உள்ளம் உந்தன் வசம்_16_ஜான்சி

0
318

அத்தியாயம் 16

அதே நாள் (ஞாயிற்றுக் கிழமை) அகிலாவிடம் வீடியோ கால் பேசியதில் இருந்தே ஆதவனுக்கு ‘அகிலாவுக்கு என்னவாயிற்று? எதனால் அவள் என்னிடம் சரிவரப் பேசவில்லை? அவளுக்கு என்னை அவ்வளவாகப் பிடித்தமில்லையோ? எனும் அதே சிந்தனைகள் தான்.

ஆதவனின் மனம் அதே புலம்பலோடு மீதி நாளையும் தொடர, அதினின்று விடுபடுவதற்காகக் காலை உணவு உண்ட பின்னர்த் தன்னுடைய மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முனைந்தான். அடுத்த நாள் திங்கள் கிழமை காலையில் தனது அலுவலகத்தினரோடு கான்ஃபெரன்ஸ் கால் ஏற்பாடு செய்யப் பட்டிருக்க அதற்காகத் தயாரிக்க வேண்டிய டாகுமெண்டுகளுக்கான வேலைகளில் இறங்கினான்.

அகிலாவுக்கோ கணவன் அலைபேசியை வைத்த பின்னரே வெகு நேரம் மூச்சு விடாதது போலத் தோன்றி அடக்கி வைத்திருந்த மூச்சு பெருமூச்சாய் எழுந்தது. ஆதவனின் பார்வைகள் உள்ளுக்குள் குளிரையும், வெம்மையையும் ஒரே நேரம் தந்துச் சென்றன.

திருமணமான நாள் முதலாக அவனோடு அவள் சேர்ந்து கழித்த சொற்ப நாட்களில் அவளை அவன் வெகுவாய் கவனித்துக் கொள்வான்தான் ஆனால், இந்தப் பார்வைகள் அவளிடம் சொன்னதென்ன?

அச்சோ அதை எண்ணிய போதே முற்காலச் சினிமா நடிகைகளுக்குத்தான் இந்த வெட்கம் என்பதெல்லாம் வரும். நாமெல்லாம் இக்காலப் பெண்கள் நமக்கு அதெல்லாம் ஸ்டாக்கில் இல்லை என்று தன்னுடைய தோழிகளிடம் சொன்னதற்கு மாறாக இப்பொழுது அது எனக்கு அது அதுதான் அந்த வெட்கம் வந்து தொலைத்து விட்டதே?

அவள் அவனது பார்வையை, பேச்சுக்களை எண்ணி எண்ணி, தான் உருட்டி வைத்திருந்த குலாப் ஜாமூன் உருண்டைகளை மறந்து, ஏன் தன் உலகத்தையே மறந்து நட்ட நடுச் சமையலறையில் தன் முகத்தை மூடிக் கொண்டிருக்க, அவளது தோளை யாரோ சுரண்டுவது போல இருந்தது.

அகிலா திடுக்கிட்டு, ‘ஐயோ, அதற்குள்ளாகவா ஆதவன் நேரில் வந்துவிட்டான்?’ எனத் தன் முகத்திலிருந்து கைகளைப் பதட்டமாக எடுத்துப் பார்த்தாள். ஆதவன் அல்ல ஆதவனைப் பெற்ற மகராசி அவள் எதிரில் நிற்க கண்டாள். மாமியாரைக் கண்டதும் தன் நாக்கை கடித்துக் கொண்டு தனக்கே கொட்டு வைத்துக் கொண்டு அசடு வழிந்து நின்றாள்.

மருமகளைப் பார்த்து ராஜிக்கு என்ன புரிந்ததோ? … கண்களால் சமையலறையில் சுற்றி இருப்பதைக் காண்பித்து ‘என்ன?’ என்று கேட்டார். அவளோ அவர் கேட்டதற்குப் பதில் சொல்லாமல்,

சட்டென்று மாமியாரை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தவள்.

‘ப்ளீஸ் என் கிட்ட கோபப்படாதீங்க அத்தை. அப்ப எனக்குக் கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. அதனால தான் உங்க கூட வரலை. அடுத்தத் தடவை நாம போகலாம். சரியா?’ எனக் கொஞ்சினாள்.

‘நீ எல்லாம் என் கூட வருவியா? உன் வீட்டுக்காரன் கூடன்னா போவ?’ கோபத்தில் வெடுவெடுத்தவரிடம் சமாதானமாக வேண்டி, ஈ யெனப் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றாள்.

மதிய சாப்பாட்டுப் பாத்திரங்களைத் திறந்து, அது குறையாமல் இருப்பதைப் பார்த்து,

‘இன்னுமா நீ சாப்பிடலை?’

‘இட்லி சாப்பிட்டுட்டேன் அத்தை.’

‘அதென்ன அடுப்பில?’

‘குலாப் ஜாமூன் … உங்களுக்காகத்தான்.’

‘அப்படியெல்லாம் இனிப்பு செஞ்சு ஈஸியா என்னைத் தாஜா செய்ய முடியாது, நான் உன் கூட ரொம்பக் கோபமா இருக்கிறேன்’ திரும்பி நின்றவர் முகத்தில் முறுவல் வந்து அமர்ந்தது.

‘அப்படின்னா என்ன செய்யட்டும் சொல்லுங்க அத்தை? இப்ப செஞ்சுடறேன்.’

‘ம்ஹீம் ஒன்னும் வேண்டாம்.’

‘புலாவ்?… பிரியாணி?, பாவ் பாஜி?’ மருமகள் ஒவ்வொன்றாய் அடுக்கிய வேகத்தில் சிரித்து விட்டிருந்தார்.

மாமியார் மன நிலை மாறி விட்டதென அறிந்துக் கொண்டவள்,

‘நானும் தான் உங்க கிட்ட கோபமா இருக்கேன், நீங்க இன்னும் என்னைச் சமாதானப் படுத்தலை’

இப்போது அவளது முறை எனக் கோவித்துக் கொண்டாள்.

‘உனக்கென்ன கோபம்?’

‘அதென்ன நம்ம இரெண்டு பேருக்குள்ள பிரச்சனைனா உங்க மகன் கிட்ட போட்டுக் கொடுக்கிறது? இட்ஸ் ரிடிகுலஸ்… நான் அவங்க சொன்னதும் பயந்துடுவேனோ?’ மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்ள…

‘அப்படின்னா என் பேச்சையும் கேட்க மாட்ட? என் பையன் பேச்சையும் கேட்க மாட்ட?’

ஆமா அத்தை, நான் எங்க மாமியார் மாதிரி

எங்க போனாலும் கேட் போடுறாளே என்றவராகச் சமரசத்திற்கு வந்தார்.

‘சரி சரி நாம ரெண்டு பேரும் முதல் முறையா சண்டை போட்டிருக்கிறோம். அதனால குலாப் ஜாமூன் ஆளுக்குப் பாதிப் பாதிச் சாப்பிட்டுச் சமாதானம் ஆகலாம்’ என்றவராக அடுப்பை பற்ற வைக்க,

சமையலறை வாசலில் இருந்து இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குடும்பத் தலைவர் கலவரமாக, ‘அப்ப எனக்குக் குலாப் ஜாமூன்?’ எனக் கேட்டார்.

உங்களுக்கு அத்தை அவங்க பங்கிலருந்து தருவாங்க மாமா…

‘அதெல்லாம் தர முடியாது வீட்டில இனி கம்யூனிசம் தான், ‘ உழைப்பவனுக்குத் தான் உண்ணும் அதிகாரம்’ மருமக குலாப் ஜாமூனுக்கு உருட்டி வச்சு, சீனிப் பாகும் ரெடியா வச்சிருக்கா. நான் பொரிச்சு போட போறேன். அதனால நாங்க இரண்டு பேர் உழைச்சு இரண்டு பேர் மட்டும் சாப்பிடப் போறோம்.

அதைக் கேட்டவள் கெக்கே பிக்கேவெனச் சிரித்து வைத்தாள். மாமனாரை மாமியாரை கலாய்த்ததில் அவளுக்கு அவ்வளவு குஷி.

‘அப்படியே ஏதாச்சும் குட்டியா வேலை இருந்தா தாங்க தலைவிகளே எனக்கும் குலாப் ஜாமூன்ல கொஞ்சமாவது பங்கு கொடுங்க’,

அவர் கூறிய விதத்தில் மாமியாரும் மருமகளும் சிரிக்க, மூவரும் மாற்றி மாற்றிப் பேசி சமையலறை அங்குக் கலகலத்துக் கொண்டு இருந்தது.

இரவில் ஆதவனின் நினைவு வர மறுபடி அவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது. தன்னால் தன்னவன் தூக்கம் தொலைத்து இருப்பதை அறியாதவளாய் அவன் நினைவிலேயே சுகமாய்த் தூங்கிப் போனாள்.

அடுத்த ஐந்து நாட்களில் வேலையை முடித்து விட்டு ஆதவன் தாயகம் புறப்பட்டான். வாரம் முழுக்க மனைவியோடு அலைபேசியில் பேசி இருந்தாலும், அதில் அவளது வெட்கமும் தயக்கமுமான பேச்சை இவன் சரியாக உணர்ந்து கொள்ள இயலவில்லை. முன் போல அவள் அவனிடம் கலகலவென்று சாதாரணமாகப் பேச மாட்டேன்கிறாளே? என்பதே அவனது பெரும் மனக்குறையாக இருந்தது.

வழக்கமாகச் செய்யாததை எல்லாம் இம்முறை செய்தான். மனைவிக்காகச் சில காஸ்மெடிக்ஸ் வாங்கினான்.வழக்கத்தை விடவும் அதிகமாய்ச் சாக்லேட்டுகள் வாங்கினான். திருமணத்திற்குப் பின்னர் உறவுகளும் கூடி விட்டன அல்லவா?

அலுவலகத்தினர் ஆதவனிடம் ‘நாளையே புறப்பட வேண்டுமானால் டைரெக்ட் ஃப்ளைட் இல்லை. இரெண்டு நாள் தாமதிக்கிறாயா?’ எனக் கேட்டதற்குச் சம்மதிக்காமல் தான் உடனே சென்றாக வேண்டும் என அவன் சொன்னதன் காரணமாகப் பயணத்தின் இடையில் இரெண்டு ஸ்டாப் ஓவர் (மொத்தம் மூன்று விமானங்கள் பயணித்து வரவேண்டிய சூழல்) இருக்க எதிர்பார்த்ததை விடவும் அவனுக்கு நேரமாகி விட்டிருந்தது. களைப்பில் இடை இடையே தூங்கி விட்டிருந்தானே தவிர ஏதோ ஒரு தவிப்பிலேயே அவனது நேரம் கழிந்தது. ஏராளமான எதிர்பார்ப்புகள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

சென்னை விமான நிலையம்

இரவு மணி இரண்டை தாண்டி விட்டிருக்க, விமானம் தரையிறங்கவும் இனி இடுப்பு பெல்டுகளைத் தளர்த்திக் கொள்ளலாம். மொபைலை உபயோகித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வரவும் அனைவருடைய அலைபேசிகளும் நெட்வர்க் கிடைக்க உயிர்த்தன.

அதே விமானத்தில் பயணித்த பெரும்பாலோனோருக்கு வீட்டிலிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. அவனும் தன் மொபைலை ஃப்ளைட் மோட் ( flight mode) லிருந்து மாற்றினான்.

மற்றவர்களுக்கு அலைபேசி அழைப்புக்கள் வருவது போலத் தனக்கும் அகிலாவிடம் இருந்து அழைப்பு வரவேண்டும் என அவன் எதிர்பார்த்து இருந்தான். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க, அமைதியாக இருந்த தன் அலைபேசியை முறைத்த வண்ணம் தன் காற்சட்டை பைக்குள் வைத்தான். திடீரென ஏதோ வைப்ரேஷன் வர, அகிலா தான் அழைத்திருப்பாளோ? என்று எண்ணியவனாக, சட்டென்று மொபைலை எடுத்துப் பார்த்தான். அவனை வெறுப்பேற்றுவதற்கு என்றே ஏதோ ஒரு வங்கியின் தகவல் வந்திருந்தது கோபத்தில் மறுபடியும் காற்சட்டை பையில் அலைபேசியை வைத்தவன் தன்னுடைய பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

தன் மனப் புழுக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்து சொல்லி விடைக் கொடுத்துக் கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ்களைக் கண்டு கொள்ளாமல் முன்னே நகர்ந்தான். சற்று காத்திருப்பிற்குப் பின்னர் அவனது மற்ற லக்கேஜ்கள் வந்து சேர, அவற்றை இழுத்துக் கொண்டு ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தவன் வாகனத்திற்காகப் பதிவு செய்தான். அடுத்த ஐந்தே நிமிடத்தில் பதிவு செய்த வண்ணம் அவன் முன்னே கார் வந்து நின்றது.

அவன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது மணி அதிகாலை மூன்றரையைத் தொட்டுக் கொண்டு இருந்தது. தன் லக்கேஜ்களோடு கதவை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். சிறிது நேரத்தில் யாரோ கதவருகே நடந்து வருகின்ற சப்தமும், கதவு திறக்கப் படும் சப்தமும் கேட்டது.

அகிலாவாகத்தான் இருக்கும் எனக் கதவு திறக்கும் வரை அவளைக் காணத் துடித்த கண்களைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான்.

‘வா ஆதவா? இன்னிக்கு ஃப்ளைட் லேட் ஆகிடுச்சு போல…’ கதவை திறந்தவாறு ராஜி கேட்க ஆதவனுக்கு மனம் சுணங்கியே போனது.

தாய்க்கு ஆம் என்று பதில் சொன்னவன் வீட்டினுள்ளே வந்து தன் பெட்டிகளை, பைகளை ஓரமாக வைத்து நிமிர்ந்தான். மனதிற்குள்ளாகவோ,

‘ஏன் அகிலா லேட்டானதும் என்னாச்சுன்னு கேட்க எனக்கு ஃபோன் தான் செய்யலை, நான் வர்றேன்னு தெரிந்தும் கதவை கூடத் திறக்க நீ ஏன் வரவில்லை. உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா?’ அவன் மனம் புலம்பி சோர்ந்தது.

கதவை பூட்டியவராக ராஜி அவனிடம்,

‘அதான் லேட்டாகும்னு முன்னாடியே தெரியுது இல்ல, நாங்க ஃபோன் செய்தா தான் உனக்குப் பிடிக்காது. உன் பொண்டாட்டிக்காவது ஏர்போர்ட் வந்து சேர்ந்ததும் ஃபோன் செஞ்சு சொல்லறதுக்கு என்னவாம்? கல்யாணம் ஆகிடுச்சுப் பொறுப்பு வரும்னு பார்த்தா எங்கே?’ கோபத்தில் அவனைத் திட்டிக் கொண்டே அவர் செல்ல அப்போதுதான் அவன் முன்பு செய்த அழும்புகள் எல்லாம் மண்டைக்குள் வலம் வந்தன.

‘என்ன நீங்க எப்ப பார்த்தாலும் எப்ப வருவ எப்ப வருவ? ன்னு ஃபோன் செய்யறது? நான் என்ன சின்னப் பிள்ளையா? சும்மா நொய்யு நொய்யுன்னு வீட்டிலருந்து ஃபோன் செய்யக் கூடாது சொல்லிட்டேன்’ எனப் பெற்றோரிடம் முன்பு எப்போதோ கண்டிப்பாகச் சொல்லி வைத்திருந்தது உரைத்தது.

இதைத்தான் முன்வினை முன்வினை என்று சொல்லுவார்களோ?

‘அகிலா தூங்கிட்டியா என்ன? இங்கே வா …’

முன்னறையில் நிற்கும் மகனைக் கண்டு கொள்ளாமல், மருமகளை அழைத்தவர் தங்கள் அறைக்குச் சென்று விட்டார். அவனது அறையில் இருந்து அவன் மனைவி அவன் முன்னே இரவுடையில் பளீரெனத் தரிசனமானாள். தூக்கம் வராமலிருக்க அப்போதுதான் கண்களைக் கழுவி வந்திருப்பாள் போலும். அவன் வந்த சப்தம் கேட்டதும் அவசரமாய் வந்தவள் கையிலிருந்த துவாலையால் முகத்தால் இன்னும் நன்கு துடைத்து, அவனைக் கண்டதும் பற்கள் மின்ன புன்னகைத்தாள்.

இத்தனை மணி நேர எதிர்பார்ப்பின் விடையாய் அகிலா அவன் கண்களின் முன் வந்ததும் சில நொடிகள் அவளையே பார்த்தவாறு நின்று விட்டான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here