப்பூட்டு கழன்று பேச ஆரம்பித்து இருந்தானே? ஒவ்வொன்றாய் கணவனைக் குறித்த ஞாபகங்களே அவளைப் படுத்தி எடுத்தன.

அவளுக்கான அக்கறைகளில் ஒருபோதும் அவன் குறைவே வைத்ததில்லை. பெற்றோர்களையும் கூடப் பிறந்தவளையும் இத்தனையாய் தாங்குபவன் அவளை மட்டும் கவனியாமல் இருப்பானா என்ன? அவளையும் வெகு நேரம் துன்புறுத்தி ருசிக் கண்ட பின்னரே தூக்கம் அரவணைத்தது.

அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மணி இரெண்டரை தூக்கம் வராமல் வீலையாட்டுக் காட்ட ஆதவன் சலித்தவாறு படுக்கையில் அமர்ந்திருந்தான். இப்போது இந்தியாவில் மதிய நேரம் ஆகி இருக்கும். தன் வீட்டில் எல்லோரும் விழித்துத் தான் இருப்பார்கள். போன் அழைப்பு விடுத்தால் என்ன? என்றெண்ணியவன் வீட்டிற்கு அழைத்தான்.

என்ன வீட்டினர் மீது புதிதான பாசம்? எதற்காக இத்தனை பில்டப்? வீட்டிற்கு அழைத்து வீட்டினரோடு பேசுவது போல என்ன ஒரு நடிப்பு? அகிலாவின் குரலை கேட்க வேண்டுமென்று உண்மையைச் சொல்ல வேண்டியது தானே? லேண்ட்லைன் போன் அழைப்பதற்குப் பதிலாக நேரடியாக அவளுக்குப் போன் செய்தால் என்னவாம்? மனம் அவனைச் சீண்டி விளையாட அதற்க்குள்ளாக கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிய அவன் அழைப்பை அம்மா எடுத்திருந்தார்.

‘ஆதவா? என்ன இந்நேரம்? தூங்கலையாடா?’

தாயும் மகனும் பேசிக் கொண்டிருக்கச் சட்டென்று ராஜியின் குரலில் மாற்றம். ‘உன் பொண்டாட்டி என் பேச்சை கேட்க மாட்டேங்கிறாடா என்னன்னு கேளு?’

எதையோ நினைத்து அழைப்பு விடுக்க, தேவையில்லாமல் மாமியார் மருமகள் பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்கும் நாட்டாமையாகப் பதவி ஏற்க நேரிட திகைத்தான். தாய் சொன்னதைக் கேட்டு அகிலாவிற்கு அறிவுரை சொல்லப் போக அவளோ மாமியார் பேச்சையும் கேட்க மறுத்து, கணவன் பேச்சையும் சற்றும் கேட்க மறுத்து விட அவன் மனசாட்சியே அவனைப் பார்த்து கேலி செய்து உருண்டு புரண்டு சிரித்தது.

இந்தச் சின்ன விஷயத்துக்கா இவ்வளவு பிரச்சனை? இந்த மாமியார் மருமக இரண்டு பேருக்கு நடுவில நாம நொந்து நூடுல்ஸாக முடியாது சாமி. இனி இவங்க பிரச்சனையில் தெரியாம கூடத் தலையைக் கொடுக்கவே கூடாது. ஃபோன் நெட்வர்க் சரியில்லை என்று பொய் சொல்லியாவது தப்பித்து விட வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டான்.

அவன் மன சாட்சியோ அவன் சொன்னதை

ஆ அம்மா … சத்தம் கேட்கலைம்மா… ஏதோ நெட்வொர்க் ப்ராப்ளம் போலிருக்கு… ஆ..அகிலா அப்புறம் பேசுறேன்மா… ஆங்க்.. சத்தம் ஒன்னும் கேட்கலை இப்ப வச்சிர்.. றேன்…’ அவனுக்கே நடித்துக் காட்டியது. அதன் காதை திருகிய ஆதவன் மனைவியின் குரலைக் கேட்ட சந்தோஷத்தில் மறுபடி உறங்கிப் போனான்.

சில மணி நேரங்களில் அகிலாவின் எண்ணிலிருந்து அவனுக்கு அழைப்பு வரவும் தூக்கக் கலக்கத்திலேயே அதை எடுத்துக் காதில் பொறுத்தியவன்.

‘சொல்லும்மா…’

‘உங்க தூக்கத்தைத் தொந்தரவு பண்ணிட்டேனோ?’

‘இல்ல அகிலா… வழக்கமா எழுந்திருக்கிற நேரம் தான்.’

‘ம்ம்…’

‘என்னாச்சு?’

‘இல்ல நான் அவசர அவசரமா ஃபோன் பண்ணினேன். இரெண்டு நாளா உங்க கிட்ட பேசணும்னு தான் இருந்தேன். ஆனா, டைம் கிடைக்கலை. முக்கியமா மாமா அத்தை பக்கத்தில இருந்தாங்க அதனால தான் பேச முடியலை. இப்ப மாமா அத்தை கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க அவங்க வர்றதுக்குள்ள பேசணும்னு தான் அவசரமா போன் போட்டேன். அதுக்கப்புறம் தான் உங்க தூக்கத்தைக் கெடுத்திட்டேனோன்னு தோணுச்சு அதனால கேட்டேன் … ‘வழக்கமாய் அவனிடம் பேசுவது போலல்லாது தயக்கம் சூழ, தடுமாறி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

தன் பெற்றோர்கள் இல்லாத நேரம் தன்னிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள் என்றால் எதுவும் தவறாக இருக்குமோ?

நண்பன் சுந்தர், அவன் மனைவிக்கும் அம்மாவிற்கும் பிரச்சனை, அதற்கப்புறம் தனிக்குடித்தனம் என்று மறந்துப் போனதெல்லாம் மூளைக்குள் சாத்தானாய் வலம் வர திகைத்தான்.

அகிலாவிடம் என்ன பேசுவது? அவள் என்ன சொல்ல வருகிறாள் எனக் கேட்காமல் தவிர்க்கவே மனம் விழைந்தது. அந்நேரம் ப்ளாக்பெர்ரியில் ஏதோ ஒரு அலுவலகச் சம்பந்தமான போன் அழைப்பு வர ஆசுவாசமாக உணர்ந்தான்.

‘அகிலா என்ன விஷயம்னு வாட்சப் பண்ணு ஒரு போன் வந்திட்டு இருக்கு அட்டெண்ட் செஞ்சுட்டு உனக்கு அழைக்கிறேன் சரியா?’

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here