உள்ளம் உந்தன் வசம்_18_ஜான்சி (நிறைவு)

0
342

அத்தியாயம் 18

காதல் பொழியும் இரவு துணைக்கு இயற்கையும் இருக்க பெற்றோர் திருமண நாள் கொண்டாட்டத்தை இனிதே நிறைவு செய்து மனைவியை ஸ்விட்சர்லாந்திற்கு கடத்தி வந்திருந்தான் ஆதவன். பேச்சுவாக்கில்

‘ஏய் அகி அன்னிக்கு வீடியோ காலில் நீ என் கிட்ட ஒழுங்காகவே பேசவில்லை’பல நாட்கள் முன்னான தன் ஆதங்கத்தைச் சொல்ல,

‘நான் அன்னிக்கு என்னமோ மாதிரி இருந்தேன். முகம் கூடக் கழுவவில்லை, தலைமுடியும் வாரவில்லை எனக்கு உங்களுக்கு முகம் காட்டவே கூச்சமா போச்சு அதனாலத்தான்’ சிரித்தாள்.

‘அப்படி ஒன்னும் இல்லையே அன்றைக்கு அழகா தான்டி இருந்த… எவ்வளவு நாளா நீ எனக்கு எப்போ வீடியோ கால் செய்வேன்னு ஆசைப்பட்டு எதிர்பார்த்து காத்திருந்து இவ செய்ய மாட்டா நாம செய்யலாம்னு அன்றைக்கு நான் வீடியோ கால் செய்தேன் தெரியுமா? நீ என் கிட்ட முன் போலப் பேசவில்லை என்றதும் மனசுக்குக் கஷ்டமா போச்சு.

த்சோ என்றவள் அவன் மன வருத்தம் போக்க சில முத்தங்களைக் கொடுத்தாள்…

‘இதிலருந்து என்ன தெரியுதுன்னா?’

‘ம்ம் என்ன தெரியுது?’ மடியில் அமர்ந்திருந்தவளை தன் தலையால் நெற்றியில் முட்டியவாறு கேட்டான்.

‘ஒருத்தங்களை மனசுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தா அவங்க மொக்கையா இருந்தாலும் மத்தவங்க கண்ணுக்கு அழகா தெரிவாங்களாம்…’

‘இதில் மத்தவங்க யாரு?’ ஆதவன் கேட்க

‘நீங்க தான்’ எனவும் ‘உண்மையிலேயே அன்றைக்கு நீ ரொம்ப அழகா தான் இருந்த அகி’ என்றவன் சிரித்தவண்ணம்

‘இதிலருந்து இன்னொரு விஷயமும் தெரிய வருது’ என்று தொடர்ந்தான்.

‘ஒருத்தங்க வழக்கமா எப்பவும் தன்னோட தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கா விட்டாலும் கூட, தனக்கு ரொம்பப் பிடிச்சவங்க தன்னைப் பார்க்கிறப்போ தான் ரொம்ப அழகா இருக்கணும்னு சிரத்தை எடுத்துக்குவாங்களாம்.’

‘இது நான் தானே?’

‘நீயேதான் வாலு முத நாள் பார்த்தப்ப இரெட்டை சடையோட சாதாரணமா தானே என் கிட்டே பேசின, அன்னிக்கும் முகம் கழுவி இருக்கவில்லை தலைமுடி வாரி இருக்கவில்லை. இப்ப மட்டும் என் கூடப் பேசும் முன்னே திடீர்னு உனக்குக் கவலை எதுக்கு வந்துச்சாம்?’ அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்தான்.

‘உன்னை முதல் முறை பார்த்ததில் இருந்து பிடிச்சிருந்தது ஆனால் இப்ப கல்யாணத்துக்கு அப்புறமா எக்கச்சக்கமா பிடிக்குது ஏன்னு சொல்லு?’

‘ம்ம்…’

‘நான் தான் இத்தனை நாளா இந்த வீட்டை நடத்துறேன்னு எனக்கொரு கர்வம் இருந்தது. அத்தனையும் நீ வந்த நாளில் இருந்து உடைச்சுட்டே இருக்கத் தெரியுமா?’

தான் எதுவும் அதிகப் பிரசங்கித்தனமாகச் செய்து விட்டோமோ என்று எண்ணியவளாக மிரண்டு அவனைப் பார்த்தாள்.

‘டேய் என்ன பார்வை இது? உன்னைக் குற்றம் சாட்டலை குட்டிம்மா… பாராட்ட விதம் அப்படி தோணிடுச்சோ?’ முறுவலித்தான்.

‘நான் வேணும்னா வெளியுலகத்தில ராஜாவாக இருக்கலாம். ஆனால், வீட்டில் உறவுகளைப் பேணுவதில் எல்லோர் மனம் சுணங்காமல் நடந்து கொள்வதில், ஒவ்வொன்னா யோசிச்சுச் செயல்படுத்துவதில், ஒவ்வொரு பேச்சிலும், செய்கையிலும் என்னை எவ்வளவு பிரமிக்க வைச்சுருக்க…’

விழிவிரித்தவளாய் அவனைப் பார்த்திருக்க அவள் இமைகளில் முத்தமிட்டான்.

‘உன் பக்கத்தில் இருந்தாலே ஒரு அமைதி, ஒரு குதூகலம் உன்னை யூ எஸ் போன அன்னிலருந்தே எவ்வளவு தேடுனேன் தெரியுமா?’ அவனது அணைப்பு இறுகியது. குனிந்து கழுத்தில் முத்தமிட்டான்.

‘நீ என்னைக் கலாய்ச்சப்பவும் கூட எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.’

நாக்கை கடித்தவண்ணம் அவனைப் பார்த்தாள்.

‘அந்தக் கவிதா விஷயம் நிர்மலா கிட்ட பேசிட்டு இருந்தியே? நான் அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டேன்னு’ கலகலவெனச் சிரிக்க வெட்கத்தில் அவள் அவனுள் புதைந்தாள்.

‘ஒன்னா நம்பர் கேடி நீ, எமகாதகி… என்னவெல்லாம் பேசின, என்னை டேமேஜ் செய்யறதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம் ம்ம்…’

தன்னை சீண்டி சீண்டி கேலி புரிகின்றவனை இரசித்தவாறு இருந்தாள் அவள்.

பல மாதங்கள் கடந்திருந்தன.

ஆதவன் அதற்குப் பின்னர் யூ எஸ் மருத்துவமனைகளின் Outsourcing ஒப்பந்தங்கள் குறித்த இரண்டு ப்ரொஜெக்டுகளை வெற்றிகரமாக முடித்திருந்தான். இம்முறை அவன் சென்று இருந்தது நியூயார்க் நகரம். அவர்கள் அலுவலகத்தின் ஒப்பந்தம் அங்கிருந்த பிரபலமான ஒரு மருத்துவமனையோடு அமையவிருந்தது.

என்னதான் ஆசைக் கொண்டாலும் தனது வேலைக்கான பயணத்தில் மனைவியை அழைத்து செல்வது அவனுக்கு சாத்தியப்பட்டு இருக்கவில்லை. ஒவ்வொரு பிரிவிலும் அதே காதல், அதே நேசம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு இருந்ததே ஒழிய குறையவில்லை.

தன் புதிய ப்ரோஜெக்ட் வேலையை முடித்து அன்று மதியம்தான் அவன் யூ எஸ் ஸிலிருந்து திரும்பி இருந்தான். வந்ததும் சில மணி நேர ஓய்விற்குப் பின்னர் வேலையாக மறுபடி அலுவலகம் சென்று விட்டிருந்தான்.

தான் திரும்ப வரும் நேரம் மனைவியும் அலுவலகத்திலிருந்து திரும்பி இருப்பாள் எனும் மனக் கணக்கு இரகசியமாய் உள்ளே ஓடிக் கொண்டு இருந்தது.அப்படியும் கூட அவன் வீட்டிற்கு திரும்ப வந்து சேர எட்டு மணி ஆகி விட்டிருந்தது.

எத்தனை தான் அலைபேசியில் பேசினாலும், நேரில் பேசுவது போல, கட்டி அணைப்பது போல வருமா? அவசரமாய்க் காரை பார்க் செய்து மனைவியைக் காண கண் பூத்தவனாக வந்தவன் ஹாலில் இருந்த விருந்தினரை பார்த்து தேங்கி நின்றான்.

வெகு சில வருடங்களுக்குப் பின்னர் அந்த உறவினர் வருகை தந்திருந்தார். சில வருடங்கள் வெளி நாட்டில் மகனோடு இருந்தவர் தாய் நாட்டிற்குத் திரும்பி இருந்தார் போலும்.

‘ஆதவா வா வா’

‘வாங்க பெரியம்மா , நல்லா இருக்கீங்களா?’

‘நல்லா இருக்கேன் ராஜா, நல்லா இருக்கியா?’

புன்னகைத்துத் தலையசைத்தான்.

‘நீ போம்மா நான் டீ கொண்டு வரேன்’ என்று மகனை அங்கிருந்து நகர்த்திய ராஜி விருந்தினரிடம்,

‘ஒரு மாசம் கழிச்சு இன்னிக்கு மதியம்தான் வந்தான்கா’ என்றார்.

‘ஓ, உன் பொண்டாட்டியை இப்பதான் பார்த்தேன், அவளும் வேலைக்குப் போறா போல, பரவால்ல இந்தக் காலத்துல இரெண்டு பேரும் வேலைக்குப் போனா நல்லது தான். இரண்டு வருமானம்….’

ஆதவன் காதில் அவர் குரல் தேய்ந்து மறைந்துக் கொண்டு இருந்தது, அவன் தான் மனைவி வந்து விட்டாள் எனத் தெரிந்ததும் கையால் தாய்க்கு சைகை காட்டியவாறே தன் அறைக்கு விரைந்து விட்டானே.

அவனைக் கண்டதும் ஓய்வாய் அமர்ந்து இருந்த அகிலா எழுந்து நின்றாள், ‘நான் டீ கொண்டு வரேன் ஆதவ்’

‘அம்மாக்கிட்ட கொண்டு வரச் சொல்லிருக்கேன், நீ சும்மா இரு’ என்றவன் குனிந்து அவள் தலையோடு தலையை முட்டினான்.

அவளும் அவன் நெற்றியில் தன் நெற்றியை பதிக்க முயல,

இதுக்கு மேல குனிய முடியலைடி என்றவனாக அவளைத் தன் உயரத்திற்கு அவன் தூக்கிக் கொண்டான்.

இந்த ஒரு விஷயம் தான் என்றவனாக விஷமப் பார்வையோடு அவள் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு நிமிர, இன்னும் வாகாய் அவனது பிடியில் இருந்தவள் கன்னத்தை வருடினான்.

வெளியில் இன்னும் இன்னும் ஏதோ பேச்சுக்கள் நடைபெற,

‘ஆனாலும் ராஜி நம்ம ஆதவன் இருக்கிற உயரத்துக்கு நீ பொருத்தமா பொண்ணு பார்த்திருக்கக் கூடாதா? இப்படியா நீ பொண்ணு பார்ப்ப? கொஞ்சம் கூடச் சரியா இல்லை…’ எனத் தொடர

அதைக் கேட்ட அகிலா தன் வாயில் கை வைத்து மறைக்க எண்ணியும் முடியாமல் க்ளுக்கெனச் சிரித்து விட்டிருந்தாள். ஆதவனுக்கும் அவளுடைய சிரிப்புத் தொற்றிக் கொண்டது.

உணர்வுகள் இணைந்த
அன்பின் உறவில்

உயரங்கள் தடையாகுமோ?

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here