உள்ளம் உந்தன் வசம்_15_ஜான்சி

0
273

அத்தியாயம் 15

அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பை பேசி முடிக்கும் முன்பே அவனது ஆன்ட்ராய்ட் அலைபேசியின் வாயிலாக விட்டு விட்டு வாட்சப்பில் தகவல்கள் வரும் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது.அவை அகிலா அனுப்பும் தகவல்கள் தான் என எண்ணிக் கொண்டான்.

அரை மணி நேரம் தாண்டியும் அலுவலக அழைப்பு நீடிக்க, அதன் பின்னர்க் காலைக் கடன்கள் முடித்தே மனைவியின் செய்திகள் என்னவாக இருக்கும் எனப் பார்க்க விழைந்தான்.

இப்போது மனம் தெளிவாகி இருந்தது, அவளுடைய குணம் என்ன என்று தெரிந்தும் தான் ஒரு நிமிடம் தடுமாறியதை, அவளைக் குறித்து தவறாக எண்ணியதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.

சில மணி நேரம் முன்பு மாமியாரும் மருமகளும் ஐந்து காசு பெறாத விஷயத்திற்காகச் சண்டைப் போட்டதை எண்ணி சஞ்சலத்துடன் தூங்கியதன் விளைவுதான் அது என்று தானாகவே முடிவுக்கு வந்தான்.

அவள் அப்படிப்பட்டவள் அல்ல, அப்படி இருந்தால் தான் யூ எஸ் வந்ததும் நல்லதாயிற்று கணவனே வீட்டில் இல்லை நாம் எதற்கு இங்கே? எனத் தன்னுடைய வீட்டில் போய் இருந்திருக்க மாட்டாளா? அம்மாவிடம் சொல்லி விட்டு தாய் வீட்டிற்குச் செல்வதும் இரவானாலும் தன்னுடைய வீட்டிற்கு வந்து விடுவதுமாக இருப்பதை அறிந்தும் தான் இப்படிச் சிந்திக்கலாமா? தன்னையே கடிந்து கொண்டான்.

அப்படியே அவன் தாய்க்கு அவளுக்குமிடையே உள்ள பிரச்சனை தான் காரணம் என்றாலும் கூட அவள் அவனிடம் பகிராமல் யாரிடம் பகிர்வாளாம்? அவளை தவிர்க்க எண்ணியதைக் குறித்து வெட்கித்தான்.

அகிலா செய்தி அனுப்பியிருந்த ஆன்ட்ராய்ட் அலைபேசியைக் கையில் எடுக்கையிலேயே அவள் அவனிடம் பேசிய விதம் மிகவும் நெருடியது.

அவள் என்னிடம் வழக்கமாகப் பேசும் தொனி இதுவல்லவே? ஏன் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட அவள் என்னிடம் கோபத்தில் என்றாலும் மிக சாதாரணமான தொனியில் பேசினாளே? அவள் யாரிடமும் இப்படித் தடுமாறி பேசியதை அவன் பார்த்ததும் இல்லை.

திருமணத்திற்கு முன்பு தன்னை முதல் முறையாகச் சந்தித்த போதும் அத்தனை படபடவென்று பேசியவள் இன்று ஏன் உளறிக் கொட்டினாள்? குழப்பத்தோடே அவளது வாட்சப் கணக்கை திறந்தான். தகவலை வாசிக்கும் முன்னரே அவளது வாட்சப் புகைப்படத்தைத் தட்டி பெரிதாக்கினான்.

நிழல் படத்தில் அவள் சேலை அணிந்து மயக்கும் புன்னகையோடு நின்றிருந்தாள். உடனடியாக அதைத் தரவிறக்கிக் கொண்டவன் அவளது நிழல் படத்திற்கு முத்தமிட்டான். அவளைக் குறித்த பிரிவுத்துயர் அவன் ஊனிலும், உயிரிலும் பெருகிக் கொண்டு இருந்தது.

தான் வீடு திரும்ப எத்தனை நாளாகும் எனக் கணக்கிட்டான். குறையாமல் ஒரு வாரம் ஆகும் எண்ணியதும் பெருமூச்செழுந்தது.

‘சரி என்னதான் பிரச்சனை? எதற்காக எனக்கு அழைத்தாள்?’ புகைப்படத்தில் மெய்மறந்துப் போனவன் சுய நினைவிற்கு வர செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான்.

தன்னுடைய சந்தேகச் சிந்தனைகளைச் செருப்பால் அடித்தாற் போல இருந்தது அவளுடைய செய்திகள்.

‘ஹாய் ஆதவ்,

குட் மார்னிங்க் :smile:’

அடுத்ததாக இருந்த சிரிக்கும் ஸ்மைலியில் அவள் முகமே தெரிந்தது வருடினான். ‘மாமா அத்தையோட 30வது ஆண்டுத் திருமண நாள் இன்னும் பத்து நாளில் வருது இல்லையா? நீங்க வர இன்னும் நாள் இருக்கு நாம எப்படிக் கொண்டாடலாம்னு முடிவு செய்தால் நான் நீங்கள் வருவதற்கு முன்னால் எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன்.

எனக்கு நம்ம உறவினர்கள் எல்லோர் விபரமும் தெரியாது. நிர்மலாவுக்கும் நாம் இரெண்டு பேரும் சேர்ந்து எல்லா வேலையும் செய்து விட்டுச் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என யோசித்து இருக்கிறேன். அதனால் அவளிடமும் விபரம் கேட்க முடியாது. நாம் இப்படி செய்யலாமா? ‘

இன்னின்ன விஷயங்கள் செய்யலாம் என பட்டியலிட்டு இருந்தாள். இறுதியாக ‘என் ஐடியா எப்படி?’ எனப் பெரிதாய் புன்னகைத்து கேட்டிருந்தாள்.

‘அதன் கூடவே சில பல ஏற்பாடுகள் எப்படி அலங்கரிக்க வேண்டும்? என்னென்ன விஷயங்களை விழாவில் சேர்க்கலாம்? சாப்பாடு என்ன மெனு?’ என்று பல விபரங்களையும், இணையச் சுட்டிகளையும் பகிர்ந்திருந்தாள்.

இனி அவளைக் குறித்துக் கீழ்த்தரமாக எண்ணுவாயா? என மனைவிக்காக அவனது மனமே அவனுக்கெதிராக லெப்ட் ரைட் என வாங்க தனது அனைத்து எதிர்மறையான சிந்தனைகள், சஞ்சலங்களினின்றும் வெளிவந்து விட்டிருந்தான் அவன்.

அகிலாவைக் குறித்து நான் தவறாகக் கணித்தது பெரும் பிழை. இனி அந்தப் பிழையைச் செய்ய மாட்டேன் என தன் மனதிடம் சரணடைந்தான். உள்ளுக்குள் முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்த எதிர்மறை சிந்தனைகள் விலகியதில் புத்துணர்வாய் உணர்ந்தான்.

உடனே அவளுக்கு அழைக்க எண்ணியவன் வீடியோ கால் செய்தால் தான் என்ன? அவள் முகத்தைப் பார்க்கலாமே என எண்ணினான். ஆமாம், இப்போது அம்மா அப்பாவும் வீட்டில் இல்லையாமே? என அவன் மனசாட்சியும் போட்டுக் கொடுக்க, உனக்கு என்னைக் கிண்டல் செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா? என மனசாட்சியை முறைத்தான் ஆதவன்.

இந்தியா

சனிக்கிழமை இரவில் ஆதவனை எண்ணியவாறு அவனது புகைப்படத்தை வருடிக் கொண்டே தூங்கிய போது இரவு மணி மூன்றை கடந்திருந்தது. காலையில் தாமதமாக எழுந்ததால் படபடப்பாகச் சுத்தம் செய்து சமையலறைக்கு விரைந்தாள்.

‘இப்ப என்ன அவசரம்? எதுக்கு இந்த ஓட்டம்?’ ராஜி கடிந்தார்.

‘நேரமாகிடுச்சு அத்தை’

‘வேலைக்குப் போக வேண்டாம்ல அமைதியா எழும்புனா ஒரு தப்பும் இல்லை.’

‘இப்ப சமைச்சுடறேன்.’

‘அதெல்லாம் காலை சாப்பாடு ஆச்சு, இட்லி அவிச்சிருக்கிறேன். சாப்பிடு போ.’

‘நீங்க சாப்பிட்டாச்சா? மாமா நீங்க?’

‘நாங்க சாப்பிட்டாச்சுமா’

‘சரி அத்தை’

அவசரமாய்ச் சாப்பிட தன்னவனின் நினைவில் இட்லியும் விக்கியது.

தொடர்ந்து புரையேறவும் கண்களில் நீர் சேர திணறியவளை பின்னிருந்து முதுகை வருடிவிட்ட ராஜி அவள் நாடியில் கை கொடுத்து உயர்த்தி மேலே பார்க்க சொன்னவர் உச்சந்தலையை லேசாகத் தட்டி விட்டார்.

‘அவன் வெளிநாட்டுக்கு போனதில இருந்து உனக்கு அடிக்கடி புறையேறுது பார்த்தியா?’

மாமியாரின் கேலியில் அவள் கன்னம் சூடேறியது.

அங்கே ராமானுஜமும் அவளது புரையேறிய போது வந்த சப்தத்தில் வந்து சேர்ந்திருக்க,

‘சரியாகிடுச்சா மருமகளே?’ எனக் கேட்டவர் அவள் தலையசைக்க மனைவியின் கேலியில்

‘ஆமா இத்தனை வருசத்துல அவன் எத்தனை தடவை வேலையா போயிருக்கான். நமக்கு என்னிக்காவது புரையேறிருக்கா?’ என ராஜியிடம் கேட்டவாறு சிரித்து விட்டு சென்று விட…

கை கழுவி முகம் கழுவி சாதாரணமாக ஆகி அமர்ந்தாலும் மாமனார் மாமியார் கேலியில் முகம் சிவக்க கற்துண்டுகளை விழுங்கி வைப்பது போல இட்டிலி துண்டுகளை விழுங்கி வைத்தாள்.

‘ஆமா, அவர் ஏன் என்னை நினைக்குறாரு? என் அம்மா அப்பா நினைப்பாங்களா இருக்கும்? சும்மா இந்தப் பெருசுங்களுக்கு மகன் பெருமை பேசுறதே வேலை’ என்று எண்ணியவளாய் தாய் தந்தைக்கு அழைத்துப் பேசினாள்.

ஆதவனிடம் பேச ஆசையிருந்தாலும் நள்ளிரவு நேரம் அவன் தூக்கத்தைக் கெடுப்பானேன்? எனத் தன்னை அடக்கிக் கொண்டாள். அவளால் அவனது தூக்கம் போய்ப் பல நாட்களாகின என்பதும் இப்போதும் அவளைக் குறித்த சிந்தனையில் அவன் முழித்து இருப்பதுவும் அவளுக்குத் தெரியவில்லை பாவம்.

பத்து பத்தரை மணியளவில் தான் பிரச்சனை ஆரம்பித்தது.
‘வா அகிலா நாம இரண்டு பேரும் கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம் என்றார் ராஜி’

‘கல்யாண வீடா அத்தை?’

‘ஆமா, ரெண்டு நாள் முன்னாடி அந்தக் கல்யாண அழைப்பிதழ் காண்பிச்சேனே? மாமா வகையில் சொந்தம் ஒரு வகையில் உங்க சொந்தமும் கூடத்தான். உங்க அம்மா அப்பா வருவாங்களா இருக்கும். வா , வா அன்னிக்கு வாங்குன புதுச் சேலைக்கு ப்ளவுஸ் தச்சு வந்திடுச்சு இல்லையா? அதை உடுத்துக்கோ அகிலா.’

ராஜி பரபரத்தார்.

ஆதவன் வாங்கிய சேலையை அவன் முன்னால் தான் கட்ட வேண்டும் என்று இருக்க இது என்ன சோதனை? அதுவும் இன்றைக்கு அவள் மனமே சோர்ந்து இருக்க, எங்கும் செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.

இரண்டு வாரங்கள் முன்பு கணவனோடு திருமணம் ஒன்றிற்குச் சென்று வந்தது மனதில் நிழலாடியது. எத்தனை சிரிப்பு?, குதூகலம். அதுவும் சாப்பாட்டு வேளை இவள் செய்யும் திருட்டுத்தனம் அறிந்து இவள் மீதே ஒரு கண்ணை வைத்திருந்தவன் அவள் மிகுதியான சாப்பாட்டை அவன் இலைக்குக் கடத்தும் போது கையைப் பிடித்ததும் முறைத்ததும், இவள் கெஞ்சல் பார்வையில் அனுமதித்ததும் பதிலுக்கு அவளது இலையில் இருந்த அப்பளத்தையும் பாயாசத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அவளுக்குத் தராமல் போக்குக் காட்டியதும், அவளது பரிதாப பார்வை கண்டு மறுபடி வாங்கிக் கொடுத்ததும் என ஒவ்வொன்றாக அவள் மனக்கண்ணில் வர ஆதவன் தவிர யாருடனும் திருமணத்திற்குச் செல்ல விருப்பமில்லை.

‘நான் வரலை அத்தை இழுத்தாள்…’ முதல் மறுப்பாயிற்றே?

‘வீட்டுலயே இருந்தா சொந்தக் காரங்களை எப்படித் தெரிய வரும்? வா நம்ம இரண்டு பேரும் போயிட்டு வரலாம்.’

‘வேண்டாம் அத்தை, இன்னிக்கு வர இஷ்டமில்ல அப்புறமா ஒரு நாள் வரேனே’

வாக்குவாதம் போய்க் கொண்டிருக்கப் போன் அழைத்தது. மகனிடம் பேசியவர் மருமகளைப் பற்றி முறையிட கணவனைப் பஞ்சாயத்திற்கு அழைத்ததில் அகிலா கடுப்பானாள்.

‘இவரு பெரிய ஐ நா சபை அதிகாரி மாமியார் மருமகளுக்கு நடுவில யார் வரச் சொன்னது?’

போனை எடுத்தவள் ‘என்ன?’ என மொட்டையாய் கேட்க எதிரில் இருந்தவனுக்குச் சிரிப்பு வரப் பார்த்தது.

‘என்ன? என்ன? மரியாதையா பேச தெரியாது?’ ஆதவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு கடுப்படித்தான்.

‘தெரியாது … நீங்க கத்துக் கொடுங்க…’ நொடித்தாள்.

‘என்னாச்சு? கல்யாணத்துக்குப் போக வேண்டியதுதானே?’

‘முடியாது, போக மாட்டேன்.’

‘டேய் நான் சொல்றேன்ல கேளு’

‘நீங்க சொல்லுறதால தான் இனி போக மாட்டேன்.’

‘ஏ அகி’

‘மாட்டேன்.’

‘ப்ளீஸ்.’

‘மாட்டவே மாட்டேன்… ஞாயிற்றுக் கிழமை எனக்கு எங்கேயும் வெளியே போகப் பிடிக்காது. நான் போகவே மாட்டேன் … நீங்க ரொம்பப் பேசினா நான் உங்க கிட்டேயும் பேசவே மாட்டேன்.’

எதிரில் இருந்தவன் இவளிடம் எப்படிப் பேசுவது? எனப் புரியாமல் ஆஃப் ஆனான்.

‘சரி நான் தூங்க போறேன்…’ அம்மாவிடம் பேசி இன்னும் பிரச்சனையைப் பெரிதாக்காமலிருக்க அங்கேயே அலைபேசியைத் துண்டித்து விட்டு எஸ்ஸானான்.

மருமகளை முறைத்தவாறே கணவனுடன் புறப்பட்டுச் சென்றார் ராஜி.

அதெப்படி நான் போகலைங்கிறேன் புரிஞ்சுக்காம போ போன்னு சொல்லுறது கோபத்தில் உறங்கி எழுந்தவள் பசிக்கவே காலையிலிருந்த இட்லியை சீனி தொட்டு சாப்பிட்டாள்.

தூங்கி எழுந்ததும் காலை போட்ட சண்டையெல்லாம் மறந்து விட்டிருந்தது. அவளுக்கு இந்த விஷயத்தில் ஞாபக மறதி அதிகம். ஒரு விஷயத்தையே பிடித்துக் கொண்டு தொங்குவதில்லை.

தூங்கி எழுந்ததும் இனிப்பாக எதையும் சாப்பிட்டு விட்டால் மிகவும் உற்சாகமாகி விடுவாள். இப்போது இட்லியும் சீனியும் உள்ளே போய் அவள் கண்கள், மனம் எல்லாம் புத்துணர்வடைந்து விழித்திருக்கச் சூடாகக் காஃபி ஒரு கப் சுவைத்து முடித்ததில் பரபர சுறுசுறு அகிலா திரும்பி இருந்தாள்.

அலைபேசியில் வைத்த ரிமைண்டர் ஞாபகப் படுத்த கணவனுக்கு அழைத்தாள். மறுபடியும் மனதின் கள்ளத்தனம் சூழ அவனிடம் சற்று முன்பு வாயடித்ததை மறந்து திணறினாள். தன்னால் அவன் தூக்கம் கெட்டுவிடுமோ(!) எனும் தயக்கம் ஒரு பக்கம்.

எடுத்ததும் அவளுக்காகத் தன்மையாய் ஒலித்த ‘சொல்லும்மா’ என்ற அவனது கரகரக் குரலில் உள்ளம் படபடக்க ஆரம்பித்தது. எதையோ உளறிக் கொட்டவும் எதிர்முனையில் அவனது ப்ளாக்பெர்ரியின் இடைவிடாத ரிங்க் டோன் கேட்டதும் ஒரு பக்கம் தன் கணவனைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்யும் அவனது அலுவலகத்தினர் மீது கோபமாய் வந்து தொலைத்தாலும், இன்னொரு பக்கம் அவன் அவளைச் செய்தி அனுப்ப சொல்லி இவளது அழைப்பை துண்டித்ததும் ‘ஷப்பா’ என ஆசுவாசமானாள்.

அவனுக்கு அவசர அவசரமாய் மாமனார் மாமியார் திருமண விழாவைக் குறித்த தன்னுடைய திட்டங்களை விவரித்தவள் செய்திகள் பகிர்ந்ததோடு ஆசுவாசமானாள்.

மறுபடி சமையலறை சென்றவள் கோபத்தில் இருக்கும் தன் மாமியாரை சமாதானப் படுத்த என்ன செய்யலாம்? என்று யோசித்துக் குலாப் ஜாமூன் உருட்ட ஆரம்பித்தாள்.

சீனிப் பாகை காய்ச்சி அடுத்த அடுப்பில் எண்ணை பாத்திரத்தை வைக்க அவள் அலைபேசி இசைத்தது.

‘இப்போ யாராம்?’

இரண்டு அடுப்புகளையும் அணைத்தவள் கையைத் துடைத்துக் கொண்டு அலைபேசியை எடுக்க அடப்பாவி வீடியோ கால் அதுவும் என் அருமை புருஷன்கிட்டே இருந்து… நான் இன்னிக்கு தூங்கி எழுந்து சரியா மூஞ்சி கூடக் கழுவலியே? சரி நமக்குச் சாப்பாடு தான் முக்கியம். ஆனா, தலை கூட இன்னும் உருப்படியா வாரலையே? அழைப்பை ஏற்க தயங்கி திகைத்தாள்.

ஆதவனின் அழைப்பு இவள் எடுக்காததால் ஒரு முறை தானாகவே துண்டித்து மறுபடியும் வர தயக்கத்துடனே அதனை ஏற்றாள். இரண்டு வாரங்கள் கழித்து மனைவியின் அந்தக் கோலிக் குண்டு கண்களைக் கண்டவன் முகம் மகிழ்ச்சியால் விரிய இவளோ சிரிக்கவா? வேண்டாமா? தன்னை வசீகரமாய்ப் பார்க்கின்றவனை விழி நிமிர்ந்து பார்க்கவா வேண்டாமா? நாம் அழகாக இல்லையே? எனத் தடுமாறி நின்றாள்.

‘ஏ அகி, என்ன செஞ்சுட்டு இருக்கிற?’

அவனது உற்சாகத்தில் அவளுக்கு அது கேலியாகத் தெரிய, ‘குலாப் ஜாமூன்’ என மெலிந்த குரலில் சொல்ல அவன் இன்னமுமாய்ப் பெரிதாய் சிரித்தான். அவனுக்குத் தன் மனைவியை வெகு நாள் கழித்துக் கண்ட உவப்பு. அவளது தோற்றமெல்லாம் மனதில் பதியவில்லை.

‘எனக்கு குலாப் ஜாமூன்?’

‘நீங்க வாங்க, செஞ்சு தரேன்.’

‘என்னாச்சு, என் மேல கோபமா?’

அவனது விழிகளை அவளால் நேராகப் பார்க்கவே முடியவில்லை. என்ன இது இப்படிப் பார்க்கிறானே?

‘இல்லையே’ அதே மெலிந்த குரல்.

அதைத் தொடர்ந்து தன் பெற்றோர்களின் திருமண விழா குறித்து இருவர் பேசி முடித்தே அழைப்பை துண்டித்தான்.

அன்றிலிருந்து ஒரு வாரம் முடிய ஆதவனுக்கு ஒரே சிந்தனை தான். அகிலாவுக்கு என்னவாயிற்று? எதனால் அவள் என்னிடம் சரிவர பேசவில்லை? அவளுக்கு என்னை அவ்வளவாகப் பிடித்தமில்லையோ?

குழம்பியவாறே இந்தியா புறப்பட்டு வீட்டை அடைந்தவன் நள்ளிரவில் தனக்காகக் கதவை திறக்கவும் அகிலா வரவில்லை அம்மா தான் வந்து திறந்ததைக் கண்டவன் வெகுவாக மனம் சுணங்கினான்.

ஏன் அகிலா? உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? அவன் மனம் புலம்பி சோர்ந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here