படிகள்_சிறுகதை_ ஜான்சி

4
555

வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல்


பாபு நன்கு ஓங்குதாங்காக வளர்ந்த உருவம் பளீர் சருமம், அளவாக பேசுபவன் சமீபத்தில் ஒரு கல்லூரியில் புட்பால் கோச்சாக வேலைக்கு சேர்ந்திருப்பவன்.


கல்லூரிக்கு புறப்பட்டு நின்றவன் முன்பாக வந்து நின்றாள் மதிமலர்.


“அண்ணா நான் கேட்ட உதவி”


சட்டென்று பாபுவின் வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டது.


வெளியில் ஏதேதோ சப்தங்கள் பாபுவிற்கு என்ன நடக்கின்றதென்றே புரியவில்லை.


“என்னாச்சுன்னா?”


“தெரியலியே, எப்பவும் ஆம்பள பசங்க தங்கியிருக்கிற வீட்டுல வாசலில் நின்னு பேசிட்டு போகணும்னு சொல்லுவேனே, கேட்டிருக்கலாம் இல்லியா? எதுக்கு உள்ள வந்த நீ”


“அண்ணே” ஏதோ தவறென புரிந்து கண்ணீர் உகுத்தாள் மதிமலர்.


“இப்ப இது யார் பார்த்த வேலையோ?”  சலித்துக் கொண்டான். கதவருகே சென்று திறக்கப் பார்த்தான், சப்தம் கொடுத்தான்.
வெளியில் பேச்சு சப்தம் கூடியதே அன்றி குறையவில்லை. சும்மாவா அந்த இடத்தில் சுற்றி முற்றி வாழும் மக்கள் அடுத்தவர் பஞ்சாயத்துக்களில் மூக்கை நுழைப்பதில் திறமை பெற்றவர்கள்.ஆண் பெண்ணோடு பேசுவது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் இமாலயக் குற்றம்.


“இனி கதவு எப்போதுதான் திறக்கும்? இவர்களுக்காக தங்களது வாடகை வீட்டின் கதவை உடைக்கவா முடியும்?” எண்ணி பாபு சோர்ந்த போது கதவின் தாள் நீக்கப்பட்டது.


“டேய் போங்கடா…இங்கின யாரையும் பார்த்தேனோ ஒவ்வொருத்தரையும் தோலை உரிச்சிடுவேன்” மிரட்டியவாறு உள்ளே நுழைந்தவன் நாதன் பாபுவை விட அவன் நிறம், உயரம் சற்று மட்டு.
 இருவரும் ஒரே காரணமாக ஊரை விட்டு வந்து அங்கு வீடெடுத்து தங்கி இருக்கிறார்கள். நாதனும் சமீபத்தில் தான் மற்றொரு பள்ளியில் கோச்சாக சேர்ந்திருந்தான்.


“நேரமாச்சுடா நாதா வரேன்” சரேலென புறப்பட்டு சென்றான் பாபு.
***


“மதி, ஆம்பள புள்ளைங்க இருக்க வீட்டுல உனக்கு என்னடி வேலை?”


சற்று முன்பு தான் தந்தையிடம் அவர் ஆத்திரம் தீரும் மட்டும் அடி வாங்கி கட்டி இருந்தாள். தாயின் கேள்விக்குதேம்பியவாறு,


” அந்த அண்ணன் கிட்ட ஒரு விஷயம் கேட்க வேண்டிருந்துச்சும்மா”


“அன்னிக்கு என்னன்னா 2 பவுன் சங்கிலியை தொலைச்ச, இன்னிக்கு பட்ட பகலில் ஆம்பள இருக்கிற வீட்டுக்குள்ள போய் வெளியிலருந்து எல்லோரும் பூட்டி மானத்த வாங்கிட்டாங்க, முன்ன எப்பவும் இப்படி செய்ய மாட்டியே? இப்ப எல்லாம் என்னடி ஆச்சு உனக்கு?”

அடிப்பட்டு அழுதுக் கொண்டிருந்த மகளை, அவள் வலியை காண முடியாமல் தாயின் கண்களிலும் அருவி பொழிந்தது.


‘நல்ல வேளை அப்பா பர்ஸ்லருந்து ஐநூறு எடுத்தது, அம்மா சர்க்கரை  டப்பாலருந்து அப்பப்ப பத்திருபது களவாண்டது இதெல்லாம் அம்மா கண்டு பிடிக்கலை, அந்த குட்டி குட்டி மோதிரம் இரண்டு காணாம போச்சே அதுவும் தான்’ 


மதிமலரின் மனதிற்குள் ஆசுவாசம்.


ஜன்னலிற்கு அப்பால் மோகன் “உண்மையை சொல்லிவிடாதே” என அவளிடம் கையை காட்டிச் சென்றான்.


அதனை பார்த்த மதிமலருக்கு அவன் குறும்பை நினைத்து பெருமிதம்.

‘மிகவும் திறமை என் மோகனுக்கு? அவன் பேசினா நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கலாமே? பெரிய ஆளா வரப் போறான்’ மனதிற்குள் சிலாகித்தாள்.


‘இந்த சிரமங்கள் எல்லாம் அவர்கள் எதிர்காலத்திற்காகத்தானே? அவனுக்கு படிப்பு ஏறவில்லை. இவள் உதவி செய்து அவன் வியாபாரம் ஆரம்பிப்பதாக இருக்கிறான்.அதன் பின்னர் இவள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து சுகமாக வாழலாம்.’ பட்ட அடிகள் அனைத்தும் மறந்து மனம் மகிழ்வில் ஊஞ்சலாடியது.


‘ இப்போது என்ன கெட்டுப் போயிற்று? வரதட்சணையாக அவளுக்கு  கொடுக்க வேண்டிய நகையை தானே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொடுக்கிறாள், இவர்கள் சம்பாதிப்பது எனக்காகத்தானே? அதை நானாக எடுத்துக் கொண்டால் என்ன தப்பா?’
அலட்டிக் கொள்ளாமல் படுத்து தூங்கினாள்.


வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்தித்த போது மோகன் அவளுக்காக அம்மா சமீபத்தில் வாங்கிய நெக்லஸ் குறித்து விசாரித்துக் கொண்டு இருந்தான். அவன் ஆரம்பிக்க போகும் பிசினஸ் விபரங்களை கேட்ட போதோ அவள் கண்களில் ஆயிரம் கனவுகள், மகிழ்ச்சிகள்.


“என் பொண்டாட்டி, என் வாழ்க்கையை அமைச்சு தரப் போறா என்று நினைக்கிறப்ப எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?”
அவன் அவளது கையை பற்ற அவளுக்கு மெய்சிலிர்த்தது.


“நாளைக்கு பிக்னிக்” என்றாள் காத்துதான் வருது எனும் பாவனையில்…


“நல்லா சுத்திட்டு வா, அந்த பாபு அண்ணா கிட்ட எனக்காக பெரிய பணக்காரர் ஒருத்தர் கிட்ட ரெகமண்ட் செய்ய கேட்டிருந்தேன், அதுதான் இன்னும் முடியலை.” ம்ம் பெருமூச்செறிந்தான்.


“அன்னிக்கு என்னை உள்ள வச்சு பூட்டிட்டாங்க,அப்பா கூட ரொம்ப அடிச்சாஙக” என்றவளின் கண்களினின்று கண்ணீர் வடிந்தது.


“காதல்னா சும்மாவா அடி எல்லாம் வாங்க

வேண்டியும் இருக்கும்” போலியாய் பெருமூச்செறிந்தான்.


“ரொம்ப நேரம் ஸ்கூல் யூனிஃபார்ம்ல இங்கே நிக்க முடியாது…யாராவது பார்த்தா பிரச்சனை” அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தவளிடம் அடுத்து எவ்வாறு பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்.


****
“கவுன்சிலிங்க் எந்த ஃப்ளோர், மதிமலர் மேடம் எங்க இருக்காங்க?”


 ப்யூனிடம் கேட்டவாறு வந்தவள் அந்த பள்ளியின் 4ம் தளத்தில் இருந்த சைக்காலஜிஸ்ட் மதிமலரிடம் தயங்கி தயங்கி வந்தாள்.


“வாம்மா” என்றவள் இப்போது நிமிர்வான தோற்றத்தில் வெகு நேர்த்தியான  சேலையில் கம்பீரமாக இருந்தாள்.


மற்றவர்க்கு கேளாத விதத்தில் ஓர் உரையாடல் நிகழ மதிமலர் குரல் மட்டும் ஒலித்தது.


“ஓ அப்ப என்ன செய்யறதா இருக்க?”


“இந்த காதல் உனக்கு பிடிச்சிருக்கா?”“உன்னுடைய எதிர்கால கனவுகள் என்ன? அதை எப்படி அடையணும்னு யோசிச்சு இருக்கியா?”


….


ஒரு சில குறிப்புகள் சொல்லிக் கொடுத்தவள் “ஒவ்வொரு வயசுக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருக்கு கண்ணா….இப்ப நீங்க படிக்கணும், அதற்கப்புறம் உங்களை நிலை நிறுத்திக்கணும், அதற்கப்புறம் இந்த வாழ்க்கை துணை எனும் விஷயம் வரும்.”


….
“இன்னும் ஐந்து வருடங்கள் போனால் நீங்க காதலிக்க முடியும், ஆனால், இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து இந்த பள்ளியில் வந்து படிக்க முடியுமா? உங்கள் நட்புக்களோடு விளையாட ஆடிப்பாட முடியுமா?”


….
“உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்று முதலில் தீர்மானித்து விட்டு, அதனை இந்த காதல் பாதிக்குமா? பாதிக்காதா? என்று யோசித்து முடிவெடுங்கள் மா”
….


“என்னிடமிருந்து நீங்க பகிர்ந்த தகவல் ஒரு போதும் வெளியே போகாதுடா, எப்ப வேண்டும் என்றாலும், எந்த உதவி தேவை என்றாலும் என்னை வந்து பார்க்கலாம் சரியா?”


அந்த புன்னகையில் தன் மன சஞ்சலம் தீர்ந்தவளாக சிறுமி எழுந்துச் செல்ல மதிமலர் மனதிற்குள் சில சம்பவங்கள் நிழலாடின. மறக்க கூடியவைகளா அவைகள்? 


 தான் அம்மா மற்றும் தன் நகைகளை எடுத்து வைத்துக் கொண்டு இரவு வீட்டை விட்டு வெளியேற எண்ணிய போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டது, இரயில்வே ஸ்டேஷனில் பிடிபட்ட மோகன் போலீஸில் அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டது ஒவ்வொன்றும் ஞாபகத்தில் நிரடியது.


மதிமலரிடம் நைச்சியமாக பேசி நகையை பிடுங்கிவிட்டு அவளை  விற்று விடும் தீர்மானத்தோடு மோகன் இருந்ததை அறிந்த போது அவள் குலை நடுங்கித்தான் போய் விட்டாள்.


‘இவனையா என் பெற்றோருக்கு மேலாக நம்பினேன்?”
மதிய உணவிற்காக வெளிவந்தவள் தனதறையின் வாயிலில் காத்திருந்தவனை கண்டு முகம் மலர்ந்தாள்.


“நாதன், எப்ப வந்தீங்க? என்னை அழைச்சிருக்கலாம் இல்லியா? அதென்ன வெளியில் உட்கார்ந்து இருந்துட்டீங்க?”


வருங்கால மனைவியை கண்டு பெரிதாய் புன்னகைத்தான் அவன்.இருவரும் பணிபுரிவது ஒரே பள்ளிதான்.


” மேடம் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம எப்படி வர்றதாம்? வசீகரமாய் புன்னகைத்தான்.


அவன் சீண்டலில் வெட்கமுற்றவள் அவன் கையிலிருந்த திருமண பத்திரிக்கையை வாங்கி பார்த்தாள்.


“நல்லாயிருக்கு, ப்ரிண்டிங் வேலை முடிஞ்சு எப்ப தந்தாங்க?”


“நேத்து தான், பிரின்ஸிபல் மேடம்கு கொடுத்திடுவோம் என்று வந்தேன். இரண்டு பேரும் சேர்ந்தே போய் அழைப்போம், சரிதானே?”
மலர்வாக தலையசைத்தாள்.


பிரின்ஸிபல் மிகவும் மகிழ்ச்சியாக திருமண நாளிதழை வாங்கி இருவரையும் வாழ்த்தி பேசினார் வெளியில் வந்ததும், 


“சரி நான் வரேன் மலர், அடுத்து ஒரு க்ளாஸீக்கு கோச்சிங் இருக்கு”


“வாங்க சாப்பிட்டுட்டு போகலாம்”


“நான் சாப்பிட்டேன் மா,  நீ சாப்பிடு” விடைப் பெற்றான்.


“ம்ம்” தலையசைத்தாள்.


எதிர்பாராத திருமண ஏற்பாடு மாப்பிள்ளை நாதன் என்றதும் முதலில் ஞாபகத்தில் இடறியது நாதனின் நண்பன் பாபுவையும் தன்னையும் அவர்கள் வாழ்விடத்து மக்கள் ஒரே அறைக்குள் வைத்து பூட்டியதைத்தான்.


பெண் பார்க்க வந்தவனிடம் அதைக் குறித்து விளக்கம் கொடுக்கப் போக,


“அதெல்லாம் தேவையில்லை, நீ அப்ப ரொம்ப குட்டி பொண்ணு உன்னையெல்லாம் சந்தேகப் படவில்லை. முக்கியமா என் நண்பன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன், இந்த மனக்கிலேசத்தை விட்டு விடு” என திடமாய் கூறி விட்டான்.


மோகன் விஷயமாய் அலைபேசி உரையாடலில் பூடகமாய் கூற விழைய அப்போதும் கூட முழுவதையும் கேட்காமல் 


“சிறுவயதில் எத்தனையோ தவறுகள் செய்கிறோம் அத்தனையும் நினைவிலா வைக்கிறோம்? விட்டுவிடு. என்னுடன் எதிர்காலத்தை முழு மனதாக பகிர்ந்துக் கொள்ள தயாரா? அதை மட்டும் சொல்லு” எனக்கேட்டு அவளை மூர்சிக்க செய்தான்.


பின்னே என்ன? தன்னை காலம் காலமாய் துரத்தப் போகும் நிகழ்வாய் களங்கமாய் தனது பள்ளிக்கால செயல்கள் இருக்கும் என நினைக்க அவனோ அதை பொருட்படுத்தவும் விரும்பவில்லையே?


நினைவுகளின் தாக்கத்தில் உணவருந்தி முடித்தவள் அந்த செவ்வக வடிவ 5 மாடி பள்ளியின் நடுவில் இருக்கும் திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளில் கவனம் பதித்தாள்.


மரம் சூழ் அந்த வளாகத்தில் காற்று அவளை மென்மையாக தாலாட்டியது. 


கவிதைப் போல் தூரத்தே மாடத்தில் நின்றுக் கொண்டிருக்கும் தன் வருங்கால மனையாளை முறுவல் பொங்க பார்த்தான் நாதன்.


மோகன் விஷயத்தில் அவள் குடும்பத்தில் விபரம் தெரிவித்து அவளை காப்பாற்றியது அவன் தான் என அவன் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.


எதிர்பாராத விதமாக அவளே தனக்காக பெற்றோர் பார்த்த பெண்ணாக அமைந்து இருக்க  திருமணத்திற்கு மகிழ்ச்சியாக ஆமோதித்தான்.


மனிதன் ஒரு சமூக பிராணி, தன் தவறுகளினின்று பல நேரம் கற்றுக் கொள்கின்றவன். இல்லையென்றால் இத்தனையாய் விண்ணைத் தொடும் கண்டுபிடிப்புகளில் பரிணமித்து இருக்க முடியுமா?


ஏனோ தெரியவில்லை, மற்றவைகளில் தோல்விக்குப் பின் வெற்றியை அங்கீகரிக்கும் சமுதாயம் உறவுகளில் மட்டும் மனிதன் சற்றும் தோல்வியே கொள்ளாமல்  இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு கொள்கின்றது.


பள்ளி மாணவர்கள் தவறாக விளையாடவும் கழுத்தில் கிடந்த விசிலை ஊதி குழுவை ஒழுங்குப் படுத்தி தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டு இருந்தான் நாதன்.

வாழ்க்கை ஒரு புத்தக பக்கம்

அழித்தும் திருத்தலாம்

வண்ணங்கள் தெளிக்கலாம்

உள்ளத்தனைய உயர்வும் கொள்ளலாம்.


நிறைவு

4 COMMENTS

  1. மதிமலர் போல காதலை நம்பி வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு ஒரு பாடம்.💕

  2. Malar is really lucky…as @siva sir mentioned above it’s really a valuable lesson…malar kadantha kalathai ninaithu varundhamal mattravagalukku vazhi kattiya as a counselor is really appreciable….Nathan pondra thelivana sindhanai kandipaga thevai… because human errors are qte natural that doesn’t mean ppl can be blindfolded. Fantastic dedication sis 😍😍👏👏👏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here