நீயே என் இதய தேவதை_பாரதி_24

0
737
Neeye En Idhaya Devathai

சில நாட்களுக்கு பிறகு மிக அழகானதொரு விடியலில் உற்சாகமாய்
எழுந்த அன்பு, சிவகாமி சொல்லிக்கொண்டிருந்த வேலைகளை கர்ம சிரத்தையாய் செய்து கொண்டிருந்தான். இன்னும் சில மணநேரத்தில் இந்த உற்சாகம் மொத்தமாய் கருகப் போவது தெரியாமல்.திருமணமாகி  மூன்று மாதம் முடிந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும் விழா ஏற்பாடு செய்திருந்தான். சாதாரணமாக மிக எளிமையாய் நடக்கும் விழா தான்.ஆனால் திருமணம்  மிக எளிமையாக நடந்தேறியதால் இந்த விழாவிற்கு தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை செய்யும் சிறியர்களையும் அழைத்திருந்தான். அவர்கள் ஹோட்டலில் இருந்த வந்திறங்கிய உணவுகளை எடுத்துவைக்க அவனுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.அவனது வீட்டை சற்று அலங்கரித்து கொண்டிருந்தனர்.

அன்பு….சங்கீதா ரெடி ஆயிட்டாளா….?

குளிச்சிட்டிருந்தா ….ம்மா.

டேய் நீ ஏண்டா நல்ல நாள் அதுவுமா இந்த சட்டை போட்ருக்க.அடி வாங்கப் போற…..ஒழுங்கா போய் மாத்திட்டு வா.

ஏன் இதுக்கென்ன நல்லாத்தான…. இருக்கு.?

நல்ல நாள் அதுவுமா கருப்புச்சட்டை. விதண்டாவாதம் பண்ணாம போய் மாத்திட்டு வா மொத.

சரி சரி…. போறன் இரு.என சலித்துக் கொண்டே அறைக்குப்போனவன் “கீத்து….லேட் ஆகுதுடா சீக்கிரம்….”என குளியலறை நோக்கி குரல் கொடுத்துவிட்டு தனது மேல்சட்டையை மாற்றிக்கொண்டு  சீட்டியடித்தபடியே  வெளியேறினான்.அறையின் மேஜைமேல் எழுதப்பட்ட காகிதம் ஒன்று படபடத்து கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. அதிலிருந்த எழுத்துகள் வெறும் வார்த்தைகள் இல்லை அவனது வாழ்வை மொத்தமாய் தலைகீழாய் புரட்டி போடும் வல்லமை படைத்த சாத்தானின் நாவுகள்.

டேய்….டேய் நம்ம வேலு  தாத்தா பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வந்து வழி தெரியாம முழுச்சிட்டிக்காராம்ண்டா. பாவம் போய் கூட்டிட்டு வாடா கண்ணா….சிவகாமி

டைம் ஆச்சே மா.நான் இங்க இல்லைனா எப்படி …பசங்க கிட்ட பைக் கொடுத்து அனுப்பவா

பசங்க யாரையும் தாத்தாக்கு தெரியாது.பசங்களுக்கும் தாத்தாவை தெரியாது.சங்கீதா வீட்டு ஆளுங்க வரதுக்குள்ள வந்திடலாம்.நீயே  போய்ட்டு  வாடா கண்ணா. என்று கெஞ்ச வேறு வழியின்றி  “சரியான.. இம்சைம்மா உன்னோட ” என்று முனுமுனுத்தப்படி பேருந்து நிலையம் நோக்கி விரைந்தான்.

அவனும் அவரை பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டதால் தேடி பிடிக்க நேரம் ஆகிவிட்டது.அவனாக சென்று குரல் கொடுத்தவுடன் தான் சிவகாமி பையன்தானே நீய்யி….. ரொம்ப நாள் ஆகிடுச்சா அடையாளம் தெரியல ராசா என்று  அவர் தனது கொள்ளுப் பேரனை  கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

ஆஹா….ஏற்கனவே லேட் ஆகிடுச்சா இவர் வேற…. என்று விசனப்பட்டுக் கொண்டவன் ஆமா ஆமா…  அப்புறமா கொஞ்சலாம் வாங்க தாத்தா பங்சனுக்கு டைம் ஆகுது. கெளம்பலாம்.என்று அவரை பைக்கில் உட்காரச் செய்து அழைத்து வந்தான்.

வழிநெடுகிலும் தாத்தா பழைய கதைகளை பேசிக் கொண்டே வந்தார்.கேள்விகளால் துளைத்தெடுத்தார். இவன் பதில் கூறினால் அது  அவர் காதில் சரியாக கேட்கவில்லை. பதில் கிடைக்கும் வரை அவரும் விடுவதாயில்லை.சிவகாமீீ…… ஃபங்சன் முடியட்டும் உனக்கு இருக்கு என்று பல்லைக் கடித்தவன் பைக்கின் வேகத்தை அதிகரித்தான்.

எப்படியோ தாத்தாவை சமாளித்து வீீடு வரை அழைத்து வந்து உள்ளே வர வீடு மயான அமைதி கொண்டிருந்தது.இவன் குழம்பிப் போனான்.

முதலில் அவன் தங்கை சந்தியாவைத்தான்.   எப்போ மா வந்த? சுபி எங்க என கேட்டுக்கொண்டே அவளைப் பாரத்தவனுக்கு  அவளது முகத்தில் இருந்த கலக்கம் இங்கு எதுவோ சரியில்லை என்ற உணர்வைத் தர

கொஞ்சம்  லேட்டாயிடுச்சு. வாங்க மாமா….வாங்க அத்தை என்று அவசரமாக வரவேற்றான். அவர்களோ தலை குனிந்தபடியிருந்தனர்.அவனின் மாமியாரோ குனிந்தபடியே விசும்பிக் கொண்டிருந்தனர்.கண்களை சுழல விட்டால் வீட்டிலிருந்த உறவினர்,நட்புக்கள் கண்கள் அத்தனையும் அவனை பரிதாபத்தோடு எதிர்கொண்டனர்.சங்கீதாவின் பெற்றோர்களுக்கு பரிதாபத்தையும் தாணடிய ஒரு பயம் பதைபதைப்பு இருப்பது போல தோன்றிற்று.

முதலில் இந்த அமைதியை கலைத்தது சந்தியாவின் குரல்

இப்படியே அழுதுக்கிட்டே நின்னா என்ன அர்த்தம்.எங்களுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க என காட்டமாய் கேட்க

…….
ஏய் நீ சின்ன பொண்ணு பேசாம இரு
இத்தனை பெரியவங்க எதுக்கு இருககோம்.நாங்க பேசிக்கிறோம்.நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.என அங்கிருந்த மூத்தப் பெண்மனி ஒருத்தி அதட்ட

நீங்க யாரும் பேசுற மாதிரி தெரியலயே அதான் நான் பேசுறேன்.அண்ணனின் வாழ்க்கை

அன்புவுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.சந்தியாவும் இப்படி பெரியவர்களை எதிர்த்து பேசி பழக்கமில்லாதவள்.

இந்த கூட்டத்தின் ஓரத்தில்  தலையில் கைவைத்தபடி  தரையில் அமர்ந்திருந்த சிவகாமியிடம் போய் நின்றவன் என்னதான் மா நடக்குது இங்க.யாராச்சும் சொல்லுங்க.சங்கீதா எங்க? எனக் கேட்க

அருகிலிருந்த விசாலி அத்தை அந்த கடிதத்தை நீட்டினாள்.

தலையில் இடி விழுந்தது போலென்று சொல்வார்களே அப்படித்தான் இருந்தது அதை வாங்கி படித்தவன் நிலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here